Skip to content
Home » தாகூர் #14 – இழப்பும் விடுதலையும்

தாகூர் #14 – இழப்பும் விடுதலையும்

இழப்பும் விடுதலையும்

ரவீந்திரரின் முதுமைக் காலத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்டனர்: ‘உங்களின் மிகச் சிறந்த குணம் எது?’ இக்கேள்விக்கு, ‘நிச்சயமற்ற தன்மை’ என்று அவர் பதிலளித்தார். மீண்டும் ‘உங்களின் மிகப் பெரும் பலவீனம் எது?’ என்று கேட்டபோது ‘அதே குணம்தான்!’ என்றார்.

எந்தவொரு நேரத்திலும், தான் சொல்வதிலும், செய்வதிலும் உளப்பூர்வமாக இருக்கும் அவர் அடுத்த நாளில் என்ன செய்வார் என்று எவராலும் கணிக்கவியலாது. தன் அறிவுக் கூர்மையையே பெரிதும் நம்பியிருந்த அவர், எவரும் அறியாத பாதைகளில் பயணிக்கவும், தன் ‘வாழ்க்கை தேவதை’யின் அழைப்பிற்கு இணங்க தன் முந்தைய சாதனைகளையும் உறுதிமொழிகளையும் தூக்கி எறிந்து விட்டுப் போகவும் தயங்கியதில்லை.

தேசிய விடுதலை என்ற உணர்வை நசுக்கும் நோக்குடன் 1898இல் பிரிட்டிஷ் காலனி ஆட்சி தேசவிரோத சட்டத்தை நிறைவேற்றி, மாபெரும் அறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான திலகரை அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தபோது, கல்கத்தாவில் இந்த மசோதா சட்டம் ஆவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் ‘நெறிக்கப்படும் குரல்வளை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை படித்தார் ரவீந்திரர்.

பின்பு திலகரின் விடுதலைக்கான நிதி திரட்டலிலும் தீவிரமாக ஈடுபட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு கல்கத்தா நகரில் ‘ப்ளேக்‘ நோய் பரவத் தொடங்கியபோது சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவுடன் இணைந்து நிவாரண, மருத்துவ முகாம்களையும் அவர் நடத்தினார்.

இந்தக் காலப் பகுதியில் வெளியான கதா – காஹினி என்ற இரண்டு தொகுதிகளும் இந்தியாவின் செறிவான இலக்கியங்களில் இருந்த வீரச் செயல்கள், வரலாற்று நிகழ்வுகள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் ஆகியோரின் வரலாற்றில் தென்பட்ட வீரம், தியாகம் ஆகிய இந்தியாவின் அறநெறி வழிப்பட்ட, ஆன்மீக வழிப்பட்ட பாரம்பரியங்களை மக்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதாக இருந்தன.

எனினும் இந்த எழுத்துக்கள் அரசியல் அல்லது கலாசார ரீதியாக எவ்வித வெறியுணர்ச்சியையும் தூண்டுவதாக இருக்கவில்லை. உண்மை, எளிமை, அனைவரையும் நேசிக்கும் அன்பு என்ற கருத்துகளை வலியுறுத்துவதாக்கவே அவை இருந்தன. நாட்டுப்பற்றைத் தீவிரமாக வெளிப்படுத்திய அவரது எழுத்துகள் எவ்வகையிலும் தாய்நாட்டின் பெருமை குறித்து வெறித்தனம் மிக்கதாக இருக்கவில்லை.

எனவேதான் அவரது மறைவிற்குப் பிறகு எண்ணற்ற புகழ்மாலைகள் சூட்டப்பட்ட போதிலும், அவர் உயிரோடு இருந்த காலத்தில், அரசியல் களத்தில், ரவீந்திரரின் கருத்துக்கள் மக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றிருக்கவில்லை.

1900 டிசம்பர் 31 அன்று மாலை எழுதிய ஒரு கவிதையில் அவர் இவ்வாறு சித்தரித்து இருந்தார்:

‘ரத்தச் சிவப்பான மேகங்களுக்கிடையே,
வெறுப்பெனும் சூறாவளிக்கிடையே
இந்த நூற்றாண்டின் ஆதவன் மறைந்து போனான்.
நாடுகளின் சுயமோகம் எனும் அப்பட்டமான வெறி,
பேராசை எனும் போதையோடு,
பழிக்குப் பழி என்ற வெறிக் கூச்சலோடு
வாள்களைச் சுழற்றியபடி நாட்டியமாடிக் கொண்டிருக்கிறது
கவிஞர்கள் கூட்டமோ
பயமுறுத்தும் வகையில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றது
வீசி எறியப்பட்ட வசவுகள் சுடுகாட்டில்
ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன!’

இருபதாம் நூற்றாண்டின் அடிநாதமான சாபம் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியம்தான் என்று ரவீந்திரர் கருதினார். இதை ஒரு கட்டுரையில் அவர் மேலும் விரிவாக விளக்கியிருந்தார்: ‘அதிகரித்துக் கொண்டே போகும் ராணுவ வாதத்தின் ரத்தப் பெருக்கால் ஐரோப்பாவின் கன்னங்கள் வீங்கிக்கொண்டே போகின்றன. இந்தச் சிவப்பு நல்ல உடல்நலத்தையா குறிக்கிறது? இல்லை. வீங்கிக் கொண்டே போகும் உடலைப் போல, தேசியவாதம் அதன் இதயத்தை, அடிநாதத்தை, மத ரீதியான குறிக்கோள்களை ஊடுருவியுள்ள ஒரு நோயாக இருக்கிறது என்பதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?’

20ஆம் நூற்றாண்டின் முதல் ஆண்டில் கருத்தோட்ட ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்ட அதே நேரத்தில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நண்பரும் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற அறிவியல் நிபுணருமான ஜகதீஷ் சந்திர போஸ் இங்கிலாந்தில் தாவரங்கள் மீதான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான நிதியைத் திரட்டுவதில் அவர் ஈடுபட்டு வந்தார். அதே நேரத்தில் அந்த ஆண்டின் இறுதியில் சாந்திநிகேதனில் ஒரு பள்ளியைத் தொடங்கும் தனது திட்டத்திற்கான நிதியையும் அவர் தீவிரமாகச் சேகரிக்க வேண்டியிருந்தது.

இந்தப் பின்னணியில்தான் 14 வயதே ஆன தன் மூத்த மகள் மாதுரிலதாவுக்கும் (பெலி), 12 வயது கூட நிறைவடையாத இரண்டாவது மகள் ரேணுகாவுக்கும் (ராணி) ஒரு மாத இடைவெளியில் திருமணம் நடத்தினார். சுயமாக நிதி திரட்ட முடியாத நிலையில் இத்திருமணங்களுக்குத் தன் தந்தையின் உதவியை அவர் நாட வேண்டியிருந்தது. மூத்த மகளை மணம் செய்து கொண்ட சரத் குமார் சக்ரவர்த்தி பீகாரின் முசாபர்பூரில் வசித்து வந்த ஒரு வழக்கறிஞர் எனில், இளைய மகளை மணம் செய்து கொண்ட சத்யேன் பட்டாச்சார்யா ஒரு ஹோமியோபதி மருத்துவர் ஆவார். திருமணச் செலவுகள் போக, இந்த இருவருக்குமே அவர் கணிசமான வரதட்சிணை தர வேண்டியிருந்தது.

0

1901 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று ஐந்து மாணவர்கள், ஐந்து ஆசிரியர்களோடு ரவீந்திரர் தனது பள்ளியை சாந்திநிகேதனில் தொடங்கினார்.

பண்டைக்கால குருகுலப் பள்ளியைப் போன்றே இந்தப் பள்ளிக்கும் அவர் முதலில் பிரம்மச்சரிய ஆசிரமம் என்றுதான் பெயர் சூட்டினார். இந்த உறைவிடப் பள்ளியில் மாணவர்களுக்குக் கட்டணம் ஏதுமில்லை. ரவீந்திரரின் மூத்த மகனான ரத்தீந்திரநாத் இந்த ஐந்து மாணவர்களில் ஒருவர். மற்ற மாணவர்கள் தங்கியிருந்த அதே அறையிலேயே அவரும் தங்கினார்.

ஐந்து ஆசிரியர்களில் மூவர் கிறித்தவர்கள். அதில் இருவர் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். மூன்றாவது கிறித்தவர்தான் ஆங்கில ஆசிரியர். பண்டைய அம்சத்தை உள்வாங்கி, நவீன கல்வியை வழங்குவதற்கான ரவீந்திரரின் இந்த முயற்சியைப் பழம்பெருமை பேசுவோர், புதுமை நாடுவோர் என இரு பிரிவினருமே தொடக்கத்தில் ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் இதில் சோகமான அம்சமாகும்.

இந்தப் பள்ளியை ஒரு கவிஞனிடம் உதித்த திடீர் ஆசை என்று கருதிவிடலாகாது. அவரது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து முயற்சித்த படைப்பூக்கங்களின் புதியதொரு வடிவமாக, அவரது தவமாக, அவரின் ஆயுட்காலம் வரை நீடித்த ஒரே பெருங்காவியமாக அது இருந்தது. இதன் செலவுகளுக்காக பூரியில் இருந்த தனது வீட்டை, சொந்த நூலகத்தை, மனைவியின் நகைகளை என, தனக்கும், தன் குடும்பத்திற்கும் சொந்தமான அனைத்தையும் விற்றார். தான் எழுதிய நூல்களில் இருந்து பெற்று வந்த காப்புரிமைத் தொகையை மொத்தமாகப் பெறுவதற்காக அவற்றின் காப்புரிமைகளையே விற்றார். மொத்தத்தில் அந்தப் பள்ளி அவர் இயற்றி வந்த பெரும் தவம் என்றே கூறிவிடலாம்.

பள்ளியை தொடங்கிவிட்டு அதை நடத்தும்படி ஆசிரியர்களிடம் அவர் விட்டுவிடவில்லை. பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்றதோடு, தானும் குழந்தைகளுக்குக் கற்பித்தார். தொடக்க நிலை அறிமுக நூல்கள், பாடப் புத்தகங்கள் வங்காளி மொழியில் இல்லாத நிலையில், அவற்றை தானே எழுதியதோடு, மற்ற ஆசிரியர்களையும் அவ்வாறே எழுத ஊக்கப்படுத்தினார். குழந்தைகளின் படிப்படியான வளர்ச்சியை மனதில் கொண்டு அவர் எழுதிய பல பாடப் புத்தகங்களும் அறிமுக நூல்களும் வங்காளத்தின் இதர பள்ளிகளிலும் பின்னாளில் அறிமுகமாயின.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமைத்துப் போட்டு, இரு சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு நாளெல்லாம் போராடிக் கொண்டிருந்த மிருணாளினி தேவி கடும் நோய்ப்படுக்கையில் வீழ்ந்தார். உரிய நேரத்தில் மருத்துவ வசதியின்றி வாடிய அவரை, நோய் முற்றிய நிலையில் கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் பலனின்றி 1902 ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று அவர் உயிர் நீத்தார்.

எல்லையற்ற பக்தியுடன் இருபது ஆண்டுகள் ரவீந்திரரைக் கவனித்து வந்த மிருணாளினி இடைப்பட்ட காலத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார். திருமணத்தின்போது எழுத்துக் கூட்டிப் படிக்க மட்டுமே தெரிந்திருந்த அவர், ரவீந்திரரின் ஊக்கத்தினால் வங்காளி மொழியில் மட்டுமின்றி, ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றிலும் திறமை பெற்றவராக இருந்தார். கணவர் தந்த ஊக்கத்தால் ராமாயண வடமொழிப் பாடல்களை வங்காளி மொழியில் சுருக்கமாக மொழிபெயர்த்தார். ரவீந்திரரின் ‘ராஜா- ராணி’ நாடகத்திலும் மிக இயல்பாக நடித்து பாராட்டு பெற்றார்.

இவ்வாறு படிப்படியான முன்னேற்றத்தின் மூலம் புகழ்பெற்ற கவிஞரான தன் கணவரின் இதயத்தை அவர் வென்றெடுத்தார். கல்கத்தாவில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருக்குப் பணிவிடை செய்ய தொழில்முறை செவிலியை அமர்த்திக் கொள்ள மறுத்த ரவீந்திரர், அந்த இரண்டு மாத காலத்திலும் தானே அருகில் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டார். அந்நாட்களில் மின்விசிறி எல்லாம் புழக்கத்தில் இல்லை. ரவீந்திரர் அவரது அருகில் அமர்ந்து கைவிசிறியால் தொடர்ந்து மெதுவாக வீசிக் கொண்டே இருந்ததைப் பலரும் பல்வேறு தருணங்களில் பதிவு செய்துள்ளனர். மனைவியைப் பற்றிய தன் உணர்வுகளையும் அவர் கவிதையிலேயே வடித்தார்:

‘அவளது இருண்ட இரவுகள் இப்போது விடியலைக் காண்கின்றன.
அவளை உங்கள் கைகளில் ஏந்திக் கொண்டீர்
அதற்காக என் நன்றியையும், அவளுக்கான பரிசுகளையும்
நான் உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.’

இந்தத் தருணத்தில் இருந்து ரவீந்திரரின் வாழ்க்கை பல புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஒன்றாக மாறியது.

ஒரு சில மாதங்களிலேயே திருமனமாகியிருந்த அவரது இரண்டாவது மகள் ரேணுகாவின் உடல்நிலை மிக மோசமானது. அவரை மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறினர். மூன்றாவது மகள் மீராவையும் இளைய மகன் சமிந்திரநாத்தையும் அண்ணி ஞானதநந்தினியின் பொறுப்பில் விட்டுவிட்டு, ரவீந்திரர் ரேணுகாவை அல்மோராவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மகளுக்குத் தேவையான மருந்துகளை புகட்டுவது மட்டுமின்றி அவளுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் பாடல்களைப் பாடிக் காட்டுவது என தன் கவலைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு பணிவிடை செய்தார்.

இருந்தபோதிலும் மிருணாளினி தேவி மறைந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு 1903 செப்டெம்பரில் ரேணுகா உயிர்நீத்தார். அவரது இழப்பை ரவீந்திரர் ஆழமாக உணர்ந்த போதிலும், தன் துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர் இணை ஆசிரியராக இருந்து நடத்தி வந்த வங்க தர்ஷன் இதழின் பக்கங்களை தன் எழுத்துக்களால் நிரப்பிக் கொண்டே இருந்தார்.

ரேணுகா இறந்த நான்கு மாதங்களில் ரவீந்திரர் மற்றொரு துயரத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. சிறந்த கவிஞரான சதீஸ் ராய் என்ற இளைஞர் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவரது துடிப்பான நடவடிக்கைகள் வெகு விரைவிலேயே அவரை ரவீந்திரருக்கு மிக நெருக்கமான ஒரு நண்பராக்கியது. ரவீந்திரரின் வலது கையாக திகழப் போகிறார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அந்த இளைஞர் சின்னம்மை நோய் வந்து திடீரென இறந்து போனார்.

இந்த மறைவின் அதிர்ச்சியோடு கூடவே பள்ளியில் உள்ள மற்றவர்களை இந்த நோய் தொற்றி விடக் கூடாது என்பதற்காக பள்ளியை ஷெலிடாவிற்கு இடம் பெயர்க்க வேண்டியதாயிற்று. இந்தக் கூடுதல் செலவோடு, பள்ளியை நடத்திச் செல்வதற்கான செலவுகளுக்காக ரவீந்திரர் தனது தொகுப்பு நூல்களின் சிறப்புப் பதிப்பை வெளியிடும் உரிமையை ஹிடால்பாதி பதிப்பகத்திற்கு வெறும் ரூ. 2000க்குக் கொடுக்க வேண்டியதாயிற்று.

மிக விரைவிலேயே மற்றொரு பேரிடி அவருக்குக் காத்திருந்தது. அவரது தந்தை மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் தன் 88வது வயதில் 1905 ஜனவரி 19 அன்று காலமானார். இந்த மறைவு ரவீந்திரரின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது எனலாம்.

இந்திய வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மத, கலாசார மறுமலர்ச்சி நாயகர்களில் ஒருவரான மகரிஷியின் காலத்திற்குப் பிறகு, மக்களிடையே அரசியல் ரீதியான விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் அறிஞர்களும் நீதிமான்களும் களத்தில் வெளிவரத் தொடங்கினர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் மிகப் பெரும் கனவுகளை சுமந்தபடி பொதுவாழ்வு எனும் களத்திற்கு வந்த காந்தியும் தாகூரும் ஆவர்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *