Skip to content
Home » சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

சாதியின் பெயரால் #4 – அரசியலில் சாதியும் சாதி அரசியலும்

தந்தை உள்பட ஆறு பேருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை

சமூக நீதியையும் முற்போக்கு அரசியலையும் தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்திய இயக்கம் என்று அழைத்துக்கொள்ளும் திராவிட இயக்கம் உண்மையில் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனையோட்டம் கொண்ட பிற பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை (ஒபிசி) ஒருங்கிணைப்பதில்தான் வெற்றி பெற்றுள்ளது. அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட ஓபிசி பிரிவினர் சுலபமாகத் தேர்தல் களத்தைக் கைப்பற்றி, செல்வாக்கும் பலமும் பெற்றவர்களாக மாறியிருக்கிறார்கள்.

இடைநிலைச் சாதியினரே இதன் பலனாளிகளாக இருப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக, தெற்கிலும் மத்திய மாவட்டங்களிலும் முக்குலத்தோர்; வடக்கில் வன்னியர்கள்; மேற்கில் வெள்ளாள கவுண்டர்கள். தமிழகத்தில் அரசியல் அதிகாரமும் இந்த மூன்று பிரிவுகளின் கரங்களில்தான் பெருமளவு குவிந்திருக்கிறது. இவர்களே அரசியலை இயக்கும் மையமாகவும் திகழ்கிறார்கள். சமூக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களையும் இவர்களில் நிலம் படைத்த பிரிவினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஒபிசி ஒருங்கிணைப்புக்கு திராவிட இயக்கத்தின் தோல்விதான் காரணம் என்று கூறிவிடமுடியாது என்கிறார் அ. மார்க்ஸ். ‘முதலில் இன்றைய திராவிடக் கட்சிகளையும் அன்றைய திராவிட இயக்கத்தையும் நாம் பிரித்துப் பார்க்கவேண்டும். இரண்டும் வெவ்வேறானவை. மார்க்சிய அரசியலின் தோல்வியும் அடையாள அரசியலின் எழுச்சியும் ஒன்றுசேர்ந்து சாதி அரசியலை 1980களில் தமிழகத்தில் தோற்றுவித்திருக்கின்றன என்று சொல்லலாம். இதன் காரணமாக அதிமுகவும் திமுகவும் ஓபிசி பிரிவினரை மையப்படுத்தித் தங்கள் அரசியலை மாற்றியமைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்களைப் பகைத்துக்கொள்வது பலனளிக்காது என்னும் முடிவுக்கு அவர்கள் வந்து சேரவேண்டியிருந்தது’ என்கிறார் அ. மார்க்ஸ்.

சாதி இந்துக்களைப் பகைத்துக்கொள்ள திராவிடக் கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸிடம் அந்த அச்சம் காணப்படவில்லை. அவர்கள் துணிச்சலாக சாதி இந்துக்களை எதிர்த்தனர் என்கிறார் மார்க்ஸ். ‘சமத்துவ சமுதாயம் அமையவேண்டுமெனும் காந்திய மரபை அவர்கள் பின்பற்றியதுதான் இந்த அணுகுமுறைக்குக் காரணம். ஆனால் திராவிடக் கட்சிகளோ காந்தி, பெரியாரின் சமூக முற்போக்குச் சிந்தனைகளை முன்னெடுக்கத் தவறிவிட்டன. அதன் விளைவுதான் ஒபிசி ஆதிக்கம்.’

‘இன்று நாம் சாதிய ஜனநாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அரசியலுக்குச் சாதி இன்றியமையாததாக மாறிவிட்டது’ என்கிறார் வீ. அரசு. தலித் மக்களில் ஒரு பிரிவினர் படித்தவர்களாகவும் பொருளாதார ரீதியில் தற்சார்பு கொண்டவர்களாகவும் அரசியல் அதிகாரம் மிக்கவர்களாகவும் முனைப்போடு இயங்குபவர்களாகவும் திகழ்கிறார்கள். சபால்டர்ன் குழுக்கள் பலம்பெற்றுவரும் தருணமாக இது இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் தாங்கள் இதுவரை இழந்து நிற்கும் உரிமைகள் என்னென்ன என்பதை உணர்கின்றனர். அவற்றை மீண்டும் வென்றெடுக்கவேண்டும் என்னும் முனைப்பு தோன்றியிருக்கிறது. இந்த மாற்றங்களையெல்லாம் ஓபிசி அவதானித்து வருகின்றனர். அவற்றுக்கு எதிர்வினை புரியும் வகையில் அரசியல் களத்தில் ஒன்றிணைகிறார்கள், பலப்படுத்திக்கொள்கிறார்கள். அதைத்தான் நாம் பார்க்கிறோம் என்கிறார் வீ. அரசு.

தலித் மக்களை ஓட்டு வங்கியாகக் காணும் போக்கு தமிழகக் கட்சிகளிடம் காணப்படவில்லை என்கிறார் ரவிக்குமார். ‘அவர்கள் வாக்குகளை இலவசங்கள் கொடுத்து வாங்கிவிடலாம் என்று கட்சிகள் நினைக்கின்றன. இடைநிலைச்சாதிகளைப் பொருத்தவரை கட்சிகளின் நிலைப்பாடு வேறு. அவர்களுடைய ஈகோவைச் சரிசெய்யவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஓபிசியில் வரும் மூன்று பெரும் பிரிவினரும் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாகவும் அதனாலேயே பொருளாதாரப் பலமிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். தவிரவும், அரசியல் கட்சிகளின் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் இந்தச் சாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம். இது ஒரு விதமான நச்சுச்சுழல். உடைப்பது எளிதல்ல’ என்கிறார் ரவிக்குமார்.

காதலும் சாதியும் அரசியலும் ஒன்று சேரும் புள்ளி அபாயகரமானது என்னும் அடிப்படை உண்மையை இதிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது. சாதிக்கும் அரசியலுக்குமான பிணைப்பு நீடிக்கும்வரை இந்நிலை மாறப்போவதில்லை என்பதே யதார்த்தம்.

சாதியும் கொலைகளும்

சமீபகாலங்களை எடுத்துக்கொண்டால் சங்கருக்கு முன்பு, சாதியின் பெயரால் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. சேலம் அருகிலுள்ள ஓமலூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வி. கோகுல் ராஜ் வேளாள கவுண்டர் எனும் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தார். 24 ஜூன் 2015 அன்று கோகுல் ராஜின் சடலம் ஈரோடுக்கு அருகிலுள்ள ஒரு ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய தலை தனியே துண்டாகக் கிடந்தது. இந்த வழக்கை விசாரித்துவந்த ஆர். விஷ்ணுப்ரியா எனும் தலித் அதிகாரி திருச்செங்கோட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்துபோனார்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் வன்னியர் சாதியைச் சேர்ந்த திவ்யாவை மணம் செய்துகொண்டதை வெறும் கலப்பு மணம் என்று மட்டும் பார்த்துவிடமுடியாது. 4 ஜூலை 2013 அன்று இளவரசனின் உடல் தருமபுரிக்கு அருகில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. தன் மகள் ஒரு தலித்தைத் திருமணம் செய்துகொண்டதைப் பொறுக்கமுடியாத திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து நத்தம் காலனி கலவர பூமியாக மாறியது.

இவர்களையெல்லாம் நாம் பின்னர் விரிவாக ஆராயப்போகிறோம். இப்போதைக்கு நாம் தெரிந்துகொள்ளவேண்டிய எளிமையான அடிப்படை உண்மை இதுதான். கலப்பு மணம் என்று பொதுவாகச் சொல்வது வேறு. தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையில் நடைபெறும் கலப்புமணங்கள் வேறு. முன்னதை ஆதரிப்பதாகச் சொல்பவர்களால்கூட பின்னதை ஏற்கமுடியவில்லை என்பதே யதார்த்தம். இதிலும்கூட மணமகன் தலித்தாக இருப்பதற்கும் மணமகள் தலித்தாக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. ஒரு தலித் மருமகளை ஏற்றுக்கொள்வதும் தலித் மருமகனை ஏற்றுக்கொள்வதும் ஒன்றல்ல.

எவிடென்ஸ் கதிர் இது தொடர்பாகச் சில கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். ‘சாதி இந்துக்களைத் திருமணம் செய்துகொண்ட பல தலித் பெண்கள் புகுந்த வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர், கைவிடப்பட்டுள்ளனர்’ என்கிறார். ‘சாதிப் பெருமிதத்துக்காகவும் மதப் பெருமிதத்துக்காகவும் கொல்லப்படும் பெண்கள் குடும்பக் கடவுள்களாக மாற்றப்பட்டு, வழிபடப்படும் போக்கையும் நாம் பார்க்கிறோம்.’

தலித்துகள் ஆணவக் கொலைகளில் ஈடுபடுகிறார்களா? ‘திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் சாதி இந்துக்களும் பங்கேற்றிருக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எந்தத் தலித் குடும்பமும் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட பெண்களைக் கொன்றதில்லை’ என்கிறார் கதிர்.

தமிழகத்தில் கலப்பு மணம் ஏன் எதிர்க்கப்படுகிறது என்னும் கேள்விக்கு விடை தெரியவேண்டுமானால் ஓபிசி பிரிவினரின் கூட்டு மனநிலையை நாம் ஆராயவேண்டும். நிலப்பிரபுத்துவச் சிந்தனையோட்டத்திலிருந்து இவர்கள் இன்னும் வெளிவந்தது போலவே தெரியவில்லை. ‘வழிவழியாகப் பின்பற்றப்பட்டு பழங்காலச் சாதிப் படிநிலைக்கு ஏற்றவாறு இவர்கள் மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே மிகக் கறாரான ஒழுக்க விதிகளையும் சாதித் தூய்மையையும் இவர்கள் கடைபிடிக்கிறார்கள். வர்ணாசிரமம் எனும் வேதகால அமைப்பில் நிலைகொண்டிருக்கும் நம்பிக்கைகள் இவை’ என்கிறார் ஆய்வாளர் வீ. அரசு.

எல்லா அமைப்புகளையும்போல் சாதியமைப்பும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே எதிராக இருப்பதையும் வீ. அரசு கவனப்படுத்துகிறார். ‘சாதித் தூய்மை என்பது பெண்ணின்மீதே பலவந்தமாகத் திணிக்கப்படுகிறது. ஓபிசி பிரிவினரிடையே நிலவும் தீங்கான ஆணாதிக்கத்துக்குப் பெண்கள் பலியாகவேண்டியிருக்கிறது’ என்கிறார் அவர்.

ஓர் உயிரைக் கொல்வதில் எந்தப் பெருமிதமும் இருக்கமுடியாது என்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ‘உடுமலைப்பேட்டைச் சம்பவத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் பெண்ணின் தந்தைமீது 40 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவருக்கு என்ன பெருமிதம் இருந்துவிடமுடியும்? அவர் பெண்தான் அந்த இளைஞன்மீது காதல் வயப்பட்டார். அவரைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததும் பெண்தான். இருந்தும் ஏன் அந்த இளைஞன் கொல்லப்படவேண்டும்?’ என்று கேள்வி எழுப்புகிறார் கிருஷ்ணசாமி.

வழக்கும் நீதியும்

சங்கரைக் குரூரமாக வெட்டிக் கொன்றவர்கள் யாரோ வெளியாள்கள் அல்ல, கவுசல்யாவின் வீட்டினர்தான் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் உடனடியாகத் தெரிந்துவிட்டது. கொன்றவர்கள் யார் என்பது மட்டுமல்ல, கொல்லப்பட்டதற்கான காரணமும்கூடத் தெளிவானதுதான். ஒரு தலித் இளைஞனைத் தன் மகள் காதலிப்பதை ஆரம்பம் முதலே கவுசல்யாவின் பெற்றோர் விரும்பவில்லை. தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கின்றனர். தொடர்ந்து மிரட்டியும் வந்திருக்கின்றனர்.

பெற்றோரின் மனநிலையை மாற்றமுடியாது; ஒருபோதும் தன் வீட்டிலிருந்து சம்மதம் கிடைக்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தே சங்கரைத் தன் வீட்டுக்குத் தெரியாமல் திருமணமும் செய்துகொண்டார் கவுசல்யா. திருமணம் முடிந்து உடுமலைப்பேட்டையில் சங்கரின் வீட்டுக்குக் குடிபெயர்ந்த பிறகும் தொடர்ந்து தன் வீட்டிலிருந்து மிரட்டல்களைச் சந்தித்து வந்திருக்கிறார் கவுசல்யா. இவற்றின் நீட்சியே கொலைவெறித் தாக்குதல்.

தாக்குதலைத் தொடர்ந்து தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, அவர்களுடைய உறவினர்கள், கூலிப்படையினர் என்று மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை 1500 பக்கங்களுக்கு நீண்டு சென்றது. சின்னச்சாமி, அன்னலட்சுமி, தாய்மாமன் பி. பாண்டித்துறை மூவர் மீதும் குண்டர் சட்டமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.

அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக யு. சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக மூன்று வழக்கறிஞர்கள் செயல்பட்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் விசாரணை நீடித்தபின் நீதியரசர் அலமேலு 12 டிசம்பர் 2017 அன்று தீர்ப்பை வழங்கினார்.

அதற்குமுன்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏன் மரண தண்டனை கோரப்படுகிறது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி வினவினார். அதற்கு வழக்கறிஞர் யு.சங்கரநாராயணன், உச்ச நீதிமன்றம் மரண தண்டனைக்குப் பரிந்துரைத்த நான்கு வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அந்த நான்கும் சாதி இந்துக்களைத் திருமணம் செய்த குற்றத்துக்காகத் தலித்துகள் கொல்லப்பட்ட வழக்குகள். இவை அனைத்திலுமே, கொலை செய்ய கூலிப்படை ஏவப்பட்டிருந்தது. உதவியற்ற நிலையில் இருந்தவர்களே தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். ‘இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சங்கர் வழக்குக்கும் பொருந்தும்’என்று அவர் வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அன்னலட்சுமி (குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபர்), பாண்டித்துரை (மூன்றாவது நபர்), வி. பிரசன்னக்குமார் (பத்தாவது நபர்) ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். தந்தை சின்னச்சாமி, பி. ஜெகதீசன், எம். மணிகண்டன், பி. செல்வக்குமார், பி. கலைத்தமிழ்வாணன், எம். மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐவரும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்ட ஒன்பதாவது நபரான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. 11ஆவது நபரான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

தூக்குத் தண்டனையோடு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 3 லட்சம் அபராதமும் சின்னச்சாமிக்கு விதிக்கப்பட்டது. இதிலிருந்து 2 லட்ச ரூபாயை அவர் கவுசல்யாவுக்கு வழங்கவேண்டும். அதேபோல் ஜெகதீசனுக்கும் மரண தண்டனையோடு சேர்த்து 1.30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மணிகண்டனும் செல்வக்குமாரும் தலா 1.65 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும்.

சாதி ஆணவப் படுகொலை குறித்து இதுவரை நடத்தப்பட்ட வழக்குகளிலேயே குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டது இந்த வழக்கில்தான். ஓர் ஆதிக்கச் சாதி இந்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்த தலித் இளைஞரைச் சதி செய்து கொன்றதற்காக அப்பெண்ணின் தந்தை உள்பட ஆறு பேருக்கு, அதாவது ஆறு சாதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *