இது சாட் ஜிபிடியின் காலம். இனி மனிதர்களின் வேலை வாய்ப்புகள் அவ்வளவுதான் என்கிறார்கள் பலரும். இதுபோன்ற உறைய வைக்கும் தடாலடி முன்முடிவுகள் முன்பு எப்பொழுதெல்லாம் எழுதப்பட்டன என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.
கணினி வந்தபோது, மென்பொருட்கள் உருவாக்கப்பட்டபோது, தொடுதிரை அலைபேசிகள் அறிமுகமானபோது, செயற்கை நுண்ணறிவு குறித்து பேசத் தொடங்கியபோது ஐயோ, இனி மனிதர்கள் அவ்வளவுதான் என்று பலர் முடிவுரை எழுதத் துணிந்தார்கள். ஆனால் இவையெல்லாம் வந்த பிறகும் மனிதர்களுக்குச் செய்ய வேலை இருந்தது. இன்றும் இருக்கிறது. வருங்காலங்களிலும் இருக்கும்.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பேசப்படும் அளவிற்கு அதோடு இசைந்து, தன்னையும் தகவமைத்துக் கொள்ளும் மனிதர்களைப் பற்றிய கதைகள் அதிகம் பேசப்படுவதில்லை. நல்லவர் x கேட்டவர் என்ற தரப்புகளின் வழி எதையும் அணுகுவது எளிமையாக இருப்பதால் மனிதன் x தொழில்நுட்பம் என்று பார்க்கப் பழகியிருக்கிறோம்.
உண்மையில் மனிதன் மற்றும் தொழில்நுட்பம் என்ற காலத்தை நாம் எட்டி பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒருவேளை வருங்காலங்களில், மனிதன் – இயந்திரம், எவை சிறந்தவையோ அவற்றைக் கொண்டு ஒரு பணியைத் திறம்படச் செய்துமுடிக்க நிறுவனங்கள் விரும்பலாம்.
வெளியே ஆயிரம் மாற்றங்கள் நிகழட்டும். அவை எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நம்மால் செய்ய முடிவதெல்லாம் ஒன்றுதான். தயாராக இருப்பது. இத்தொடரின் நோக்கமும் அதுதான்.
பைத்தான் நிரல் மொழியைத் தமிழில் சொல்லித்தர ஒரு தொடர் எழுத வேண்டும் என்று தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவற்றைப் புகார்கள் என்று சொன்னால் கச்சிதமாக இருக்கும்.
1) பெருந்தொற்று காலம் ஆன்லைன் கல்விக்கான வாய்ப்பை இன்னமும் விரிவுபடுத்தி இருக்கிறது. ‘ஆன்லைன் கோடிங்’ சொல்லித் தருவதற்கு நிறைய நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. ஆனால் அவை சராசரியாக, ஒரு மனிதன் பட்டப்படிப்பு பெறுவதற்குச் செலவு செய்யும் பணத்தைக் கோருகின்றன. சரி அந்த அளவுக்குப் பாடத்திட்டங்கள் வழுவானதாக உருவாக்கி வைத்திருப்பார்கள் என்று மனதைத் தேற்றிக்கொண்டு அந்நிறுவனங்களின் வலைத்தளங்களில் தேடித் பார்த்தால், ம்ஹூம், வாய்ப்பில்ல ராஜா! பிறகு எதற்காக இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
2) பன்னிரண்டாம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்புத்தகத்தின் தமிழ் வடிவம் இணையத்தில் கிடைக்கிறது. அதை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் ‘சுகானுபவம்’. கொஞ்சம் சொற்கள் சேர்த்து ‘தமிழ் எழுத்துக்களைக் கொண்டு ஏலியன் மொழியில் எழுதப்பட்டது’ என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்டு, கணினி அறிவியல் குறித்த அடிப்படையே அறியாத மொழிப்பெயர்பாளர்களை வைத்து, பக்கத்துக்கு இவ்வளவுதான் என்று நொடித்து நொடித்து எழுதப்பட்ட வெற்று வார்த்தைகளின் குவியல் என்றுதான் அப்புத்தகத்தை மதிப்பிட முடியும்.
உண்மையில் தமிழ் அவ்வளவு பலவீனமான ஒரு மொழியா? அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் தமிழில் எழுதுவது அவ்வளவு சிரமமான ஒன்றா? இருக்கலாம். தெரியவில்லை. இந்தத் தொடரின் மூலம் இக்கேள்விகளுக்கான விடையைக் கண்டறிய முயல்வோம்.
‘இவ்வளவு விவரமா பேசுதே! தம்பி யாரு?’ என்ற உங்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?
பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சுற்றிச் சுற்றி ஒரு வகுப்பறை சூழலுக்குள் இருக்கும்படி என்னைப் பார்த்துக் கொள்கிறேன். நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில், தனியார்ப் பள்ளியில், தனியார் கல்வி நிறுவனத்தில், அரசு சாரா கல்வி அமைப்பில் என வகுப்பறையில் நிற்கும்பொழுது நான் முழுமையடைகிறேன். கல்வி சார்ந்து இயங்குவதை ஆசியெனக் கொள்கிறேன். தாய்மொழிக் கல்வி குறித்து விவாதங்கள் அதிகமாக நிகழும் ஒரு காலத்தில், இப்படி ஒரு தொடர் எழுத வாய்ப்பு அமைந்திருப்பது நல்ல விஷயம்.
இந்த தொடருக்கென சில விதிகளை வைத்திருக்கிறேன் –
1) தமிழில் எழுதுவதுதான் பிரதான நோக்கம். அதைச் செயல்படுத்தும் முனைப்பில் யாருக்கும் புரியாமல் போய்விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.
2) கற்கும் சுமை தெரியாமல் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.
0
எதற்காக பைத்தான்?
புதிதாகப் பயில ஆரம்பிப்பவர்களுக்கு ஏற்ற நிரல் மொழியாக இருக்கிறது பைத்தான். அதன் எளிமை அனைவரையும் கவர்கிறது. மேல்நிலைப்பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை, பைத்தான் ஒரு தவிர்க்கமுடியாத பாடத்திட்டமாக இன்று உள்ளது. மென்பொருள் உருவாக்குபவர்களின் கூகுள் என்று வர்ணிக்கப்படும் ஸ்டேக் ஓவர்ஃப்லோ (Stack Overflow) தளத்தின்படி, 2022ன் மிகவும் விரும்பப்பட்ட நிரலாக்க மொழியாக பைத்தான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இன்றைய தேதிக்குத் தரவு அறிவியல் (Data Science) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) ஆகிய இரண்டுக்கும் நிறைய மனித வளம் தேவையாக இருக்கிறது. இவ்விரு துறைகளுக்கும் ஏற்ற ஒரு மொழியாக பைத்தான் அமைந்திருக்கிறது. வேலைவாய்ப்புகள் குறித்தோ, அதுதரும் நன்மைகள் பற்றியோ பைத்தான் நன்கறிந்த ஒருவர் யோசிக்க வேண்டியதில்லை.
மேலும் செயற்கை நுண்ணறிவு, வலைத்தள உருவாக்கம், தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது, கணினி விளையாட்டுகளை உருவாக்குவது, நிதிநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் மாதிரிகளை உருவாக்குவது என பைத்தான் நிரலாக்க மொழியைப் பயன்படுத்திச் செய்யமுடிகிற சாத்தியங்கள் பரந்துபட்டு இருக்கின்றன.
இதைக் கற்கக் கணினி அவசியமா?
ஆம். நிறைய நிரல்களை எழுதிப் பார்க்கக் கட்டாயம் ஒரு கணினி அவசியம். சில அலைப்பேசி செயலிகள் ஆரம்ப காலகட்டங்களில் உதவலாம், ஆனால் அவையெல்லாம் வரையறுக்கப்பட்டவை.
இதைக் கற்க முன் நிபந்தனைகள் என்னென்ன?
உலகம் முழுக்க 12 வயதிலிருந்து குழந்தைகள் பைத்தான் கற்கிறார்கள். அவர்களுக்கு என்ன நிபந்தனை வைக்க முடியும்? கற்கும் ஆர்வம் ஒன்றைத்தவிர.
வேறென்ன? அடுத்தவாரம் ‘ஹலோ வேர்ல்ட்!’
(தொடரும்)