Skip to content
Home » சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

சாதியின் பெயரால் #14 – வாழ்வும் மரணமும்

வாழ்வும் மரணமும்

இளவரசனின் மரணம் மீடியா உலகில் மற்றொரு சூறாவளியைக் கிளப்பிவிட்டது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் இளவரசன் குறித்த ஒவ்வொரு தகவலும் கவனம் கொடுத்து விவாதிக்கப்பட்டது. அவருடைய தனிப்படமும், திவ்யாவுடன் அவர் எடுத்துக்கொண்ட படமும் அதிக அளவில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. திவ்யாவோடு அவர் பரிமாறிக்கொண்ட மூன்று கடிதங்கள் இளவரசனின் முதுகுப் பையில் கண்டெடுக்கப்பட்ட செய்தி மக்களின் உணர்வுகளைக் கிளறிவிட்டது. இறுதிக்கணங்களில்கூட திவ்யாவைவிட்டுப் பிரியாத இளவரசனின் காதல் நெகிழ்ச்சியோடு சிலாகிக்கப்பட்டது.

கூடவே கொந்தளிப்பும் தோன்றியது. மகிழ்ச்சியோடு வாழவேண்டிய ஓர் இளைஞர் சாதி வெறிக்குப் பலியாகியிருக்கிறார். இந்தப் பெருந்துயருக்கு பாமகவும் வன்னியர் சங்கமும்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினார்கள். சமூக வலைத்தளங்களில் பாமக கண்டனங்களுக்கு உள்ளானது. தனிப்பட்ட இருவரின் வாழ்வில் சாதி அரசியல் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும் எனும் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது.

சமூக வலைத்தளம் தொடங்கி அச்சு, காட்சி ஊடகம்வரை பரவலாக பாமக கண்டனத்துக்கு உள்ளானதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஏற்கெனவே சாதி ரீதியாகப் பிளவுண்டிருந்த மக்களிடையே வெறுப்பையும் பகையையும் விதைக்கும் வகையில் கலப்பு மணத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார் டாக்டர் ராமதாஸ். தலித் இளைஞர்கள் ‘கூலிங் கிளாஸ், டீ ஷர்ட், ஜீன்ஸ்’ ஆகியவற்றை அணிந்துகொண்டு தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பெண்களை மயக்கி, காதல் வலை விரிக்கின்றனர். இதைப் புரிந்துகொள்ளாமல் இளம் பெண்கள் அவர்களிடம் மயங்கிவிடுகின்றனர். இது உண்மையான காதலே கிடையாது, நாடகக் காதல் என்று சொல்லியிருந்தார் டாக்டர் ராமதாஸ். ஏற்கெனவே வன்னியர் சங்கத் தலைவர்களும் பாமக கட்சியினரும் பல மேடைகளில் இதே போன்ற வெறுப்புப் பிரசாரத்தைத்தான் முன்வைத்து வந்தனர். இந்தப் பிரசாரம் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்குமான உறவில் கடும் விரிசல்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

இளவரசனின் மரணம் பல ஐயங்களைத் தோற்றுவித்திருக்கிறது என்றார் விசிக தலைவர் டி. ரவிக்குமார். பணியிலிருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை தொடங்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ‘திவ்யா, அவர் அம்மா, தம்பி மூவரும் அவர்களுடைய கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்டு அரசு பாதுகாப்பில் அமர்த்தப்படவேண்டும். அவர்கள் சாதி மக்களோடு, கிராமத்திலேயே அவர்கள் இருப்பது உசிதமல்ல என்று சுட்டிக்காட்டியதோடு, ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் கொண்டுவரவேண்டிய அவசியத்தை இளவரசனின் மரணம் உணர்த்தியிருக்கிறது.’

இளவரசனின் மரணம் ‘மிக, மிகத் துயரமானது’ என்றார் சிபிஐ (எம்) கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத். ‘சாதி அமைப்புகள் தங்கள் நோக்கங்களுக்காக இருவரை அழித்துவிட்டனர். இருவருக்கும் இடையில் வெறுப்பை வளர்த்து, அவர்கள் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓர் அப்பாவி இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறார்கள்.’

இளவரசனின் மரணம் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த பி. சம்பத்தின் நிலைப்பாடும். ‘தமிழகம் அதிர்ந்துபோயிருக்கிறது. ஜனநாயகத்தின்மீதும் மதச்சார்பின்மைமீதும் நம்பிக்கை வைத்திருந்த அனைவரும் காயமடைந்திருக்கிறார்கள். சாதியச் சக்திகள் சமூகத்தில் வெறுப்பை விதைப்பது அவலமானது’. சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிடவேண்டும், சாதியக் கரங்களிலிருந்து திவ்யா மீட்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய சம்பத், ‘காவல்துறை இளவரசனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது’ என்றும் சுட்டிக்காட்டினார்.

இளவரசனின் மரணம் விரிவாக மீடியாவில் விவாதிக்கப்பட்டது. இளவரசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்று காவல் துறை உள்ளிட்ட தரப்பினர் நம்பினர். அதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். நடந்திருப்பது கொலை, பாரபட்சமின்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட தலித் தரப்பினர் கோரினர். அதன் முதல் படியாக, இளவரசனின் உடல்கூறு சோதனை நியாயமான முறையில் நடைபெறவேண்டும் என்று குரல் கொடுத்தனர். இது சாதியின் கொலை. ஆணவக் கொலை என்று அரசியல் செயற்பாட்டாளர்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர்.

இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கோவை அல்லது சென்னையில் உடல்கூறு சோதனை செய்யவேண்டும் என்று கோரிய மனு ஏற்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வீடியோ ஆதாரங்களோடு இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அதுவரை இளவரசனின் உடல் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மற்றொரு மனுவையும் ஏற்று, திவ்யாவுக்குக் காவல் துறை பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் சம்மதத்தோடு தக்க மருத்துவர்மூலம் மனநல ஆலோசனை வழங்கப்படவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இளவரசனின் மரணம் குறித்த சர்ச்சைகளும் விசாரிக்கப்பட்டன. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் தருமபுரிக்குச் சென்று தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தனர். ஆனால் அது ஐயங்களைத் தீர்க்கவில்லை. புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது முறை உடல்கூறு பரிசோதனைச் செய்து முடித்தனர். அதன்பிறகு பலத்த பாதுகாப்போடு இளவரசனின் உடல் நத்தம் காலனிக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இளவரசனின் உடல் தகனம் செய்யப்பட்ட பிறகும் சர்ச்சைகள் ஓயவில்லை. காவல் துறையின் வார்த்தைகளும் மருத்துவர்களின் அறிக்கைகளும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளும் காயமடைந்த தலித் மக்களைத் திருப்திப்படுத்தவில்லை. இத்தனைப் பெரிய அநீதி நடைபெற்ற பிறகும் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை என்பதை அவர்களால் ஏற்கமுடியவில்லை.

சிவில் சமூகமும் விமரிசனங்களிலிருந்து தப்பவில்லை. பாமகவைக் குற்றம் சாட்டுவது எளிது. சாதியின் கோரைப் பற்களையும் கூர்மையான நகங்களையும் கண்டிப்பது எளிது. சாதி தன் வேலையைச் செய்துகொண்டிருந்தபோது, சாதி அரசியல் தன் வெறுப்புப் பிரசாரத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்தபோது, மக்களாகிய நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் விமரிசகர்கள், லிபரல்கள், அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள், இடதுசாரிகள், திராவிடர்கள், பகுத்தறிவாளர்கள் என்றெல்லாம் அழைத்துக்கொள்ளும் நம்மால் யதார்த்தத்தில் என்ன செய்யமுடிந்தது? தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் சாதிய வெறுப்பைக் கட்டுப்படுத்த என்ன செய்தன? தன் மகள் குறித்த ‘அவமானம்’ தாங்காமல் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொள்ள நேர்ந்ததும் இளவரசன் பலியானதும் நம் குற்றங்கள் அல்லவா?

0

இளவரசன் மறைந்து ஓராண்டு நெருங்கிய தருணத்தில், தருமபுரியில் மீண்டும் காவலர்கள் குவிக்கப்பட்டனர். ஏற்கெனவே ஒரு கலவரத்தைக் கண்ட நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி ஆகிய மூன்று பகுதிகளும் மீண்டும் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்து சேர்ந்தன. விடிவதற்கு முன்பு நத்தம் காலனியைச் சேர்ந்த 22 முதல் 45 வயது வரையிலான ஏழு தலித்துகள் அவசர, அவசரமாகக் கைது செய்யப்பட்டனர். நடக்கவிருந்த சட்ட ஒழுங்குமீறலை நல்லவேளையாகத் தடுத்து நிறுத்திவிட்டோம் என்று உற்சாகத்தோடு சொன்னார் உயர் காவல் துறை அதிகாரியொருவர். என்ன பிரச்சினை ஏற்படவிருந்தது? ஏன் இந்தக் கைது? ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதியில், அதுவும் துயர்மிகுந்த ஒரு நினைவுநாளில் இப்படியொரு செயலை ஏன் செய்யவேண்டும் காவல்துறை?

அவர்களிடமிருந்து வந்த விளக்கம் இது. இளவரசனின் மரணத்துக்குப் பழி தீர்க்கும் வகையில் ஒரு தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டிருந்ததை நாங்கள் மோப்பம் பிடித்துவிட்டோம். இரண்டு துப்பாக்கிகளையும் பைப் குண்டுகளையும் இடுகாட்டுக்கு அருகிலிருக்கும் ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றியிருக்கிறோம்.

சந்தேகத்துக்குரியவர்களை முன்பே கண்டறிந்து கைது செய்து, இன்னொரு கலவரம் மூளாதவாறு தடுத்திருக்கிறோம். ஆனால் இந்த வாதத்தை ஏற்க பலரும் தயாராக இல்லை. இந்தக் கைதுகள் தேவையற்றவை. இளவரசனின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை என்று சொல்லி வந்த நிலையில், மேலும் சில தலித்துகளைக் கைது செய்திருப்பது அவர்களைப் புண்படுத்துவதில்தான் சென்று முடியும். அதிகார வர்க்கத்தையும் அவர்கள் அமைப்புகளையும் நம்பக்கூடாது; அவர்கள் நமக்கெதிரானவர்கள் என்னும் நம்பிக்கையை உறுதி செய்வதுபோல் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது என்று செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர். சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்னும் குற்றச்சாட்டின்கீழ் ஆறு பேர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது ஏற்கமுடியாதது. அரசுக்கு எதிராக ஆயுதந்தாங்கிய தாக்குதலை நடத்தும் பெரும் சதித் திட்டத்தோடு இவர்கள் தயாராக இருந்தனர் என்பது நம்பும்படியாக இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்பார்த்தபடியே டாக்டர் ராமதாஸ் இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். ‘குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்’ சமூக விரோதிகளைக் கொண்டு 10 முக்கிய வன்னிய, பாமக பிரமுகர்களைக் கொல்லும் திட்டத்தோடு இருந்திருக்கிறார்கள் என்றொரு அறிக்கையை அவர் வெளியிட்டார். தலித்துகளையும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளையும் குற்றம் சாட்டுவதோடு, அரசியல் ஆதாயத்தையும் திரட்டிக்கொள்ளும் வகையில் அவர் சொற்கள் அமைந்திருந்தன. விரைந்து செயல்பட்டு வன்முறையைத் தடுத்தாட்கொண்ட தருமபுரி காவல்துறைக்கு நன்றி தெரிவித்ததோடு, வடக்கு, மேற்கு தமிழகத்தில் வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையில் மோதல்களை வளர்த்தெடுக்கும் சதி வேலையின் ஒரு பகுதிதான் இது என்றும் அறிவித்தார்.

தவிரவும், பாதிப்பை உண்டாக்கியவர்கள் என்னும் அவப்பெயரிலிருந்து விடுபட்டு, நாங்களும் பாதிக்கப்பட்டவர்களே என்று முறையிடுவதற்கு இந்தக் கைதுகள் உதவிக்கு வந்தன. வன்னியர்கள்மீதான தங்கள் செல்வாக்கை உறுதி செய்துகொள்வதும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் ஆதரவைத் திரட்டுவதும் டாக்டர் ராமதாஸின் நோக்கங்களாக இருந்தன. மே 2014 தருமபுரி மக்களவைத் தொகுதியில் டாக்டர் ராமதாஸின் மகன், அன்புமணி ராமதாஸ் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பதை இங்கே கவனத்தில் கொண்டு ஆராயும்போது மேற்படி கைதுகளுக்குப் பின்னாலுள்ள அரசியல் நோக்கங்கள் தெளிவாகப் புலப்படுகின்றன.

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *