Skip to content
Home » தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #24 – மதுரை

மாலிக்கபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து இரண்டு முறை அடுத்தடுத்து டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு தமிழகத்தில் நிகழ்ந்தது. இதில் மூன்றாவது முறை நடைபெற்ற படையெடுப்பு பின்னாளில் முகமது பின் துக்ளக் என்று அறியப்பட்ட உலூக்கானின் தலைமையில் 1323ம் ஆண்டு நடந்தது. தமிழகத்தை முற்றிலுமாக நிலைகுலையச் செய்த படையெழுச்சி இது. தமிழகத்தில் புகுந்த உலூக்கானின் படை போகும் இடமெல்லாம் அழிவு வேலைகளை நடத்திக்கொண்டே முன் சென்றது. கோவில்கள் அழிக்கப்பட்டன. விக்ரகங்கள் உடைக்கப்பட்டன.

ஶ்ரீரங்கம் பங்குனித் திருவிழாவில் கூடியிருந்த பன்னிரண்டாயிரம் பக்தர்கள் ஆண், பெண், குழந்தைகள் என்று பாராது கொல்லப்பட்டனர். ஶ்ரீரங்கம் கோவில் சூறையாடப்பட்டது. உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளப் பெருமாள் ஆசார்யார்கள் உதவியுடன் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மதுரை மீதும் உலூக்கான் தாக்குதல் நடத்தினான். அப்போது பாண்டிய நாட்டில் அரசு செய்துகொண்டிருந்த முதலாம் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் தோற்கடிக்கப்பட்டு சிறையில் இடப்பட்டான். மதுரைக் கோவிலிலும் அழிவு வேலைகள் தொடர்ந்தன. மூலவரின் முன்பு ஒரு கல் சுவர் எழுப்பிவிட்டு நாஞ்சில் நாடு நோக்கி உற்சவ மூர்த்திகளுடன் கோவில் பட்டர்கள் தப்பிச்சென்றனர்.

டெல்லி சுல்தானகத்தின் ஒரு பகுதியாக மதுரையை மாபார் என்ற பெயரில் இணைத்த உலூக்கான், தன்னுடைய உறவினனான ஹாசன் கானை மதுரையில் பிரதிநிதியாக நியமித்து ஆட்சி செய்யப் பணித்துவிட்டு பராக்கிரம பாண்டியனோடு டெல்லி திரும்பினான். வழியில் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டான். அத்தோடு மதுரைப் பாண்டியர் வம்சம் முடிவுக்கு வந்தது.

உலூக்கான் டெல்லி திரும்பி முகமது பின் துக்ளக் என்ற பெயரோடு முடிசூடிக்கொண்டதும், மதுரையில் ஆட்சி செய்துகொண்டிருந்த ஹாசன் கான் தன்னை சுதந்தர அரசனாக அறிவித்துவிட்டு, மதுரை சுல்தானகத்தை ஸ்தாபித்தான். அவனுக்குப் பின் பல்வேறு சுல்தான்கள் மதுரையை ஆட்சி செய்தனர். அவர்களுடைய ஆட்சியில் தமிழகம் எண்ணற்ற துன்பங்களைச் சந்தித்தது. அவர்களை எதிர்த்துப் போரிட முயன்ற ஹொய்சாள அரசன் வீர வல்லாளன் கண்ணனூர்க் கொப்பம் போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். அக்காலகட்டத்தில் மதுரை வந்து தங்கியிருந்த இபின் பதூதா என்ற பயணி, அங்கு நடந்த கொடுமைகளைப் பற்றி விவரித்து எழுதியிருக்கிறார். இம்மென்றால் சிறை வாசம் ஏனென்றால் வனவாசம் எல்லாம் இல்லை, எதிர்த்துப் பேசினால் தலை உடலில் இருக்காது. அவ்வளவுதான்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் நடைபெற்ற சுல்தானிய ஆட்சியில் “மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து தங்கள் ஊரை விட்டுச் சென்றனர். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் அராஜகம் எங்கும் நிலவியது. உணவுப் பஞ்சமும் வேலையில்லாத் திண்டாட்டமும் நாடெங்கும் காணப்பட்டது. விவசாயம் ஒழுங்காக நடைபெறவில்லை. அதனால் உணவு கிடைக்கவில்லை. நுண்ணிய வேலைப்பாடு கொண்ட பல கோவில்களும் மண்டபங்களும் கலைப் பொருட்களும் நாசமடைந்தன” என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தக் காரணங்களால் மக்கள் பெரும்பாலும் அச்சத்திலேயே வாழ்ந்தனர். கியாசுதீன் தம்கானி என்ற சுல்தானின் ஆட்சியில் மதுரை நகரில் கொள்ளை நோயான ப்ளேக் பரவியது. இதில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர்.

அக்காலகட்டத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் பொயு 1336ம் ஆண்டு விஜயநகரப் பேரரசு தோன்றியது. ஹரிஹரர், புக்கர் ஆகிய சகோதரர்கள் சிருங்கேரி சங்கராச்சாரியரான ஶ்ரீவித்யாரண்யரின் ஆசியுடன் இந்த அரசை உருவாக்கினர். ஹரிஹரருக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் ஏறிய அவரது சகோதரரான புக்கர், தன்னுடைய மகனான குமார கம்பண்ணரை அழைத்து தமிழகத்தில் மக்கள் சுல்தானிய ஆட்சியில் படும் அவதிகளை எடுத்துக்கூறி, ஒரு படையோடு தமிழகம் சென்று சுல்தான்களை ஆட்சியில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.

குமார கம்பண்ணர் அப்போது முல்பாகல் என்ற இடத்தில் விஜயநகரத்தின் ஆளுநராக ஆட்சி செய்துகொண்டிருந்தார். தந்தையின் ஆணையை ஏற்று வலுவான தளபதிகள் கொண்ட படையோடு பொயு 1362ம் ஆண்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது தமிழகத்தின் வடபகுதியில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சம்புவரையர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். ஒரு பக்கம் சுல்தான்களின் தாக்குதலைச் சமாளித்து ஆட்சி செய்துகொண்டிருந்த அவர்கள், விஜயநகர அரசுக்கும் அடிபணிய மறுத்தனர். இதன் காரணமாக அவர்களோடு போர் புரிய வேண்டிய கட்டாயத்திற்கு கம்பண்ணர் ஆளானார்.

முதலில் விரிஞ்சிபுரத்தில் விஜயநகரப் படைகளுக்கும் சம்புவரையர்களின் படைகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. விஜயநகரப் படையில் யானைகள் பெருமளவு இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வலிமையான விஜயநகரப் படையை எதிர்த்து சம்புவரையர்கள் நீண்ட நேரம் போரிட முடியவில்லை. போரில் தோல்வியடைந்த சம்புவரையர்களின் அரசன் ராஜகம்பீரம் என்ற இடத்தில் இருந்த மலைக்கோட்டையில் மறைந்துகொண்டான். அந்த இடத்தை விஜயநகரப் படைகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தின. அதன்பின் வேறு வழியில்லாமல் சம்புரவரையன் சரணடைந்து விஜயநகர ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதன்பின் காஞ்சியை அடைந்த கம்பண்ணர் அங்கே சில நாட்கள் தங்கியிருந்தார்.

கம்பண்ணரின் வாழ்க்கையைப் பற்றியும் அவருடைய இந்தப் படையெடுப்பைப் பற்றியும் அவரது மனைவியான கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் என்ற நூல் விவரித்துக் கூறுகிறது. அதன்படி, கம்பண்ணர் காஞ்சியில் தங்கியிருந்த போது அவர் முன் தோன்றிய மதுரைத் தெய்வமான மீனாக்ஷி அம்மன், சுல்தான்களின் ஆட்சியில் மக்கள் படும் அல்லல்களை எடுத்துக் கூறியதாம். அந்தக் கொடுங்கோலான ஆட்சியை அகற்றி மக்களைக் காப்பாற்றும் படி அவருக்கு உத்தரவிட்டு ஒரு வாளையும் அளித்து விட்டு அம்மன் மறைந்ததாக கங்கா தேவி கூறுகிறார்.

அதை சிரமேற்கொண்டு, கம்பண்ணர் காஞ்சியிலிருந்து தன் படையுடன் புறப்பட்டார். வழியில் ஶ்ரீரங்கத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தானின் பிரதிநிதியைத் தோற்கடித்து விட்டு அங்கே தன்னுடைய பிரதிநிதிகளை நிறுத்திவிட்டு மதுரை நோக்கிச் சென்றார். பொயு 1371ம் ஆண்டு மதுரையை அடைந்த கம்பண்ணரின் படைகளோடு அங்கே காத்திருந்த சுல்தானின் படைகள் மோதின. இதில் கம்பண்ணரோடு போரிட்ட சுல்தானின் பெயர் பற்றிய பல சர்ச்சைகள் இருந்தாலும், மதுரை வரலாற்றின் படி சிக்கந்தர் ஷா என்பதே மதுரை சுல்தானகத்தின் கடைசி சுல்தானின் பெயர் என்பதால், சிக்கந்தரே கம்பண்ணரோடு போர் செய்தவன் என்று கொள்ளலாம்.

மதுரைச் சுல்தான்களின் கொடியில் காக்கைச் சின்னம் இடம் பெற்றிருந்தது. விஜயநகரப் பேரரசின் கொடியில் அதன் சின்னமான வராகம் இருந்தது. இந்தப் போர் பற்றிய நிகழ்ச்சிகளை மதுரா விஜயம் பின்வருமாறு விவரிக்கிறது.

“கம்பண்ணருடைய வில் வீரர்கள் அர்த்த சந்திர வடிவிலான அம்புகளை எய்து சுல்தானிய வீரர்களின் கைகளை வெட்டி வீழ்த்தினர். பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் செய்த ஸர்ப்ப யாகத்தில் பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்தது போல அந்தக் கைகள் கீழே ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தன. வரிசையாக வந்த யானைகளின் தலைகள் வீரகம்பண்ணரின் வீரர்களால் பிளக்கப்பட்டன. கம்பண்ணருடைய படையில் இருந்த யானைகள் சுல்தானின் படைகளில் உள்ள குதிரைப் படைகளின் மீது மோதில் குதிரைகளையும் அதன் மீதிருந்த வீரர்களையும் கீழே தள்ளித் துவைத்தன. சுல்தானிய வீரர்களின் உடல்கள் யானைகளால் பல முறை பந்தாடப்பட்டன. தேர்க்காலில் சிக்கி சுல்தானின் படைவீரர்களின் தலைகள் மேலே பறந்தன. சிங்கங்களைப் போல போர்க்களத்தில் உலவி வந்த வீரர்கள் எதிரிகளை தங்கள் கூரிய நகங்களைக் கொண்டு காயப்படுத்தினர்.

இரு முனைகளைக் கொண்ட ஈட்டி ஒன்றை வீரன் ஒருவன் எதிரி மீது எறிந்தான். அதனால் காயமுற்ற எதிரிவீரன் தளராமல், அந்த ஈட்டியைப் பிடுங்கி தன் மேல் எறிந்தவன் மீது திரும்ப எறிந்து அவனைக் காயப்படுத்தினான். கம்பண்ணர் எதிரிப் படை யானைகளின் முகங்களின் மீது அம்புகள் விட்டுக் கொன்றதால் அவை ரத்தத்தைச் சொரிந்தபடி கீழே வீழ்ந்தன. அவற்றின் மீதி இருந்து உதிர்ந்த முத்துக்கள் அந்த ரத்த ஆற்றின் கீழே உள்ள மணல் துகள்கள் போலக் காணப்பட்டன. வீரமிக்க கம்பண்ணன் தன்னுடைய வாளை ஓங்கிக்கொண்டு எதிரி வீரர்களைத் தாக்கிப் போர் செய்தான். அவனுடைய வாள் எதிரிகளின் தலைகள் மீது அடித்தபோது அவர்களின் கண்கள் இடத்தை விட்டுப் பெயர்ந்து மீண்டும் ஒட்டிக்கொண்டன. பரசுராமன், ராமன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரைப் போல கம்பண்ணர் போர் செய்ததைக் கண்டு அங்குள்ளோர் ஆச்சரியம் அடைந்தனர்.

இந்த வீரப்போரால் தன்னுடைய வீரர்கள் பயந்து ஓடுவதைக் கண்ட சுல்தான், தானே குதிரை மீது ஏறி போர்க்களத்திற்கு வந்தான். அதைக் கண்ட கம்பண்ணர் உற்சாகமடைந்து அவனோடு நேருக்கு நேர் மோதினார். இந்திரனும் விருத்திராசுரனும் சண்டை செய்ததுபோல அவர்கள் இருவரும் சண்டையிட்டனர். தன்னுடைய வில்லை வளைத்து அம்புகளை சுல்தான் எய்தபோது எழுந்த ஓசை திருமகளின் காலில் இருந்து எழுந்த சிலம்போசையை நினைவுபடுத்தியது. தனக்குச் சமமான ஒரு எதிரியைக் கண்ட கம்பண்ணர் மகிழ்ச்சியோடு அவனோடு போரிட்டார். இருவரும் சளைக்காமல் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். காக்கையைச் சின்னமாகக் கொண்டிருந்த சுல்தான் கலி புருஷனைப் போலக் காணப்பட்டான். அவனைத் தனது அம்புகளால் கம்பண்ணர் வீழ்த்தி தான் வெற்றி பெறுவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த அவன் ஆணவத்தை அடியோடு அழித்தார். தன்னுடைய அம்புகளால் சுல்தானின் வில்லின் நாணை அறுத்தார் கம்பண்ணர். அதனால் ஆத்திரமடைந்த சுல்தான், தன்னுடைய வாளை ஏந்திக்கொண்டு கம்பண்ணரைத் தாக்கினான்.

அதைக் கண்ட கம்பண்ணர் தன்னுடைய வீர வாளை ஏந்தி சுல்தானோடு வாட்போர் செய்தார். ஒளிமிகுந்த அந்த வாள் சுல்தானின் தலையைக் கொய்தது. தலைவணங்குதல் என்பதை அறியாத சுல்தானின் தலை மண்ணில் உருண்டோடியது. காட்டுத்தீயிலிருந்து விடுபட்ட வனத்தைப் போலவும் கிரஹணம் நடந்தபிறகு காணப்படும் நிர்மலமான வானவெளியைப் போலவும் காளிங்கன் விரட்டியடிக்கப்பட்ட பிறகு தெளிந்த நீர் ஓடிய யமுனையைப் போலவும் மதுரை சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு காட்சியளித்தது”

இப்படிக் கடுமையாக நடந்த போரில் வெற்றி பெற்ற கம்பண்ணர், அதன்பின் தமிழகத்தின் நிர்வாகத்தைச் சீரமைத்தார். அழிந்த பல கோவில்களைப் புனருத்தாரணம் செய்து பல திருவிழாக்களை மீண்டும் தொடங்கினார். தமிழகத்தை விட்டுச் சென்ற ஆன்மிகப் பெரியோர்கள் பலர் தமிழகம் திரும்பினார். அழகிய மணவாளப் பெருமாள் ஶ்ரீரங்கத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டார். மதுரைக் கோவில் கல்திரை இடிக்கப்பட்டு கம்பண்ணர் கருவரைக்குச் சென்று தரிசனம் செய்தபோது அங்கே சுந்தரேஸ்வரர் முன் தீபம் அப்படியே எரிந்துகொண்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தை பெரும் சீரழிவிலிருந்து மீட்ட பெருமை கம்பண்ணரையே சேரும்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

எஸ். கிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், வரலாற்று ஆர்வலர். தமிழர் நாகரிகம், மரபு, கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். 'அர்த்தசாஸ்திரம்', 'கிழக்கிந்தியக் கம்பெனி', 'பழந்தமிழ் வணிகர்கள்' போன்ற நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சமீபத்திய நூல், 'சேரர் சோழர் பாண்டியர்: மூவேந்தர் வரலாறு'. தொடர்புக்கு : kirishts@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *