எல்லாம் எரிந்து முடிந்திருந்தது. இருள் போல் பரவிய புகை காற்றில் கலந்து மறைந்திருந்தது. துயரத்தில் மூழ்கியிருக்கும் நேரமல்ல இது என்பதை உணர்ந்து ஆண்களும் பெண்களும் அடுத்து என்ன என்று யோசிக்கத் தொடங்கியிருந்தனர். எதுவும் புரியாமல் பீதியோடு சுருண்டிருந்தவர்கள் குழந்தைகள்தாம். அவர்கள் வளர்ந்த உலகம் அவர்கள் முன்பாகக் கருகிக் கிடந்தது. ஏன் இப்படி நடக்கவேண்டும் என்பதை அவர்களால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. குழந்தைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குக் கொண்டுவர தனி அமர்வுகள் ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது.
கல்லூரி மாணவர்களுமேகூடக் கலக்கத்தில்தான் இருந்தார்கள். அவர்கள் சென்றுவரும் பேருந்தில் சிறிது காலத்துக்குப் பாதுகாப்பு தரவேண்டியிருந்தது. மாணவர்கள் அனைவருக்கும் புதிய பாடப் புத்தகங்களும் சீருடைகளும் விநியோகிக்கப்பட்டன. புதிய பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்களும் மதிப்பெண் பட்டியல்களும் அளிக்கப்பட்டன. பிளவுபட்டிருக்கும் சமூகங்களுக்கு இடையில் புரிதலையும் கூட்டுறவையும் ஊக்குவிக்கும் வகையில் வீதி நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டன. மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் எப்படியாவது மீட்டுக்கொண்டு வந்துவிடுவோம் என்றார் அப்போது என்னிடம் பேசிய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆர். லில்லி.
ஆனால் அது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. இழப்புகளைப் பதிவு செய்ய ஒரு முகாம், மருத்துவ முகாம், அழிந்துபோன ஆவணங்களைப் புதிதாக விநியோகிக்க ஒரு முகாம் என்றெல்லாம் அமைக்கப்பட்டாலும் மக்களின் சிதறிப் போயிருந்த தன்னம்பிக்கையை, இதயத்தின் ஆழத்தில் உறைந்துபோய்விட்ட அச்சத்தை என்ன செய்வதென்று ஒருவருக்கும் தெரியவில்லை.
0
வன்முறையும் மோதலும் நாயக்கன் கோட்டைக்குப் புதியவையல்ல. மேற்கு வங்கத்திலுள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி எனும் சிறிய கிராமத்தில் 1969இல் வெடித்த தீப்பொறி இந்தியாவெங்கும் பரவிப் பற்றிக்கொண்டது. காவல்துறை, அரசு வன்முறைக்கு எதிரான விவசாயப் போராட்டங்கள் இந்தியா முழுமைக்குமான புரட்சிகர மாற்று அரசியலை முன்மொழியும் ஆயுதந்தாங்கிய அமைப்பாக வளரத் தொடங்கியது. தென்னிந்தியாவில் பல பகுதிகளில் நக்சல்பாரி இயக்கத்துக்குக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆதரவும் இருந்தது வந்தது. அத்தகைய இடங்களுள் தருமபுரியும் அடங்கும்.
1980களில் தருமபுரி தமிழ்நாட்டின் மிகப் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகவும் எனவே தவிர்க்கவியலாதபடிக்கு, தீவிரவாதிகளின் விளைநிலமாகவும் இருந்தது. எம் எல் கட்சி என்று அழைக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் (மார்க்சிய லெனினியம்) 1969இல் தோற்றுவித்த சாரு மஜூம்தார் அடுத்த ஆண்டு ஹொகேனகலில் ஒரு ரகசியச் சந்திப்பை நடத்தினார். அதற்குமுன்பு அருகிலிருந்த புளியம்பட்டி கிராமத்துக்கு அவர் ஒருவருக்கும் தெரியாமல் சென்று வந்திருந்தார். அப்பு, பாலன் இருவரும் (இருவரும் காவல்துறையினரால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்) நாயக்கன் கோட்டையிலும் சுற்றுவட்டாரத்து கிராமங்களிலும் உள்ள ஏழை, உழைக்கும் மக்களிடம் பணியாற்றியிருக்கின்றனர்.
1980களின் தொடக்கம் முதல் 1990களின் இறுதிவரை நாயக்கன் கோட்டை காவல்துறையின் நிரந்தரக் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தது. நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் மட்டுமின்றி இயக்கத்தோடு சிறிதும் தொடர்பில்லாதவர்கள்கூடக் காவல்துறையினரால் வேட்டையாடப்பட்டனர். புரட்சிகர அரசியலைத் தேர்ந்தெடுத்தவர்களும் அதற்காகப் பணியாற்றியவர்களும் மட்டுமல்ல, அமைப்போடு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்களும்கூட சந்தேகத்துக்கு உள்ளாயினர். இங்கும் அதிக பாதிப்பைத் தலித்துகளே எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
‘நாயக்கன் கோட்டையைப் பூர்விகமாகக் கொண்டிருப்பதென்பது ஒரு வகையான சாபம்தான். அதிலும் நீங்கள் ஒரு தலித்தாக இருந்தால் இரு மடங்கு இடர்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்’ என்கிறார் நத்தம் காலனியைச் சேர்ந்த சசிகலா. ‘கடந்த காலத்தில் நாங்கள் ஒரு குழுவாகத் தேர்ந்தெடுத்த பாதைக்காக இப்போதும் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இன்னமும் எங்களால் மதிப்போடு வாழமுடியவில்லை.’
சசிகலாவின் கணவர், ‘பொடா’ பழனிச்சாமி ஒரு முன்னாள் மார்க்சிய லெனினியச் செயற்பாட்டாளர். பொடா சட்டம் அமலில் இருந்தபோது கைது செய்யப்பட்டு ஐந்தாண்டுகாலம் சிறையில் இருந்திருக்கிறார். ‘காவல் துறையினர் எப்போது வேண்டுமானாலும் திடீரென்று தோன்றுவார்கள். தடதடவென்று கதவைத் தட்டி எங்கள் இளைஞர்களை இழுத்துச்சென்றுவிடுவார்கள். கேட்டால் விசாரிக்கிறோம் என்பார்கள். எங்கே வைத்து விசாரணை என்று சொல்லமாட்டார்கள். எப்போதும் எங்களைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். விடிவதற்குமுன்பே தாக்குவார்கள், எப்போதும் மிரட்டிக்கொண்டே இருப்பார்கள். எல்லாவற்றுக்கும் பழகிக்கொண்டோம். இவர்களிடமிருந்து தப்புவதற்காகவே இளைஞர்கள் பெங்களூரு, கோயம்புத்தூர் என்று குடிபெயர ஆரம்பித்தார்கள். அங்கேயே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள்.’
தருமபுரியிலுள்ள ஊத்தங்கரையில் 24 செப்டெம்பர் 2002 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நக்சலைட் இயக்கம் முடிவுக்கு வந்தது. (2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஊத்தங்கரை இன்று உள்ளது). தருமபுரியில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட முழுத் தமிழ்நாட்டிலும் நக்சல் செயல்பாடுகள் ஓய்ந்துபோயின. அதே சமயம், வறுமையில் வாடுபவர்களும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களும் நீடிக்கும்வரை நக்சல் பொறி ஏதேனும் ஒரு வடிவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து சில மாற்றங்களைக் கொண்டுவர அரசு முடிவெடுத்தது. மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும்படி கிராமப்புறங்களில் சில சமூகப் பொருளாதார நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கென்று பிரத்தியேக நிதி ஒதுக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே இத்திட்டங்களால் சில நன்மைகள் விளைந்தன.
நக்சல்பாரி இயக்கம் பற்றிய நினைவுகள் எல்லாமே மோசமானவையல்ல. நாயக்கன் கோட்டை தலித் மக்களின் வாழ்வில் நக்சல்பாரிகள் சில ஆச்சரியத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘நக்சலைட்டுகள் இங்கே தீவிரமாகச் செயல்பட்டு வந்தபோது இப்போதுள்ளதைப் போல் இல்லாமல் சமூகத்தில் ஒருவித சமநிலை நிலவிவந்தது’ என்று நினைவுகூர்கிறார் பழனிச்சாமி. வர்க்க அடையாளத்தை முன்வைத்து வளர்த்தெடுக்கப்பட்ட அரசியலில் சாதி அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கவேண்டும். மேல்சாதி தாழ்ந்த சாதி எனும் பாகுபாட்டைக் காட்டிலும் பணக்காரன் ஏழை பாகுபாடு கூர்மை பெற்றிருக்கும். மார்க்சியம், லெனினியம், மாவோயியம் ஆகிய கொள்கைகளின் சாரம் எளிமையாக மக்களிடையே பிரசாரம் செய்யப்பட்டதன் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கவேண்டும். 2000ஆம் ஆண்டுவரை தலித்துகள் தங்களைத் தலித்துகளாகவே உணரவில்லை. அப்படி அவர்களை யாரும் பாவிக்கவும் இல்லை.
வர்க்கப் பாகுபாடு எவ்வாறு தோன்றியது? ஏழைகள் ஏழைகளாகவும் செல்வந்தர்கள் மேன்மேலும் செல்வந்தர்களாகவும் மாறிக்கொண்டிருப்பது ஏன்? இந்நிலையை மாற்றுவது எப்படி? அதை யார் மாற்றவேண்டும்? போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை நக்சல்பாரிகள் மக்களிடையே தொடர்ச்சியாகப் பரப்புரை செய்துவந்த காலகட்டம் அது. ஏழைகளிடம் குறிப்பாக தலித்துகளிடம் அவர்கள் நெருங்கிச் சென்று உரையாடினர். சக தோழர்களாகக் கருதி, மதித்து அவர்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுத்தனர். வர்க்கப் போராட்டத்துக்கான அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தினர்.
இந்தத் தொடர் உரையாடல் தலித் மக்களிடையே சமூக அரசியல் விழிப்புணர்வைத் தோற்றுவித்தது. நமக்கெதற்கு ஊர் உலக விவகாரங்கள் என்று ஒதுங்கி நின்றவர்கள்கூட அரசியல்மயப்படுத்தப்பட்டனர். நிலப்பிரபுத்துவம் எப்படி இயங்குகிறது என்றும் உழைப்புச் சுரண்டல் எப்படி நியாயப்படுத்தப்படுகிறது என்றும் அவர்கள் தெரிந்துகொண்டனர். எல்லா மரபுகளையும் அப்படியே பின்பற்றவேண்டியதில்லை என்பதையும் சில மரபுகள் எதிர்க்கப்படவேண்டியவை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் புரட்சிகர அரசியல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனில், நக்சல்பாரிகளின் ஆயுதப்போராட்ட வழியை, அதாவது வன்முறைப் பாதையை மக்கள் அன்று ஏற்றுக்கொண்டதாகச் சொல்லமுடியுமா? எம். துரை, ஏ. மாதையன் இருவரும் மறுக்கின்றனர். இருவருமே நக்சல் இயக்க ஆதரவாளர்களாக இருந்தவர்கள். வறுமைக்கான காரணம் என்ன என்று எங்களுக்குச் சொல்லப்பட்டபோது அவர்கள் சொன்னதிலுள்ள உண்மையைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டோம். ஆனால் எதிரி வர்க்கத்தை அழித்தொழிக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னபோது அதை நாங்கள் ஏற்கவில்லை. நிலமற்றவர்கள் நிலம் பெறவேண்டுமானால் நிலமுள்ளவர்களை அழித்தொழிக்கவேண்டும் எனும் அறைகூவல் எங்களுக்குச் சரியாகப் படவில்லை என்கிறார்கள் இவர்கள். ஆக, மக்கள் புரட்சிகர அரசியலின் சாரத்தை மட்டுமே உள்வாங்கிக்கொண்டனர். வழிமுறையை அல்ல.
நீண்ட காலத்துக்கு இயல்பானதொன்றாகக் கருதப்பட்டு வந்த பண்ணையடிமை முறையை நீடித்த போராட்டங்களின்மூலம் களைந்ததில் புரட்சிகர அரசியலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இப்படியொன்றை நடத்திக்காட்டுவது சாத்தியம் என்னும் நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்தவர்கள் நக்சல்பாரிகள். நத்தம் காலனியில் மட்டும் ஏழு முன்னாள் மார்க்சிய லெனினியச் செயற்பாட்டாளர்கள் இன்று வாழ்கின்றனர். அவர்களுள் பழனிச்சாமியும் இன்னொருவரும் சிறையில் அடைக்கப்பட்டு, வெளிவந்தவர்கள். ‘வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அப்போது எங்கள்மீது யாரும் பாகுபாடு காட்டியது கிடையாது’ என்று ஒருவித ஏக்கம் கலந்த குரலில் சொல்கிறார் பழனிச்சாமி. ‘சாதி இந்துக்கள்கூட, அவ்வளவு ஏன், இந்தக் கலவரத்துக்குப் பின்னால் இருந்தவர்களும்கூட அப்போது எங்களோடு சேர்ந்து ஒரே அணியில்தான் நின்றனர்.’
வர்க்க அரசியல் வலுவோடு இருந்தவரை இந்த இணைப்புச் சாத்தியமாகியிருந்தது. ‘என்னிடமும் ஏதுமில்லை, உன்னிடமும் ஏதுமில்லை. நான் ஒரு வகையில் புறக்கணிக்கப்படுகிறேன் என்றால் நீ வேறொரு வகையில் புறக்கணிக்கப்படுகிறாய். இந்நிலை நமக்கு ஏன் ஏற்பட்டது என்பதை நாமல்லவா ஆராயவேண்டும்? நம் எதிரி பொதுவானவன் எனும்போது நாம் இணைந்தல்லவா போராடவேண்டும்? நாம் பிரிந்திருப்பது நம் நிலையை மேலும் மோசமாக்கவல்லவா செய்யும்?’ இந்தத் தர்க்கம்தான் அவர்களைக் கைகோக்க வைத்தது. சாதி அரசியல் எப்போது தலை தூக்கியதோ அப்போதே இணைப்புச் சங்கிலிகள் பலவீனமடைய ஆரம்பித்துவிட்டன. நீ வேறு, நாங்கள் வேறு என்று வன்னியர்கள் தலித்துகளிடமிருந்து தங்களைத் திட்டவட்டமாக விலக்கி வைத்துக்கொண்டனர்.
‘தலித்துகளாகிய நாங்கள் மிகக் கொடுமையான சூழலில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. சக்கையாகப் பிழிந்தெடுப்பார்கள். மாதக்கூலி என்று 40 ரூபாய் தருவார்கள். நக்சலைட் இயக்கம் வந்த பிறகுதான் நிலைமை மாறியது. அவர்கள் எங்களுக்கு நல்ல சம்பளம் பெற்றுத் தந்தனர்’ என்கிறார் 70 வயது சின்னத்தம்பி. இவருடைய மனைவி வன்னியர். இவர்களுடைய திருமணம் இதே நாயக்கன் கோட்டையில் 30 ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்றது. அப்போது எந்தப் புயலும் வீசவில்லை. யாருடைய வீடும் கொளுத்தப்படவில்லை. மற்றுமொரு கலப்பு மணமாக இது கடந்து செல்லப்பட்டது, அவ்வளவுதான். ‘நாங்கள் மகிழ்ச்சியாக, பேரன் பேத்திகளோடு வாழ்ந்து வந்தோம்’ என்கிறார் சின்னத்தம்பி.
புதிய தீவிரத்தோடு முன்னெடுக்கப்பட்ட சாதி அரசியல் மக்களின் இந்த எளிய மகிழ்ச்சியைத்தான் முதலில் கொன்றொழித்தது.
(தொடரும்)