தண்டவாளத்துக்கு அருகில் உடல் கிடைத்ததும், கோகுல் ராஜ் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருக்கலாம் என்றே முதலில் சந்தேகப்பட்டது திருச்செங்கோடு காவல் துறை. காணாமல் போனதாக முன்னர் பதிந்திருந்த வழக்கை இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 (3) (IV) பிரிவின்கீழ் சந்தேகத்துக்குரிய முறையில் நடைபெற்ற தற்கொலையாக மாற்றிப் பதிவு செய்தனர். உடல் ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலைக் கடிதமொன்றைக் கண்டெடுத்தாகவும் சொல்லப்பட்டது.
வழக்கு செல்லும் திசையைக் கண்டதும் கோகுலின் குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கோகுலைத் தட்டிப்பறித்ததுபோல் நீதியையும் தட்டிப் பறித்துவிடுவார்களோ என்று அவர்கள் இடிந்துபோயினர். இந்த நேரத்தில் நண்பர்களின் ஆதரவுக்கரம் மட்டும் நீண்டு வராமலிருந்திருந்தால் அவர்கள் முழுக்கக் குலைந்துபோயிருக்கலாம். நண்பர்களின் உதவியோடு அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலாவதாக, பிஎஸ்பி, விசிக உள்ளிட்ட கட்சிகள் கோகுல்ராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துமனையை முற்றுகையிட்டுப் போராடத் தொடங்கின. நடந்திருப்பது தற்கொலையல்ல. கோகுல்ராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். காவல் துறை உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று இக்கட்சியினர் முழக்கமிட்டனர். அடுத்ததாக, குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் கோகுலின் உடலைச் சேலத்திலுள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு இடமாற்றியது. தொடர்ந்து, வழக்கறிஞர் பார்த்திபன், கோகுலின் உடல் கூராய்வு நடுநிலையோடு, சுதந்திரமாக நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி தமிழ்ச்செல்வன் இந்த மனுவை விசாரித்தார். மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. சமர்க்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பார்க்கும்போது கொலை நடந்திருப்பதற்கான சாத்தியம் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அரசு மருத்துவர்கள் குழுவொன்று அமைத்து உடலைக் கூராய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். அதன்படி, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கே. மோகன், டாக்டர் பி. சம்பத்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவொன்றை அமைத்தார். இவர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் துறையில் தலைமைப் பொறுப்பு வகிப்பவர். சேலம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கே. கோகுலராமன், ஆர். சங்கீதா ஆகிய இரு மருத்துவர்களும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
27 ஜூன் 2015 அன்று உடல் சீராய்வு நடந்து முடிந்தது. மறுநாள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அதன்பின் தங்கள் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர்கள் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையை திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு நீதிமன்றம் அனுப்பி வைத்தது. இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவ அறிக்கை தெளிவாக இருந்தது. கழுத்துப் பகுதியிலுள்ள ஆழமான வெட்டுக்காயங்கள்தான் மரணத்துக்குக் காரணம். மழுங்கிய பொருளொன்றினால் மண்டை ஓடு கடும் பலத்தோடு தாக்கப்பட்டிருக்கிறது. கூராய்வு நடைபெறுவதற்கு மூன்று நான்கு நாள்களுக்கு முன்னால் மரணம் சம்பவித்திருக்கலாம். கழுத்திலுள்ள காயங்கள் மரணத்துக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவாக அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் காயங்களைப் பார்க்கும்போது ரயில் விபத்து போல் தோன்றவில்லை. கூரான ஆயுதம் கொண்டு கழுத்துப் பகுதி தாக்கப்பட்டிருக்கிறது.
கோகுல் தற்கொலை செய்துகொண்டிருக்க முடியாது. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதை மருத்துவ அறிக்கை சந்தேகத்துக்கு இடமின்றி சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து திருச்செங்கோடு காவல்துறை வழக்கை மீண்டும் திருத்தியமைத்தது. இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302ஆம் பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோகுலைக் கடத்திச் சென்ற குழுவின் அடையாளங்கள் தெளிவாக காமிராவில் பதிவாகியிருந்த நிலையில், பத்து பேர் கொண்ட சந்தேகப் பட்டியலொன்று உருவானது. ஒன்பது பேர் உடடினயாகக் கைது செய்யப்பட்டனர். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் தப்பிச் சென்றிருந்தார். முதன்மைக் குற்றவாளியாக அவர் பெயரே இடம்பெற்றிருந்தது.
0
யுவராஜுக்கும் கோகுலுக்கும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விரோதமா என்றால் இல்லை. ஒருவேளை கோகுலின் குடும்பத்தினர் யாரையாவது பழி தீர்ப்பதற்காக இச்செயலைச் செய்திருப்பாரா என்று யோசித்தால் அதுவும் இல்லை. அப்படியானால் சுவாதியை அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தால் அப்படியும் இல்லை. இருவரையும் அவருக்குத் தெரியாது. யுவராஜைப் பொருத்தவரை இருவருமே அந்நியர்கள். இருந்தும் ஏன் கோகுல் கடத்தப்பட்டார்? ஏன் கொடூரமாகத் தாக்கப்பட்டார்? ஏன் அவருடல் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் வீசப்பட்டது? தற்கொலைபோல் அந்த மரணத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஏன் திட்டமிடவேண்டும் அவர்?
ஒரே சொல்லில் சொல்லவேண்டுமானால் சாதி. சுவாதியைத் தனது சாதியைச் சேர்ந்தவராக அடையாளம் கண்டிருக்கிறார் யுவராஜ். பொதுவெளியில் ஒரு தலித்தோடு அவர் ஒன்றாக இருப்பதை, உரையாடுவதை அவரால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. அவரைப் பொருத்தவரை இது சுவாதியின் தனிப்பட்ட தேர்வல்ல. சுவாதி ஒரு சுதந்திரமான, தனி உயிரல்ல. ஒரு கவுண்டர் சாதிப் பெண் என்பதுதான் அவர் அடையாளம். அந்த அடையாளமும்கூட அவருடைய தேர்வல்ல. பிறப்போடு ஒட்டி வருவது. எனவே பிரிக்கமுடியாதது.
அப்படி அகற்றமுடியாத அடையாளம் கோகுலுக்கும் உண்டு. சமூக அடுக்கில் கீழ்நிலையில் இருக்கவேண்டும் என்று கோகுலுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சுவாதியோடு மலையேறிச் சென்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றதன்மூலம் கோகுல் தனது அடையாளத்தை மட்டுமல்ல சுவாதியின் அடையாளத்தையும் சிதைத்துவிட்டார். இதை சுவாதியோ அவர் குடும்பத்தினரோ உணராமல் போகலாம். கோகுலோ அவர் குடும்பத்தினரோ இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் யுவராஜுக்கு அது சாத்தியமில்லை. ஏனென்றால், தன்னுடைய சாதியைக் காப்பதற்காக உருவான கலாசார காவலர் அவர்.
கலாசாரக் காவலர்கள் எவ்வாறு அச்சமின்றி இயங்குகிறார்கள், தங்களுக்கான பலத்தை எங்கிருந்து அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பெருமாள் முருகனிடம் நாம் திரும்பிச் சென்றாகவேண்டும். இதே போன்ற கலாசாரக் காவலர்களிடமிருந்துதான் அவருக்கான எதிர்ப்புகள் தோன்றி, வலுப்பெற்றன. மாதொருபாகனில் இடம்பெறும் அதே அர்த்தநாரீஸ்வரர் கோயிலிலிருந்துதான் கோகுல் கடத்தப்பட்டிருக்கிறார்.
கலாசாரக் காவலர்கள் சுயமாகத் தோன்றுபவர்கள், சுயமாகத் தங்களை நியமித்துக்கொள்பவர்கள். பாதுகாப்பு வளையம்போல் இயங்கி, தங்கள் சாதி மக்களை அயலவர்களிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதுதான் இவர்கள் தங்களுக்குத் தாங்களே வகுத்துக்கொண்ட லட்சியம். அந்த லட்சியத்தைக் காக்க எந்த எல்லைக்கும் செல்ல இவர்கள் தயங்குவதில்லை. சாதியமைப்பு சட்ட அமைப்பைக் காட்டிலும் வலுவானது என்னும் நம்பிக்கையே இவர்களை இவ்வாறு இயக்குகிறது. எங்கள் மரபை, மண்ணை, கலாசாரத்தை, மதத்தைக் காக்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும் அடிப்படையில் அவர்கள் உயர்த்திப் பிடிப்பது தங்கள் சாதித் தூய்மையைத்தான்.
பிள்ளைப்பேறு வேண்டி கோயில் திருவிழாவில் உறவு கொள்ளும் சடங்கொன்றையும் அவ்வாறு உண்டாகும் குழந்தையை சாமிக் குழந்தை என்று சொல்லி ஏற்கும் வழக்கத்தையும் மாதொருபாகனில் பெருமாள் முருகன் குறிப்பிட்டிருப்பார். அது ஒரு புனைவு. அந்நாவல் வெளிவந்தபோது அது பெரிய அளவில் வாசிக்கப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்து அதை வெளியிலிருப்போர் சிலர் வாசித்து, கொதித்துப் போய் கொங்கு மண்டலத்திலிருப்போருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். கலாசாரக் காவலர்கள் உடனடியாகக் களத்தில் குதித்தனர். நம் திருச்செங்கோட்டை, நம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை, நம் சாதியை, நம் பெண்களை இந்நாவல் மோசமான முறையில் சித்திரித்துள்ளது. இதை நாம் சும்மா விடக்கூடாது!
மளமளவென்று எதிர்ப்பு அறிக்கைகள் குவியத் தொடங்கின. பெருமாள் முருகனின் படைப்பு எங்கள் பண்பாட்டை, மதத்தை இழிவு செய்கிறது. அதை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று இந்து முன்னணியைச் சேர்ந்த ராம கோபாலன் எச்சரித்தார். புத்தகத்தை உடடினயாகத் தடை செய்யவேண்டும். அதைத் தவிர வேறு எது செய்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஈ.ஆர். ஈஸ்வரன். எங்கள் பெண்களின் ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்திவிட்டார். எங்கள் மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்றார் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கிரிவல நலச் சங்கமத்தைச் சேர்ந்த பொன். கோவிந்தராஜ். ஊர் பேர் தெரியாத உதிரி அமைப்புகள், சாதிக் குழுக்கள் தொடங்கி நன்கறியப்பட்ட இந்துத்துவ அமைப்புகள் வரை அனைவரும் இந்த விவகாரத்தில் ஒரே புள்ளியில் திரண்டு நின்றனர்.
திருச்செங்கோட்டு மக்கள் படித்தவர்கள், வர்த்தக நலன்களில் அக்கறை கொண்டவர்கள். இப்படியொரு சர்ச்சை எப்படி அவர்களுக்கு மத்தியில் வெடித்தது என்பது வியப்பாக இருக்கிறது என்கிறார் எழுத்தாளரும் பெருமாள் முருகனின் நண்பருமான க.வை. பழனிசாமி. ஒரு கற்பனைக் கதைக்கு இவ்வளவு மூர்க்கத்தனமான எதிர்ப்பு வருவது உண்மையிலேயே துயரமானது. எழுத்தாளர் என்ன எழுதவேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதை எழுத்தோடு தொடர்பில்லாத குழுக்கள் முடிவு செய்வதை நாம் அனுமதிக்கக்கூடாது என்கிறார் இவர்.
ஆனால் கலாசாரக் காவலர்கள் யார் அனுமதிக்காகவும் காத்துக்கொண்டிருக்கவில்லை. இந்துத்துவ அமைப்புகள் தங்களுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பதைக் கண்டதும் இவர்கள் மேலதிக தீவிரத்தோடு எதிர்ப்புகளை முன்னெடுத்தனர். சாதியவாதமும் மதவாதமும் ஒன்றிணைந்து நிற்பதைக் கண்டதும் பிரதான திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டும் அமைதியாகிவிட்டன. சிபிஎம், விசிக, சிபிஐ, சிபிஐ (எம்எல்) போன்ற கட்சிகள்தான் படைப்பாளரின் உரிமையைக் காக்கவேண்டும் என்று குரல் கொடுத்தன. சமூகத்தில் சாதி வெறுப்பு எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதையே பெருமாள் முருகன் விவகாரம் வெளிப்படுத்துகிறது என்று வேதனையோடு குறிப்பிட்டார் தொல். திருமாவளவன். திமுகவின் அமைதி மேலும் பரவலாகக் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, பெருமாள் முருகனுக்கான எதிர்ப்பு என்பது ‘அருவருப்பூட்டும் செயல்’ என்று அன்றைய பொருளாளர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
அறிவுச்சமூகத்திடமிருந்து உலகளவில் ஆதரவு வந்தாலும் அரசியல் களம் அமைதி காத்ததற்கான காரணம் வெளிப்படையாது என்றார் ஆய்வாளர் வீ. அரசு. இது சாதிச் சாயம் கலந்த விவகாரம். சாதியை, பண்பாட்டை அவமதித்ததாகக் குற்றம்சாட்டப்படும் எழுத்தாளரை ஆதரிப்பது அவப்பெயரை உண்டாக்கும் என்றே நினைத்திருப்பார்கள். ஓட்டு வங்கியை மனத்தில் வைத்துதான் கட்சிகள் செயல்படுகின்றன என்பதை மறந்துவிடவேண்டாம்!
9 ஜனவரி 2015 அன்று திருச்செங்கோட்டில் வெற்றிகரமாக நடைபெற்ற முழுக் கடையடைப்பு அச்சமூட்டுவதாக இருந்தது. சட்ட ஒழுங்கு குலையும் அளவுக்கு நிலைமை கைமீறிச் சென்றுவிடுமோ என்று அஞ்சிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் இடையில் ‘சமரசம்’ ஏற்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு பெருமாள் முருகனிடமிருந்து நிபந்தனையற்ற மன்னிப்பைச் சட்ட விரோதமாக எழுதிப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வுகள் கலாசாரக் காவலர்களை மேலும் ஊக்கப்படுத்தியதில் வியப்பேதுமில்லை. நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது எனும் நம்பிக்கை பலமடைந்தது. நாம் சட்டத்துக்கும் மேலானவர்கள் என்னும் மயக்கம் அவர்களை ஆட்கொண்டது.
(தொடரும்)