Skip to content
Home » தாகூர் #35 – இலங்கையை நோக்கிய இறுதிப் பயணம்

தாகூர் #35 – இலங்கையை நோக்கிய இறுதிப் பயணம்

தாகூர்

1922,1928ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரவீந்திரர், மூன்றாவது முறையாக 1934 மே-ஜூன் மாதங்களில் இலங்கையில் நீண்ட பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவரது மகள் மீரா தேவி, மருமகள் பிரதிமா தேவி, சாந்திநிகேதன் கலைப்பள்ளி தலைவர் நந்தலால் போஸ் மற்றும் சாந்திநிகேதன் மாணவக் கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர். இதுவே அவர் மேற்கொண்ட கடைசி வெளிநாட்டுப் பயணமும் ஆகும்.

இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தகரான வில்மட் ஏ. பெரேராவின் அழைப்பிற்கு இணங்க ரவீந்திரர் மேற்கொண்ட இந்தப் பயணம் குறித்து இலங்கையிலிருந்து வெளியாகும் மூன்று மொழி (ஆங்கிலம், சிங்களம், தமிழ்) நாளிதழ்களும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்தே தொடர்ச்சியாகச் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. இலங்கைக்குப் புறப்படுவதற்கு முன்பாக இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘இலங்கையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவை சாந்திநிகேதனுக்கு வந்த விருந்தாளிகள் அதன் பண்பாட்டின் சில அம்சங்களைத் தமது தீவினருக்கும் அறிமுகம் செய்ய வேண்டுமென விரும்பினர். அதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நானும் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டேன். ஏனெனில் கலையினால் ஏற்படும் மகிழ்ச்சியை பரந்துபட்ட வகையில் விரிவாக்குவது ஒரு கலைஞனாக எனது கடமையாகும்’ என்று குறிப்பிட்டிருந்ததை இலங்கையிலிருந்து வெளிவரும் சிலோன் அப்சர்வர் நாளிதழ் மறுபிரசுரம் செய்திருந்தது.

மே 9ஆம் தேதியன்று கொழும்பு துறைமுகத்தில் அவர் வந்திறங்கிய காட்சியை ஈழகேசரி நாளிதழ் கீழ்கண்டவாறு விவரித்திருந்தது:

‘சாந்தியும் அமைதியும் குடிகொண்ட வதனத்துடன் நீண்ட வெள்ளிக் கம்பிகள் போன்ற மயிருள்ள தாடி கீழ்நோக்கிச் செல்லும் புகைபோல் மிளிர, கபிலமுள்ள நீண்ட அங்கியும் தலையில் கறுத்த ஒரு குல்லாயும் அணிந்தவராய் வங்கம் பயந்த கவியரசர் கப்பலில் காணப்பட்டார். சாந்திநிகேதனம் உருவெடுத்து வந்ததுபோல் அவர் நினைவுடன் செம்மயமாய்க் காணப்பட்டார். வேதகாலத்து மகரிஷி போன்ற வயதால் முதிர்ந்து காணப்பட்டாலும், அவருடைய வாக்கியங்கள் மூவா இளமை உடையனவாயிருந்தன. ஒரு காலின்மீது மற்றக் காலைப் போட்டுக் கொண்டு இருந்த கவியரசருடைய விரல்கள் வீணையில் நரம்புகளைத் தடவுவனபோல் அசைந்தன.’

மே 10ஆம் தேதி நண்பகலில் கிராண்ட் ஓரியண்ட் ஓட்டலில் நடைபெற்ற ரோட்டரி கழக நிகழ்வில் ‘இந்திய பல்கலைக்கழகங்களின் லட்சியம்’ என்ற தலைப்பில் ரவீந்திரர் இந்தப் பயணத்தின் முதல் உரையை நிகழ்த்தினார். அவரது உரை ஒலிபெருக்கிகள் மூலம் நகரெங்கும் ஒலிபரப்பானது.

‘சபர்மதி முனிவர் வாய்திறந்தால் மக்கள் மீதுள்ள அன்பு ஊற்றெடுப்பது போல் கவி தாகூர் பேசியபோது விவேகம் ஊற்றெடுத்தது’ என ஈழகேசரி நாளிதழின் நிருபர் குறிப்பிட்டிருந்தார்.

ரவீந்திரரின் இலங்கைப் பயணம் சாந்திநிகேதனுக்கு நிதி திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. மே 12 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து கொழும்பு ரீகல் தியேட்டரில் அவரது ‘சாப விமோசனம்’ நாடகம் நிகழ்த்தப்பட்டது. பின்னாளில் இலங்கையின் பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகா இந்த நிகழ்வு குறித்து சிலோன் டெய்லி நியூஸ் நாளிதழில் எழுதுகையில், ‘காதல், கோபம், துயரம், மகிழ்ச்சி, வீரம் என்ற அனைத்து மனித உணர்வுகளும் இந்த நாடகத்தில் தமக்கே உரிய இடத்தைப் பெற்றிருந்தன. அத்துடன் அவை இசையினதும், நாட்டியத்தினதும் லாவகமான மற்றும் தீர்க்கமான கையாள்கையுடன் உயரிய கலை வெளிப்பாடாக அமைந்திருந்தன’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மே 13 அன்று வெளியான சிலோன் அப்சர்வர் நாளிதழ் பட்டுத்துணியின் மேல் மை கொண்டு வரையப்பட்ட கவுதமரும் ஆட்டுக்குட்டியும் என்ற நந்தலால் போஸின் கோட்டோவியத்தையும், அவரால் எழுதப்பட்ட ‘சாந்திநிகேதனில் கலை இயக்கம்’ என்ற கட்டுரையையும் வெளியிட்டது.

இலங்கை கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ரவீந்திரர் மற்றும் சாந்திநிகேதன் மாணவர்களின் ஓவிய – கைவினை காட்சியை மே 14ஆம் தேதி கிரஹாம் ரைரல் கொழும்பு கலைக்கூடத்தில் திறந்து வைத்தார். இதில் காட்சிப் படுத்தப்பட்ட 150 ஓவியங்களில் 56 ஓவியங்கள் ரவீந்திரர் வரைந்ததாகும்.

மே 16 அன்று கொழும்பு நகராட்சி அளித்த வரவேற்பில் பேசிய ரவீந்திரர் மேல்நாட்டு நாகரிகம் கீழை நாடுகளை எவ்வாறு அடிமைப்படுத்தி அவர்களின் சுயமரியாதைக்குத் தீங்கினை உண்டாக்கியிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்.

ரவீந்திரரும் அவரது குழுவினரும் மே 22ஆம் தேதி காலிக்கும் மாத்தரைக்கும் பயணம் மேற்கொண்டனர். அங்கு முகமூடி நடனங்களைக் கண்டு களித்தனர். மே 26 கொழும்பு திரும்பிய இந்தக் குழு மே 28-29 தேதிகளில் ‘சாப விமோசனம்’ நாடகத்தை மீண்டும் நிகழ்த்தியது.

ஜூன் 3ஆம் தேதி கண்டிக்குச் சென்ற ரவீந்திரர் அங்கு அப்போது தொடங்கியிருந்த நாவலான ‘சார் அத்யாயா’ (நான்கு அத்தியாயங்கள்) என்ற நாவலின் இறுதிப்பகுதியை எழுதி முடித்தார். (இதுதான் அவர் எழுதிய கடைசி நாவல்). அன்றைய வங்காளத்தில் தலைமறைவாக இருந்தபடி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் குறித்த இந்த நாவல் வங்காளத்தில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது.

பின்னர் அங்கிருந்து அனுராதபுரம் வழியாக ஜூன் 11 அன்று ரயில் பயணமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த ரவீந்திரருக்கும் அவரது குழுவினருக்கும் ரயில் நிலையத்தில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு யாழ்ப்பாண முற்றவெளியில் பொதுமக்கள் சார்பாக அளிக்கப்பட்ட வரவேற்பில் 5,000 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்கு ஐசக் தம்பையா தலைமை வகித்தார். அவருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்து வழங்கப்பட்டது.

இதற்கான ரவீந்திரரின் பதிலுரை ‘ராமச்சந்திரரின் நிலத்திலிருந்தான செய்தி’ என்ற தலைப்பில் அமைந்திருந்தது. இந்த உரையை ஈழகேசரி நாளிதழும், சிலோன் அப்சர்வர் நாளிதழும் விரிவாக வெளியிட்டு நாடு முழுவதிலும் பரப்புரை செய்தன.

‘இராமபிரானின் தூதனாக இங்கு வந்து ஒரு பாலத்தைக் கட்டலாமென எண்ணுகிறேன். அது அழகான கவிதைகளாலும் பாட்டுக்களாலும் நாட்டியத்தாலும் ஆனது. இந்தியா – இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வசிப்போரை ஒன்றுபடச் செய்யக்கூடிய வழி அது ஒன்றே ஆகும். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலுள்ள பழைய ஒற்றுமையையும் உறவையும் மீண்டும் நிலைபெறச் செய்வதே கவிஞனாகிய என்னுடைய முயற்சியாகும்.’

ரவீந்திரரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட யாழ்ப்பாண கல்லூரியைச் சேர்ந்த அமெரிக்கரான பிக்னெல் பாதிரியார் தன் நேரடி அனுபவத்தை இவ்வாறு விவரித்திருந்தார்:

‘எமது விருந்தாளியின் வயது, பலவீனம் என்பவற்றின்மீது அதிக அழுத்தம் தரப்பட்ட நிலையில் இந்தக் கூடலில் வரவேற்புரைக்கு அவர் அளித்த பதிலை மிக எளிதாகக் கேட்க முடிந்தது பெரியதொரு ஆச்சரியமே. எந்தத் தடைகளுமற்று அவர் முற்றாகத் தன்னை முழு நிகழ்ச்சிக்குள்ளும் ஈடுபடுத்திக் கொண்டார். குரல் கணீரென மணி போல் ஒலித்ததுடன் அழகான சொற்களாலும் அது கோர்க்கப்பட்டிருந்தது. ‘மனம் எங்கே அச்சமின்றி உள்ளதோ…’ என்ற இந்தப் பரிச்சயமான வரிகள் அதன் படைப்பாளியால் உச்சரிக்கப்படுகையில் புதியதொரு முக்கியத்துவத்தைப் பெற்றன’ என்கிறார் பிக்னெல்.

அடுத்தநாள் மாணவர்களிடையே தனது கவிதைகளை படித்துக் காட்டிவிட்டு ஆற்றிய சிறியதொரு உரையையும் பிக்னெல் சுட்டிக் காட்டினார்: ‘சிங்களவர்கள் வெளிநாட்டவரைப் பார்த்துப் பாசாங்கு செய்வதைப் போல, தமிழ் மக்கள் இறந்த கால பக்தியிலும் தமது மூதாதையர்களை வழிபடுவதிலும் தொலைந்து போயுள்ளனர். இந்த மூதாதையர்கள் அவர்களது வேலைகளை ஆற்றிவிட்டு மறைந்தனர். இந்த உன்னதமான மரபுகள் அவர்கள் உருவாக்கியவைதான். நீங்கள் அவர்களின் வம்சாவளியினர் என்றால், உங்களுக்கேயான சொந்த மரபுகளை உருவாக்குவீர்கள். அவற்றைப் போலச் செய்ய மாட்டீர்கள்.’

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ரவீந்திரர் குழுவினர் ‘சாப விமோசனம்’ நாடகத்தை நிகழ்த்திக் காட்டினர். அன்றிருந்த யாழ்ப்பாண மக்களின் நினைவைவிட்டு என்றும் நீங்காத இடம்பிடித்தது இந்த நாடகம் என்று பத்திரிக்கைகள் குறிப்பிட்டன. கருத்துகளைத் தாய்மொழியிலேயே வெளிப்படுத்துவதன் அவசியம் குறித்து அவர் தனது உரைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததும் மக்களின் மனதில் ஆழப் பதிந்தன.

ரவீந்திரரின் அடியொற்றி 1956இல் பண்டிதர் வீரகத்தி, வாணி கலைக்கழகத்தை கரவெட்டியில் நிறுவினார். இங்கு இசை, நடனம், நாடகம், ஓவியம் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்டன. வாணி கலைக்கழகத்தின் ஆறாண்டு நினைவு மலர் இந்நிறுவனத்தை ‘ஈழத்தின் இலட்சிய சாந்திநிகேதன்’ என்று குறிப்பிட்டது.

இந்த இலங்கைப் பயணத்தின்போது ரவீந்திரர் வெளியிட்ட கருத்துகள் இந்தியா – இலங்கை என்ற அரசியல்ரீதியான, புவியியல்ரீதியான கட்டமைப்புகளைத் தாண்டி ஆன்மிகம், வரலாறு, பண்பாடு, இனம் ஆகிய விஷயங்களில் நிலவி வரும் உறவுகள், தாய்மொழிக் கல்வி ஆகியவற்றுக்கு அழுத்தம் தருவதாக அமைந்திருந்தன.

எனினும் ரவீந்திரரின் பயணத்தைத் தொடர்ந்து வந்த நவீன இலங்கையின் வரலாறானது இனம், மதம் மற்றும் மொழி சார்ந்த வன்முறை நிரம்பிய கதையாடல்களால் எழுதப்பட்டது என்று இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

யாழ்ப்பாண நிகழ்வுகளுக்குப் பின்னர் ரவீந்திரரும் அவர்தம் குழுவினரும் ஜூன் 15 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து தனுஷ்கோடி வழியாக சென்னை வந்து பின்னர் ரயில்மூலம் கல்கத்தாவிற்குப் புறப்பட்டனர்.

கல்கத்தாவில் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு ஜூன் 28ஆம் தேதி சாந்திநிகேதனுக்குத் திரும்பிய ரவீந்திரர் அதன் நிர்வாகப் பொறுப்புகலில் பல மாற்றங்களைச் செய்தார். இதனாலோ அல்லது வேறு காரணங்களாலோ ரவீந்திரரின் மூத்த அண்ணன் த்விஜேந்திரநாத் தாகூரின் பேரனும், ரவீந்திரரின் இசைப்பாடல்களின் பாதுகாப்புப் பெட்டகம் என்று பெயரெடுத்தவரும், சங்கீத் பவனத்தின் முதல் முதல்வருமான தினேந்திரநாத் தாகூர், தான் பிறந்து வளர்ந்த சாந்திநிகேதனைவிட்டு ஜூலை மாதத்தில் வெளியேறினார். சரியாக ஓராண்டுக்குப் பிறகு 1935 ஜூலையில் அவர் உயிர் நீத்தார்.

ஜூலை 14ஆம் தேதி கல்கத்தா சென்ற ரவீந்திரர் 16ஆம் தேதியன்று கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ‘இலக்கியம்: ஒரு விளக்கம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். 19ஆம் தேதி மகாத்மா காந்தியுடனான ஒரு சந்திப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் சாந்திநிகேதனுக்குத் திரும்பினார்.

ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று சாந்திநிகேதனுக்கு வருகை தந்த சீன அறிஞர் பேராசிரியர் டான் யுன் – ஷானுக்கு வரவேற்பு நல்கிய ரவீந்திரர் இந்திய-சீன கலாசாரக் கழகத்தின் தலைமையகத்திற்கு இடமளிக்க சாந்திநிகேதன் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதே மாத இறுதியில் எல்லை காந்தி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற காந்தியவாதியான கான் அப்துல் கஃபார் கான் சிறையிலிருந்து விடுதலை பெற்று சாந்திநிகேதனுக்கு வருகை தந்தார். ரவீந்திரர் அவரை அன்போடு வரவேற்றார். அத்தருணத்தில் எல்லை காந்தியின் மகன் கலா பவனில் மாணவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதத்தில் பிரிட்டிஷ் அறிஞரும் மனிதநேயருமான கில்பர்ட் மர்ரே, கிழக்கு – மேற்கு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களிடையே நல்லதொரு புரிதலை வளர்த்தெடுக்க தாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு உதவ வேண்டுமெனக் கோரி ரவீந்திரருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைவிட விருப்பமான விஷயம் வேறேதும் அவருக்கு உண்டா என்ன?

‘தங்களது செயலாலும் வார்த்தைகளாலும் மனிதர்களை இயக்குபவர்களும், கலைஞர்களும், சிந்தனையாளர்களும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டவர்களாக, ஒருவரையொருவர் புரிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் எல்லைகள், சுங்க வரிகள், அரசின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட வகையில் மனம் அல்லது சிந்தனைக்கான மகத்தானதொரு கழகத்தினை உருவாக்குவதிலும் அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். அழகையும் உண்மையையும் மனித சகோதரத்துவத்தையும் வென்றடைவதை நோக்கமாகக் கொண்டு, கலை அல்லது அறிவியலின் பல்வேறுபட்ட வழிமுறைகளின் மூலம் அறிவார்ந்த வாழ்க்கையை வாழ்வோர் ஒன்றிணைந்த ஒரு கழகமாகத் திகழ வேண்டும்.’

கில்பர்ட் மர்ரே எழுதிய கடிதத்திற்கு செப்டெம்பர் 16ஆம் தேதியன்று எழுதிய பதில் கடிதத்தில் மர்ரேயின் முன்வைப்பை ஏற்றுக்கொண்ட வகையில் ரவீந்திரர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்:

‘எனது வாழ்க்கைப் பாதையின் இறுதித் தருணத்தில், அந்திமச் சூரியனைப் பார்த்தபடியே மனித இனத்தின் பொற்பாதங்களில் அறிவெனும் தூய ஒளிவிளக்கை ஏற்றிவரும் அந்த இளமை நிரம்பிய ஆத்மாக்களுக்கும் ஒவ்வொரு நாட்டையும் இனத்தையும் சேர்ந்த இந்தத் தனிநபர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகத்தான யுகத்தில் பிறந்தமைக்காக நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். பழையனவற்றுக்குக் கிட்டத்தட்ட நேர் எதிரான ஒரு நிலைமைக்கு ஏற்ப நமது மனங்களைச் சரிசெய்துகொள்ள சிறிது காலம் பிடிக்கும் என்பது உண்மைதான். விடியலின் ஒளிக்கீற்று வெளிப்பட்டுவிட்டது என்று உலகிற்கு அறிவிப்போமாக! எல்லைகளுக்குப் பின்னால் நம்மை அடைத்துக் கொண்டுவிடாமல், பரஸ்பர புரிதல், நம்பிக்கை ஆகிய உணர்வுகளோடு, ஒத்துழைப்பு என்ற பொதுத்தளத்தில் ஒருவரையொருவர் சந்திப்போமாக! புறக்கணிப்பு என்ற உணர்வை வளர்த்தெடுக்காமல் ஒருவரையொருவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோமாக! நம்மிடம் இருக்கும் சிறந்தனவற்றை வழங்குவதை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வோமாக!’

இந்த இருவரின் கடிதங்களும் லீக் ஆஃப் நேஷன்ஸ் அமைப்பின் முன்னெடுப்பில் ‘கிழக்கும் மேற்கும்’ என்ற தனிப் பிரசுரமாக 1935ஆம் ஆண்டு பாரீஸ் நகரிலிருந்து செயல்பட்டு வந்த அறிவுசார் ஒத்துழைப்பிற்கான சர்வதேச நிலையத்தினால் வெளியிடப்பட்டது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *