நலங்கிள்ளி என்று ஒரு சோழ அரசன் இருந்தான். இவனைக் கரிகாலச்சோழனின் மகன் என்று சொல்வதுண்டு. “சேட்சென்னி நலங்கிள்ளி” என்றே இம்மன்னன் அழைக்கப்பட்டான். தேர்களை வேகமாகச் செலுத்துவதில் வல்லவன் என்பதால் ‘தேர்வண்கிள்ளி’ என்றும் இவனுக்குப் பெயர் உண்டு. கரிகாலனைப் போலவே இவனும் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டான். தமிழில் நல்ல புலமை படைத்த இந்த அரசன், தானே பாடல்கள் இயற்றக்கூடியவனாகவும் இருந்தான்.
நலங்கிள்ளி நல்லவன்தான். ஆனாலும் ஒரு மாதிரியான ஆள். ஒரு நாள் புலவர் ஒருவர் இவனைப் பாடிப் பரிசு பெறலாம் என்று வந்தார். அக்காலத்தில் அரச பதவி ஒரு முள் கிரீடம், சுமை என்ற கருத்து இருந்தது. அவ்வாறு நினைக்காத மன்னர்கள்கூட வெளியில் அப்படிச் சொல்லிக்கொள்வார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் நீதிக்காக உயிர் துறந்தபோது, ‘அரசனாக இருப்பவனுக்கு மழை பெய்யாவிட்டால் பயம், உயிர்கள் தவறு செய்தால் அச்சம், கொடுங்கோலுக்கு அஞ்சி அஞ்சி ஆட்சிசெய்யும் மன்னர் குடியில் பிறந்தது துன்பமே அல்லாது சுகமல்ல’ என்று சேரன் செங்குட்டுவன் கூறியதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
நலங்கிள்ளியின் நினைப்பும் இப்படித்தான் இருக்கும், அதைப் பாடிப் பரிசு பெறலாம் என்று நினைத்த புலவர் அவனை நோக்கி இந்தக் கருத்தைச் சொன்னார். ஆனால் அவர் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டான் நலங்கிள்ளி.
மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்
விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்
அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும் (புறம் 75)
அதாவது வலிமையும் திறமையும் உடையவர் ஆட்சி செய்தால் அரசபாரம் என்பது வற்றிய குளத்தின் அருகில் கிடைக்கும் உலர்ந்த சுள்ளியைப் போல இலகுவானதாகும் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டான் நலங்கிள்ளி. அதற்குப் பிறகு புலவருக்குப் பரிசு கிடைத்ததா என்று தெரியவில்லை.
இப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட நலங்கிள்ளி பெரும் வீரனாகவும் இருந்தான். போதாக்குறைக்கு வலிமையான நால்வகைப் படைகளுடன் ஒரு பெரும் கடற்படையும் அவனிடம் இருந்தது. ‘கடற்படை அடல் கொண்டி மண்டுற்ற மலிர் நோன் தாள், தண் சோழ நாட்டுப் பொருநன்’ என்கிறது புறநானூறு (புறம் 382). அதாவது கடற்படையின் வலிமையால் பகைவரை வென்று பெருஞ்செல்வத்தைக் கொண்ட அரசனாம் நலங்கிள்ளி.
வெண்தலைப்புணரி நின் மான்குளம்பு அலைப்ப,
வலமுறைவருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக்கண்ண, வடபுலத்து அரசே (புறம் 31)
எங்கே சேரனையும் பாண்டியனையும் கூட்டிக்கொண்டு தங்களோடு போர் செய்ய நலங்கிள்ளி வந்துவிடுவானோ என்று வடபுலத்து அரசர்கள் பயந்து தூக்கமில்லாமல் தவித்தார்களாம். அவன் ஆட்சி செய்தபோது மற்ற மன்னர்களுடைய அரண்மனைகளில் இருந்த வலம்புரிச்சங்குகள், தூக்கணாங்குருவிக் கூடுகளைப்போலத் தாழ்வாரங்களில் தொங்குமாம்.
ஏன்? அந்தச் சங்குகள் ஊதப்பட்டால் நலங்கிள்ளி தன் மீது போர் அறைகூவல் விடப்படுகிறது என்று நினைத்து போருக்கு வந்துவிடுவானோ என்ற பயத்தினால் சங்குகள் சத்தமில்லாமல் கிடைக்கின்றனவாம்!
இப்படி வெளிப்பகைகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த நலங்கிள்ளிக்குப் பிரச்னை உள்நாட்டில் இருந்து வந்தது. அவனுடைய உறவினர்களில் ஒருவனும் ஆவூரைச் சேர்ந்தவனுமான நெடுங்கிள்ளி, சோழர்களின் புராதனத் தலைநகரான உறையூரைத் தாக்கிப் பிடித்துக்கொண்டு தானே சோழ அரசன் என்று பிரகடனம் செய்து கொண்டான். இதனால் ஆத்திரமடைந்த நலங்கிள்ளி அவனை எதிர்க்க ஒரு பெரும்படையைத் தன்னுடைய சகோதரனான மாவளத்தான் தலைமையில் அனுப்பிவிட்டு தானும் போர்க்களத்திற்குப் புறப்பட்டான். கிளம்பியவன் தற்போதைய திரைப்படக் கதாநாயகர்கள் போல ‘பஞ்ச்’ வசனமொன்றையும் ஒரு பாடலின்மூலம் உதிர்த்தான்.
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி
ஈயெனஇரக்குவர்ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென்
….
தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக்கால் அகப்பட்ட
வன்றிணி நீள் முளை போலச் சென்று அவன்
வருந்தப் பொரேஎன் (புறம் 73)
‘என் காலில் விழுந்து கேட்டால் புகழுடைய முரசையும், என் நாட்டையும் ஏன் என் உயிரையும் கூடத் தருவேன். ஆனால் என் ஆற்றலை மதிக்காது இகழ்ந்து பேசி தூங்குகின்ற புலியின் மீது இடறிவிழும் குருடனைப் போல என் மீது படையெடுத்து வந்தால் யானையின் கீழ் விழுந்து நசுங்கும் இள மூங்கிலைப் போல நசுக்கிவிடுவேன்’ என்றான் நலங்கிள்ளி. அவனுடைய படை வலிமையைச் சொல்லும் சுவையான பாடல் ஒன்று உண்டு.
தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர (புறம் 225)
அவனுடைய படை செல்லும் வழியில் ஒரு பனங்காடு இருந்ததாம். படையின் முன்னால் செல்பவர்கள் பனை மரத்து இள நுங்கின் இனிய பகுதியை உண்பார்களாம். இடைப் பகுதியில் செல்பவர்கள் பனம் பழத்தை உண்பார்களாம். படையின் கடைசியில் வருபவர்களுக்கோ பிசிரோடு இருக்கும் சுட்டுத் தின்னக்கூடிய கிழங்குதான் கிடைக்குமாம். அதாவது நலங்கிள்ளியின் படை ஒரு இடத்தைக் கடப்பதற்கு நுங்கு காயாகி பழுத்துக் கிழங்காக மாறும் வரை நெடுங்காலம் ஆகுமாம். கொஞ்சம் உயர்வு நவிற்சியாக இருந்தாலும் அவனுடைய படை வலிமையைச் சட்டென்று எடுத்துரைக்கிறதல்லவா இந்தப் பாடல்!
சோழர் படை வருவதை அறிந்த நெடுங்கிள்ளி தன்னுடைய ஊரான ஆவூருக்குச் சென்று அந்தக் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டான். நலங்கிள்ளியின் படை கோட்டையை முற்றுகையிட்டது. விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையைப் போல நெடுங்கிள்ளியும் வெளியே வருவதாக இல்லை, நலங்கிள்ளியும் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்லவில்லை. உணவுப் பொருட்களும் மற்ற அத்தியாவசியப் பொருட்களும் கிடைக்காமல் ஆவூர் மக்கள் பெரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நேரத்தில் இளந்தத்தன் என்ற புலவன் நலங்கிள்ளியைப் பாடிப் பரிசு பெற வந்தான். போர்க்களமாக இருந்தாலும் அவனுக்குப் பரிசில் கொடுத்து அனுப்பி வைத்தான் நலங்கிள்ளி. இளந்தத்தனுக்கு ஆசை விடவில்லை. நெடுங்கிள்ளியையும் பாடிப் பரிசு பெறலாம் என்று ஆவூர்க் கோட்டைக்குள் புகுந்தான் அவன். எதிரியிடமிருந்து ஒற்றன் எவனோ புலவன் என்ற போர்வையில் வந்திருக்கிறான் என்று நினைத்த நெடுங்கிள்ளியின் வீரர்கள் அவனைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அவனைக் கொன்று விடவும் உத்தரவிட்டான் நெடுங்கிள்ளி.
இந்தச் செய்தியை கோவூர்க்கிழார் என்ற புலவர் கேள்விப்பட்டார். அவர் பொருநர் என்ற வகுப்பைச் சேர்ந்தவர். பாசறையிலும் போர்க்களங்களிலும் பாடல்களைப் பாடி வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டுபவர்களுக்கு பொருநர் என்று பெயர். ‘சிறு கோலைக் கொண்டு பறையை அடிக்கும்போது அதன் கண் நடுங்குவது போல நலங்கிள்ளியின் பேரைக் கேட்டாலே பகை அரசர்கள் நடுங்குவார்கள்’ என்று பாடியிருக்கிறார் அவர்.
சோழர்களின் படையோடு சென்ற கோவூர்க்கிழார், முறைப்படி சிறப்பு அனுமதி பெற்று ஆவூர்க்கோட்டைக்குள் சென்று நெடுங்கிள்ளியைச் சந்தித்தார். ‘நெடுவழி பலவற்றைக் கடந்து தானும் தன் உறவினர்களும் வாழவும் வறுமை தீரவும் பாட வந்த புலவன் இளந்தத்தன். ‘வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே’– அதாவது பரிசுக்கு வருந்திப் பிழைக்கும் புலவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள்’ என்று அவனிடம் எடுத்துக் கூறி இளந்தத்தனை விடுவிக்கச் செய்தார் அவர்.
மேலும் நெடுங்கிள்ளியிடம் ஆவூரின் நிலைமையை எடுத்துக்கூறி ‘நலங்கிள்ளியின் யானைகள் ஊர்களைப் பாழாக்குகின்றன. கோட்டையின் உள்ளே குழந்தைகள் பாலின்றி அழுகின்றன. மக்கள் எல்லாம் ‘ஓலம்’ எனக் கூக்குரல் இடுகின்றனர். நீ அறத்தை விரும்பினால், இது உன்னுடையது என்று சொல்லி கோட்டைக் கதவுகளை நலங்கிள்ளிக்குத் திறந்து விடு. போரை விரும்பினால், ஆண்மையோடு கதவைத் திறந்து அவனோடு போர் செய். இரண்டையும் செய்யாமல் இப்படி கோட்டைக்குள் ஒளிந்து கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்’ என்று இடித்துரைத்தார். (புறம் 44).
இதைக் கேட்ட நெடுங்கிள்ளி வீராவேசமுடன் வெளியில் வந்து நலங்கிள்ளியுடன் சண்டையிட்டான். ஆனால் வலிமை மிகுந்த நலங்கிள்ளியின் படை முன்னால் அதிக நேரம் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தோற்று ஓடி உறையூர் கோட்டைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். ஆனாலும் நலங்கிள்ளி விடாமல் சென்று உறையூரையும் முற்றுகையிட்டான்.
இப்படித் தொடர்ந்து சோழ நாடு போர்களால் சிக்கித் தவிப்பதைக் கண்ட கோவூர்க்கிழார் இம்முறை நலங்கிள்ளிக்கு அறிவுரை சொன்னார்.
இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; (புறம் 45)
உன்னை எதிர்ப்பவன் பனம்பூ மாலை சூடிய சேரனும் அல்லன், வேப்ப மாலை அணிந்த பாண்டியனும் அல்லன். உன் கண்ணியும் உன்னோடு போர் செய்பவனின் கண்ணியும் சோழருக்கு உரிய ஆத்திப்பூதானே. இருவரில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடி அல்லவா. எனவே இந்தப் போரைத் தவிர்த்துவிடு என்று வேண்டினார் அவர். இதைக் கேட்ட நலங்கிள்ளியின் உள்ளம் இரங்கியது. நெடுங்கிள்ளியோடு சமாதானம் செய்துகொண்டு காவிரிப்பூம்பட்டினம் திரும்பினான் அவன்.
ஆனாலும் நெடுங்கிள்ளி நீண்ட நாட்கள் சும்மா இருக்கவில்லை. மீண்டும் ஒருமுறை படை திரட்டிக்கொண்டு நலங்கிள்ளியோடு போருக்குப் புறப்பட்டான். காரியாறு என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. இந்த ஊர் வட தமிழகத்தில் திருவள்ளூருக்கும் காளஹஸ்திக்கும் இடையில் உள்ளது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் சோழ நாட்டு அரசர்கள் இருவர் அவ்வளவு தூரம் சென்று போர் புரிவதற்கான காரணம் எதுவும் இல்லை. ஆகவே இந்த ஊர் சோழநாட்டிலேயேதான் இருந்திருக்கவேண்டும்.
காரியாற்றுப் போர் மிகக் கடுமையாக நடந்தது. தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த நெடுங்கிள்ளியை முறியடிக்கவேண்டும் என்ற வேகத்தில் நலங்கிள்ளியும் அவன் படைகளும் போரிட்டன. முடிவில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டு வீழ்ந்தான். அதன் காரணமாக ‘காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி’ என்ற பெயரைப் பெற்றான்.
நலங்கிள்ளி சோழ நாட்டின் ஒற்றைத் தலைமைப் பொறுப்பை ஏற்றான். ஆனாலும் தொடர்ந்து நடைபெற்ற இந்த உள்நாட்டுச் சண்டையால் சோழநாடு நிலைகுலைந்தது. அதன்பிறகு முது கண்ணன் சாத்தனார் போன்ற புலவர்கள் நலங்கிள்ளிக்கு அறத்தை எடுத்துக் கூறி சோழ நாட்டில் நல்லாட்சி நிலவுமாறு செய்தனர்.
(தொடரும்)