At the end of the day, what have I got? A successful Singapore. What have I given up? My life. – Lee Kuan Yew , during an interview in late 1990’s.
மலாயா மற்றும் மலாயர்களின் நிலை
பிரித்தானியர்கள் மீண்டும் யப்பானியர்களை வென்று விட்டு மலாயா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளை 1946 வாக்கில் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோம். அவ்வாறு திரும்பி தென்கிழக்காசிய நாடுகளுக்குள் வந்தபோது அவர்கள் சில முடிவுகளை எடுத்தார்கள் . அவற்றில் ஒன்றின் விளைவாக சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் இருக்கும் ஒரு தனித்த காலனி ஆதிக்க அரசு அலகாக மாறியது என்பதை முன் அத்தியாயங்களில் கண்டோம். இதற்கான காரணத்தையும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். சிங்கப்பூர் ஒன்றுபட்டு மலாயாவில் இருந்தால், ஒன்றிணைந்த மலாயா மற்றும் சிங்கப்பூரில் சீனர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும், அது மலாயர்களின் நம்பிக்கையைக் குலைத்து விடும் என்றும் பிரித்தானிய காலனி நிருவாகம் நினைத்தது. அவ்வாறு நினைக்க என்ன பின்னணி? அதனையும் சிறிது மீள்பார்வை பார்த்து விடுவோம். யப்பானிய ஆதிக்கத்திற்கு முன்னான மலாயாவில் மலாயர்களே மண்ணின் மக்கள். மலாயாவில் வந்து தங்கியிருந்த வெளியாட்களைத் மலாயர்களுக்குச் சமமாக மலாயாச் சுல்தான்கள் நினைக்கவில்லை. இந்த எண்ணத்தில் பிரித்தானிய காலனி நிருவாகம் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றது. திரும்பவும் தென்கிழக்காசிய நாடுகளுக்குள் நுழைந்த பிரித்தானிய காலனி நிருவாகம், மலாயாவுக்கான சில விதிகளைக் கொண்டு வந்தது.
அப்போது மலாயாவில் இருந்த மலாயர்கள் இறுக்கமான மதக் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள்; அதனால் சமூக வழக்கங்களில் அவர்களை அணுகுவதைப் பொதுவாக பிரித்தானிய காலனி நிருவாகம் செய்யவில்லை. பிரித்தானிய காலனி நிருவாகம் பொதுவாக இந்த நடைமுறையைக் (உள்ளூர் சமூக வழக்கங்களில் தலையிடாமல் இருப்பது) காலனி நிருவாக நாடுகளில் கடைப்பிடித்தது. மேலும் மலாய் இனத்தவர்கள் ஒரு சமூகமாக மேலும் இறுக்கமானவர்கள். இதனால் இயல்பாக கல்வி மற்றும் சமூக முன்னேற்றங்களில் இளகுத் தன்மை இல்லாததால் மலாயர்கள் பெரிதாக முன்னேறவில்லை; பெரிதாகப் பின்னடையவும் இல்லை. ஆனால் மற்ற குடியேற்ற இனத்தவர்கள் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே வந்தார்கள். இதனால் கல்வி, வியாபாரம் போன்ற எல்லாவற்றிலும் ஒப்பீட்டளவில் மற்ற இனத்தவர்கள் முன்னேறத் தொடங்கினார்கள். இதனால் மலாயாவில் இரண்டு மட்டத்திலான மக்கள் அமையத் தொடங்கினார்கள். ஒரு மட்டம் துடிப்பு மிக்க, மலாயர்கள் அல்லாத, நவீன வணிகப்பிரிவு மக்கள். இன்னொரு மட்டம் பாரம்பரிய நிலவுரிமை கொண்டாடிய ‘மண்ணின் மைந்தர்’களாகிய மலாயர்கள்.
இந்த இரண்டு மட்டத்தில் இருந்தவர்களையும் ஓரளவுக்கு இணைய வைப்பது பொது சமூக அமைதிக்கு அவசியம் என்று திரும்பி வந்த பிரித்தானிய காலனி நிருவாகம் நினைத்தது. இதனைச் சாதிக்க சில விதிகளை அவர்கள் கொண்டு வந்தார்கள்.
புதிய விதிகளும் அவற்றின் விளைவுகளும்
மலாயாவுக்குள் திரும்பி வந்த போது மலாயன் ஒன்றியம் என்ற ஒரு பொருண்மையைக் காலனி நிருவாகம் கொண்டு வந்தது. இந்தத் திட்டம் மலாய் சுல்தான்களிடம் கலந்து பேசிய பின்னர் உருவானது இல்லை. பிரித்தானிய காலனி நிருவாக ஆட்சியின் சுயமான தீர்மானத்தில் உருவானது. அதன்படி மலாயர்களின் எண்ணற்ற சலுகைகளைச் சிறிது குறைத்து சமூகத்தை சமப்படுத்த முயன்றன சில விதிகள்; அவை மலாயர்கள் அல்லாதவர்களும் மலாயாவின் குடிமக்களாக ஆக வகை செய்தது. போதிய ஆண்டுகள் மலாயாவில் வசித்த மற்றைய இனத்தவர்களும் மலாயன் குடிமக்களாக மாற விண்ணப்பிக்கலாம். மலாயக் குடிமக்களானால் அவர்கள் குடிமக்களுக்கு உரிய எல்லா உரிமைகளையும் அவர்கள் அனுபவிக்கலாம். இவற்றி்ல வாக்குரிமையும் அடங்குவதால், தம்மை எவர் ஆளப் போகிறார்கள் என்ற தீர்மாணத்தில் இவர்களது பங்கும் இருக்கும்.
இந்த நிலை வந்த போது, இனங்களின் எண்ணிக்கை என்பது முக்கியமான ஒன்றாக மாறியது. ஏற்கெனவே பொருளியல் ரீதியாக மற்ற குடியேற்ற வாசிகள் முன்னேறிக் கொண்டிருந்ததைப் பார்த்து காய்ந்து கொண்டிருந்த மலாயர்கள், மற்ற குடியேற்ற வாசிகளுக்கு வழங்கப்பட்ட இந்த அரசியல் உரிமையைத் தங்களுக்கு பிரித்தானிய காலனி நிருவாகம் இழைத்த தீங்காகப் பார்த்தார்கள். விளைவு 1946இல் ஐக்கிய மலாயன் தேசியக் கட்சி (UMNO) உருவானது. இதன் முக்கிய நோக்கம் மலாயா மலாயர்களுக்கானது மற்றும் பிரித்தானிய காலனி நிருவாகத்தின் மலாயன் ஒன்றிய முன்வைப்பை எதிர்ப்பது. இந்தக் கட்சிக்கு வெகுவேகமாற மலாயர்கள் ஆதரவு அளித்தார்கள். எனவே காலனி நிருவாகம் மலாயா ஒன்றிய முன்வைப்பைச் சிறிது மாற்றி, மலாயாக் கூட்டரசு ஒப்பந்தமாக’ பிரகடனம் செய்தது. அதன்படி மலாயர்களுக்கு மேலும் சில கூடுதல் உதவிகள், சலுகைகள் வழங்கப்பட்டன; அதே நேரத்தில் மற்றைய இனத்தவர்களுக்கான குடிமக்கள் விண்ணப்பமும் விதிகளில் இருந்தது.
மேற்கண்ட பூசல்களின் பின்னணியே சிங்கப்பூர் தனியான அலகாகப் பிரிவு பட்டதற்கு முக்கியக் காரணம். சிங்கப்பூரும் மலாயன் கூட்டமைப்பில் இருந்திருந்தால், ஒன்றிணைந்த மலாயாவில் சீனர்கள் எண்ணிக்கை மலாயர்களின் எண்ணிக்கைவிட கூடும் நிலை இருந்ததால், சிங்கப்பூரைப் பிரிப்பதன் மூலம், மலாயர்களின் பெரும்பான்மை எண்ணிக்கையை மலாயாவுக்குள் பேண இயலும்; அது மலாயர்களின் எண்ணத்தில் சிறிது அமைதியைக் கொண்டு வரலாம் என்று பிரித்தானிய காலனி நிருவாகம் நினைத்தது. ஆனால் இறுதியில் அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை.
1948இன் அவசர நிலையும், சிங்கப்பூரின் முதல் தேர்தலும்
மேற்கண்ட சச்சரவுகள் மேலும் முறுகிய நிலையில்தான் காலனி நிருவாகம் அவசர நிலையைக் கொண்டு வந்து நிலையைச் சமாளிக்க முயன்றது. அரசுத் துறைப் பணியாளர்களுக்கு அவசர நிலையை ஒட்டிய புதிய விதிகள் விதிக்கப்படுகின்றன. கம்யூனிச இயக்கத்தின் தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டு தீவுச் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். அரசின் இறுக்கம் நிருவாகத்தில் கூடியது. கூடவே 1948இல் முதல் தேர்தல் நடைபெற்று சட்டமன்றம் (Legisative Council) உருவானது. அதில் ஆறு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் புதிய அரசியல் கட்சிகள் உருவானதும், அவர்களில் சிலர் பொது மக்களிடம் அனுதாபமும் பலமும் பெறுவதும் நடக்கிறது. லீ க்வான் யூவும் நண்பர்களும் அவ்வாறு கவனம் பெற்ற குழுவினர்தான். அவர்கள் 1954இல் மக்கள் செயல் கட்சியைத் தொடங்கினார்கள். 1945இல் பிரித்தானிய ஆதிக்கம் திரும்பவும் தென்கிழக்காசியாவுக்குள் நுழைந்ததில் இருந்து 1955ஆம் ஆண்டுக்குள் மலாயா சனநாயக கூட்டமைப்பு (எம்டியு என்ற மலாயான் டெமாக்ரடிக் யூனியன்), சிங்கப்பூர் முற்போக்கு கட்சி, சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி போன்ற கட்சிகள் தொடங்கப்படுகின்றன. சிங்கப்பூர் தொழிலாளர் கட்சியின் தலைவர் டேவிட் மார்சல் என்ற வழக்கறிஞர்.
அடுத்த கட்ட சட்ட மன்றத் தேர்தலில் சட்ட மன்றத்துக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதோடு, பெரும்பான்மை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுமாறு விதிகள் மாற்றப்படுகின்றன. சிங்கப்பூரிய மக்களுக்குத் தன்னாட்சி உரிமைக்கு இதன்மூலம் வழிகோலப்படுகின்றது.
1955 தேர்தல் – சட்டமன்றத்துக்குள் நுழைந்த லீ க்வான் யூ
1955ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் நாள் வேட்பாளர் பதிவுக்காக நிர்ணயிக்கப்பட்டு சிங்கப்பூரின் முதல் விரிவாக்கப்பட்ட சட்ட மன்றத்துக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல் வாக்களிப்பு நாள் ஏப்ரல் 2’ஆம் நாள். மக்கள் செயல் கட்சி ஐந்து இடங்களில் போட்டியிடத் தேர்வு செய்தது. இந்த முடிவு மிக ஆழ்ந்த விவாதத்துக்குப் பின்னர் எடுத்த ஒன்று. புகித் திம்மா தொகுதிக்கு லிம் சின் சியாங், ஃபேரர் பூங்கா தொகுதிக்கு தேவன் நாயர், பூங்கோல் தாம்பனீசு தொகுதிக்கு கோ சூ சுவா என்ற 60 வயதான தொழில் முனைவர், தஞ்சோங் பகர் தொகுதிக்கு லீ க்வான் யூ, செம்பவாங் தொகுதியில் சுயைச்சையாக ஆனால் மக்கள் செயல் கட்சி ஆதரவு தரும் வேட்பாளராக அகமது இப்ராகிம் என்ற ஐவரே மக்கள் செயல் கட்சியின் தேர்தல் வேட்பாளர்கள். இந்தத் தேர்தல் கட்சி தொடங்கி ஓராண்டுக்குள் வந்த முதல் தேர்தல். கட்சிக்கு அமைப்பு ரீதியாக வேலை செய்யப் பெரிய ஆள்படைகள் இல்லை. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கியத்தவர்களில் பெரும்பான்மையர் முழுநேர அரசியல்வாதிகள் அல்ல. (இன்றளவும் ‘முழுநேர அரசியல் வாதி’ என்ற ஒரு தேர்வு மக்கள் செயல் கட்சியில் இல்லை. பொதுச்செயலாளர், பிரதமர், மதியுரை அமைச்சர், அதிபர் என்று சில முக்கியத்தவர்கைத் தவிர மற்றவர்கள் மற்ற ஒரு புலத்தில் மிகச் சிறந்த திறமை பெற்றிருந்து பின்னர் மக்கள் செயல் கட்சிக்கு அழைக்கப்பட்டு வருபவர்கள்தான். அப்பா, மகன், பெயரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் என்று வம்சவழியாக சிங்கப்பூரில் அரசியல் இருப்பதில்லை. அதுவும் மக்கள் செயல் கட்சியில் இருப்பதில்லை. அரசியலில் இருந்து குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெறுபவர்கள் தங்கள் பழைய பணிப்புலத்துக்குச் சென்று பழைய பணியைத் தொடர்வது மிக சாதாரணமாக நடக்கும் ஒன்று).
இந்த நிலையில் முழுமூச்சாக தேர்தல் பிரச்சாரத்துக்கு அனைத்துத் தொகுதிகளிலும் சென்று பணியாற்றவும், கூட்டங்கள் நடத்தவும் பெரு முயற்சி ஏடுக்க வேண்டியிருந்தது. லீ க்வான் யூ ஒருவர் மட்டுமே ஐந்து தொகுதிகளுக்கும் சென்று கூட்டங்களில் பேசிப் பிரச்சாரம் செய்தார். கூட மாட ஒத்தாசைகளுக்கு தொழிலாளர் அமைப்புகளில் இருந்தும், சீன மாணவர்கள் கூட்டமைப்பில் இருந்தும் வந்த தன்னார்வலர்கள்தான். காசு கொடுக்கப்பட்ட அல்லது மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கின்ற கட்சி அமைப்பில் பல நிலைகளில் பணியாளர் அல்லது குழுக்கள் என்று எதுவும் இல்லை. பிரச்சாரத்தில் பலர் லீ க்வான் யூவுக்காக உதவ முன்வந்தார்கள்; தங்களுடைய வாகனங்களை அனுப்பினார்கள். அவர்களுக்கு லீ க்வான் யூவின் மீது ஒரு நம்பிக்கை நான்கு வருடங்களில் ஏற்பட்டிருந்தது.
முடிவுகள் வந்த போது, மக்கள் செயல் கட்சியில் போட்டியிட்ட ஐந்து பேர்களில் தேவன் நாயர் தவிர மற்ற நால்வரும் வென்றிருந்தார்கள். லீ க்வான் யூ அந்தத் தேர்தலில் போட்டியிட்ட எந்த ஒரு வேட்பாளரையும் விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தாங்கள் போட்டியிட்ட 17 இடங்களில் பத்து இடங்களில் வென்று, டேவிட் மார்சலின் கீழ் போட்டியிட்ட தொழிலாளர் கட்சி சட்ட மன்றத்தை அமைத்தது. லீ க்வான் யூவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களும் எதிர்க் கட்சி உறுப்பினர்களாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்கள்.
சிங்கப்பூர் சட்ட மன்றம், பின்னாளைய நவீன சிங்கப்பூரின் சிற்பியை 1955இல் இவ்வாறாக வரவேற்றது.
(தொடரும்)