ஆணவக் கொலைகள் குறித்து வெளிவந்துள்ள தீர்ப்புகளில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சம்பத்குமாரின் வழங்கிய தீர்ப்புக்குத் தனியிடம் உண்டு. சிசிடிவி, தொலைக்காட்சி பேட்டி என்று தொழில்நுட்ப ஆதாரங்களை முதன்மையாகக் கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட தீர்ப்பு இது. இரண்டாவதாக, ‘ஒரு வழக்கில் புலன் விசாரணை தவறாகவே இருந்தாலும் சரியான ஆவணங்கள் ஆங்காங்கே இருக்கும்போது அவற்றைத் தொகுத்து நீதிமன்றத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்’ என்கிறார் கோகுல்ராஜ் தரப்பில் வாதாடிய பா. மோகன்.
காதலுக்கு ஆதரவாக, குறிப்பாகக் கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவான வாசகங்கள் இடம்பெற்ற தீர்ப்பு என்பதும் கவனிக்கத்தக்கது. `கலப்பு சாதி திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் துன்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகிறார்கள் என்றால் அந்தக் குற்றங்களைச் செய்யும் நபர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று Latasingh Vs State of U.P. and Another வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளார்.
இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தோடு சேர்த்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததால் நன்னடத்தை காரணமாகக் கைதிகளுக்கு வழங்கப்படும் விடுதலையும்கூட இவர்களுக்குச் சாத்தியப்படாது என்பது தீர்ப்பின் மற்றொரு சிறப்பம்சம். மேலவளவு ஊராட்சித் தேர்தலில் பட்டியல் சமூகத்தினர் போட்டியிடக்கூடாது எனும் மிரட்டலை மீறிப் போட்டியிட்டு தலைவரான முருகேசன் உள்ளிட்ட 7 பேர் 1997இல் கொல்லப்பட்ட நிகழ்வை இங்கே நினைவுகூரலாம். தமிழகத்தை அதிரச் செய்த இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுவிக்கப்பட்டது கடும் விவாதங்களைக் கிளப்பியது. கோகுல்ராஜ் வழக்கில் அப்படியொன்று நடக்க வாய்ப்பில்லாமல் போனதற்குக் காரணம் தீர்ப்பு.
கோகுல்ராஜ் கொல்லப்பட்டது உறுதி என்றால் அவர் உடலுக்கு அருகில் ஏன் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட வேண்டும்? என் காதல் நிறைவேறாததால் என்னை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டேன் என்று கோகுல்ராஜ் தன் கைப்பட அதில் ஏன் எழுதி வைக்க வேண்டும்? கோகுல்ராஜின் பெயரில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த காணொளிப் பதிவின் பின்னணி என்ன? இரண்டுமே போலிகள். தற்கொலைக் கடிதம், வீடியோ இரண்டையும் சங்கர், குமார் இருவரும் உருவாக்கியிருக்கிறார்கள், சமூக வலைத்தளங்களிலும் பரப்பியிருக்கிறார்கள். கோகுல்ராஜின் கொலையை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திசைதிருப்பல் இது. விசாரணையின்போது சங்கர், குமார் ஆகிய இருவரும் இதை ஒப்புக்கொண்டனர். யுவராஜும் தீரன் பேரவையின் நாமக்கல் மாவட்டத் தலைவர் அருணும் இணைந்து கோகுல்ராஜைக் கடத்திச் சென்றதையும் அவர் கழுத்தை நெறித்துக்கொன்றதையும்கூட இவர்கள் ஒப்புக்கொண்டனர். இறந்த பிறகு கோகுல்ராஜின் தலையைத் தனியே துண்டித்து பள்ளிப்பாளையத்திலுள்ள ரயில் பாதையின் அருகில் உடல் தனியாக, தலை தனியாகக் கிடத்தியுள்ளனர். ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தோற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் திட்டம். ‘தற்கொலைக் கடிதம்’ சட்டைப் பையில் வைக்கப்பட்டது.
யுவராஜ் தொடங்கி குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கும் கோகுல்ராஜைத் தெரியாது. எந்த முன்விரோதமும் கிடையாது. யுவராஜ் தவிர்த்து வேறு யாரும் அதற்குமுன்பு எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபட்டதில்லை. இருந்தும் சாதி அவர்கள் கண்களை மறைத்து, மதியிழக்கச் செய்திருக்கிறது. அவர்கள் கரங்களில் நீங்காத ரத்தக்கறையை ஏற்படுத்தியிருக்கிறது.
0
மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. சித்ரா தரப்பிலும் ஒரு மனு உயர் நீதிமன்றக் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது. மதுரை நீதிமன்றத்தால் 5 பேர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்பதுதான் கோரிக்கை. சித்ரா, சிபிசிஐடி இருவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு இது.
எம்.எஸ். ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 2 ஜூன் 2023 அன்று வந்தடைந்த முடிவு இதுதான். யுவராஜ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் மறுக்கமுடியாதவை, நிரூபிக்கப்பட்டவை. மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை. யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளில் எந்த மாற்றமும் இல்லை. இருவருக்கு (பிரபு, கிரிதர்) விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்படும். 5 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதும் சரியானதுதான்.
மதுரை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததுபோலவே எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் கொலை நடைபெற்றிருக்கிறது. கொலைக்கான காரணம் என்று சாதியைத்தான் குறிப்பிடமுடியும். அனைத்து ஆதாரங்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. சாட்சியங்கள் சரியாகவே விசாரிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன. முதல் குற்றவாளியான யுவராஜ் ஆயுள் முழுவதும் சிறையில் இருந்தாகவேண்டும். மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
யுவராஜ் ஊடகத்தைத் தனது பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி விமரிசித்தனர். இதுபோன்ற வழக்குகளைப் பரபரப்புக்கு உள்ளாக்காமல் நிதானமாகக் கையாளவேண்டும் என்றும் ஊடகத்துறையைக் கேட்டுக்கொண்டனர்.
0
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் காணப்படும் சில முக்கியமான அம்சங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
கோகுல்ராஜின் மரணம் தற்கொலையல்ல என்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருக்கின்றன. கழுத்தில் வெட்டுண்ட காயம் தெளிவாகப் புலப்படுகிறது. உடலிலோ ஆடையிலோ ரயில் வண்டியின் கிரீஸ் கரை காணப்படவில்லை. நொறுக்கப்பட்ட எலும்புகளையும் காயங்களையும் பார்க்கும்போது அவை கொல்லப்படுவதற்கு முன்பு ஏற்படுத்தப்பட்டவை என்பது தெளிவாகிறது. கூரான ஆயுதத்தைக் கொண்டு உதட்டில் ஏற்படுத்தப்பட்ட வெட்டுக்காயம் அதிர வைக்கிறது. தற்கொலை செய்துகொள்பவரின் உடலில் இத்தகைய காயங்கள் உண்டாவதற்கு வாய்ப்பில்லை. கொல்லப்படுவதற்குமுன்பு கடுமையாக வதைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளை அவருடல் பதிவு செய்து வைத்திருக்கிறது.
மாவீரன் தீரன் சின்னமலை பேரவை வகுப்புவாத உணர்வு கொண்ட ஓர் அமைப்பு என்பதற்கான சான்றுகளும் தெளிவாகவே உள்ளன. கவுண்டர் சாதியை ஒன்று திரட்டவும் கவுண்டர் பெண்கள் பிற சாதிகளோடு கலக்காமல் இருப்பதைக் கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் அது என்பதற்கும் ஆதாரம் உள்ளது. சுயசாதிப் பெருமிதமும் பட்டியல் சாதிகள்மீதான வெறுப்பும்தான் கொலைக்கான காரணம்.
கொலையுண்டவர் கடைசியாக எப்போது, எங்கே மற்றவர்களால் காணப்பட்டார் என்னும் சான்று முக்கியமானது. குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இது பொருந்தும். இந்த வழக்கைப் பொருத்தவரை இருவரும் ஒரே இடத்தில் ஒன்றாக இருந்துள்ளனர். அதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. யுவராஜைச் சந்தித்துவிட்டு வேறு எங்கும் கோகுல்ராஜ் சென்றிருக்க வாய்ப்பில்லை. வேறு எதுவும் அவருக்கு நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை. நாங்கள் கோகுல்ராஜைக் கொல்லவில்லை என்பதற்கு எந்தவிதச் சான்றையும் யுவராஜ் தரப்பினரால் அளிக்கமுடியவில்லை. கொல்வதற்கான முகாந்திரம் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தமுடியவில்லை.
கவனிக்கத்தக்க இன்னொரு நிகழ்வும் நடந்தது. கோகுல்ராஜ் கொல்லப்பட்டு ஏழாண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் இருவரும் 22 ஜனவரி 2023 அன்று திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று கோகுல்ராஜ் கடைசியாக வருகை தந்த இடத்தைப் பார்வையிட்டனர். நுழைவாயில் எங்கே அமைந்திருக்கிறது, எந்தப் பக்கமாக வெளியேறவேண்டும் போன்றவற்றை உன்னிப்பாகக் கவனித்தனர். சரியாக 95 நிமிடங்களைக் கோயிலில் அவர்கள் செலவிட்டனர். எட்டு சிசிடிவி காமிராக்களில் பதிவான காட்சிகளைப் பரிசோதித்து உறுதி படுத்திக்கொண்டனர். அடுத்ததாக, பள்ளிப்பாளையம் ரயில் நிலையத்துக்குச் சென்று உடல் கிடந்த இடத்தைப் பரிசோதித்தனர். கொலையுண்டவர், கொலையாளி இருவரும் ஒன்றாக இருந்த இந்த இரு இடங்களையும் நேரில் சென்று பரிசோதிக்கவேண்டியது அவசியம் என்று இரு நீதிபதிகளும் கருதியது குறிப்பிடத்தக்கது.
மதுரை நீதிமன்றத் தீர்ப்பு போலவே உயர் நீதிமன்றத் தீர்ப்பும் சாதியின் பங்கைக் குறிப்பிடத் தவறவில்லை. ‘இந்த வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் சாதி எனும் சாத்தானின் பிடியில் சிக்குண்டிருந்தனர்’ என்று தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது தீர்ப்பு. நடந்திருப்பது ‘ஆணவப் படுகொலை’ என்பதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே தீர்ப்பு குறிப்பிடுகிறது.
சுவாதி ஒரு சிக்கலைச் சந்திக்க நேர்ந்தது. ஏற்கெனவே மதுரை நீதிமன்றம் நவம்பர் 2022இல் சுவாதிமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தது. சென்னை நீதிமன்றம் 6 ஜனவரி 2023 அன்று இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. கோகுல்ராஜும் சுவாதியும் கோயிலுக்கு வந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தபோதிலும் அதில் தோன்றுவது தானல்ல; சம்பவ தினத்தன்று (23 ஜூன் 2015) கோகுல்ராஜைச் சந்திக்கவே இல்லை; அன்று நான் வீட்டில்தான் இருந்தேன் என்று பிறழ்சாட்சியம் அளித்திருந்தார் சுவாதி. 2005இல் விசாரணை நடந்தபோது உண்மையை உள்ளதை உள்ளவாறு பகிர்ந்துகொண்ட சுவாதி 2018இல் தலைகீழாக மாறினார்.
முதலில் ஒன்றைச் சொல்லிவிட்டு பிறகு அதை மறுக்கும் வழக்கம் புதிதல்ல; பிறழ் சாட்சியம் என்பது எப்போதும் நடைபெறுவதுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிறழ் சாட்சி என்பதற்காக சுவாதியின் வாக்குமூலத்தை முழுமையாக விலக்கி வைக்கத் தேவையில்லை என்றும் வழக்குக்கு வலுவூட்டும் பகுதிகளைச் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர்.
‘சுவாதி என்னும் சாட்சி சரிவர ஒத்துழைக்கவில்லை. உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டபோது கோகுல்ராஜை அடையாளம் காட்டமுடிந்த அவரால் உடனிருந்த பெண்ணை மட்டும் அடையாளம் காட்ட முடியவில்லை’ என்று குறிப்பிடுகிறது தீர்ப்பு. ‘சுவாதியைச் சந்தித்ததுதான் கொலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இந்நிலையில் ஏன் அவர் தன் சாட்சியத்தை மாற்றிச் சொல்லவேண்டும்? முக்கிய சாட்சி என்னும் அடிப்படையில் அவருக்கு அவகாசமும் கொடுக்கப்பட்டது. இருந்தும் தவறான தகவலையே அவர் சொன்னார்.’
0
கோகுல்ராஜுக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கவேண்டும் எனும் யோசனைப் பரபரவென்று பலரைத் தொற்றிக்கொள்ள ஓமலூர் நகரிலுள்ள இடுகாட்டில் இடம் பிடித்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார்கள். 16 நவம்பர் 2015 அன்று ஓமலூர் நகர பஞ்சாயத்து அதிகாரிகள் விரைந்து வந்து பணியை நிறுத்தினார்கள். ஏற்கெனவே உருவாகி நின்றுகொண்டிருந்த தூண்களை அகற்றுமாறு உறவினர்களுக்குச் சொல்லப்பட்டது. அவ்வாறே நிகழ்ந்தது. உள்ளூர் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் செயல்பட்டதாகவும் நினைவு மண்டபத்துக்கு முறைப்படி அனுமதி பெறப்படாததால்தான் இது நிகழ்ந்தது என்றும் காரணம் சொல்லப்பட்டது. இறுதியில் கோகுல்ராஜின் உடல் புதைக்கப்பட்டது.
‘ஒரு பாவமும் அறியாத என் மகன் ஏன் இப்படிக் கொல்லப்படவேண்டும்?’ எனும் சித்ராவின் கேள்விக்கு மட்டும் இதுவரை யாராலும் பதில் சொல்ல இயலவில்லை.
(தொடரும்)