இரண்டாம் நந்திவர்மன் காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாக சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களால் இரண்டு நாடுகளும் தளர்ந்திருந்தன. இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்த போர்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது இடையில் இருந்த சோழ நாடுதான். அதற்குக் காரணம் பெரும்பாலான போர்கள் சோழ நாட்டில் நடந்தவை. நாட்டின் படைபலமும் பொருளாதாரமும் பலவீனமாவதைக் கண்ட பாண்டிய அரசன் இரண்டாம் வரகுணன், இந்தப் போர்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டியே பல்லவ அரசன் நிருபதுங்கவர்மனோடு நட்புக் கொண்டான். ஆனால் விதி விளையாடியது.
நிருபதுங்கவர்மனின் மூத்த சகோதரனான கம்பவர்மன், தனக்குக் கிடைக்கவேண்டிய அரசு தன்னுடைய தம்பிக்குச் சென்றதை விரும்பவில்லை என்று பார்த்தோம். நீண்ட நாட்களாக இருந்த வந்த இந்தப் புகைச்சலுக்கு கம்பவர்மனின் மகனான அபராஜிதவர்மன் முடிவு கட்டினான்.
கம்பவர்மனுக்கும் கங்க நாட்டு அரசமகளான விஜயாவுக்கும் பிறந்தவன் அபராஜித வர்மன். அவன் துணையுடன் கம்பவர்மன், நிருபதுங்கவர்மனை போரில் தோற்கடித்தான். நிருபதுங்கனை அரியணையிலிருந்து அகற்றி பல்லவ நாட்டைக் கம்பவர்மன் கைப்பற்றியதாக அபராஜிதனின் வேலஞ்சேரிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அடுத்ததாக அபராஜித வர்மன் பொயு 870 வாக்கில் பல்லவ அரியணையில் ஏறினான். ஆட்சியைப் பிடித்தவுடன், நாட்டைச் சீர்செய்யும் முயற்சியில் இறங்கினான் அபராஜிதன்.
இதற்கிடையில் வரகுண பாண்டியன், ஒரு சிறு படையுடன் இடவை என்ற இடத்திற்கு வந்தான். இந்த இடவை எது என்பது பற்றி ஆய்வாளர்கள் வேறுபடுகின்றனர். சிலர் இது திருவிடைமருதூர் என்று கூறுகின்றனர். சிலரோ இது திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு இடம் என்று குறிக்கின்றனர். எப்படியிருந்தாலும் இது சோழ தேசத்தில் இருந்தது என்பது தெளிவு.
முதலாம் வரகுண பாண்டியனின் காலத்தில் பல்லவ நாட்டின் தென்பகுதி வரை பாண்டிய ஆதிக்கம் நிலவியது என்பதைப் பார்த்தோம். அப்படிப் பாண்டியப் பேரரசின் கீழ் சோழ நாடு இருந்தபோது இந்த இடவையில் முதலாம் வரகுண பாண்டியன் தனக்காக ஒரு அரண்மனை கட்டியிருந்தான். தன்னுடைய பாட்டன் கட்டிய அரண்மனையில் தங்குவதற்காக இரண்டாம் வரகுணன் இடவைக்கு வந்தான்.
அந்த சமயம், சோழ நாட்டில் விஜயாலய சோழனின் ஆட்சி முடிந்து அவன் மகனான ஆதித்த சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தான். தனது எதிரியான பாண்டியன், தன்னுடைய நாட்டில் படையோடு வந்து தங்கியிருப்பதை ஆதித்தன் விரும்பவில்லை. அதே சமயம் வலுவான பாண்டியர்களுடன் தன்னந்தனியாக போரில் இறங்கவும் அவன் விரும்பவில்லை. பல்லவ நாட்டின் ஒரு பகுதியாகவே சோழ நாடு அப்போது செயல்பட்டு வந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதனால், பல்லவ அரசனான அபராஜிதனுக்கு அவன் இந்தச் செய்தியைத் தெரிவித்தான். ஒரு காலத்தில் அபராஜிதனின் தந்தையான கம்பவர்மனுக்கு எதிரியாக இருந்தவர்களும் அவன் பகைவனான நிருபதுங்கனுடன் சேர்ந்து போரிட்டவர்களுமான சோழர்கள், அபராஜிதனிடம் நட்புக் கொண்டு உதவி கோரியது ஒரு விந்தையான விஷயம்தான்.
தன்னுடைய நாட்டில் ஒரு பகுதியில், பரம வைரியான பாண்டியன் வந்து தங்கியிருந்ததை அபராஜிதனும் விரும்பவில்லை. நிருபதுங்கவர்மனின் நண்பன் வரகுணன் என்பதையும் அபராஜிதன் அறிந்திருந்தான். எனவே பாண்டியனைத் தோற்கடிக்க ஒரு படையை சோழநாட்டிற்கு அனுப்பி வைத்தான் அபராஜிதவர்மன். இந்தப் படைகளோடு சோழப் படைகளும் சேர்ந்து கொண்டன.
திடுதிப்பென்று ஒரு கூட்டணிப் படை இடவை நோக்கி வருவதை அறிந்த வரகுணன் அதிர்ச்சியடைந்தான். அவர்களோடு போரில் இறங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளான வரகுணனால், பல்லவ சோழப் படைகளைச் சமாளிக்க இயலவில்லை. எனவே அவன் பாண்டிய நாடு நோக்கி தோற்று ஓட வேண்டியதாயிற்று. ஆனால், அவன் சும்மா இருக்கவில்லை. அவமான உணர்ச்சி உந்தித்தள்ள ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு மீண்டும் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.
இம்முறை பல்லவ சோழப் படைகளுக்கு உதவியாக அபராஜிதனின் உறவினனான கங்க மன்னன் முதலாம் ப்ருதிவீபதி தானே ஒரு படையோடு வந்தான். இந்த மூவர் கூட்டணி வரகுண பாண்டியனை, மண்ணியாற்றின் கரையில் இருந்த திருப்புறம்பியம் என்ற இடத்தில் எதிர்கொண்டது. திருப்புறம்பியம் பழங்காலத்திலிருந்தே பிரபலமான ஒரு ஊர். அங்கே உள்ள சாட்சிநாதேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலமாகும். அந்தக் கோவிலில் உள்ள கிளிஞ்சல்களால் ஆன திருவுருவத்தைக் கொண்ட விநாயகருக்கு பிரளயம் காத்த விநாயகர் என்ற பெயர் உண்டு.
இப்படிச் சிறப்புகள் பெற்ற திருப்புறம்பியத்திற்கு வெளியே உள்ள ஒரு பொட்டலில் பொயு 880ல் நடைபெற்ற இந்தப் போர் மிகக் கடுமையானதாகும். இரு தரப்புப் படைகளும் கோரமான யுத்தத்தைப் புரிந்தன. ரத்த ஆறு ஓடியது. ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்தில் இறந்து பட்டனர். இரண்டு தரப்பிலும் சேதம் அதிகமானதாக இருந்தது.
வலுவானதாக இருந்தாலும், மூன்று அரசுகளின் படைகளை எதிர்க்க இயலாமல் பாண்டியப் படை தத்தளித்தது. ஒரு கட்டத்தில் கங்க மன்னன் ப்ருதிவீபதி இந்தப் போரில் கொல்லப்பட்டான். ஆனாலும் பல்லவ சோழப்படைகள் விடாமல் தாக்குதல் தொடுத்தன. முடிவில் பாண்டியப் படைகள் தோற்றுப் பின்வாங்கின. பல்லவ-சோழ-கங்கப் படைகள் வெற்றி பெற்றன. பலத்த சேதத்துடன் மீண்டும் இரண்டாம் வரகுண பாண்டியன் மதுரையை நோக்கிப் பின்வாங்கினான்.
இந்தப் போரைப் பற்றி கங்க மன்னன் இரண்டாம் ப்ருதிவீபதியின் உதயேந்திரம் செப்பேடுகள் இவ்வாறு குறிப்பிடுகின்றன. இந்தச் செப்பேடுகள் ஆதித்தனின் மகனான முதல் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் கீழ் வெளியிடப்பட்டன.
‘ஶ்ரீபுரம்பியத்தில் நடைபெற்ற பெரும்போரில பாண்டிய அரசன் வரகுணனைத் தோற்கடித்து, தன் நண்பனான அபராஜிதனின் பெயரை உண்மையாக்கிய (அபராஜிதன் என்றால் தோற்கடிக்க முடியாதவன் என்று பொருள்) பிறகு வீரனான ப்ருதிவீபதி தன் உயிரைத் தியாகம் செய்து இந்திரனின் இருப்பிடமான சொர்க்கத்தை அடைந்தான்.’
போரில் இறந்த ப்ருதிவீபதிக்கு அபராஜிதவர்ம பல்லவன் பள்ளிப்படைக் கோவில் ஒன்றைக் கட்டியதாகவும், அது திருப்புறம்பியத்தில் இருப்பதாகவும் போர் நடந்த இடத்திற்கு உதிரப்பட்டி என்ற பெயர் உள்ளதாகவும் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். தவிர கச்சியாண்டவன் கோவில் என்ற இன்னொரு பள்ளிப்படை இருப்பதாகவும், அது ஒரு பல்லவ அரசனின் நடுகல் இருந்த இடம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
திருப்புறம்பியம் போரில் அபராஜித வர்மன் வெற்றிபெற்றாலும் அவனுடைய தரப்பில் நேர்ந்த சேதமும் கொஞ்ச நஞ்சமல்ல. ப்ருதிவீபதியை இழந்தது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே தொடர்ந்து நடந்த போர்களால் பலவீனமடைந்திருந்த பல்லவநாட்டை மேலும் தளரச் செய்தது இந்தப் போர். அதன் காரணமாக சோழநாட்டின் பல பகுதிகளை ஆதித்த சோழனுக்கு சுதந்தரமாக ஆட்சி செய்ய அபராஜிதன் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் இருந்து அபராஜிதனின் கல்வெட்டுகள் சோழ நாட்டில் காணக்கிடைக்கவில்லை.
குறைந்த அளவு சேதத்தோடு தப்பித்த ஆதித்தன், அடுத்த சில ஆண்டுகளில் தன்னுடைய படைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினான். அதன் பின், பல்லவ நாட்டின் மீது தன்னுடைய கவனத்தைச் செலுத்திய ஆதித்த சோழன், அபராஜிதன் மீது போர் தொடுத்தான். பலவீனமான பல்லவப் படைகளால் புத்துணர்ச்சி பெற்ற சோழர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் வரை நண்பனாக இருந்த அபராஜிதனை, போரில் கொன்று பல்லவ நாட்டை தங்களுடன் இணைத்துக்கொண்டான் ஆதித்தன். இதனால் ‘தொண்டை நாடு பரவிய சோழன்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். பல்லவர்களின் பரம்பரை அத்தோடு முடிவுக்கு வந்தது. பலவீனமான நிலையில் இருந்த பாண்டிய அரசின் ஆதிக்கமும் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மங்கியே போனது. மாறாக சோழப்பேரரசு உன்னத நிலையை அடைந்தது.
இப்படியாக, பிற்காலச் சோழப்பேரரசுக்கு அடிகோலிய முக்கியமான திருப்பம், திருப்புறம்பியத்தில் நடந்தது. அந்த வகையில் தமிழக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இந்தப் போரைச் சொல்லலாம்.
(தொடரும்)