அறிமுகம்
மேற்கத்தியக் கலாசாரத்தில் கிரேக்கக் கலாச்சாரத்தின் பாதிப்பு இல்லாத இடங்களே இல்லை எனலாம். நாடக உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. கிரேக்க நாகரீகத்தில் நாடகங்களுக்கு என்று மிகப்பெரிய வரலாறும் பாரம்பரியமும் உண்டு. பல்வேறு கிரேக்க நகர அகழாய்வுகளில் 2500 வருடப் பழமையான நாடகமேடைகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அங்கே மேடையேற்றப்பட்ட கிரேக்க நாடகங்களும் ஓரளவிற்கு முழுமையாகவே நமக்குக் கிடைத்திருக்கின்றன. அந்த நாடகங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இன்றுவரை மேற்கில் மேடையேற்றப்படுகின்றன. கிரேக்க நாடக வடிவமும், அதன்மூலம் அறிமுகமான நாடக மேடைவிதிகளும் இன்றும் வெவ்வேறு விதங்களில் மேற்குலகில் பின்பற்றப்படுகிறது.
கிரேக்கர்கள் நாடகங்களை நகைச்சுவை, சோகம் மற்றும் நையாண்டி என்று மூன்று விதங்களாகப் பிரித்திருந்தார்கள். அதில் நகைச்சுவை நாடகங்களும் அவற்றை எழுதிய பெரும் புகழ்பெற்ற நாடகாசிரியர்களும் இன்றும் நமக்குப் பரிச்சியமாக இருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய பல கதாபாத்திரங்களும், கதை வடிவங்களும் பின் வந்த நாட்களில் பல விதங்களில் சிறிய மாறுதல்களோடு திரும்ப, திரும்ப எழுதப்பட்டிருக்கின்றன.
நகைச்சுவை நாடகங்களில் நாம் காணும் கடுமையான தந்தை, இளம் காதல் ஜோடிகள், புத்திசாலி வேலையாள் (அல்லது அடிமை), நல்ல மனதுடைய விபச்சாரிகள், தந்தை-மகன் உறவு, முன்னுரைகள், காமம் நிறைந்த கிழவர்கள், முதுகில் குத்தும் நண்பர்கள் போன்ற பொதுவான அம்சம் கொண்ட பாத்திரங்கள், கிரேக்க நகைச்சுவை நாடகங்களிலேயே முதலில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இன்றளவும் இவை மேற்கத்திய நகைச்சுவை நாடகங்களில் தொடருகின்றன.
கிரேக்க நாகரீகத்தின் இறுதி நாட்களில் எழுதப்பட்ட நாடகங்கள் புதிய நகைச்சுவை நாடகங்கள் எனப்படுகின்றன. கிரேக்கர்களின் கலாசாரத்தின் தொடர்ச்சியாகத் தங்களைக் கருதிக்கொண்ட ரோமானியர்களும் நாடகங்களைத் தங்களுடையதாக வரித்துக் கொண்டனர்.
அப்படியாகக் கிரேக்கப் புதிய நகைச்சுவை இயக்கத்தின் பிற்கால நாடகாசிரியர்களில் ஒருவர்தான் பிளாட்டஸ். கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவரது நாடகங்கள் பலவும் நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கின்றன. மேலே சொன்ன பல அம்சங்களும் நிறைந்த கிரேக்க நாடகங்களை அவர் ரோமானியப் பார்வையாளர்களுக்காக லத்தீன் மொழியில் மீண்டும் எழுதினார். அவரது பெரும்பாலான நாடகங்கள் கிரேக்க நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவையே. லத்தீன் மொழியில் நமக்குக் கிடைக்கும் பழமையான இலக்கியப் பிரதிகள் இவையே.
மேற்குலகில் ரோமானியர்களுக்குப் பின்னரான கலாசாரத் தொடர்ச்சியின் முன்னிற்பவர்களாகப் பல நாடுகளும் மக்களும் தங்களை நினைத்துக் கொண்டார்கள். அவர்களில் பதினாறாம் நூற்றாண்டின் இங்கிலாந்து முக்கியமானது. ஆங்கிலம் தாய்மொழியாக இருந்தாலும், கடந்த நூற்றாண்டுவரை அங்கு பரவலாக லத்தீனும் சொல்லித் தரப்பட்டது. லத்தீன் இலக்கியப் பரிச்சியம் அனைவருக்கும், குறிப்பாக இலக்கியவாதிகளுக்குத் தேவையானதாகக் கருதப்பட்டது.
ஷேக்ஸ்பியர் தன்னையும் இத்தகைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக எண்ணியிருந்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. எப்படியாகினும், அவரது நாடகங்கள் உறுதியாக இந்தக் கலாசாரக் கண்ணியில் முக்கியமான தொடர்ச்சிதான் என்பதில் சந்தேகமில்லை.
பிளாட்டசின் கிரேக்கத்தில் இருந்து லத்தீன் மொழிக்கு மாற்றப்பட்ட நாடகங்களில் ஒன்று ‘மெனக்மஸ் சகோதரர்கள்’ ஆகும். அவரது சிறந்த நாடகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இரட்டையர்களான சகோதரர்களைப் பற்றியும், அவர்களைத் தவறாக அடையாளம் கண்டுகொள்வதால் ஏற்படும் குழப்பமே நாடகத்தின் மையம். அதனால் ஏற்படும் நிகழ்வுகள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருக்கும்.
ஷேக்ஸ்பியர் தன்னுடைய ‘வேடிக்கையான தவறுகள்’ நாடகத்தை பிளாட்டசின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதியிருக்கிறார். ஆனால், ஷேக்ஸ்பியர் இந்தக் கதையில் வெகுவாக மாற்றம்செய்து, நிகழ்வுகளை இன்னமும் நகைச்சுவையாக எடுத்துச் செல்கிறார்.
ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதில் நாம் நாடக நிகழ்வுகளை வேகமாக நகர்த்துவது, பாத்திரங்களின் வடிவமைப்பு, நாடக மேடையை முழுவதுமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது என எல்லாவிதங்களிலும் ஷேக்ஸ்பியரின் மேதைமையைக் காண்கிறோம். கதையின் கரு பிளாட்டசுடையதாக இருந்தாலும், நாடகத்தின் வடிவம், எழுத்து என எல்லா விதங்களிலும் ஷேக்ஸ்பியர் மூலத்தை விடப் பல மடங்கு அருமையாக மாற்றிவிடுகிறார்.
நாடகத்தைப் பற்றி நாம் மேலும் பேசுவதற்கு முன், நாடகத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம்.
அங்கம் 1 – காட்சி 1
எபேசஸ் நகரத்தின் தெரு ஒன்றில் நகரப் பிரபுவான சொலினஸ், ஏகியன் என்ற வணிகனை இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறார். ஏகியன் சிரகூஸ் நகரைச் சேர்ந்தவன். எபேசஸ் நகரத்திற்கும், சிரகூஸிற்கும் இடையில் வணிகத்தின்பொருட்டுப் பெரும் பகை நிலவி வந்தது. எனவே, எபேசஸிற்கு வரும் சிரகூஸ் நகர வணிகர் எவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டு வந்தது. அதற்காகவே சொலினஸ், ஏகியனை அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
மரணத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், ஆயிரம் மார்க் பணம் அபராதம் கட்டவேண்டும். அதுவும் ஏகியனிடம் இல்லை. எனவே அவன் தன்னுடைய விதியை ஏற்றுக்கொண்டதுபோல இருந்தான். இறந்துவிடுவது தன்னுடைய துயரங்களில் இருந்து தனக்கு விடுதலை அளித்து விடும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். துயரம் என்ற வார்த்தையைக் கேட்ட சொலினஸ் பிரபு அவனிடம் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவனும் தன்னுடைய கதையைக் கூறுகிறான்.
சிரகூஸில் பிறந்த ஏகியன், அருகில் இருந்த ஏபிடாம்நியம் நகருடன் வணிகம் செய்து மிகுந்த செல்வத்துடன் இருந்தான். அவனுடைய மனைவி கர்ப்பமாக இருந்தபொழுது, ஏபிடாம்நியமில் இருந்த அவனது வணிகப் பிரதிநிதி இறந்துவிடவே, மனைவியையும் அழைத்துக்கொண்டு அவன் ஏபிடாம்நியம் நகருக்குச் சென்றான். அங்கே தங்கியிருந்த நாட்களில் அவனது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அதேநேரத்தில், அவர்கள் தங்கியிருந்த அதே விடுதியில் இருந்த ஏழை வேலைக்காரப் பெண்ணிற்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. தன்னுடைய பிள்ளைகளுக்கு அடிமை சேவகம் பார்க்க வேண்டி அந்தக் குழந்தைகளையும் ஏகியன் விலை கொடுத்து வாங்கினான்.
அவர்கள் மீண்டும் எபேசஸ் நகருக்குத் திரும்பும்பொழுது அந்தக் கப்பல் சூறாவளியில் சிக்கி உடைகிறது. வணிகன் தன்னுடைய குழந்தை ஒன்றையும், வேலைக்காரியின் குழந்தை ஒன்றையும் எடுத்துக் கொள்ளவே, அவனது மனைவியும் அதுபோலவே இரு குழந்தைகளை எடுத்துக்கொண்டாள். இந்தச் சமயத்தில் கப்பல் பாறையில் மோதி இரண்டாகப் பிளக்க, இருவரும் அவரவர் பகுதியில் பிரிந்துவிடுகிறார்கள்.
புயல் அடித்து ஓய்ந்த பின்னர், அந்த வழியே வந்த கொரிந்தியக் கப்பல் ஒன்று ஏகியனையும், அவனுடன் இருந்த இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியது. அவனது மனைவியும், அவளிடம் இருந்த இரண்டு குழந்தைகள் அந்த வழியே சென்ற மற்றொரு கப்பலால் காப்பாற்றப்பட்டனர் எனத் தெரியவந்தது. ஆனால் அந்தக் கப்பலை ஏகியனால் கண்டறிய முடியவில்லை.
ஏகியனிடம் வளர்ந்த மகன் பெரியவனானவுடன், தன்னுடைய அடிமையை அழைத்துக்கொண்டு தன்னுடைய சகோதரனையும் தாயையும் தேடிக் கிளம்பினான். ஏகியனும் அவனைப் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான். இப்படியே அவன் எபேசஸ் நகருக்கு வந்து சேர்ந்தான். தான் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தாலும், தன்னுடைய குடும்பத்தைக் கண்டுபிடிக்கும் ஆவலில் அவன் அங்கு வந்து சேர்ந்தான்.
இந்தக் கதையைக் கேட்ட சொலினஸ் பிரபு, ஏகியன் மீதான பரிதாபத்தால், அவனது அபராதத்தைக் கட்ட இன்னும் ஒருநாள் அவகாசம் கொடுத்தார். ஏகியனுக்குத் தனக்கு அந்நியமான அந்த நகரில் பணத்தைப் புரட்ட முடியாது என்று தெரிந்தாலும், உதவியைத் தேடி நகருக்குள் அலைய ஆரம்பித்தான்.
அங்கம் 1 – காட்சி 2
இந்த நேரத்தில் ஏகியனின் மகனான ஆண்டிபோலஸ் (இனி ஆண்டிபோலஸ்-சி என்று அழைப்போம்) எபேசஸ் நகருக்கு வந்து சேர்ந்தான். அவன் தன்னுடைய தாயையும் சகோதரனையும் தேடி அங்கு வந்திருந்தான். அவனுக்குத் தனது தந்தை அங்கே இருப்பது தெரியாது. ஆண்டிபோலஸ்-சியுடன் அவனது அடிமையான டிரோமியோவும் (இனி டிரோமியோ-சி) இருந்தான்.
ஆண்டிபோலஸ்-சியின் நண்பனான வணிகன் ஒருவன் நீ சிரகூஸ் நகரைச் சேர்ந்தவன் என்பதை வெளியே சொல்லாதே என அவனிடம் சொல்லி இருந்தான். எனவே ஆண்டிபோலஸ்-சியும் அப்படியே நடந்துகொள்வதாகத் தெரிவித்துவிட்டு, தன்னுடைய பணம் ஆயிரம் மார்க்கையும், பெட்டி படுக்கைகளையும் அடிமை டிரோமியோ-சியிடம் கொடுத்து, தான் தங்கப்போகும் செண்டார் விடுதிக்கு அனுப்பினான். தனிமையிலேயே அவன் தன்னுடைய தாயையும் சகோதரனையும் தேடி அலைந்துகொண்டிருந்தான். அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று வருந்திக்கொண்டிருந்தான்.
ஆனால், தொலைந்துபோன அவனுடைய சகோதரனான ஆண்டிபோலஸ்-இ, எபேசஸ் நகரில் மிகவும் வசதியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய அடிமையாக டிரோமியோ-இயும் உடன் இருந்தான். ஆண்டிபோலஸ்-இக்கு அட்ரியானா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தது. அத்துடன் அவன் சொலினஸ் பிரபுவிற்கு நெருக்கமானவனாகவும் இருந்தான்.
ஆண்டிபோலஸ்-சி யோசித்துக் கொண்டிருந்தபொழுது, டிரோமியோ-இ அங்கே வந்தான். ஆண்டிபோலஸ்-சியைத் தன்னுடைய முதலாளி என்று நினைத்த அவன், அவனிடம் சென்று மனைவி அட்ரினா காத்திருப்பதாகவும், உடனே வரச்சொன்னதாகவும் தெரிவித்தான். டிரோமியோ-இயை தன்னுடைய அடிமை என்று நினைத்த ஆண்டிபோலஸ்-சி, அவன் சொல்வது புரியாமல், அவனுடன் வாதம் செய்ய ஆரம்பித்தான். இறுதியில், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவன், டிரோமியோ-இயை அடித்துவிட்டான். உடனே டிரோமியோ-இ அங்கிருந்து ஓடினான். ஆண்டிபோலஸ்-சி தன்னுடைய அடிமையை எபேசஸ் நகர் பைத்தியமாக்கிவிட்டது நினைத்துக் கொண்டான். அத்தோடு தன்னுடைய பணமும், பெட்டி, படுக்கைகளும் என்ன ஆனதோ என்ற பயத்தில் விடுதியை நோக்கி சென்றான்.
அங்கம் 2 – காட்சி 1
ஆண்டிபோலஸ்-இயின் வீடு. அவனது மனைவி அட்ரியானாவும், அவளது சகோதரி லூசியானாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய கணவன் வருவதற்குத் தாமதமாகிறது என்று அட்ரியானா சொல்லிக்கொண்டிருக்கிறாள். அட்ரியானா தேவையில்லாமல் கவலைப்படுகிறாள் என்று லூசியானா சொல்கிறாள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே டிரோமியோ-இ அங்கே வருகிறான். தன்னுடைய முதலாளிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், தான் வீட்டிற்கு அழைத்தாலும், அவர் பணத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கிறான்.
தன் கணவனைப் பற்றித் தவறாகப் பேசியதால் அட்ரியானா கோபத்தில் அவனது கன்னத்தில் அறைகிறாள். அவனும் எதுவும் புரியாமல் அங்கிருந்து சென்று விடுகிறான். தன்னுடைய கணவனிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருக்க வேண்டும் என்றும், அதனாலேயே அவன் வரத் தாமதமாகிறது என்று அட்ரியானா நினைக்கிறாள்.
அங்கம் 2 – காட்சி 2
ஆண்டிபோலஸ்-சி தன்னுடைய விடுதிக்குச் சென்று பார்க்கிறான். அங்கே தன்னுடைய பணமும், பெட்டி படுக்கைகளும் பத்திரமாக இருப்பதைக் கண்டு குழப்பமடைகிறான். அப்படியே அங்கிருந்து நகருக்குள் சென்று, அலைந்து கொண்டிருக்கிறான். அப்போது அவனது அடிமையான டிரோமியோ-சியைக் காண்கிறான். ஆனால் டிரோமியோ-சிக்கு அங்கே நடந்தது எதுவும் தெரியாது. இதனால் அவன் தான் வீட்டைப் பற்றியும், மனைவியைப் பற்றியும் எதுவும் கூறவில்லை என தெரிவிக்கிறான். ஆண்டிபோலஸ்-சிக்கு அவன் பொய் சொல்வதாகக் கோபம் வருகிறது. ஆனால் டிரோமியோ-சி வேடிக்கையாகப் பேசி அவனைச் சரி செய்து விடுகிறான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அங்கே அட்ரியானாவும், லூசியானாவும் வருகிறார்கள். ஆண்டிபோலஸ்-சியைத் தன்னுடைய கணவன் என்று நினைக்கும் அட்ரியானா, அவன் தன்னை ஏமாற்றுவதாகவும், தன்னுடைய காதலை மறந்து விட்டதாகவும், அவர்களது திருமணத்தை மதிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டுகிறாள். ஆண்டிபோலஸ்-சி இன்னமும் குழம்பிப்போகிறான். தான் அவளைச் சந்தித்ததே இல்லை என்று சொல்கிறான். இதைக் கேட்டு அட்ரியானாவின் கோபம் இன்னமும் அதிகரிக்கிறது. அவனையும், அவனது அடிமையையும் வீட்டிற்குத் தரதரவென்று இழுத்துச் செல்லப்போவதாகக் கூறுகிறாள். குழப்பத்தில் இருந்தாலும், தெருவில் மேலும் சண்டையிட விரும்பாமல், ஆண்டிபோலஸ்-சி அவளுடன் ஆண்டிபோலஸ்-இயின் வீட்டிற்குக் கிளம்புகிறான். டிரோமியோ-சி கதவிற்கு அருகே காவல் இருக்கிறான்.
அங்கம் 3 – காட்சி 1
ஆண்டிபோலஸ்-சி உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, ஆண்டிபோலஸ்-இ தன்னுடைய அடிமை டிரோமியோ-இயுடன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறான். அவர்களுடன் தங்க ஆசாரியான ஏஞ்சலோவும், வணிகனான பல்தசாரும் வருகிறார்கள். இருவருடனும் பேசிக் கொண்டிருந்ததால் நேரமாகிவிட்டதை அவர்கள் தன்னுடைய மனைவிக்குத் தெரிவிக்கவேண்டும் என்று ஆண்டிபோலஸ்-இ சொல்லிக்கொண்டிருக்கிறான்.
வீட்டின் கதவைத் தட்டியவுடன், டிரோமியோ-சி கதவைத் திறக்க மறுக்கிறான். கோபமடைந்த ஆண்டிபோலஸ்-இ இன்னமும் வேகமாகக் கதவைத் தட்டவே, முதலில் வேலைக்காரி லூசியும், அடுத்து அட்ரியானாவும் வருகிறார்கள். ஆனால் ஆண்டிபோலஸ் உள்ளே உணவருந்திக்கொண்டிருப்பதால், வெளியே ஆண்டிபோலஸ் என்று சொல்பவன் எவனோ போக்கிரி என்று நினைத்து அவர்களும் கதவைத் திறக்க மறுத்து விடுகிறார்கள்.
கோபத்தில் ஆண்டிபோலஸ்-இ கதவை உடைக்க முயலுகிறான். அப்போது பல்தசார் அவனைத் தடுத்து, இதனால் அவர்களது குடும்பத்திற்குத்தான் அவமானம் என்றும், அவள் கதவைத் திறக்க மறுப்பதற்குச் சரியான காரணம் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறான். எனவே ஆண்டிபோலஸ்-இ அங்கிருந்து தனது நண்பர்களுடன் கோபமாகச் செல்கிறான். அன்றைய இரவு உணவை நடனக்காரியுடன் எடுத்துக் கொள்ளப்போவதாகத் தெரிவிக்கும் அவன், தன்னுடைய மனைவிக்காக ஏஞ்சலோவிடம் செய்யக்கொடுத்திருந்த தங்கச்சங்கிலியையும் கொண்டுவரச் சொல்கிறான். அதையும் நடனக்காரிக்கே கொடுக்கப்போவதாகத் தெரிவிக்கிறான்.
அங்கம் 3 – காட்சி 2
வீட்டிற்குள் லூசியானாவும், ஆண்டிபோலஸ்-சியும் தனியே இருக்கிறார்கள். தன்னுடைய சகோதரியின் கணவன் என்று எண்ணியபடி, லூசியானா அவனைத் திட்டிக்கொண்டிருக்கிறாள். தன்னுடைய சகோதரிக்குத் துரோகம் செய்வது என்று முடிவு செய்துவிட்டால், அதை மறைவாகவாவது அவன் செய்யலாம் என்று சொல்கிறாள். ஆனால், தான் அட்ரியானாவின் கணவன் இல்லை என்று சாதிக்கும் ஆண்டிபோலஸ்-சி, தான் லூசியானாவை விரும்புவதாகத் தெரிவிக்கிறான். இன்னமும் கோபம் கொள்ளும் அவள் தன்னுடைய சகோதரியைத் தேடிச் செல்கிறாள்.
அப்போது அடிமையான டிரோமியோ-சி, அவனது முதலாளியை வந்து சந்திக்கிறான். அவன் அவனிடம், அடுப்படியில் இருக்கும் சமையல்காரி நெல் தன்னை அவளது கணவன் என்று சொல்வதாகத் தெரிவிக்கிறான். அவள் பருமனாகவும் அவலட்சணமாகவும் பயங்கரமாகவும் இருப்பதாகச் சொல்லி, இருவரும் சிரிக்கிறார்கள். ஆண்டிபோலஸ்-சி அவர்கள் அந்த நகரில் இருந்து உடனே கிளம்ப வேண்டும் என்று சொல்லி, அவனை அடுத்த கப்பலில் இடம் இருக்கிறதா என்று விசாரிக்குமாறு துறைமுகத்திற்கு அனுப்புகிறான்.
தனிமையில், தான் லூசியானாவை விரும்பினாலும், இந்த மந்திரமும் மாயமும் நிறைந்த நகரில் இருக்க விரும்பவில்லை என்றும், அங்கே சூனியக்காரிகள்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்லிக் கொள்கிறான். அப்போது அங்கே வரும் ஏஞ்சலோ, ஆண்டிபோலஸ்-சியை மீண்டும் தவறாகப் புரிந்துகொண்டு, (ஆண்டிபோலஸ்-இ வாங்கி வரச்சொன்ன) தங்கச்சங்கிலியை அவனிடம் கொடுத்து விடுகிறான். பணத்தைப் பின்னர் வாங்கிக் கொள்வதாகவும் தெரிவிக்கிறான்.
(தொடரும்)
படம்: ‘The Comedy of Errors’ Act I, Scene 1 (Rescue of Aemilia from the Shipwreck) by Francis Wheatley.