Skip to content
Home » தாகூர் #21 – அமெரிக்கப் பயணங்கள்

தாகூர் #21 – அமெரிக்கப் பயணங்கள்

அமெரிக்கப் பயணம்

இந்தத் தருணத்தில்தான் முதல் உலகப்போர் முடிவடைவதற்கு ஒரு வாரம் முன்பு போரில் கொல்லப்பட்ட இளம் ஆங்கில கவிஞரான வில்ஃப்ரெட் ஓவனின் அன்னையிடமிருந்து ரவீந்திரருக்கு ஒரு கடிதம் மூலமான வேண்டுகோள் வந்து சேர்ந்தது.

‘என் மகன் கடைசியாக வீட்டை விட்டுச் சென்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. மனதுடைந்த நிலையில் நாங்கள் இருவரும் பிரான்ஸ் நாட்டை நோக்கிச் செல்லும் விரிந்த கடலைப் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில்தான், கவிஞனான என் மகன் ‘இங்கிருந்து நான் போகும்போது, இதுவே என் பிரியா விடையாக அமையட்டும்!’ என்ற உங்களின் அழகான கவிதை வரிகளை என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.

‘போர் நிறுத்த நாளில்தான் அவனது மரணச் செய்தி எனக்கு வந்து சேர்ந்தது. அவனது உடமைகள் என்னிடம் வந்து சேர்ந்தபோது, அதில் இருந்த சிறு குறிப்புப் புத்தகத்தில், அவன் கையெழுத்திலேயே, உங்கள் கவிதையை எழுதி, கீழே உங்கள் பெயரையும் எழுதியிருந்தான். அப்போதுதான் அது நீங்கள் எழுதிய கவிதை என்பதை அறிந்தேன். அந்தக் கவிதை முழுவதையும் (உங்களின்) எந்த நூலில் இருந்து பெற முடியும் என்பதை எனக்குத் தெரிவிக்க முடியுமா?’ என்று கேட்டு அவர் எழுதியிருந்தார்.

லண்டனில் இருந்து பாரிசுக்குப் புறப்பட்டுச் சென்ற அவர், பின்னாளில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டைச் சேர்ந்த முதல் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த புகழ்பெற்ற கீழைத்தேய அறிஞர் சில்வெய்ன் லெவியைச் சந்தித்துப் பேசி நட்பு பூண்டார். பிரான்சில் யுத்தம் நடைபெற்ற ரியம்ஸ் பகுதிக்குச் சென்று யுத்தத்தின் அழிவினை நேரடியாகக் கண்ணுற்று வருந்தினார். ‘பிரான்ஸ் நாட்டை நிரந்தரமாக மூளியாக்கி விட்டுச் சென்றுள்ள இந்த யுத்தத்தை அதன் நினைவுகளிலிருந்து எப்போதும் அழிக்கமுடியாது’ என்று அவர் ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பாரிசிலிருந்து ஹாலந்து நாட்டிற்குச் சென்ற அவர் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார். திரளான மக்கள் பங்கேற்ற கூட்டங்களிலும் அவர் உரையாற்றினார். ‘இந்தப் பயணத்தின் மூலம் ஐரோப்பா நமக்கு மேலும் நெருக்கமாகியுள்ளது…. சாந்தி நிகேதன் உலகம் முழுமைக்குமே சொந்தமானது என்பதை நான் இப்போது மேலும் ஆழமாக உணர்கிறேன். அதற்குத் தகுந்த வகையில் நமது செயல்கள் இருக்க வேண்டும்’ என்று அப்போது (தாகூரின் சார்பாக) சாந்தி நிகேதனை மேற்பார்வை செய்து வந்த சி.எஃப். ஆண்ட்ரூஸுக்கு எழுதிய கடிதத்தில் ரவீந்திரர் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதுதான் நடந்து முடிந்திருந்த உலக யுத்தத்தினால் சின்னாபின்னமாகிக் கிடந்த ஐரோப்பாவினால் தன் அன்பை, பெருந்தன்மையை அவரிடம் வெளிப்படுத்த முடிந்ததே தவிர, சாந்தி நிகேதனுக்குத் தேவையாயிருந்த பொருளாதார உதவியை வழங்க இயலவில்லை என்பதையும் அவரால் உணர முடிந்தது.

லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்குப் பயணித்த ரவீந்திரர், அங்குள்ள புகழ்பெற்ற கவிஞர்களையும் அறிஞர்களையும் சந்தித்து உரையாடினார். இவர்களில் இருவர் குறிப்பிடத்தக்கவர்கள். கவிஞர் காம்டெஸ் டி நோயல் அவரது தீவிர ரசிகையாக உருவெடுத்ததோடு, 1930இல் பாரிஸ் நகரில் ரவீந்திரரின் ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம் அவர் மேலும் புகழ் பெறுவதற்கான உந்துசக்தியாகவும் இருந்தார்.

அதேபோன்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கீழைத்தேய அறிஞரான சில்வெய்ன் லெவி விஸ்வபாரதி பல்கலைக்கழகம் தொடங்கியபோது அங்கு பணியாற்றிய முதல் வெளிநாட்டுப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். கல்கத்தா பல்கலைக்கழகம் ரவீந்திரருக்கு சிறப்பு டாக்டர் பட்டத்தை வழங்கியபோது, அவரோடு கூடவே, பேராசிரியர் லெவிக்கும் அதே பட்டத்தை வழங்கியது.

சாந்திநிகேதனில் விரைவில் உருவாகவிருந்த பல்கலைக்கழகத்திற்கான நிதியைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரவீந்திரருக்கு, அன்று செல்வச் செழிப்பின் இருப்பிடமாகத் திகழ்ந்த அமெரிக்காவில்தான் அதைத் தேட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருந்தது. பொருளாயத ஆசைகளை உரக்க மறுதலித்த அவருக்கு, தன் கருத்துகளைச் செயல்படுத்த வலுவான, பொருளாயத சமூகம் வேர்பிடித்து நிற்கும் ஒரு நாட்டின் உதவியையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இலக்காகக் கொண்டிருந்த ஐந்து மில்லியன் டாலர்கள் பற்றியே எப்போதும் சிந்தித்து வந்த ரவீந்திரரின் உள்ளார்ந்த கருத்தோட்டங்களுக்கு நேரெதிர்த் திசையில் பயணிக்கும் ஒரு வளமான சமூகத்திடமிருந்து கொடைத் தன்மையை அவர் எதிர்பார்த்தது ஒருவித நகைமுரணாகவே இருந்தது.

அமெரிக்காவில் அவரது முகவராக இருந்த ஜே.பி. பாண்ட் என்பவரை அப்போது லண்டனில் இருந்த பியர்சன் (ஆங்கிலேயரான இவரும் ஆண்ட்ரூஸைப் போன்றே சாந்திநிகேதனின் நலனுக்காகப் பாடுபட்டவர்; ரவீந்திரரை குருவாகப் போற்றி வணங்கியவர்) இதற்கென அணுகியபோது, முதலில் மிகுந்த உற்சாகத்தோடு இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அவர், அமெரிக்காவிலிருந்த தனது வழக்கமான தொடர்புகளை அணுகியபோதுதான் ‘ரவீந்திரர், உலகப் பெரும்போரில் நேசநாடுகளுக்கு எதிராக நின்றவர் என்ற எண்ணம் பொதுவாக மக்களிடையே வேரூன்றி நின்றிருந்த நிலையில்’ அவரது அமெரிக்கப் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்காது என்பதை உணர்ந்தார்.

இதையொட்டி லண்டனில் இருந்த பியர்சனுக்கு 1920 செப்டெம்பரில் எழுதிய ஒரு கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘இங்குள்ள புரவலர்கள் அவரைத் தொடமாட்டார்கள் என்பது உண்மைதான். என்றாலும் அதுவே தோல்வியாகி விடாது. வழக்கமான தொடர் சொற்பொழிவுக்கான வழி மூடப்பட்டுவிட்ட போதிலும், கவிஞர் இங்கு வந்திறங்கிய பிறகு, அவரது வழக்கப்படியே பேட்டியளிப்பது, புகைப்படம் எடுக்க அனுமதிப்பது ஆகியவற்றின் மூலம் மக்களின் கவனத்தை அவர் மீண்டும் வென்றெடுக்கத்தான் வேண்டும்.’ இதன்படி 1920 அக்டோபர் 28 அன்று ரவீந்திரர், பியர்சன், மகன் ரதீந்திரநாத் ஆகியோருடன் நியூயார்க் நகரை வந்தடைந்தார். அத்தருணத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1905ஆம் ஆண்டின் வங்கப் பிரிவினையை எதிர்த்து நின்ற காலத்திலிருந்தே ரவீந்திரர் பிரிட்டிஷ் ஆட்சியின் தீவிர கண்காணிப்பில் இருந்துவந்த நிலையில், அமெரிக்காவிலும் அவரது நிதி திரட்டும் முயற்சிகளுக்குத் பிரிட்டன் தடை போட முயன்றது. ஐரோப்பாவில் நடைபெற்ற உலகப் பெரும்போரின் மூலம் பெரும்பொருள் ஈட்டிய அமெரிக்கத் தொழிலதிபர்கள் பலரும் இங்கிலாந்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாக இருந்தனர்.

இந்த வகையில், பஞ்சாப் படுகொலையைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சி அளித்திருந்த ‘சர்’ பட்டத்தை 1919 மே மாதத்தில் ரவீந்திரர் துறந்தது பிரிட்டிஷ் அதிகாரிகளின் வேலையை மேலும் எளிதாக்கியது. அவரது பல்கலைக்கழகத்திற்கு எவ்வித உதவியையும் செய்யலாகாது என்ற குறிப்பை அமெரிக்கத் தொழிலதிபர்களுக்கு அவர்களால் உணர்த்த முடிந்தது.

இவர்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மிக நெருக்கமானவரான மார்கன் நிறுவனத்தின் தலைவர், மற்ற தொழிலதிபர்களிடமிருந்து எவ்வித நிதியுதவியும் ரவீந்திரருக்குச் சென்று சேராமலிருப்பதை உறுதிப்படுத்தினார். ரவீந்திரநாத் இதுபற்றி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்: ‘இங்கு பல பணக்காரர்களையும் சந்திக்க முடிந்தது என்பது உண்மைதான். என்றாலும் அமெரிக்காவில் வந்திறங்கியதும்தான் அந்த நாட்டின்மீது இங்கிலாந்து எத்தகைய செல்வாக்கை செலுத்துகிறது என்பதை எங்களால் உணர முடிந்தது. இங்கிலாந்தில் இருந்தபடி ஆங்கிலேயர்களை, ஆங்கிலேய ஆட்சியை விமர்சிப்பது மிகவும் எளிது. அமெரிக்காவில் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை.’

(பிரிட்டிஷ் அதிகாரிகளின் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்தன என்பதற்கு உதாரணமாக, 1925இல் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு 50,000 டாலர்கள் நன்கொடை வழங்க தீர்மானித்தபோது, நியூயார்க் நகரிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் தலையிட்டு, அவரது எண்ணத்தை மாற்றிவிட்டார்.)

இந்த அமெரிக்கப் பயணத்தின்மூலம் ரவீந்திரருக்குக் கிடைத்த மிகப்பெரிய நன்மை, அப்போது கார்னெல் பல்கலைக்கழகத்தில் விவசாயத் தொழில்நுட்பத்தில் இறுதியாண்டு படித்து வந்த, இந்தியாவிற்கு ஏற்கெனவே வந்த அனுபவம் மிக்க ஆங்கிலேயரான லியனார்ட் எல்மிர்ஸ்ட்டை 1921 மார்ச்சில் நியூ யார்க் நகரில் சந்தித்ததும், அவரது நட்பும் ஆதரவும் வாழ்நாள் முழுவதும் அவருக்குக் கிடைத்ததும் ஆகும்.

இவர்தான் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கான ரவீந்திரரின் முன்முயற்சியான ஸ்ரீநிகேதன் என்ற விவசாயத் தொழில்நுட்பப் பள்ளியைத் தொடங்கிச் செயல்படுத்துவதில் முன்நின்றவர். இவரது காதலியும் பின்னாளில் மனைவியுமான, அமெரிக்க நாட்டு செல்வப் பரம்பரையில் வந்த டோரதி விட்னி ஸ்ட்ரெயிட் என்பவர், இவர் மூலமாகவே ரவீந்திரரின் விஸ்வபாரதி, ஸ்ரீநிகேதன் ஆகிய திட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள, கணிசமான தொகையைத் தந்து உதவி வந்தார்.

1921 மார்ச் இறுதியில் மீண்டும் லண்டனுக்குத் திரும்பிய ரவீந்திரர், ஏப்ரலில் முதன்முறையாக விமானத்தில் பிரான்ஸ் நோக்கிப் பயணம் செய்தார். ஒரு கவிஞராக இந்தப் பயணம் அவருக்கு உற்சாகத்தைத் தந்தபோதிலும், பிரிட்டிஷாருடன் அவருக்கிருந்த முரண்பாட்டை மேலும் கூர்மையாக்கவே செய்தது. இத்தருணத்தில்தான் பிரெஞ்சுத் தத்துவ அறிஞரான ரொமெய்ன் ரோலண்ட்டை ரவீந்திரர் சந்தித்துப் பேசினார். ரவீந்திரரின் விஸ்வபாரதி பல்கலைக்கழக முயற்சியில் ரொமெய்ன் ரோலண்ட் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேவிற்கு ரோலண்ட் எழுதிய கடிதத்தில் இந்தச் சந்திப்பு குறித்து விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்: ‘அவருக்கு (தாகூர்) எதிரான பாரபட்சமான போக்கு என்னிடம் நிலவி வந்தது என்பதை நான் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். குறிப்பாக அவரைச் சுற்றி நிலவிய புகழ்பாடும் கூட்டத்தைப் பார்க்கும்போது இந்த உணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. எனினும் கடந்த வசந்த காலத்தில் பாரிஸ் நகரில் அவரைத் தனியாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தச் சந்திப்பிற்குப் பிறகு நான் அவருக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். அவர்மீது அளவுகடந்த மரியாதையும் உருவானது. மிக உயர்ந்த அறிவாளியாக இருந்த அவர் தன்னைச் சுற்றியுள்ளவை பற்றி நன்கு புரிந்தவராக இருந்தார். அதேநேரத்தில் மக்கள் அவரைப் புரிந்து கொள்ளவில்லை.

‘அவரது இந்தச் சுதந்திரமான போக்கின் விளைவாக, அவரது எதிரிகள் மட்டுமின்றி, அவரைச் சுற்றி இருப்பவர்களாலும் எண்ணற்ற பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் வெகுவாக வெறுக்கும் ஐரோப்பியக் கொடுங்கோன்மையினால் பெரிதும் துன்புற்று வருகிறார். அவரது செறிவான அனுபவங்கள், இந்த உலகம் குறித்த கவலை ஆகியவற்றில் இருந்து உருவான வியக்கத்தக்க ஒத்திசைவு அவரிடம் ஒளிர்கிறது. எப்படியிருந்தபோதிலும், ஆங்கிலேயர்களிடமிருந்து மட்டுமல்ல; தன் சக நாட்டவர்களிடமிருந்தும் எண்ணற்ற தடைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது!’

அதே ஆண்டு மே மாத இறுதியில் அவர் ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் வந்திறங்கினார். இலக்கியத்திற்கான நோபல் பரிசும் அதற்கான பரிசுத் தொகையும் அவரிடம் முன்னரே வந்து சேர்ந்துவிட்ட போதிலும், இந்தப் பரிசினை முறைப்படி ஏற்கும் வகையில், வழக்கமாக நோபல் பரிசினை வழங்கும் அரங்கில், பரிசு பெற்றவர் என்ற வகையில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு இப்போதுதான் அவருக்குக் கிடைத்தது. தனது ஏற்புரையில் ரவீந்திரர் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘எந்தவொன்றையும் புறக்கணிப்பதோ, எந்தவொரு இனத்தையும் மறுதலிப்பதோ, எந்தவொரு பண்பாட்டையும் புறந்தள்ளுவது என்பதோ இந்தியாவின் உள்ளார்ந்த உணர்விலேயே கிடையாது என்றே நான் கருதுகிறேன்.’

அவரது ஏற்புரைக்குப் பிறகு பேசிய உபாசாலா நகரின் ஆர்ச்பிஷப் ‘இலக்கியத்திற்கான நோபல் பரிசு என்பது மிகச் சிறந்த கலைஞராகவும் தீர்க்கதரிசியாகவும் இருக்கும் ஓர் எழுத்தாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாகும். இந்த நிபந்தனைக்கு முற்றிலும் பொருத்தமானவராக ரவீந்திரநாத் தாகூரைப் போன்று வேறு எவரும் இருக்கவில்லை’ என்று குறிப்பிட்டார்.

இத்தருணத்தில்தான் ஸ்டாக்ஹோம் நகரில் ரவீந்திரரின் போஸ்ட் ஆபீஸ் என்ற நாடகம் ஸ்வீடிஷ் மொழியில் நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது ஸ்வீடனின் அரசர் ஐந்தாம் குஸ்டாவ் அவரை வரவேற்றுப் பேசினார். கோபன்ஹேகனில் மாணவர்கள் தீப்பந்த ஊர்வலம் ஒன்றை நடத்தி, ரவீந்திரர் தங்கியிருந்த ஓட்டலுக்கு முன்பாக ஒன்றுதிரண்டு இரவு வெகுநேரம் வரை தேச எழுச்சிப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.

இந்தப் பயணத்தின்போதுதான் ரவீந்திரர் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன், ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.

(தொடரும்)

பகிர:
வீ.பா. கணேசன்

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *