Skip to content
Home » தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

Rabindranath Tagore

2 பிப்ரவரி 1910 அன்று ரவீந்திரர் தனது மூன்றாவது மருமகனான நாகேந்திரநாத் கங்குலிக்கு இவ்வாறு எழுதியிருந்தார்: ‘செய்யவேண்டிய வேலைகளுக்கு முடிவேயில்லை. கூட்டுறவுப் பண்ணையைத் தொடங்குவதற்கு விவசாயிகளைத் திரட்ட வேண்டும்; வங்கிகளை நிறுவ வேண்டும்; அனைத்து வகையிலும் சுகாதாரமான குடியிருப்புகளை அவர்களுக்காகக் கட்ட வேண்டும்; அவர்களைக் கடனிலிருந்து விடுவிக்கவும், அவர்களது குழந்தைகளுக்கான கல்விக்கு ஏற்பாடு செய்யவும், முதிய வயதில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும், சாலைகளையும் பாசன வசதிகளையும் உருவாக்கி, அவர்களின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கவும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் வகையில் அவர்களை ஒன்றுதிரட்டவும் வேண்டியுள்ளது.’

கூர்ந்து கவனித்துப் பார்த்தோமெனில், இதே காலத்தில்தான் ஆன்மிகக் கருத்துகளை ஆழமாக வெளிப்படுத்தும் கீதாஞ்சலி வகைப்பட்ட கவிதைகளை அவர் எழுதி வந்தார் என்பது தெரிய வரும். அதாவது, அவரது ஆன்மிகச் சிந்தனைகளுக்கு ஒரு சமூக அடிப்படை இருந்ததைப் போலவே, அவரது சமூகச் சிந்தனைக்கு ஒருவித ஆன்மிக உந்துதல் இருந்ததைக் காண முடியும். இவை இரண்டுமே சமநிலையில் ஆனதாக, ஒன்றோடொன்று இணைந்ததாக, அவரது வாழ்க்கையின் போக்கினை ஒரு மையப்புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துவதாக இருந்ததையும் காணமுடியும்.

ரவீந்திரரைப் பொறுத்தவரையில் மகத்தான சிந்தனையாளராகவும் தத்துவஞானியாகவும் கல்வியாளராகவும் அதே நேரத்தில் தன்னிகரற்ற சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். எனினும் மேற்குலகில் அவரது இந்த அம்சம் மிகக் குறைவான அளவிலேயே தெரிய வந்தது. அங்கு அவர் மகத்தான கவிஞராகவும் ஞானியாகவுமே பெருமளவிற்கு அறியப்பட்டிருந்தார்.

கிராமப்புற மறுகட்டமைப்பு

ஏற்கனவே பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியிருந்ததைப் போல, கிராமப்புற மக்களின் அதீத வறுமையும் பின் தங்கிய நிலையுமே அவருக்கு என்றென்றும் செயல்படுவதற்கான தூண்டுகோலாக இருந்தன. அவரது ஒவ்வொரு முடிவிற்குப் பின்னாலும் கிராமப்புற வளர்ச்சிக்கு அந்த முடிவு எவ்வாறு உதவி செய்வதாக இருக்கும் என்ற மதிப்பீடே ஆதாரமாக இருந்து வந்துள்ளது. பொது சமூகத்தில் அவர் எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த சர்க்கா, ஒத்துழையாமை இயக்கம், கல்வி புறக்கணிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும், கிராமப்புற மக்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு ஏதும் இவற்றால் இல்லை என்பதே அவரது எதிர்ப்பின் அடிப்படையாக இருந்தது.

அவரது இறையியல் உணர்வு என்பது அடிப்படையில் மனிதத் தன்மை கொண்டதாக, அதாவது கடவுள், இயற்கை, மனிதன் ஆகிய மூன்று அம்சங்களும் எவ்வித முரண்பாடுகளும் இன்றி ஒன்று கலந்ததாக இருந்தது. இதுதான் அவரது தனித்துவமான ஆளுமையாகவும் அமைந்திருந்தது.

1904ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘ஸ்வதேசி சமாஜ்’ (சுயாட்சி பெற்ற மக்கள் குழு) என்ற கட்டுரை அதற்கு முந்தைய 14 வருடங்களில் வங்காள கிராமப்புறங்களில் அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். ரவீந்திரரின் கவனம் எல்லாம் கிராமப்பகுதியில் கூட்டாக புத்துயிர்ப்பினை கொண்டுவருவதில்தான் இருந்ததே தவிர, அந்நிய ஆட்சியை வெறுமனே எதிர்ப்பதில் இல்லை. எனவே அவரது செயல்திட்டமானது வழக்கமான அரசியல் வழிமுறைகளுக்கு வெளியே இருந்தது.

அரசு என்ற அமைப்பின் இடத்தில் மக்கள் குழுவைப் பொருத்த முயற்சித்தார். கிட்டத்தட்ட அராஜகமான போக்காக இது பார்க்கப்பட்டது. மகாத்மா காந்தி தொடங்கி அன்றைய அரசியல்வாதிகள் பலரின் அணுகுமுறைகளோடு அவர் அடிக்கடி மோதவேண்டிய சூழலையும் அது ஏற்படுத்தியது. பயனுள்ள கல்வி, செயல்திறன் மிக்க சீர்திருத்தம் ஆகியவற்றின் மூலம் சமூகத்தை உள்ளிருந்து மறுகட்டமைப்பு செய்வதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார்.

1922 ஜூலையில் ‘மண்வளக் கொள்ளை’ என்ற தலைப்பில் எல்மிர்ஸ்ட் ஆற்றிய சொற்பொழிவின் நூல்வடிவத்திற்கு வழங்கிய முன்னுரையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: ‘வறண்டு போயிருக்கும் கிராமப்புற வாழ்க்கையில் மகிழ்ச்சியெனும் ஓடையை ஓட விடுவதுதான் எங்களது நோக்கம். இதற்கு நமது அறிஞர்களும், கவிஞர்களும், இசைக் கலைஞர்களும், கவின் கலைஞர்களும் அறிவியல் நிபுணர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.’

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

1926-1928 காலத்தில் ரவீந்திரர் எழுதிய ‘வனவாணி’ (கானகத்தின் குரல்) என்ற கவிதைத் தொகுப்பு நம்மிடையே உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறியது.

‘இயற்கையில் இரண்டுவிதமான அம்சங்கள் உள்ளன. மனிதனால் அணுகத் தக்கவை; அவனால் அணுகத் தகாதவை. இவையிரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை மிகுந்த கவனத்துடன் நாம் புரிந்து கொள்வதோடு, சுற்று முற்றும் பார்த்தபடி, மிகுந்த மரியாதையுடன் நாம் இயற்கையை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும். மனிதனின் திறமைகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாத, பிரச்சனைக்குரிய பலவற்றையும் இயற்கை தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது.’

நம்மைச் சுற்றியுள்ள இந்த இயற்கையின் அழகை ஏறெடுத்தும் பார்க்காதவர்களாக நாம் இருக்கிறோம் என்பதையும் ரவீந்திரர் சுட்டிக் காட்டியிருந்தார்:

‘இந்த வண்ணங்கள் அனைத்தும், இந்த ஒளியும், நிழலும், வானத்தை நிரப்பியிருக்கும் அமைதியான இந்த பிரம்மாண்டமும், இந்த அமைதியும் அழகும், பூமியைச் சொர்க்கமாக நிரப்பியிருக்கின்றன. இவை அனைத்தையும் கொண்டு வருவதற்கு எவ்வளவு முன்தயாரிப்புகளைச் செய்ய வேண்டியிருக்கும்! பரந்து விரிந்த, மிக அற்புதமான இந்தச் செயல்முறை நமக்கு வெளியே ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதன் அரவணைப்பில் இருப்பதற்கு நாம் மிக மிக அரிதாகவே முயற்சிக்கிறோம். இந்தப் பேரண்டத்திலிருந்துதான் நாம் எவ்வளவுதூரம் விலகி நிற்கிறோம்! முடிவேயில்லாத இருள் வழியாக பல லட்சக்கணக்கான ஆண்டுகள் பயணம் செய்து இந்தப் பூமியை வந்தடையும் ஒரு நட்சத்திரத்தின் ஒளி நம் இதயத்தைத் தொடுவதில்லை. ஒருவேளை அதையும் தாண்டி பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அது இருக்கிறதோ, என்னமோ…

‘என்னையும் கொண்டுவந்து சேர்த்துள்ள இந்த உலகத்தில் வாழும் மக்கள் மிகவும் விசித்திரமானவர்களாகத்தான் இருக்கின்றனர். எதுவுமே அவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக இரவும் பகலும் போராடி எண்ணற்ற விதிகளையும் சுவர்களையும் அவர்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். நல்ல வேளையாக, பூத்துக் குலுங்கும் செடிகளை நம் கண்ணில் படாமல் மறைக்கும் திரைகளையோ, அல்லது நிலவை மறைத்துவிடும் ஒரு முகாமையோ அவர்கள் இன்னும் உருவாக்கவில்லை என்பதே ஓர் அதிசயம்தான்!’

இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள ஆழ்ந்த உறவை ‘பள்ளி பிரகிருதி’ (கிராமங்களில் இயற்கை) என்ற தொகுப்பில் அவர் விரிவாக எடுத்துரைத்திருந்தார்.

பெண் விடுதலை

பெண்களின் வாழ்க்கையிலும் பொதுவாக சமூகத்திலும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான பிரம்ம சமாஜத்தின் முயற்சிகளோடு உடன்பாடு கொண்டிருந்தார். அன்றாட வாழ்க்கை குறித்த விமர்சனபூர்வமான பார்வையைக் கொண்டதாக அவரது கதைகள் இருந்தன. ரவீந்திரரைப் பொறுத்தவரையில், விடுதலை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் அரசியல் தன்மை கொண்ட ஒன்றல்ல. மாறாக, அது சுய விடுதலையாகவும், மக்கள் சமூக அளவில் உணர்வு குறித்த மாற்றத்தைக் குறிப்பதாகவும், தனிப்பட்ட வகையிலும் சமூக அளவிலும் மற்றவர்களோடு இணைந்து செயல்படும் ஒரு விஷயமாகவும் இருந்தது.

ரவீந்திரர் தனது எழுத்துகளில் உறவுகளால் ஏற்படும் உணர்வின்மூலம் தனிநபர்களுக்கு இடையிலான உறவுகளை ஆழமாக ஆய்வு செய்தார். அதன் மூலம் பிறன்மனை விழைதல், விதவைத்தன்மை, ஆணாதிக்கம், குழந்தைத் திருமணம் போன்ற சமூகப் பிரச்சனைகளைத் தொடர்ந்து விவாதித்து வந்தார். அவரது நாயகிகள் நடப்பிலுள்ள சமூகத்தின் பாரபட்சத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை முன்வைப்பதன்மூலம் வாசகர்களைப் புதியதொரு சிந்தனை மாற்றத்திற்கு ஆட்படுத்தினார்.

பெண்களின் வழக்கமான பணிகள் எவ்வாறு தலைகீழான மாற்றத்தைப் பெற்றுள்ளது என்பதை இதுவரையில் ஆண்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல செயல்களையும் புதிய கடமைகளையும் பெண்கள் எவ்வாறு கையகப்படுத்தி வருகின்றனர் என்பதையும் ‘நாரி’ (பெண்) என்ற கட்டுரையில் விளக்கி, உலகத்தில் புதியதொரு யுகம் பிறந்துள்ளதை அவர் முன்னறிவித்தார்.

வீடுகளில் அடைந்து கிடக்கும் பெண்களுக்கு முறைசாரா கல்வியை (இன்றைய திறந்த நிலைக் கல்வி) வழங்க அன்றைய ஆட்சியாளர்களுடனும் கல்கத்தா பல்கலைக்கழகத்துடனும் தொடர்ந்து போராடினார்.

1910ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று ரவீந்திரரின் மூத்த மகன் ரதீந்திரநாத்- பிரதிமா தேவி திருமணம் நடைபெற்றது. ஜொராசங்கோ குடும்பத்தில் நடைபெற்ற முதல் விதவைத் திருமணம் இதுவே ஆகும்.

மொழி சீர்திருத்தம்

அதைப் போன்றே வங்காளி மொழியை அடுத்தக் கட்டத்திற்கு முன்நகர்த்திக் கொண்டு செல்வதில் அவர் ஆற்றிய பணி அளவிடற்கரியது. வடமொழியையே பெரிதும் நம்பியிருக்கும் ஒரு மொழியாக வங்காளி மொழியை அதுவரை கருதியும் போற்றியும் வந்தவர்களுக்கு இடையே அதன் தனித்தன்மையை அவர் முன்னிறுத்தினார். இவ்வகையில் 1892ஆம் ஆண்டிலேயே தாய்மொழி வழிக் கல்வியை அவர் வலியுறுத்தினார். இதையே காங்கிரஸ் கட்சியின் ஒரு தீர்மானத்தின்மூலம் இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க காந்தி முயற்சித்தபோது, ‘தாய்மொழி வழிக் கல்வியே அடிப்படையான ஒன்று. அருகமை மொழிகளின் நெருக்கமான உறவின் மூலம் அவை ஒன்றையொன்று வளர்ப்பதாக இருக்கவேண்டுமே தவிர, எந்தவொரு மொழியையும் மேலிருந்து திணிக்கலாகாது’ என்று அழுத்தம் திருத்தமாக அவர் கூறியிருந்தார்.

‘சபுஜ் பத்ரா’ இதழில் நடைபெற்ற இலக்கிய விவாதங்களின்போது சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதுவதே இலக்கியத்தின் வெற்றியாக அமையும் என்றும் அவர் வாதிட்டார். அவ்வகையில் வங்காளி மொழியின் நவீன தோற்றத்திற்கு அடித்தளமிட்டவராகவும் அவர் திகழ்ந்தார்.

பேரழிவிற்கு இடையிலும் துளிர்த்த நம்பிக்கை

ஸ்ரீநிகேதன் செயல்பாடுகளின்மூலம் அவருக்குக் கிடைத்த அனுபவத்தோடு கூடவே, இந்தியாவின் விடுதலைப் போராட்டம், முதல் உலகப் போரின் பேரழிவுகள், உலகமெங்கிலும் வேகமாகவும் வெறித்தனமாகவும் தலைதூக்கி வந்த தேசியவாத உணர்வு, அதற்குச் சற்று பின்னால் 1930இல் அவரது ரஷ்யப் பயணம் ஆகிய அனைத்து நிகழ்வுகளும் மக்களோடு இணைந்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அவரிடம் ஏற்படுத்தியது. ‘அவமதிக்கப்பட்ட மக்களின் வெற்றிக்காக மனிதகுல வரலாறு மிகுந்த பொறுமையோடு காத்திருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

துயரமும் புறக்கணிப்பும் அவமதிப்பும் இந்த உலகத்தில் நீடித்திருக்கும் வரையில், ஒரு தனிமனிதனால் தன்னந்தனியாக சுயவிடுதலையை வென்றடைய முடியாது என்று குறிப்பிட்ட அதே நேரத்தில், மனித குலத்தின் மீதான தன் நம்பிக்கையை அவர் இறுதிவரை வெளிப்படுத்தி வந்தார்.

பாராமுகம்

கவிதைகள், பாடல்கள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், இதர கலைகள் போன்ற பல்வேறு வடிவங்களில் அவர் இலக்கிய ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் அளித்துள்ள பங்களிப்புகள் பெருமளவிற்கு பாராட்டுகளும் அங்கீகாரமும் பெற்றுள்ளபோதிலும், சமூக-பொருளாதார துறையின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தினை (குறிப்பாக, பாதுகாப்பற்ற, ஏழை கிராம மக்களிடையே) உருவாக்குவதற்கான ரவீந்திரரின் கருத்துகள், சிந்தனைகள், தொலைநோக்குகள் மற்றும் நேரடிச் செயல்பாடுகளை நாம் எளிதில் மறந்துவிடலாகாது.

குறிப்பாக வங்காளத்திலும், ஒட்டுமொத்தத்தில் நமது இந்திய நாட்டிலும் சமூக-பொருளாதார மாற்றத்தை நோக்கிய ரவீந்திரரின் சிந்தனைகள், முயற்சிகள், செயல்பாடுகள் ஆகியவை இன்றளவும் பொருட்படுத்தப் படாமல், அறிவாளிகள் மத்தியிலும், அதிகார மட்டங்களிலும் விரிவான அளவிற்கு அறியப்படாத ஒன்றாக இருப்பது வருத்தத்திற்குரியது, விசித்திரமானது. உதாரணமாக, அவை வங்காளத்தின் கிராமப்புறங்களில் சிறியதொரு பகுதியில் மட்டுமே முடங்கிக் கிடக்கிறது என்பது மட்டுமல்ல; இந்தப் பிரச்சனைகள் குறித்த அவரது உரைகள், கட்டுரைகள் ஆகியவையும் கூட வங்காளி மொழியிலிருந்து ஆங்கிலம் உள்ளிட்டு இதர மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.

சமூக-பொருளாதார வளர்ச்சி, கல்வி விரிவாக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற துறைகளில் நடைமுறைக்கு ஏற்ற, செயலூக்கமிக்க அவரது காத்திரமான முயற்சிகள், கருத்துகள் ஆகியவை குறித்து எப்போதுமே நீக்குபோக்கான அணுகுமுறையே பின்பற்றப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக, சாந்திநிகேதன், ஸ்ரீநிகேதன் போன்ற ரவீந்திரரின் அடித்தள அளவிலான பரிசோதனை முயற்சிகள், இது குறித்த அவரது கணிசமான அளவிலான எழுத்துகள், உரைகள், கல்வி விரிவாக்கம் மற்றும் அதன் தரம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் மறுகட்டமைப்பு ஆகியவை குறித்த அவரது தொலைநோக்குக் கருத்துகள் நாட்டின் விடுதலைக்குப் பின்பு நாட்டின் சமூக -பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள், விருப்பங்கள், முன்முயற்சிகள், கொள்கை உருவாக்கம் போன்றவற்றுக்கான திட்டங்களில் எப்போதாகிலும் தீவிரமான வகையில் ஈடுபடுத்தப்பட்டதாகவோ அல்லது கருதப்பட்டதாகவோ தெரியவில்லை.

நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மகாத்மா காந்தியின் பல்வேறு கருத்துகளும் சிந்தனைகளும் விரிவான அளவிலும் தனிச் சிறப்புமிக்க வட்டங்களிலும் விவாதிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் கணிசமானவை நாட்டின் நவீனப்படுத்தலுக்கும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்குமான செயல்திட்டங்கள், கொள்கைகளை உருவாக்கி அமல்படுத்துவதில் நடைமுறைக்கு ஏற்றவை அல்ல என்று கைவிடப்பட்டன. இதை அனைவரும் அறிவர். ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, நாட்டின் முக்கியமான சமூக–பொருளாதார பிரச்சனைகளை புரிந்து கொண்டு, அதைக் கையாளுவதற்கான ரவீந்திரரின் சிந்தனைகள், அவரது முனைப்பு, முன்முயற்சிகள் ஆகியவை நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக அறிவியல் குறித்த விவாதங்களிலோ, மக்களுக்கான கொள்கை முன்முயற்சிகளிலோ அங்கீகரிக்கப்படவோ ஆய்வு செய்யப்படவோ, ஏற்கப்படவோ அல்லது மறுதலிக்கப்படவோ இல்லை என்பது மட்டுமின்றி, மிக மிக அரிதாகவே அவை சுட்டிக் காட்டப்பட்டன என்பதே உண்மையாகும்.

இருந்தபோதிலும், இந்திய கிராமங்களில் இருந்த திக்கற்ற, கல்வியறிவற்ற, அறியாமையில் ஆழ்ந்த மக்களின்மீது தீவிர கரிசனத்துடன் அவர்களுக்கு சேவை செய்வதில் உறுதி கொண்டவராக இருந்த ரவீந்திரர் சற்றும் தாமதியாமல் கிராமப்புற வளர்ச்சி மற்றும் கல்விரீதியான மேம்பாடு ஆகியவற்றில் பல்வேறு புதுமையான திட்டங்கள், பரிசோதனை முயற்சிகள் மூலம் கிராமப்புற மக்களைச் சென்றடைந்த ஒரு செயல்வீரராகத் திகழ்கிறார்.

கிட்டத்தட்ட கல்கத்தா நகரிலிருந்து சென்று அவர் முதன்முதலாக வங்காள கிராமப்புறத்தில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்து பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்து தொடர்ந்து எழுதி வந்தார். (இதுவரையிலும் ஆங்கிலத்திலோ அல்லது இதர மொழிகளிலோ பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படாத) வங்காளி மொழியில் அமைந்த அவரது எழுத்துக்களிலும், உரைகளிலும், சொற்பொழிவுகளிலும், இன்று பெருமளவிற்கு விளம்பரப்படுத்தப்படும் இன்றைய முக்கிய சமூக – பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் கவலைகள் குறித்து அவர் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதும் அவற்றுக்கான பல தீர்வுகளையும் வழங்கியிருக்கிறார் என்பதும் பலரும் அறியாத ஒன்று என்பது வருந்தத்தக்கதே.

1941ஆம் ஆண்டில் அவர் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு கூட, ‘நகரங்கள் எல்லாம் ஏற்கனவே 20ஆம் நூற்றாண்டை எட்டிவிட்ட நிலையில், நமது கிராமங்கள் இன்னமும் மத்திய காலத்திலேயே இருக்கும்படி விடப்பட்டுள்ளது’ என்று மிகுந்த வருத்தத்தோடு குறிப்பிட்டிருந்தார். நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான இந்த வேறுபாடு என்பது பொருட்களை மையமாகக் கொண்ட வாழ்க்கையை மட்டுமே குறிப்பதல்ல; கருத்தோட்டங்கள், உணர்வுகள், உலகப்பார்வை, கல்வி, அணுகுமுறை போன்ற பல்வேறு வகையிலும் இந்த வேறுபாட்டினை நாம் காண முடியும்.

நாட்டின் விடுதலைக்குப் பின் உணவு உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டு, வெளிநாடுகளில் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டபோது, 1960களில் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் 1920களிலும் 1930களிலும் வேதியியல் உரங்களை அறிமுகம் செய்வது; நார்ச்சத்துள்ள பயிர்கள், பழங்கள் என புதியவகை பயிர்களைப் பயிரிடுவது; புதிய வகை விதைகளை முயற்சிப்பது; நிலத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்த ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை நாடுவது; கால்நடை மற்றும் பால்வளம் ஆகியவற்றின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது; சுற்றியுள்ள கிராமங்களில் சமூக- பொருளாதார ஆய்வுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்வது; கூட்டுறவு கடன் சங்கங்கள்; கிராம சுகாதார சிகிச்சை மையங்கள் மூலமாக மலேரியா போன்ற நீடித்த நோய்களை கட்டுப்படுத்தவும் கிராம மக்களின் சுகாதாரம், உடல்நலம் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவது; இவை அனைத்திற்கும் மேலாக, இந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கும் சந்தால் பழங்குடிகளிடையே வங்காள அரசின் உதவியுடன் நிலத்தை மறுபங்கீடு செய்வதற்கான முயற்சி என இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பட்ட அளவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு சார்ந்த நலத்திட்டங்கள் பலவற்றை, மிகச்சிறிய பரப்பளவில், தனது சொந்த செலவில் ஸ்ரீநிகேதன் திட்டத்தின்மூலம் அருகமை கிராமங்களில் அவர் நிறைவேற்றி வந்தார்.

அதைப்போலவே, இன்று ‘சுய உதவிக் குழுக்கள்’ என்று குறிப்பிடுவதைப் போல, கிராமத்தில் உள்ளவர்களை ஒன்றுதிரட்டி, அந்தக் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர் ஈடுபட்டு வந்தார். ‘வலிமையற்ற தனிநபர்களாக அவர்கள் இருந்தாலும், தங்களிடமுள்ள சிறிய வளத்தை ஒன்றுதிரட்டிச் செயல்படும்போது, அது மிக வலுவானதாகவும், உயிரோட்டமானதாகவும் மாறிவிடும்’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கூறிவந்துள்ளார்.

வகுப்புவாதம், ஆணவப்படுகொலைகள், சாதியக் கொடுமைகள், வரதட்சணைக் கொலைகள், பணவீக்கம், பழங்குடிகளை வனப்பகுதிகளிலிருந்து வெளியேற்றுவது போன்ற இன்றைய சமூகத் தீமைகள், அத்துமீறல்கள் பலவற்றையும் ரவீந்திரர் முன் உணர்ந்தவராக இருந்தார். எனவேதான், கல்வி மற்றும் கிராம மேம்பாடு ஆகியவற்றின்மூலம் கிராம மக்களின் மனங்களில் அறிவியல்பூர்வமான, மதசார்பற்ற கண்ணோட்டத்தையும் கருத்துகளையும் பரவச் செய்து, பொருத்தமான வகையில் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நாட்டின் விடுதலையைவிட முக்கியமானது என்று அவர் கருதினார். அன்றைய தேசிய தலைவர்களுடனான அவரது போராட்டம் இதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வீ.பா. கணேசன்

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க அரசின் தகவல், பண்பாட்டு விவகாரங்கள் துறையில் 25 ஆண்டுகளும்; தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் இணையதளப் பிரிவில் 6 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’, ‘ஜோதிபாசுவின் சுயசரிதை’, ‘சீன வானில் சிவப்பு நட்சத்திரம்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. வங்காள மொழி அறிந்தவர். தொடர்புக்கு : vbganesan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *