ஆணவக்கொலைகளை ஆராயும் பலரும் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான கோணம், பொருளாதாரம். குடும்ப மானம், சாதித் தூய்மை, தீட்டு போன்றவற்றுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பொருளாதார நிலைக்கும் கொடுக்கவேண்டியது அவசியம். இக்காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் கலப்பு மணம் புரிந்துகொள்பவர்கள் ஆணவக்கொலைக்கு ஆளாவதற்கு அடிப்படையான, முதன்மையான காரணமாக சாதிதான். இந்த நுட்பமான, சிக்கலான சமூக நிகழ்வில் அதிக பாதிப்புகளைச் சந்திப்பவர்கள் தலித்துகள்.
ஓர் எடுத்துக்காட்டு. சமீபத்தில், திருநெல்வேலியில் நாங்குநேரிக்கு அருகிலுள்ள மறுகால்குறிச்சி எனும் கிராமத்தில் 21 வயது நம்பிராஜனின் தலை துண்டிக்கப்பட்டது. அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை 25 நவம்பர் 2019 திருமணம் செய்துகொண்டதற்காக அளிக்கப்பட்ட தண்டனை அது. இத்தனைக்கும் இருவரும் இடைநிலை மறவர் சாதியைச் சேர்ந்தவர்கள். சாதியில் வேறுபாடு இல்லை என்றாலும் பெண் வீட்டார் வசதி படைத்தவர்களாக இருந்தனர். நம்பிராஜனின் பொருளாதார நிலை திருப்திகரமானதாக இல்லை என்பதால் பெண்ணின் சகோதரர்களுக்குத் திருமணத்தில் விருப்பமில்லையாம். கொன்றுவிட்டனர்.
நந்தீஷின் சசோதரர் சங்கரும் பொருளாதாரக் கோணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்வாதியின் குடும்பச் சொத்தான நிலம், வீடு போன்றவை இன்னமும் பிரிக்கப்படாத நிலையில் நந்தீஷை அவர் மணந்துகொண்டிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நியாயப்படி ஸ்வாதிக்கு ஒரு பங்கு கொடுக்கப்படவேண்டும். அவ்வாறு கொடுத்தால் அந்தப் பங்கு ஒரு தலித்தான நந்தீஷுக்கும் போய்ச் சேரும். அதை ஸ்வாதியின் மாமாக்கள் விரும்பவில்லை என்கிறார் சங்கர்.
அகமணமுறை சாதியமைப்பைப் பலப்படுத்துகிறது, தொடர்ந்து தழைத்திருக்குமாறு செய்கிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மத்தியில் அவ்வப்போது ஆணவக்கொலைகள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது என்கிறார் எவிடென்ஸ் கதிர். குடும்பச் சொத்து நம் சாதியைக் கடந்து வெளியில் சென்றுவிடக்கூடாது என்பதில் குடும்பங்கள் உறுதியாக இருக்கின்றன என்கிறார் அவர்.
0
தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டால் தமிழகத்துக்கு வெளியில் ஆந்திரப் பிரதேசத்திலும் தெலுங்கானாவிலும் ஆணவக்கொலைகள் நடைபெற்று வருகின்றன. செப்டெம்பர் 2018இல் பெருமள்ள பிரனாய் குமார் எனும் 24 வயது தலித் இளைஞர் நலகொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா எனும் இடத்தில் பட்டப்பகலில் எல்லோர் முன்பும் அடித்துக்கொல்லப்பட்டார். எட்டு மாதங்களுக்கு முன்பு மாருதி ராவ் என்பவரின் 19 வயது மகள் அம்ருதவர்ஷினியை அவர் மணந்துகொண்டிருந்தார். மாருதி ராவுக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை. கருவுற்றிருந்த தன் மனைவியை பிரனாய் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இடைமறித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். மாருதி ராவ் அதன்பின் தற்கொலை செய்துகொண்டார்.
இக்கொலையைத் திட்டமிட்டு நிறைவேற்றிய மாருதி ராவ், ‘என் மகளை நான் மிகவும் விரும்பினேன்’ என்று காவல் துறையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஒரு தலித்தை அவள் மணந்துகொண்டால் என் நிலை என்னாகும்? சமூகம் என்னைப் பற்றி என்ன பேசும்? அதனால் 10 லட்சம் கொடுத்து கூலியாள்களை நியமித்துக் கொன்றேன் என்று விளக்கமும் அளித்திருக்கிறார். அம்ருதவர்ஷினியும் குழந்தையும் இப்போது கணவரின் சகோதரி வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய பகுதிகளில் ஆணவக்கொலைகள் நடைபெற்றிருப்பதைக் கவனப்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், டெல்லியிலும் தமிழ்நாட்டிலும்கூடச் ‘சில சம்பவங்கள்’ நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் 29 ஜூலை 2019 அன்று அளித்த தனது வாக்குமூலத்தில் 2003 தொடங்கி 23 கொலைகள் இங்கே நடைபெற்றிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. நிச்சயம் இது குறைவான எண்ணிக்கை என்கிறார்கள் இத்துறையில் இயங்கி வருபவர்கள்.
2012இல் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், தலித் இளைஞர்கள் ‘கூலிங் கிளாஸும் டிஷர்ட்டும் ஜீன்ஸும்’ அணிந்துகொண்டு பிற சாதிப் பெண்களை மயக்கிக் காதலில் விழ வைப்பதாகக் குற்றம்சாட்டினார். ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதன்பின் வேகவேகமாக அதிகரித்தது.
பவானி எனும் 25 வயது பெண்ணின் கொலை அதிர்ச்சியூட்டக்கூடியது. இரு குழந்தைகளின் தாய். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குயவன்குடி எனும் கிராமத்தில் வசித்து வந்தார். எம்பிசி பிரிவைச் சேர்ந்த இவர் கடலூரைச் சேர்ந்த சதீஷ் குமார் எனும் தலித் இளைஞரைத் திருமணம் செய்துகொண்டார். திருப்பூரில் ஒரு துணி ஆலையில் இருவரும் சந்தித்து காதல் வயப்பட்டிருக்கின்றனர். ராமநாதபுரத்தில் ஒரு கோயிலில் திருமணம் நடந்திருக்கிறது. முதலில் திருப்பூரிலும் பின்னர் கடலூரிலும் வாழ்ந்திருக்கிறார்கள். சதீஷுக்கு மலேசியாவில் வேலை கிடைத்ததைத் தொடர்ந்து பவானி ராமநாதபுரத்துக்குத் தன் குழந்தைகளோடு வந்து தாத்தா, பாட்டி வீட்டில் வசிக்கத் தொடங்கினார். திருமணம் முடிந்த நான்காண்டுகள் முடிவடைந்த நிலையில் பவானியின் சகோதரன் கோபத்தோடு கடலூர் வந்து அவரைக் கொன்றான்.
தன் மனைவி கொலையான விஷயம்கூட முதலில் தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை என்கிறார் சதீஷ் குமார். முறையான விசாரணைகூட நடத்தப்படவில்லை. உடற்கூராய்வு அவசர, அவசரமாக நடந்திருக்கிறது. வீடியோவிலும் பதிவு செய்யப்படவில்லை என்கிறார் சதீஷ். ஒட்டுமொத்த குடும்பமும் இக்கொலையில் ஈடுபட்டதென்றாலும் காவல் துறை சகோதரன்மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தது என்கிறார் சதீஷ். தன் மனைவியின் உடல் வேகவேகமாக எரியூட்டப்பட்டதையும் வேதனையோடு பகிர்ந்துகொள்கிறார். ‘என் குழந்தைகள் முன்பு என் மனைவி கொல்லப்பட்டிருக்கிறார்.’
நானும் என் இரு குழந்தைகளும் துயரக்கடலில் நீந்திக்கொண்டிருக்கிறோம் என்கிறார் சதீஷ் குமார் எனும் தலித் இளைஞர். திருமணமான ஐந்தாண்டுகளில் மனைவி கொல்லப்படுகிறார். ‘என் மனைவி தன் பெற்றோரை மிகவும் நம்பியிருந்தாள். குழந்தைகளைக் கண்டு அவர்கள் மாறிவிடுவார்கள், நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினாள். ஆனால் குடும்ப மரியாதை, பெருமிதம்தான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. தன் மகளைப் பறிகொடுத்தாவது பெருமிதத்தை நிலைநாட்டவேண்டும் என்றே அவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஒரு தலித்தை எப்படி நீ மணந்துகொள்ளலாம் என்று அவள் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிர்த்திருக்கிறார்கள். பவானியின் சகோதரன் ஆத்திரத்தில் அவளைக் கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். இக்கொலைக்குப் பிறகு அவன் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள் அவனை மணந்துகொள்ள முன்வந்ததாகவும் கேள்விப்பட்டேன். அவன் பெயிலில் வெளியில் வந்துவிட்டான். மகிழ்ச்சியோடு திருமணமும் செய்துகொண்டுவிட்டான்.’
நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக ஆணவக்கொலை தமிழ்நாட்டில்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கறிஞர் குழு நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீதி விரைவாகக் கிட்டவேண்டும் என்பதால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு இது.
கல்பனா எனும் தலித் பெண் கொல்லப்பட்ட வழக்கில் மறவர் சாதியைச் சேர்ந்த (எம்பிசி) ஒரு தம்பதிக்கு மரண தண்டனை அளித்தது திருநெல்வேலி நீதிமன்றம். கல்பனாவின் சகோதரர் விஸ்வநாதன் காவேரியைக் காதலித்து மணந்துகொண்டதால் பெண் வீட்டார் இந்த ஆணவக்கொலையை நடத்தியிருக்கின்றனர். திருமணமான தம்பதியைக் கண்டுபிடிக்க முடியாததால் ஆத்திரத்தில் கல்பனாவைக் கொன்றிருக்கிறார்கள்.
2012இல் முதுகுளத்தூரில் அல்லிராஜன் என்பவர் தன்னுடைய 16 வயது பெண் திவ்யாவைக் கொலை செய்தார். திவ்யா ஒரு தலித்தைக் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறியதால் கோபமடைந்து அப்பா ஆத்திரமடைந்த கொன்றதோடு நடந்தது தற்கொலை என்றும் மூடி மறைக்க முயன்றுள்ளார். பின்னர் கைது செய்யப்பட்டபோது, ஆம் உறங்கிக்கொண்டிருந்தபோது என் பெண்ணைத் தலையணை வைத்து அழுத்திக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.
13 மார்ச் 2016 அன்று பட்டப்பகலில் கும்பலால் தாக்கிக் கொல்லப்பட்ட உடுமலை சங்கரையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். கவுசல்யாவின் தந்தை கூலியாட்களை வைத்து நடத்திய தாக்குதல் இது. கோகுல்ராஜின் தலை துண்டிக்கப்பட்ட உடல் 24 ஜூன் 2015 அன்று ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டது.
கீழமருதூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான அமிர்தவல்லி, அவர் கணவர் பழனியப்பன், அவர்களுடைய 40 நாள் குழந்தை அனைவரும் 2014இல் கொல்லப்பட்டனர். அமிர்தவல்லி ஒரு தலித். அவர் கணவர் பிசி வகுப்பைச் சேர்ந்தவர். பழனியப்பனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொலைகளில் ஈடுபட்டதாக கீழை நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களுக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது.
இசக்கி சங்கர் பிசி யாதவ வகுப்பைச் சேர்ந்த ஒரு வங்கி ஊழியர். இவர் 20 நவம்பர் 2018 அன்று திருநெல்வேலியில் கொல்லப்பட்டார். அவர் காதலித்து வந்த எம்பிசி பிரிவைச் சேந்த சத்யபாமாவின் உடல் மறுநாள் மர்மமான முறையில் காணக்கிடைத்தது. பிசி பிரிவைச் சேர்ந்த சிவா, சௌம்யா இருவரும் நாகர்கோவிலிலுள்ள வடசேரியில் மே 2013இல் கொல்லப்பட்டனர்.
2014இல் மதுரையைச் சேர்ந்த 17 வயது பிசி பெண் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. உண்மையில் அவரைக் கொன்றது அவருடைய சொந்த அப்பாதான். பிசி வகுப்பைச் சேர்ந்த வேறு சாதி இளைஞரைக் காதலித்ததால் உறங்கும் தன் மகளை அப்பா தலையணை வைத்து அழுத்திக் கொன்றிருக்கிறார்.
‘காதல் வயப்படும் இத்தகைய பெண்களுக்கு வேறு மார்க்கமே இல்லை. முயல்கள்போல் அவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள், கண்டந்துண்டமாக வெட்டி வீசப்படுகிறார்கள். எங்கு சென்றாலும் பல பெண்களை எப்படியோ கண்டுபிடித்து ஏதேதோ பேசி வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகின்றனர். அதன்பின் அவர்களை மூளைச்சலவை செய்கிறார்கள். அப்படியும் சொல் பேச்சு கேட்காவிட்டால் கொன்றுவிடுகிறார்கள்’ என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் ஒருவர்.
மேல்சாதி இளைஞர்களைத் திருமணம் செய்துகொண்ட தலித் பெண்கள் கணவனின் வீட்டாரால் அடித்து விரட்டப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் உள்ளன. பல சமயம் பெண் வீட்டுக்காரர்கள் அவமானத்தைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் தற்கொலை செய்துகொள்வதும் உண்டு.
18 நவம்பர் 2019 அன்று ஓர் அம்மா தனது மகளுக்குத் தீயூட்டியிருக்கிறார். நாகப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த காரணத்தால் இந்தத் தண்டனை. பெண்ணுக்கு 18 வயது ஆகும்வரை காத்திருந்து பிறகு மணந்துகொள்ளலாம் என்று இருவரும் திட்டமிட்டிருந்தனர். அம்மாவுக்கு விஷயம் தெரியவந்ததும் மகளை எரித்துக்கொல்ல முடிவெடுத்துவிட்டார். மகள் மருத்துவமனையில் இறந்துவிட்டார்.
ஜூலை 2019இல் கோயம்புத்தூரில் நடந்த இரட்டைக் கொலைகளை எடுத்துக்கொள்வோம். காதல் வயப்பட்டிருந்த வர்ஷினி ப்ரியா, கனகராஜ் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர். மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் ஒரு வன்னியர். வர்ஷினி ப்ரியா அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். கனகராஜின் பெற்றோர் ஒரு வழியாகத் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் அண்ணன் விநோத் கோபமுற்றிருக்கிறார். தன் தம்பி ஒரு தலித்தைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று கருதிய வினோத் இருவரையும் தாக்கிக் கொன்றிருக்கிறார்.
0
தலித் உட்பிரிவுகளுக்கு உள்ளும் கலப்பு மணம் புரிந்துகொண்டவர்கள் ஆணவப் படுகாலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது. தலித் பிரிவினருக்கு இடையே அரசியல் வேறுபாடுகள் இருப்பதையும் அந்த வேறுபாடுகள் சில சமயம் மோதலாக வெடிப்படையும் பார்த்திருக்கிறோம். ஆனால் சமூகரீதியிலோ பொருளாதாரரீதியிலோ தலித்துகளுக்கு இடையில் பெரிய அளவில் விரோதம் நிலவி நாம் பார்த்ததில்லை. இந்நிலையில், தலித்துகளும் ஆணவக்கொலையில் ஈடுபடுவார்கள் என்பதைப் பலரால் நம்பவோ ஏற்கவோ முடியவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சோலைராஜ், ஜோதி இரட்டைக் கொலைகள் பொது மக்களை மட்டுமல்ல, சமூகவியலாளர்களையும் அதிர்ச்சியில் தள்ளியிருப்பதைக் காணமுடிகிறது.
ஜூலை 2020இல் திருச்சியில் ஒரு பிராமண இளைஞர் தலித் இளைஞரால் கொல்லப்பட்ட சம்பவத்தை கதிர் நினைவுகூர்கிறார். தனது தங்கையைக் காதலித்து மணந்த காரணத்தால் சகோதரர் கொலை செய்திருக்கிறார்.
கல்விப்புலம் சார்ந்தோர், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புகள்தான் ஒடுக்கப்பட்ட பல சாதியினரை தலித் எனும் ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவந்தது. தனித்தனியே பிரிந்திருக்கும்போது கிடைக்காத கவனம் ஒற்றைப் பிரிவுக்குள் திரளும்போது கிடைக்கும் என்பதால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு இது. தலித் எனும் புதிய அடையாளம் அரசியல் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கும் கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்து முன்னேறுவதற்கும் உதவிகரமாக இருக்கும் என்று இவர்கள் நம்பினர். குறிக்கோளில் குறையில்லை என்றாலும் சாதிய உணர்வைத் தலித்துகளாலும் கைவிடமுடியவில்லை என்பதையே கள யதார்த்தம் நமக்கு உணர்த்துகிறது.
0
பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை மறுப்பது, திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு கொள்வது, எதிர்ப்பை மீறி காதலிப்பது, விவாகரத்து, விவாகரத்துக்குப் பிறகு குழந்தை யாரிடம் இருக்கவேண்டும் என்பதில் தகராறு உள்ளிட்ட காரணங்களால் ஆணவக்கொலைகள் நடைபெறுவதாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பொன்றில் குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட இக்காரணங்கள் அனைத்தும் பெண்களுக்குப் பொருந்துபவை.
ஆணவக்கொலைகளின் அடிப்படை நோக்கம் மனிதர்களை, குறிப்பாகப் பெண்களைக் கட்டுப்படுத்துவது என்கிறது ஒரு சர்வதேசக் கூட்டமைப்பு (Honour-Based Violence Awareness Network – HBVAN). பெருமிதத்தின் பெயரால் குடும்பங்களுக்குள் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் ஆவணப்படுத்திவருகிறது இந்த அமைப்பு.
ஒரு பெண்ணை உடைமையாகக் கருதும் ஆணாதிக்கப் போக்கும் அந்தப் போக்கை வலுப்படுத்தும் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பும் ஆணவக்கொலைகள் தழைப்பதற்கு உதவிகரமாக இருக்கின்றன. குடும்பத்தின், சாதியின், மரபின் தொடர்ச்சியை உருவாக்கிக்கொண்டிருப்பவர்கள் பெண்கள் என்பதால் அவர்களுடைய தூய்மையே குடும்பத்தின் தூய்மையாகக் கருதப்படுகிறது. கலப்பில்லாத ரத்தம் எங்கள் குடும்பத்தில் பாய்ந்துகொண்டிருப்பதை மாபெரும் பெருமிதமாகக் கருதும் போக்கு மிகப் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. காதலும் கலப்பு மணமும் இப்பெருமிதத்தை நொறுக்கிவிடும் என்று இவர்கள் அஞ்சுகின்றன. அக்கம் பக்கத்தினர் நம்மை மதிக்கமாட்டார்கள், இனி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழமுடியாது என்று தவிக்கிறார்கள். தங்கள் மகளோ மகனோ மாபெரும் குற்றம் இழைத்துவிட்டதாகவும் அக்குற்றத்துக்குத் தாங்கள்தாம் தண்டனை விதிக்கமுடியும் என்றும் இவர்கள் நம்புகின்றனர். கொலை என்பது குடும்ப உறுப்பினரின் தனிப்பட்ட முடிவாகவோ கூட்டு முடிவாகவோ இருப்பதைப் பார்க்கிறோம். பல சமயம் பெற்றோரும் உறவினரும் சேர்ந்து வீட்டுப் பெண்களைக் கொல்கின்றனர். சமூக உறுப்பினர்களும் இக்கொலையில் பங்குபெறுவதுண்டு.
0
2014இல் எம்பிசி வகுப்பைச் சேர்ந்த சத்யபாமா என்பவர் கோயம்புத்தூருக்கு அருகில் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த (இதுவும் இடைநிலைச் சாதிதான்) ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதற்காகக் கொல்லப்பட்டார். உடையார் சாதியைச் சேர்ந்த பூபதி எனும் பெண் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பிசி வகுப்பைச் சேர்ந்த இளைஞரை மணந்துகொண்டதற்காகக் கொல்லப்பட்டார். 2015இல் ஒரு நாடார் இளைஞர் திருநெல்வேலியிலுள்ள ஒரு கள்ளரை மணந்துகொண்டதற்காகக் கொல்லப்பட்டார். பதிவு செய்யப்படாமல், நம் கவனத்துக்கும் வராமல் போன கொலைகள் ஏராளம் இருக்கும்.
இதுபோன்ற கொடூரமான கொலைகள் சமூகத்தில் நடக்கக்கூடாது என்கிறார் நந்தீஷின் சகோதரர் சங்கர். ‘நாங்கள் ஏழைகள், நிலமற்றவர்கள். நந்தீஷ்தான் எங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார். தன் மகனின் இழப்பை அப்பா, அம்மாவால் இதுவரை ஏற்கமுடியவில்லை. மாண்டியாவிலுள்ள நீதிமன்றத்தில் இப்போதும் வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. சிபிஎம்மின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி எங்களுக்கு நிதியுதவியும் ஆதரவும் அளித்துக்கொண்டிருக்கிறது. என்னுடைய ஒரே விருப்பம், நந்தீஷையும் அவர் மனைவியையும் கொன்றவர்கள் சட்டத்தின்படி தூக்கிலிடப்படவேண்டும் என்பதுதான். அப்போதுதான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும்.’
திருநெல்வேலியைச் சேர்ந்த சற்குணத்தின் கதை இதயத்தைக் கரைக்கக்கூடியது. தலித் பிரிவைச் சேர்ந்த அவர் மனைவி கல்பனாவின் கொலைக்குப் பிறகு சற்குணம் தனது நான்கு வயது குழந்தையோடு ஆதரவின்றி அல்லாடிக்கொண்டிருக்கிறார். ‘ஒரு பாவமும் செய்யாத கல்பனாவைக் கொன்றுவிட்டார்கள். அவளுடைய சகோதரன் ஒரு பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான். பெண் வீட்டார் முரட்டுத்தனமானவர்கள். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று என் மனைவி எவ்வளவு வாதாடியும் அவர்கள் அவளைக் கொன்றுவிட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் கொலையாளிகளை நிரபராதிகள் என்று சொல்லிவிட்டது. எவிடென்ஸின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம்.’அந்தத் தம்பதி தமிழ்நாட்டுக்கு வெளியில் ஒரு நகரில் வாழ்கின்றனர்.
0
‘இளம் தம்பதிகள் புதிதாகத் தங்கள் வாழ்வைத் தொடங்கும்போது, சாதியும் குடும்பமும் உள்புகுந்து அவர்கள் காதலை அழித்துவிடுகிறது. தூய்மை, பெருமிதம் ஆகியவற்றைத் திணித்து அவர்கள் வாழ்வைக் கலைத்துப்போடுகிறது. என்னைப் போன்ற வெகு சிலர் அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்திருக்கிறோம்’ என்கிறார் கவுசல்யா. சங்கரின் மரணத்தைத் தொடர்ந்து உடனுக்குடன் தான் சமூக விலக்கம் செய்யப்பட்டதை கவுசல்யா நினைவுகூர்கிறார். அவரது வலியோ இழப்போ அச்சமோ ஒருவருக்கும் பொருட்டாக இல்லை. இவ்வளவுக்கும் பிறகும் அவர் போதுமான அளவுக்குத் தண்டிக்கப்படவில்லை என்றே சமூகம் கருதியிருக்கிறது.
‘ஆனால் சங்கரின் மரணம் என் மனவுறுதியைக் குலைக்கவில்லை. வாழவேண்டும், போராடவேண்டும், சங்கரின் கனவைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் எனும் உறுதிப்பாட்டையே எனக்குள் ஏற்படுத்தியது’ என்கிறார் கவுசல்யா. சாதி அமைப்பு நொறுக்கப்படவேண்டும். பெருமிதம், தூய்மை போன்ற கருத்தாக்கங்கள் தவிடுபொடியாக்கப்படவேண்டும். ஆணவக்கொலை எங்கள் அற்புதமான வாழ்கை, கனவைக் குலைத்துவிட்டது. நாம் நேசித்தவர்களே நமக்கு எதிராகத் திரும்புவார்கள், கொல்லவும் துணிவார்கள் என்பது உண்மையிலேயே கொடுங்கனவுதான்.’
கவுசல்யா தன் தந்தைக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி, அவருக்கு மரண தண்டனையைப் பெற்றுத் தந்தார். ‘ஆணவக்கொலைக்கென்று ஒரு வலுவான தனிச்சட்டம் உருவாக்கப்படவேண்டும்’ என்கிறார் கவுசல்யா. ‘ஒருவேளை நான் இறந்து சங்கர் தப்பியிருந்தால், நான் தலித் அல்ல என்பதால் அவருக்கு எதுவுமே கிடைத்திருக்காது. என்னை ஆதரிக்கவும் சட்டம் எதுவும் இல்லை.’
கவுசல்யா இவ்வாறு சொல்வதன் பின்னணியை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு தலித்துக்கும் தலித் அல்லாதோருக்கும் இடையில் கலப்பு மணம் நடைபெற்று ஆணவக்கொலையும் நடைபெற்றால் இறந்தவர் தலித் என்றால் அரசும் தலித் அமைப்புகளும் எல்லா உதவிகளையும் அளிக்கும். ‘ஒருவேளை கொல்லப்பட்டவர் தலித் அல்ல என்றால் வெறும் கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்யப்படும். தலித் அல்லாதவர் இறந்து, பிழைத்திருப்பவர் தலித் என்றால் அவருக்கு எந்த உதவிகளும் கிடைக்காது. அதனால்தான் ஆணவக்கொலை குறித்து விரிவான தனிச்சட்டம் வேண்டும் என்று கோருகிறோம்’ என்கிறார் கதிர்.
ஆணவக்கொலைக்கு எதிரான சட்டமொன்று வேண்டும் என்று சாதி ஒழிப்பு முன்னணியும் வலியுறுத்துகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவரும் இளவரசனின் உறவினருமான வி. ரமணி, ‘இளைய தலைமுறையினர் கொடூரமான ஆணாதிக்கத்துக்குப் பலியாவது அதிர்ச்சியளிக்கிறது’ என்கிறார். ‘ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இப்போது நமக்கு அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.’
ஆணவக்கொலையால் பலியானவர்களுக்குச் சாதி வேறுபாடின்றி அரசு உதவிகள் கிடைப்பதற்கு இச்சட்டத்தின்மூலம் வழி செய்யப்படவேண்டும். பிற கொலைகள்போல் அல்லாமல், ஆணவக்கொலைக்குப் பலியானவர்களையும் அவர்களுடைய இணையரையும் நீதிமன்றமும் அரசும் பரிவோடு அணுகவேண்டும். ஆணவக்கொலைக்குத் தன் இணையரை இழந்து நிற்கும் ஒருவர் (அவர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்) தன் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அவருக்குப் போதுமான அளவுக்கு இழப்பீடு அளிக்கப்படவேண்டும். சங்கருக்குப் பிறகு நான் ஆதரவற்றவளாக மாறினேன். என் வாழ்வை நானே மீட்டெடுத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அது இன்னொருவருக்கு நேரக்கூடாது என்கிறார் கவுசல்யா. தற்சமயம் கவுசல்யா மறுமணம் புரிந்துகொண்டு தனது சொந்த முயற்சியில் அரசுப் பணியில் அமர்ந்திருக்கிறார்.
இன்று கவுசல்யா என்றதும் பாதிக்கப்பட்டவர் என்னும் பிம்பம் நமக்குத் தோன்றுவதில்லை. ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்டோர் சார்பாக நின்று குரல் கொடுக்கும் ஒரு செயற்பாட்டாளராகவே அவர் வளர்ந்து நிற்கிறார். தன் வாழ்வின் சோகமான, இருள் நிறைந்த பக்கங்களை கவுசல்யா இன்று கடந்து வந்துவிட்டார். முடிந்துபோன ஒரு வாழ்க்கை தொடர்பான நினைவுகள் மட்டுமே அவரிடம் தங்கியிருக்கின்றன. எதிர்காலத்தின்மீது கண்களைப் பதித்து முன்னோக்கி நடப்பதற்கான மன உறுதியை அவர் திரட்டிக்கொண்டுவிட்டார். எது அவரை வீழ்த்தியதோ அதை வீழ்த்துவதற்கான உத்வேகம் அவரை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. இது எல்லோருக்கும் நடக்கவில்லை என்பதையும் இழப்பு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக உருமாற்றியிருக்கிறது என்பதையும் கவுசல்யா உணர்ந்திருக்கிறார்.
இன்னொரு பக்கம், தங்கள் குழந்தைகளைப் பறிக்கொடுத்த பிறகும் அது குறித்த எந்த உணர்வுமின்றிச் சாதிப் பெருமிதத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு நிற்கும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர். என் மகனோ மகளோ இல்லாவிட்டால் பரவாயில்லை, பெருமிதமும் மானமும் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ‘இவர்களைப் போன்றவர்கள் எங்கள்மீதான வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள்’ என்கிறார் கவுசல்யா.
0
சாதிக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சாதி குறித்த சமூகக் கண்ணோட்டங்களை அரசியலே தீர்மானிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாதியமைப்பைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஓர் அமைப்பாகவும் அரசியல் திகழ்வதைப் பார்க்கிறோம். பல அரசியல் கட்சிகள் சாதி ஓட்டுகளை நம்பியே இயங்கிக்கொண்டிருககின்றன. சாதிக்கும் வகுப்புவாத அரசியலுக்கும்தான் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்கின்றன என்று ஆவணக்கொலை குறித்த விசாரணையொன்றின்போது சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. கலப்பு மணம் புரிந்துகொண்டவர்கள் இணக்கமாக வாழவேண்டுமானால் அரசியல் களத்திலிருப்போர் தலையிடவேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்து திருமணச் சட்டத்தின்கீழ் சுயமரியாதைத் திருமணத்தை 1960களின் இறுதியிலேயே கொண்டுவந்து அனைவரையும் வியப்பிலாழ்த்திய மாநிலம் இது. ஏராளமான கலப்பு மணங்கள் இங்கே நடைபெற்றிருக்கின்றன என்பது வரலாறு. இருந்தும் இப்போது கலப்பு மணங்கள் கடும் எதிர்ப்புகளையும் சாதிய மோதல்களையும் கொண்டுவருவது வருத்தமளிக்கக்கூடியது. ஒரு காலத்தில் மார்க்சிய லெனினிய இயக்கங்களின் தாக்கத்துக்கு உட்பட்டிருந்த தர்மபுரி இன்று ஆணவக்கொலையின் ரத்தச் சுவடுகளை ஏந்தி நிற்கிறது. சாதிய உணர்வும் கூர்மை பெற்றிருக்கிறது.
யுவராஜ் போன்ற சாதிச் சங்கத் தலைவர்களுக்கு நாமக்கல் அளித்த ஆதரவையும் நாம் மறந்துவிடமுடியாது. தனது சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு இணைந்து காணப்பட்ட ஒரே காரணத்துக்காக கோகுல்ராஜ் கொல்லப்பட்டது பெரும் துயரம்.
2007 தொடங்கி கிட்டத்தட்ட 30 ஆணவக்கொலைகள் மேற்கு தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. தலித், பழங்குடி மக்கள் தொடர்பான பிரச்னைகளைக் கவனிப்பதற்கு உயர் மட்டக் குழுவொன்றை மாநில அரசு உருவாக்கியது என்றாலும் சாதிச் சங்கங்களின் செல்வாக்கால் இந்தக் குழு கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது. தமிழ்நாடு காவல் துறையிலேயே சமூக நீதிப் பிரிவொன்று தனியே இருக்கிறது. கூடுதல் டிஜிபி அதற்குத் தலைமை தாங்குகிறார். இப்பிரிவு தலித், பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கிறது.
கலப்பு மணம் புரிபவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க எல்லா மாவட்டங்களிலும் சிறப்புப் பிரிவொன்றைத் தொடங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்று சுட்டிக்காட்டுகிறது. இத்தீர்ப்பை மன்மீத் சிங் எதிர் ஹரியாணா அரசு (2016) வழக்கில் உச்ச நீதிமன்றம் கவனப்படுத்தியுள்ளது. கலப்பு மணம் புரிந்துகொண்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படவண்டும் என்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஆலோசனை அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டிலும் சரி, பிற மாநிலங்களிலும் இவை பின்பற்றப்படவில்லை.
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அம்பேத்கர் பெயரில் சமூக இணக்கத் திட்டமொன்றை அறிவித்துள்ளது. அதன்படி கலப்பு மணம் புரிந்துகொண்டவர்கள் உதவி வேண்டி விண்ணப்பித்தால் 2.5 லட்சம் வரை கிடைப்பதற்கு வழி இருக்கிறது. இப்படியொரு திட்டம் இருந்தாலும் பலரால் அவ்வளவு எளிதில் அணுகவோ பலன் பெறவோ முடிவதில்லை; ஏராளமான முட்டுக்கட்டைகள் போடப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் தலித் செயற்பாட்டாளர்கள்.
எடுத்துக்காட்டுக்கு, கலப்பு மணத் தம்பதியினரில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். திருமணமான ஓராண்டில் தகுந்த ஆவணங்களோடு உதவி கேட்டு விண்ணப்பிக்கவேண்டும். இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஒருவர்கூட இத்திட்டத்தால் பலனடைந்ததில்லை என்கிறார் ஒரு சமூக சேவகர். அரசியல் கட்சிகளும் முழுமனதோடு இதில் அக்கறை செலுத்துவதில்லை.
திமுக, அதிமுக இரண்டுமே எண்ணிக்கையளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளை நம்பியிருக்கின்றன. அதனால்தான் ஆணவக்கொலை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் பொருட்படுத்தத்தக்க விவாதங்கள் நடைபெறுவதில்லை. இடைநிலை மறவர் சாதியைச் சேர்ந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரில் 2015இல் ஆணவக்கொலை தமிழகத்தில் நடைபெற்றதில்லை என்று அடித்துச் சொன்னார். ஆணவக்கொலையே நடைபெறாதபோது அதற்கென்று தனிச்சட்டம் அவசியமற்றது என்பது அவர் வாதம். இத்தகைய அணுகுமுறை நிலைமையை மேலும் சிக்கலானதாகவே மாற்றுகிறது.
2013 முதல் 2019வரை தமிழகத்தில் 190 ஆணவக்கொலைகள் நடைபெற்றிருக்கின்றன என்கிறார் கதிர். இவர்களில் 80% பேர் பெண்கள்; அவர்களில் பெரும்பகுதியினர் தலித்துகள். ‘திராவிட அரசியலின் பிரச்னை இது. பிற்படுத்தப்பட்ட வாக்குகள் முக்கியம் என்பதால் காந்திய, பெரியாரியக் கோட்பாடுகளை அவர்கள் பின்பற்றத் தயங்குகிறார்கள்’ என்கிறார் அ. மார்க்ஸ். ‘குடும்பங்களும் சாதிகளும்தாம் இளம் தம்பதிகளின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. காவல் துறை போன்ற அரசு அமைப்புகள் பெரும்பாலும் கொலையாளிகளோடுதான் இணக்கமாக இருக்கின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த சாமுவேல் ராஜின் கருத்தும் இதுதான். ‘அரசு, குறிப்பாகக் காவல்துறை பக்கச்சார்போடுதான் இயங்கிக்கொண்டிக்கிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விமலா தேவியின் (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்) கொலையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவர் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், காவல்துறை அவர் கணவர் திலீப் குமாரிடமிருந்து (தலித்) பிரித்து பெற்றோர் வீட்டுக்கு விமலாவை அனுப்பி வைத்தது. ஆனால் விமலா விரைவில் இறந்துபோனார். கலவரமடைந்த காவல்துறை தற்கொலை என்று சொல்லி வழக்கை மூடப் பார்த்தது. திலீப் குமாரின் மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.’ தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உதவியோடு வழக்கு நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சிகள் சமூகத்தை ஜனநாயகமயப்படுத்தத் தவறிவிட்டது என்கிறார் பழனி துரை. ‘மக்களைச் சாதியத்திடமிருந்து பிரிப்பதற்குப் பதில் அதிலேயே அவர்கள் தங்க வைப்பதில்தான் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. சாதியும் இன்று கார்பரேட் மயமாகிவிட்டது. தமிழ்நாட்டு மக்கள்தொகையில் சரி பாதி பேர் கிராமங்களில் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவ முறையிலிருந்து அவர்கள் இன்னமும் வெளிவரவில்லை.’
தமிழக அரசு ஆணவக்கொலையை அலட்சியமாகக் கையாள்கிறது என்கிறார் விசிக தலைவர் ரவிக்குமார். இப்போக்கு தொடரும்வரை ஆணவக்கொலையும் தொடரும் என்பது அவர் கருத்து. ஆணவக்கொலைக்குத் தனிச் சட்டம் வேண்டும் என்னும் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்டாகாலமாக முன்வைத்து வருகிறது. புதிய தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே. கிருஷ்ணசாமியும் திராவிடக் கட்சிகளை ஆணவக்கொலைகளுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று கருதுகிறார். தீண்டாமையும் சமூக, பண்பாட்டு ஒதுக்கலும் தொடரும்வரை தலித்துகள் அதிகாரமற்றவர்களாகவே இருப்பார்கள் என்கிறார் இவர்.
கலப்பு மணம் தேசத்துக்கு நன்மையைத்தான் கொண்டுவரும்; அது சாதி அமைப்பைத் தகர்க்கும் என்கிறது உச்ச நீதிமன்றம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா. வொய்.எஸ். அலோனின் இக்கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. ‘சாதிய பாகுபாட்டைக் களைய உதவும் வழிகளில் கலப்பு மணமும் ஒன்று, அது சமூகத்தில் ஒருங்கிணைப்பைக் கொண்டுவரும் என்பதும் உண்மைதான். ஆனால் சாதியை அது அழிக்கும் என்று சொல்லமுடியாது. கலப்பு மணத்தைப் பட்டியல் சாதி மக்கள் பெருமளவு ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் நுழையாத இடங்களில் கலப்பு மணம் இன்னமும் தடை செய்யப்பட்டுதான் இருக்கிறது.’
மகாத்மா ஜோதிபா புலே கலப்பு மணங்களை ஆதரித்தார் என்கிறார் பேரா. அலோன். ‘இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையல்ல, அவரவர் சாதிய விழுமியங்களைத்தான் உயர்வாகக் கருதுகிறார்கள். பகுத்தறிவை ஒரு சமூகம் ஏற்காதபோது வெறுப்பும் கோபமும் வன்முறையும் பெருகுவதுதான் இயல்பு’ என்கிறார் அலோன். சமத்துவமும் சாதியும் ஒருபோதும் இணைந்திருக்க முடியாது என்று இவர் வலியுறுத்துகிறார். சீனாவிலுள்ள ஹாங்ஷுவில் அமைந்திருக்கும் பௌத்த ஆய்வுக் கழகத்தோடு இணைந்து இவர் பணியாற்றிவருகிறார்.
கலப்பு மணம் குறித்த அம்பேத்கரின் பார்வை ஆழமானது, வித்தியாசமானது. ‘கலந்துண்ணும் வழக்கமும் கலப்பு மணமும் பெருகினால் சாதியமைப்பு தனது பலத்தை இழக்கத் தொடங்கும்’ என்று சாதியை அழித்தொழித்தல் எனும் நூலில் அம்பேத்கர் குறுப்பிடுகிறார். எது நோய், அது எப்படிப் பரவுகிறது என்பதைக் கண்டறிந்துவிட்டோம். ஆனால் நோய்க்கு ஏற்ற மருந்து அளிக்கிறோமா என்பதுதான் முக்கியம் என்கிறார் அம்பேத்கர்.
செங்கல் சுவர்போல், இரும்பு முள்வேலிபோல் சாதி என்பது வெளிப்படையாக மனிதர்களுக்கு இடையில் உருவாகி நின்று அவர்களைப் பிரிக்கும் ஒரு பொருளல்ல என்கிறார் அம்பேத்கர். அதை நாம் காணமுடியாது என்பதால் அகற்றவும் முடியாது. சாதி என்பது ஒரு கருத்தாக்கம். அது ஒருவிதமான மனநிலை. சாதியை அழிப்பது என்பது கண்ணுக்குப் புலப்படும் ஒரு தடையை அகற்றவது அல்ல. கருத்தளவில் ஏற்படும் மாற்றம்மூலமே சாதியை அழிக்கமுடியும் என்று விளக்குகிறார் அம்பேத்கர். சாதி என்பது குறிப்பிட்ட மத நம்பிக்கைகளின் இயல்பான விளைவு. சாத்திரங்களின் ஆதரவோடு அது இயங்குகிறது என்கிறார் அம்பேத்கர். கலந்துண்ணும் வழக்கத்தையும் கலப்பு மணத்தையும் அதிகளவில் நடத்திக்காட்டவேண்டும். கட்டாயப்படுத்தி உணவு உண்ணச் செய்வதுபோன்ற ஒரு வழிமுறைதான் இது. சாதி இயல்பானதாக மாறிவிட்டதால் செயற்கையான இத்தகைய வழிமுறையை நாம் நாடவேண்டியிருக்கிறது என்பது அம்பேத்கரின் பார்வை.
சாத்திரங்களின் பிடியிலிருந்து ஒவ்வோர் ஆணையும், ஒவ்வொரு பெண்ணையும் விடுவிக்கவேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். கலந்துண்ண மறுப்பவர்களை விமரிசிப்பதன்மூலமோ கலப்பு மணத்தைக் கொண்டாடுவதன்மூலமோ நாம் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது. சாத்திரங்கள்மீதான நம்பிக்கையை அகற்றவதுதான் உண்மையான மாற்றம் என்பது அம்பேத்கரின் நிலைப்பாடு. அதுவே சாதியழிப்புக்கும் இட்டுச் செல்லும்.
பிடிவாதமான, பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான சமூகம் நம்முடையது என்கிறார் அம்பேத்கர். தங்கள் மனைவியை, சகோதரியை, குழந்தையை ஆணாதிக்க மன்னர்கள்போல் நடத்தும் கூட்டம்தான் நம்மிடையே உள்ளது. பெண்கள் நமக்குக் கட்டுப்பட்டவர்கள், நம்மைவிடத் தாழ்ந்த இடத்தில் இருப்பவர்கள் எனும் எண்ணமே ஆண்களிடம் நிறைந்திருக்கிறது. பெண்களுக்கு விருப்பமோ அடையாளமோ சுதந்திரமோ இல்லை என்று நினைக்கிறார்கள்.
0
ஆணவக்கொலையைத் தனித்துவமான குற்றமாகக் கருதி சட்டம் இயற்றவேண்டும் என்று பெண் உரிமைப் போராளிகள் குரல் கொடுக்கின்றனர். ‘இந்த விஷயத்தில் சிறுபான்மையினர்போல் உணர்கிறேன். ஆணவக்கொலைக்குத் தனிச்சட்டம் இயற்றும் நேரம் வந்துவிட்டது. வலுவான சட்டம் இருந்தால்தான் இதுபோன்ற கொடூரமான குற்றம் குறையும்’ என்கிறார் ரமணி.
பெருமிதத்தின் பெயரால் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுக்க 2002இல் ஐநா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆணவக்கொலை புரிபவர்கள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜூலை 2009இல் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பல ஆணவக்கொலைகள் இந்திய தண்டனைச் சட்டம் 174இன் கீழ் சந்தேகத்துக்குரிய மரணம் என்றே முதலில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் 302ஆம் பிரிவுக்கு மாற்றப்படுகின்றன. ஆணவக்கொலைக்குத் தனிச்சட்டம் இருந்தால் 18 முதல் 30 வயதுக்குரிய மரணங்களை, குறிப்பாகக் கலப்பு மணம் செய்துகொண்ட பெண்களின் மரணங்களைப் பிரத்தியேகமாக விசாரிக்கமுடியும் என்கிறார் கதிர்.
2011இல் ஒரு சட்ட முன்வரைவை (Prohibition of Unlawful Assembly (interference with freedom of matrimonial alliance) அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆணவக்கொலைக்குக் கடும் தண்டனை அளிக்கும் வகையில் இது அமைந்திருந்தது. சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்டவற்றில் இது சில திருத்தங்களையும் முன்மொழிந்திருந்தது. இந்தச் சட்டமுன்வரைவின்படி, நான் குற்றமிழைக்கவில்லை என்பதை நிரூபிப்பது குற்றவாளியின் பணி. இந்து திருமணச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரலாமா என்பது குறித்த விவாதங்களையும் அது கிளப்பியது. இன்றுவரை இது சட்டமாகவில்லை.
ஆச்சரியமூட்டும் வகையில் பாகிஸ்தானில் தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அது காகித அளவில்தான் இருக்கிறது, நடைமுறைக்கு வரவில்லை என்பது தனிக்கதை. அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்கொள்ளும் ஒரு சட்ட முன்வரைவு 2013 முதல் காத்திருப்பில் இருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகளில் ஆணவக்கொலையைப் பிற குற்றங்களிலிருந்து பிரித்துக் காட்டும் வகையிலான நடைமுறை அமலில் இருக்கிறது.
நீதிமன்றச் சீர்திருத்தங்களுக்கான குரல் நம்பிக்கையளிக்கிறது. 2007இல் ஹரியாணாவில் ஆணவக்கொலைக்கு எதிரான உறுதியான தீர்ப்பு வெளிவந்தது. கிராமத்துப் பெரியோர்களைமீறி திருமணம் செய்துகொண்ட தம்பதியைக் கொன்ற ஐவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. ஒரே கோத்திரத்தைச் (ஒரே சாதிய உட்பிரிவு) சேர்ந்த மனோஜ், பாப்லி இருவரும் பெண்ணின் உறவினர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். கப் பஞ்சாயத்தின் தீர்ப்பின்படி இந்தக் கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் போலவே கப் பஞ்சாயத்துத் தலைவரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
பெருமிதக் கொலையில் எந்தப் பெருமிதமும் இல்லை என்று மே 2011இல் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது ஆணவக்கொலைக்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு உத்வேகமூட்டுவதாக இருக்கிறது. மார்கண்டேய கட்ஜு, கியான் சுதா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வு, ஆணவக்கொலைகளை அரிதினும் அரிதான குற்றங்களாகக் கருதி மரண தண்டனை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இனியும் இந்த வழக்கத்தைத் தொடர்ந்தால் தூக்குமேடைதான் என்னும் அச்சம் சமூகத்தில் தோன்றவேண்டும் என்று இவர்கள் குறிப்பிட்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவின் தலைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஓர் அமர்வு சக்திவானி எனும் அரசு சாரா நிறுவனம் தொடுத்த பொதுநல வழக்கொன்று தொடர்பாக 2016இல் முன்வைத்த கருத்து முக்கியமானது. ஆணவக்கொலை தனிமனித சுதந்தரத்தை, தனிப்பட்ட தேர்வு உரிமையைக் கொல்கிறது. குடும்பங்களை அல்லது கப் பஞ்சாயத்தை மீறி திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் பெரும் ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள். ஆணவக்கொலை விசாரணைகளை விசாரிப்பவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றை விவரிக்கும் வழிமுறைகளையும் இந்த அமர்வு தயாரித்து அளித்தது. ஆணாதிக்க மன்னர்கள்போல் தங்கள் குழந்தைகளைக் கொல்லும் போக்கைக் கண்டித்தது. மகளின், மகனின், தங்கையின், தம்பியின் மனித உரிமைகளைக் காட்டிலும் குடும்பத்தின் பெருமிதமோ சமூகத்தின் பெருமிதமோ முக்கியமல்ல என்றும் தெளிவுபடுத்தியதோடு சாதிப் பெருமிதத்தோடு கலந்திருக்கும் ஆணாதிக்க உணர்வையும் வெளிச்சம்போட்டுக் காட்டியது. ’22 மாநிலங்கள் இந்த நீதிமன்றம் கேட்டுக்கொண்ட தகவல்களை அனுப்பி வைத்தது. தமிழ்நாடு அனுப்பவில்லை’ என்கிறார் கதிர்.
கலப்பு மணம் புரிந்துகொண்டவர்களைச் சமூகம் அரவணைத்துக்கொள்ள வேண்டும். அதற்குச் சமத்துவச் சிந்தனை பரவுவது முக்கியம். சாதியின் பிடியிலிருந்து, ஆணாதிக்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டு ஒரு புதிய வாழ்வை இணைந்து ஆரம்பிக்கும் புதிய தலைமுறையினரை நாம் அனைவரும் இணைந்து காக்கவேண்டும். ஒரு மனிதரின் வாழ்வில் தலையிடும் உரிமையை அவர் குடும்பத்தார் உள்பட எவருக்கும் அளிக்க முடியாது. ரத்தத்தில் சாதியில்லை. கண்ணீரில் சாதியில்லை என்றார் ஆசிய ஜோதி எழுதிய எட்வின் அர்னால்ட். அவ்வாறே பெருமிதக் கொலையில் எந்தப் பெருமிதமும் இல்லை. கொலையுண்டவர்களைக் கடவுளாக்கி வழிபடுவதோ அவர்கள் புகழ் பாடுவதோ தேவையற்றது. அவர்கள் கொல்லப்படுவதிலிருந்து தடுப்பதே நம் முன் நிற்கும் பணி.
(முற்றும்)