உடலுக்கு அருகில் நான்கு பக்கங்கள் கொண்ட இளவரசனின் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கிராமத்தவர் ஒருவர்மூலம் அக்கடிதம் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இளவரசன் எழுதியதுதானா என்பதைக் கண்டறிவதற்காக சென்னையிலுள்ள தமிழ்நாடு தடயவியல் துறையிடம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இளவரசனின் அறியப்பட்ட கையெழுத்தோடு ஒப்பிட்டுப் பார்த்ததன் அடிப்படையில் இளவரசன்தான் தற்கொலை கடிதத்தை எழுதினார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்கிறது சிங்காரவேலர் ஆணையத்தின் அறிக்கை.
தமிழில் எழுதப்பட்ட கடிதத்திலிருந்து சில பகுதிகள் ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. முழுமையான கடிதம் இதுநாள்வரை வெளியிடப்படவில்லை. என் மரணத்துக்கு யாரும் காரணமில்லை என்னும் வரியும் தற்கொலைக்கான காரணத்தை விளக்கும் வரிகளும் தெளிவாக இடம்பெற்றுள்ளன. ஆணையத்தின் முடிவை உறுதி செய்யும் வரிகள் கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன என்று கருதுவதற்கும் இடமுண்டு. திவ்யாமீதான கள்ளம் கபடமற்ற காதலை வெளிப்படுத்தியிருப்பதோடு, தன்னைக் காண அவர் அனுமதிக்கவேண்டும் என்றும் இளவரசன் கேட்டுக்கொண்டுள்ளார். ‘அவளாவது வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும்’ எனும் வரி, வாசிக்கும் எவரையும் உலுக்கியெடுக்கக்கூடியது.
மரணத்துக்கு முந்தைய நிகழ்வுகளையும் ஆணையத்தின் அறிக்கை விவரித்துச் செல்கிறது. 10 அக்டோபர் 2012 அன்று தருமபுரி நகரிலுள்ள கோட்டைப் பெருமாள் கோவிலில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர். இளவரசனின் பால்யகால நண்பர்களுள் ஒருவரான மனோஜ் குமார் என்பவர் சாட்சி கையெழுத்து போட்டிருக்கிறார். திவ்யாவின் பெற்றோரால் இத்திருமணத்தை ஏற்கமுடியவில்லை. ‘திவ்யா தன் தந்தையோடு செல்ல மறுத்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார்’ என்கிறது அறிக்கை. கலவரம், வழக்கு, திவ்யாவின் பிரிவு அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
இளவரசனின் தற்கொலை முயற்சி அறிக்கையில் கவனம் பெற்றுள்ளது. மன உளைச்சலோடு இருந்த இளவரசன் 7 ஜூலை 2013 அன்று தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளது குறித்து ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிகழ்வுக்குப் பிறகும் இளவரசன் மன உளைச்சலில்தான் இருந்தார் என்று அவர் நண்பர்களான பாரதி, கார்த்திக், மனோஜ் குமார் மூவரும் ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறார்கள். இளவரசனின் கைக்கடிகாரம் 1.20 மணிக்கு நின்றுபோயிருக்கிறது. மரணத்துக்குக் காரணமான ரயில் வண்டியின் நேரத்தோடு ஒப்பிடும்போது இது சரியாகவே இருக்கிறது என்கிறது ஆணையம்.
‘திவ்யாவின் பிரிவைத் தாளமுடியாத இளவரசன் கடும் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருக்கிறார் என்றே எனது ஆய்வுகளும் விசாரணை முடிவுகளும் தெரிவிக்கின்றன’ என்கிறார் நீதிபதி சிங்காரவேலு. இளவரசனின் மரணத்தை விசாரித்த அமைப்புகளுக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கும் நீதிபதி, அப்போதைய எஸ்.பியான அஸ்ரா கர்கைக் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார். மனிதத்தன்மையோடு, நுணுக்கமாகவும் திறமையாகவும் இவ்வழக்கை அவர் விசாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பு காரணமாகவே வழக்கின் முக்கிய சாட்சியமான இளவரசனின் தற்கொலைக் கடிதம் கிடைத்திருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார் நீதிபதி. அஸ்ரா கர்க் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பணியாற்றியவர். கோவில்களில் அனுமதிக்கப்படாமலிருந்த தலித்துகளுக்காகப் போராடி அவர்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தவர். சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டவர். அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தவர் என்றும் நீதிபதி புகழ்ந்திருக்கிறார்.
அறிக்கையின் ஒரு முழுப் பக்கத்தை அஸ்ரா கர்குக்கும் அவருடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஒதுக்கியிருக்கிறார் நீதிபதி சிங்காரவேலு. தக்க சமயத்தில் அஸ்ரா கர்க் தலையீடு செய்யாமல் போயிருந்தால் தருமபுரியில் மூன்று கிராமங்களிலும் வெடித்த வன்முறை மிக மோசமான நிலையை அடைந்திருக்கும். பல உயிர்கள் பலியாகியிருக்கும். அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வால்டர் தேவாரம் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக அவர் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை நினைவுபடுத்துகிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆணையத்தைப் பொருத்தவரை வழக்கு முடிந்துவிட்டது. ஆனால் சர்ச்சைகள் முடிவுக்கு வரவில்லை. இளவரசனின் மரணம் தற்கொலை அல்ல என்கிறார் சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த ரமணி. இவர் இளவரசனின் நெருங்கிய உறவினரும்கூட. இறப்பதற்கு முன்பு எழுதிய தற்கொலைக் கடிதத்தைத்தான் அனைவரும் ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அது பிரச்சினைக்குரியது. கடிதத்தின் முதல் பக்கத்தில் இருப்பது மட்டுமே இளவரசனின் கையெழுத்து. அதன்பிறகு வருபவை எல்லாம் எழுதிச் சேர்க்கப்பட்டவை. இளவரசன் நிச்சயமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். எவ்வளவு பேர், எங்கிருந்து வந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. தற்கொலை என்று வழக்கை மூடுவது பலருக்கு வசதியானதாக இருக்கும். ஆனால் அது உண்மையல்ல என்கிறார் ரமணி.
0
நீதிபதி சிங்காரவேலு ஆணையத்தின் அறிக்கை சுமார் 1,300 பக்கங்களை உள்ளடக்கியது என்பதை அரசு அதிகாரியிடமிருந்து அறிந்துகொள்ளமுடிந்தது. ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளின் முடிவுகளும் அந்த முடிவுகளின் அடிப்படையில் வந்து சேர்ந்த தீர்மானமும்தான் எனக்குக் கிடைத்த பகுதி. டெல்லியிலுள்ள உயர்மட்ட சிபிஐ அதிகாரியொருவரிடமிருந்து இது எனக்கு வந்து சேர்ந்தது. அதன் அடிப்படையில் ஃபிரண்ட்லைனில் நான் எழுதிய செய்திக் கட்டுரை (A Closed Chapter? 21 ஜூன் 2019) பரவலான கவனத்தை ஈர்த்தது. முதல் முறையாக ஆணையத்தின் அறிக்கையிலிருந்து நேரடியாக நான் மேற்கோள்களை அளித்திருந்தேன்.
இன்னமும் வெளிச்சத்துக்கு வராத ஓர் அறிக்கை உனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது? அதை எப்படி நீ பதிப்பிக்கலாம்? யாரிடமிருந்து இதைப் பெற்றாய்? என்று தொடங்கிப் பல கேள்விகள் என்னை நோக்கிப் பாய்ந்து வந்தன. அரசு அலுவலகர்கள் தொடங்கி ஊடகத்துறையினர் வரை பலர் நான் வெளியில் கொண்டுவந்த அறிக்கையின் பகுதிகளைக் கண்டு வியப்படைந்தனர். அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலருக்கு என்மீது வருத்தம் ஏற்பட்டிருக்கும். அதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. இளவரசனின் மரணம் ஓர் ஆணவக் கொலை என்று வாதிட்டு வந்த அவர்களால் ஆணையத்தின் அறிக்கையை மட்டுமல்ல, அதை வெளிப்படுத்திய என் நடவடிக்கையையும் ஏற்கமுடியாதுதான். அறிக்கை கைக்குக் கிடைத்திருந்தாலும் அதை நான் வெளிப்படுத்தியிருக்கக்கூடாது என்றே அவர்கள் நினைத்திருப்பார்கள். அதுவே சரியானது என்றும் அவர்கள் கருதியிருக்கலாம்.
இதில் எனக்கு எந்தக் குழப்பங்களும் இல்லை. அடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். என் பணி மக்களிடம் செய்திகளைப் பகிர்ந்துகொள்வது. எது கண்களுக்குப் புலப்படுகிறதோ அதை மட்டுமல்ல, எது நம் பார்வையிலிருந்து மறைந்திருக்கிறதோ அதையும் நான் வெளியில் கொண்டுவரவேண்டியிருக்கிறது. எது நம்மிடமிருந்து வேண்டுமென்றே மறைக்கப்படுகிறதோ அதை நான் நாடிச் செல்லவேண்டியிருக்கிறது. இருளில் தொலைந்து கிடப்பவை வெளிச்சத்துக்கு வந்தே தீரும்; அதுவரை காத்திருப்பேன் என்று என்னால் சொல்லமுடியாது. இருளும் என் எல்லைக்கு உட்பட்டதுதான். அங்கும் நான் சென்றாகவேண்டும். அங்கிருந்தும் செய்திகள் சேகரித்தாகவேண்டும். சேகரித்ததை எழுதியாகவேண்டும். அது எனது அடிப்படை அறம். வரலாற்றின் முதல் வரைவைப் பத்திரிகையாளர்களே எழுதுகிறார்கள் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையே இயங்குவதற்கான உத்வேகத்தை எனக்கு அளிக்கிறது.
விசாரணை ஆணையம் அமைப்பதன் நோக்கம் குறிப்பிட்ட வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து உண்மையை உள்ளவாறே வெளிப்படுத்துவதுதான். மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் ஆணையத்துக்கான ஊதியம் சென்று சேர்கிறது. ஆண்டுக்கணக்கில் நேரம் செலவிட்டு, எண்ணற்றோரை வரவழைத்து சாட்சியங்கள் பெற்று, விசாரணைகள் நடத்தி, பலவிதமான ஆதாரங்களை மேற்பார்வையிட்டு, அனைத்துத் தரப்பு நியாயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதியில் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எந்த அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது, எப்படி விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் எழுத்துப்பூர்வ அறிக்கையாக அரசுக்கு அளிக்கவேண்டும். ஆணையத்தின் அறிக்கையை அரசு வெளியிட்டு மக்கள் பார்வைக்கு எடுத்துச்செல்லவேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் வழக்கு குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கமுடியும். இதுதான் நியதி. இப்படி நடக்கவேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பும்.
ஆனால் அரசு அமைக்கும் பெரும்பாலான ஆணையங்கள் தங்கள் விசாரணையை நடத்தி முடித்து அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகும் அரசு அவற்றை வெளியிடாமல் பூட்டி வைப்பதைப் பார்க்கிறோம். மிக அரிதாகவே அறிக்கைகள் பொதுவெளிக்கு வருகின்றன. சிங்காரவேலு ஆணையத்தின் அறிக்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசு ஏன் இதனை வெளியிடத் தயங்கவேண்டும் என்பதற்கான காரணமும் விளங்கவில்லை. தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அறிக்கையை வெளியிடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். வேறு பல தரப்பினரிடமிருந்தும் இதே கோரிக்கை எழுந்துள்ளது. இருந்தும் அதிமுகவும் சரி, அவர்களுக்குப் பிறகு பொறுப்பேற்றுக்கொண்ட திமுகவும் சரி; இதுநாள் வரை ஆணையத்தின் அறிக்கையை வெளியிடவில்லை.
அரசு அமைக்கும் ஆணையங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம்மூலம் எவிடென்ஸ் அமைப்பு திரட்டிய புள்ளிவிவரம் இது. 1991 தொடங்கி 45 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஓய்வு பெற்ற நீதிபதிகள் அல்லது அதிகாரிகள் அவற்றுக்குத் தலைமை வகித்திருக்கின்றனர். இவற்றுள் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான முடிவுகளையே வெளியிட்டிருக்கின்றன. சிங்காரவேலு ஆணையம் 2.17 கோடி ரூபாயைச் செலவழித்திருக்கிறது. இதில் 1.98 கோடி ரூபாய் சம்பளத்துக்கு மட்டும் சென்றிருக்கிறது.
0
இளவரசனின் நினைவு தினம் நெருங்கும் ஒவ்வொரு முறையும் காவல் படை அவர் கிராமத்தை ஆக்கிரமித்துக்கொண்டுவிடுகிறது. அஞ்சலி செலுத்துவதற்கு வெகு சிலரே அனுமதிக்கப்படுகிறார்கள். உறவினர்கள்கூடக் குறிப்பிட்ட நேரத்துக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கூட்டம் கூடாதவாறு, மக்கள் திரளாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள். அழுவதற்குக்கூட எங்களுக்கு அனுமதியில்லை. வதைமுகாமில் இருப்பதுபோல் உணர்கிறோம் என்கிறார் ரமணி. சாதிய ஏச்சு பேச்சுக்கு அஞ்சி திவ்யாவும் அவர் அம்மாவும் வெளியேறி, தருமபுரிக்குக் குடிபெயர்ந்து விட்டனர். திவ்யா ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருவதாகச் சொல்லப்படுகிறது.
அசாத்தியமான வெறுமை எங்கும் நிறைந்திருப்பதை உணரமுடிகிறது. வெளிச்சம் இருளுக்குள் மூழ்கித் தன்னைத் தொலைத்துக்கொண்டிருக்கிறது.
(தொடரும்)