Skip to content
Home » சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #13 – சட்ட மன்றத்தில் மக்கள் செயல் கட்சி

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #13 – சட்ட மன்றத்தில் மக்கள் செயல் கட்சி

‘I believe that life is a process of continuous change and a constant struggle to make that change one for the better’ – LKY

முதல் தேர்தலின் விளைவுகள்

சிங்கப்பூரின் முதல் முழு தேர்தலான 1955இல் தொழிலாளர் கட்சி வென்றது என்றும், அதன் தலைவரான டேவிட் மார்சல் முதலமைச்சராகப் பதவியேற்றார் என்றும் பார்த்தோம். லீ க்வான் யூவின் மக்கள் செயல் கட்சி தாம் நின்ற ஐந்து இடங்களில் நான்கை வென்றிருந்தது. சீன மாணவர் குழு மற்றும் பொதுவுடைமைக் கட்சியின் பின்னணி (மலாயன் கம்யூனிசுட்டு கட்சி- எம்சியு) கொண்டிருந்த லிம் சின் சியாங், லீ க்வான் யூவின் நண்பரும் மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதிப் படுத்திய அகமது இப்ராகிம், கோ சூ சுவா, இம்மூவருடன் சேர்ந்து லீ க்வான் யூ என நான்கு பேர் வெற்றி பெற்றிருந்தனர்.  தேவன்நாயர் ஒருவர் மட்டுமே தோல்வியுற்றார். லீ க்வான் யூ அவர் போட்டியிட்ட தஞ்சோங் பாகர் தொகுதியில் 6030 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அத்தொகுதியில் போட்டியிட்ட மற்ற இரு கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 908 மற்றும் 730 வாக்குகள் பெற்றார்கள். 

லீ க்வான் யூ சிங்கப்பூரின் அனைத்து தொகுதிகளின் கணக்கில் மிக அதிக வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராகவும் சட்ட மன்றத்துக்குள் நுழைந்தார். 1947இல் தொடங்கிய  முற்போக்குக் கட்சி (Progressive Party) தோல்வியடைந்தது. அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரானவரும், லீ க்வான் யூவின் அலுவலக முதலாளிப் பங்காளருமான  யான் லேகாக் (Jhon Laycock), தேர்தலில் தோல்வியடைந்தார்.  இதனால் அலுவலகத்தில் லீ க்வான் யூவுக்கும் அவருடைய முதலாளில் பங்காளருமான லே காக்குக்கும் சிறிய மனவிரிசல் ஏற்பட்டது. வயதில் சிறிய இளைஞனாக தனது அலுவலகத்தில் நுழைந்த லீ க்வான் யூவின் அரசியல் வளர்ச்சியும் , அவர் அடைந்திருந்த புகழும் லே காக்கை சிறிது பாதித்தது. ஏற்கெனவே லீ க்வான் யூ புகழடையத் தொடங்கியபோது, மாதச் சம்பளக் காரராக இருந்த அவரை தொழில் பங்காளியாக (பார்ட்னர்) லே காக் சில வருடங்களுக்கு முன்னே சேர்த்துக் கொண்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தின் படி, லீ க்வான் யூவுக்கும், அவரது மனைவி சூவுக்கும் வழங்கப்பட்டு வந்த மாதச் சம்பளத்தைக் காட்டிலும் அதிகத் தொகை, குறைந்த பட்ச வருட பங்குத் தொகையாக லீயுக்கு அளிக்க முன்வந்திருந்தார். எனவே லீ அதனை ஒத்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் லீ க்வான் யூவுக்கு அவரது முதல் மகனான லீ சியன் யூ பிறந்திருந்ததாலும், சூ தனது சட்டத் தரணி வேலையைத் தற்காலிகமாகத் துறந்திருந்தார். அதோடு அவர் அடுத்த குழந்தையையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.  

ஆனால் தான் தோற்றிருந்த நிலையில், லீ க்வான் யூவும் அவரது கட்சியும் பெற்றிருந்த வெற்றி லே காக்குக்கு எரிச்சலைக் கிளப்பியிருக்கலாம். எனவே லீ க்வான் யூ தனது அலுவலகத்தில் வகித்த பங்காளி ஒப்பந்தத்தையும் முறித்துக் கொண்டு விலகலாம்  என்று லீ க்வான் யூவிடம் தெரிவித்தார் லே காக். அதனை  ஒப்புக் கொண்ட லீ, லேகாக்கின் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே வேறொரு இடத்தைப் பிடித்து தனது தனியான சட்டத் தரணி அலுவலகத்தைத் தொடங்கினார். அதற்கு லீ அன்ட் லீ (Lee & Lee) என்ற பெயர் சூட்டப்பட்டது. லீ க்வான் யூ, அவரது சகோதரர் தெனிசு லீ (Dennis Lee), அவரது மனைவி சூ ஆகிய மூவரும் அந்தப் புதிய அலுவலகத்தில் பங்காளிகளாக இருந்தார்கள். 

கட்சியைப் பொறுத்த அளவில் சீனமொழியில் படித்த இளையர்களைக் கவருவதற்காக, சீன  மாணவர் மற்றும் இளையர் குழுவில் இருந்து மக்கள் செயல் கட்சிக்குள் வந்த லிம் சின் சியாங் போன்றவர்களை லீ க்வான் யூ ஊக்கப்படுத்தினார். ஆனால் அடிப்படையில் லிம் சின் சியாங் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் பிரிவான மலாயன் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர். எம்சியு என்ற அக் கட்சி, பொதுக் கூட்டங்களில் தனது அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர்கள் பேசும் போது, மக்களிடையே அவர்களுக்கு நற்பெயர் பெற்றுத் தர ‘சில ஏற்பாடுகளைச்’ செய்வதை வழக்கமாக வைத்திருந்தது. அதன்படி, முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முப்பது, நாற்பது பேர் பொதுக் கூட்ட மக்களோடு மக்களாகக் கலந்திருப்பார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் தூரத்தில் கூட்டம் முழுவதும் கலந்திருப்பார்கள். தங்களது கட்சியைச் சேர்ந்த பேச்சாளர்கள் மேடையில் பேசும்போது, இந்த ‘கூட்ட ஏற்பாட்டாளர்களின் தலைமைப் பொறுப்பாளர்’ ஏதாவது ஒரு உடற்குறி மூலம் ஒரு சைகையைச் செய்வா்; அந்த சைகையைக் கண்ட மற்ற அனைவரும் உடனே பேச்சாளருக்கு ஆகாகாரம் செய்து கைதட்டி குரலொலி எழுப்புவார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது, குறிப்பிட்ட அந்தப் பேச்சாளர் ‘நன்றாகப் பேசுகிறார்’ என்ற எண்ணம் மக்களிடேயே எழும், அவ்வாறு பொதுக் கருத்தை எழுப்புவார்கள்; போலவே தங்களுக்கு வேண்டாதவர்களது பேச்சு மற்றும் செயல்களை மக்களிடேயே கீழ்த்தரமாகக் கொண்டுசெல்லும் உத்திகளையும் எம்சியு செய்து வந்தது. இது போன்ற செயல்கள் மூலம் தாங்கள் விரும்பியவர்களை பொதுவெளிக்குக் கொண்டு வருவது அல்லது பொதுவெளியில் இருந்து விரட்டுவது போன்ற செயல்களை, மலாயன் பொதுவுடைமைக் கட்சி செய்து வந்தது. இந்த உத்திகள் சீன மொழி மட்டுமே அறிந்த பொதுசனங்களிடம் நன்றாக எடுபட்டன. 

தொடக்கத்தில்  இது போன்ற உத்திகள் நடைபெறுவதை அறிந்திராத லீ க்வான் யூ, வெகு சீக்கிரத்தில் தனது கட்சிப் பொதுக் கூட்டங்கள் பேரணிகளிலேயே, இவை நடைபெறுவதைக் கண்ணுற்றார். எனினும் லீ சின் சியாங் போன்ற நல்ல நோக்கமும் உற்சாகமும்  பொதுப்பணி ஆர்வமும் கொண்டிருந்த லீ சின் போன்றவர்களை பொதுக் களத்துக்குக் கொண்டு வரவேண்டும்  என்ற உறுதி கொண்டிருந்த லீ க்வான் யூ, பொதுவுடைமைக் கட்சியின் இந்தக் குழப்பச் செயல்களைத் தற்காலிகமாகப் பொறுத்துக் கொள்வது என்று தீர்மானித்திருந்தார். அதே நேரம் சிங்கப்பூரின் பொது நன்மைக்கு அந்தச் செயல்கள் இடரைக் கொண்டுவரும் என்று தெரிந்தால், அவற்றை ஒறுத்து ஒழித்துக் கட்டவும் அவர் அணியமாக இருந்தார். சிங்கப்பூர் மற்றும் மலாயா அளவில் பொதுமக்களிடம் தனது கட்சியைக் கொண்டு சேர்க்க சிலவற்றில் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் மேற்சொன்னவற்றின் மூலம் லீ க்வான் யூவுக்குக் கிடைத்திருந்தது. அதே நேரம் தம்முடைய பேச்சும், கோ கெங் சுவீ, இராசரட்னம்  போன்றோர் பேச்சுகள் ஆங்கிலம் படித்திருந்த சீனப் பொதுமக்களிடம் வெகுவாக எடுபட்டதையும் லீ க்வான் யூ குறிப்பாகத் தெரிந்து வைத்திருந்தார்.  அனைத்து மக்கள் திரளிடம் தனது கொள்கைகளும், கட்சியின் நோக்கமும் சென்று சேருவதன் அவசியத்தை அவர் முக்கியமாகக் கருதியிருந்ததால், இவ்வாறு ஒவ்வொன்றிலும் தனது கவனத்தைச் செலுத்திக் காரியங்களைச் செய்து வந்தார் லீ க்வான் யூ.

சட்ட மன்றத்தில் கட்சிகளின் சூழல்

1955 தேர்தலில் சிங்கப்பூர் அரசியல் களத்தில் அதுவரை முக்கியமாக இருந்த இரண்டு அரசியல் கட்சிகள் பலத்த அடி வாங்கின. அவற்றில் ஒன்று முற்போக்குக் கட்சி; இரண்டாவது சனநாயகக் கட்சி. (ப்ராகரசிவ் பார்ட்டி மற்றும் டெமாக்ரடிக் பார்ட்டி). இவை இரண்டையும் லீ க்வான் யூவின் மக்கள் செயல் கட்சி கூர்மையாக விமர்சித்திருந்தது. முன்னதை பிரித்தானிய ஆட்சியாளர்களின் கைக்கூலிக் கட்சி என்றும், சனநாயகக் கட்சியை முதலாளித்துவத்துக்கு ஆதரவான கட்சி என்றும் கடுமையாக மக்கள் செயல் கட்சி கிடுக்கம் செய்திருந்தது. பதினோரு இடங்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்த முற்போக்குக் கட்சியின் டேவிட் மார்சல் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். அவர் லீ க்வான் யூவுக்கு அறிந்த நண்பர் தான் எனினும் அரசியல் நீரோட்டத்தைக் கச்சிதமாகக் கணிப்பதிலோ, மக்களின் மனநிலையைத் தெளிவாக உணர்ந்து கொள்வதிலோ அத்தனை திறம் பெற்றிருந்தவராக இல்லை. எனினும் அக்கட்சி அதிக இடங்களைப் பெற்றிருந்ததால் அதுவே அரசை அமைத்தது. [1]

 

டேவிட் மார்சல் – 1955 தேர்தலில் வென்ற முற்போக்குக் கட்சியின் முதலமைச்சர்

 

மக்கள் செயல் கட்சி புதிய கட்சியாகத் தொடங்கியிருந்தாலும் அக்கட்சி மக்களிடமும், பிரித்தானிய காலனி நிருவாகத்திடமும் பெரிதாகக் கவனம் பெற்றது. லீ க்வான் யூவின் தேர்தல் பேரணிப் பேச்சுகள் பிரித்தானிய காலனி நிருவாகத்தின் இரகசியப்போலீசுப்பிரிவின் மூலம் கவனமாகக் குறிப்பெடுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டன. (சிங்கப்பூர் அரசின் ஆவணங்களாக இருந்த இந்த அரசு ஆவணங்களைப் பின்னாட்களி்ல் படித்தறிந்து அவற்றைத் தனது நூலான தி சிங்கப்பூர் சுடோரியில் மறு ஆவணப்படுத்தியிருக்கிறார் லீ க்வான் யூ!) [2].    அத்தகைய ஒரு பேச்சில் பின்வரும் கருத்தை 1955லேயே வெளிப்படுத்தியிருக்கிறார் லீ க்வான் யூ; அப்போது அவருக்கு வயது முப்பத்து இரண்டுதான் என்பதை நினைவில் கொண்டு இதனைப் படிக்க வேண்டும்;  ‘இப்போது 40 வயதும் அதற்கு மேலும் உள்ள மலாயச் சீனர்களுக்கு மாசேதுங்கும், சீன அரசாங்கமும் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து விட்டதாக பெரும் நம்பிக்கை இருக்கிறது. மாசேவின் தலைமையில் சீனம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் உளமாற நம்புகிறார்கள். அந்த மூத்த தலைமுறை சீனர்களுக்கு சீனப் பெருநிலம் தான் ஆதர்சமான நிலமாக இருக்கிறது; அதே நேரத்தில் மலாயாவில் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற ஒரு தலைமுறை மலாயன் சீனர்களுக்கு இவற்றில் மாற்றுக் கருத்து இருக்கிறது. அவர்கள் மலாயாவைக் கட்டி எழுப்ப விரும்புகிறார்கள். அவர்களிலும் ஒரு சிறு விகிதமான இளையர்கள், முதல் வாய்ப்பில் சீனத்துக்குத் திரும்பிச் சென்று விடுவார்கள்தான். ஆனால் பெருவாரியான ஒரு இளைய தலைமுறைச் சீனர்கள், சீனமொழிக் கல்வி பயின்றாலும், மலாயன் தேசத்தைக் கட்டி எழுப்ப விரும்புகிறார்கள். மேலும் நாட்கள் செல்லச் செல்ல அந்த நோக்கத்தில் உள்ள சீனர்கள் மேலும் பெருகுவார்கள் என்றே நான் நம்புகிறேன். அவர்களை நோக்கித்தான் நான் பேசுகிறேன்’  என்று அந்தப்பேச்சில் பேசியிருக்கிறார் லீ. அந்தப் பேச்சு பிரித்தானிய காலனி நிருவாக அரசின் இரகசியப் போலீசால் குறிப்பெடுக்கப்பட்டு இங்கிலாந்து வரை அனுப்பப் பட்ட விவரங்களைப் பதிவு செய்கிறார் லீ. இதன் மூலம் லீ எத்தகைய ஒரு மலாயன் மலேசியா என்ற தேசக் கட்டமைப்பை தனது நோக்கமாக வைத்திருந்தார் என்பதும், உள்ளூர் மக்களை மொழி மற்றும் இனங்களை மீறி எவ்வாறு ஒன்றிணைக்க விரும்பினார் என்றும் நமக்குப் புலனாகும்.  மக்களிடம் இவ்வாறு பேசிய அதே நேரத்தில் பிரித்தானிய காலனி அரசிடம்,  எம்சிபி என்ற மலாயன் கம்யூனிசக் கட்சியின் மீதிருந்த தடையை நீக்கவும் மக்கள் செயல் கட்சி அதிகாரபூர்வமாக கோரிக்கை வைத்திருந்தது. ஒரு ஆரோக்கியமான, உள்ளூர் மக்களின் விருப்பங்கள், ஆர்வங்கள், இலக்குகள் போன்றவற்றைப் பெற்றுத் தரும் ஒரு அரசியலை சிங்கப்பூரிலும், மலாயன் மலேசியாவிலும் ஏற்படுத்துவது லீ க்வான் யூவின் நோக்கமாக இருந்தது எனலாம். 

சட்ட மன்றத்தில் லீ க்வான் யூ

சீன மொழி படித்திருந்த பொது சனங்களிடம் எம்சிபி என்ற மலாயன் கம்யூனிசக் கட்சி பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது; அதே நேரத்தில் மக்கள் செயல் கட்சி போன்ற புதிய, புத்தாக்க நிலை அரசியலை முன்வைக்கும் கட்சிகளிடம் இளையர்களுக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் கம்யூனிசக் கட்சியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த இளையர்கள் முன்னேற்றம் சார்ந்த பொதுநோக்கு அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றால் கம்யூனிசக் கட்சியின் தாக்கத்தில் இருந்து அந்த இளையர்கள் விடுபட வேண்டிய தேவையும் இருந்தது; இதற்கு பொது நோக்கு அரசியலில் நிறுவன நோக்கில் பணி செய்ய வேண்டிய தேவையும் அதற்கான நம்பகமான பணி செய்யும் ஆட்களும் தேவைப்பட்டார்கள். லிம் போன்ற இளையர்களை அதற்காகத் தேடிப் பிடிக்கவேண்டிய தேவையும், கட்சி அரசியலைப் பலப்படுத்த வேண்டிய தேவையும், சட்ட மன்றத்தில் அதே நேரம் கூர்ப்புடன் இயங்கவேண்டிய தேவையும் லீயூக்கு ஒரே நேரத்தில் எழுந்தன. இதற்கான கணிசமான நேரமும், முயற்சியும் தேவைப்பட்டன. சட்ட மன்றத்தில் ஏற்கனவே லீயின் பேச்சுக்கள் கவனமாகக் கேட்கப்பட்டன. பொதுவெளியில் அவரது பேச்சுக்களுக்கும் கருத்துக்கும் கூர்ந்த கவனிப்பு எழுந்தது. முதலமைச்சர் மார்சலின் ஆசனத்துக்கு எதிரான வரிசையில் லீ க்வான் யூவுக்கு சட்ட மன்றத்தில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

இன்னும் 1948-49இல் அறிவிக்கப்பட்ட அவசரநிலை இன்னும் நீட்டிப்பில் இருந்தது. எம்சிபி போன்ற கட்சிகள் தடைசெய்யப்பட்டிருந்தன. கம்யூனிசத் தீவிரவாத நம்பிக்கை இருப்பவர்கள் தங்கள் கருத்துகளையும் நோக்கங்களையும் விதைக்க தீவிரவாதச் செயல்களையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதால், அவர்களது நடவடிக்கைகளினால் பொது அரசியலில் ஏற்படக் கூடிய நிலை மாற்றங்கள் பற்றியும் மக்கள் செயல் கட்சி கவனம் கொண்டிருக்க வேண்டியிருந்தது. 

அப்போது வில்லியம் கூடே (William Goode) என்பவர் சிங்கப்பூர் அரசாங்கத்தின்  முதன்மைச் செயல் அதிகாரியாக (சீஃப் செக்ரடரி) இருந்தார். அந்தப் பிரித்தானியர் ஆக்சுபோர்டில் கல்வியும், இரண்டாம் உலகப் போரின் போர் அனுபவம் பெற்ற படைவீரராகவும் அனுபவம் பெற்றவராயிருந்தார். மேலும்  அவர், சயாம் மரண இரயில் என்று அழைக்கப்பட்ட தாய்லாந்து இரயில் பாதை அமைப்பில் ஈடுப்பட்டுத் திரும்பி வந்திருந்த ஒரு பழைய போர்க்கைதியும் கூட. அவருக்கு எம்சியு பிரிவின் கம்யூனிசத் தீவிரவாதிகள் எந்த அளவுக்குச் செல்வார்கள் என்பதில்  தெளிவான புரிதல் இருந்தது. 

சட்ட மன்றத்தில் மக்கள் செயல் கட்சி எம்சிபியின் மீதிருந்த தடையை விலக்கிக் கொள்ளவேண்டும்; அரசரநிலைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும் என்றெல்லாம் வாதங்களை முன்வைத்த போது, கள அரசியலின் உண்மை நிலவரங்களை லீ க்வான் யூவுக்குப் புரிய வைக்க கூடே முயன்றார். 

நல்ல மக்களாட்சியின் சூழலில் தேவையற்ற கட்டுப் பாடுகள் இல்லாத, பொதுநோக்கு அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்த லீ க்வான் யூவுக்கு,  தொடக்கத்தில் கூடே போன்றவர்கள்தான் அரசின் தேவையற்ற கடுமைக்குக் காரணம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல ஓரிரண்டு ஆண்டுகளில் லீ க்வான் யூ, தமது எண்ணங்களில் இருந்த அனுமானங்களைச் சீர்தூக்கிப் பார்த்து,  தனது பார்வைகளை நீக்குப் போக்காக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்து கொண்டார். இந்த மாற்றத்தையும் நேர்மையாகத் தனது நூலில் பதிவும் செய்திருக்கிறார் லீ க்வான் யூ. 

எனினும் அவரே தொடக்கத்தில் சட்ட மன்றத்தில் மக்களாட்சியின் மீது நம்பிக்கை பிறக்க வேண்டுமானால், தேவையற்ற அதீத கட்டுப்பாடுகளை அரசு நீக்க வேண்டும் என்ற ஆணித்தரமாக தனது வாதங்களை வைத்து வந்தார் லீ. பார்வையாளர்கள் பிரிவில் எப்போதும் நிறைந்திருக்கும் செய்தியாளர்களுக்கு 1955இல் அமைந்த சட்டமன்றத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக லீ க்வான் யூவின் குரல் இருக்கப் போகிறது என்ற எண்ணம் அந்த சட்ட மன்றக் கூட்டத்தின் தொடக்கத்திலேயே வந்து விட்டது. இதன் தாக்கம் சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியில் செய்தியாளர்கள் மத்தியிலும்  புலப்படத் தொடங்கியது. சிங்கப்பூர் அரசியலில் ஆளும் தரப்பு எத்தனை முக்கியத்துவம் கொண்டிருந்ததோ, அதற்கு இணையான கவனத்தை லீ க்வான் யூவும் மக்கள் செயல் கட்சியும் பெறத் தொடங்கியிருந்தன. 

(தொடரும்)

[1] 1955 தேர்தலின் சிங்கப்பூர் அமைச்சரவை – https://en.wikipedia.org/wiki/First_David_Marshall_Cabinet

[2] Chapter 11 – Round one to the communists: The Singapore Story – அத்தியாயம் பதினொன்று – பொதுவுடைமைக் கட்சியினரோடான முதல் சுற்று

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *