ஹாங்காங்கிற்குச் செல்லத் தயாராகினர் கிளென்னும் லாராவும். அவர்களது பயணம் குறித்த தகவல்களை கார்டியன் பத்திரிகைக்கு நேரடியாகவே தெரியப்படுத்தினார் கிளென். ஹாங்காங்கில் இருந்து அனுப்பப்பட்ட ஆவணங்களில் சிலதைக் காண்பித்து கார்டியனின் நம்பிக்கையையும் பெற்றார். அவர்கள் சென்று வருவதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்ய முன்வந்தது கார்டியன். ஆனால் ஒரு நிபந்தனை, கார்டியன் சார்பாக அவர்களது மூத்தப் பத்திரிக்கையாளர் ஈவன் அவர்களோடு வருவார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட லாராவுக்கு ஈவன் கூட வருவது ஏற்புடையதாக இல்லை. ஒருவேளை அந்த மர்ம நபருக்கு இது தெரியவந்தால் என்ன ஆவது? ஒட்டுமொத்த பயணத் திட்டமும் வீண் இல்லையா? ஆனவரைக்கும் கார்டியனோடு மல்லுக்கட்டிப் பார்த்தார்கள். ஆனால் தங்கள் சார்பாக ஒரு பத்திரிக்கையாளரைக்கூட அனுப்புவதில் கார்டியன் உறுதியாக இருந்த காரணத்தால் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார்கள்.
0
அமெரிக்காவிலிருந்து ஹாங்காங்கிற்கு 16 மணி நேர விமானப் பயணம். அந்த நேரத்தை இதுவரை தங்களுக்கு அந்த மர்ம நபர் அனுப்பிய ஆவணங்களில் கொஞ்சத்தை வாசிக்கப் பயன்படுத்திக் கொண்டார் கிளென்.
அரசாங்கம் தவறான வழியில் பல பத்தாண்டுகளாக மக்களை ஒட்டுக்கேட்டு வந்ததை சர்ச் கமிட்டி 1978இல் வெளிக்கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு உளவுத்துறை கண்காணிப்புச் சட்டம் (Foreign Intelligence Surveillance Act, சுருக்கமாக ஃபிசா) உருவாக்கப்பட்டது. தொடர்ந்து தனி நீதிமன்றமொன்றும் அமைக்கப்பட்டது. அது பிறப்பித்த ஆணைதான் முதலில் கிளென்னின் கண்ணில்பட்டது.
அதன்படி அரசாங்கம் தொடர்ந்து மின்னணுக் கண்காணிப்பில் ஈடுபடலாம், ஒரு சிக்கலும் இல்லை. என்ன ஒன்று, அவர்கள் அவ்வாறு செய்யும் போதெல்லாம் ஃபிசாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டுமென்பதே ஒப்பந்தம். ஃபிசா நீதிமன்றம் என்ற ஒன்றை அநேகமாக எவருமே பொதுத்தளத்தில் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை, ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய நிறுவனமாகவே அது நடத்தப்பட்டது.
அமெரிக்க மக்களின் பெரும்பாலான தகவல் பரிமாற்றங்களை முன்னின்று நடத்தும் வெரிசோன் நிறுவனத்திடம் அனைத்து தொலைப்பேசி அழைப்பு விவரங்களையும் கோரியது என்.எஸ்.ஏ. அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகள், அமெரிக்க உள்ளூர் அழைப்புகள் எனச் சகலமும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கத் தேசபக்த சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிரிவு 215இன்கீழ் சில ரகசிய ஆவணங்களைப் பெற FBI தனி மனிதர்களின் மருத்துவ வரலாறு, வங்கிப் பரிமாற்றங்கள், தொலைப்பேசி அழைப்புகள் போன்றவற்றைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கேட்டுப் பெறலாம். இந்த நடவடிக்கையின் மூலம் நிலுவையிலிருக்கும் விசாரணையைத் துரிதப்படுத்த முடியும் என்பதே அமெரிக்கத் தரப்பின் வாதம்.
தேவைப்படும் தகவல் எதுவாயினும் மக்களின் அனுமதியின்றி அதை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தை அமெரிக்காவுக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது. உருகி உருகி காதலியிடம் பேசும் ஒரு தொலைப்பேசி உரையாடல் தொடங்கி, மனைவிக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை வரை என்.எஸ்.ஏவால் எளிதில் மோப்பம் பிடித்துவிடமுடியும்.
தொடர்ந்து வாசித்ததில் கிளென்னிற்கு இரண்டு விஷயங்கள் உறுதியானது. ஒன்று இதை அனுப்பியவர் ஆத்திரக்காரரோ அவசரக்காரரோ அல்ல, தான் செய்வதையும் அதன் விளைவுகளையும் நிதானமாக, முழுமையாக அறிந்தவர்.
செல்சியா(பிராட்லி) மேனிங் மீது வைக்கப்பட்ட முதன்மையான விமர்சனமாக அவர் விக்கிலீக்ஸுக்கு அனுப்பிவைத்த ஆவணங்களில் பலவற்றை அவர் வாசித்துக்கூடப் பார்க்கவில்லை என்பதாக இருந்தது. அந்த விமர்சனத்தை நிச்சயம் இந்த ஹாங்காங் மனிதரின் மீது சுமத்த முடியாது. காரணம் அவர் அனுப்பிவைத்த ஒவ்வொரு ஆவணத்தையும் நிதானமாக வாசித்து தரம் பிரித்து வெவ்வேறு ஃபோல்டர்களில் சேமித்து அனுப்பியிருந்தார்.
இரண்டாவதாக இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் என்.எஸ்.ஏ பலமுறை பொய் சொல்லியிருப்பது ‘எல்லையற்ற தகவல் தருபவர்’ என்று பொருள்தரும் ஃபோல்டரில் இருந்த ஆவணங்களில் பதிவாகி இருந்தது.
அதன்படி ஒரு நாளைக்கு எத்தனை தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன, எத்தனை மின்னஞ்சல்கள் ஊடுருவிப் பார்க்கப்படுகின்றன போன்றவற்றின் புள்ளிவிவரங்கள் தெளிவாகப் பதிவாகி இருந்தன. யாரை, எப்போது எட்டிப்பார்க்கிறோம் என்பதை விரிவாக எழுதிவைத்திருந்தது என்.எஸ்.ஏ. குறிப்பிட்ட ஒரு நாளில் மில்லியன் கணக்கில் சம்பவங்கள் செய்திருந்தது அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனம். பிப்ரவரி 2013இல் மட்டும் கிட்டத்தட்ட மூன்று பில்லியின் தகவல் தொடர்பு தரவுகள் திருடப்பட்டிருந்தன.
ஒபாமா அரசின் மூத்த தேசியப் பாதுகாப்பு அதிகாரியும், தேசிய உளவுத்துறை இயக்குநருமான ஜேம்ஸ் கிளாப்பரிடம், மார்ச் 2013இல் செனட்டர் ரான் வைடன் ‘மில்லியன் பில்லியின் கணக்கில் என்.எஸ்.ஏ அமெரிக்கர்களின் தொலைத்தொடர்பு தரவுகளைச் சேமித்து வைத்திருப்பது உண்மையா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஜேம்ஸ் கிளாப்பர் சொன்ன பதில் ‘இல்லை’. அவர் சொன்னது முழுப்பொய் என்பதை நிறுவ ஹாங்காங் நபர் அனுப்பிவைத்த ஒரு ஃபோல்டர் போதும், அதை உலகறியச் செய்யும் தருணத்திற்காகதான் காத்திருந்தார் கிளென்.
ஆவணங்களை வாசிக்க வாசிக்க கிளென்னின் மனதில் ஒரு கேள்விதான் மீண்டும் மீண்டும் தோன்றியது. எதற்காக அந்த மர்ம நபர் இதையெல்லாம் செய்கிறார்?
அதற்கான பதிலையும் தனது உண்மையான பெயரோடு குறிப்பிட்டு அனுப்பியிருந்தார் அந்த மர்ம நபர். அவர் அந்த ஆவணத்திற்கு வைத்திருந்த பெயர் ‘முதலில் என்னைப் படி’.
முதலிலேயே படிக்கச்சொல்லிக் கேட்கும் அந்த ஆவணத்தில் அப்படி என்ன இருந்தது?
0
‘சமூக பிரச்சனைகளை விடுத்து, எல்லைகளுக்கு அப்பாற்பட்டு எந்த வகையிலும் கட்டுப்படுத்தவோ, அதிகாரம் செலுத்தவோ இயலாத செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டதற்காகப் பலர் என்னை இழிவாக வருங்காலங்களில் பேசக்கூடும். தனி மனிதனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, சரி செய்வதற்கு முன்பாக, அவன் சார்ந்திருக்கும் அரசாங்கத்தைக் காப்பதே குடியுரிமையின் தலையாயக் கடமை எனக் கருதுகிறேன்.
துரதிருஷ்டவசமாகக் குற்றங்கள் நிகழும்போது தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும், வெறுப்பும் வரையறுக்கப்பட்ட மேற்பார்வையும் கொண்ட ஒரு அரசாங்கத்தால் நாம் அனைவரும் இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறோம். விளிம்புநிலை இளைஞர்கள் தங்களது சூழல் காரணமாகச் சிறிய அளவிலான மீறலில் ஈடுபட்டாலும் கூட, உலகின் மிகப்பெரிய சிறைகளில் அடைக்கப்பட்டுத் தாங்கமுடியாத இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். ஒரு சமூகமாக அதை நாம் கண்டும் காணாமலும் இருக்கிறோம்.
ஆனால் இதுவே உலகின் மிதமிஞ்சிய பணம் மற்றும் அதிகாரத்தில் கொழிக்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் குற்றங்களில் ஈடுபடும்போது, தங்களது உயர் தட்டு நண்பர்களைக் காக்க அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தையே கூட உருவாக்குகிறது. ஒருவேளை அந்நிறுவனங்கள் அவர்களது குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டால் அது உலக வரலாற்றின் மிகப்பெரிய தண்டனையாக இருக்கக்கூடும்.
உலக அளவில் மிகச்சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு அந்நிறுவனங்கள் வாதிடுவதால், சிறிய அளவிலும்கூட அவர்கள் தண்டனைக்கு உள்ளாவது கிடையாது.
இந்த நிறுவனங்களோடு இணைந்து குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகள் விசாரிக்கப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும் என்று நினைகிறீர்கள்? மேற்கொள்ளப்படும் விசாரணை தேச நலனுக்கு எதிரானதாகப் பார்க்கப்படும். குற்றங்கள் தடுக்கப்படுவதற்குப் பதிலாக மேலும் அதிகாரம் கூட்டப்பட்டு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. நான் வெளியிட இருக்கும் ஆவணங்கள் அதை நிச்சயம் நிரூபிக்கும்.
இந்தச் செயலை செய்வதனால் என்னென்ன பாதிப்புகள் வருமென்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். அரசாங்கத்தின் இருண்ட மூலைகளுக்குச் சென்று வந்தவன் என்ற தகுதியில் சொல்கிறேன், அவர்கள் அஞ்சுவது வெளிச்சத்தைப் பார்த்துதான்’.
எட்வர்ட் ஜோசப் ஸ்நோடன்
முன்னாள் மூத்த ஆலோசகர், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு நிறுவனம்.
முன்னாள் கள அதிகாரி, அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பு.
முன்னாள் விரிவுரையாளர், அமெரிக்கப் பாதுகாப்புப் புலனாய்வு நிறுவனம்.
0
ஜூன் 2013 ஹாங்காங்கில் தரையிறங்கி தங்களது விடுதியை அடைந்ததும் முதல் வேலையாக கிளென் ‘ஒடிஆர்’ மறையாக்கச் செயலியைத் திறந்து எட்வர்ட் ஸ்நோடனுக்குத் தாங்கள் வந்துசேர்ந்த தகவலைத் தெரிவித்தார்.
ஸ்நோடன் ‘ஒரு ஹாங்காங் விடுதிக்கு இரண்டு அமெரிக்கர்கள் வந்து சேர்ந்த உடனேயே வெளியே கிளம்புவது நம் அனைவரின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. நீங்கள் நாளை காலை கிளம்பி நான் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து என்னைச் சந்திக்கலாம்’ என்று பதிலளித்தார். மேலும் ஸ்நோடன் தரப்பிலிருந்து அவரைச் சந்திக்கக் காலை 10:00 அல்லது 10:20 என இருவேறு அட்டவணைகள் ஒதுக்கப்பட்டன. திமிரா ஹோட்டலின் மூன்றாவது தளத்தில்தான் அடுத்த நாளைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மறுநாள் வாடகை வாகனத்துக்காகக் காத்திருந்தனர் கிளென்னும் லாராவும். ஒருவேளை வாகனம் ஓட்டுநர் அமெரிக்காவின் ரகசிய உளவாளியாகக் கூட இருக்கக்கூடும் என்பதனால் வாகனத்தில் மௌனமாக இருந்தனர் இருவரும். பொதுவாக ரகசியச் சந்திப்புகளுக்கு எனப் பின்பற்றப்படும் ‘ஜப்பானில் ஜாக்கிசான் நல்லா இருக்காரா?’ போன்ற குறியீட்டுச் சொற்களை இந்தச் சந்திப்பிற்காகவும் சொல்லியிருந்தார் ஸ்நோடன்.
அதன் அடிப்படையில், மூன்றாவது தளத்தைத் தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சந்திப்பு அறையை ஒட்டி அவர்கள் முதலில் சந்திக்கும் விடுதி பணியாளரிடம் ‘இன்று உணவகம் திறந்திருக்குமா?’ என்ற குறியீட்டுக் கேள்வியைக் கேட்டார் கிளென். பணியாளர் கர்ம சிரத்தையுடன் அதற்குண்டான பதிலைச் சொன்னார்.
தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அட்டவணையின்படி 10:00 மணிக்குச் சந்திப்பு அறையில் காத்திருந்தனர். இரண்டு நிமிடங்கள் காத்திருந்தும் யாரும் வராததால் அவ்விடத்தை நீங்கி மீண்டும் 10:20க்கு வந்து காத்திருந்தனர். இம்முறை டி ஷர்ட், ஜீன்ஸ், கண்ணாடி அணிந்த இருபத்தொன்பது வயதான ஒருவர் அறைக்குள் நுழைந்து தன்னை எட்வர்ட் ஸ்நோடன் என்று அறிமுகம் செய்துகொண்டார்.
கிளென்னிற்கு ஸ்நோடனின் தோற்றத்தைப் பார்த்ததும் இந்தச் சந்திப்பிற்காகப் பட்ட பாடெல்லாம் தண்டம் என்றுதான் தோன்றியது. காரணம் பொதுவாக அரசாங்கப் பணியில் இருப்பவர்கள் அரசின் மீது ஒரு சிறு கல்லை எறிவதாக இருந்தால்கூட ஆற அமர வயதாகும் வரைக்கும் காத்திருப்பார்கள். ஆனால் இளம் வயதில் இருக்கும் ஒருவர், தனது பணி வாழ்வின் ஆரம்பத்தில் இருக்கும் ஒருவர் எப்படித் துணிந்து அரசின் ரகசியங்களை வெளியே கசிய விடுவார்? இவ்வளவு தூரம் வந்ததற்கு ஒரு வாய் சோறு கிடைத்தால் மகிழ்ச்சி என்பதைப் போலத்தான் விருப்பமின்றி அவ்வறையில் அமர்ந்திருந்தார் கிளென்.
ஸ்நோடன் ‘என் அறைக்குச் செல்வோமா?’ என்று அழைத்தார். பத்தாவது தளத்திலிருந்த ஸ்நோடனின் அறை எந்தவித ஒழுங்கும் இல்லாமலிருந்தது. ‘மன்னிக்கவும். அறை சுத்தமில்லாமல் இருக்கிறது. இரண்டு வாரங்களாக நான் அறையை விட்டு எங்கேயும் நகரவில்லை. அதனால்தான் இப்படி இருக்கிறது’ என்றார். அவரிடம் என்ன பேசுவது என்ற தயக்கத்திலேயே நேரம் கழிந்தது.
லாரா தன் கேமராவை தயார் செய்ய ஆரம்பித்தார். கேள்வி பதில் வடிவில் ஸ்நோடனின் குழந்தைப் பருவம் தொடங்கி, அவர் எதற்காக என்.எஸ்.ஏவின் ரகசியங்களை வெளியிட விரும்புகிறார் என்பது வரைக்கும் விரிவாக ஒரு ஆவணப்படம் எடுப்பதாகத்தான் திட்டம்.
கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார் கிளென். பேசத் தொடங்கினார் எட்வர்ட் ஸ்நோடன்.
(தொடரும்)