தென் மத்திய அமெரிக்கப் பகுதியில் அமைந்திருக்கும் ஒக்லஹோமாவில் மக்களுக்கு இணையாக தேவாலயங்களும் பீடங்களும் நிறைந்துள்ளன. மதம், கடவுள், போர், அதில் அரசாங்கங்களின் பங்கு என நிறையக் கேள்விகள் இருந்தன பிராட்லி மேனிங்குக்கு. தான் படிக்கும் பள்ளியில்கூட கடவுள் என்று எதற்காகச் சொல்லச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் இல்லாததால், தினந்தோறும் காலையில் உறுதிமொழி ஏற்பின்போது வாயசைக்காமல் அமைதியாகவே நின்றுகொண்டிருந்தான்.
தந்தைக்கு ஒரு வாடகை கார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப மேலாளர் பணி. அதற்கு முன்பு கடற்படையில் ஐந்தாண்டுகள் கணினி ஆய்வாளராக இருந்தார். பணி நிமித்தம் நாட்கணக்கில், மாதக்கணக்கில் அப்பா பிரையன் மேனிங் வெளியூர்களுக்குச் செல்லும்போதெல்லாம் , அம்மா சூசனுக்குத் தனிமையும் வோட்காவுமே துணை.
பெரியவர்களுக்குச் சரி, பத்து வயது சிறுவன் என்ன செய்வான்?
திக்கற்றவர்களுக்கு மின்திரையே துணை. ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கும்போது பிராட்லிக்கு வயது பத்து. கணினி முன் அமரும்போதெல்லாம் தனது கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததோ இல்லையோ, குறைந்தபட்சம் அந்தக் கேள்விகளை மறக்கவாவது முடிந்தது. அவனது பதிமூன்றாவது வயதில் ஒரு நாள், அப்பா வெளியூரிலிருந்து திரும்பியவுடன் அம்மாவுடனான பிரிவை அறிவித்தார்.
வேறு வழியில்லை சூசனுக்கு. மகனைத் தன்னுடைய பிறந்த ஊருக்கு, அதாவது 4800 மைல் தொலைவில் உள்ள இங்கிலாந்து வேல்ஸிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம். புதிய இடத்தில், புதிய பள்ளியில், தனது மொழிக்காக, உருவத்திற்காக, அங்கே இருக்கும் ஒரே அமெரிக்கனாகத் தொடர்ந்து சக மாணவர்களால் அவன் அச்சுறுத்தப்படுகிறான்.
இவை போதாதென்று தன்னைப் பற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பையும் பிராட்லி மேனிங் நிகழ்த்துகிறான். பெண்மீது அல்ல, மற்றொரு ஆண்மீதே அவனுடைய வேட்கை விரிந்து சென்றது. தனக்கு இருப்பது தன்பால் ஈர்ப்பு என்பது அவனுக்குப் புரிகிறது. இதையெல்லாம் எப்படி எதிர்கொள்வது? வேண்டுமென்று வம்புக்கு வருபவர்களை எப்படிச் சமாளிப்பது? ஒரே தீர்வுதான். உள்ளுக்குள் முடங்கிப்போனான். கணினி அவனுடைய வாழ்வை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது.
உணவு இடைவேளை உட்பட பெரும்பாலான நேரத்தைப் பள்ளியின் கணினி ஆய்வகத்திலேயே கழித்தான். உள்ளூர் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளக் கிட்டத்தட்ட பேஸ்புக் போலவே செயலாற்றும் ஓர் அட்டகாசமான இணையதளத்தை உருவாக்கினான்.
புதிய இடம் தந்த பாடமும், அமெரிக்கா குறித்த கனவுகளும் , பள்ளிப்படிப்பை முடித்ததும் மீண்டும் தனது தந்தையோடு அவனை இணையச் செய்தது. இம்முறை அமெரிக்காவில் தந்தை, அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு ஆண் பிள்ளைகளும் அவனை வரவேற்றனர். இந்த வரவேற்பு நிறைய நாள் நீடிக்கவில்லை. தன்னுடைய கணினி திறன்களை வெளிப்படுத்தி ஒரு புதிய வேலையை அவன் பெற்றிருந்தான். ஆனால் முதலாளியைப் பகைத்துக்கொண்டதால் வேலை பறிபோனது. தனது பாலியல் தேர்வைத் தந்தையிடம் பகிர்ந்து கொண்டதும் விரைவிலேயே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது பிராட்லிக்கு.
தங்க இடமில்லை, வேலை இல்லை. அடுத்தது என்ன? தெரியாது. வீடியோ கேம் கடையில், இசை ஆல்ப விற்பனையகத்தில், உணவகத்தில் எனப் பல வேலைகள் பார்த்தாகிவிட்டது. எதிலும் நிரந்தரமாகத் தங்க முடியவில்லை. இந்நிலையில் தந்தையின் ஆதரவையும் இழந்துவிட பிராட்லி தயாராக இல்லை. மீண்டும் தனது தந்தையிடம் திரும்பினான் பிராட்லி. இம்முறை அவனது தந்தை தீர்க்கமாகச் சொல்லிவிட்டார். ‘போய் ராணுவத்தில் சேர்’.
இராக்கில் பணியிலிருந்த அமெரிக்க வீரர்களிடையே லேடி காகா இசை மிகப் பிரபலம். பாடல்களை ரசித்துக்கொண்டே கணினியில் இயங்குவது அங்கே சாதாரணம். பிராட்லி ஒருநாள் லேடி காகாவின் இசை பதியப்பட்ட ஒரு குறுந்தகடைப் பணியிடத்திற்குக் கொண்டுவந்தான். உங்களுக்கு பண்டமாற்றம் தெரியும் தானே? கிட்டத்தட்ட அதேதான். குறுந்தகடில் இருந்த லேடி காகா இசை கணினியில் ஏற்றப்பட்டதும், கணினியிலிருந்த ஒரு காணொளி குறுந்தகடில் பதியப்பட்டது.
அந்த காணொளி, பின்னாட்களில் பெரும்புகழ்பெற்ற, அமெரிக்காவை அசைத்துப் பார்த்த, போர்க் குற்றங்களை உலகறிய செய்த ‘தி கொலாட்ரல் டேமேஜ்’ என்னும் காணொளி. அதில் ஆயுதங்கள் ஏதுமற்ற பதினான்கு பேரை அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதை உலகறிய செய்யவேண்டும் என்பதில் பிராட்லிக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.
ஆனால் தனியொருவனாக அதை வெளியிட முடியாது என்பதும் தெரியும். ஒருவேளை மாட்டிக்கொண்டால் முடிந்தது கதை. வரலாற்றின் மிக மோசமான தண்டனையாக அது இருக்கக்கூடும். ஒரு தேசத்துரோகியாகவே தான் அடையாளப்படுத்தப்படுவோம் என்பது பிராட்லிக்குப் புரிந்தது. ஆனால், அதற்கு என்ன செய்யமுடியும்? கட்டாயம் வெளியிட்டே தீரவேண்டிய பதிவல்லவா இது?
சக ராணுவ வீரனுடன் சண்டையிட்டது, மேலதிகாரியிடம் கூச்சலிட்டது, தனிமையில் கத்தியோடு அமர்ந்திருந்தது, கருவைப் போல உடலைக் குறுக்கி தரையில் படுத்திருந்தது, பாதுகாப்பு கருதி அவனுடைய உயர் அதிகாரிகள் பிராட்லியின் துப்பாக்கியிலிருந்த போல்ட்டை நீக்கியது என்று பணியிடத்தில் நிகழ்ந்த எதுவும் தன்னைக் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்று நினைத்தான் பிராட்லி. காணொளியை வெளியிடப் பாதுகாப்பான, நம்பகமான ஒரு வழியை ஆராயத் தொடங்கினான்.
பிராட்லி எப்படி தன்னிடம் இருந்த காணொளியை வெளியிட்டான் என்பதையும், அதன் விளைவாக உருவான அதிர்வலைகள் குறித்தும் விரிவாக வரும் அத்தியாயங்களில் பார்க்கவிருக்கிறோம். அதற்கு முன்பாக ஒரு கேள்வி. இவ்வளவு யோசித்தும், திட்டங்கள் தீட்டியும் அவன் அமெரிக்காவிடம் சிக்கியது எப்படி?
பெரிதாக எந்தப் புலனாய்வு கதையும் இங்கே இல்லை. பிராட்லி மாட்டிக்கொள்ளக் காரணமாக அமைந்தது ரகசிய புலனாய்வோ, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களோ அல்ல. அமெரிக்காவுக்கு அந்த கஷ்டங்களை எல்லாம் தராது, தான் செய்ததை அப்படியே கிட்டத்தட்ட ஓர் ஒப்புதல் வாக்குமூலம் போல இன்னொருவரிடம் பகிர்ந்துகொண்டுவிட்டான் பிராட்லி.
2002 வாக்கில் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழுக்கு ஒரு ஹேக்கர் உதவி செய்கிறார். எப்படி என்றால், அவர்களது இணையதளத்தை ஹேக் செய்து, அதன்மூலம் அந்தப் பாதுகாப்பு குறைபாட்டை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது. இதை பெனிட்ரேஷன் டெஸ்டிங் என்று நிறுவனங்களே கூட ஹேக்கர்களை ஊக்கப்படுத்திச் செய்ய வைக்கிறார்கள்.
ஆனால் நியூ யார்க் டைம்ஸ் அந்த ஹேக்கர் மீது வழக்குப்பதிவு செய்தது. நல்லதொரு நாளில் அவரே போலீசிடம் சரணடைகிறார். உலகிற்கு அட்ரியன் லேமோ அறிமுகமானது இப்படித்தான். ஹேக்கர்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஒரு நாயக பிம்பம் அட்ரியனுக்கு இருந்தது.
பத்தாண்டுகள் கழித்து தனது சிறு வயது நாயகனிடம், தான் செய்ததை அப்படியே இணைய அரட்டை மூலம் ஒன்று விடாமல் தெரிவிக்கிறான் பிராட்லி. காணொளி வெளியாகி, அட்ரியனிடம் பேசத் தொடங்கி சரியாக ஒரு வாரத்தில், அதாவது 2010 மே மாதம் அமெரிக்காவால் கைது செய்யப்படுகிறான் பிராட்லி. நுணல் மட்டுமல்ல ஹேக்கரும் கெட்டது வாயால்தான்.
ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட இருபத்து இரண்டு வழக்குகள் பதியப்பட்டு , மூன்று ஆண்டுகள் கழித்து முப்பத்து ஐந்து வருடச் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. விர்ஜீனியா சிறையிலிருந்த இதே காலகட்டத்தில்தான் உலகிற்கு இன்னொரு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிராட்லி மேனிங் இனி செல்சியா எலிசபெத் மேனிங் என்று அழைக்கப்படுவார். சிறு வயதிலிருந்தே தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்ததாகவும், இனி தன் விருப்பத்தின் பேரில் ஒரு பெண்ணாக வாழ விரும்புவதாகவும் அதற்குண்டான ஹார்மோன் தெரபி செய்துகொள்ள அரசாங்கம் அனுமதி அளிக்கும்படியும் கோரிக்கை வைத்தார். கோரிக்கை ஏற்கப்பட்டது.
பின்னர் ஒபாமா அரசாங்கத்தால் தண்டனை குறைக்கப்பட்டு மே மாதம் 2017இல் விடுதலையானார் செல்சியா மேனிங். தான் செய்த குற்றத்திற்காக சரியாக ஏழு ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். அக்காலக்கட்டங்களில் பல்வேறு உளச் சிக்கல்கள், தற்கொலை முயற்சிகள். அனைத்தையும் கடந்து இன்று அவர் டேட்டா பிரைவேசி, திருநங்கைகளுக்கான உரிமைகள் என பல்வேறு தளங்களில் ஆர்வலராகச் செயலாற்றி வருகிறார்
மோசமான குழந்தைப் பருவம், அசுர தொழில்நுட்ப வளர்ச்சி, போர், பேரரசுகளின் பேராசை இவையெல்லாம் இருக்கும் வரைக்கும் வரும் காலங்களில் நிறைய செல்சியா மேனிங்குகள் வரக்கூடும். வருங்காலம் சரி, கடந்த காலங்களில்?
ஒருவர் இருக்கிறார். டேனியல் எல்ஸ்பெர்க். ரகசியங்களை வெளியிடுவதில் தந்தை என்று அவரை அழைக்கலாம்.
(தொடரும்)