Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #1

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #1

1. பிரபஞ்சத்தில் நம் உலகம்

நமது உலகைப் பற்றிய கதை இன்னும் முழுமையாக அறியப்படாத கதையாகவே விளங்குகிறது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கடந்த 3000 வருட வரலாற்றைமட்டுமே உண்மை வரலாறாகக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பு நிகழ்ந்தவை அனைத்தும் கற்பனை மற்றும் ஊகம் மட்டுமே. நாகரிக உலகின் பெரும்பான்மைப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு இந்த பூமி திடீரென பொ.யு.மு.4004-ல் திடீரெனத் தோன்றியது என்றே கற்பிக்கப்பட்டது. இருப்பினும் அப்படியான கற்பனையை முன்வைத்தவர்களும் இந்நிகழ்வு நடைபெற்றது வசந்த காலமா அல்லது இலையுதிர் காலமா என்ற கருத்தில் மாறுபடுகின்றனர். இவை ஹீப்ரூ பைபிளின் நேரடி விளக்கம் மற்றும் தன்னிச்சையான இறையியல் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்ட அற்புதமானவகையில் மிகத் துல்லியமான பொய்கள். மதவியலாளர்கள் இதுபோன்ற எண்ணங்களை நீண்ட காலத்துக்கு முன்பே புறக்கணித்துவிட்டனர்.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் கணக்கிடமுடியாத மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது என்பதே உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம். ஒவ்வொரு திசையிலும் எதிர் எதிராகக் கண்ணாடிகளைப் பொருத்துவதன் மூலம் அறையின் நீள அகல விஸ்தீரணம், போலியாக, எல்லையற்றுத் தெரிவதுபோல், உலகம் தோன்றிய காலம் குறித்த கருத்திலும் தவறு இருக்கலாம். நாம் வாழும் பிரபஞ்சம் தோன்றி அதிகபட்சம் 6000 அல்லது 7000 வருடங்கள் மட்டுமே ஆகியிருக்கலாம் என்பது மிகவும் மேலோட்டமான கருத்து.

இன்றைக்கு அனைவருக்கும் தெரிந்த உலகம் நீள்வட்ட வடிவமானது. 8000 மைல் குறுக்களவு கொண்ட, ஆரஞ்சு நிறத்திலான, சற்றே அழுத்தப்பட்ட கோளம். உலகம் கோள வடிவமானது என்ற உண்மையும் சுமார் 2500 ஆண்டுகள் முன்னர் குறைந்த எண்ணிக்கையிலான புத்திசாலிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதற்கு முன் அதன் வடிவம் தட்டை என்றே கருதப்பட்டது. வானம், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் தொடர்பான அன்றைய அவர்களுடைய பல எண்ணங்கள், இன்றைக்கு அற்புதமான கற்பனைகளாகவே தெரிகின்றன. பூமி அதன் அச்சில் தனக்குத்தானே 24 மணி நேரத்துக்கு ஒரு முறை சுழல்வதால், இரவும் பகலும் மாறிமாறி ஏற்படுகிறது. சூரியனைச் சுற்றிவர ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் 9,15,00,000 – 9,45,00,000 மைல்கள்.

பூமியிலிருந்து 2,39,000 மைல்கள் தாண்டியுள்ள சந்திரன் என்னும் துணைக்கோளும் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி, சந்திரன் ஆகியவை மட்டுமின்றி முறையே 36 மற்றும் 67 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியின் விட்டத்தைத் தாண்டி முறையே 141, 483, 886, 1782 மற்றும் 2793 மில்லியன் மைல்கள் தூரத்தில் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் ஆகிய கிரங்கள் இருக்கின்றன. மில்லியன் கணக்கான மைல்கள் என்று கூறும்போது அதன் தொலைவை மனத்தால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. எனவே வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும் வகையில், சூரியனுக்கும், கிரகங்களுக்கும் இடையேயான தூரத்தை இன்னும் சிறிய அளவில் சுருக்கித் தருகிறோம்.

நமது பூமியை 1 அங்குலம் குறுக்களவு கொண்ட சிறு பந்தாக கற்பனை செய்து கொண்டால், சூரியனின் குறுக்களவு 9 அடிகள் மற்றும் தூரம் 969 அடிகள் (323 யார்ட்). இது 1 மைல் நீளத்தின் 5-ல் ஒரு பகுதி அல்லது 4அல்லது 5 நிமிடங்கள் நடக்கும் தூரமாகும். சந்திரன் பட்டாணியின் அளவில் பூமியிலிருந்து 2 ½ அடி தூரத்தில் இருக்கும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் சூரியனிலிருந்து 375 அடிகள் மற்றும் 750 அடிகள் (125 மற்றும் 250 யார்ட்) தொலைவில் இருக்கும். பூமியிலிருந்து 525 அடிகள் (175 யார்ட்) தொலைவில் செவ்வாய், 1 மைல் தூரத்தில் வியாழன், 2 மைல் தூரத்தில் சனி, 4 மைல் தூரத்தில் யுரேனஸ் மற்றும் 6 மைல் தூரத்தில் நெப்டியூன் ஆகிய கிரகங்கள் இருக்கும். கோளங்களைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு வெறுமை, வெறுமை. மேற்கூறிய அளவுகோளின்படி பூமிக்கு மிக மிக அருகேயுள்ள நட்சத்திரத்தின் தூரம் 40,000 மைல்கள்.

விண்வெளியின் அதி பிரமாண்ட வெறுமைவெளியில், உயிர் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் இந்த நம் பூமி எந்த அளவுக்கு கடுகினும் கடுகாக மிகச் சிறியதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

விண்வெளியில் காணப்படும் இந்த கிரகங்களில் உயிரினம் வாழ்வதற்குத் தகுதியான ஒரே கிரகம் பூமி மட்டுமே. பூமியின் மையப் புள்ளியிலிருந்து இரு பக்கங்களின் தூரம் 4000 மைல்கள். அதிகபட்சம் பூமியை 3 மைல் ஆழத்துக்குத் தோண்டலாம் மற்றும் பூமியின் மேற்பரப்பிலிருந்து 5 மைல் தூரம் வரை செல்லலாம். இதைத் தாண்டியுள்ள விண்வெளி முழுவதும் வெறுமைதான்.

பெருங்கடல் அகழ்வாய்வுகள் அதிகபட்சம் 5 மைல் ஆழம் வரையே நடைபெற்றுள்ளன. விமானங்கள் பறக்கும் உயரம் தரையிலிருந்து அதிகபட்சம் 4 மைல்கள். மனிதர்கள் 7 மைல் உயரத்துக்கு மிகுந்த சிரமத்துடன் பலூன்களில் பயணித்துள்ளனர். 5 மைல் உயரத்தைத் தாண்டி எந்தப் பறவையாலும் பறக்க முடியாது. விமானங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட சிறு பறவைகளும் பூச்சிகளும் அந்த உயரத்தை எட்டும் முன்பே உணர்வற்றுக் கீழே விழுந்துவிட்டன.

2. கால வெளியில் உலகம்

விஞ்ஞானிகளின் பார்வையில் உலகின் வயது, தோற்றம் ஆகியவை குறித்து சிறப்பான மற்றும் சுவாரஸ்யமான கணிப்புகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தொடந்து நடைபெற்று வருகின்றன. அதிநுட்பமான கணிதம் மற்றும் இயற்பியல் தரவுகளை உள்ளடக்கி இருப்பதால் இவ்வகைக் கணிப்புகள் குறித்த மேலோட்டமான சித்திரத்தைக்கூட எங்களால் வழங்க இயலாது. இயற்பியல் மற்றும் வானவியல் தொடர்பான விஞ்ஞானம் இன்னும் முழுமையாக வளரவில்லை என்பதுதான் யூகங்கள் மூலமான விளக்கங்களை மட்டுமே இதுபோல் வழங்குவதற்கு உண்மையான காரணம்.

நாம் வாழும் இந்த பூமியின் வயதை, முடிந்தவரை மிக மிகப் பழமையானது என்று சொல்லும் போக்கே, தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, தனித்தன்மை கொண்ட பூமி, தனக்குத்தானே சுழல்வதுடன், சூரியனையும் 2000 மில்லியன் வருடங்களுக்கும் மேலாகச் சுற்றி வருவதாகத் தெரிகிறது. இதற்கும் அதிகமாகப் பல ஆண்டுகள் இருக்கக்கூடும். கற்பனைக்கும் எட்டாத கால வெளி.

தனித்துப் பிரிவதற்கு மிக நீண்ட காலம் முன்பு, சூரியனும் அதைச் சுற்றி வரும் பூமியும் மற்றும் கோள்களும், விண்வெளியில் பரவிக் கிடந்த பொருட்களில் மாபெரும் சுழற்சிப் பந்தாக, தொகுப்பாக இருந்திருக்கலாம். தொலைநோக்கிக் கருவி வழியே இப்போது பார்க்கும்போது, ஒளிரும் பெரும் சுழல் மேகங்களும், சுழல் விண்மீன் மேகப்படலங்களும் தென்படுகின்றன. இவை அனைத்தும் ஒற்றை மையப்புள்ளியைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

சூரியனும் மற்றும் கோள்களும் ஒரு காலத்தில் இதுபோல் ஒற்றை மேகமாகச் சுழன்றுகொண்டிருந்து, கால ஓட்டத்தில் ஒருங்கிணைந்து அடர்த்தி பெற்று தற்போதைய வடிவத்தைக் கொண்டிருக்கலாம் என வானியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யுகங்கள் தாண்டி, பரந்து விரிந்த வெறுமையில், பூமியும், சந்திரனும், வேறுபட்டு அடையாளம் காணும்வரை இந்த ஒருங்கிணைப்பு நடைபெற்றிருக்கும் என்கிறார்கள். தற்போது இவை சுழலும் வேகத்தை விடவும் முன்பு இன்னும் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன. மேலும் சூரியனிலிருந்து இப்போதிருக்கும் தொலைவைவிட இன்னும் நெருங்கி இருந்தன. சூரியனை இன்னும் வேகமாகச் சுற்றி வந்தன. மேற்பரப்பில் ஒளிரும் அல்லது உருகும் தன்மையுடன் காட்சி அளித்தன. சூரியனும் முன்பு இன்னும் அதிக வெப்பத்துடன் ஜொலித்தது என்கிறார்கள்.

காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று பூமியின் தொடக்க கால வரலாற்றை நம்மால் காண முடிந்தால், அதுவொரு பிரமாண்ட ஊது உலையின் உட்புறமாகவும், குளிர்ச்சி அடைவதற்கு முந்தைய எரிமலைக் குழம்பின் மேற்பரப்பாகவும் இருப்பதைப் பார்க்கலாம். கடுமையான வெப்பம் காரணமாகத் தோன்றும் கந்தக மற்றும் உலோக நீராவிகளால் தண்ணீர் ஆவியாகிவிடுவதால், சொட்டுத் தண்ணீரைக் கூட காண முடியாது. இதற்குக் கீழே கடுமையான வெப்பம் காரணமாகப் பாறைப் பொருள்கள் உருகிப் பெருங்கடல் போல் தோன்றும். மேகங்களுக்கு இடையே சூரியனும், சந்திரனும், நெருப்பு ஜூவாலைகளைக் கக்கிக்கொண்டு விண்வெளியில் நீந்திக் கொண்டிருந்திருக்கும்.

கோடிக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், இந்தப் பயங்கரமான காட்சிகள் சிறிது சிறிதாக வெப்பத்தின் தீவிரத்தை இழக்கத் தொடங்கியிருக்கும். ஆகாயத்திலுள்ள வாயுக்கள் மழையெனப் பொழந்து, தலைக்கு மேலிருந்த அடர்த்தியைக் குறைத்திருக்கும். உருக்கி வார்க்கப்பட்ட கடலின் மேற்புறத்தில் திடமான பாறைகள் தோன்றியிருக்கும். அவை மூழ்கிச் சென்றிருக்கும். அதன் பின் மிதக்கும் பொருட்கள் உருவாகியிருக்கும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தொலைவு அதிகரித்துக்கொண்டே சென்றிருக்கும். வேகம் மெள்ள மெள்ளக் குறைந்து உருவம் சிறிதாகிக் கொண்டே போயிருக்கும். அளவில் சிறியதான சந்திரன் அதன் ஒளிர் தன்மையிலிருந்து மேலும் மேலும் குறைந்து, குளிர்ந்து நிலைபெற்றிருக்கும். சூரிய ஒளியைத் தடுத்தும் பிரதிபலித்தும், தொடர் கிரகணங்களும், பௌர்ணமிகளும் ஏற்பட ஆரம்பித்திருக்கும்.

மிக நீண்ட நெடிய கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்த நிலையில், பூமி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அளவை எட்டியிருக்கும். பின்னர் ஒரு கட்டத்தில், குளிர்ந்த காற்றில் மேகத்துடன் கலந்து, ஆவி ஒடுங்கத் தொடங்கி, கீழேயுள்ள முதல் பாறைகள் மீது முதல் மழைத் துளி விழுந்திருக்கும். இன்னும் பல முடிவில்லா பலப்பல மில்லினியம் ஆண்டுகளுக்கு, பூமியின் பெரும்பான்மைப் பகுதியின் தண்ணீர், வளிமண்டலத்தில் ஆவியாகவே இருந்திருக்கும். இருப்பினும், கீழேயுள்ள படிகமாகும் பாறைகளுக்கு மேல், கொதிக்கும் நீரோடைகள் பெருக்கெடுத்திருக்கும். குளங்களிலும், ஏரிகளிலும் பாயும் இந்த நீரோடைகள், சிதைவுகளையும், வண்டல்களையும் சுமந்து கொண்டு சேர்க்கத் தொடங்கியிருக்கும்.

பல்வேறு விஷயங்கள் நடந்ததைத் தொடர்ந்து, உலகில் மனிதன் கால் ஊன்றி நிற்கும் படியான சூழல் உருவாகியிருக்கும். அந்நேரத்தைய உலகுக்குச் செல்ல நம்மால் முடிந்தால், நாம் மிகப் பெரிய எரிமலைக் குழம்புகள் போன்ற பாறைகள் மீதுதான் நின்றிருப்போம். தாவரங்களோ, உயிரினங்களோ, மண்ணோ, மணலோ இல்லாத புயல் மேகம் சூழந்த வானத்தின் கீழ் நின்றுகொண்டிருப்போம். வெப்பமும், சீற்றமும் கொண்ட காற்று, இதுவரை கண்டிராத சூறாவளியை விடவும் வேகமாகச் சுழன்று வீசி, இன்றைய பூமிக்குத் தெரியாத பெருமழையைப் பொழிந்து நம்மைத் தாக்கியிருக்கும். மழைநீர் ஆறாகப் பெருகி, பாறைகளின் சிதைவுகளோடும், சேறு சகதியோடும், பள்ளத்தாக்குகள் வழியே ஓடி, அப்போதிருந்த கடல்களில் வண்டல்களையும் படிவுகளையும் கலந்திருக்கும்.

மேகக் கூட்டங்களுக்கு இடையே வானத்தில் பிரமாண்ட சூரியன் வேகமாக ஓடிக் கொண்டிருப்பதைத் தெளிவாகப் பார்த்திருப்போம். சூரியன் சந்திரன் எழுச்சியின் காரணமாக அன்றாடம் நிலநடுக்கங்களையும், மிகப் பெரிய மாற்றங்களையும் கண்டிருப்போம். தற்போது பூமிக்கு ஒரு பக்கத்தைக் காட்டியும், மறு பக்கத்தை மறைத்தும் கொண்டிருக்கும் சந்திரன், அப்போது கண்களுக்குத் தெள்ளத் தெளிவாக தெரியும் வகையில் மிக வேகமாகத் தனக்குத் தானே சுழல்வதுடன், இரு பக்கங்களையும் காட்டிக் கொண்டிருந்திருக்கும்.

பூமியின் வயது கூடிக்கொண்டே போனது. கோடிக்கணக்கான ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோட, பகல் பொழுதின் நேரம் நீண்டது. சூரியனின் வெப்பம் கொஞ்சம் தணிந்து தொலைதூரம் சென்றது. அதேபோல் ஆகாயத்தில் சந்திரன் சுழலும் வேகமும், மழை மற்றும் புயலின் தீவிரமும் குறைந்தது. கடல்களின் நீர்மட்டம் அதிகரித்தது. எனினும் பூமியில் இன்னும் மனித இனம் பிறக்கவில்லை. தாவரங்களும், கால்நடைகளும், கடல்வாழ் உயிரினங்களும் தோன்றவில்லை. கடல்கள் உயிரற்றுக் காட்சி அளித்தது; நிலங்கள் தரிசாகப் பாழ்பட்டுக் கிடந்தன.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *