அறிமுகம்
ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்பு வாழ்வின் கடைசியில் எழுதிய நாடகங்களில் ஒன்றான ‘சூறாவளி’ (The Tempest) என்ற நாடகத்துடன் ஆரம்பிக்கலாம். நம்முடைய படைப்பு வரிசை முன்பு குறிப்பிடப்பட்டுள்ள ‘First folio’வின் அதே வரிசையில் இருக்கும். ஷேக்ஸ்பியரின் முதல் தொகுப்பில் ஏன் இந்த வரிசை கடைபிடிக்கப்பட்டது என்பதற்கு நம்மிடம் எந்தக் காரணமும் இல்லை.
‘First folio’ தொகுப்பு, ஷேக்ஸ்பியர் இறந்து ஏழு வருடங்கள் கழித்து 1623ஆம் வருடம் பதிப்பிக்கப்பட்டது. அவரது நாடகங்களைத் தனியே பதிப்பித்திருந்த பதிப்பாளர்கள் இருவர் இணைந்து, ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தொகுக்கும் வேலையைச் செய்தனர். அவற்றில் சில நாடகங்கள் திருத்தப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. குளோப் நாடக அரங்கின் எழுத்தரான ரால்ஃப் என்பவரின் உதவியுடன் இந்தத் தொகுப்பு வெளிக் கொண்டு வரப்பட்டது.
900 பக்கங்களுக்கு மேலாக விரியும் இந்தத் தொகுப்பு, அந்தக் காலகட்டத்திற்கு மிகவும் பெரிய முயற்சியாகும். ஐந்து பேரின் உதவியுடன் நாடகங்கள் அச்சு கோர்க்கப்பட்டு, அதன் பதிப்பாளர்கள் அன்றைய இங்கிலாந்தின் பெரிய பதிப்பகம் ஒன்றில் முழுவதுமாகப் பதிப்பித்து, புத்தகமாகக் கொண்டு வர 3 வருடங்களுக்கு மேலானது. முதல் பதிப்பில் 750 பிரதிகள் பதிப்பிக்கப்பட்டன. இந்தப் பிரதிகளில் பெரும்பாலானவை இன்னமும் நமக்குக் கிடைக்கிறது. நிறுவனங்களிடமும் தனியாரிடமுமாக 250 பிரதிகள் இன்னமும் இருப்பதாகத் தெரிகிறது. உலகெங்கும் உள்ள பல பெரிய நூலகங்களில் இப்பிரதியை இன்றும் பார்க்கலாம். 2017ஆம் வருடம், நானும் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ‘First folio’வின் பிரதி ஒன்றைப் பார்த்தேன். லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து கடனாக ஒரு மாத காலம் அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. வாழ்நாள் முழுவதும் ரசிக்கும் ஒருவரின் வரலாற்றுப் பிரதியை பார்ப்பதே ஒரு தனி அனுபவம்தான்.
இதுவே ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் மூலமாகக் கருதப்பட்டாலும், அன்றிருந்த நிலையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இன்று போல தெளிவான பிழை திருத்தம் நடைபெறவில்லை என்பதால், முதல் பதிப்பின் புத்தகங்களுக்கு உள்ளேயே நாம் பல வேறுபாடுகளைப் பார்க்க முடிகிறது. இவை பின்னாளைய பதிப்புகளில் திருத்தப்பட்டாலும், எவை உண்மையில் ‘ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள்’ என்பதில் இன்னமும் சில இடங்களில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இது குறித்தும் நாம் பார்க்கத்தான் போகிறோம்.
‘சூறாவளி’ ஷேக்ஸ்பியரின் முக்கியமான நாடங்கங்களில் ஒன்று. நாடக அரங்கின் சாத்தியங்களை முழுவதுமாக மனதில் கொண்டு எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. மாயம், மந்திரம் என பல விதங்களில் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தைப் படைப்பதாகவும் இருக்கிறது.
ஒருவிதத்தில் ‘சூறாவளி’ வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக் கொடுக்கிறது. ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டாலும், நமது விருப்பத்தைப் பொறுத்து அதைப் புரிந்து கொள்ளும் விதமாகவும், நீண்ட அலசல்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உள்ளான நாடகமாகவும் இருக்கிறது.
அவை பற்றி எழுதுவதற்கு முன், இந்த நாடகத்தின் வடிவத்தையும், கதையையும் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.
அங்கம் 1 – காட்சி – 1
நாடகத்தின் தலைப்பிற்கேற்ப கதை கடலின் நடுவில் சூறாவளியில் சிக்கித் தவிக்கும் கப்பல் ஒன்றில் ஆரம்பிக்கிறது. கப்பல் சூறாவளியில் மூழ்கிவிடாமல் இருக்க மாலுமிகளும் கப்பலில் வேலை செய்பவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நேபிள்ஸ் நகர அரசனான அலான்சோ, அவரது சகோதரன் செபாஸ்டியன், ஆண்டோனியோ மற்றும் சில பிரபுக்கள் கப்பலில் இருக்கிறார்கள். அவர்கள் கப்பலின் மேல்தளத்திற்கு வருகிறார்கள். அங்கே வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் அங்கிருப்பது இடைஞ்சலாக இருக்கவே, அவர்களைக் கீழ்தளத்தில் சென்று பாதுகாப்பாக இருக்கும்படியாக கூறுகிறார்கள். ஆனால் பிரபுக்களில் ஒருவர், அவர்கள் அரசனிடம் பேசிக் கொண்டிருப்பதை நினைவுபடுத்துகிறார். ஆனால் மாலுமி அதைச் சட்டை செய்வதாகத் தெரியவில்லை. ‘சூறாவளிக்கு அரசரைத் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, அவர்களை மீண்டும் கீழ்தளத்திற்கு செல்லுமாறு கூறுகிறான். அவர்களும் கீழே செல்கிறார்கள்.
ஆனால் சில நேரத்திலேயே, பிரபுக்களில் சிலரும், அரசனின் சகோதரன் செபாஸ்டியனும் மீண்டும் மேல்தளத்திற்கு வந்து அவர்களிடம் பேசிய மாலுமியிடம் வார்த்தைகளில் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள். அவனும் பதிலுக்கு அவர்களிடம் சூறாவளியில் இருந்து தப்பிக்க வழியில்லை என்றும், அவர்கள் கீழ்தளத்திற்கு சென்று, பிரார்த்தனை செய்வது நல்லது என்றும் கூறிவிடுகிறான். சிறிது நேரம் அவனிடம் விவாதம் செய்துவிட்டு அவர்களும் தங்களது அரசன் மற்றும் இளவரசனுடன் பிரார்த்தனை செய்ய கீழே சென்றுவிடுகின்றனர்.
கப்பல் எங்கும் குழப்பமான சத்தம் கேட்கிறது. மாலுமிகளும், மற்றவர்களும் கப்பல் மூழ்கி கொண்டிருப்பதன் பயங்கரத்தில் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கம் 1 – காட்சி 2
இப்போது காட்சி ஒரு தீவிற்கு மாறுகிறது. அந்தத் தீவின் கடற்கரையில் இருவர் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நடுத்தர வயதுடைய ஆணின் பெயர் பிராஸ்பரோ. மற்றொரு இளம்பெண் மிராண்டா. இருவரும் கடலில் அடித்த சூறாவளியில் சிக்கிய கப்பலப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகளில் இருந்து அவர்கள் கப்பல் மூழ்கியதைப் பார்த்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. மிராண்டா, தன்னுடைய தந்தையான பிராஸ்பரோவிடம் கப்பலில் இருந்தவர்களை எந்த ஆபத்தும் இல்லாமல் கரைக்குக் கொண்டு வந்து சேர்க்கும்படியாக கேட்கிறாள்.
பிராஸ்பரோவும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று கூறுகிறார். இந்த நேரத்தில், தங்களது வரலாற்றை மிராண்டா தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், தான் யார் என்பதை உணரவேண்டும் என்றும் கூறுகிறார். அதுவரை தன்னிடம் கடந்த காலத்தை பற்றிப் பேசாத தனது தந்தை பேச ஆரம்பிக்கவே, மிராண்டா ஆர்வமாக கேட்க ஆரம்பிக்கிறாள்.
கடந்த காலத்தில் தான் மிலன் நகரின் பிரபுவாக இருந்ததாகவும், தன்னுடைய அறிவாற்றலைக் கண்டு அனைவரும் வியந்ததாகவும் கூறுகிறார். ஆனால் காலப்போக்கில் அரசியலில் ஆர்வம் இழந்துவிட்டதாகவும், தன்னுடைய படிப்பில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்ததாகவும் கூறுகிறார். அதைப் பயன்படுத்திக்கொண்ட அவரது தம்பி ஆண்டோனியோ, நேபிள்ஸ் நகர அரசனுடன் கைகோர்த்துக் கொண்டு, பிராஸ்பரோவின் பிரபு பட்டத்தை அபகரிக்கச் சதி செய்தான்.
நேபிள்ஸ் அரசனான அலான்சோ தன்னைப் பிரபுவாக அங்கீகரிக்கவும், கப்பம் கட்டவும் ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய அண்ணனின் மீதே படை எடுத்தான். அதுவரை எந்த முன்னேற்பாடும் செய்யாமல் இருந்த பிராஸ்பரோ, தன்னுடைய குழந்தை மிராண்டாவுடன் மிலன் நகரில் இருந்து தப்பித்தார். அவருக்கு விசுவாசமாக இருந்த நகர மக்கள் சிலரின் துணையுடன் அவர் படகு ஒன்றில் தப்பித்து அவர்கள் அப்போது இருக்கும் தீவிற்கு பனிரெண்டு வருடங்களுக்கு முன் வந்து சேர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவர்களது எதிரிகளையும் காலம் அதே தீவிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று பிராஸ்பரோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மிராண்டாவிற்கு தூக்கம் கண்ணைச் சுழட்டிக் கொண்டு வந்தது.
மிராண்டா தூங்கியவுடன், பிராஸ்பரோவைப் பார்க்க அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் தேவதையான ஏரியல் அங்கே வந்தான். முந்தைய நாள் ஏற்பட்ட சூறாவளி குறித்து ஏரியல் பேச ஆரம்பித்தான். அவனது பேச்சில் இருந்து அந்த சூறாவளியை ஏற்படுத்தியதே ஏரியல்தான் என்று தெரிய வருகிறது. பிராஸ்பரோவின் உத்தரவின் பேரில்தான் பெரும் சூறாவளியாகவும், இடியாகவும், மின்னலாகவும், பெரும் மழையாகவும் பொழிந்ததாகவும் தெரிவிக்கிறான். மேலும், பிராஸ்பரோவின் உத்தரவின் பேரிலேயே, கப்பலை விட்டு அனைவரும் கடலில் குதித்த பின்னர், அனைவரையும் பாதுகாப்பாக தீவின் கரைகளில் ஒதுங்கச் செய்திருப்பதாகவும் சொன்னான். கப்பலின் கேப்டன் மற்றும் சில மாலுமிகளையும் கப்பலிலேயே தூங்க செய்து, கப்பலை மறைவாக தீவில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தான்.
ஏரியல் நல்ல விதத்தில் தன்னுடைய உத்தரவை நிறைவேற்றியிருப்பதாக பிராஸ்பரோ பாராட்டுகிறார். பதிலுக்கு, தன்னுடைய கடமைகளைக் குறையில்லாமல் செய்தால், தனக்கு விடுதலை தருவதாக பிராஸ்பரோ தெரிவித்திருப்பதை ஏரியல் நினைவுபடுத்துகிறான். இங்கே பிராஸ்பரோ, ஏரியலின் கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறார்.
வெகு காலத்திற்கு முன் அல்ஜிரியா நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சைக்கோரக்ஸ் என்ற சூனியக்காரி, அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள். அங்கே இருந்த ஏரியலை அவள் சிறை பிடித்தாள். இறந்த பிறகும் ஏரியலை அவள் விடுதலை செய்யவில்லை. இன்னமும் பல காலம் கழித்து பிராஸ்பரோ அங்கே வந்தபொழுதே, அவனை விடுதலை செய்து தனக்கு சேவகம் செய்ய வைத்துக் கொண்டார். மீண்டும் ஒருமுறை தன்னைக் கேள்வி கேட்டால், அவனை இன்னமும் பனிரெண்டு ஆண்டுகள் சிறையில் வைத்துவிடுவதாக பிராஸ்பரோ கோபமாக கூறினார். ஏரியல் அமைதியாக அதை ஒப்புக் கொண்டான்.
தன்னை ஒரு கடல்கன்னியாக மாற்றிக்கொண்டு, தன்னுடைய கண்களுக்கு தவிர வேறு யார் கண்களுக்கும் தெரியாமல் இருக்கவேண்டும் என்று ஏரியலிற்கு பிராஸ்பரோ ஆணையிட்டார்.
பிராஸ்பரோ தன்னுடைய மகள் மிராண்டாவை இப்போது எழுப்பினார். மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணராத அவள் எழுந்து, பிராஸ்பரோவின் கதை தன்னை தூங்கச் செய்துவிட்டதாகத் தெரிவித்தாள்.
அங்கம் 1 – காட்சி 2 (தொடர்ச்சி)
மிராண்டா முழுவதுமாக விழித்தவுடன், பிராஸ்பரோ தன்னுடைய இன்னுமொரு வேலையாள் காலிபனை அழைக்கிறார். சூனியக்கார கிழவி சைக்கோரக்சின் மகன்தான் காலிபன். காலிபன் வந்தவுடன் கோபமாகப் பேச ஆரம்பிக்கிறான். தனக்குச் சொந்தமான தீவிலேயே தன்னைச் சிறை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறான். பிராஸ்பரோ முதலில் தீவிற்கு வந்தபொழுது தானே தீவைச் சுற்றிக்காட்டியதாகத் தெரிவித்தான். பதிலுக்கு, தான் அவனுக்கு பலவற்றையும் கற்றுக் கொடுத்திருப்பதை நினைவுபடுத்திய பிராஸ்பரோ, காலிபன் நன்றியில்லாமல் இருப்பதாகவும் கூறி, அவனைத் தன்னுடைய அடிமை என்றும் கூறினார். காலிபன் காட்டுமிராண்டியாக இருப்பதால், அவனால் மனிதர்கள் இடையே வாழமுடியாது என்றும் கூறினார். பிராஸ்பரோ சொல்லிக்கொடுத்த படியே தான் வாழ்வதாக காலிபன் பதிலுக்குத் தெரிவித்தான். எரிக்க விறகு பொறுக்கிவிட்டு வரும்படியாக பிராஸ்பரோ அவனை அனுப்பிவிட்டார்.
அப்போது ஏரியல், யார் கண்ணிற்கும் தெரியாதவாறு, பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், பெர்டினாண்டை அழைத்துக் கொண்டு வந்தான். அதுவரை பிராஸ்பரோவையும் காலிபனையும் தவிர வேறு மனிதர்களைப் பார்த்திராத மிராண்டா, பெர்டினாண்டைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறாள். பெர்டினாண்டும் அப்படியே காதல் கொள்கிறான். தன்னை நேபிள்ஸ் நகரின் இளவரசன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசிப்பதை அறிந்தாலும், இவ்வளவு எளிதாக அவர்கள் காதல்வசப்படக் கூடாது என்று எண்ணிய பிராஸ்பரோ, பெர்டினாண்ட் பொய் சொல்வதாகக் கூறி, தன்னுடைய மந்திரத்தால் அவனைச் சிறைபிடித்தான். மிராண்டா அவனுக்காக வாதிட முயன்றாலும், அவளுக்கு மனிதர்களைப் பற்றி எதுவும் தெரியாது என்று பிராஸ்பரோ அவளை அடக்கிவிடுகிறார். பெர்டினாண்ட்டை அவனது சிறைக்கு அனுப்பிவிட்டு, ஏரியலிற்கு இன்னுமொரு ரகசிய வேலை கொடுத்து அனுப்பிவிடுகிறார்.
(தொடரும்)
படம்: மூழ்கும் கப்பலைப் பார்க்கும் மிராண்டா – ஜான் வாட்டர்ஹவுஸ்