The woods are lovely, dark and deep
But I have promises to keep
And miles to go before I sleep
And miles to go before I sleep – Robert Frost
தாயகம் திரும்பிய லீ தம்பதியினர்
சென்ற பகுதியில் கேம்பிரிட்சில் சூவின் சட்ட மேற்படிப்பு இடத்துக்காக, லீ எத்தனை விரைவாக, எத்தனை முயற்சிகள் எடுத்தார் என்பதைப் பார்த்தோம். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அத்தனை நேசித்தார்கள் என்பதோடு, மிக இளமைப் பருவத்திலேயே லீக்கு சூ வின் மீது கரைகாணாக் காதலும், அதே அளவுக்கு மரியாதையும் இருந்தது என்பதையும் நாம் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். சூவுக்கு அவரது சிறந்த கல்வித் தேர்ச்சிக்காக பேரரசியின் கல்வி உதவித் தொகை கிடைத்தாலும் அவருக்கு 1948ஆம் ஆண்டுக்கான கல்விப் பருவத்தில்தான் இடம் கிடைக்கும் சூழல் இருந்தது. ஆனால் லீயின் முயற்சியினால் 1947ஆம் ஆண்டு சூன் மாதத்தின் பருவத்திலேயே கேம்பிரிட்சின் பெண்கள் சட்டக் கல்லூரியில் சூவுக்கு இடம் கிடைத்தது. சூவும் இங்கிலாந்து போய்ச் சேர்ந்தார். அவர் லீயை அப்போது ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு சந்திக்கிறார். லீயைச் சந்தித்த ஒரு வாரத்துக்குள் சூ, லீயிடம், அவர் மாறுபட்ட மனிதனாகத் தோன்றுவதாகத் தெரிவிக்கிறார். எப்போதும் மகிழ்ச்சியுடனும், எதனையும் சாதித்து விடலாம் என்று எண்ணுகிற, செயலூக்கம் நிறைந்த வாலிபனாக முன்னர் தோன்றிய லீ, இப்போது ஆழ்ந்த சிந்தனை, தெளிவான திட்டமிடல், வலுவான எண்ணங்கள் நிரம்பிய மனிதராக மாறியிருப்பதாக சூ லீயைப் பார்க்கிறார். அதனைக் கேட்ட லீ, சுய மதிப்பிடலாக, தன்னில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று சிந்தித்தாகப் பதிவு செய்கிறார்; அவ்வாறு மாற்றம் ஏற்பட்டிருப்பின், அதற்குக் காரணமாக தன்னைப் பற்றிய சுய மதிப்பிடலில் லீ இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘ கேம்பிரிட்சில் ஆசிரியர்களும், பொதுவான கல்லூரி சூழலும் மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், மனதளவில் நான் வலுவான பிரித்தானிய எதிர் மனநிலைக்கு மாறியிருந்ததை உணர்ந்தேன்; குறிப்பாக சிங்கப்பூரிலும், மலாயாவிலும் இருந்த பிரித்தானிய ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற தீர்க்கமான முடிவு என்னில் நிரம்பியிருந்ததை உணர்ந்தேன்’ என்கிறார் லீ.[1]
இதற்குக் காரணமாக லீ முன்வைக்கும் வாதங்கள் எல்லாம் பெரும்பாலும் அவருக்கு யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் சிங்கப்பூரில் நிகழ்ந்த அனுபவங்களும், சட்ட மாணவராக இங்கிலாந்தில் பிரித்தானிய பொது சமூகத்தில் கிடைத்த அனுபவங்களும்தான். இந்த அனுபவங்களின் நீட்சி மூன்றாண்டுகள் கல்வி முடிந்து லீயும் சூவும் சிங்கப்பூருக்குத் திரும்பிய போதும் நேர்கிறது. இருவரும் சிறப்பாக சட்டக் கல்வியில் தேர்ந்த பிறகு, சிங்கப்பூருக்கு டச் லைனர் என்ற ஒரு கப்பலில் முதல் வகுப்புப் பயணச் சீட்டில் பயணம் செய்து திரும்புகின்றனர். அவர்கள் முதல் வகுப்புப் பயணிகளாக இருந்தும், லீ மற்றும் சூ இருவரின் சிறப்புத் தேர்வு சிங்கப்பூரில் ஏற்கெனவே செய்தியாகப் பரவியிருந்தாலும், சிங்கப்பூரின் குடிநுழைவு அதிகாரியாக இருந்த திரு பாக்சு என்ற அதிகாரி, அவர்கள் இருவரையும் கப்பலிலேயே காக்க வைத்து, இருவரையும் மிகக் கடைசியாக உள்நுழைவுக்கு அனுமதித்தார். அவர்கள் இருவரும் உள் நுழைவு முத்திரை பெற்று வெளியேறும்போது, அந்த அதிகாரி, ‘உங்கள் இருவரையைம் பற்றி இனி நிறையக் கேள்விப்படுவோம்’ என்று நக்கலாகச் சொன்னார். இது லீ’க்கு சிங்கப்பூரின் பிரித்தானிய அரசு தன்னை எப்படிப் பார்க்கிறது என்று புரிந்து கொள்ள உதவியது.
ஆனால் இதற்கான காரணம் வேடிக்கையானது. லீ இங்கிலாந்தில் இருந்தபோது அவரது அண்ணன் டெனிசு க்வான் யூ’வும் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தார். 1949ஆம் ஆண்டு ருசியா ஒரு பொதுவுடைமை மாநாட்டை அங்கேரி நாட்டின் புதாபெசுடு நகரில் நடத்தியது. அதற்கு பன்னாட்டு சட்டமாணவர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்திருந்தது. மாணவர்கள் அதிகம் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சாதாரண இரு வழி இரூப்பூர்திக்கான மொத்தக் கட்டணத்தில், பயணச் சீட்டு வசதி, தங்கும் வசதி, உணவு போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய விதத்தில் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை ருசியா அந்த மாணவர்களுக்கு வழங்கியிருந்தது. எனவே பல மாணவர்கள், ‘குறைந்த செலவில் ஒரு சுற்றுலா’ என்ற நோக்கில் அதில் கலந்து கொள்ள புதாபெசுடு சென்றார்கள். ருசியாவின் நோக்கமும் அதுதான், கூட்டத்தைக் கூட்டுவது. மாநாட்டுக் நிகழ்வுக்குச் சென்ற மாணவர்களிடம் ‘மலாயா விடுதலைக்காகப் போராடுகிறது’ என்ற ஒரு துணிப் பதாகையை அளித்து அவர்களை மாநாட்டில் திடலில் ஒரு சிறு ஊர்வலமாக நடக்க விட்டார்கள் ஏற்பாட்டாளர்கள். அது பிரித்தானிய அரசின் கவனத்துக் போனது. அந்த மாணவர்கள் பட்டியலை பிரித்தானிய அரசு குறித்து வைத்தது. அதில் லீயின் அண்ணன் பெயர் சிக்கியதால், லீயையும் சிங்கப்பூர் பிரித்தானிய நிருவாகம் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்தது என்பதைப் பின்னால் அறிந்தார் லீ.
கிடைத்தது பெயரும் பணியும்
லீயும் சூவும் சிங்கை திரும்பியதை உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளில் வெளியிட்டன. எனவே அவர்களது வருகை அனைவராலும் சிங்கப்பூரில் அறியப்பட்டது. சிங்கப்பூரின் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்ற லீயை, சிங்கப்பூரில் இயங்கிக் கொண்டிருந்த லேகாக் என்ற புகழ்பெற்ற வழக்கரைஞர் நிறுவனத்தின் தலைவர், தம்முடைய நிறுவனத்தில் பணிக்குச் சேர விருப்பம் இருக்கிறதா என்று கேட்டார்.அந்த நிறுவனத்தின் தலைவரான லேகாக், இங்கிலாந்தின் யார்க்சைரில் பிறந்தவர். அவர் மனைவி ஒரு சிங்கப்பூரிய சீனப் பெண். சிறிதும் தயங்காது லீ அந்தப் பணியை ஒத்துக் கொண்டார். பணி கிடைத்ததும் நேரடியாக சூவின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தையைச் சந்தித்த லீ, தான் சூ வை மணம் புரிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அவரது நேரடிக் கேட்பைப் பார்த்து சிறிது அதிர்ந்தாலும், சூவின் மனத்தை அறிந்திருந்த அவரது தந்தை இதற்கு ஒத்துக்கொண்டார். இரண்டு குடும்பங்களும் இணைந்து லீ, சூ தம்பதியினரின் திருமணத்தை 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் முறையாக நடத்திப் பதிவு செய்தனர். இரகசியமாக மூன்றாண்டுகள் முன்னரே திருமணத் தம்பதியராக மாறிவிட்ட இருந்த லீயும் சூவும் மீண்டும் சிங்கப்பூரில் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையில் தம்பதியினராக இணைந்தனர். திருமணத்தை ஒட்டி இராபிஃல்சு விடுதியில் ஒரு வரவேற்பை லீ சூ தம்பதியினர் தங்களது உற்ற சுற்றத்துக்கு அளித்தனர் லீ- சூ தம்பதியினர்.
அந்தத் திருமணத்தைப் பற்றிய செய்திகளும் உள்ளூர் பத்திரிகைகளில் வந்தன. அதனைக் கவனித்த லேகாக், சூவுக்கும் தனது வழக்கறிஞர் அலுவலகத்திலேயே பணி அளிக்க முன்வந்தார். லீ, சூ தம்பதியினர் அந்த வாய்ப்பை நல்ல வாய்ப்பாகக் கருதி பணியில் இணைய ஒத்துக் கொண்டனர்.
சிங்கப்பூரின் அரசியல் களநிலை!
நம்மைப் போல சாதாரணர்கள் படிப்போம், பட்டம் பெறுவோம், பணி கிடைத்தால் சேருவோம், திருமணம் செய்வோம்; இவை அனைத்தும் நடந்துவிட்டால், ஆகா, வாழ்வு சுகமாகி விட்டது என்று நிம்மதியடைந்து விடுவோம். லீக்கு இவை அனைத்தும் சரியாக, சரியான நேரத்தில், நல்ல தரத்தில் வாழ்வில் அமைந்துவிட்டன. ஆனால் லீ உள்ளூற கிளர்ச்சி மனநிலையிலேயே இருந்தார். சிங்கப்பூரில் அரசியல்நிலை சரியாக இல்லை என்று அவருக்குப் பட்டுக் கொண்டேயிருந்தது.
இந்தச் சூழலில் சிங்கப்பூரில் அரசாண்மை எவ்வாறு நடந்து கொண்டிருந்தது என்பதையும் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
சிங்கப்பூரின் பிரித்தானிய அரசத் தலைவர், ஆளுநர். அவரிடமே அனைத்து அதிகாரங்களும் இருந்தன. ஆளுநருக்கு உதவியாக காலனிய நிருவாகச் செயலாளர் ஒருவர், ஆளுநரின் சட்டத்துறைப் பிரதிநிதி ஒருவர் என இரண்டு பேர் கொண்ட குழு ஒன்று; இந்தக் குழு அதிகாரத்தின் அடுத்த படிநிலையில் இருந்தது. சிங்கப்பூரின் உயரிய, பெரிய பங்களா வீட்டில் ஆளுநர் மாளிகையும் குடியிருப்பும் செயல்பட்டன; இரண்டாவது பெரிய பங்களா வீடு காலனிய நிருவாகச் செயலாளருக்கு; மூன்றாவது பெரிய பங்களா வீடு சட்டத்துறை அதிகாரிக்கு. அதற்குக் கீழ்நிலையில் இருந்த அடுத்தநிலை செயலாளர், தனிச் செயலாளர் இருவரும் அடுத்த நிலையில் இருந்த இரண்டு பங்களா வீடுகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த ஐந்து பங்களா வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் தொலைபேசி இயக்ககம் இருந்தது. அரசமைப்பின் இதயம் இந்த ஐந்து பங்களாக்களும்.
ஆளுநருக்கு உதவி செய்ய ஒரு சட்டமன்றம் இருந்தது. அந்த சட்டமன்றத்துக்கு 25 உறுப்பினர்கள். ஆனால் இந்த 25 உறுப்பினர்களில் ஆறு பேர் மட்டும்தான் சிங்கப்பூர் உள்ளூர் வாசிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மற்ற 19 பேரும் பிரித்தானிய ஆளும் தரப்பு தீர்மாணிக்கும் நபர்கள் அல்லது காலனிய நிருவாகச் செயலாளர் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 1951ஆம் ஆண்டு இந்த தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறிலிருந்து, ஒன்பதாக உயர்த்தப்பட்டது. ஆயினும் அவர்களுக்கு துறைநோக்கில் அரசியல் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இல்லாதிருந்தது. அவர்கள் மக்களிடமும் ஒன்றியிருக்கவில்லை. இந்தத் தேர்தல்களில் விரும்பி வந்து வாக்களிக்கும் மக்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது.
இந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்காகப் போட்டியிடும் அரசியல் கட்சிகளில் ஒன்று வளர்ச்சிக்கான கழகம் (Progressive Party) என்ற பெயருடையது. அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர் லீயின் அலுவலகத் தலைவரான யான் லேகாக் (John Laycock). ஆனால் பெயரளவுக்குக் கட்சியின் தலைவராக இருந்தவர் சி.சி.டான் என்ற இன்னொரு சீனர், அவர் வழக்கறிஞராக இருந்தார். ஆனால் அவருக்கும் தீர்க்கமான சிந்தனைகளோ, மக்கள் தொடர்போ இல்லாதிருந்தது. பொதுவாக எல்லோருக்கும் ‘பிரித்தானியர்கள் எப்போதும் சிறந்தவர்கள், அவர்களது ஆட்சிமுறை, நிருவாக முறை, நீதிமுறை போன்ற அனைத்தும் சிறப்பானவை’ என்ற இருநூறாண்டு அடிமை மனோபாவத்திலேயே இருந்தார்கள். நமது தாத்தாக்கள் நம்மிடம் பேசும்போது சொல்வதில்லையா, ‘ஆ, பிரித்தானியர்கள் போலத் திறமையாக ஆளுவது இயலாது’ என்று. எத்தனை முறை கேட்டிருக்கிறோம்? இதே மனநிலையில்தான் இருந்த சிங்கப்பூரின் அரசியல் கட்சிகள் இருந்தன என்ற பார்வை லீக்கு வருகிறது.
சூழல் மாற வேண்டும் எனில், நாம் நமது சொந்தக் காலில் நிற்க வேண்டும்; நம்மை நாமே நிருவகித்துக் கொள்ள இயலும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும்; அந்த நம்பிக்கை வரும்போதுதான் பிரித்தானிய ஆட்சியமைப்பு செய்யும் நிருவாக, அதிகாரத் தவறுகளைத் தட்டிக் கேட்க இயலும்’ என்ற சிந்தனைகள் லீக்கு வருகின்றன. ஆனால் இவற்றை களத்தில் இருக்கும் எந்த அரசியல் கட்சியும் செய்ய முன்வராது என்றும் அவருக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.
அடித்தள மக்களோடு இணைக்கும் தொழில் வாழ்வு
என்ன செய்யலாம்? தேவை, ஒரு புதிய அரசியல் கட்சி? ஆனால் இதனைப் பற்றி ஆய்வு செய்து முடிவு செய்ய நண்பர்களுடன் இதனைப் பற்றி ஆலோசிக்க வேண்டும்; அப்போது இங்கிலாந்தில் இருந்த நண்பர்கள் கெங் சுவீயும், சின் சையியும் இங்கிலாந்திலிருந்து திரும்ப வேண்டும்; அவர்களுடன் பேசி இதனைப் பற்றி முடிவு செய்யலாம்.
இந்த மனநிலையில் இருக்கும்போது, மலாயன் மக்களாட்சிக் கூட்டணிக் கட்சியின் துணைத்தலைவராக சிங்கப்பூரில் இருந்த யான் எபர், லீ க்வான் யூவை அவரது 38, ஆக்சிலி தெரு வீட்டில் வந்து சந்திக்கிறார். எம்டியூ கம்யூனிசக் கட்சி. எனவே அதுவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 1948 வாக்கில் அது தடை செய்யப்பட்டிருந்த ஒரு கட்சி. அவரிடம் தனது எண்ணங்களை விளக்கி ஒரு புதிய கட்சியைத் தொடங்கலாமா என்று சிந்திப்பதாக லீ கூறினார். ஆனால் யான் எபரோ, லீ க்வான் யூயைத் தங்களது கட்சிக்குள் இழுத்துக் கொண்டால் அது கட்சி வளர்ச்சிக்கும், பின்னாட்களில் சட்டத் தளங்களில் கட்சிக்கான பாதுகாப்பாகவும் இருக்கும் என்று நினைத்தார். அதே வெளிப்படையாகத் தெரிவிக்காத எபர், ‘கட்சி அவரசநிலைச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டிருக்கிறது; இது பற்றி எச்சரிக்கையாக சிந்திக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.
தங்கமாக உருவான வாய்ப்பு
இந்த நேரத்தில் இன்னொரு விவகாரம் உருவாகிக் கொண்டிருந்தது. சிங்கப்பூர் தபால் நிலைய ஊழியர்கள், ‘தங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சம்பள உயர்வை அரசு அளிக்கவில்லை, பலமுறை வேண்டிக் கொண்டும் எந்த முடிவும் சொல்லப்படவில்லை’ என்ற காரணத்தை முன்வைத்து அரசின் மீது வழக்குப் போட வேண்டும் என்ற விருப்பத்தோடு லீயை லேகாக் அலுவலகத்தில் சந்தித்தனர். அரசோடு நேரடியாக விவாதம் செய்ய வேண்டிய வாய்ப்பு இருக்கின்ற இந்த வழக்கை எடுத்துக் கொள்ளலாமா என்று லீ லேகாக்கிடம் அனுமதி கேட்டார். அந்த வழக்கில் ஏதும் பணம் சம்பாதிக்க இயலாது என்றாலும், வென்றால் நற்பெயர் கிடைக்கும் என்று நினைத்த லேகாக் லீக்கு அந்த வழக்கை எடுத்துக் கொள்ள அனுமதி கொடுக்கிறார்.
இதற்கிடையில் மே 13ஆம் தேதி 1951ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து திரும்பிய கெங் சுவீ, ஒரு மாலையில் சிறிய ஒரு ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த ஒன்று கூடலுக்கு, சிங்கப்பூர் சுடாண்டர்டு பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்த சின்னத்தம்பி இராசரட்னம் என்ற (பின்னாட்களில் லீயின் அமைச்சரவையிலும் அவரைத் தொடர்ந்து, கோவின் (கோ சோக் டாங்- லீ க்வான் யூவுக்குப் பின்னரான சிங்கப்பூரின் அடுத்த பிரதமர்) அமைச்சரவையிலும் வெளியுறவுத் துறை போன்ற துறைகளை அட்டகாசமாகக் கையாண்ட் எசு.இராசரட்னம்) இலங்கைத் தமிழரையும் அழைத்து வருகிறார் கெங் சுவீ. 1947 வரை பன்னிரெண்டு ஆண்டு காலம் இலண்டன் நகரில் வசித்தவர் இராசரட்னம். அவர் காலனிய நிருவாக அரசை உலுக்கிப் பிடிக்கும் ஒரு பொருத்தமான விவகாரத்தை எதிர்பார்த்து வெகுநாட்களாகக் காத்துக் கொண்டிருந்தார். அவரிடம் வழக்கின் பின்னணி பற்றிக் கூறி விளக்குகிறார் லீ. [2]
அஞ்சல் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்குவது என்றும் அவர்களைத் தொடர்ந்து வழி நடத்துவது என்றும் லீமுடிவு செய்தார். வேலை நிறுத்தம் தொடங்கியது. அரசு, அஞ்சலகங்களில் தானியங்கித் துப்பாக்கிகள் வைத்திருந்த காவற்படையை நிறுத்தியது. அந்தப் புகைப்படங்கள் சிங்கப்பூர் சுடாண்டர்டு செய்திதாளில் வெளிவந்தன. அதன் தலையங்கங்களில் அஞ்சலக ஊழியர்கள் எதிர்பார்க்கும் மிக சொற்பமான ஊதிய உயர்வை ஆதரித்து அதன் பின்னணிச் செய்திகளை விளக்கி, அரசு எத்தனை கருணையின்றி நடந்து கொள்கிறது என்று விவரித்து, தொடர்ந்த தலையங்கங்கள் வருகின்றன. அந்த நேரத்தில் ஒரு பிரித்தானிய குடியேற்றவாசி உதவியாளருக்கு 1000 வெள்ளி சம்பளத்தை காலனி நிருவாக அரசு கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அஞ்சலக உதவியாளர்கள் எதிர்பார்த்து வேண்டியது மாத ஊதியத்தில் 10 வெள்ளி உயர்வு மட்டுமே.
இந்த ஒப்பீட்டைக் முன்வைத்து எழுதப்பட்ட தலையங்கங்கள் பொது மனத்தை உலுக்க, அரசு பின்வாக்கியது. பேச்சு வார்த்தைகள் நடந்து அஞ்சலக ஊழியர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
லீக்கு அரசை எதிர்த்து வழக்காடியதில் கிடைத்த முதல் வெற்றி!
பின்னர் வரப் போகின்ற வெற்றிகளுக்குக் கட்டியம் கூறுவதா அது?
பார்க்கலாம்…
(தொடரும்)
__________
1. தி சிங்கப்பூர் சுடோரி – 5. என்னுடைய கேம்பிரிட்சு நாட்கள் – My Cambridge Days
2. தி சிங்கப்பூர் சுடோரி நூலுக்கு நன்றியுடன் – From ‘ My First clashes with government’ chapter