‘என்னால் கவிதைகளைப் புனைய முடியும்;
பாடல்களை இயற்ற முடியும் காந்திஜி! ஆனால்
உங்களின் பெருமதிப்பிற்குரிய பஞ்சு என்னிடத்தில்
படாத பாடு படும் என்பதுதான் உண்மை’
– 1921 செப்டெம்பரில் காந்தியிடம் சொன்னது
‘சாத்தானின் ஆட்சி’ என காந்தியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நோக்கத்துடன் வெளிநாட்டுப் பொருட்களின் புறக்கணிப்பு, ஒத்துழையாமை இயக்கம் ஆகியவை நாட்டு மக்களிடையே மிகப்பெரும் உத்வேகத்தை உருவாக்கின. தேசிய உணர்வு என்ற பெயரில் இதர நாடுகளின்மீது தாக்குதல் தொடுப்பது; அவற்றை சீர்குலைப்பது ஆகிய முயற்சிகளை வலுவாகக் கண்டித்து, தான் பயணம் செய்த நாடுகள் அனைத்திலும் உரக்கக் குரல் கொடுத்துவந்த ரவீந்திரருக்கு இந்த எழுச்சி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
காந்திக்கும் தாகூருக்கும் இடையிலான கருத்துமோதல் தவிர்க்க முடியாத ஒன்றேயாகும். 1915இல் காந்தி முதன்முதலாக சாந்திநிகேதனுக்கு வருகை தந்தபோது உள்ளீடாக இருந்த இந்த மோதல், 1919இல் பஞ்சாப் படுகொலை, அதைத் தொடர்ந்த நிகழ்வுகளில் வெளிப்படையான ஒன்றாக மாறி, 1921இன் நடுப்பகுதியில் இருந்து நேரடியான மோதலாக உருப்பெற்றது. இவர்கள் இருவரும் 1930களில் மீண்டும் நெருக்கமான போதிலும், அது அறிவார்ந்ததொரு நெருக்கமாக இருக்கவில்லை. இருவருமே ஒருவரையொருவர் பெரிதும் மதித்தனர்; அன்பு செலுத்தினர் என்ற போதிலும், புரிதலுணர்வு என்பது இருவரிடமும் இறுதிவரை ஏற்படவேயில்லை.
வெளிநாட்டுப் பொருட்களின் புறக்கணிப்பு, ஒத்துழையாமை இயக்கம் ஆகியவை குறித்த காந்தியின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரவீந்திரர் நேரடியாகவே களத்தில் குதித்தபோது, இந்த மோதல் வெட்டவெளிச்சமானது. இந்தியாவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே அறிவார்ந்த ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ‘பண்பாடுகளின் சந்திப்பு’ என்ற பேருரையை 1921 ஆகஸ்ட் 15 அன்று ரவீந்திரர் கல்கத்தாவில் நிகழ்த்தினார். காந்தியின் அறைகூவலால் உணர்ச்சிப் பிழம்பாக மாறியிருந்த மக்களிடமிருந்து அவர் எந்த அளவிற்குத் தனிமைப்பட்டிருந்தார் என்பதை அடுத்தடுத்த வந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தின. ரவீந்திரரின் இந்த உரைக்குப் பதிலடியாக புகழ்பெற்ற வங்காளி நாவலாசிரியரான சரத்சந்திரர் ‘பண்பாடுகளின் மோதல்’ என்ற கட்டுரையை எழுதினார்.
இதைத் தொடர்ந்து 1921 செப்டெம்பர் 6 அன்று கல்கத்தா வந்த காந்தி ஜொராசங்கோவில் ரவீந்திரரை நேரடியாகச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது ஆண்ட்ரூஸ் மட்டுமே அவர்கள் இருவருடனும் இருந்தார். காந்திதான் முதலில் பேச்சைத் தொடங்கினார்.
‘குருதேவ்! 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவின் விடுதலைக்கான சுதேசி இயக்கத்தைத் தொடங்கி, அதற்குத் தலைமை தாங்கியவர் நீங்கள். இந்தியர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும். ஆங்கிலேயர்களை நகலெடுத்தவர்களாக இருக்கக்கூடாது என்றும் எப்போதும் கூறி வந்திருக்கிறீர்கள். எனது சுயராஜ்ய இயக்கமும் கூட உங்கள் சுதேசி இயக்கத்திலிருந்து பிறந்த குழந்தைதான். நீங்கள் என்னோடு சேர்ந்து அதை வலுப்படுத்த வேண்டும்.’
இதற்கு ரவீந்திரர் ‘காந்திஜி! உலகம் முழுவதுமே சுயநலம், குறுகிய தேசிய வாதம் என்ற நோயால் துன்புற்று வருகின்றது. அனைத்து நாடுகளையும் இனங்களையும் கைநீட்டி வரவேற்கும் ஒரு நாடாகவே இந்தியா எப்போதும் இருந்து வந்துள்ளது. மேற்குலகிலிருந்தும், அதன் அறிவியலில் இருந்தும், கல்வியின் மூலம் இந்தியா கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் என்றுதான் நான் நம்புகிறேன். நமக்குள் ஒத்துழைப்பு உணர்வோடு செயல்படுவதை நாம் இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது’ என்று பதிலளித்தார்.
‘குருதேவ்! நான் ஏற்கனவே இந்து-முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்கி விட்டேன்!’ என்று காந்தி கூறியபோது, ரவீந்திரர் அதை மறுத்தார். ‘பிரிட்டிஷார் தாங்களாகவே இந்த நாட்டை விட்டு வெளியேறினாலோ, அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டாலோ, அதன் பிறகு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள் காந்திஜி? அதன் பிறகு இந்துக்களும் முஸ்லீம்களும் அமைதியாக வாழ்ந்துவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு நன்றாகவே தெரியும், அவ்வாறு இருக்காது என்று!
‘பல்வேறு மதங்களை, இனங்களை, சாதிகளை சேர்ந்த நம் குழந்தைகளை ஒன்றாகத் திரட்டி, அவர்களுக்குக் கல்வி தரப்பட்டால்தான், இன்று நம்மிடையே நிலவும் பகையுணர்வையும் வன்முறை உணர்வையும் நம்மால் வெற்றி கொள்ள முடியும். எனவேதான் உலகம் முழுவதிலுமிருந்து என் முயற்சிகளுக்கு உதவி செய்ய நான் அறிஞர்களை அழைக்கிறேன். நம் குழந்தைகளுக்கு மேற்கத்திய உலகின் சாரமான அம்சங்களை அறிமுகம் செய்யும் அதே நேரத்தில், நம் கலாசாரத்தின் உயிர்ப்பான அம்சங்களிலிருந்தும் அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்!’
‘குறைந்தபட்சமாக, நம் நாட்டு மக்களுக்கு முன் உதாரணமாக நீங்கள் ராட்டை நூற்கத் தொடங்கினால் அது கதர் இயக்கத்திற்கு பேருதவியாக இருக்கும்’ என்று காந்தி அவரிடம் கோரியபோதுதான், ரவீந்திரர் மேலே குறிப்பிட்ட கவிதையைத் தன் பதிலாக அவருக்கு வழங்கினார்.
இத்தருணத்தில்தான் ரவீந்திரர் காந்திக்கு ஒரு விஷயத்தை சுட்டிக் காட்டினார். ‘என் வீட்டு வராந்தா முனைக்கு வந்து பாருங்கள் காந்திஜி! உங்கள் சீடர்கள் செய்திருப்பதைப் பாருங்கள். இதோ உள்ள சித்பூர் சாலையில் இருக்கும் கடைகளில் இருந்து அந்நியத் துணிகளை ‘திருடிக் கொண்டு’ வந்து என் வீட்டு முற்றத்தில் போட்டு எரித்துக் கொண்டே அவர்கள் பெருங்கூச்சலிட்டதை நான் பார்த்தேன். இதுதான் உங்கள் சீடர்களின் அகிம்சையா?’ என்று கேட்டார் ரவீந்திரர். எவ்வகையிலும் கருத்தொற்றுமை ஏற்படாத இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இருவரும், கருத்து வேறுபாடுகள் இருப்பினும், நண்பர்களாகவே தொடர்ந்து நீடித்தனர்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ரவீந்திரர் மீண்டும் ‘உண்மையின் அறைகூவல்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தனிப்பிரசுரமாகவும் வெளியானது. அதைத் தொடர்ந்து, காந்தி, தனது யங் இந்தியா பத்திரிக்கையில் ‘மகத்தான காவலாளி’ என்ற தலைப்பில் ரவீந்திரருக்கு மறுப்புரை ஒன்றை எழுதினார்.
பொதுவாழ்வில் தன் கருத்துகளை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பதை உணர்ந்த ரவீந்திரர் தன் மனதிற்குப் பிடித்த சாந்திநிகேதனில் அடைக்கலம் புகுந்தார். தோல்வியால் இருளடைந்த அவரது மனம் கடற்கரையில் அச்சமின்றி விளையாடும் குழந்தைகளை நோக்கித் திரும்பி நிம்மதியைத் தேடியது.
இதன் விளைவாக, தொடர்ந்து உருவான எண்ணற்ற கவிதைகளின் தொகுப்பு ‘சிசு போலாநாத்’ என்ற பெயரில் 1922இல் வெளியானது. அதே நேரத்தில் சாந்திநிகேதனில் அவரது பொறுப்புகளும் அதிகமாயின. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பியர்சன் லண்டனில் இருந்து வந்து சேர்ந்தார். ரவீந்திரரின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுக்க ஒப்புக் கொண்ட மற்றொரு ஆங்கிலேயரான லியனார்ட் எல்மிர்ஸ்டும் அவரோடு கூடவே வந்து சேர்ந்தார். அவரது இந்த முயற்சிக்கு அமெரிக்க நாட்டு செல்வப் பெண்மணி டோரதி ஸ்ட்ரெயிட்டின் தாராளமான நிதியுதவிதான் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தொடர்ந்து பிரெஞ்சு அறிஞரான சில்வெய்ன் லெவி விஸ்வபாரதியின் முதல் வருகைதரு பேராசிரியராக வந்து சேர்ந்தார். இந்தியப் பல்கலைக்கழகங்களிலேயே முதன்முறையாக திபெத்திய-சீன கலாசார ஆய்விற்கான துறையையும் அவர் உருவாக்கினார்.
1921 டிசம்பர் 23 அன்று ரவீந்திரரின் கனவுத் திட்டமான விஸ்வபாரதி முறைப்படி ஒரு பல்கலைக்கழகமாகச் செயல்படத் தொடங்கியது. தந்தை தேவேந்திரநாத் காலத்தில் இருந்து தன் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்த நிலம், கட்டடங்கள் மற்றும் இதர சொத்துகள் அனைத்தையும் ஓர் அறக்கட்டளை வடிவில் அந்தப் பல்கலைக்கழகத்திடம் ரவீந்திரர் ஒப்படைத்தார். அதைப் போன்றே அதுவரையில் தான் எழுதிய எழுத்துக்களின் காப்புரிமையையும் அந்தப் பல்கலைக்கழகத்திற்கே எழுதி வைத்தார்.
இந்தச் செயல்பாடுகளுக்கு இடையேயும் ரவீந்திரரின் ஆழ்மனது நாட்டின் நிலைமை குறித்து வருந்திக் கொண்டேதான் இருந்தது. இதன் ஒரு வெளிப்பாடாக காந்தியின் ஆளுமை, அகிம்சை குறித்த அவரது முன்னெடுப்பு ஆகியவற்றைப் போற்றும் வகையில் ‘முக்த தாரா’ (தடையற்ற நீரோட்டம்) என்ற மிகச் சிறந்த நாடகம் ஒன்றை 1922 ஜனவரி தொடக்கத்தில் அவர் எழுதினார்.
1922 பிப்ரவரி 3 அன்று ரவீந்திரரின் ஓர் அறிக்கை வங்காளி நாளிதழ்களில் வெளியானது. ஒத்துழையாமை இயக்கம் கைமீறிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், காந்தியின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, எந்த நேரத்திலும் வன்முறை வெடித்தெழக் காத்திருக்கிறது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சரியாக இரண்டு நாட்களுக்குப் பிறகு, சவுரிசவ்ரா என்ற சிறு நகரத்தில், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 22 காவலர்கள் வன்முறைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு, உயிரோடு கொளுத்தப்பட்டனர்; அல்லது வெட்டி வீழ்த்தப்பட்டனர். பேரதிர்ச்சியுற்ற காந்தி ஒரு வாரத்திற்குப் பிறகு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். மார்ச் 10 அன்று தேசத் துரோகக் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட காந்திக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ரவீந்திரரின் முக்த தாரா நாடகத்தை கல்கத்தாவில் அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. காந்தி கைது செய்யப்பட்டதும், நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும், அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய நிலையில், இந்த நாடக அரங்கேற்ற ஏற்பாடுகள் முற்றிலுமாக நின்று போனது. அதன்பிறகு ரவீந்திரர் உயிரோடு இருந்தவரை இந்த நாடகம் பொதுவெளியில் நிகழ்த்தப்படவே இல்லை என்பதோடு, எழுத்து வடிவில் மட்டுமே நீடித்தது. இதன் ஆங்கில வடிவம் 1922 மே மாதம் மாடர்ன் ரிவ்யூ இதழில் வெளியானது. இதன் மற்றொரு சிறந்த ஆங்கில மொழியாக்கம் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பதிப்புத்துறை பின்னர் வெளியிட்ட ரவீந்திரநாத் தாகூரின் மூன்று நாடகங்கள் என்ற நூலில் இடம் பெற்றிருந்தது.
1922 பிப்ரவரி 6 அன்று விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக கிராமப்புறப் புத்தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஸ்ரீநிகேதன் என்ற அமைப்பு உருவானது. அன்றைய தருணத்தில் நிலவிய ஒத்துழையாமை என்ற போக்கிற்கு முற்றிலும் முரணான வகையில், மக்களின் ஒத்துழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, கிராமப்புறங்களை புத்தாக்கம் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஒரு செயல்முறையாக ஸ்ரீநிகேதன் அமைந்திருந்தது.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, 1890களில் தன் குடும்ப நிலங்களை மேற்பார்வையிடும் பொறுப்பை ரவீந்திரர் மேற்கொண்டு வந்தபோது, கிராமப்புற மக்களின் வாழ்வு வெறுமை சூழ்ந்ததாக, மகிழ்ச்சி அற்றதாக இருப்பதை உணர்ந்து, அதை மாற்றியமைக்க முயற்சித்தார்.
பயிரிடுதல், கடன், உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தல் என தங்கள் அன்றாட செயல்பாடுகளில் எண்ணற்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த கிராமப்புற மக்களிடையே பெருமளவிற்குத் தாழ்வுணர்ச்சியும் அவநம்பிக்கையும் நிலவி வந்தன.
இதை மாற்றியமைக்க, ஒரு ஜமீன்தார் என்ற வகையில் தன்னால் ஆன அனைத்தையும் அவர் செய்தார். அவர்களின் மனங்களைத் தட்டியெழுப்பி, தங்கள் வாழ்க்கைக்கான பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் 1893-94இல் பட்டிசார் எஸ்டேட்டில் ஒரு விவசாய வங்கியைத் தொடங்கினார். அனுமதிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்கியதன் மூலம் அவர்களைக் கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்து விடுவித்தார். பின்னாளில் நோபல் பரிசுத் தொகையையும் இந்த நோக்கத்திற்காகவே இந்த வங்கியில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மட்டுமே சாந்திநிகேதன் நிர்வாகச் செலவுகளுக்குக் கிடைக்கும்படிச் செய்தார்.
உருளைக்கிழங்கு போன்ற புதிய வணிகப்பயிர்களையும் அவர் தன் எஸ்டேட்களில் அறிமுகப்படுத்தியதோடு, சணல், துணி நூற்பாலை, செங்கல்சூளை போன்ற புதிய தொழில்நிறுவனங்களும் தொடங்கப்பட்டன. ஷெலிதகாவிற்கு அருகேயுள்ள குஸ்தியா எனும் சிறுநகரத்தில் ஒரு நெசவுப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. கல்வியைப் பரப்பவும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு, அவரது எஸ்டேட்களில் மூன்று பள்ளிகளும் சிறுமிகளுக்கென தனியாக ஒரு பள்ளியும் தொடங்கப்பட்டன. இவை அனைத்துமே குடும்ப வருவாயின் மூலமே மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல, சாந்திநிகேதனுக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்தில் இருந்த சுருல் என்ற கிராமத்தில் 1912இல் 12 பிகா நிலத்தை (சுமார் ஏழரை ஏக்கர்) ரவீந்திரர் விலைக்கு வாங்கினார். இந்த நிலப்பரப்பில் ஒரு பழைய வீடும் இருந்தது. 1787 முதல் 1828 வரை இங்கு வசித்தபடி பிர்பும் மாவட்டத்தில் பருத்தி, பட்டுத்துணி போன்றவற்றை விலைக்கு வாங்கி வந்த கிழக்கிந்திய கம்பெனியின் வணிகப் பிரதிநிதியான ஜான் சீப் என்பவர் வசித்துவந்த வீடு அது. இப்போது வறண்ட பூமியாக இருக்கும் இந்தக் கிராமம் ‘கம்பெனி’ காலத்தில் செல்வச் செழிப்போடு இருந்தது என்பதற்கான அடையாளமாக அந்த வீடு இருந்தது.
ஸ்ரீநிகேதனின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்ட லியோனார்ட் எல்மிர்ஸ்ட் ரவீந்திரரின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1921 நவம்பரில் சாந்திநிகேதன் வந்து சேர்ந்தார். அது பல்கலைக்கழகமாக உருப்பெற்ற பிறகு, ரவீந்திரரின் மகன் ரதீந்திரநாத், சந்தோஷ் மஜும்தார், காளிமோகன் கோஷ் ஆகியோரோடு இணைந்து சுருல் கிராமத்திலிருந்த வீட்டிற்கு இடம்பெயர்ந்த நாளே (பிப்ரவரி 6) ஸ்ரீநிகேதனின் தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.
எல்மிர்ஸ்ட்டின் இந்த முயற்சியில் முக்கிய பங்கை வகித்தவர் அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பணக்காரப் பெண்மணியும் அவரது வருங்கால மனைவியுமான டோரதி. இவர் ஆண்டுக்கு ரூ. 32,000/- என்ற அளவில் நிதியுதவியை அதற்கடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செய்து வந்தார். பின்னாளில் ‘கல்வியின் முன்னோடி’ என்ற தனது கட்டுரைத் தொகுப்பு நூலை டோரதிக்கு அர்ப்பணம் செய்து ‘ஸ்ரீநிகேதனை நனவாக்கிய டோரதி விட்னி ஸ்ட்ரெயிட்டுக்கு’ என்று ரவீந்திரர் குறிப்பிட்டதைக் காணும்போது, அது நிலைபெறுவதற்கு டோரதியின் இந்தத் தொடர்ச்சியான நிதியுதவி எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது.
கிராமப்புறப் புத்தாக்கத்திற்கான தனது முயற்சி மிகச் சிறிய அளவிலானது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். எனினும் அந்த இலக்கை நிலைநிறுத்துவதன் மூலம், இந்த முன்னுதாரணத்தை நாட்டின் மற்ற பகுதிகளும் பின்னாளில் பின்பற்றக்கூடும் என்பதே அவரது நம்பிக்கையாக இருந்தது. ஸ்ரீநிகேதனின் செயல்பாட்டின் மூலம் கண்டெடுக்கப்பட்ட அடிப்படை குறிக்கோள்கள், செயல்முறைகள் ஆகியவற்றை நாட்டின் நலனுக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பதும் அவரது நம்பிக்கையாக இருந்தது. எவருக்காகவும் காத்திராமல் வேலையைத் தொடங்க வேண்டியதே இன்றைய தேவை என்பதுதான் அவரது தாரக மந்திரமாக வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நீடித்து வந்தது. ஸ்ரீநிகேதன் செயல்பட்ட பகுதிகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
(தொடரும்)