Skip to content
Home » தாகூர் #19 – அதிர்ச்சியும் துயரமும்

தாகூர் #19 – அதிர்ச்சியும் துயரமும்

ஜாலியன்வாலாபாக்

1917ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரவீந்திரர் வங்கத்திற்குத் திரும்பிவந்த நேரத்தில், நாட்டின் நலனைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சி ‘அதிர்ஷ்டவசமான ஒன்று’ என்ற சிந்தனை உடையவர்களில் ஒருவராகத்தான் இருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்ட தருணத்தில், இந்தச் சிந்தனை முற்றிலுமாக தாகூரைவிட்டு நீங்கியிருந்தது.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் தியோசாஃபிகல் சொசைட்டியின் தலைவரும், ‘ஹோம்ரூல்’ இயக்க நிறுவனருமான அன்னி பெசண்ட்டை வீட்டுச் சிறையில் வைக்க பிரிட்டிஷ் அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையைக் கண்டித்து கிளர்ந்தெழுவதற்குப் பதிலாக, அன்று வங்கத்தில் இருந்த அரசியல்வாதிகள், அரசின் அச்சுறுத்தலைக் கண்டு அமைதியாகிப் போயினர். இத்தகைய சூழலில்தான், 1905ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக, ரவீந்திரர் பொதுக் களத்தில் இறங்கினார்.

அன்னி பெசண்ட்டின் கொள்கைகளைத் தனிப்பட்ட முறையில் அவர் ஆதரிக்காதவராக இருந்தபோதிலும், அரசின் அடக்குமுறையைக் கண்டித்து ‘வலுவானவர்கள் வலிமையற்றவர்களின் வலிமைமிக்க எதிரிகளாக இருப்பதைப் போலவே, வலிமையற்றவர்களும் வலுவானவர்களின் வலிமைமிக்க எதிரிகளே’ என்ற அவரது உத்வேகமிக்க குரல் மக்களைத் தட்டியெழுப்பியது.

எனினும் நாட்டின் அரசியல் சூழல் கைவிட்டுப் போய்க் கொண்டேயிருந்தது. போதுமான வடிகால்கள் இல்லாத நிலையில் செயலில் இறங்கத் துடிக்கும் இளைஞர்கள் மெதுவாகத் தீவிரவாத நடவடிக்கைகளை நோக்கித் தலைமறைவாக போகத் தொடங்கினர். போரில் அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் பிரிட்டனின் கை ஓங்கிக் கொண்டிருந்த நிலையில், பிரிட்டிஷ் அரசு தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளில் இறங்கியது. இதன்வழி வன்முறை மேலும் அதிக வன்முறையை, வெறுப்பு மேலும் அதிகமான வெறுப்பை உருவாக்கியது.

அமெரிக்காவில் இருந்த பிரிட்டிஷ் உளவுத் துறை தலைவர் சர் வில்லியம் வைஸ்மேனின் தூண்டுதலில் நியூ யார்க் நகரில் இந்திய விடுதலைக்காகப் பல்வேறு வகையில் செயல்பட்டு வந்த இந்தியர்கள் மீது அமெரிக்கக் காவல்துறை சோதனை நடத்தி, பல ஆவணங்களைக் கைப்பற்றியது. ஜெர்மனியின் பண உதவியுடன் இந்தியாவில் புரட்சியைத் தூண்டி விடுவதற்கான அவர்களின் சதியில் ரவீந்திரரையும் இந்த ஆவணங்கள் இழுத்துவிட்டன. அமெரிக்காவில் இருந்தபோது ஜெர்மனி நாட்டு அதிகாரிகளை அவர் சந்தித்ததாகவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் 1917ஆம் ஆண்டில் இந்தச் சதிகாரர்கள் கைது செய்யப்பட்டு, நவம்பர் முதல் 1918 ஏப்ரல் 23 வரை சான் ஃப்ரான்சிஸ்கோவில் விசாரணை நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 124 பேர் இந்தச் சதிவழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் சான் ஃப்ரான்சிஸ்கோவில் இருந்த ஜெர்மனியின் தலைமைத் தூதுவர், அவரது தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட 35 பேர் விசாரிக்கப்பட்டனர். அமெரிக்காவில் இருந்த ஜெர்மனியின் முன்னாள் தூதர் பெர்ன்ஸ்டார்ஃப் பிரபுவும் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் இருந்தார்.

முன்னணி சதிகாரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கின் இறுதி நாளன்று இந்தியாவைச் சேர்ந்த முக்கிய சதிகாரரான ராம் சந்திரா, சக இந்தியர் ஒருவரால் நீதிமன்றத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டபோது, அமெரிக்க நீதிமன்றக் காவலர் அந்தக் கொலையாளியைச் சுட்டுக் கொன்றார். (ரவீந்திரரின் அமெரிக்கப் பயணத்தின்போது அவரைக் கொல்வதற்கான திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர் இந்த ராம் சந்திரா என்று அப்போது கூறப்பட்டபோதிலும், 1916இல் அவர் அதை மறுத்திருந்தார்).

வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கடிதத்தில், வாஷிங்டனில் உள்ள இந்தியர் ஒருவர் ‘நமது ஆலோசனையின் பேரில்தான்’ ரவீந்திரர் அமெரிக்காவிற்கு வந்தார் என்றும், இந்தச் சதித்திட்டத்திற்கு ஆதரவு திரட்டவே அவர் ஜப்பான் பிரதமர் ஒகுமா பிரபுவைச் சந்தித்தார் என்றும் பொருள்படும் வகையில் எழுதியிருந்தார். அதைப் போலவே, மற்றொரு தருணத்தில், நியூ யார்க்கில் வசித்த இந்தியர் ஒருவர் சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள மற்றொருவருக்கு அனுப்பிய தந்தி ரவீந்திரரின் அமெரிக்க சொற்பொழிவுகளை இந்தியப் புரட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டதற்கான ஆதாரமாக எடுத்துக் கூறப்பட்டது. (ரவீந்திரரை கொல்வதற்கான அவர்களின் முயற்சி பற்றி வழக்கின்போது எதுவும் கூறப்படவில்லை). குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ‘இந்த வழக்கில் ரவீந்திரர் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல’ என்று கூறியபோது, அரசு வழக்கறிஞர் வருத்தம் தோய்ந்த முகபாவத்துடன் ‘இல்லைதான். எங்களுக்கிருந்த அவசரத்தில் அவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டோம்!’ என்று அப்போது பதிலளித்திருந்தார்.

1918 மே மாத தொடக்கத்தில்தான் இந்த வழக்கு பற்றிய தகவல் ரவீந்திரரை எட்டியது. அதேநேரத்தில் காசநோயால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த அவரது மூத்த மகள் பெலா என்ற மாதுரிலதா மே 16 அன்று கல்கத்தாவில் இருந்த தன் கணவரின் இல்லத்தில் உயிர்நீத்தார். 1912ஆம் ஆண்டில் ரவீந்திரர் இங்கிலாந்து சென்றதிலிருந்து, அதையடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, தந்தையும் மகளும் சந்திக்கவேயில்லை. மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இறுதி நாட்களில்தான் ரவீந்திரர் மகளைச் சந்தித்து அவரது உடல்நிலையைப் பேணிக் கொண்டிருந்தார். எனினும் மகள் உயிர்நீத்த அன்று, இறந்துபோன மகளை நேருக்கு நேராகப் பார்க்க இயலாத நிலையில், ரவீந்திரர் சாந்திநிகேதனுக்குச் சென்று விட்டார்.

செல்லமாக வளர்த்த மூத்த மகள் பெலாவிற்கும் ரவீந்திரருக்கும் இடையே நிலவிய இந்த மவுன யுத்தத்திற்கு, மூன்றாவது மகளான மீராவின் கணவரான நாகேந்திரநாத் கங்குலி, அந்தக் குடும்பத்தில் நிகழ்த்தி வந்த எண்ணற்ற அத்துமீறல்களுக்குப் பிறகும் கூட, ரவீந்திரர் அவருக்கு அளவுகடந்த ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்ததை ஏற்க முடியாமல், பெலாவும் அவரது வழக்கறிஞர் கணவரும் ரவீந்திரர் மீது கொண்டிருந்த மனக்கசப்பே முக்கியக் காரணம் ஆகும்.

இந்தத் தனிப்பட்ட துயரமும் நெருக்கடியும் சேர்ந்து கொண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ரவீந்திரரை மிக வேகமாக எதிர்வினை ஆற்றத் தூண்டியது. அவர் உடனடியாக அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு நீண்ட தந்தியொன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து வில்சன், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஒகுமா, இந்தியாவின் வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்ட் பிரபு, மாக்மில்லன் நிறுவனத்தின் ஜார்ஜ் ப்ரெட், அமெரிக்க நண்பர் ஹாரியட் மூடி ஆகியோருக்கு தன் நிலையை விளக்கி நீண்ட கடிதங்களை எழுதினார்.

அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘இதுபோன்ற மிகவும் துணிச்சலான கட்டுக்கதையை அமெரிக்காவிலுள்ள என் நண்பர்களோ, என் எழுத்துக்களை மிகுந்த கவனத்துடன் படித்துள்ள என் வாசகர்களோ எப்போதும் நம்ப மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்பும் அதே நேரத்தில், இதுபோன்ற அவதூறான செயலில் என் பெயர் இழுத்து வரப்பட்டு எனக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளது மிகுந்த மனவலியைத் தந்துள்ளது. நாட்டுப்பற்று என்ற கருத்தாக்கத்தின்மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதை உங்களிடம் கூறவேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். என் நாட்டிற்குத் தேவைப்படும் நேரத்திலெல்லாம் என் கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறேன். என் நாட்டு மக்கள் மட்டுமின்றி, ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொள்ள விரும்பாத உண்மைகளைப் பேசுவது என்பதையும் நான் மேற்கொண்டு வந்திருக்கிறேன்.

‘அதேநேரத்தில், ஒரு சில அரசாங்கங்கள் அல்லது தனிநபர்களை உள்ளடக்கிய இதர குழுக்கள், கடமை என்ற பெயரில் கையாளும் சித்தரவதை நடவடிக்கைகளை நான் பெரிதும் வெறுக்கிறேன். உங்கள் நாட்டு மக்களிடமிருந்து நான் மிகப் பெருமளவிலான கனிவை, அன்பைப் பெற்று வந்திருக்கிறேன். அரசியல் தளத்தில் உயரிய குறிக்கோள்களை அறிமுகம் செய்தமைக்காக, சமகாலத்திற்குப் பொருந்தாத செயல்களைச் செய்பவர் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள அஞ்சாத உங்களின் குணம் குறித்து எனக்கு உங்கள்மீது பெருத்த மரியாதை உண்டு. எனவே உங்களுக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கும் எனது நம்பிக்கை குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவும், தேசத்துரோகம் என்ற சாக்கடையில் உழலும் அதேநேரத்தில், அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் ஒருவன்மீது உங்கள் நாட்டு மக்கள் தங்கள் விருந்தோம்பல் உணர்வை வெளிப்படுத்தவில்லை என்பதை இங்கு உறுதிப்படுத்துவது என் கடமை என்றே கருதுகிறேன்.’

உட்ரோ வில்சன் இதற்குப் பதிலளிக்கவில்லை. எனினும் இப்போது பிரதமர் பதவியிலிருந்து இறங்கிவிட்ட ஒகுமா, ரவீந்திரர் தனக்கு எழுதிய கடிதத்தை ஜப்பான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்ததோடு, அன்றைய பிரதமருக்கும் காட்டியதாகத் தெரிவித்திருந்தார். செம்ஸ்ஃபோர்ட் பிரபு ‘இந்தக் குற்றச்சாட்டுகளில் எவ்வித அடிப்படையும் இல்லை’ என்று கூறியிருந்தார். ‘நியாய உணர்வு கொண்ட எவரும் இந்தப் பரபரப்பான பத்திரிக்கை செய்தியை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்’ என்று ஹாரியட் மூடி பதிலளித்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவர் இதே கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இருந்தபோதிலும், இந்தக் குற்றச்சாட்டுகள் ரவீந்திரருக்கு அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. சில ஆண்டுகளுக்குப் பிறகு சாந்தி நிகேதனுக்காக நிதி திரட்ட அவர் மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்றபோது, அங்குள்ள அறக்கட்டளைகளும் நிதியுதவி செய்வோரும் அவரை அணுகவிடாமல் இந்தப் புகார்கள் தடை செய்தன. அவரது புத்தகங்களின் விற்பனையும் பலப்பல ஆண்டுகளுக்கு முன்னேற்றமின்றி செயலற்றுப் போனது.

1919ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரவுலட் சட்டம் என்ற அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து காந்தி போராட்டத்தைத் தொடங்கியிருந்தார். காந்தியின் வேண்டுகோளை ஏற்று, இந்தப் போராட்டத்தை ஆதரித்து ஏப்ரல் 12 அன்று ரவீந்திரர் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். (இந்தக் கடிதத்தில்தான் ரவீந்திரர் முதன்முறையாக காந்தியை ‘மகாத்மா’ என்று விளித்திருந்தார்). அதில், ‘நல்லவற்றுக்கு வலுவூட்ட தீயவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் உங்கள் போதனை என்று எனக்குத் தெரியும். ஆனால் அத்தகைய போராட்டம் வீரமிக்க நாயகர்களுக்கு உரியதே தவிர, உணர்ச்சிகளால் உந்தப்பட்டவர்களுக்கு அல்ல. இயற்கையாகவே தீமையானது எதிர்ப்புறத்திலும் தீமையை உருவாக்குகிறது; அநீதி வன்முறைக்கு வித்திடுகிறது; அவமதிப்பு பழிவாங்குதலுக்கு இட்டுச் செல்கிறது. துரதிர்ஷ்டவசமாக இத்தகைய நிலை ஏற்கெனவே தொடங்கி விட்டது. பீதியினாலோ அல்லது கோபத்தினாலோ நமது ஆட்சியாளர்கள் தங்கள் கொடூரக் கரங்களை உயர்த்திவிட்டார்கள். இதன் விளைவாக, நம்மில் சிலர் மனக்கசப்படையவும், வேறுசிலர் அவநம்பிக்கை கொள்ளவும் இது இட்டுச் செல்லும்.’

1919 ஏப்ரல் 13 அன்று ரவுலட் சட்டத்தைக் கண்டிக்கும் விதமாக பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயுதமேதுமின்றி, அமைதியாகக் கூடியிருந்தவர்கள் மீது பிரிட்டிஷ் ராணுவத்தினர் நடத்திய படுகொலை வெறியாட்டத்தில் குறைந்தபட்சமாக 379 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். மேலும் 2,000 பேர் காயமுற்றனர். இதுபற்றிய தகவல்கள் வடிகட்டப்பட்டு வந்த நிலையில், தகவல் திரட்ட ஆண்ட்ரூஸ் டெல்லிக்கு விரைந்தார்.

ஏப்ரல் 23க்கும் 26க்கும் இடையே ரவீந்திரர் அவருக்கு ஐந்து கடிதங்கள் அனுப்பியிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கோடைக்கால தலைநகரான சிம்லாவிற்குச் சென்ற ஆண்ட்ரூஸ், அங்கு அதிகாரிகளைச் சந்தித்து விவரங்களை அறிய முற்பட்டார்.

மே மாத நடுப்பகுதியில் கல்கத்தா சென்ற ரவீந்திரர், காந்தி வெளிப்படையாக இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கவில்லை என்பதை அறிந்ததும், தானே களத்தில் இறங்க வேண்டும் என முடிவு செய்தார். தன் தலைமையில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டார். மூத்த காங்கிரஸ் தலைவரான சித்தரஞ்சன் தாஸை இதற்காக சந்தித்தபோது, அவர் எதையும் பேசத் தயாராக இல்லாத நிலையை உணர்ந்தார். 1917இல் அன்னி பெசண்ட்டைச் சிறைவைத்தபோது நடந்ததைப் போலவே, எந்தவொரு அரசியல் தலைவரும் இந்தச் சம்பவம் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயாராக இல்லை.

இந்தப் படுகொலை சம்பவம் அவர் மனதில் முள்ளாய் உறுத்திக் கொண்டே இருந்தது. மே 29ஆம் தேதி இரவில் வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்ட் பிரபுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசரின் சார்பில் வைஸ்ராய் ஹார்டிங் பிரபு தனக்கு வழங்கிய ‘மாவீரர்’ பட்டத்தைத் துறப்பதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் கொடூரத்தை எதிர்த்து யாரும் குரலெழுப்பத் தயாராக இல்லாத அந்தத் தருணத்தில், அவர் முன்பு வங்காளப் பிரிவினை நேரத்தில் எழுதிய ‘தனியாக நடைபோடு’ என்ற கவிதைக்கு உயிரூட்டும் வகையில், வெளிப்படையாக எழுந்த அவரது குரலை இக்கடிதம் பிரதிபலிப்பதாக இருந்தது.

‘இந்த பயங்கரத்தால் ஏற்பட்டுள்ள வேதனைகளை மிகுந்த வியப்போடு வெளிப்படுத்தும் லட்சக்கணக்கான மக்களின் கண்டனத்தை எதிரொலிக்கும் குரலாக இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். பொருத்தமற்ற அவமதிப்பின் பின்னணியில், பெருமைமிக்க பதக்கங்கள் நமது அவமானத்தை மேலும் வெட்டவெளிச்சமாக்குகின்றன. இத்தகைய நிலையில், எனது நாட்டிற்காக என்னால் செய்ய முடிந்ததெல்லாம், அதற்கான விளைவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செல்வதுதான். அவ்வகையில் எனக்கு அளிக்கப்பட்ட சிறப்புகளை எல்லாம் களைந்துவிட்டு, மனிதர்களுக்கு எவ்விதத்திலும் ஒவ்வாத சீரழிவை சுமந்து நிற்கும் என் நாட்டு மக்களின் அருகே இத்தருணத்தில் நான் நிற்க விரும்புகிறேன்.’

ஜூன் 2ஆம் தேதியன்று பத்திரிக்கைகளில் வெளியான இந்தக் கடிதம் பெரும் சலசலப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. காந்தி உட்பட எந்தவொரு அரசியல் தலைவரும் இதற்காக ரவீந்திரரைப் பாராட்ட முன்வரவில்லை. மாறாக, தேவைப்படும்போதெல்லாம் அவரைச் சீண்டுவோருக்கு அது ஓர் ஆயுதமாக மாறியனது. காந்தியும்கூட, 1925இல் ரவீந்திரரின் கடுமையான விமரிசனத்தை ஏற்க முடியாத ஓர் எரிச்சலான தருணத்தில், வேண்டுமென்றே ‘சர்’ ரவீந்திரநாத் என்று அவரை விளித்து எழுதினார். அதற்குப் பதிலெழுதிய ரவீந்திரர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில், பஞ்சாபில் அந்த நேரத்தில் நடந்து வந்த விஷயங்களுக்கு எதிராக போதுமான கண்டன நடவடிக்கையை மேற்கொள்ள, நமது அரசியல் தலைவர்களை ஒப்புக் கொள்ளச் செய்ய என்னால் முடியாத நிலையில்தான், நான் இதைச் செய்யும்படி நேர்ந்தது. என் பெயருக்கு முன்னால் எந்த ஒட்டுப் பெயரையும் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள நான் விரும்பவில்லை.’

என்றாலும், 1941ஆம் ஆண்டில் அவர் மறைந்தபோது பிரிட்டனில் வெளியான ஒவ்வோர் அஞ்சலிக் குறிப்பும் அவரது பெயருக்கு முன்னால் இந்த ‘சர்’ பட்டத்தை தவறாது பதிவு செய்திருந்தன என்பதும் ஒருவிதமான நகைமுரண்தான்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *