Skip to content
Home » சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

சாதியின் பெயரால் #15 – சாதியும் சதியும்

சாதியின் பெயரால்

இளவரசனுக்குப் பிறகும் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. சாதியமைப்பு, மீடியா, மக்கள் மனநிலை, அரசியல் போக்கு எதிலும் எந்த மாற்றமும் இல்லை.

இளவரசனின் ஓராண்டு நினைவு தினம் நெருங்கும் நேரத்தில் நடைபெற்ற நாயக்கன்கோட்டை கைது விவகாரம் தலித்துகளுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இதே நாயக்கன்கோட்டையில் முன்பு கலவரம் வெடித்தபோது, நூற்றுக்கணக்கான தலித்துகளின் வீடுகள் கொளுத்தப்பட்டபோது, அதைத் தடுக்க காவல் துறை எதுவும் செய்யவில்லை. குற்றவாளிகளை விட்டுவிட்டு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட தலித்துகளை ஏதோ பயங்கரவாதிகள்போல் இப்போது கைது செய்திருக்கிறார்கள். இது மனிதத்தன்மையற்றது, அநீதியானது என்கிறார் தொல். திருமாவளவன்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ் தலைமையில் எழுவர் குழுவொன்று நத்தம் காலனியிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் இரு தினங்கள் கள ஆய்வுகள் நடத்தியது. முதல் தகவல் அறிக்கையிலும் அதன்பின் அவர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளிலும் உள்ள குறைபாடுகளை இந்தக் குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. எடுத்துக்காட்டுக்கு, ஜூன் 28 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையில் தலைமறைவாகவுள்ள காளிதாஸ், சந்திரா ஆகிய இரு மாவோயிஸ்டுகளோடு குற்றம்சாட்டப்பவர்களுக்குத் தொடர்பிருந்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. (இவர்கள் இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்). இதுபோக, துடி எனும் அரசு சாரா அமைப்பிடமிருந்துதான் கைது செய்யப்பட்டவர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டார்களாம்.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம், துடி தலித் நலன் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் அமைப்பு. தலித் இளைஞர்களுக்கு என்னென்ன கல்வி வாய்ப்புகள் உள்ளன, அரசு என்னென்ன நலத்திட்டங்களை அறிவித்துள்ளது என்பது போன்ற விவரங்களைத் திரட்டி சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்ப்பது இவர்களுடைய பிரதானப் பணிகளுள் ஒன்று. தலித்துகளைக் கைது செய்துள்ளதோடு அவர்களுக்கு உதவக்கூடிய அமைப்பையும் இனம் கண்டு அவர்கள்மீது சேறு வாரித் தெளித்திருக்கிறார்கள். எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல், துடி எப்படிப்பட்ட அமைப்பு, அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படைகள்கூடத் தெரியாமல் துடியின் பெயரை இணைத்திருக்கிறார்கள் என்கிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் துடியின் ஆதரவாளர்களுள் ஒருவருமான கிறிஸ்துதாஸ் காந்தி. சென்னை மெரினா கடற்கரையில் துடி அமைப்பினர் ஆயுதப் பயிற்சி அளித்தார்களாம். இவ்வளவு வெளிப்படையாக நடைபெற்ற ஆயுதப் பயிற்சி எவர் கண்ணிலும் படாமல் போனது உண்மையிலேயே ஆச்சரியமானதுதான், இல்லையா?

தவிரவும், ஏதோ திட்டங்களுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தார்கள். நாங்கள் அவற்றைக் கைப்பற்றினோம் என்று காவல் துறை சொல்கிறது. எங்கிருந்து அவை கைப்பற்றப்பட்டன, எத்தனை மணிக்கு என்பதிலெல்லாம் முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட குறிப்புகளே இருக்கின்றன என்கிறது ஆய்வுக்குழு. ஜூன் 27ஆம் தேதி 6 பேர் மதிய நேரத்தில் கிராமத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் இரு வேறு இடங்களைக் குறிப்பிட்டு, அங்கிருந்துதான் அவர்களைக் கைது செய்துள்ளோம் என்று காவல் துறை சாதிக்கிறது.

கலவரத்துக்குப் பிறகு நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய பகுதிகள் தொடர் கண்காணிப்பில் இருந்திருக்கின்றன. கிராமக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தின்மேல் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இளவரசன் புதைக்கப்பட்ட இடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை இங்கிருந்து கவனிக்கமுடியும். ‘இங்கே ஏதேனும் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்திருந்தால் நிச்சயம் காவல் துறையினர் புறக்கணித்திருக்க மாட்டார்கள்’ என்கிறார் அ. மார்க்ஸ்.

எந்த ஆதாரமும் இல்லாமல், முன்னுக்குப் பின் முரணான குறிப்புகளோடு அவசர அவசரமாக முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்து, அவசர அவசரமாகக் கைதுகள் நடைபெற்றிருக்கின்றன. காவல் துறையின் நடவடிக்கைக்குப் பின்னாலுள்ள சாதியக் கண்ணோட்டம் ஒளிவுமறைவின்றி இங்கே வெளிப்படுவதைக் காணலாம். ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டு, ஆயுதங்களையும் வாங்கி பதுக்கி வைத்து, அரசுக்கு எதிராக ஏதோ ஒரு பெரிய தாக்குதலைத் தலித்துகள் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று மக்கள் மனதில் பதிவு செய்துவிட்டால் தலித்துகள் குறித்து ஏற்கெனவே பொதுவெளியில் உருவாகியிருக்கும் தவறான பிம்பங்களை வலுப்படுத்திவிடமுடியும். தடை செய்யப்பட்ட மாவோயிச அமைப்போடு தலித்துகளை வேண்டுமென்றே முடிச்சுப் போட்டு அவர்களுடைய புரட்சிகர அரசியலையே இவர்களும் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டுவதற்குப் பின்னால் நிச்சயம் ஒரு விரிவான செயல்திட்டம் இருக்கவேண்டும். இளவரசனின் காதலும் அவர் மரணமும் தலித் இளைஞர்களிடையே ஏற்படுத்தியிருந்த எழுச்சியை மட்டுப்படுத்தவேண்டும் என்பது அத்திட்டத்தின் ஆதாரப் பகுதி.

இளவரசனின் முதல் நினைவு தினத்தன்றே தலித்துகள் சிலரைக் கைது செய்துவிட்டால் அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இளவரசனின் பெயரைச் சொல்லி ஒன்றுகூடுவதைத் தடுக்கமுடியும். தலித் இளைஞர்களின் மனதில் அச்சத்தை விதைப்பதே இக்கைது நடவடிக்கையின் நோக்கம் என்கிறார் சிபிஐ (மாலெ) அமைப்பின் மாநிலத் தலைவர், எஸ். பாலசுந்தரம். பாமகவின் பார்வையும் இதுவேதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தலித்துகளுக்கு எதிராகவும் பாமகவுக்கு ஆதரவாகவும் காவல் துறை செயல்படுகிறது என்னும் உணர்வு மக்களுக்கு வந்துவிட்டால் அது பிரச்சினையை மேலும் பெரிதாக்குவதில்தான் சென்று முடியும் என்கிறார் பாலசுந்தரம். காவல் துறை தொடங்கி அரசு வரை பொதுமக்களுக்காக. அவர்கள் பெயரால் இயங்கும் எந்தவோர் அமைப்பும் சாதி வேறுபாடு இல்லாமல் இயங்கவேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. தருமபுரியில் அது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது என்பதையே இக்கைது நமக்கு நிரூபிக்கிறது.

அ. மார்க்ஸின் வெள்ளை அறிக்கை இன்னொரு பாரபட்சத்தையும் சுட்டிக்காட்டுகிறது. எல்லாச் சாதிகளுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய நினைவு தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மறைவு தினம் அனைவராலும் நினைவுகூரப்படுகிறது. ஏன், அரசே பல சாதித்தலைவர்களின் விழாக்களை விமரிசையாகக் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றன. தலித் மக்கள் இளவரசனின் மறைவை முக்கியமானதொரு தினமாக நினைவுகூரக்கூடாதா? அதற்கான உரிமை அவர்களுக்குக் கிடையாதா? இளவரசனின் நினைவு தினம் மட்டும் ஏன் இவர்களுக்கு இவ்வளவு கோபத்தை ஏற்படுத்தவேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் என்னாகுமோ என்று ஏன் அவர்கள் அஞ்சவேண்டும்?

தலித்துகள் என்று வரும்போது பாமக தலைவர்களும் வன்னியர் சங்கத்தினரும் மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகமும் ஒன்றுபோலவே சிந்திக்கிறது, செயல்படுகிறது. தலித்துகள் அடித்தட்டில், அவர்களுக்குரிய இடத்தில் அடங்கிக்கிடக்கும்வரை ஒருவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்று அவர்கள் மேலே எழும்பி வர, வர சமூகம் கொதிநிலையைத் தொட்டுவிடுகிறது. நடக்கக்கூடாத பெருங்குற்றம் நடந்துவிட்டதுபோல் கொந்தளிக்கத் தொடங்குகிறது. எல்லாச் சாதிகளும் தங்களுக்கான அரசியலை முன்னெடுக்கலாம். தலித்துகள் அதனைச் செய்யும்போது அது வேறாக மாறிவிடுகிறது. காதல் மனிதப்பொதுவானது. ஆனால் தலித்துகளின் காதல் வேறுபட்டது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தப் பாரபட்சமான அணுகுமுறையைத் தலித்துகள் காணவேண்டியிருக்கிறது. கடந்து வரவும் வேண்டியிருக்கிறது.

எதிர்பார்த்தபடியே இந்தக் கைதுகள் நத்தம் காலனியில் அச்சத்தை விதைத்துள்ளது. குற்றவாளிகள்போல் நாங்கள் பார்க்கப்படுகிறோம். ஓயாத கண்காணிப்பில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள். ‘இப்படி எந்நேரமும் கண்காணிக்கப்படும்போது எப்படி எங்களால் இயல்பாக வாழமுடியும்?’ என்கிறார் 37 வயது செல்வி. ‘1980களிலும் 1990களிலும் காவல்துறை இப்படித்தான் ஓயாமல் எங்களை ஒடுக்கிக்கொண்டிருந்தனர். எங்கள் ஒவ்வொருவரையும் மாவோயிஸ்டுகளாகவே அவர்கள் பாத்தனர். எதுவென்று நடந்தாலும் எங்கள்மீதுதான் சந்தேகம் திரும்பும். இப்போது மீண்டும் அந்தக் காலகட்டத்துக்குத் திரும்பிச் சென்றுவிட்டதுபோல் உணர்கிறோம். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கலக்கமாக இருக்கிறது.’

நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். என்ன நடக்கவேண்டும் என்று அரசும் காவல்துறையும் நினைத்ததோ அதுவேதான் நடந்திருக்கிறது. இளவரசனின் நினைவிடம் இன்று பொலிவிழந்து காணப்படுகிறது. உறவினர்கள், அறிந்தவர்கள் போக இன்று இளவரசனை நினைவுகூர்வதற்கு அதிகம் பேர் இல்லை. தலித் சமூக வரலாற்றில் மறக்கப்பட்ட மற்றொரு நபராக அவர் மாறி நீண்டகாலம் ஆகிவிட்டது. திவ்யாவின் நினைவுகளிலாவது அவர் இருப்பாரா?

(தொடரும்)

பகிர:
இளங்கோவன் ராஜசேகரன்

இளங்கோவன் ராஜசேகரன்

இதழியலாளர், கட்டுரையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஃபிரண்ட்லைன் ஆகிய இதழ்களில் 40 ஆண்டுகாலம் பணியாற்றியவர். இவருடைய கள ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக அரசியல், சமூகத் தளங்களில் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. தலித் மக்கள், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் உரிமை மீறல்களைத் தனிக்கவனம் கொடுத்து ஆராய்ந்து வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *