Skip to content
Home » சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #8 – லீ – ஒரு பெருவிசையின் உருவாக்கக் காலம்

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #8 – லீ – ஒரு பெருவிசையின் உருவாக்கக் காலம்

In office, I read and analysed every speech of Harry’s. He had a way of penetrating the fog of propaganda and expressing with unique clarity the issues of our times and the way to tackle them. He was never wrong …”

— Margaret Thatcher, British Prime Minister, 1979-90

லீ-கேம்பிரிட்சில் உருவான விதம்

சிங்கப்பூரின் தந்தை என்றும், சிங்கப்பூரின் நவீனத்துவத்துக்கு அடிகோலிய சிற்பியுமான திரு. லீ க்வான் யூ, தகுதியால் ஒரு வழக்கறிஞர். இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி, நவீன இந்தியாவின் சிற்பியான நேரு போன்றவர்கள் போன்றே லீயும் ஒரு வழக்கறிஞர். இங்கிலாந்தின் கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். அந்தக் கல்வியில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவராக பதக்கம் வென்றவர். அவர் மட்டுமல்ல, அவரது வாழ்வில் இரண்டறக் கலந்த அவரது அருமைத் துணைவியார் சூ அவர்களும் அவரைப் போலவே இங்கிலாந்தில் கற்று, அவரைப் போலவே பதக்கம் வென்றவர். ஒரு பருவம் (ஆண்டு) வித்தியாசத்தில் அந்தப் பிற்காலத் தம்பதியர் கல்வியில் இந்தச் சாதனையைச் செய்தனர். கல்வி கற்பதற்காக என்று இங்கிலாந்து சென்ற லீ, வழக்கறிஞர் தேர்வில் சிறப்பாகத் தேர்ந்து சிங்கப்பூருக்குத் திரும்பியபோது, சிங்கப்பூர் அவருக்காக எதை வைத்திருந்தது என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

யப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் சரணடைந்து சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய பின்னர்தான் சிங்கப்பூரில் இருந்த மக்கள் தங்களின் சொந்த வாழ்வின் முன்னேற்றங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. எனவே மூன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மாணவன் லீ தனது மேற்கல்வியைத் தொடங்க 1946இல் இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கிறான்(ர்). அன்று தொடங்கிய அந்தப் பயணம், பின்னர் தென்கிழக்காசிய வரலாற்றின் பல இடங்களிலும் லீயின் சுவடுகளைப் பொன்னெழுத்துக்களில் விளம்பி வைத்திருக்கிறது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்…

இங்கிலாத்துக்குக் கல்விக்காகச் செல்லலாம் என்று முடிவு செய்த லீ, பிரிட்டானிகா என்ற ஒரு கப்பலின் மூலம் சென்றார். அந்தப் பயணம் தொடங்கியது லீயின் இருபத்து மூன்றாம் பிறந்த நாளான செப்டம்பர் 16, 1946இல். செப்டம்பர் 16 இல் தொடங்கிய கப்பற்பயணம், பதினேழு நாட்கள் கழித்து அக்டோபர் 3 அன்று லீயை இங்கிலாந்தின் லிவர்பூல் கொண்டு சேர்க்கிறது. இலண்டன் நகரின் பரபரப்பான இலண்டன் பொருளாதாரப் பள்ளியின் சட்டப்பிரிவில் இணைய விரும்பி அங்கு சென்றார் மாணவர் லீ.

எப்படியாயினும் கற்க…கசடற

லீ க்வான் யூ ஒரு மாணவராக இலண்டன் சென்றபோது, அவர் பல்கலையில் படிக்க முதலிலேயே விண்ணப்பத்திருக்கவில்லை. காரணம் எவரும் அறிந்தது. சிங்கப்பூரில் அந்தக் காலத்தில் இருந்த கொந்தளிப்பான நிலை. ஆனால் முன்னர் லீ சிங்கப்பூரின் முதல்நிலைப் பள்ளியான இராஃபில்சு பள்ளியில் கேம்பிரிட்சு பள்ளித் திட்டத்தில் முதல்நிலை மாணவராகத் தேர்ந்தவர். எனவே அவர் இலண்டன் பொருளாதாரப் பள்ளியின் சட்டத்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் அகெசு பாரியை (Hughes Parry) சென்று சந்திக்கிறார்.

அவரிடம் லீ தமது நிலையைச் சொன்னபோது, பரிவுடன் அதைப் புரிந்து கொண்ட பேராசிரியர், லீ’க்கு சட்டக் கல்விப் பிரிவில் இடம் அளிக்கிறார். இராஃபில்சு பள்ளியின் அமைதியான, ஆரவாரமற்ற கல்விச் சூழலுக்குப் பழக்கப்பட்டிருந்த லீக்கு, இலண்டன் பொருளாதாரப் பள்ளியின் துடிப்பான சூழல் தொடக்கத்தில் சிறிது வியப்பூட்டியிருக்கிறது. ஒரு பரபரப்பான தங்கும் விடுதியைப்போல, பல மாடிகளில் அமைந்திருந்த இலண்டன் பொருளாதாரப் பள்ளி அப்போது தோற்றமளித்தது என்று பதிவு செய்கிறார் லீ. அக்கல்லூரியில் வெவ்வேறு பாட வேளைகளுக்காக மாணவர்கள் அங்கும் இங்கும் சென்றவண்ணம் இருந்திருக்கிறார்கள். ஒரே நாளில் இலண்டன் பொருளாதாரப் பள்ளிக் கட்டடத்தில் ஒரு வகுப்பைக் கவனித்த பிறகு, அடுத்த வகுப்பிற்கு தெருவைத் தாண்டி இருந்த கிங்சு கல்லூரிக்குச் சென்று விட்டுப், பிறகு தரையடி இருப்பூர்தியைப் பிடித்து மூன்றாவது பாடவேளைக்கு இலண்டன் பல்கலைக் கல்லூரிக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று பதிவு செய்திருக்கிறார் லீ.

கல்லூரியில் தொழிலாளர் குழுமம், புதுமைக் குழுமம், பழைமைக் குழுமம், பொதுமைக் குழுமம் என்று பல நோக்குகளில் இயங்கி வந்த குழுமங்கள் இருந்திருக்கின்றன. அந்தந்தக் கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் அந்தந்தக் குழுமங்களில் இணைந்து கொள்வதும், பின்னாளைய தலைவர்கள் கூட இத்தகைய குழும அமைப்பிலிருந்து முகிழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது; இங்கிலாந்தில் கல்விமுறை எத்தகைய கள வாய்ப்புகளுடன் இருந்திருக்கிறது என்பதை இதனால் அறிந்து கொள்ள முடியும்.

லீயின் கல்லூரி நாட்களின் பகல் பொழுதுகள் பரபரப்பாகச் சென்றாலும் அவரது சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மாணவன் லீக்கு இருந்த இடர்கள் சுவையாரமானவை; நாம் அறிந்து புரிந்து கொள்ள வேண்டியவை.

இளந்தாரியின் தனிவாழ்க்கை இடர்கள்

இலண்டன் சென்ற முதல் நாளில் லீ’க்கு ஆப்பிரிக்க மாணவர்கள் சிலருடன் தங்க நேரிடுகிறது. முதன்முதலில் வெளியுலகைக் காணச் செல்லும் ஒரு ஆசிய மாணவனாக, ஆப்பிரிக்க மாணவர்களுடன் ஒரு பெரிய அறையைப் பகிர்ந்து கொண்டு தூங்க வேண்டிய தேவை நேர்ந்தது. அந்த மாணவர்களின் வேறுபாடான தோற்றம், உடல் மணம் போன்றவை தனக்கு ஒவ்வாமை உணர்வைத் தந்தது என்று நேர்மையாக ஒத்துக் கொள்கிறார் லீ. பின்னர் அங்குமிங்கும் அலைந்து திரிந்து தான் தங்குவதற்கு வாரம் 6 பவுண்டுகள் கொடுத்து ஒரு வாடகை அறையை ஏற்பாடு செய்து கொள்கிறார். மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்த ஒரு அழகிய தெருவில் இருந்த வீட்டில் மாடியில் அவருக்கு அந்தச் சிற்றறை கிடைத்தது; ஆனால் அங்கு ஒரு படுக்கையும், எரிவாயுவில் இயங்கும் ஒரு சிறிய அடுப்பும், குளியல் கழிவறைகளுக்கான தேவைகள் மட்டுமே இருந்தன.

குளிர் பதனப்பெட்டி போன்ற சமைத்து உண்ணுபவர்களுக்குத் தேவையான உபகரணங்கள், கருவிகள் அங்கு இல்லை. இதனால் ஒரு இளந்தாரிப் பையனாக துவைப்பது, தனக்குத் தேவையான உணவுப் பொருட்களை நேரத்தில் வாங்கி வைத்துக் கொள்வது போன்றவற்றில் மிகவும் சொதப்பினார் மாணவர் லீ. தவிர சமைக்கவும் தெரியவில்லை; பால் பொங்கியூற்றியது. வாங்கி வைத்த ஊன் கெட்டுப் போனது. தனக்கு வேண்டிய உணவை ருசியாகச் சமைத்துக் கொள்ளவும் அவருக்குத் தெரியவில்லை; சரியான உணவில்லாமல், பரபரப்பாகச் சென்ற கல்லூரியின் பகல்நேரத்துப் பாடவேளைகள் என்று அந்த நாட்கள் அவருக்கு மிகுந்த அயர்ச்சியூட்டின. முன்னாட்களில் குடும்பத்தினருடன் இருந்த லீக்கு அனைத்தும் கைக்கு வந்து கிடைத்தன; விரும்பிக் கேட்ட உணவு நல்ல ருசியில் சரியான நேரத்தில் கிடைத்தது; துணிகளைத் துவைத்து, சலவை செய்து யாராவது வைத்திருந்தார்கள்; காலணிகள் பளபளப்பாகச் சுத்தம் செய்யப்பட்டு இருந்தன. இவற்றையெல்லாம் தானே செய்து கொள்ள வேண்டியிருந்ததும், வாய்க்கும், வயிற்றுக்கும் நிறைவாக உணவும் ஏற்பாடு செய்து கொள்ள முடியாததும் மாணவன் லீக்கு மிகுந்த சோர்வை அளித்தன. என்ன செய்வது என்ற தவிப்பு வரத் தொடங்கியது.

வரவேற்ற கேம்பிரிட்சு

இலண்டன் பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர்களில் ஒருவரான கிளான்வில் வில்லியம்சு (Glanville L Williams) கேம்பிரிட்சு கல்லூரியில் படித்து முனைவரானவர் என்று அவரைப் பற்றிய விவரக் குறிப்பில் இருந்து அறிந்து கொண்டார் மாணவர் லீ. அவரிடம் சென்று கேம்பிரிட்சு வாழ்க்கை பற்றி விசாரித்தார். அந்தப் பல்கலை நகரின் வெளியில் அமைதியான கிராமம் போன்ற பகுதியில் அமைந்தது என்றும், பேராசிரியரும் மற்றவர்களும் மிதிவண்டிகளில் கல்லூரிக்கு வருவார்கள் என்றும் கிளான்வில் அறிந்த விவரங்கள், கேம்பிரிட்சில் படித்தால் தனது கல்லூரி வாழ்வு ஏகாந்தமாக இருக்கும் என்ற எண்ணத்தை லீ’க்குக் கொடுத்தது. நவம்பர் 1946 ஆண்டு, கேம்பிரிட்சு பல்கலைக்குச் சென்று பார்க்கலாம் என்று சென்ற லீக்கு, அங்கு சிங்கப்பூரில் இராஃபில்சு பள்ளியில் படித்த சிசில் வோங் என்ற சிங்கப்பூர் சீன மாணவனைப் பார்த்ததும் உற்சாகம் பிறந்தது. சிசில் வோங் அளித்த விவரங்களை வைத்துக் கொண்டு, கேம்பிரிட்சு கல்லூரியின் முதல்வரான பிட்சுவில்லியம் தாட்சரிடம் சென்றார் லீ. அவர் முதல் உலகப் போரில் பங்கு பெற்றிருந்த ஓய்வு பெற்ற போர் வீரர். அவரிடம் தனது நகரவாழ்வின் பரபரப்பான கல்லூரிச் சூழலின் இடர்களை விளக்கிய லீ, தனக்கு கேம்பிரிட்சில் இடம் தர இயலுமா என்று வேண்டினார். அவரது நிலையைப் புரிந்து கொண்ட தாட்சர், அந்த ஆண்டிலேயே அவருக்குத் தம்மால் கல்லூரி இடம் அளிக்க முடியும்; ஆனால் கேம்பிரிட்சில் எங்கு அவர் தங்கிக் கொள்வார் என்று வினவ, சிசில் வோங் தனது அறையைப் பங்கு போட்டுத் தர சித்தமாயிருந்து பேருதவியானது. சிறிதும் தயங்காமல் கேம்பிரிட்சு கல்லூரியில் சேர்ந்தார் லீ.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனக்கு இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் இடமளித்த பேராசிரியர் பாரிக்குத் தனது நிலையை விளக்கி, தான் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் இருந்து விலகிக் கொள்வதாகக் கடிதம் எழுதினார்; பதிலுக்கு மிகுந்த சினத்துடன் பேராசிரியர் பாரி, ‘விதிகளை மீறித் தான் செய்த உதவியை லீ கருத்தில் கொள்ளவில்லை, தான் உதவியிருக்கவே கூடாது’ என்று பதில் எழுதினார்; அவருக்குத் தனது நிலையை விளக்க வேண்டும் என்று புரிந்துகொண்ட லீ, ஒரு வாரம் கழித்து அவரை நேரடியாகச் சந்தித்து, நகர வாழ்வு பொருளாதார ரீதியிலும், உணவு போன்ற தனிப்பட்ட விதயங்களிலும் தனக்கு மிகவும் இடர் மிகுந்ததாக இருந்தது என்று தனது கடினப்பாடுகளை விளக்கினார்; மேலும் அதனால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்றும் விளக்க அதனைப் புரிந்து கொண்ட பாரி, இந்த இடர்களைப் பற்றி லீ, தன்னிடம் பேசியிருந்தால் தான் அதற்கு உதவியிருக்கலாம் என்று சொன்னார். அவர் சமாதானமானதை உறுதி செய்து கொண்டு, அவருக்கு நன்றி கூறி, கேம்பிரிட்சுக்குத் திரும்பினார் லீ. பின்னாட்களில் இந்த சம்பவங்களைப் பகிரும் லீ, கேம்பிரிட்சுக்குச் செல்லத் தான் மேற்கொண்ட முடிவு மிகுந்த அருமை நிரம்பிய முடிவு என்று பதிவு செய்கிறார். இந்தப் பத்தி மிகுந்த இளம் வயதிலேயே எத்தனை நேர்மறைச் சிந்தினைகளையும், தம்மைப் பற்றிய பிறரது மதிப்பீடு தவறான முறையில் இருக்கும் போது, அதனை விளக்கி நிலைமையைப் புரிய வைக்க எத்தனை கவனத்தையும் முயற்சியைம் லீ செலுத்தினார் என்பதையும் உணர்ந்து கொள்ள இயலும்.

அந்த வருட முடிவில் நடந்த தேர்வில் முதல் வகுப்பில் தேறிய மிகச் சில மாணவர்களில் ஒருவராக லீ இருந்தார். கேம்பிரிட்சில் முதல்வகுப்பில் தேர்வது என்பது குறிப்பிடத்தக்க சாதனை. அதனை வருடத்தின் ஒரு பருவம் கழித்து, கல்லூரியில் சேர்ந்த லீ, சாதித்துக் காட்டியது, அவரைச் சேர்த்துக் கொண்ட பேராசிரியர் தாட்சருக்கு மிகுந்த மகிழ்வைக் கொடுத்தது. அவரது விருப்ப மாணவர்களில் ஒருவரானார் லீ.

தனது கல்விச் சாதனையைக் கொண்டாடிக் கொள்ளும் விதமாக 60 பவுண்டுகள் கொடுத்து, ஒரு பழைய மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டார் மாணவன் லீ. அது ஒரு போர்வீரர் பயன்படுத்திக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள். புத்தம் புதிய பளபளப்புகள் இல்லாதிருந்தாலும், நல்ல நிலையில் அதன் இயகக்கம் (engine) இருந்தது. சடாரென்று தனக்கு இறக்கைகள் முளைத்தது போல உணர்ந்தார் மாணவர் லீ. கேம்பிரிட்சைச் சுற்றியிருந்த கிராமங்களின் பழத்தோட்டங்கள், புறநகரப் பகுதிகள் என்று பல இடங்களுக்கும் சென்று வந்தது அவருக்கு மன எழுச்சியைக் கொடுத்தோடு, பழங்கள் போன்றவை விலையின்றிக் கிடைக்கவும் காரணமானது. ( விளைச்சல் அதிகமானால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் விவசாயிகள் தங்களது தோட்டத்தின் வாயிலில் வைத்து, அவற்றை மிகக்குறைந்த காசுக்கோ அல்லது விலையின்றியோ பழங்களைக் கொடுத்து விடுவார்கள் !!)

இணைந்தன, இணைந்த கைகள்

சூன் 1946இல் சிங்கப்பூரிலிருந்து க்வா சூ, தான் முதல்நிலை பட்டயத் தேர்வில் தேர்ந்து விட்டதாகவும், இங்கிலாந்து சென்று படிக்க அனுமதிக்கும் பேரரசியின் உதவித்தொகை தனக்குக் கிடைக்க வாய்ப்பிருப்பதாவும் எழுத, தனது காதலியை இங்கிலாந்தில் சட்டம் பயிலக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்பு மாணவன் லீ’க்கு எழுந்தது. கேம்பிரிட்சு பல்கலையிலேயே பெண்களுக்காக கிர்ட்டன் கல்லூரி என்ற ஒன்றும் இருந்தது. அதன் முதல்வர் செல்வி. பட்லர். அங்கு சூவைக்கொண்டு வர என்ன செய்யலாம் என்று சிந்தித்த அவர், பேராசிரியர் தாட்சரின் அலுவலக உதவியாளராக இருந்த பேரட் என்பவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டார். தனக்குத் தெரிந்த, மிகப் புத்திசாலியான ஒரு சீன மாணவி இருக்கிறார் என்றும், விக்டோரியா மகாராணியின் உதவித்தொகை அந்த மாணவிக்குக் கிடைத்திருக்கிறது என்றும், அவரைக் கேம்பிரிட்சு பெண்கள் கல்லூரியில் சேர்க்க தாம் உதவ இயலுமா என்றும் வினவினார். பேரட், ‘பேராசிரியர் தாட்சர் பேசினால் பெண்கள் கல்லூரியின் முதல்வர் செல்வி.பட்லர் ஒத்துக் கொள்வார்’ என்று கண்ணடித்துக் கொண்டே சொன்னார்; உடனே பேராசிரியர் தாடசரின் முன்னால் நின்றார் லீ. அதே கதையை மீள் மீட்டினார், ‘தன்னை விடவும் கூடப் புத்திசாலியான சீன மாணவி, தனக்குத் தெரிந்தவர், அவருக்குச் சட்டம் படிக்க பெண்கள் கல்லூரியில் இடம் வேண்டும், தாங்கள் உதவ இயலுமா?’. லீயின் மீது இருந்த நல்லெண்ணம் காரணமாக, பெண்கள் கல்லூரியின் முதல்வர் செல்வி. பட்லருக்கு ஒரு கடிதம் எழுதி, லீ அவரைச் சந்திக்க ஒரு அனுமதி வாங்கித் தந்தார் பேராசிரியர் தாட்சர்.

அடுத்த குறிப்பிட்ட நாளில் பெண்கள் கல்லூரியின் முதல்வர் செல்வி. தாட்சரின் முன்னர் நின்றார் லீ. க்வா சூவின் கல்லூரிச் சான்றிதழ்கள், தகுதிகள், அனுமதிக்கப்பட்ட பேரரசியின் உதவித் தொகை போன்ற விவரங்களைக் கொடுத்தார். திரும்ப ஒரு மீள் மீட்டல்; ‘என்னை விடவும் அந்த மாணவி புத்திசாலி, அவளுக்கு இடக் கொடுத்தால் அது பேருதவி, கல்லூரிக்கு அவள் பெருமை சேர்ப்பாள், தனக்குத் தெரிந்த சீன மாணவி’. முதல்வர் செல்வி.பட்லர், மாணவன் லீயை விநோதமாகப் பார்த்தார்; என்ன இந்தப் பையன், யாரோ ஒரு சீன மாணவிக்கு இத்தனை மெனக்கிடுகிறான்?. ஆனால் அனுமதி கொடுத்து விட்டார். 1947 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் சூ கல்லூரியில் சேரலாம்.

சிங்கப்பூருக்குத் தந்தி பறந்தது – லீயிடம் இருந்து சூவுக்கு, ‘ பட்லர் அனுமதித்து விட்டார்; கடிதம் வருகிறது; கொண்டாடு’ .

1947ஆம் ஆண்டு சூன் மாத வாக்கில் கேம்பிரிட்சு பல்கலையின் பெண்கள் சட்டக் கல்லூரியான கிர்டன் கல்லூரியில் சூ சேர்ந்து விட்டார். தொடக்க நாட்களில் லீ சந்தித்த அதே இடர்களை சூவும் சந்தித்தார். எனினும் விரைவில் அவர் இங்கிலாந்து சூழலுக்கு தன்னைப் பொருத்திக் கொண்டார். லீயும் சூவின் கல்லூரிக்கு அருகில் இருந்த ஒரு தங்குமறைக்கு தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார்.

முதலாண்டுத் தேர்வுகள் முடிந்த போது லீ முதல்நிலை மாணவராகத் தேறியிருந்தார். சூ இரண்டாம் நிலை மாணவியாகத் தேறியிருந்தார். இருவரும் தங்களது எதிர்கால வாழ்வைப் பற்றி இணைந்து பேசி முடிவு செய்து ஒருவரும் அறியாமல் இங்கிலாந்திலேயே தாங்கள் இருவரும் மணம் புரிந்து கொள்வது நல்லது என்று என்று முடிவு செய்தார்கள். லீக்கு 24 வயது; சூவுக்கு 26 வயது. அவ்வாறே இங்கிலாந்திலேயே அந்த கிருத்துமசு விடுமுறையில் திருமணப் பதிவாளர் அலுவலகம் சென்று திருமணம் செய்துகொண்டதாகப் பதிவு செய்து கொண்டனர். லீ தனது காதல் மனைவி சூவுக்கு ஒரு பிளாட்டின திருமண மோதிரத்தை வாங்கிப் பரிசளித்தார். அதை விரலில் அணிந்தால் கல்லூரியில் இடர் வரலாம் என்று எண்ணி, அதனை தனது கழுத்தில் அணிந்திருந்த ஒரு சங்கிலியில் இணைத்துப் போட்டுக் கொண்டார் சூ. தங்கள் எதிர்கால வாழ்வை உறுதி செய்து கொண்ட தம்பதியினர் இருவரும், மாணவர்களாகத் தங்கள் கல்வியில் ஆழ்ந்த கவனம் செலுத்தினர்.

லீ இங்கிலாந்தில் கல்வி கற்க வந்த காலத்தில் அவருடைய நண்பர்களான கெங் சுவீ, சின் சையி போன்றவர்களும் இங்கிலாந்தில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்து அவர்களும் இங்கிலாந்தில் மேற்கல்வியைத் தொடர்ந்தார்கள். இடையில் தொழிலாளர் குழுமத்தைச் சேர்ந்த லீயின் பிரித்தானியக் கல்லூரி நண்பர்கள் சிலர் உள்ளூர் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட போது, லீயும் சூவும் தங்களது நண்பர்களுக்கு உதவ பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த அனுபவம் லீக்கு அரசியல் பிரச்சாரம் நிகழும் முறைகளைப் பற்றிய ஒரு தெளிவைத் தந்தது.

தனது சட்டக் கல்வியை கேம்பிரிட்சில் முடித்த போது, லீ, சிறப்புப் பிரிவில் முதல்நிலையில் (First place in tripos honours) தேறிய ஒரு மாணவராக இருந்தார்.அதோடு கேம்பிரிட்சுக்காக நடந்த ஒரு வழக்கிலும் மாணவ வழக்கறிஞராகப் பங்கேற்று லீ வைத்த வாதங்கள் அப்போது வழக்குரைஞர்களாக இருந்த சட்ட வல்லுநர்களையும் லீயை உற்று நோக்க வைத்தன. க்வா சூவும், கேம்பிரிட்சு கல்வியில் லீயைப் போலவே முத்திரை பதித்தார்.

ஒருவருக்காகப் பிறந்த ஒருவர் என்ற வகையில் பின்னாட்களில் 63 ஆண்டுகள் நீடித்த ஒரு அருமையான மணவாழ்க்கையிலும் முத்திரை பதித்த லீ-சூ தம்பதியினருக்கு, தொடக்க காலத்தில் ஒன்றிணைந்த கூர்மதியையும் சட்ட அறிவையும், இணைந்த நுண்ணறிவையும் கேம்பிரிட்சு அளித்தது என்றால் அது மிகையில்லை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *