எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின் – திருக்குறள் 666
[எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.- If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.]
வழக்குகளின் பின்னணி
1954ஆம் ஆண்டு லீயும் நண்பர்களும் இணைந்து தொடங்கிய ‘மக்கள் செயல் கட்சி’ உருவானது. ஒரு புதிய கட்சி சிங்கப்பூருக்குத் தேவை என்ற எண்ணம் சிங்கப்பூருக்குத் திரும்பிய சில மாதங்களிலேயே லீயுக்கு வந்து விட்டது. இருந்த கட்சிகள் எதுவும் நீண்டகாலத் திட்டத்தில் சிங்கப்பூருக்கு என்ன தேவை என்ற நோக்கத்தைக் கொண்டிருக்காததோடு, பிரித்தானியரை வெளியேற்றுவதற்கான காரணமாக தங்களுக்குள் வேறொரு பின்னணிக் காரணத்தை வைத்திருந்தார்கள். காட்டாக மலாயன் கம்யூனிசுடுக் கட்சிக்கு கம்யூனிசத்ததை சிங்கையிலும் உறுதியாக்கி ஆட்சியையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்படி 1950களின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் இருந்த அரசியல் கட்சிகளில் ஒவ்வொன்றுக்கும் நேர் நோக்கங்களைவிட மறைநோக்கங்கள் ஒவ்வொன்றும் இருந்தன. இவற்றையெல்லாம் லீயும் நண்பர்களும் உன்னிப்பாகக் கவனித்தனர். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் நிம்மதியான வாழ்வு, நீண்டகால நோக்கில் அனைவருக்குமான முன்னேற்றம் போன்ற நோக்கங்களை வைத்திருக்கும் கட்சி எதுவும் அக்காலகட்டத்தில் இருந்ததாக அவர்களுக்குப் புலப்படவில்லை. எனவே ஒரு புதிய கட்சி தேவை என்ற எண்ணம் அவர்களுக்குள் வலுப்பட்டுக் கொண்டே இருந்தது.
ஆனால் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி விட்டால், போதுமா? அது மக்களிடம் எவ்வாறு சென்று சேரும்?அந்தக் கட்சியின் மீது, அதன் கொள்கைகளின் மீதான நம்பகத்தன்மை பொதுமக்களுக்கு வந்தால்தானே மக்கள் அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள்? அது எவ்வாறு நிகழும்? அது நிகழ வேண்டுமென்றால், பெரும் திரளான மக்கட்தொகுதிக்கு அந்தக்கட்சி முதலில் அறிமுகமாக வேண்டுமே? அப்படி அறிமுகமாகும் கட்சி பொதுவான மக்களுக்கும், அவர்களது வாழ்க்கைக்கும் நீண்டகால நோக்கில் நன்மை செய்யும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரவேண்டுமே? அந்த நம்பிக்கைக்குச் சிறந்த வழி செயல் மூலம் கட்சி என்ன செய்யப்போகிறது என்பதைக் காண்பிப்பதுதானே? மிகச் சிறந்த சொல் ‘செயல்’ அல்லவா?
எனவே அந்த நோக்கில் சரியான ஒரு சூழலுக்காக லீ காத்துக் கொண்டிருந்தார் என்றும் எண்ணலாம். அத்தகைய சூழல் இரண்டு வழக்குகளின் மூலம் லீயுக்குக் கிடைத்தது.
வழக்கு 1 – சமத் இசுமாயிலும் தேவன் நாயரும்
உதுசான் மலாயா பத்திரிகையின் நிறுவன ஆசிரியரான யூசுப் பின் இசாக் ஒரு வழக்குக்காக லீ க்வான் யூவைச் சந்தித்தார் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம் அல்லவா? அந்த வழக்குதான் லீ க்வான் யூ வுக்கு மலாயா பிரதேசம் முழுதும் அறிமுகத்தை அளித்தும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவை அளித்தும் உதவி செய்த ஒரு வழக்கு. வழக்கு இதுதான்.
1952 செப்டம்பர் வாக்கி்ல் யூசுப் பின் இசாக் லீயை அவரது 38, ஆக்சிலி தெரு வீட்டில் சந்தித்தார். அவரது முதன்மைத் துணை ஆசிரியரான சமத் இசுமாயில் மற்ற அவரது தோழர்கள் மற்றும் பொதுவுடைமை வாதிகளுடன் புனித யான் தீவில் (Saint John Islands) 1951, சனவரி முதல், பிரித்தானிய காலனி நிருவாக அரசால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது வழக்கு விசாரணைக்கு வருகிறது. லீயால் அந்த வழக்கை ஏற்று நடத்த முடியுமா? இதுதான் யூசுப் பின் இசாக் லீயிடம் கேட்ட உதவி.
சமசின் வழக்கு ஒரு சட்டரீதியான வழக்கு அல்ல; அது அரசியல் ரிதீயானது. அவர் கம்யூனிச ஆயுதந்தாங்கிக் குழுக்களுடன் தொடர்பில் இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் அந்த கம்யூனிச ஆயுதந்தாக்கிக் குழுக்கள் முன்வைத்துப் போராடும் காரணம் பிரித்தானிய காலனி ஆட்சியிலிருந்து சிங்கப்பூரின் விடுதலை. அல்லது அதுதான் முன்வைத்த காரணம். இந்தச் சூழலில் இந்த வழக்கை எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றி லீ சிந்தித்தார். இந்த வழக்குக்கான சரியான வழி, சமத் ஆயுதந்தாங்கிக் குழுக்களுடன் இணையவேயில்லை என்ற வாதத்தை முன்வைப்பதல்ல; பதிலாக அவர்களோடு சமத் இணைந்தது சுதந்திர சிங்கப்பூர் என்ற இலட்சிய வாதத்திற்கான நோக்கில் மட்டுமே என்று வாதிடுவது. ஆயுதந்தாங்கிக் குழுக்களில் ஆயுத நடவடிக்கைகள், தாக்குதல்கள், வன்முறைகள் எதிலும் சமத் ஈடுபாடு காட்டவில்லை, இணையவில்லை என்ற கருத்தை முன்வைப்பது- இந்த நோக்கத்தில் சிந்தித்தார். இந்த வழக்கை லேகாக் அலுவலகத்தில் பணியில் இருந்தாலும் லீ தனியாகவே நடத்துவது, உதுசான் மலாயா பத்திரிகை வழக்குக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வது என்று முடிவாகியது.
வழக்கு 1- கை கொடுத்த நல்ல நேரம்
இந்த அரசுத் தரப்பின் எண்ணங்களை முழுதும் அறிந்து கொள்ளும் முன் காரியத்தில் இறங்குவது சரியாயிருக்காது என்று எண்ணிய லீ, முதலில் சமத்தின் வழக்கைக் கையாளும் அதிகாரி யார் என்று அரசுத் தரப்பில் விசாரித்தார். இந்திய, தெற்காசியப் பகுதிகளுக்கான, ஆங்கில அறிவு மிகுந்த கற்றிறிந்த குற்றவாளிகளைக் கையாள்வதற்கு ஒரு துறை இருந்தது; இந்தியா, தென்கிழக்காசியாவில் பிரித்தானிய காலனி அரசுக்கு எதிரான இவ்வாறான ‘கல்வி அறிவு பெற்றிருந்த’ குற்றவாளிகளை அத்துறை கண்காணித்தது; கையாண்டது. அந்தத் துறைக்கான அதிகாரி இரிச்சர்டு பைரன்(Richard Byron) என்ற அதிகாரிதான் சமத்தின் வழக்கைக் கையாள்கிறார் என்று அறிந்து கொண்டார் லீ. லீயின் நல்லூழ், அந்த அதிகாரி ரிச்சர்டு பைரனை லீ ஏற்கனவே தன்னுடைய 38, ஆக்சிலி தெரு வீட்டில் முன்னர் ஒருமுறை சந்தித்திருந்தார். லீ சிங்கப்பூர் திரும்பிய நாட்களில் இருந்த பிரித்தானிய காலனி நிருவாக அரசு லீயின் நடவடிக்கைகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்ததை நாம் அறிவோம். அது தொடர்பாக லீ சிங்கப்பூர் திரும்பிய சிலநாட்களில் பைரன் லீயை அவரது வீட்டிலேயே வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போயிருந்தார். எனவே அவரது அலுவலகத்தில் லீ அந்த அதிகாரியை நட்பு நோக்கில் சந்தித்து சமத்தைப் பற்றி பைரன் என்ன நினைக்கிறார், சமத் ஒரு ஆயுததாரிக் கம்யுனிசுடு என்று அரசு நினைக்கிறதா என்றும் விசாரித்தார். பைரன் மிக வெளிப்படையாகப் பேசினார். சமத் தான் அறிந்தவர்களிலேயே மிகுந்த புத்திசாலித்தனம் மிக்க ஒரு கம்யூனிசுடு என்றும், அவர் ஒரு முதல்நிலை தீவிரவாதி என்றும் தாம் கருதுவதாகக் கூறினார். அதனைக் கேட்ட லீயுக்கு நம்பிக்கை போனது. ஆனால் அடுத்து வந்த பைரனின் வாக்கியம் லீயுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. பைரன் சொன்னார், ‘ஆனால் மனிதர்கள் வாழ்வில் அனுபவம் பெறும்போது அவர்களது சிந்தனைப் போக்கில் மாற்றம் வருவது இயல்பு; சமத் போன்ற நுண்ணறிவாளர்கள் பேணப்பட்டு நற்திசையில் திருப்பப் படவேண்டியவர்கள்’ என்பதுதான் அது. அரசுக்கும் சமத் மீது ஒரு மெல்லெண்ணம் இருக்கிறது என்பதை லீ உணர்ந்து கொண்டார்.
அந்த வழக்கின் விசாரணை உள் விசாரணையாள (In camera hearing) நீதியரசரின் அறையில் நடைபெற்றது. சமத் தீவில் இருந்து விசாரணைக்காக கொண்டு வரப்பட்டிருந்தார். லீ மொத்தமாகவே இருபது நிமிடம்தான் வழக்கில் தன்னுடைய கட்சியைப் பற்றிப் பேசினார். சமத் கற்றறிந்தவர்; அவர் செய்த ஏதாவது ஒன்று குற்றம் என்றால் அது மலாயன் கம்யூனிசுடு கட்சியின் உறுப்பினராக இருந்ததும், அந்த நோக்கில் கட்சியினர் சிலருக்கு உதவி செய்ததுமே ஆகும்; இவை தவிர அவர் காலனி நிருவாக அரசை விரும்பாத, மலாயன் பிரதேசத்தின் ஒரு தேசப் பற்றாளர் மட்டுமே, தேசப் பற்றோடு இருப்பது தனித்தீவில் அடைத்து வைக்கத் தகுந்த குற்றமன்று’ என்பதுதான். நீதியரசரோ லீயின் வாதங்களைக் கவனித்த மாதிரியே தெரியவில்லை.
ஆனால் சில நாட்களில் புனித யான் தீவிலிருந்த காவலிலிருந்து சமத் இசுமாயிலோடு சேர்த்து, அவரது நண்பர்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். இந்த வெற்றியை முழு நம்பிக்கையோடு லீ எதிர்பார்த்திருந்திருக்கவில்லை; ஆனால் இந்த வெற்றி மலாயா முழுவதும் காலனி நிருவாக அரசை வெறுத்த தேசப் பற்றாளர்களிடமும், கம்யூனிசுடு கட்சியின் உறுப்பினர்கள் மத்தியிலும், லீயுக்கு பெரும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது. சமத்தோடு விடுதலையான இன்னொரு கம்யூனிசுடு இயக்க நண்பரின் பெயர் தேவன் நாயர். அவர் பின்னாட்களில் சிங்கையின் அதிபராக சிலகாலம் இருந்தவர்; தொழிலாளர் சங்கங்களை மிகுந்த தேர்ச்சியுடன் கையாண்ட தொழிற்சங்க வாதி. தனிப்பட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளால் அவர் பின்னாட்களில் தனது நற்பெயரை இழக்க நேரிட்டது. சமத்தும், தேவன் நாயரும் விடுதலை செய்யப்பட்டதை யூசுப் இசாக் பெரிதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். லீயைப் போற்றி நன்றி தெரிவித்தார். அவர்களது இணக்கம் மேலும் இறுக்கமானது.
வழக்கு 2 – சீன மாணவர் இயக்க வழக்கு
1954 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் நாள், மலாயன் பல்கலைக் கழகத்தில் பயிலும் சில மாணவர்கள் தேசத் துரோகக் குற்றம் சாற்றப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள். அந்த மாணவர் சங்க நிருவாகிகள், லீ அந்த வழக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அவரைச் சந்தித்தார்கள். வழக்கின் விவரங்களை லீ கேட்டறிந்தார். வழக்கு இதுதான் – ஃபாசர் ( Fajar) என்ற ஒரு மாணவர் பத்திரிகை பல்கலையில் வெளிவந்தது. அந்தப் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை காலனி நிருவாக அரசைக் கடுமையாக விமரிசனம் செய்து எழுதப் பட்டிருந்தது. அரசு வெளியிட்டிருகின்ற விதிகளின் படி அது குற்றம்தான். ஆனால் தேசத் துரோகமா என்பது சட்டத்தின் விதிகளின் படி முடிவு செய்யக் கூடியது அல்ல; மாறாக அரசியல் பண்புகளின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டியது. இதனை தன்னைச் சந்தித்த மாணவர் அமைப்பு நிருவாகிகளுக்கு விளக்கிச் சொன்ன லீ, இந்த வழக்கை எவ்வாறு அணுகலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார்.
இந்த வழக்கிற்கு ஒரு பலம்மிக்க கையை இறக்கினால் இது அரசுக்கு மிகுந்த நெருக்கடியைத் தரும் என்று நோக்கில் சிந்தித்த லீ, இலண்டனில் இருந்து மகாராணியின் சட்டத்தரணியின் குழுவில் பங்கு கொண்டிருந்த, ஆனால் இடதுசாரிகளின் மீதான வழக்குகளை நடத்திப் புகழ்பெற்றிருந்த ஒரு பெயர் பெற்ற வழக்கறிஞரை, இந்த வழக்குக்காக சிங்கப்பூருக்குக் கொண்டு வந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்தார். அது ‘தேசத் துரோகம்’ பற்றிய வரைமுறையை சிங்கப்பூர் காலனி நிருவாக அரசுக்கு மீள் நினைவூட்டலாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது என்று லீ எண்ணினார். லீ உத்தேசித்திருந்த பிரித்தானிய வழக்கறிஞரின் பெயர் பிரிட்டு (D.N. Pritt). பிரிட்டு அறுபது சொச்சம் வயதானவர். அப்போது காலனி நிருவாகத்தின் கீழிருந்த நாடுகள் அனைத்தையும் கருதினாலும், ஏன் இலண்டனையும் கருதினாலும் கூட, பிரிட்டு எந்த ஒரு வழக்கு மன்ற நீதி அரசரையும் கண்டு அச்சம் கொள்ளாதவர். சமூகத்தில் பணியாளர்கள், இடது சாரிக் குழுவினர் போன்றோர் மீது அவர் கொண்டிருந்த மெல்லெண்ணம் (soft corner) காரணமாக அவர் அவர்களது வழக்குகளை எடுத்து நடத்துவார். மேன்மையான வாழ்க்கை வசதிகளுடன் வாழ்ந்தாலும் ஒரு கீழ்நிலைப் பணியாளரைப்போல ‘கிறுக்குத்தனமாக’ நடந்து கொள்ளும் ஒரு ‘மனம் பிறழ்ந்தவர்’ என்று அவரைப்பற்றி மற்ற பிரித்தானிய பிரபுத்துவ வழக்கறிஞர்கள் நினைத்தார்கள் ! லீயும், சூவும் இலண்டனில் படித்துத் தேர்ச்சி பெற்று, இலண்டன் சட்டத்தரணிகள் குழுமத்தில் (British Bar Association of legal practitioners) பதிவு செய்து கொள்ள, மூத்த வழக்கறிஞர் கைச்சான்றுக்காக பிரிட்டை இலண்டனில் அவரது வீட்டில் சந்தித்திருந்தார்கள். இலண்டன் மாநகரில் பிரிட்டு ஒரு தவிர்க்க இயலாத முக்கியமான வழக்கறிஞர். எனவே லீ அவரைத் தொடர்பு கொண்டு, அவரை சிங்கப்பூருக்கு இந்த வழக்குக்காக வாதம் செய்ய அழைப்பது என்று முடிவு செய்தார். இது ஒரு நிபுணத்துவ முடிவாக (master stroke) பின்னர் மாறியது !
இந்த வழக்கை பிரிட்டு எடுத்து நடத்த இயலுமா என்று கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினார் லீ. பொதுவாக லீயின் கடிதப் போக்கு வரத்துகள், தொலைபேசி அழைப்புகள் போன்றவை இரகசியக் காவல் படையினரால் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்ற ஐயம் லீயுக்கு இருந்தது. எனவே முக்கியமான கடிதங்களை எழுதி, தனது நண்பர்கள் வீட்டு முகவரியில் இருந்து அஞ்சல் செய்வார் லீ. பதில் அந்த நண்பர்கள் முகவரிக்கு வரும். அதனை நண்பர்கள் கொண்டு வந்து லீயிடம் ஒப்படைப்பார்கள். இந்த விசயத்திலும் லீ இந்த முறையையே கையாண்டார். பிரிட்டு போக்குவரத்துச் செலவும், ஒரு சிறிய தொகையாக கட்டணமும் கொடுத்தால், இந்த வழக்கை தான் நடத்த இயலும் என்று எழுதிய பதில் லீயிடம் வந்து சேர்ந்தது.
2வது வழக்கு – ஆயத்தங்கள்
மலாயன் பல்கலையின் மாணவர் சமூகமன்றம் இந்த வழக்குச் செலவுகளுக்காக ஒரு நிதியத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக நன்கொடைகள் திரட்டப்பட்டன. சுமார் 10000 வெள்ளி தேறியது. அந்தத் தொகை பிரிட்டு இலண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து செல்வதற்கும், அவர் சிங்கப்பூரில் தங்குவதற்கும், அவருக்கு ஒரு சிறிய பரிசும் அளிக்க இடம் தருமளவுக்கான தொகைதான். லீ ஏற்பாடுகளை விரைவாகச் செய்தார். பிரிட்டு சிங்கப்பூருக்கு வந்து இறங்கினார். அவரை அடல்பி என்ற தங்கும் விடுதியில் தங்க வைத்தார் லீ. வந்த அன்று மாலையே வழக்குக்கான விவரங்களை லீயிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டார், மிகுந்த செயல்திறம் கொண்டிருந்த பிரிட்டு.
இன்னொரு சிக்கல் இருந்தது. வெளிப் பிரதேசங்களில் இருந்து வந்து சிங்கப்பூரின் வழக்கு மன்றங்களில் வழக்காடும் எந்த ஒரு வழக்கறிஞரும், சிங்கப்பூரில் ஏழாண்டுகளுக்குக் குறையாது சட்டத்தரணிகளாக இருக்கின்ற ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் போதுமான அளவு பணியாற்றியிருக்க வேண்டும் என்றும், அந்த சட்டத்தரணி அலுவலகம், அந்தக் குறிப்பிட்ட வெளி வழக்கறிஞர் சிங்கப்பூரின் காலனி நிருவாகம் அனுசரிக்கும் சட்ட விதிகளை அறிந்திருக்கிறார் என்றும் சான்றுரைக்க வேண்டும்; அந்தச் சான்றுடன் குறிப்பிட்ட வெளி வழக்கறிஞர் குறிப்பிட்ட நீதி மன்றத்தின் நடுவரிடம் அந்த வழக்குக்கு வழக்காட விரும்பும் தனது முன்னிகையை (affidavit) அளிக்க வேண்டும். இவற்றை எல்லாம் அளித்தாலும், குறிப்பிட்ட வழக்கு மன்றத்தின் நடுவர், அந்தக் குறிப்பிட்ட வெளிவழக்கறிஞர் வாதம் செய்வதற்கு அனுமதியை மறுக்க இயலும். எனினும் லீ இந்தக் ‘காயா பழமா’ விளையாட்டுக்கு அணியமானார். ஏனெனில் பிரிட்டு 1909ஆம் ஆண்டில் பதிவு செய்து கொண்ட ஒரு வழக்கறிஞர்; 1927 முதல் பிரித்தானிய மகாராணியின் வழக்குரைஞர் குழுவில் பங்கு பெற்றிருப்பவர். சிங்கப்பூர் நீதி மன்றங்களில் 1954 வாக்கி்ல் அப்போது இருந்த எந்த ஒரு வழக்கறிஞரை விடவும், சொல்லப்போனால் எந்த ஒரு சிங்கப்பூர் நீதி மன்ற நடுவர்களை (judges) விடவும் மூத்த அனுபவசாலி. அப்படிப்பட்ட தகுதி வாய்ந்தவரை, சிங்கப்பூரின் நீதி மன்ற நடுவர் வாதிட அனுமதிக்காமல் நிராகரித்தால், அது அந்த வழக்கு மன்றத்துக்கும், அந்த நடுவருக்கும் மிகுந்த கெட்டபெயரைத் தேடித் தரும் என்று மிகச் சரியாகக் கணித்தார் லீ.
2வது வழக்கு – விசாரணையும் விளைவும்
குறிப்பிட்ட நாளில் விசாரணை நீதி மன்றத்தில் நடுவர்களிடம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கான தன்னுடைய தற்சான்றுப் பத்திரத்தை (affidavit) அளித்தார் பிரிட்டு. நடுவர்கள் மூன்று பேர் இருந்தனர். இவ்வாறு விசாரிக்க உரிமை கோரி பதியும் வழக்கறிஞர்களிடம் நடுவர்கள் கேள்விகள் கேட்டுச் சோதிக்கலாம்; அதற்கான உரிமை நடுவர்களுக்கு உண்டு. அவ்வாறு கேள்வி கேட்க முணைந்த ஒரு நடுவர், ‘ திரு. பிரிட்டு, ஒரு வழக்கறிஞர் நிலப் பரிமாற்றுப் பத்திரத்தை எவ்வாறு தயாரிக்கவேண்டும்?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார். அது ஒரு மிக அடிப்படையான ஒரு சட்டக் கேள்வி. பிரிட்டு எத்தனை சிறந்த, எத்தனை புகழ் பெற்ற ஒரு வழக்கறிஞர் என்று ஏற்கனவே பார்த்தோம். எந்தப் பந்தையும் மைதானத்துக்கு வெளியே அடிக்கின்ற மனநிலையில் இருந்த பிரிட்டு, ‘மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, மகாராணியின் குழுச் சட்டத்தரணிகள் நிலப் பரிமாற்றங்களை எல்லாம் செய்வதில்லை’ என்று மிகுந்த பாவனையான அடக்கத்துடன் மறுமொழி கூறினார். வழக்கு மன்றத்திலேயே சிலரிடம் அந்தப் பதில் வெடிச் சிரிப்பை வரவழைத்தது; அது மட்டுமில்லாமல் மறுநாள் செய்தித்தாள்களில் இந்தக் கேள்வியும் பதிலும் வெளிவந்து அரசுக்கு மேலும் தர்ம சங்கடத்தை அளித்தது. செய்தித்தாள்கள் தொடர்ந்து இந்த வழக்கைப் பற்றிய செய்திகளைப் பரபரப்பாக வெளியிட்டன. பிரிட்டு மாணவர்கள் மீது புணையப்பட்டிருந்த ‘தேசத் துரோக வழக்கின்’ குற்றச்சாட்டுகளிலேயே இருந்த போதாமைகளையும் தெளிவினைமைகளையும் சுட்டுவதில் தொடங்கி, குற்றச்சாட்டே வலுவற்றது என்று பிரித்து மேய்ந்து விட்டார். இதே நோக்கில்தான் லீ க்வான் யூவும் ஒரு அறிக்கையை இந்த வழக்கில் பதிவு செய்திருந்தார்; எனினும் சொல்வது இளைய வழக்கறிஞர் லீ என்பதற்கும் 40 ஆண்டுகள் அனுபவசாலியும் பிரித்தானிய சட்ட உலகில் புகழ்பெற்றவருமான பிரிட்டு என்பதற்குமான வேறுபாடு துலங்கி நின்றது.
பிரிட்டின் வாதம் முடிந்து அரசுத் தரப்பு வாதம் நடக்க வேண்டும். ஆனால் தலைமை நீதிபதியான திரு ப்ஃரெட்டி சுவா (Freddy Chua) பிரிட்டின் பக்கம் தீர்ப்புக் கூறி வழக்கினை மூன்றாவது நாளே முடித்து வைத்து விட்டார். ஒரு மாதிரி எதிர்பாராத சப்பென்ற முடிவாக அது அமைந்தது. எனினும் வழக்கில் வெற்றி பெற்ற மாணவர்களின் உற்சாகம் கரை கடந்தது. கூடவே லீயின் புகழும். [1]
0
இந்த இரண்டு வழக்குகளும் லீயைப் பற்றிய தெளிந்த அறிமுகத்தையும், ஆழ்ந்த நம்பிக்கையையும் மலாயா முழுதும் இருந்த மக்களிடமும் , மாணவர்கள் மத்தியிலும், அதன் மூலம் சீனஇனத்தவரின் கல்விகற்ற சமூகத்திற்கிடையிலும் கொண்டு சேர்த்தது.
இந்த நம்பிக்கைதான் 1954 இல் லீ ‘மக்கள் செயல் கட்சி’யைத் தொடங்கிய போது, மிகுந்த நம்பிக்கையும் உத்வேகமும் நிரம்பிய சில இளைஞர்களை அக்கட்சியில் இணைய வைத்ததோடு,கட்சியின் செயல்பாடுகளை பொது மக்கள் உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது.
ஒரு சிறப்பான சமூக அடித்தளத்தோடு ஆனால் எந்த வித ஆரவாரங்களும் இன்றி, மக்கள் செயல் கட்சி உதயமாக இந்தக் காரணிகள் உதவின.
(தொடரும்)
[1] Thanks to Chapters 7 and 9 of Singapore Story – My first clashes with government The world of Chinese Educated.
படம்: தேவன் நாயர்