Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #6 – வின்ட்சரின் மனைவிகள் – 1

ஷேக்ஸ்பியரின் உலகம் #6 – வின்ட்சரின் மனைவிகள் – 1

வின்ட்சரின் மனைவிகள்

அறிமுகம்

ஷேக்ஸ்பியர் பிறந்த வருடத்தில் இருந்து அடுத்த 40 வருடங்களுக்கு இங்கிலாந்து அரசியாக முதலாம் எலிசபெத் இருந்து வந்தார். இது இங்கிலாந்து நாட்டின் பொற்காலத்தின் ஆரம்ப நாட்களாகக் கருதப்படுகிறது.

முதலாம் எலிசபெத்தின் தந்தை எட்டாம் ஹென்றியின் ஆட்சி காலமும், அதைத் தொடர்ந்த எலிசபெத்தின் சகோதரி மேரியின் ஆட்சி காலமும் இங்கிலாந்தில் மதக்கலவரங்களால் ரத்த ஆறு ஓடிய காலம். தனக்கு விவாகரத்து தர மறுத்த காரணத்திற்காக எட்டாம் ஹென்றி ரோம் கத்தோலிக்கச் சபையில் இருந்து விலகி புதிதாக ஆங்கிலிகன் சபை ஒன்றை உருவாக்கி, இங்கிலாந்து முழுவதிலுமள்ள கத்தோலிக்கர்களைக் கடுமையாக ஒடுக்க ஆரம்பித்தார். கத்தோலிக்கச் சபையைவிட்டு வெளியேறாதவர்கள் பொது இடங்களில் வைத்து கொலை செய்யப்பட்டார்கள்.

அவருக்குப் பிறகு ஆறாம் எட்வார்ட் அதே கொள்கையைத் தொடர்ந்தார். சிறுவயதில் மரணமடைந்த அவரைத் தொடர்ந்து, ஹென்றியின் இன்னொரு மகளான மேரி பட்டத்திற்கு வந்தார். கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டிருந்த மேரி, அரசுக் கொள்கையை மீண்டும் கத்தோலிக்கத்திற்கு ஆதரவாக மாற்ற முயன்றார். மீண்டும் ரத்த ஆறு ஓடியது. அவரும் சிறுவயதிலேயே குழந்தைப்பேற்றின் போது இறந்துவிட, எலிசபெத் மகாராணியானார்.

மதத்தினால் பிளவுண்டு கிடந்த நாட்டை ஆற்றுப்படுத்தும் அரசியாகவே எலிசபெத் விளங்கினார். இங்கிலாந்து பின்னாளில் எட்டிய உயரங்களுக்கு அவர் காலம் அடித்தளமிட்டுக் கொடுத்தது. அதுவரை மக்கள் காணாத அமைதியை அவர் நாட்டிற்குக் கொண்டு வந்தார். ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளோடு நிலவிய போர் நிலையை முடிவிற்குக் கொண்டு வந்து, மக்களை அமைதியாக வாழ வழி செய்தார்.

இத்தகைய சூழலிலேயே ஷேக்ஸ்பியரின் ஆரம்பகால நாட்கள் கழிந்தன. நாட்டின் அமைதியான சூழலும், வளர்ந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்கமும் அவரது கலைக்குத் தேவையான அங்கீகாரத்தை அவரது காலத்திலேயே பெற்றுத் தந்தது. முன்பே கண்டது போல, அவரது நாடகக்கலை அவரைப் போதுமான அளவு செல்வத்தோடு வைத்திருந்தது.

அவரது நாடகங்களுக்கு அரசியின் ஆதரவு இருந்ததா? இந்தக் கேள்விக்குப் பதில் ஆம் என்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். ஷேக்ஸ்பியர் அவரது காலத்திலேயே மிகவும் புகழ் பெற்றிருந்தவர். அவரது நாடகங்கள் இங்கிலாந்து முழுவதும் புகழ்பெற்று இருந்தன. தன்னுடைய நாட்டின் அரசி என்ற நிலையில் அவர் எலிசபெத்தை அறிந்தே இருந்தார். அவரது நாடகங்களில் அவர் வாழ்ந்த காலம் பற்றிய சில குறிப்புக்கள் இருக்கவே செய்கின்றன.

அரசி எலிசபெத்தின் அவையில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் நடத்தப்பட்டன என்பதற்கான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அது போலவே அரசியும் அரங்கில் வந்து நாடகம் பார்த்ததற்கான தரவுகளும் இருக்கின்றன. குறிப்பாக ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களை அவர் விரும்பிப் பார்த்திருக்கலாம் என்று தெரிகிறது. அப்படிப்பட்ட வரலாற்று நாடகமான நான்காம் ஹென்றியைப் பார்த்தபோது, அதில் வரும் நகைச்சுவைக் கதாபாத்திரமான பால்ஸ்டாப்பை கதாநாயகனாகக் கொண்டு ஒரு நாடகம் எழுத்தும்படியாக ஷேக்ஸ்பியரைக் கேட்டுக் கொண்டாராம். அதன் காரணமாகவே ஷேக்ஸ்பியர் ‘வின்ட்சரின் மனைவிகள்’ என்ற இந்த நாடகத்தை எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது.

இதில் உண்மை எவ்வளவு என்று நமக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால், நான்காம் ஹென்றியில் பால்ஸ்டாப் என்ற கற்பனை கதாபாத்திரம், நகைச்சுவை கோமாளியாக வருவதும், அவனையே கதாநாயகனாகக் கொண்டு இந்த நாடகம் எழுதப்பட்டிருப்பதும் உண்மையே. நாடகத்தைப் பற்றி மேலும் ஆராய்வதற்கு முன், நாடக சுருக்கத்தை வாசித்துவிடலாம்.

அங்கம் 1 – காட்சி 1,2

நீதிபதி ஷாலோ, சிலண்டர், சர் எவன் ஆகிய மூவரும் வின்ட்சர் நகரின் தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிலண்டருக்கு, ஆன் பேஜ் என்ற பெண்ணைத் திருமணத்திற்குக் கேட்பதற்காக அவளது வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். வழியில் அவர்கள் பால்ஸ்டாப்பை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோபமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இப்போது பேஜின் வீட்டை அடைகிறார்கள். உள்ளே நுழையும் போதே, வீட்டில் இருக்கும் பேஜ் அவர்கள் தனக்குக் கொடுத்திருக்கும் இளம் மான் கறிக்கு நன்றி தெரிவிக்கிறார். பால்ஸ்டாப் அங்கே இருக்கிறாரா என்று ஷாலோ கேட்கிறார். அங்கேதான் இருப்பதாகப் பேஜ் தெரிவிக்கிறார்.

பால்ஸ்டாப் தன்னுடைய ஆட்களான பார்டோல்ப், நிம், பிஸ்டலுடன் உள்ளே வருகிறார். பால்ஸ்டாப் தன்னுடைய ஆட்களை அடித்துவிட்டு, தன்னுடைய மான் ஒன்றைக் கொன்றுவிட்டதாக நீதிபதி ஷாலோ குற்றம் சாட்டுகிறார். பால்ஸ்டாப் அதை ஒப்புக் கொள்கிறார். தன்னையும் பால்ஸ்டாப்பின் ஆட்கள் அடித்துவிட்டதாக சிலண்டர் கூறுகிறார். தன்னுடைய பணப்பையையும் அவர்கள் திருடிவிட்டதாகச் சொல்கிறார். பால்ஸ்டாப்பின் ஆட்கள் அதை மறுக்கிறார்கள். சிலண்டர் அதிகமாகக் குடித்திருந்ததால் அவருக்கு எதுவும் நினைவில் இல்லை என்கிறார்கள்.

ஆன் பேஜ் அனைவர்க்கும் மது வழங்குகிறாள். பேஜ் அனைவரையும் வீட்டிற்குள் அழைக்கிறார். சிலண்டரைத் தவிர மற்றவர்கள் வீட்டிற்குள் செல்கிறார்கள். சிலண்டர் தன்னுடைய கவிதை நூலைக் காணாமல் தேடுகிறான். அவனது வேலையாள் சிம்பிலும் தேடுகிறான். அப்போது ஷாலோவும், எவன்சும் வெளியே வருகிறார்கள். ஒரு மாதிரியாக ஆன் பேஜை சிலண்டருக்குப் பெண் கேட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

அப்போது அங்கே வரும் ஆன் அனைவரையும் உணவருந்த உள்ளே வருமாறு அழைக்கிறாள். சிலண்டரைத் தவிர அனைவரும் உள்ளே செல்கிறார்கள். ஆன் அவனையும் உள்ளே வர அழைக்கிறாள். ஆனால் சிலண்டர் அவளுடன் பேச முயலுகிறான். அதற்குள் அவளது தந்தை பேஜ் வந்து அவனை வற்புறுத்தி உள்ளே அழைத்துச் செல்கிறார்.

உணவருந்திவிட்டு வெளிய வரும் எவன்ஸ், வேலையாள் சிம்பிலிடம் கடிதம் ஒன்றைக் கொடுக்கிறார். அதைக் குயிக்லி என்ற வேலைக்காரப்பெண்ணிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். சிலண்டரைத் திருமணம் செய்து கொள்ள ஆன் பேஜிடம் வற்புறுத்த வேண்டும் என்று அதில் எழுதியிருக்கிறார்.

அங்கம் 1 – காட்சி 3,4

பால்ஸ்டாப் தன்னுடைய ஆட்களான பார்டோல்ப், நிம், பிஸ்டலுடன் மது விடுதி ஒன்றில் நுழைகிறார். அங்கே பார்டோல்ப் வேலை செய்வதற்குச் சம்பளமாகத் தன்னை அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

பார்டோல்ப் சென்றவுடன், பால்ஸ்டாப் தன்னுடைய திட்டத்தை நிம் மற்றும் பிஸ்டலிற்குத் தெரிவிக்கிறார். தான் திருமதி போர்டையும் திருமதி பேஜையும் மயக்கப் போவதாகத் தெரிவிக்கிறார். அவர்கள் இருவரும் தங்களது கணவரின் பணத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்ப்பு ஏற்படுத்துவதன் மூலம், அந்தப் பணத்தை அடையலாம் என்று சொல்கிறார். அதற்காக இரண்டு கடிதங்களை எழுதியிருப்பதாகவும், அவற்றை அவர்கள் அந்தப் பெண்களிடம் கொடுக்கவேண்டும் என்றும் சொல்கிறார்.

நிம், பிஸ்டல் இருவரும் மறுத்து விடுகிறார்கள். தான் வேறு யாரையாவது பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு பால்ஸ்டாப் அங்கிருந்து வெளியேறுகிறார். நிம், பிஸ்டல் இருவரும் பால்ஸ்டாப்பின் திட்டத்தைப் பற்றிப் பேசிவிட்டு, அதை அந்தப் பெண்களின் கணவர்களிடம் தெரிவிப்பது என்று முடிவு செய்கிறார்கள்.

சிலண்டரின் வேலையாள் சிம்பிள், குயிக்லியிடம் பேசிக் கொண்டிருக்கிறான். குயிக்லி மருத்துவர் கயசிடம் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் வந்து விடுகிறார். ஆன் பேஜை சிலண்டர் திருமணம் செய்து கொள்ளக் குயிக்லி உதவப் போவதாக அவரிடம் தெரிவிக்கவே, அவர் கோபம் கொள்கிறார். தானும் ஆன் பேஜைத் திருமணம் செய்ய விரும்புவதாகத் தெரிவிக்கிறார். அவரும் ஒரு கடிதம் எழுதி, அதைச் சிம்பிலிடம் கொடுக்கிறார். எவன்ஸைத் தன்னுடன் சண்டையிட அழைத்திருப்பதாகத் தெரிவிக்கிறார். குயிக்லி, ஆன் பேஜ் அவரைத்தான் காதலிப்பதாகத் தெரிவிக்கிறாள். அவரும் வெளியே கிளம்பிச் சென்றுவிடுகிறார்.

இப்போது பென்டன் வருகிறான். தானும் ஆன் பேஜை விரும்புவதாகக் குயிக்லியிடம் தெரிவிக்கிறான். அவளை அன்று சந்திக்கப் போவதாகவும் தெரிவிக்கிறான்.

அவன் சென்றவுடன், தனக்கு ஆன் பேஜின் மனது தெரியும் என்றும், அவள் மூவரையும் விரும்பவில்லை என்றும் குயிக்லி சொல்கிறாள்.

அங்கம் 2 – காட்சி 1

பால்ஸ்டாப்பின் கடிதத்தைத் திருமதி பேஜ் வாசித்துக் கொண்டிருக்கிறாள். தன்னுடன் மதுவருந்தி, மகிழ்வாக இருக்குமாறு பால்ஸ்டாப் எழுதியிருப்பது அவளுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. முன்பின் தெரியாத அவன் எப்படித் தனக்குக் கடிதத்தை எழுதினான் என்று யோசிக்கிறாள். அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறாள்.

அப்போது திருமதி போர்டும் உள்ளே நுழைகிறாள். இருவரும் தங்களுக்கு வந்திருக்கும் கடிதங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஒரே கடிதத்தை இருவருக்கும் எழுதியிருப்பதை உணருகிறார்கள். மற்ற பெண்களுக்கும் அவன் எழுதியிருக்க வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். அவனுடன் பழகுவது போல நடித்து. அவனது குதிரையை அடகு வைக்கச் செய்து ஏமாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். தங்களது கணவர்கள் கடிதத்தைப் பார்க்காமல் இருப்பது நல்லது என்றும் நினைக்கிறார்கள்.

அப்போது அவர்களது கணவர்கள் நிம் மற்றும் பிஸ்டலுடன் உள்ளே நுழைகிறார்கள். பெண்கள் இருவரும் வீட்டின் உள்ளே செல்கிறார்கள். பிஸ்டலும் நிம்மும் பால்ஸ்டாப்பின் திட்டத்தைப் பற்றித் தெரிவிக்கிறார்கள்.

அப்போது குயிக்லி வருகிறாள். அவளையும் உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். நிம்மும் பிஸ்டலும் கிளம்புகிறார்கள். போர்டும், பேஜும் உண்மையிலேயே பால்ஸ்டாப் தங்களது மனைவிகளை மயக்க போகிறானா என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேஜ் இதை நம்பவில்லை என்றாலும், தன்னுடைய மனைவி பால்ஸ்டாப்புடன் பேசுவதைத் தடை செய்யப் போவதில்லை என்கிறார். போர்ட் தன்னுடைய மனைவியை நம்பவில்லை என்றும், அவளைப் பால்ஸ்டாப் இருக்கும் பக்கமே போக விடப்போவதில்லை என்றும் தெரிவிக்கிறார்.

ஷாலோவும் மதுவிடுதி உரிமையாளரும் உள்ளே வருகிறார்கள். அன்று எவன்சிற்கும், மருத்துவர் கயசிற்கும் சண்டை நடக்கப் போவதாகவும், அதைக் காண வர சொல்லி அழைக்கவே வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். மதுக்கடை உரிமையாளருடன் பேசும் போர்ட், தன்னைப் பால்ஸ்டாப்பிடம் அறிமுகப்படுத்த கேட்கிறார். அதற்குப் பணம் தருவதாகவும் தெரிவிக்கிறார். அவரும் ஒப்புக் கொள்கிறார். போர்டை தவிர மற்றவர்கள் வெளியேறுகிறார்கள். தன்னுடைய மனைவி குற்றமற்றவளா என்று தெரிந்து கொள்ளவும், பால்ஸ்டாப் எவ்வளவு தூரம் தன் மனைவியை மயக்கியிருக்கிறான் என்று தெரிந்து கொள்ளவும் அவனுக்கு அருகில் இருப்பது உதவும் என்றும் சொல்கிறார்.

அங்கம் 2 – காட்சி 2,3

மதுவிடுதியில் பால்ஸ்டாப் தான் இனி பிஸ்டலுக்குப் பணம் தரப்போவதில்லை என்று கோபமாகப் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கே குயிக்லி வருகிறாள். பால்ஸ்டாப்பைத் தனியே அழைத்துச் சென்று பேசுகிறாள்.

திருமதி போர்ட் அவனை மறுநாள் காலை 10 முதல் 11 மணிக்குள் அவளது வீட்டிற்கு வரச்சொல்லி இருப்பதாகத் தெரிவிக்கிறாள். அவளது கணவன் அந்த நேரம் அங்கே இருக்க மாட்டான் என்றும் தெரிவிக்கிறாள். திருமதி பேஜின் கணவன் வெளியே செல்வதில்லை என்பதால், அவள் கடிதம் கொடுத்திருப்பதாகவும், அவளது கணவன் வெளியே செல்லும் நாளில் சொல்லி அனுப்புவதாகச் சொல்லியிருப்பதாகவும் தெரிவிக்கிறாள். தெரிவித்துவிட்டு குயிக்லி வெளியேறுகிறாள்.

பார்டோல்ப், புரூக் என்ற மனிதனோடு உள்ளே நுழைகிறான். போர்ட்தான் மாறுவேடத்தில் புரூக் என்ற பெயரில் வந்திருக்கிறார். திருமதி போர்டைக் காதலிக்க உதவினால் பணம் தருவதாக புரூக், பால்ஸ்டாப்பிடம் தெரிவிக்கிறான். ஆனால் அவள் பாதை தவறாதவளா என்று தெரியவில்லை என்று சொல்லி, பெண்களிடம் பால்ஸ்டாப்பிற்கு இருக்கும் செல்வாக்கைப் புகழ்ந்து பேசுகிறான். அவள் பால்ஸ்டாப்பிடம் மயங்கி விட்டால், தன்னையும் மறுக்க முடியாது என்று தெரிவிக்கிறான்.

புரூக்கின் பணத்தை வாங்கிக் கொண்ட பால்ஸ்டாப், தான் மறுநாள் திருமதி போர்டைச் சந்திக்கவிருப்பதைத் தெரிவிக்கிறான். மறுநாள் வந்தால் என்ன நடந்தது என்று தெரிவிப்பதாகவும் சொல்கிறான். திருமதி போர்டின் கணவனைப் பார்த்திருக்கிறானா என்று புரூக் கேட்கிறான். பால்ஸ்டாப் பார்த்ததில்லை என்று தெரிவித்துவிட்டு வெளியே செல்கிறான். தனிமையில் புரூக் என்ற போர்ட், தன்னுடைய மனைவியின் துரோகத்தை எண்ணி கோபமாகப் பேசுகிறான். மறுநாள் அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்கப்போவதாகத் தெரிவிக்கிறான்.

அதே நேரத்தில் மருத்துவர் கயஸ் சண்டைக்கு எவன்ஸ் வருகைக்காகக் காத்திருக்கிறார். ஷாலோ, சிலண்டர், பேஜ் முதலியோரோடு மதுவிடுதி உரிமையாளரும் அங்கே வருகிறார்கள். ஆனால் எவன்ஸ் வரவில்லை. எவன்ஸ் ஒரு பாதிரியும்கூட என்பதால் அவர் சண்டைக்கு வராமலிருப்பதுதான் சரி என்கிறார் ஷாலோ. இருவரும் சண்டையிடாமல் இருப்பதுதான் சரி என்கிறார் ஷாலோ.

மதுவிடுதி உரிமையாளர், தனக்கு அப்போது ஆன் பேஜ் எங்கே இருக்கிறாள் என்று தெரியும் என்றும், கயஸை தான் அங்கே அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கிறார். கயசும் மகிழ்ச்சியாக அவருடன் செல்கிறார்.

(தொடரும்)

படம்: Anne Page Inviting Master Slender to Dinner, Royal Shakespeare Company Collection

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *