மூன்றாம் குலோத்துங்கன் மூன்று முறை படையெடுத்து பாண்டிய நாட்டில் பெரும் அழிவுகளைச் செய்த அவமானத்தைத் தாங்க முடியாமலும் சுமார் இருநூறு ஆண்டுகள் சோழ நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்ததைக் தாங்க முடியாமலும் குமுறிக்கொண்டிருந்த பாண்டியர்கள் அதற்குப் பழிதீர்க்க தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஜடாவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் பிறகு பொயு 1216இல் மதுரையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவனுடைய தம்பியான முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காகப் படை திரட்டத் தொடங்கினான். குலோத்துங்கன் பொயு 1218இல் இறந்துவிடவே அவனது மகனான மூன்றாம் ராஜராஜன் சோழ நாட்டில் அரசனானான்.
தகுந்த தருணம் அதுவே என்று கருதிய சுந்தர பாண்டியன் பொயு 1219இல் சோழ நாட்டின் மீது தன்னுடைய படையைச் செலுத்தினான். பொதுவாக எதிரி நாட்டு மன்னனின் தலைநகரை நோக்கி படையெடுப்பதே அரசர்களின் வழக்கம். ஆனால் சுந்தரபாண்டியன் அப்படிச் செய்யவில்லை.
சோழ குலத்தின் மீது அவனுக்கு இருந்த ஆத்திரத்தின் காரணமாக உறையூரை நோக்கிச் சென்றான். அங்கிருந்த சோழ மாளிகைகள் அனைத்தையும் அழித்தான். பல மண்டபங்கள் இடிக்கப்பட்டன. காவிரி ஆற்றங்கரையில் உள்ள பதினாறு கால் மண்டபம் ஒன்றை அவன் வீரர்கள் இடிக்க முற்பட்டபோது, அதன் வரலாறு சுந்தரபாண்டியனுக்குச் சொல்லப்பட்டது.
சங்க காலத்தில் கரிகால் பெருவளத்தானை உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் போற்றிப் பாடிய பட்டினப் பாலை என்ற நூல் அந்த மண்டபத்தில்தான் அரங்கேறியது என்றும் அந்த மண்டபத்தோடு சேர்த்துப் பல பரிசில்களை கரிகாலச் சோழன் அந்தப் புலவருக்கு வழங்கினான் என்றும் சுந்தரபாண்டியன் கேள்விப்பட்டான். உடனே அந்த மண்டபம் இடிக்கப்படுவதை நிறுத்திவிட்டான். என்னதான் எதிரிமேல் ஆத்திரம் இருந்தாலும் தமிழ் என்று வரும்போது மன்னர்கள் அதற்குத் தனி மரியாதை அளித்தனர் என்பது இந்த நிகழ்வினால் தெளிவாகிறது. இந்த நிகழ்ச்சி திருவெள்ளறைக் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
உறையூருக்கு அடுத்து சுந்தரபாண்டியன் தஞ்சை நோக்கிச் சென்றான். அங்கும் சோழர்களின் அரண்மனைகள் இடிக்கப்பட்டு பல இடங்கள் கொளுத்தப்பட்டன. அவனுடைய மெய்க்கீர்த்தி இந்தச் செயல்களை பின்வருமாறு வர்ணிக்கிறது
‘தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியும் நீலமும் நின்று கவின் இழப்ப
வாவியுமாறு மணிநீர் நலனழித்துக்
கூடமும் மாமதிலும் கோபுரமும் ஆடரங்கும்
மாடமும் மாளிகையும் மண்டபமும் பல இடித்து
தொழுது வந்தடையா நிருபர்தந் தோகையர்
அழுத கண்ணீர் ஆறு பரப்பிக்
கழுதை கொண்டு உழுது கவடி வித்தி’
எதிரி நாட்டு நிலங்களில் எதற்கும் பயன்படாத வெள்ளை வரகு (கவடி) என்ற தானியத்தை விதைத்து கழுதை கொண்டு உழுவது ஒரு பெருத்த அவமானமாகக் கருதப்பட்டது. அதைச் செய்தான் சுந்தரபாண்டியன்.
அதற்கடுத்து அவன் சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தை நோக்கிச் சென்றான். ஆனால் அங்கு போர் எதுவும் நடைபெறவில்லை. சுந்தரபாண்டியனின் படைபலத்தைக் கண்ட மூன்றாம் ராஜராஜன் தலைநகரை விட்டு ஓடிவிட்டான்.
‘செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புக ஓட்டிப்
பைம்பொன் முடிபறித்து பாணருக்குக் கொடுத்தருளி’
என்ற வரிகளால் அந்நாட்டின் பல பகுதிகளை ஆட்சிசெய்யுமாறு வாணர் குலத்தவருக்கு சுந்தரபாண்டியன் கொடுத்துவிட்டான் என்று தெரிகிறது. அதன்பின் சோழர்களின் பழைய தலைநகரனான் பழையாறைக்கு வந்த பாண்டியன், அங்கே இருந்த ஆயிரத்தளி என்ற புகழ்பெற்ற அரண்மனையில் வீராபிஷேகம் செய்துகொண்டான்.
‘ஆடகப் புரிசை ஆயிரத் தளியில்
சோழவளவன் அபிஷேக மண்டபத்து
வீராபிஷேகம் செய்து புகழ் விரித்து’
அதன்பின் தில்லை அம்பலம் சென்று அங்கு நடராசப் பெருமானை வழங்கினான் சுந்தரபாண்டியன் என்று குறிக்கிறது அவன் மெய்க்கீர்த்தி
‘ஐயப் படாத அருமறை அந்தணர்வாழ்
தெய்வப் புலியூர்த் திருவெல்லை யுட்புக்குப்
பொன்னம்பலம் பொலிய ஆடுவார் பூவையுடன்
மன்னும் திருமேனி கண்டு மனங்களித்துக்
கோலமலர் மேல் அயனும் குளிர்துழாய்
மாலும் அறியா மலர்ச்சேவடி வடிவணங்கி’
இப்படி வெற்றிமேல் வெற்றி கண்டு ‘பொன்னிசூழ் நாட்டில் புலியாணை போய் அகல கன்னிசூழ் நாட்டின் கயலாணை கைவளர’ (கன்னி நாடு என்பது பாண்டிய நாட்டின் மற்றொரு பெயர்) மீனாட்சியம்மை கன்னியா ஆட்சிசெய்ததாலோ அல்லது கன்னியாகுமரித் தெய்வத்தை கொண்டிருந்ததாலோ அந்தப் பெயர் வந்தது. அப்படிப்பட்ட நாட்டின் மீன் சின்னத்தின் ஆணை ஓங்க சோழ நாட்டி வென்ற பிறகு பாண்டிய நாட்டிற்குத் திரும்பிய சுந்தரபாண்டியன், பொன்னமராவதி என்ற ஊரில் சிறிது காலம் தங்கியிருந்தான்
‘பூங்கமல வாவிசூழ் பொன்னமராவதியில்
வைத்தனைய சோதி மணிமண்டபத்திலிருந்து’
அப்போது நாட்டி இழந்த சோழ மன்னன் ராஜராஜன், சுந்தரபாண்டியனைச் சந்தித்து சமாதானம் கோரினான். தன் மகனுக்கு சுந்தரபாண்டியனின் பெயரைத்தான் வைத்திருக்கிறேன் என்று அவன் குறிப்பிட்டு, சந்து செய்துகொள்ள முயன்றான் என்கிறது மெய்க்கீர்த்தி
‘பெற்ற புதல்வனை நின் பேரென்று முன்காட்டி
வெற்றி அரியணைக் கீழ் விழுந்து தொழுது இரப்பத்
தானோடி உன்னிகழ்ந்த தன்மையெலாம் கையகாத்
தானோதகம் பண்ணித் தண்டார் முடியுடனே…
செங்கயல் கொண்டூன்றுந் திருமுகமும் பண்டிழந்த
சோளபதி என்னும் நாமமும் தொன்னகரும்
மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி’
மூன்றாம் ராஜராஜனிடம் சோழ நாட்டை ஒப்படைத்து மணிமுடியையும் கொடுத்துவிட்டுத் திரும்பினான் சுந்தரபாண்டியன். அதன் காரணமாக சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியத்தேவர் என்று அவன் புகழப்பட்டான்.
ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இரு அரசர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் தோன்றியது. ராஜராஜன் பாண்டிய நாட்டிற்குத் திறை செலுத்துவதை நிறுத்திவிட்டதால் கோபமடைந்த சுந்தர பாண்டியன் மீண்டுமொருமுறை சோழ நாட்டின் மீது பொயு 1231இல் படையெடுத்தான். சோழ நாட்டில் பல இடங்கள் முன்பு போலவே வென்று அவர்களின் தலைநகராக அப்போது இருந்த முடிகொண்ட சோழபுரத்தை நோக்கிச் சென்றான். இம்முறையும் மூன்றாம் ராஜராஜன் அங்கிருந்து தொண்டை நாட்டிற்குத் தப்பியோடினான். அங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த காடவர்களின் அரசன் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் பாண்டியனின் நண்பன். அவன் மூன்றாம் ராஜராஜனைப் பிடித்துச் சிறையில் அடைத்துவிட்டான்.
முடிகொண்ட சோழபுரத்தில் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் செய்துகொண்டான் சுந்தரபாண்டியன். ‘சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிஷேகமும் விஜயாபிஷேகௌம் பண்ணியருளிய வீர சுந்தரபாண்டியத் தேவர்’ என்று இந்தச் செயலைப் பற்றி அவனது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இந்தக் காலகட்டத்தில் துவாரசமுத்திரத்தைத் (ஹளபீடு) தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த ஹொய்சாள அரசர்கள் தமிழக அரசியலில் தலையிட ஆரம்பித்தனர். ஹொய்சாள அரசனான வீர நரசிம்மன் ஒரு பெரும் படையோடு காஞ்சி சென்று கோப்பெருஞ்சிங்கனைப் போரில் வென்று மூன்றாம் ராஜராஜனை சிறையிலிருந்து மீட்டான்.
மகேந்திரமங்கலம் என்ற இடத்தில் இவனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் இடையே நடந்த போரில் இருதரப்பும் சமாதானம் ஏற்பட்டு, தான் கைப்பற்றிய சோழ நாட்டுப் பகுதிகளை மீண்டும் மூன்றாம் ராஜராஜனுக்குத் திரும்ப அளிப்பதாக சுந்தரபாண்டியன் உறுதியளித்தான். அத்தோடு இந்தப் படையெடுப்புகள் ஒரு முடிவுக்கு வந்தன.
(தொடரும்)