Skip to content
Home » தாகூர் #20 – மனிதனை நோக்கிய கல்வி

தாகூர் #20 – மனிதனை நோக்கிய கல்வி

விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

1916 அக்டோபரில் அமெரிக்காவில் ஓர் ஆரஞ்சுத் தோட்டத்தில் அமர்ந்தபடி சாந்திநிகேதனின் அடுத்தகட்ட வளர்ச்சியை ரவீந்திரர் கனவு கண்டு தன் மகனுக்கு ஒரு கடிதமாக எழுதியதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். 1917ஆம் ஆண்டின் இறுதியில் கல்கத்தா பல்கலைக்கழகக் குழுவின் உறுப்பினர்கள் சாந்திநிகேதனுக்கு வந்தனர். புகழ்பெற்ற கல்வியாளரும் கலைப்பொருட்கள் சேகரிப்பாளருமான சர் மைக்கேல் சாட்லர் இக்குழுவின் தலைவராக இருந்தார்.

1890களிலிருந்தே கல்வி, குறிப்பாக இந்தியாவில் அப்போது நிலவிவந்த கல்வி குறித்து எண்ணற்ற கட்டுரைகளை எழுதியது மட்டுமின்றி, பல்வேறு தருணங்களில் ரவீந்திரர் உரையாற்றியும் வந்தார். குறிப்பாக, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்குப் புகட்ட விரும்பிய கல்வி குறித்து 1916இல் ‘இந்திய மாணவர்களும் மேற்கத்திய ஆசிரியர்களும்’ என்றொரு அனல்பறக்கும் கட்டுரையையும் அவர் எழுதியிருந்தார்.

இத்தருணத்தில் ரவீந்திரரின் கல்வி குறித்த சிந்தனையை சாட்லர் மிகச் சரியாகவே புரிந்து கொண்டார். இந்தக் கலந்துரையாடலின் விளைவாக அவரது விருப்பம் படிப்படியாக நனவாகத் தொடங்கியது. அவரது தந்தையின் காலத்தில் ஒரு ஆசிரமமாகத் தொடங்கி, அவரது அண்ணன் மகனின் முயற்சியில் குருகுலப் பள்ளியாக உருப்பெற்று, பின்பு ரவீந்திரரின் முன்னெடுப்பில் புகழ்பெற்றதொரு பள்ளியாக இருந்த சாந்திநிகேதன், விஸ்வபாரதி என்ற பெயருடன் ஒரு பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. அதன் அடிக்கல் நாட்டுவிழா 1918 டிசம்பர் 22 அன்று நடைபெற்றது. மிகச் சரியாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1921 டிசம்பர் 22 அன்று விஸ்வபாரதி பல்கலைக்கழகம் முறைப்படி தொடங்கியது. புகழ்பெற்ற வங்காளி அறிஞரான பிரஜேந்திரநாத் சீல் அதன் முதல் துணைவேந்தராக இருந்தார்.

இந்தியாவின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழகமாக உருவெடுத்த விஸ்வபாரதி, தொடக்கப் பள்ளி என்ற நிலையிலிருந்து பல்கலைக்கழக நிலை வரையில் ஒருங்கிணைந்த, முழுமையான ஒரு கல்விமுறையை வளர்த்தெடுப்பதில் முன்னோடியாகச் செயல்பட்டது. வரலாறுகள், கலாசாரங்கள், கலைகள், கைவினைத் திறன், விவசாயம் சார்ந்த அறிவியல் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டதாக இந்தக் கல்வி முறை அமைந்திருந்தது. இதன் மாணவர்கள் நகர்ப்புறங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வந்ததைப் போலவே அதன் ஆசிரியர்களும் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்தனர்.

ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரே இடத்தில் ஒரு குழுவாகத் தங்கி, இயற்கையைப் போற்றும் தன்மையோடு, வெட்டவெளிகளில் வகுப்புகளை நடத்தி வந்தனர். காலனியாதிக்கக் காலத்தில் நிலவிய பாடத்திட்டம் அவர்கள் மீது சுமத்தப்படவில்லை. இந்தப் பள்ளியை தொடங்கிய காலத்திலிருந்தே ரவீந்திரர் தனது பள்ளிக்கென பிரத்தியேகப் பாட நூல்களை உருவாக்கியதோடு, மற்ற ஆசிரியர்களையும் அவ்வாறே ஊக்குவித்ததன் விளைவாக புதிய வகைப்பட்ட கல்வி அங்கு அடித்தளமாக இருந்தது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் மையக்கருவாக மூன்று துறைகள் திகழ்ந்தன. அபனீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற மாணவரான நந்தலால் போஸ் தலைமையில் நுண்கலைப் பிரிவு (இது கலா பவன் என்று அழைக்கப்பட்டது). அடுத்து ரவீந்திரரின் மூத்த சகோதரர் த்விஜேந்திரநாத்தின் பேரன் தினேந்திரநாத் தலைமையில் உருவான இசைப் பிரிவு (இது சங்கீத் பவன் என்று அழைக்கப்பட்டது). 1905ஆம் ஆண்டில் அந்நிய ஆட்சிக்கு எதிராகவும், வங்காளப் பிரிவினைக்கு எதிராகவும் ரவீந்திரர் எழுதிய எண்ணற்ற தேசபக்திப் பாடல்களை அப்போது பொது மேடைகளில் பாடியது இந்த ‘தினு’தான். அளப்பரிய இசைஞானம் கொண்ட இவர் ரவீந்திரர் பாடிய இசைப்பாடல்களின் ராக-தாள அமைப்பு விவரங்களை முறையாகப் பதிவு செய்தவர். (பின்னாளில் இதே துறைக்குத் தலைமை தாங்கியவரும் ரவீந்திரரின் அண்ணன் மகளுமான இந்திரா தேவி சவுதராணிதான் இந்த இசைப்பாடல்களை ‘ரவீந்திர சங்கீத்’ என முறைப்படி தொகுத்தவர்.)

அடுத்து இந்தியவியல் துறை. பவுத்த இலக்கியங்கள், வேத கால, செவ்விலக்கிய வடமொழி, பாலி, பிராகிருதம் ஆகியவற்றோடு, திபெத்திய, சீன மொழிகளும் இத்துறையில் இடம் பெற்றிருந்தன. பின்னாளில் வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றிய பலரும் இத்துறையில்தான் பணிபுரிந்தனர்.

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கும் தொடக்கவிழாவிற்கும் இடைப்பட்ட மூன்றாண்டுகளில் (1918-21) இதற்கான நிதியைத் திரட்ட ரவீந்திரர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்டார். இதில் முதல் பயணம் தென்னிந்தியாவை நோக்கி இருந்தது.

வருங்கால இளைஞர்களுக்குக் கல்வி புகட்டுவதற்குப் பதிலாக அங்கிருந்த கோயில்களில் அளப்பரிய செல்வம் குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் வருந்தினார். எனினும் இந்தப் பயணத்தின்போது, பெங்களூர், மைசூர், உதகை, சேலம், மதுரை, சென்னை, மதனபள்ளி ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்களிடையே அவருக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்தது. மாணவர்களுடன் உரையாடிய இத்தருணங்கள் அவருக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி அவர் ஆற்றிய உரைகள் மாணவர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

விஸ்வபாரதியின் நோக்கம் பற்றி உலகிற்கு அறிவிக்கும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது: ‘இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று நாம் நினைக்கும்போதே, ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்றவையும், ஐரோப்பாவின் இதர பல்கலைக்கழகங்கள் பலவும்தான் நம் மனக்கண் முன் வந்து குவிந்து விடுகிறது…

‘ஒரு விஷயத்தை மட்டும் நான் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். வெளிநாட்டைச் சேர்ந்தது என்பதாலேயே எந்தவொரு கலாசாரம் குறித்தும் நான் வெறுப்படைவதில்லை. இன்னும் சொல்லப் போனால், நமது அறிவுக் கூர்மையை உயிர்ப்போடும், துடிப்போடும் வைத்திருக்க இந்த வெளிச்சக்திகள் தரும் அதிர்ச்சி மிகவும் அவசியமானது என்றுதான் நான் நம்புகிறேன்…

‘ஐரோப்பியக் கலாசாரம் அதன் அறிவோடு மட்டுமல்ல; அதன் வேகத்தையும் நம்மிடையே கொண்டு வந்துள்ளது. இந்த இணைப்பு மிகப் பொருத்தமாக இல்லாவிட்டாலும், அதைத் தொடர்ந்து தவறுகள் ஏற்பட்டாலும் கூட, வழக்கங்கள் என்ற நமது செயலற்ற தன்மையிலிருந்து நமது அறிவுபூர்வமான வாழ்க்கையை தட்டியெழுப்புவதாக அமைகின்றன. அது நமது பாரம்பரியத்திற்கு வழங்கும் முரண்பாடுகளே நமது உள்ளுணர்வை ஒளிரச் செய்கின்றன!

‘நம் நாட்டு மனங்களின் இடத்தையெல்லாம் பிடித்துக் கொண்டு, பெற்ற உண்மைகளின் இணைப்பின்மூலம் புதியதொரு சிந்தனையை உருவாக்குவதற்கான மகத்தான வாய்ப்பை அது அழித்துவிடுகிறது; அல்லது தடை செய்துவிடுகிறது என்பதால்தான் நான் அந்நிய வழிப்பட்ட கல்வியை எதிர்க்கிறேன். அதனால்தான் நமது சொந்தக் கலாசாரத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் வலுப்படுத்தப்பட வேண்டும்; மேற்கத்திய கலாசாரத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக அதை ஏற்றுக் கொண்டு, அதனோடு ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அது நமக்கு உரமூட்டும் ஊட்டச்சத்தாக மாற வேண்டுமே தவிர, ஒரு சுமையாக அல்ல; அதனை நாம் வென்றெடுக்க வேண்டுமே தவிர, பாடங்களை மனப்பாடம் செய்து, புத்தகக் கல்வியை நிரப்பி வைத்திருக்கும் ஒரு சேமிப்புக் கிடங்காக அது அமிழ்ந்துவிடக் கூடாது.’

இதைத் தொடர்ந்து இந்தியாவின் மேற்குப் பகுதியிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அகமதாபாதில் நடைபெற்ற குஜராத்தி இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய அவர், பின்னர் சபர்மதி நதிக்கரையில் மகாத்மா காந்தி புதிதாக உருவாக்கியிருந்த ஆசிரமத்திற்குச் சென்று ஓரிரவு தங்கி அவரோடு சிறிது நேரத்தையும் கழித்தார். 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் அவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு அப்போதும் நீடித்து வந்தது என்பதையும் இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும். அப்பகுதியில் சில சமஸ்தானங்களைச் சேர்ந்த சிற்றரசர்கள் ரவீந்திரரைச் சந்தித்து அவரது பல்கலைக்கழக முயற்சிக்கு உதவும் வகையில் நன்கொடை வழங்கினர்.

ஒரு பக்கம் பொதுவாழ்வு குறித்த சிந்தனைகள், மறுபக்கம் கல்விப் பணிகள் என்று தீவிரமாக அவர் இயங்கி வந்த காலப்பகுதியில் பாலதாகா (கண்ணுக்குத் தென்படாதவர்கள்) என்ற சின்னஞ்சிறு சிறுகதைகளின் தொகுப்பு 1918இல் வெளியானது. இதே நேரத்தில் லிபிகா (எழுத்துச் சிதறல்கள்) என்ற பெயரில் வசன கவிதைகளையும் அவர் எழுதி வந்தார். இவை 1922இல் நூலாக வெளியாயின. அந்த நேரத்தில் அவரது மூத்த மகள் பெலாவின் மரணம் உருவாக்கிய சஞ்சலமான மனநிலையின் பின்னணியைப் பார்க்கும்போது பாலதாகா கதைகளில் பெரும்பகுதி வாழ்க்கையின் சோகங்களையும் துயரங்களையும் எடுத்துக் கூறுவதாக இருந்தபோதிலும், அவற்றை மனப்பக்குவத்தோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொண்டு அனைத்து உயிரினங்களின் மீதான அவரது கருணை உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தன.

யுத்தத்திற்கு எதிராகவும் தேசம் என்ற குறுகிய எல்லையைக் கடந்து மனிதகுலம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் ரவீந்திரர் முன்வைத்த கருத்தைப் பின்னாளில் பிரான்ஸ் நாட்டில் எதிரொலித்த அறிஞர் ரொமெயின் ரோலண்ட் ‘ஆத்மாவின் சுயேச்சைத்தன்மை’ என்ற ஓர் அறிக்கையை வெளியிட முனைந்தார். ஐன்ஸ்டைன் உள்ளிட்டு பல மேற்கத்திய அறிஞர்களும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர். இந்த அறிக்கையில் கையெழுத்திடுவதற்கான வேண்டுகோள் ரவீந்திரரிடம் 1919 ஜூனில் வந்தது. ஜூன் 26 அன்று அந்த அறிக்கையில் கையெழுத்திட்டு ரவீந்திரர் தன் ஆதரவைத் தெரிவித்தார்.

1920 ஏப்ரல் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலையின் முதலாண்டு நினைவு தருணத்தில் முகமது அலி ஜின்னாவின் வேண்டுகோளுக்கிணங்க அப்போது பம்பாயில் கூடியிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு ரவீந்திரர் ஒரு செய்தியை அனுப்பினார். இந்தப் படுகொலையில் உயிர் நீத்தோருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டுமென்ற காங்கிரசின் முயற்சியை எதிர்த்து அந்தச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

‘கடந்த காலத்தின் தவறுகள், அவர்களின் மீதான கோபம் ஆகிய கருமையான நினைவுகளால் கற்களைக் கொண்டு நம் எதிர்காலச் சந்ததியினரின் மனங்களில் சுமையை ஏற்றவேண்டாம். நாம் போற்றி வணங்கும்படியான நினைவுச் சின்னங்களை மட்டுமே நம் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்வோம். ஒருவகையில் நம் முன்னோர்களுக்கு நன்றி பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால், தன்னையே வென்று, மன்னிப்பையே பிரசாரம் செய்து, காலம்-இடம் அனைத்தையும் கடந்த வகையில் தன் அன்பை உலகமெங்கும் பரப்பிச் சென்ற நமது புத்தரின் சித்திரத்தை அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.’

ரவீந்திரரின் இத்தகைய சிந்தனை அன்றைய பொதுவான உணர்வுப் போக்குகளுக்கு எதிர் திசையில் இருந்தது. காந்தியின் தீவிர ஆதரவோடு நினைவுச் சின்னத்திற்கான பணிகள் மிக வேகமாக நடந்தன. இத்தகைய சூழ்நிலையில், அவர் தனது மகன், மருமகளுடன் மே 15 அன்று பம்பாயில் இருந்து லண்டனை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார். இங்கிலாந்தில் தன் பழைய நண்பர்களைச் சந்தித்து உரையாடிய போதிலும், பொது நீரோட்டத்திற்கு மாறான வகையில், யுத்தத்திற்கு எதிராக, பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக எழுந்த அவரது குரலை அந்த நண்பர்கள் ரசிக்கவில்லை என்பதையும் அவரால் நன்கு உணர முடிந்தது.

பஞ்சாப் படுகொலை குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றம் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த தருணத்தில், விருந்தினர் வரிசையில் அமர்ந்தவண்ணம் அவர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தப் படுகொலையை ஒட்டி அவர் தனது ‘சர்’ பட்டத்தைக் கைவிட்டதை அவரது நண்பர் குழாமில் ரொதின்ஸ்டைன் மட்டுமே ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்த பொறுப்பற்ற, அரசுக்குச் சார்பான வாதங்கள் ஏற்கெனவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் குறித்து ரவீந்திரரிடம் உருவாகியிருந்த கசப்புணர்வை மேலும் வலுப்படுத்துவதாக இருந்தன.

இந்தப் பயணத்தின்போதுதான் ரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற ஓவியரான நிக்கோலஸ் ரோரிச்சை அவர் சந்தித்து நட்பு பூண்டார். பிறப்பால் ஒரு பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உருவான அரசில் கலாசார அமைச்சராகப் பதவியேற்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதை மறுத்துவிட்டு, வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து ஓவியத்துறையில் உலக அளவில் புகழினை ஈட்டிய ரோரிச் இறுதியில் இந்தியாவில், பெங்களூரில் நிரந்தரமாகத் தங்கினார். அவரது மனைவி தேவிகா ராணி ரவீந்திரரின் மூத்த சகோதரி சுகுமாரியின் மகன்வழி பேத்தி என்பது மட்டுமின்றி, இந்தியத் திரையுலகின் முதல் தாரகை என்ற புகழைப் பெற்றவர். இந்தியாவில் திரைப்பட இயக்கம், தயாரிப்பு போன்றவற்றிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

1920-21 காலத்தில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய நோக்கம் உருவாகவிருந்த விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்குத் தேவையான நிதியை (அவரது இலக்கு 5 மில்லியன் டாலர் ஆக இருந்தது) திரட்டுவதே ஆகும். எனினும், பிரிட்டன், அமெரிக்க நாடுகளில் நிலவிய சூழ்நிலைகள், இந்த நோக்கத்தை பெரிதும் அசைத்துப் பார்ப்பதாகவே இருந்தன. ஐரோப்பா மட்டுமே இதில் ஓரளவிற்கு அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது எனலாம்.

படம்: விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *