Skip to content
Home » ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

ஷேக்ஸ்பியரின் உலகம் #12 – வெற்று ஆரவாரம் 1

Much Ado about Nothing

அறிமுகம்

மேற்குலகின் மறுமலர்ச்சிக் காலம் என்பது 15 அல்லது 16ஆம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அறிமுகம் ஷேக்ஸ்பியரை இன்னமும் சிறிது அருகே சென்று பார்க்க உதவும்.

கிபி 6ஆம் நூற்றாண்டில் மேற்கு ரோமானிய அரசு வீழ்ந்த பின்னரான காலம் இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. மேற்கத்திய உலகம் அதுவரை பெருமிதம் கொண்டிருந்த கலாசார, அறிவியல், சமூக முன்னேற்றங்கள் மறக்கப்பட்டு, மீண்டும் நாகரிகம் பின்னோக்கிச் சென்றிருந்தது. அரசும் அரசாங்கமும் இல்லாத நிலையில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, சண்டையிட்டு கொண்டும் பெண்களையும் உழைக்கும் வர்க்கத்தையும் அடிமைகளாக்கிக்கொண்டும் பிரபுத்துவ வர்க்கத்தினர் கொழுத்துக்கொண்டிருந்தனர். கலை, மொழி, பொருளாதாரம் எனப் பல வகைகளிலும் மேற்கத்திய உலகம் பின்தங்கியிருந்தது.

15 அல்லது 16ஆம் நூற்றாண்டு வரை நீடித்த இந்நிலை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளின் அரசுகள் நிலைபெற்ற பிறகு மாறத் தொடங்கியது. நாடுகளிடையே வர்த்தகம் பெருகியது. நாகரிகத்திலும் கலைகளிலும் சிறந்திருந்த இஸ்லாமிய, இந்திய, சீன நாடுகளுடனான தொடர்பும் இந்த நிலையை மெல்ல மாற்றியது. ஆனாலும் மாற்றங்கள் மெதுவாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன.

நிலவுரிமை இன்னமும் பரவலாக்கப்பட்டு நடுத்தர வர்க்கம் ஒன்று வளர்ந்து கொண்டிருந்தது. மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது. மேற்குலகம் உலகை தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வரும் பாதையில் செல்ல ஆரம்பித்திருந்தது.

ஆனால் மாற்றம் எதிர்ப்பையும் கொண்டு வரத்தான் செய்தது. குறிப்பாக, மத நிறுவனங்கள் மக்களின்மீதான தங்களது இறுக்கம் தளர்ந்து வருவதை விரும்பவில்லை. பெண்கள் பொதுவெளிக்கு வருவதும் அதுவரை இருந்த விழுமியங்கள் மாறி, அறிவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகம் ஒன்று உருவாவதும் மக்களிடையே அவநம்பிக்கையைத் தோற்றுவித்தது.

ஷேக்ஸ்பியர் இந்த மாற்றங்களை உற்சாகத்தோடு எதிர்கொண்ட முக்கியமான படைப்பாளி. அவரது நாடகங்களில் நாம் இதைக் காணலாம். அன்றைய விழுமியங்களை அவரது நாடகங்கள் பேசினாலும், மாறிக்கொண்டிருந்த உலகையும் அவர் பதிவு செய்யத் தயங்கவில்லை.

நவீன உலகின் புதிய மனிதனைக் கண்டறிய ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் உதவின. பழைய உலகின் ஒழுக்கம் சார்ந்த கருத்தாடல்களைக் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கின. ‘வெற்று ஆரவாரம்’ என்னும் இந்த நகைச்சுவை நாடகமும் அதுபோலவே பல கேள்விகளையும் கேலிகளையும் உள்ளடக்கி இருக்கிறது.

இங்கே ஷேக்ஸ்பியர் காதல், திருமணம், ஆண் பெண் உறவு, துரோகம் எனப் பலவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார். நாடகத்தின் முதன்மை பாத்திரங்களான பெனெடிக் மற்றும் பியேட்ரிஸ் இருவரும் நாடகம் முழுவதும் கூர்மையாகவும் வேடிக்கையாகவும் சண்டையிட்டுக் கொண்டே காதலிக்கிறார்கள். இருவரும் தங்கள் அளவில் சமூக அமைப்பு சார்ந்த அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்துபவர்கள். அதன் விதிகளை மறுப்பதைத் தங்களுடைய கடமையாகக் கொண்டவர்கள். இருவரும் அப்படியே இருப்பதால், அவர்களிடையே நிகழும் மோதல்களும் காதலும்தான் நாடகமே. அத்துடன் ஓர் உபகதையும் சேர்ந்தே வருகிறது.

மேலும் நாடகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன், அதன் சுருக்கத்தைப் பார்த்துவிடுவோம்.

அங்கம் 1 – காட்சி 1

சிசிலியின் மெசினா நகரம். போரில் இருந்து திரும்பும் நண்பர்கள் சிலரை வரவேற்க, நகரின் செல்வந்தரான லியோனாடோ தயாராகிக் கொண்டிருக்கிறார். போரில் இருந்து திரும்பும் டான் பெட்ரோ சிசிலியின் பெரும் பிரபுக்களில் ஒருவர். அவருடன் போரில் வீரத்துடன் போரிட்ட கிளாடியோவும் திரும்புகிறான். லியோனாடோ இது குறித்துச் சொல்லும் போது, அவருடன் அவரது இளைய மகள் ஹீரோவும் அவளது ஒன்றுவிட்ட சகோதரி பியேட்ரிஸும் இருக்கிறார்கள். பீட்ரைஸ் அவரிடம் டான் பெட்ரோவின் படையில் இருந்த இன்னுமொரு வீரனைப் பற்றி விசாரிக்கிறாள். அவனது பெயர் பெனெடிக்.

பியேட்ரிஸ் அவனை வேடிக்கையாகக் கேலி செய்துகொண்டும் அவமானப்படுத்திக்கொண்டும் இருக்கிறாள். டான் பெட்ரோவிடம் இருந்து வந்திருந்த தூதன், பெனெடிக் நல்லவர் என்றும் மரியாதைக்குரிய மனிதர் என்றும் சொல்கிறான். அப்போது லியோனாடோ பியேட்ரிஸுக்கும் பெனெடிக்கிற்கும் இடையில் ‘கொண்டாட்டமான சண்டை’ நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் எப்போதெல்லாம் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் வேடிக்கையாகப் பேசி சண்டையிடுவது வழக்கம் என்றும் தெரிவிக்கிறார். டான் பெட்ரோ அப்போது தனது நண்பர்களுடன் அங்கே வந்து சேர்கிறார். அவருடன் கிளாடியோ, பெனெடிக் இருக்கிறார்கள். அவருடன் அவரது தந்தையின் அங்கீகரிக்கப்படாத மகனான டான் ஜானும் வந்திருக்கிறான். வெகுநாட்களாக வேறுபாட்டுடன் இருந்த அவர்கள் இருவரும் சமீபத்தில்தான் சமரசமாகி இருந்தார்கள்.

லியோனாடோவும் டான் பெட்ரோவும் தனியே பேசிக்கொண்டிருக்கும்போதே, பெனெடிக்கும் பியேட்ரிஸும் தங்களது வார்த்தைப் போரை தொடங்கி விடுகிறார்கள். ஒருவரையொருவர் மாறி, மாறி அழகு, அறிவு, குணம் என்று தாக்கிப் பேசுகிறார்கள். தான் இதுவரை எந்தப் பெண்ணையும் காதலித்ததில்லை என்றும், இனியும் காதலிக்கப் போவதில்லை என்றும் சொல்கிறான் லியோனாடோ. இதைக் கேட்டு உலகில் உள்ள பெண்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைவார்கள் என்கிறாள் பியேட்ரிஸ். இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கே வரும் டான் பெட்ரோ, லியோனாடோவின் அழைப்பின் பேரில் தான் அங்கே ஒரு மாதம் தங்கப் போவதாகத் தெரிவிக்கிறார்.

அனைவரும் அங்கிருந்து செல்கிறார்கள். பெனெடிக்கும் கிளாடியோவும் மட்டுமே இருக்கிறார்கள். தான் லியோனாடோவின் இளைய மகளான ஹீரோவின்மீது காதல் கொண்டுவிட்டதாகச் செல்லும் கிளாடியோ, அவளைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று பெனெடிக்கிடம் கேட்கிறான். பெனெடிக் விளையாட்டாக ஹீரோவை அழகற்றவள் என்று பேசுகிறான். அடங்கிப் போகும் கணவனாக முடிவு செய்துவிட்டதற்காகக் கிளாடியோவையும் கேலி செய்கிறான்.

அப்போது அங்கே தன்னுடைய நண்பர்களைத் தேடி டான் பெட்ரோ வருகிறார். அவரிடம் கிளாடியோவின் ரகசியத்தை பெனெடிக் தெரிவிக்கிறான். கிளாடியோ மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன் என்பதாலும் லியோனாடோ தன்னுடைய நண்பர் என்பதாலும் டான் பெட்ரோ ஒரு வேடிக்கை செய்ய நினைக்கிறார். அன்றிரவு நடக்கப்போகும் மாறுவேட நடன நிகழ்ச்சியில் டான் பெட்ரோ கிளாடியோ போன்று வேடமிட்டு ஹீரோவிடம் காதலைத் தெரிவிப்பது என்றும், அப்படியே அவளது தந்தையான லியோனாடோவிடம் அவர்களது காதலுக்கு ஒப்புதலைப் பெற்றுவிடுவது என்றும் சொல்கிறார். எனவே உற்சாகத்துடன் மூன்று நண்பர்களும் அன்றிரவு நடக்கப்போகும் நடன நிகழ்விற்குத் தயாராகிறார்கள்.

அங்கம் 1 – காட்சி 2,3

லியோனாடோவின் வீட்டில் அவர் தன்னுடைய மூத்த சகோதரர் அன்டோனியோவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அன்டோனியோ, தன்னுடைய வேலைக்காரன் ஒருவன் டான் பெட்ரோ, அவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதாகவும், அதில் டான் பெட்ரோ அன்றிரவு ஹீரோ மீதான தன்னுடைய காதலைத் தெரிவிக்கப் போவதாகவும் லியோனாடோவிடம் அதற்கு ஒப்புதல் வாங்கச் சொன்னதாகவும் சொல்கிறார். அன்டோனியோவின் வேலையாள் டான் பெட்ரோ சொன்னதைச் சரியாகக் கேட்கவில்லை. பின்பகுதியை மட்டுமே கேட்டிருக்கிறான். ஆனால் லியோனாடோ இதைக் கேட்டு உற்சாகமடையவில்லை. பல வதந்திகள் உலவுவதால், அன்டோனியோ சொன்னது நடக்கும்போது, அது குறித்து மகிழ்ச்சி கொள்வதாகத் தெரிவிக்கிறார். ஆனால் தன்னுடைய மகள் ஹீரோவிடம் இது குறித்துத் தெரிவிக்கப் போவதாகவும், அன்டோனியோ சொல்வது உண்மையாக இருந்தால், என்ன பதில் சொல்வது என்று அவள் யோசிக்க நேரம் இருக்கும் என்றும் சொல்கிறார்.

வீட்டின் இன்னொரு புறம் டான் ஜான் தன்னுடைய வேலையாள் கான்ராட்டிடம் பேசிக் கொண்டிருக்கிறான். ஏன் டான் ஜான் எப்போதும் கோபமாகவும் சோகமாகவும் இருக்கிறார் என்று கான்ராட் கேட்கிறான். தன்னால் மற்றவர்களுக்கு ஏற்றவாறு முகத்தை மாற்றிக்கொள்ள முடியாது என்றும், இயற்கையாகவே அவரது முகம் சோகமானதாகவே இருக்கும் என்றும் சொல்கிறார். டான் பெட்ரோ அவருடன் சமீபத்தில்தான் சமரசம் செய்திருப்பதால் அவருடன் அப்படியே தொடர நினைத்தால், டான் ஜான் இன்னமும் மகிழ்ச்சியை முகத்தில் காட்ட வேண்டும் என்று கான்ராட் கூறுகிறான். ஆனால், பணக்காரனும் வெற்றிகரமான பிரபுவுமான டான் பெட்ரோவின் தயவில் வாழவேண்டி இருப்பதை எண்ணி ஏற்கனவே எரிச்சலில் இருக்கும் டான் ஜான், கோபத்துடன் பதில் சொல்கிறான்.

அப்போது அங்கு வரும் அவனது இன்னொரு வேலையாளான போராசியோ, கிளாடியோவிற்கும் ஹீரோவிற்கும் திருமணம் நடக்கவிருப்பதாக அனைவரும் பேசிக் கொள்வதாகச் சொல்கிறான். அவனும் டான் பெட்ரோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் இவன் முழுவதுமாகக் கேட்டுக் கொண்டதால், டான் பெட்ரோவின் திட்டத்தை முழுவதுமாக டான் ஜானிடம் தெரிவிக்கிறான். ஏற்கனவே கிளாடியோவிற்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் டான் ஜானிற்கு வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. எனவே இந்தத் திட்டத்தைக் குழப்பி, கிளாடியோவின் வாழ்வைக் குழப்ப முடிவு செய்தான். அவனது வேலையாட்கள் இருவரும் அவனுக்கு உதவுவதாகத் தெரிவித்தார்கள்.

அங்கம் 2 – காட்சி 1

அன்று மாலை நடன நிகழ்ச்சி ஆரம்பமாக அனைவரும் காத்திருக்கும் நேரத்தில், பியேட்ரிஸும் ஹீரோவும் சரியான ஆண் யார் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசவே பேசாத டான் ஜானிருக்கும், எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் பெனெடிக்கிற்கும் இடையிலேயே அவன் இருக்கவேண்டும் என்று பேசிக் கொண்டே, பியேட்ரிஸ் எப்போதாவது திருமணம் செய்யும் எண்ணத்துடன் இருக்கிறாளா என்ற கேள்வியையும் எழுப்புகிறாள் ஹீரோ. தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று பியேட்ரிஸ் சொல்கிறாள்.

நடன நிகழ்வு நடக்கும் இடத்திற்கு அனைவரும் வருகிறார்கள். ஆண்கள் அனைவரும் முகமூடி அணிந்து கொள்கிறார்கள். நடனம் ஆரம்பிக்கிறது. அனைவரும் ஜோடியாக நடனமாடுகிறார்கள். வேலையாட்களும்கூட ஆடிக் கொண்டிருக்கிறார்கள். டான் பெட்ரோ, ஹீரோவுடன் ஒன்றாக நடனமாட ஆரம்பிக்கிறார். பியேட்ரிஸ் முகமூடி அணிந்த பெனெடிக்குடன் நடமாடுகிறாள். தன்னுடன் ஆடுவது பெனெடிக் என்று தெரிந்தோ தெரியாமலோ, நடனத்தின் போது பெனெடிக்கைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். தான் மிகவும் புத்திசாலி என்று அவன் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் உண்மையில் அவனுடன் பேசுவது அலுப்புத் தரக்கூடியது என்றும் சொல்கிறாள்.

மேடையில் இப்போது ஜோடிகள் மட்டுமே நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். டான் பெட்ரோ ஹீரோவுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதைக் காணும் டான் ஜான், கிளாடியோவைப் பொறாமையில் தள்ள முடிவு செய்கிறான். முகமூடி அணிந்திருக்கும் கிளாடியோவை பெனெடிக் என்று நினைத்துக் கொண்டு பேசுவது போல, அவனிடம் டான் பெட்ரோ தானே ஹீரோவைக் காதலித்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டதாகச் சொல்கிறான்.

அதை நம்பும் கிளாடியோ அங்கிருந்து கோபமாக வெளியேறுகிறான். அப்போது உண்மையான பெனெடிக் நுழைகிறான். அப்போது டான் பெட்ரோ, ஹீரோவுடனும் லியோனாடோவுடனும் நுழைந்து, தங்களது திட்டத்தின்படியே தான் கிளாடியோவிற்காக ஹீரோவைக் வென்றுவிட்டதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார். பெனெடிக் மகிழ்ந்தாலும் பீட்ரைஸ் அவனைப் பற்றிச் சொன்னவற்றை எண்ணி வருத்தத்துடன் இருக்கிறார். அப்போது பியேட்ரிஸ் கிளாடியோவுடன் உள்ளே நுழைகிறாள். பீட்ரைஸ் இருக்கும் இடத்தில் இருப்பதைவிடத் தன்னை எங்காவது மிகவும் கடுமையான இடத்திற்கு அனுப்பிவிடும்படி பெனெடிக் கேட்கிறான். ஆனால் டான் பெட்ரோ மறுத்துவிடுகிறார்.

டான் பெட்ரோ, கிளாடியோவிடம் அவனுக்கும் ஹீரோவிற்கும் இடையிலான திருமணம் குறித்துப் பேசுகிறார். கிளாடியோவிற்கு உண்மை புரிகிறது. அப்போது பியேட்ரிஸ் வேடிக்கையாகத் தனக்குத் திருமணம் நடக்கவே போவதில்லை என்கிறாள். டான் பெட்ரோ தானே அவளைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவிக்கிறார். அவரை விலை உயர்ந்த ஆடைகளோடு ஒப்பிடும் பியேட்ரிஸ், அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் என்றாலும், தினமும் அணிந்துகொள்ள முடியாத அளவிற்கு ஆடம்பரமும் விலையும் கொண்டவர் என்று தெரிவிக்கிறாள்.

லியோனாடோ, கிளாடியோவிடம் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். கிளாடியோ மறுநாளே திருமணத்திற்குத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறான். ஆனால் லியோனாடோ அன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து திங்கட்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார். நீண்ட இடைவேளை என்று கிளாடியோ வருந்தினாலும் டான் பெட்ரோ புதிதாகத் திட்டம் ஒன்றைக் கூறுகிறார். கிளாடியோவின் திருமணத்திற்குள் பெனெடிக்கும் பியேட்ரிஸும் சண்டையிடுவதை நிறுத்தச்செய்து, அவர்களை ஒருவர்மீது ஒருவர் காதல் கொள்ளச் செய்யவேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு லியோனாடோ, ஹீரோ, கிளாடியோ உதவ வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

(தொடரும்)

படம்:  ‘Much Ado About Nothing’ by Robert Alexander Hillingford (1825–1904) – Grundy Art Gallery

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *