“I have known Lee Kuan Yew well for some 45 years, ever since he came to Harward for a Lecture. I have huge admiration and respect for him and can state without equivocation that I consider him one of the most able, foresighted and analytical global leader of the last half century.” – Dr Henry A. Kissinger, US Secretary of State, 1973-77
அரசுக்கெதிரான முதல் வெற்றியும் விளைவுகளும்
சென்ற பகுதியில் பிரித்தானிய காலனிய அரசுக் கெதிராக அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட வழக்கில் லீ வெற்றி பெற்றதைப் பற்றிப் பார்த்தோம். இது வழக்கு மன்றத்தில் சென்று பெற்ற வெற்றியல்ல.
மிகச்சிறிய ஊதிய உயர்வைக் கூடத் தரமாட்டோம் என்றும், அரசின் காவற்படை அஞ்சலக ஊழியர்களைத் தாக்கும், வன்முறையில் இறங்கும் சூழலில் இருந்த நிலையில், மக்களிடையே ஏற்படுத்திய மன உணர்வைக் கண்டு, அரசு தானே இறங்கி வந்து இணக்கமான ஒரு ஊதிய உயர்வை வழங்கியது.
இந்தப் போராட்டத்தில் லீ, அஞ்சலக ஊழியர்களுக்கு, எப்போது பாயவேண்டும், எப்போது பதுங்க வேண்டும் என்ற ரீதியில் பலவிதமான அறிவுரைகளை வழங்கினார். ஒரு சமயத்தில் சில நாட்களுக்குப் போராட்டத்தை ஒத்தி வைக்கும் உத்தியையும் கையாண்டார். அவற்றை விவரமாகப் பதிவு செய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல, எனவே அவற்றைப் பற்றி விரிவாக விளக்கவில்லை. ஆனால் லீயின் முறைகள்தான் அஞ்சலக ஊழியர் போராட்டத்திற்கான வெற்றிக்கு, அதாவது அரசு இளகி, இணங்கிப் போனதற்குக் காரணம்; மேலும் 1948ஆம் ஆண்டு பிரித்தானிய காலனி ஆதிக்க அரசு சிங்கப்பூரில் அவசரநிலையைக் கொண்டுவந்தது என்று பார்த்தோம்; அந்த நேரத்தில் அவசரநிலைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு விலாவாரியாக வெளியிட்டிருந்தது. அந்த வழிமுறைகளில் பல அரசு ஊழியர்களுக்கும் பல நெறிமுறைகளை வகுத்தது. அவை எதனையும் மீறாமல், வன்முறையின் பக்கம் செல்லாமல், அமைதியான முறையால் போராடி, தாம் சாதிக்க விரும்பியதை ஊழியர்கள் சாதித்தார்கள்; தார்மீக ரீதியான இந்த வெற்றி லீயின் வழிகாட்டுதலில் நிகழ்ந்தது என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
அஞ்சலக ஊழியர்களின் வழக்கில் பெற்ற இந்த வெற்றியின் விளைவு லீயுக்கும், லேகாக் சட்டத் தரணி அலுவலகத்தும் புகழைத் தேடித் தந்தது. தொழிலாளர்கள், ஊழியர்களின் கூட்டமைப்புகளின் மத்தியில் லீயின் பெயர் அறியப்பட்டதாகி புகழ் பெறத் தொடங்கியது. பல சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்களுக்கு வேண்டிய சட்டரீதியான வழிகாட்டுதலுக்கு லீயைத் தேடி லேகாக் அலுவலகத்துக்கு வரத் தொடங்கினார்கள். எவரையும் பதட்டமடைய வைக்காது, லீயுக்கும் ஒரு தனித்த செல்வாக்கு
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருப்பதை சூழலில் எளிதாக உணர முடிந்தது.
நெருங்கி வந்த தொழிலாளர்கள்
விதிகளுக்குட்பட்டும் வன்முறைக்கு இடம் கொடாமலும் அரசிடம் தமது இடர்களைச் சுட்டி அவற்றிற்கு நிவாரணம் பெற இயலும் என்ற நம்பிக்கை தொழிலாளர் அமைப்புகளுக்கு ஏற்பட்டது. லேகாக்கின் சட்டத்தரணி அலுவலகத்துக்கு ஒரு சிறிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு, லீ க்வான் யூ வின் பெயரைத் தங்களது அலுவலக குறிப்பேட்டுப் புத்தகத்தில் (Letter Head) சட்ட ஆலோசகர் என்று அச்சிட்டுக் கொண்டார்கள். அதனால் லீயின் பெயர் இன்னும் புகழ் பெறத் தொடங்கியது.
இந்த தொழிலாளர் கழகங்கள் (Labour Unions) நடத்தும் ஆண்டுக் கூட்டங்களுக்கும், நிறுவனக் கூட்டங்களுக்கும் செல்லத் தொடங்கினார் லீ. அவர்களோடு பேசுவதற்குத் தேவையான அளவு தனக்கு சீன மொழி சரளமாக வரவில்லை என்று கண்டு கொண்ட லீ, ஒரு ஆசிரியரை நியமித்துக் கொண்டு தனிப்பட்ட முறையில் தன்னுடைய சீன மொழியறிவைச் செப்பம் செய்து கொண்டார்.
அஞ்சலக ஊழியர் கூட்டமைப்பு நடத்திய சம்பளத்துக்கான வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறை ஊழியர்கள் அமைப்பும் அவர்களுடைய இடர்களையும், அவர்களுக்கான மறுக்கப்படும் ஊதியம் தொடர்பான காரணங்களையும் முன்வைத்து சட்ட பூர்வமான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். லீ க்வான் யூ அந்தத் தரப்புக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையில் உதவி செய்யவும், போராடும் தரப்புக்கு சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டார்.
இந்த வழக்கில், மிகத் தன்மையான முறையில் தொலைத்தொடர்புத்துறை ஊழியர்களின் இடர்களை முன்வைத்தார். சுமார் 1000 ஊழியர்களுக்கு, 28 மாதங்களுக்கான ஊதியத்தை அளிக்க வேண்டும் என்ற அரசுத் தரப்புக்கு ஆளுனர் உத்தரவிட வேண்டி வந்தது. இது சற்றேறக்குறைய ஒரு மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி அளவு தொழிலாளர்களுக்கு, காலனி அரசு வழங்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்பு தொழிலாளர்களின் பக்கம் லீயின் பெயரை மிக நெருக்கமாகவும் பரவலாகவும் கொண்டு போய்ச் சேர்த்தது.
மேலும் வளரும் புகழ்
இந்த சந்தடிகளுக்கிடையில் லீ க்வான் யூவின் நண்பரான கெங் சுவீ 1951ஆம் ஆண்டின் இறுதியில் இங்கிலாந்தில் இருந்து திரும்பினார். அஞ்சலக ஊழியல் போராட்டத்தின்போது, இராசரட்னத்தையும் லீயையும் ஒருங்கிணைத்து சிங்கப்பூர் சுடாண்டர்டு செய்தித்தாள்களில் கட்டுரைகள் வெளிவர ஆயத்தம் செய்தவர் இந்த கெங்சுவீதான். பின்னாட்களின் சிங்கப்பூர் அரசின் லீ க்வான் யூவின் அமைச்சரவையில் இராணுவ அமைச்சராக அமைந்து புத்தம் புதியதான சிங்கப்பூர் இராணுவத்தைக் கட்டமைக்கப் போகும் அமைச்சர் கெங் சுவீதான். இராணுவம் மட்டுமல்ல கல்வித் துறையிலும் தொடக்கத்தில் பங்களிப்புகளைச் செய்தவர் கெங்சுவீ. லீ க்வான் யூ விற்கு அமைந்த ஒரு நம்பிக்கைக்குரிய சகா கெங்சுவீதான். தீர்க்க முடியாத இடர்கள் என்று தோன்றுபவைகளுக்கு, தீர்க்கமான சிந்தனையோடு தீர்வுகளை, பலமுறை கட்டமைத்தவர் கெங் சுவீதான். சுருக்கமாக பின்னாட்களில் லீயின் ஒரு நம்பத்தகுந்த ‘இடர் களையும்’ சகாவாக இருந்தார் கெங் சுவீ.
அந்த கெங்சுவீ செய்த ஒரு சிறிய செயல் பிரித்தானிய காலனி நிருவாக அரசைக் கிட்டத்தட்ட தரையில் தவழவைக்கும் நிலைக்குக் கொண்டுசென்றது. கெங்சுவீ வந்து சிங்கப்பூரில் இறங்கியபோது, சிங்கப்பூரின் பிரித்தானிய காலனி ஆதிக்க அரசில் பணிபுரிந்து கொண்டிருந்த மூத்த அரசு அதிகாரிகளுக்குக்கூட சரியான அளவில் சம்பளம், குடும்பத்தினர்களுக்கான சிறப்புக் கட்டணச் சலுகைகள் போன்றவை நெடுநாட்களாக வழங்கப்படாமல் இருந்தன. அவர்களுக்கான கோரிக்கையை முன்வைத்து ஒரு போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் அந்த மூத்த அதிகாரிகள் கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருந்தது. அதில் சுமார் 200 உறுப்பினர்கள் இருந்தார்கள். அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க லீயும் நண்பர்களும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கெங்சுவீ ஒரு கேள்வியை எழுப்பினார். ஏன் 200 மூத்த அதிகாரிகளுக்கு மட்டும்? ஏன் அரசு அமைப்புகளின் அலுவலர்கள் அனைவரது குறைகளையும், ஊதியப் போதாமைகளையும் முன்வைத்துப் போராடக் கூடாது?
பிறந்தது செயல்திட்டம்!
அரசு அலுவலகத் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அனைத்து சிங்கப்பூரிய அரசு ஊழியர்கள் தொழிலாளர் அமைப்பையும், இந்தக் கூட்டமைப்பின் அங்கமாக ஆக்கினார்கள்; ஒருங்கிணைந்த அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 14000! இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் சிங்கப்பூரின் சீன, மலாய், இந்திய இனத் தொழிலாளர்கள். காலனி நிருவாக அரசின் ஐரோப்பியத் அதிகாரிகளின் சிறிய எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் இருந்த குடும்பங்களுக்குப் பெருத்த குடும்பப்படி வழங்கப்பட்டது. ஆனால் பெரிய எண்ணிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டிருந்த சிங்கப்பூரின் மற்ற இனக் குடும்பங்களுக்கான குடும்பப்படி குறைவானதாக இருந்தது. இது இனரீதியான வெறுப்பை முன்வைத்துச் செய்யப்படும் செயல் (racial discrimination) என்ற நோக்கில் குடும்பப் படி தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆளுனர் இதனை ஆராய ஒரு குழுவை நியமித்தார்.
குழுவின் அறிவிக்கை, குடும்பப் படியை ஏற்றித் தரும் படி சொன்னது. அதனை ஒத்துக் கொண்டால் காலனி நிருவாக அரசுக்கு மிகப் பெரிய பொருட்செலவு ஏற்படும் என்று உணர்ந்த ஆளுனர், அந்த ஆராயும்குழுவின் அறிக்கையை நிராகரித்தார். பதிலாக காலனி நிருவாகத்தின் பிரித்தானிய அதிகாரி ஒருவரை ஒரு நபர் குழுவாக நியமித்து இந்தப் பொருண்மையைக் குறித்து ஆராயச் சொன்னார். அந்த அதிகாரி நீண்ட விசாரணைக்குப் பிறகு, காலனி நிருவாகத்தின் ஐரோப்பிய ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்பப்படியை நிறுத்தும்படி பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரை காலனி நிருவாக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்துக்குப் பிறகான உணவுப் பொருள்கள், குடும்பத்தினருக்கான செலவுநடை போன்றவற்றில் தாறுமாறாக விலைவாசி ஏறியிருந்தது என்பதைச் சென்ற அத்தியாயங்களில் பார்த்திருந்தோம். ஆனால் அரசுப் பணியாளர்களின் ஊதியங்கள் ஆக்கிரமிப்புக் காலத்துக்கு முந்திய காலத்தின் அளவிலேயே இருந்தன. எனவே இந்தப் போராட்டத்தின் தேவை மிக நியாயமான ஒன்றாக இருந்தாலும், லீ மற்றும் கெங்சுவீ குழுவினர்களால் எதிர்பார்த்த வெற்றியை அடைய இயலவில்லை. ஆனால் 14000 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த அரசுப் பணியாளர் குழுமங்களின் கூட்டமைப்பு ஏற்பட்டதும், ஐரோப்பியப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு அள்ளிவிடப்பட்ட அரசுப் பணம் சிறிது மட்டுப் படுத்தப்பட்டதும், மிகச் சிறந்த ஒரு பலனாக ஊழியர் சங்கங்களால் பார்க்கப்பட்டன. லீ , கெங் சுவீ தோழர்களின் மீதான அரசு ஊழியர்களின் எண்ணம் மேலும் மேலும் மேம்பட்டது. லீயும் நண்பர்களும் இந்த மாற்றங்களை உன்னிப்பாக மதிப்பீடு செய்து கொண்டிருந்தனர்.
நண்பர்களும் நடப்பு அரசியலும்
பின்னாட்களில் சிங்கப்பூரின் ஆட்சிக் குழுவில் மிகுந்த புகழ்பெற்ற பலர் இந்த காலகட்டத்தில் லீ க்வான் யூ’வின் நண்பர்களாக ஒன்றிணைந்தவர்களே. கெங் சுவீ’யைப் பற்றியும், இராசரட்னத்தைப் பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். விடுதலை பெற்ற சிங்கையின் முதல் அதிபராகப் பதவியேற்ற யூசுப் பின் இசாக் ( Yusof Bin Ishal ), பின்னாட்களில் சிங்கையின் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர், சிங்கை அதிபர் என்று பல பதவிகளை வகித்த தேவர் நாயர், லீயின் அமைச்சரைவையி்ல பல பதவிகளை வகித்த டோ சின் சையி (Toh Chin Chye), லீ க்வான் யூ கட்சி தொடங்கிய போது அவருடன் இருந்த தொடக்ககாலக் குழுவில் இருந்த சமத் இசுமாயில் (Samd Ismail), ஒரு முறை தேர்தலில் வென்று சட்டமன்ற முதலமைச்சராக லீக்கு முன்னர் பதவியில் இருந்த மார்சல் (Marshal) போன்ற அனைவரும் இக்காலத்திய அல்லது இக்காலத்திற்கும் முன்னாலிருந்தே லீயின் நண்பர்களாக இருந்தவர்களே. அனைவரும் ஒவ்வொரு துறையில் நிபுணத்துவம் மிகுந்தவர்கள். பின்னாட்களுக்கான ஒரு சிறந்த ‘சிங்கப்பூருக்கான குழு’ இவ்வாறு இக்காலத்தில் அமைந்ததே.
அக்காலகட்டத்தி்ல் மலாயாவில் வெளி வந்து கொண்டிருந்த உதுசான் மலாயு (Utusan Melayu) என்ற பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் யூசுப் பின் இசாக் (இன்றும் கூட சிங்கப்பூர் வெள்ளி பணத்தாளில் யூசுப் பின் இசாக்கின் படம் அச்சிடப்பட்டுக் கொண்டிருக்கிறது ! சிங்கப்பூர் பணத்தாளில் சிங்கப்பூரின் முதல் அதிபர் என்ற வகையி்ல் அந்தப் படம் இடம் பெற்றிருக்கிறது!) . பிரித்தானிய காலனி நிருவாக அரசுக்கெதிராக ஒரு வழக்குத் தொடுப்பதற்காகவே அவர் முதன் முதலில் லேகாக் அலுவலகத்தில் லீயைச் சந்தித்தார். அவரைப் போலவே அரசுக்கெதிராக சட்டரீதியில் போராட விரும்பிய பலரும் கடைசியாக அணுகும் இடமாக லீ க்வான் யூவின் அலுவலகம் மாறத் தொடங்கியது என்றே சொல்லலாம்.
இதே நேரத்தில் சிங்கப்பூருக்கு விடுதலை வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்து மலாயன் கம்யூனிசக் கட்சியினர் அவர்களது அனுதாபிகள் போன்றோர் தலைமறைவு நிலையில் அரசுக்கெதிராக மக்களைத் திரட்டுவதில் ஈடுபாடு காட்டினார்கள். அவர்களது இறுதி நோக்கம் வேறாக இருந்தாலும் (சிங்கப்பூரை பெருஞ்சீனத்தின் பிரதிநித்திதுவ இடமாக மாற்றுவது!) தற்போதைய நோக்கம் பிரித்தானியர்களிடமிருந்து சிங்கையை மீட்பது என்ற அளவில் இருந்ததால், லீ க்வான் யூ யையும் அவரது நண்பர்களையும் இந்தக் கம்யூனிசக் குழுவின் நண்பர்கள் ‘பயன்படுத்திக்’ கொள்ளும் நோக்கத்துடன் நட்பில் வைத்திருந்தார்கள். அதனை லீ அறிந்தே வைத்திருந்தார். அவரும் அவர்களை ‘அகலாது அணுகாது’ தொடர்பில் வைத்திருந்தார். ஆனால் அரசின் நேரடிக் குற்றச்சாட்டு எதிலும் ஆட்பட்டு விடாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருந்தார் லீ. அக்கால கட்டத்தில் அரசு கம்யூனிசக் கட்சியின் தீவிரவாதிகளை அரசுக்கெதிரான பயங்கரவாதிகள் என்ற நோக்கில் அணுகத் தொடங்கியிருந்தது. இந்த மூக்கூட்டு உறவுச் சிக்கலைப் புரிந்து கொள்வது நமக்கு அந்நாட்களின் சிங்கப்பூரின் அரசியல் நிலை பற்றிய சரியான புரிதலை அளிக்கும்.
லீ க்வான் யூ அந்நாட்களி்லும் பின்னரும் அவரது ஆயுள் இறுதி வரை வசித்த இடம் 38, ஆக்சிலி தெருவில் இருந்த வீடு. இந்த வீட்டுக்கு லீயின் குடும்பம் யப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் குடிவந்தது. பின்னாட்களில் லீ’க்குச் சொந்தமான இந்தக் குடும்பவீட்டில்தான் தனது இறுதிவரை லீ வசித்தார். சிங்கப்பூரின் பிரதமரான பின்னரும், உலகப் புகழ் பெற்ற பின்னரும் கூட இதே வீட்டில்தான் அவர் வசித்தார். இந்த வீட்டில் அறுபது ஆண்டுகளும் மேலாக இருந்த மர மேசை நாற்காலிகளும், மற்ற வரவேற்பறைப் பொருட்களும் மிகுந்த எளிமையானவை; சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாக மாற்றப்படாமல் புழங்கப்பட்டவை. அவை இன்றைய சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீட்டைப் பற்றிய இந்த விக்கி தகவல் பக்கம் சுவையானது. இந்த வீட்டின் தரைத் தளத்தில் ஒரு உணவுக்கூடம் இருந்தது. அந்த நாட்களில் லீயும் அவரது நண்பர்களும் (கெங் சுவீ, சின் சையி, இராசரட்சன், கென்னி) ஒவ்வொரு சனிக்கிழமை மாலைகளில் இந்தக் கூடத்தில் கூடிப் பேசி அளவளாவுவார்கள். அரசியல், சிங்கப்பூரின் நிலை, எதிர்காலத் திட்டங்கள், அவ்வப்போதைய இடர்கள், அவற்றைச் சமாளிக்கும் முறைகள் என்று பேச்சு எதைப் பற்றியதாகவும் இருக்கும்.
கூடுகை, ஆழ்ந்த உரையாடல்கள், இனிய நேரம், ஒன்றாக உணவு என்ற அந்த நாட்களைத் திட்டம் செய்திருந்தார் லீ. இந்தக் கூட்டங்களில் 1950 வாக்கில் அடிக்கடி இடம் பெறத் தொடங்கிய ஒரு பேச்சு, ‘நமது அரசியல் கட்சியைத் தொடங்கினால் என்ன? எப்போது தொடங்கலாம்?’ என்பது பற்றியதாக இருந்தது. அவர்களது நோக்கம் வன்முறையில் ஈடுபாடு கொண்டிருந்த கம்யூனிச இயங்கங்களோடு நெருங்காமல், சட்டபூர்வமான வழிமுறைகளில் சிங்கப்பூருக்கான விடுதலையை வென்றெடுக்கும் வழிமுறைகள் பற்றியதாக இருந்தது.
செயலானது ‘செயல்’
இந்தக் கால கட்டத்தில் லீ க்வான் யூவைத் தேடி இரண்டு முக்கியமான வழக்குகள் வந்தன. ஒன்று உதுசான் மலாயு பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த சமத் இசுமாயில் என்பவரோடு அவரது நண்பராக அறியப்பட்டிருந்த தேவன் நாயர் இவர்கள் இரண்டு பேரின் மீது சுமத்தப் பட்டிருந்த ‘கம்யூனிச நடவடிக்கைகளுக்கான’ தடுப்புத் கைது வழக்கு. இன்னொன்று சீன மாணவர்கள் குழு ஒன்றின் மீது சுமந்தப் பட்டிருந்த ‘தேசத் துரோக’ வழக்கு. இந்த இரண்டு வழக்குகளையும் லீ எவ்வாறு கையாண்டார் என்பதை சிறிது விளக்கமாகத் தெரிந்து கொள்வது இந்தத் தொடரைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவுவதோடு, லீயின் செயல் முறைகள், அக்காலகட்டத்திய பிரித்தானிய காலனி நிருவாகத்தின் அரசியல் பார்வை போன்றவற்றை நாம் பெரிதும் புரிந்து கொள்ள உதவும். [அந்த இரண்டு வழக்குகளையும் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்] சொல்லத் தேவையன்றி இந்த இரண்டு வழக்குகளிலும் லீ வென்றார். இந்த இரண்டு வெற்றிகளும் லீயின் அரசியல் வாழ்வின் தொடக்ககாலத்தில் அவருக்கு வேண்டியிருந்த இரண்டு முக்கியமான உதவிகளைச் செய்தன. ஒன்று லீ க்வான் யூ சிங்கப்பூருக்கான விடுதலையை அரசியல் சட்ட பூர்வமான, வன்முறைகளற்ற முறையில் வென்றெடுத்ததைச் சாதிக்க உதவியது; அந்த நோக்கங்கள் சிங்கப்பூருக்குள் மட்டுமல்லாது, ஒன்றிணைந்த மலாயாவின் பெருநிலப் பரப்பிலும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற அவரது எண்ணத்தைச் செயலாக்கியது. இந்த நோக்கத்திற்கு உதுசான் மலாயா பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த சமத் இசுமாயிலின் வழக்கும் அவரது தோழமையும் உதவும் என்று மிகச் சரியாக லீ கணித்தார்.
அடுத்ததாக இளம் வயது சீன இளையர்கள், மாணவர்களிடம் சிங்கப்பூரின் விடுதலைக்கான தனது நோக்கங்கள் சென்றடைந்தால், அவர்களது ஆதரவு கிடைத்தால் சிங்கப்பூருக்கான மாற்றமும், விடுதலை நோக்கமும் பரந்து பட்ட இளையர்களிடமும் சென்று சேரும் என்று லீ நம்பினார். எனவே அந்த மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கில் வென்ற பிறகு, அவர்களில் மிகுந்த நேர்ச்செயல்பாடும், உணர்வு பூர்வமும் கொண்டிருந்த சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தம்மோடு தாம் தொடங்க எண்ணியிருக்கும் கட்சியில் இணைய முடியுமா என்று விவாதித்தார். அந்த சீன மாணவ இளையர்கள் அப்போது மலாயான் கம்யூனிசுடு கட்சியின் சித்தாந்தங்களில் பெருத்த ஈடுபாடும், ஒன்றிணைந்த சீனத்தின் கம்யூனிசத் தலைமையின் கட்டுப்பாட்டிலும் இருந்தார்கள். எனினும் அந்த இளையர்கள் பின்னாட்களில் சரியான வழிகாட்டுதல் கிடைக்கும் போது, சரியான நோக்கங்களுக்கான சிறந்த இலட்சியவாதிகளாக இருப்பார்கள் என்று லீ கணித்தார். எனவே அந்த மாணவர்களின் பிரதிநிதிகளாகவும், ஒருங்கமைப்பாளர்களாகவும் நேர்நோக்கு கொண்டவர்களாகவும் இருந்த லிம் சின் சியாங் (Lim Chin Siong), ஃபாங் சுவீ சுவான் (Fong Swee Suan) இருவரையும் தம்மோடு தாம் தொடங்கப்போகும் அரசியல் கட்சியில் அவர்கள் இருவரும் அமைப்பாளர்களாக இணைய இயலுமா என்று வினவினார். அவர்கள் சிந்தித்து விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்கள்.
கம்யூனிசக் கட்சிப் பொறுப்பாளர்கள் வரை இந்த வேண்டுகோள் சென்று அவர்கள் அனுமதித்தால் மட்டுமே இந்த மாணவர் பொறுப்பாளர்கள் இருவரும் தம்மோடு இணைவார்கள் என்று லீயுக்கும் தெளிவாகத் தெரிந்தே இருந்தது. எனினும் பிற்காலத்தில் அவர்கள் சரியானவர்களாக மாறுவார்கள் என்று லீ கணித்தார்; அதோடு கம்யூனிசக் கட்சியினரை நேரடியாக இணைந்து கொண்டு அரசியல் கட்சியைத் தொடங்குவதை லீ விரும்பவில்லை. தாம் சாதிக்க நினைப்பவைகளை அரசியல் சட்ட ரீதியாக, தெளிவாக, பெரும் மக்கள் திரளிடம் எடுத்துச் செல்லும் வழியில் திட்டமிட்டுக் கொண்டு செலுத்த அவர் விரும்பினார். அது சட்டத்தின் எந்த நோக்கிலும் குற்றச்சாயலைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் நினைத்தார்.
அவர் நம்பியது போலவே லிம்மும், ஃபாங்கும் இரண்டு வாரங்கள் கழித்து வந்து தங்கள் ஒப்புதலைத் தெரிவித்தார்கள்.
21 நவம்பர் 1954ஆம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்துடன் ‘மக்கள் செயல் கட்சி’ தொடங்கப்படும் என்று திட்டமிடப் பட்டது. விக்டோரிய மன்றம் என்ற ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தில் திட்டமிட்டபடி தொடங்கியது ‘மக்கள் செயல் கட்சி’.
செயலானது ‘செயல்’!
(தொடரும்)