Skip to content
Home » பிரபலங்களின் உளவியல் #16 – மைக்கேல் ஜாக்சன்

பிரபலங்களின் உளவியல் #16 – மைக்கேல் ஜாக்சன்

பரந்துவிரிந்த மேடை ஒன்று இருக்கிறது. அதன் நடுவில் நான் நிற்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் என்னைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் உருவாகும். அதனுள் நான் தொலைய வேண்டும். என்னைக் காண கோடிக்கணக்கில் ரசிகர்கள் திரண்டிருப்பார்கள். அவர்கள் முன்பு புது வேஷம் போடவேண்டும்.

புது வேஷம் என்றால்?

உடை மாற்றுவதுபோல என்னை நானே மாற்றிக்கொள்ள வேண்டும். பரவாயில்லை. அது ஒன்றுதான் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வேளையில் மட்டும்தான் இவ்வுலகை நான் மறப்பேன். என்னைச் சார்ந்தவர்களை மறப்பேன். என்னை நானே மறப்பேன்.

இதோ திரை மெதுவாக விலகுகிறது. ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் குரல், கடல் அலைபோல பொங்கி எழுகிறது. அந்தச் சத்தம்… அது வெறும் ஒலியல்ல. என்னை அவர்களிடத்தில் கலந்திடச் செய்யும் உயிர்நாடி‌. மக்கள் என்னைப் பார்த்ததும் துள்ளிக் குதிப்பார்கள். சிலர் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். அப்பழுக்கற்ற இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?

வேறென்ன?

‘இசை.’

அது ஒன்றுதானே எனக்குத் தெரியும்! இதோ புதியதோர் உலகம் பிறக்கிறது. அதனுள் கரைய நான் தயாராக இருக்கிறேன். ஆம்… தயாராக இருக்கிறேன்.

0

மைக்கேல் ஜாக்சன்.

தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்பெயரை உச்சரிக்காமல் யாரும் இருந்திருக்க மாட்டார்கள். கன்னியாகுமரியில் ஆரம்பித்து கலிபோர்னியா வரை மைக்கேல் ஜாக்சனைத் தெரியாதவர்கள் என யாருமில்லை. அவர் வாழ்ந்த காலத்தில், அவரைவிடப் பிரபலம் என்று வேறொருவரை கைகாட்டுவது சிரமமே. பிரபலங்களின் பிரபலம் அவர்.

தன்னை முழுமையாக இசையிடம் அர்ப்பணித்துக் கொண்டபோது மைக்கேல் ஜாக்சனின் வயது 5. அங்கே ஆரம்பித்து, 50இல் அவர் மரணிக்கும் வரை அவருக்குத் தெரிந்ததெல்லாம் இசை… இசை… இசை மட்டுமே. எந்த அளவுக்குப் புகழின் ருசியை ஆழ்ந்து அனுபவித்தாரோ அதே அளவுக்கு அவரைச் சுற்றிய சர்ச்சைகளும் அவரைப் பாடாய் படுத்தின.

மைக்கேலின் உளவியலை ஆராய்ச்சி செய்த பலரும் அவர் சந்தித்த பிரச்னைகளுக்குக் காரணம், அவருடைய அடிப்படை குணநலன்கள்தான் என்கின்றனர். அப்படி அவர் எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன? அது அவருடைய கலைப்பயணத்தில் எப்படிப்பட்ட தாக்கங்களை உண்டுபண்ணின? பார்ப்போம்.

0

மைக்கேல் ஜாக்சன் 1958ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 அன்று அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள கேரி நகரில் பிறந்தார். மைக்கேலின் தந்தை ஜோசப்; தாய் கேத்ரின். ஆரம்பத்தில் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்த ஜோசப்புக்கு மெல்ல இசை மீது ஆர்வம் உண்டானது. தனது சகோதரருடன் சேர்ந்து ‘ஃபால்கன்ஸ்’ என்ற இசைக்குழு ஒன்றைத் தொடங்கினார். உள்ளூரில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ஓரளவுக்குப் புகழ்பெற்று விளங்கியது ஃபால்கன்ஸ் இசைக்குழு. ஆனால், அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை எப்படிக் கவனிப்பது? ஓ… அந்த அளவுக்கு ஜோசப் குடும்பம் பண நெருக்கடியில் இருந்ததா?

இல்லை. குடும்பமே நெருக்கடியாகத்தான் இருந்தது. ஏனெனில் ஜோசப்புக்கு மொத்தம் 9 பிள்ளைகள். மைக்கேல் அதில் 7வது. இத்தனை பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள ஒற்றை இசைக்குழு போதுமா என்ன? எனவே வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு பிழைப்பு நடத்திவந்தார் ஜோசப். இதனால் ஜோசப்பின் இசைக் கனவு மெல்ல மெல்லச் சிதைவுற்றது. ஆனால், அப்பாவைப் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் சும்மா இருப்பார்களா? வீட்டில் இருந்த ஒரே ஒரு கிடாரை எடுத்து வாசிக்க ‘நான் நீ…’ என அடித்துக் கொண்டனர். அப்பா இல்லாத நேரத்தில்.

ஒருநாள் இவ்விஷயம் எப்படியோ ஜோசப்புக்கு தெரியவர, ‘பசங்களா… உங்களுக்கு மியூசிக்ல இவ்வளவு இன்ட்ரெஸ்ட் இருக்கா? சரி நாளைக்கே நான் ஒரு பாட்டு வாத்தியார ரெடி பண்றேன்’ என்று சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார். பிள்ளைகள் எல்லோரும் புது வாத்தியாருக்காக ஆர்வமுடன் காத்திருக்க, அடுத்த நாள் ‘ஹாஹா… அந்த வாத்தியார் வேறு யாருமல்ல; நான்தான்’ என அவர்கள் முன்பு போய் நின்றார் ஜோசப்.

ஆம். ஜோசப், தனக்குத் தெரிந்த அரைகுறை இசை ஞானத்தை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் விபரீத முடிவுக்கு வந்திருந்தார். மைக்கேலின் தலையெழுத்து மாறத் தொடங்கியது அங்கேதான்.

காலையிலும் இசைப்பயிற்சி, மாலையிலும் இசைப்பயிற்சி. பள்ளிக்குக்கூடச் செல்லாமல் இருக்கலாம்‌. ஆனால் இசைப்பயிற்சி மேற்கொள்ளாமல் அன்று தூங்கக்கூடாது. அப்படியே தூங்கினாலும் கனவில் இசைதான் வரவேண்டும். இவைதான் ஜோசப்பின் நிபந்தனைகள்.

இவ்வளவு கெடுபிடிகள் இருந்தால் இசை எப்படி வரும்? ஆனால், மைக்கேலுக்கு வந்தது. மைக்கேலுக்கு இருந்த தனித்துவமான குரல்வளம் அனைவரையும் கவர்ந்தது. ‘நாம 30 வயசுல செய்ய நினைச்சத இவன் வெறும் 5 வயசுல செய்யறானே…’ ஜோசப்பே பொறாமைப்படும் அளவுக்குப் பாடல், நடனம் என மற்ற பிள்ளைகளிடமிருந்து வேறுபட்டுத் தனியாகத் தெரிந்தான் சிறுவன் மைக்கேல்.

பொறாமை ஆத்திரமாக உருமாறியது.

வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை மைக்கேலிடம் கோபமாக வெளிப்படுத்தினார் ஜோசப். அற்ப விஷயங்களுக்கெல்லாம் அடி விழும். கேத்ரினோ அவர் சார்ந்திருந்த மதக்குழுவில் நேரத்தைச் செலவிடுவதிலேயே மும்முரமாக இருந்தார். இதனால், இயல்பாக ஒரு சிறுவனுக்குக் கிடைக்கவேண்டிய பால்யம் மைக்கேலுக்குக் கிடைக்காமலேயே போனது. ‘எல்லோரையும்போல ஒரு மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் எனக்குக் கிடைக்கவே இல்லை…’ பின்னாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மைக்கேல் சொன்ன வார்த்தைகள் இவை.

0

1964.

ஃபால்கன்ஸ் சுத்தமாக மறைந்து, ஜோசப்பின் பிள்ளைகள் மட்டும் பங்குபெறும் புதிய இசைக்குழு உதயமானது. பெயர் ‘ஜாக்சன் 5’. மைக்கேல் ஜாக்சன், ஜாக்கி ஜாக்சன், டிட்டோ ஜாக்சன், ஜெர்மைன் ஜாக்சன், மர்லான் ஜான்சன் என 5 சகோதரர்கள் இருந்த இக்குழுவில் சிறியவரும் பிரபலமானவரும் மைக்கேல்தான்.

‘ஜாக்சன் 5’ இசைக்குழு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூரில் நல்லபேர் வாங்கத் தொடங்கியது. ஃபால்கன்ஸ்போல ஜாக்சன் 5 பாதியில் முடங்கிவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ஜோசப். கிடைக்கும் சின்னச் சின்ன விழாக்களிலும் பிள்ளைகளை மேடை ஏற்றினார். அப்படி ஒரு விழாவுக்கு வந்திருந்த பாடகர் பாபி டைலர் மூலம், ஜாக்சன் 5க்கு மிகப்பெரிய ஒரு நிறுவனத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘மோடௌன் ரெகார்ட்ஸ்’ அன்றைய அமெரிக்காவின் தவிர்க்கமுடியாத இசை நிறுவனங்களுள் ஒன்று. கருப்பினக் கலைஞர்களை உலகளவில் அறிமுகப்படுத்தி, இசை உலகில் மாபெரும் புரட்சிசெய்த நிறுவனம்.

மோடௌன்க்காக ஜாக்சன் சகோதரர்கள் பதிவு செய்த முதல் பாடல், ‘I Want You Back’. 1970 ஜனவரியில் வெளியானது. அதுவரை மோடௌனில் வெளியான எந்த ஆல்பத்துக்கும் அப்படியொரு வரவேற்பு கிடைத்ததில்லை. முதல் பாடலே சூப்பர் டூப்பர் ஹிட். பல ஆயிரம் இசைத்தட்டுகள் விற்றுத்தீர்ந்தன. மூக்கின்மேல் விரல் வைத்தது மோடௌன் நிறுவனம்.

அடுத்தடுத்து அதே நிறுவனத்திற்கு ஜாக்சன் 5 கொடுத்தெல்லாம் அதிரிபுதிரி ஹிட் ரகம். ‘Who’s Lovin’ You’, ‘ABC’, ‘I’ll Be There’ போன்ற புகழ்பெற்ற ஆல்பங்கள் அதில் அடங்கும். மிக விரைவில், அமெரிக்காவின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஜாக்சன் சகோதரர்களின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதுவும் மைக்கேலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதற்குக் காரணம், பாடுவது மட்டுமல்லாமல் புதுமையான அசைவுகளை நடனத்தில் உட்புகுத்தினார் ‘டீன்ஏஜ்’ மைக்கேல். ரசிகர்கள் எதிர்பார்த்திராத நேரத்தில் ‌சில நொடிகள் அசையாமல் நிற்பது, பின்னால் நடப்பது போன்று தோற்றமளிக்கும் மூன் வாக், முன் நோக்கி அசாதாரணமாக சாயும் ஸ்டெப் எனக் காண்போரைப் பரவசத்தில் ஆழ்த்தும் கண்கட்டி வித்தையைக் கச்சிதமாகச் செய்வது மைக்கேலின் வழக்கம்.

1979ஆம் ஆண்டு, ‘Off The Wall’ என்ற பெயரில் தனி ஆல்பத்தை வெளியிட்டு ஹிட் கொடுத்தார் மைக்கேல். ஆனால், 1982ஆம் ஆண்டு வெளியான ‘த்ரில்லர்’ ஆல்பம்தான் மைக்கேலுக்குச் சர்வதேச நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. ‘மைக்கேலுக்காக உயிரையும் தருவோம்‌…’ என அலறியபடி இளைஞர்கள் கூட்டம் ஒன்று உருவானது. மைக்கேலின் பெயரைப் பச்சைக் குத்துவதில் ஆரம்பித்து, அவருடைய உடல்மொழியை அப்படியே பின்பற்றுவது வரை அவர்கள் அப்போது செய்யாத சேட்டைகளே இல்லை. இப்படி மிக இளம் வயதிலேயே புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்த மைக்கேல், கீழே சரியும்போதும் அதிக நாட்களை எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு அவரைச் சுற்றியிருந்த சர்ச்சைகள் மட்டும் காரணமல்ல; தனிப்பட்ட அவருடைய குணாதிசயமும்தான்.

0

ஒரு மனிதனின் குணத்தைச் செதுக்குவதில் அவனுடைய பால்யம் இன்றியமையாதது. அதில் பெற்றோர்களின் பங்கு சாலப்பெரிது. மைக்கேலின் முழுமையடையாத பால்யம், அவருடைய குணநலன்களில் பல்வேறு மாற்றங்களை உண்டுபண்ணின. அதில் ஒன்றுதான் அவருடைய அடிப்படை குணமாகச் சொல்லப்படும் ‘நார்சிஸ்ட் குணம்’. உளவியல் துறையில் இதை ‘நார்சிஸ்டிக் பெர்சினாலிட்டி டிசாடர் (Narcissist Personality Disorder)’ என்பர்.

பொதுவாக இவர்களுக்குக் கீழ்க்கண்ட குணாதிசயங்கள் நிறைந்திருக்கும்.

  1. ‘நான் இந்த உலகிற்கு மிகவும் முக்கியம்…’ எனத் தங்களைத் தாங்களே பெருமையாக நினைத்துக்கொள்வது.
  2. அளவுக்கு அதிகமான பாராட்டை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது.
  3. சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் தொடர்பு வைத்திருப்பதன் மூலம், எளிதில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற முயற்சி செய்வது.
  4. வேண்டிய பலன் கிடைக்கும் வரை தொடர்‌முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பது.
  5. பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் சிரமப்படுவது.

மைக்கேலுக்கு இவையெல்லாமே‌ இருந்தன.

மேடையில் நின்று ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக ரசிப்பது மைக்கேலுக்கு மிகவும் பிடித்த ஒன்று. கைத்தட்டலும் கரவொலியும் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு மைக்கேலின் முகத்தில் சந்தோஷ ரேகை குறுக்கும் நெருக்கமாக ஓடும். மேடையில் நிற்கும்போது தன்னை ஒரு மகாராஜாவாகவே கற்பனை செய்துகொண்டார் மைக்கேல். அதனால்தான் நடிகை எலிசபெத் டெய்லர் அவரை ‘கிங் ஆஃப் பாப்’ என்று பிரகடனம் செய்தபோது நெகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்.

குறிப்பு: மைக்கேலின் மகன் பெயர் ‘ப்ரின்ஸ்’!

இந்த நார்சிஸ்டிக் ஆசாமிகள் தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளவே மாட்டார்கள். எப்படியாவது அதைச் சரிசெய்ய வேண்டும் அல்லது பொய்யாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள். ஜோசப், மைக்கேலின் உருவத்தை அடிக்கடி கேலி செய்தார். குறிப்பாக ‘பெரிய மூக்கு…’ என அவமதித்தது மைக்கேலை ஆழமாகப் பாதித்திருக்கக்கூடும். எப்படியாவது தன்னுடைய மூக்கைச் சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தார் மைக்கேல்.

விளைவு? மூக்கு அறுவை சிகிச்சை. அதுமட்டுமல்ல, தன்னுடைய உருவம் குறித்த தாழ்வுமனப்பான்மையும் மைக்கேலுக்கு இருந்தது. மூக்கை மாற்றியதுபோலவே மொத்த உருவத்தையும் மாற்றினார். நிறம் உட்பட! ஆனால், ‘எனக்கு விட்டிலிகோ எனும் தோல்நோய் இருக்கிறது…’ என்று மீடியா முன்பு சப்பைக்கட்டு கட்டினார்.

மே 26, 1994.

புகழ்பெற்ற இசைக் கலைஞரான எல்விஸ் ப்ரெஸ்லியின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். சொந்த வாழ்விலும் கலை வாழ்விலும் பின்னடைவைச் சந்தித்திருந்த நேரம் அது. நார்சிஸ்டிக் மனப்பான்மை கொண்டவர்கள், தங்களுடைய கடினமான காலத்தைக் கடக்க வேறொரு புகழ்பெற்ற நபருடன் நெருங்கிப் பழகுவார்கள். சில சமயங்களில் அவர்களையே திருமணம்கூட செய்வதுண்டு. மைக்கேலின் வாழ்க்கையிலும் அதுதான் நடந்தது. இப்படி, ‘மைக்கேல் ஒரு நார்சிஸ்டிக் பெர்சினாலிட்டிதான்…’ என்பதை நிரூபிக்கப் பல வாதங்களை முன்வைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

0

மைக்கேல், தொலைந்த தன் பால்யத்தை வாழ்நாள் முழுக்க தேடிக்கொண்டே இருந்தார். முழுமையடையாத குழந்தைப் பருவம், அவரின் ஆழ்மனதில் ஒரு மனஅழுத்தத்தை உருவாக்கியது. அதை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தார். அதன் விளைவாக உருவானதுதான் ‘நெவர்லேண்ட் (Neverland)’.

நெவர்லேண்ட் என்பது வேறொன்றும் அல்ல; நம்மூரில் இருக்கும் ‘ப்ளாக் தண்டர்’ தீம் பார்க் போன்றது. கலிபோர்னியா மாகாணத்தின் மத்தியில் சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பளவில் உருவான நெவர்லேண்டில் பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டர்கள், ஜெயன்ட் வீல்கள், பெரிய பெரிய பொம்மைகள், அழகாக நீச்சல் குளம், பேய் வீடு எனக் குழந்தைகளைக் கவரும் அத்தனை விஷயங்களும் இருந்தன. உள்ளேயே சுற்றிவரும் ஒரு ‘மினி ரயில்’ கூட இருந்தது. அதுமட்டுமல்ல, மினி தியேட்டர், உயிரியல் பூங்கா, சொகுசு பங்களா, விளையாட்டு அரங்கம் என ஒரு ஹைடெக் கிராமத்தையே உருவாக்கியிருந்தார் மைக்கேல்.

இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்த மைக்கேல், நெவர்லேண்டுக்காக மட்டும் செய்த செலவு எவ்வளவு தெரியுமா?

இன்றைய மதிப்பில் சுமார் 162 கோடிகளுக்கும் மேல்!

நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குழந்தைகள் எனக் குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்து வந்து நெவர்லேண்டில் உல்லாசமாக உலாவ விட்டார் மைக்கேல். கூடவே அவரும் சேர்ந்து அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டார் (நெவர்லேண்டில் குழந்தைகளுடன் மைக்கேல் மகிழ்ச்சியாக விளையாடும் வீடியோக்கள் இன்றும் யூடியூப்பில் இருக்கின்றன).

பின்னாளில் ஒரு பேட்டியில், ‘நெவர்லேண்டை எதற்காக உருவாக்கினீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘நான் சிறுவயதில் தவறவிட்டவை எல்லாம் இப்போது என்னைச் சுற்றியிருக்கும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்கு ஒரு தனி உலகம் தேவைப்பட்டது. அங்கே நான் விரும்பியது எல்லாம் இருக்கவேண்டும். அதற்காக நான் உருவாக்கியதுதான் நெவர்லேண்ட்…’ என்றார்.

உண்மையில் நெவர்லேண்டை சிதைக்கப்பட்ட தன்னுடைய பால்யத்தின் சின்னமாகத்தான் பார்த்தார் மைக்கேல். ஜே.எம். பாரி எழுதிய, ‘பீட்டர் பேன்’ நாவல் உலகப்புகழ் பெற்றது. அதில் வரும் பீட்டர் எனும் சிறுவன், நெவர்லேண்ட் எனும் மாய உலகினுள் வசிக்கிறான். எப்போதுமே பால்ய வயதில் வாழும் அவனால் பெரியவனாக வளரவே முடியாது. இந்தக் கதாபாத்திரத்தில் பாதிக்கப்பட்டுத்தான் மைக்கேல் தன்னுடைய ஆடம்பரப் பூங்காவுக்கு ‘நெவர்லேண்ட்’ எனும் பெயரைச் சூட்டினார். ‘நான் ஒரு வளராத குழந்தை. ஒரு குழந்தைக்கு இருக்கும் இலகுவான மனம்தான் என்னிடம் இருக்கிறது…’ என்பதை மறைமுகமாக உலகிற்கு எடுத்துச் சொன்னார் மைக்கேல்.

உண்மைதான். மைக்கேலுக்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் அவரைப் பற்றிச் சொல்வது ஒன்றுதான்.

‘அவர் ஒரு குழந்தை…’

இப்படி மைக்கேலை ஒரு குழந்தையாகப் பாவித்தவர்கள் யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்,‌ அதே குழந்தைகள் மூலம்தான் அவருடைய வாழ்க்கையே மொத்தமாக மாறப்போகிறது என்பதை.

0

மைக்கேலைச் சுற்றி எழுந்த முதல் சர்ச்சை, அவருடைய பாலினம் சார்ந்தது. ஆம், கோயிலைச் சுற்றிக் கூடும் பக்தர்கள்போல, மைக்கேலைச் சுற்றி எந்நேரமும் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது. மைக்கேலின் கையைத் தொட்டுப் பார்ப்பது,‌ முகத்தைக் கிள்ளுவது எனப் பொது இடங்களில் அவர்கள் மிகவும் அநாகரிகமான நடந்துகொண்டனர். இதெல்லாம் மைக்கேலுக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. பெண்கள் அவரை அச்சுறுத்துவதாகவே உணர்ந்தார். பெண்களைப் பார்த்தால் இரண்டு அடி தள்ளியே நின்றார்.

இதையே காரணமாக முன்னிறுத்தி, ‘மைக்கேல் ஒரு தன்பால் ஈர்ப்பாளர்…’ எனக் கொளுத்திப்போட்டனர் பத்திரிகையாளர்கள். தன்னை ஒரு கலைஞனாக இல்லாமல் சராசரி மனிதனாகப் பார்த்தாலே போதும் என்பதுதான் மைக்கேலின் விருப்பம். அதை நிறைவேற்றியது குழந்தைகள் மட்டும்தான். அவர்கள்தான் மைக்கேலை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். எனவே குழந்தைகளிடம் நெருங்கிப் பழகினார் மைக்கேல்.

1993.

‘என் மகனை மைக்கேல் ஜாக்சன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்…’ இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ஈவான் என்ற நபர். இவருடைய மகனான ஜோர்டானும் மைக்கேலும் நெருங்கிய நண்பர்கள். நட்பு என்றவுடன், ‘மீசக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா…’ என்று இருவரும் கைகோர்த்துப் பாடும் காட்சியை நினைக்கவேண்டாம். ஏனெனில் ஜோர்டானுக்கு அப்போது மீசையே முளைக்கவில்லை.

ஆம்… 35 வயதான மைக்கேல், வெறும் 13 வயது பாலகனான ஜோர்டானுடன் நட்பு கொண்டிருந்தார். சொல்லப்போனால் மைக்கேலுக்கு இருந்த நண்பர்கள் எல்லோருமே 15 வயதுக்கு உட்பட்டவர்களே. இதற்குக் காரணம் மைக்கேலுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு பிரியம். அவர்கள் மூலம்தான் தன்னுடைய பால்யத்தை மீட்டெடுத்தார் அவர். அதற்கு நெவர்லேண்ட் ஒரு நல்ல உதாரணம். ஆனால் குழந்தைகள் மீது அவர் வைத்திருந்த இந்தத் தூய அன்பே அவருக்கு எதிராகத் திரும்பியது. ஈவானின் குற்றச்சாட்டை மறுத்த மைக்கேல், ‘இவர் சொல்வது சுத்தப் பொய். என்னிடம் பணம் பறிப்பதற்கான வேலை இது…’ என்று மறுத்தார். ஆனால் மைக்கேலின் மறுப்பு எடுபடவில்லை. ‘இப்ப தும்மினாதான் சரியா இருக்கும்…’ என எல்லா மீடியாக்களும் மைக்கேல் பற்றித் தப்புத் தப்பாக எழுத ஆரம்பித்தனர்.

உதாரணத்திற்கு ஒன்று: ‘மைக்கேல் ஒரு பீடோபைல். அதனால்தான் இன்னமும் திருமணம்கூட செய்துகொள்ளவில்லை…’

இதன்பிறகே லிசா மேரியைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். ஆனால் அந்தத் திருமணம் 2 வருடங்கள்கூட நீடிக்கவில்லை. 1996ஆம் ஆண்டு, டெபோரா ரோவ் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். சரி, இந்தத் திருமணமாவது நிலைத்ததா? அதுவும் இல்லை. சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். ஆனால் இவர்களுக்கு ப்ரின்ஸ் மற்றும் பாரிஸ் என 2 குழந்தைகள் பிறந்தனர்.

ஜோர்டானைத் தொடர்ந்து அடுத்தடுத்து எழுந்த பாலியல் குற்றச்சாட்டுக்களால் நிலைகுலைந்துபோனார் மைக்கேல். சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் வக்கீலுக்குக் கொடுக்கவே சரியாக இருந்தது. இதனால் தீவிர மனஅழுத்தத்திற்குத் தள்ளப்பட்டார். வலி நிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரைகளுக்கு அடிமையானார். ‘அவ்வளவுதான். இனி மைக்கேல் ஜாக்சன் மீண்டு வருவது கஷ்டம்…’ என்ற பேச்சுக்கள் ஆங்காங்கே முளைத்தன.

ஆனால்…

2009. அக்டோபர் மாதம்.

‘This Is It’ என்கிற பெயரில் மைக்கேலின் புது இசை ஆல்பம் வெளியாகி இமாலய வரவேற்பைப் பெற்றது. ‘குடும்பம் என்னைக் கைவிடலாம். நண்பர்கள் என்னைக் கைவிடலாம்.‌ ஆனால் என்னுடைய ரசிகர்கள் என்னை என்றுமே கைவிடமாட்டார்கள்…’ மைக்கேல் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை. அது ‘This Is It’ ஆல்பம் மூலம் நிஜமானது.

உண்மையில் மைக்கேலேகூட அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. மீண்டும் உற்சாகமானார் மைக்கேல். நம்பிக்கையுடன் அதே ‘This Is It’ ஆல்பத்தை நேரலைக் கச்சேரியாக நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அறிவிப்பு வந்த அடுத்த நொடியே லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. ஆனால் காலம் வேறு கணக்குப்போட்டது.

ஜூன் 25, 2009. அளவுக்கு அதிகமான ‘ப்ரொப்போஃபால் (Propofol)’ எனும் மயக்க மருந்து உடலில் கலந்ததன் விளைவாகத் தன்னுடைய 50வது வயதில் இறந்துபோனார் மைக்கேல். மரணம் பற்றி அவருக்கு முன்பே தெரிந்ததோ என்னவோ தன்னுடைய கடைசி ஆல்பத்தின் பெயரை ‘This Is It’ எனத் தேர்வு செய்திருந்தார் அவர். மைக்கேலின் உளவியலை ஆராய்ந்ததில் அவரைப் பற்றிய ஓர் உண்மை மட்டும் தெளிவாகப் புரிந்தது.

‘மைக்கேல் ஒரு குழந்தை…’

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *