Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #2

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #2

3. உயிரினங்களின் தொடக்கங்கள்

மனித நினைவு மற்றும் வரலாறுகளின் தொடக்கங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் உயிரினங்கள் எப்படி இருந்தன என்பதை அடுக்குப் பாறைகளிலுள்ள ஜீவராசிகளின் அடையாளங்கள் மற்றும் புதைபடிவங்களைக் கொண்டே புரிந்துகொள்கிறோம். களிமண்பாறை, கற்பாறை, சுண்ணாம்புக்கல், மணற்கல், எலும்புகள், கிளிஞ்சல்கள், தண்டுகள், பழங்கள், காலடித் தடங்கள், கீறல்கள், முதன் முதலில் தோன்றிய கடல் அலைகளின் சிற்றலைக் குறியீடுகள், முதன் முதலில் பூமியில் பெய்த மழைத் துளியின் குழிகள் ஆகியவற்றில் இதற்கான சான்றுகள் பாதுகாக்கப்படுவதையும் காண்கிறோம். பாறைகளின் பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்யும் போது தொடக்கத்தில் துண்டு துண்டாகக் கிடந்த பூமி, பின்னாளில் ஒன்றாக இணைந்ததாக அறிகிறோம். வண்டல் பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக நேர்த்தியான அடுக்களாக இல்லை. பராமரிக்கப்படாத அல்லது எரிக்கப்பட்ட நூலத்திலுள்ள புத்தகங்களின் பக்கங்களைப்போல், இவை நொறுங்கியும், வளைந்தும், சிதைந்தும், கலந்தும் உள்ளன. நூலத்திலுள்ள புத்தகங்களைப் படிக்க முடியும் வகையில் அடுக்கி வைக்கும், பல லட்சக்கணக்கான ஆண்டுகள் தொடர் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலமே, பூமி ஓர் ஒழுங்குக்கும் வடிவத்துக்கும் உருவாகிவந்துள்ளது. பாறைப்படிவுகளின் காலம் சற்றேறக் குறைய 1600 மில்லியன் ஆண்டுகள்.

மிக மிகப் பழமையான பாறைகள் அஜோயிக் (Azoic) அதாவது பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பிருந்த பாறைகளே. ஜீவராசிகள் உலகில் தோன்றிய காலத்துக்கு முந்தைய பாறைகள் வட அமெரிக்கப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவற்றின் தடிமன் மற்றும் அடர்த்தியை ஆய்வு செய்த புவியியலாளர்கள் இவற்றின் பழமை, பாறைப்படிவுகள் காலமான 1600 மில்லியன் ஆண்டுகளில் சரி பாதியேனும் இருக்குமெனக் கூறுகின்றனர். இந்த உண்மையை அழுத்தத்துடன் மீண்டும் கூறுகிறேன். பூமியில் நிலப்பரப்பும், கடலும் கண்ணுக்குப் புலப்படும் வகையில் வேறுபட்டுப் பிரிந்த பின்னரும் பிரபஞ்சத்தின் சரிபாதி ஆண்டு காலம் வரையிலும் ஜீவராசிகள் இன்னும் பிறக்கவில்லை. கடல் அலைகளின் சிற்றலைக் குறியீடுகளும், பூமியில் பெய்த மழைத் துளியின் குழிகளும், இப்பாறைகளில் காணப்பட்டுகின்றனவே அன்றி, உயிரினங்களின் அடையாளங்களோ சின்னங்களோ ஆய்வில் புலப்படவில்லை.

இந்தப் படிவுகளை ஆய்வு செய்துகொண்டே வரும்போது, உயிரினங்கள் தோன்றியதற்கும், பெருகியதற்குமான சமிக்ஞைகள் மெள்ளத் தோன்ற ஆரம்பிக்கின்றன. பூமியின் தோற்றம், வயது உள்ளிட்ட வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் கடந்த காலத் தடயங்களைப் புவியிலாளர்கள் கீழ்-பேலியோஜோயிக் காலம் (Lower Palaeozoic Age) என்றழைக்கின்றனர். மிகச் சிறிய பொருள்களின் எச்சங்களில்தான் ஆதி உயிர்கள் தொடர்பான தடயங்கள் தென்படுகின்றன.

சிறு கிளிஞ்சல் பூச்சிகளின் மேல் ஓடுகள், தண்டுகள், பூவின் வடிவில் இருக்கும் கடல் விலங்கு போன்ற தாவரங்கள், கடற்பாசிகள், கடற்புழுக்கள், ஒட்டு மீன்கள், தாவரப்பேன், பந்துபோல் சுருட்டிக் கொள்ளும் ஊர்வன, முக்கூற்று உடல் தொல்லுயிரிகள் உள்ளிட்ட ஆரம்பல கால உயிரினங்களின் தடங்களும் எச்சங்களும் கிடைத்துள்ளன. இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் கழித்து, உலகம் அதுவரை காணாத ஆபத்தான கொடிய விஷமுள்ள கடல் தேள்கள் தோன்றியிருக்கின்றன. மேற்கூறிய உயிரினங்கள் உருவத்தில் சிறியவை. கடல் தேள்கள் சற்றேறக் குறைய 9 அடி நீளம் கொண்டவை.

பூமியின் வரலாற்றில் இந்தக் காலகட்டத்தில் நிலப் பகுதியில் தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்ததற்கான எந்தத் தடயங்களுமே காணப்படவில்லை. மீன்களோ முதுகெலும்பு கொண்ட உயிரினங்களோ அதுவுமே இந்தக் காலகட்டத்தில் தோன்றியிருக்கவும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் கிடைத்திருக்கும் உயிரினத் தடயங்கள் எல்லாம் நீர் வாழ் மற்றும் அலை ஏற்ற இறக்க மண்டல உயிரினங்களினுடையவையே. இந்தக் காலகட்டத்தில் பூமியில் காணப்படும் கீழ் பேலியோஜோயிக் காலப் பாறைகளின் தாவர மற்றும் விலங்கினங்களுடன் அளவைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பிட விரும்பினால், பாறைக் குளம் அல்லது கசடுகள் நிறைந்த பள்ளத்திலிருந்து ஒரு துளி நீரை எடுத்து நுண்ணோக்கி வழியே ஆய்வு செய்ய வேண்டும். நாம் அங்கே காணும் ஒட்டு மீன், கிளிஞ்சல் பூச்சிகள், தாவர வடிவில் விலங்கு வகை, கடற்பாசி ஆகிய உயிரினங்கள் ஒரு காலத்தில் இந்தக் கோளத்தில் உயிர் வாழ்வின் உச்சத்தில் இருந்தன.

இருப்பினும் நமது பூமியின் ஆரம்பகால உயிரினம் குறித்த எந்த பிரதிநிதித்துவத்தையும் வகைமாதிரியையும் கீழ்-பேலியோஜோயிக் காலப் பாறைகள் நமக்குத் தரவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு உயிரினத்துக்கும் எலும்புகள் அல்லது வலுவான பாகங்கள் அல்லது கிளிஞ்சல் ஓடு அல்லது மண்ணில் தெளிவான கால் தடங்கள் அல்லது தெளிவற்ற தடங்கள் பதியும் அளவுக்குப் பெரிதாகவோ, கனமாகவோ இருந்தால் மட்டுமே அதன் இருப்புக்கான புதை படிவ அடையாளத்தை விட்டுச் செல்ல இயலும். இன்றைக்கு கோடிக் கணக்கில் சிறிய, மெல்லிய, எடை குறைந்த உயிரினங்கள் உள்ளன. ஆனால் எதிர்காலப் புவியியாளர்கள் கண்டுபிடிக்கும் வகையில் எந்த அடையாளத்தையும் இவை விட்டுச் செல்லாது.

அந்தவகையில் கடந்த காலங்களில் பூமியில் பிறந்து, பெருகி, வாழ்ந்த பல கோடிக்கணக்கான உயிரினங்கள் எந்தவொரு தடத்தையோ அடையாளத்தையோ விட்டுச் செல்லாமல் மறைந்திருக்கலாம். அஜோயிக் காலத்தைச் சேர்ந்த ஆழமில்லாத ஏரிகள் மற்றும் கடல்களின் வெதுவெதுப்பான தண்ணீருடன், ஜெல்லி போன்ற, கிளிஞ்சல்கள் இல்லாத, எலும்புகள் இல்லாத, உயிரினங்கள் மற்றும் ஏராளமான பசுமையான அழுக்குத் தாவரங்கள் கலந்து, இடைநிலைப் பாறைகள் மற்றும் கடற்கரைகளில் பாவியிருக்கலாம்.

வங்கியின் கணக்குப் புத்தகங்கள் அக்கம் பக்கம் வாழ்ந்த வாடிக்கையளர்கள் குறித்த மிக மேலோட்டமான பதிவாக இருப்பதைப்போல், பாறைகளின் பதிவுகள் கடந்த கால வாழ்வின் மிக மேலோட்டமான ஆவணமாகவே இருக்கின்றன. கிளிஞ்சல் அல்லது படிகச் சிம்பு அல்லது ஆமை ஓடு அல்லது சுண்ணாம்புத் தண்டு உள்பட எதையேனும் சுரந்தால் மட்டுமே பிந்தைய காலத்தில் சான்றாகப் பதிவாகும். இதற்கு முந்தைய காலகட்டத்துப் பாறைகளில் புதை படிவத் தடங்கள், ஒருவகை சேராக் கார்பன் வகையான காரீயம் ஆகியவற்றின் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இனந்தெரியாத உயிரினங்களின் முக்கியச் செயல்பாடுகள் மூலம் இவை சேராக் கார்பனாகப் பிரிந்திருக்கலாம் என்பது சிலரது கருத்து.

4. மீன்களின் காலம்

உலகம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே ஆகியிருப்பதாக நம்பப்பட்ட காலத்தில், பல்வகைத் தாவரங்களும், விலங்குகளும் ஏற்கெனவே நிலைபெற்று இறுதி வடிவம் பெற்றுவிட்டன என்று கருதப்பட்டது. இன்றைக்கு உள்ளதுபோல் உயிரினங்கள் அனைத்தும் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டதாகவும் எண்ணப்பட்டது. ஆனால் மனிதன் பாறைகளின் பதிவுகளைக் கண்டுபிடித்து ஆய்வு செய்தபோது, பல கோடிக்கணக்கான ஆண்டுகளில் உயிரின வகைகள் மெதுவாக உருமாறி வளரத் தொடங்கியிருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சிந்தனை தொடர்பான நம்பிக்கையே பின்னாளில் இயற்கை பரிணாம வளர்ச்சியாக விரிவடைந்தது. தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்பட உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும், அஜோயிக் கடல்கள் போன்ற ஜீவராசிகளின் கட்டமைப்பற்ற முந்தைய பரம்பரை உயிரினம் வடிவத்திலிருந்து, மெதுவாக, ஆனால், தொடர் மாற்றச் செய்முறை மூலம் உருவாகி உள்ளன என்று இதன்படிச் சொல்லப்பட்டது.

இயற்கை / உயிரினப் பரிணாமம் குறித்த இந்த நம்பிக்கையும், உலகின் வயது குறித்த கேள்வியைப் போல், கடந்த காலத்தில் கசப்பான விவாதங்களுக்கே வழிவகுத்தது. அவை கிறிஸ்தவ, யூத, இஸ்லாமியத் தத்துவங்களுக்கு இணக்கமாக இல்லை நம்பப்பட்ட காலமுண்டு.

ஆனால் அக்காலம் மாறிவிட்டது. பெரும்பான்மை பழைமைவாத கத்தோலிக்க, புராடஸ்டெண்ட், யூத மற்று இஸ்லாமியர்கள் தற்போது அனைத்து உயிரினங்களின் பொதுவான தோற்றம் குறித்த, புதிய மற்றும் விரிவான கருத்துகளை ஏற்கத் தொடங்கிவிட்டனர். பூமியில் எந்த உயிரினமும் திடீரெனத் தோன்றவில்லை. உயிரினங்கள் வளர்ந்து வந்துள்ளன. தொடர்ந்து வளர்ந்துகொண்டேயும் இருக்கின்றன. கால இடவெளியில் யுகங்கள் உருண்டோட, உயிரினங்கள் அலை ஏற்ற இறக்க மண்டங்களில் சாதாரண உயிரியாக இருந்த நிலையிலிருந்து சுதந்திரம், ஆற்றல் மற்றும் உணர்வு உள்ளிட்ட வளர்ச்சிகளைப் பெற்றிருக்கின்றன.

உயிர் வாழ்க்கை என்பது தனிப்பட்ட உயிரினங்கள் பலவற்றைக் கொண்டது. அவை தெளிவான வடிவம் கொண்டவை. பாசிகள் போன்று உயிர் இல்லாத பொருட்கள் போன்று வரம்புகளற்ற அசைவுகளற்ற படிகங்கள் இல்லை. உயிரற்ற பொருள்களுக்கு இல்லாத இரு முக்கிய பண்புகள் இவற்றுக்கு உண்டு. ஏனைய பொருள்களைத் தங்களுக்குள் ஒருங்கிணைத்து ஓர் அங்கமாக்கிக் கொள்ளும்; தங்களைத் தாங்களே மீள் உருவாக்கிக் கொள்ளும்.

இவற்றால் உணவு உட்கொள்ளவும் இனப்பெருக்கம் செய்யவும் முடியும். சிறிய மாற்றங்களுடன் தங்களைப் போன்ற உயிர்களை உருவாக்கவும் இயலும். ஓர் உயிரிக்கும் அதன் வாரிசுகளுக்கும் இடையே விசேஷமான குடும்ப குடும்ப ஒற்றுமை காணப்படும். தாய் தந்தை மற்றும் அவற்றின் மூலம் பிறக்கும் ஒவ்வொரு சந்ததிக்கும் தனித்துவமான வேற்றுமை இருக்கும். இரு ஒவ்வொரு உயிரினத்துக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இருந்துவரும் நிலையே.

குட்டிகள் பெற்றோரைப்போல் ஏன் இருக்கின்றன; அல்லது ஏன் அவர்களிடமிருந்து வேறுபட்டிருக்கின்றன என்பதை இன்றைய அறிவியலாளர்களால் விளக்க முடியவில்லை. சந்ததிகள் ஒன்றுபட்டோ, மாறுபட்டோ இருப்பதற்கான காரணியை அறிவியல் உதவியுடன் ஆய்வு செய்வதைவிட அடிப்படை அறிவு கொண்டு பார்க்கலாம். உயிரினங்கள் வாழும் சூழல் மாறும் போது, சம்மந்தப்பட்ட உயிரினங்களும் அதற்கேற்ப மாறுதல்களுக்கு உட்படும் என்பது நியதி. எந்தெவொரு உயிரினத்தின் பரம்பரையிலும் தனிபட்ட வேறுபாடுகள் இருக்கும். ஓர் உயிரினத்தின் எந்தவொரு தலைமுறையை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் சிலவற்றுக்கு இருக்கும் தனித்தன்மையான அம்சங்கள் அவை வாழும் புதிய சூழல்களுக்கு ஏற்பச் சிறப்பாக மாற்றிக்கொள்ள உதவும். சிலவற்றுக்கு இருக்கும் அந்தத் தனிப்பட்ட வேறுபாடுகள் அவை வாழ்வதைக் கடினமாக்கும்.

மொத்தத்தில் பிந்தியதை விடவும் முந்தைய வகை, நீண்ட காலம் வாழ்ந்து, சந்ததிகளை உருவாகி, தன்னைத் தானே இனப்பெருக்கம் செய்து பெருகிக்கொள்ளும். அப்படியாக ஓர் உயிரினம் தலைமுறை தலைமுறையாக சாதகமான திசையை நோக்கி மாறுதலடைந்துகொண்டே செல்லும். இது இனப்பெருக்கம் மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளின் அடிப்படையிலான அறிவியல் கோட்பாடாக இல்லாமல் இருக்கும் இயற்கைத் தேர்வு (Natural Selection) செய்முறையாகும்.

உயிரினங்களின் அழிப்பு மற்றும் பாதுகாப்பில் பல்வேறு சக்திகளின் பங்குகள் குறித்து விஞ்ஞானத்துக்குத் தெரியாமலும் தீர்மானிக்கப்படாமலும் பல அம்சங்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால் தொடக்கம் முதல் உயிரினம் மீது இருந்துவரும் இந்த இயற்கைத் தேர்வு வழிமுறையை மறுதலிக்கும் ஒருவர், உயிரினத்தின் அடிப்படை உண்மைகள் பற்றித் தெரியாதவராகவோ சாதாரணமாகச் சிந்தித்தறியும் திறன் இல்லாதவராகவோதான் இருப்பார்.

உயிரினத்தின் முதல் தொடக்கம் பற்றி பல அறிவியலாளர்கள் யூகித்துள்ளனர். இவர்களின் யூகங்கள் சுவாரஸ்யமானவை என்பதைத் தாண்டி, அறிவியல் ரீதியாகவோ, ஆதாரப்பூர்வமாகவோ, நம்பத் தகுந்த வகையிலோ உறுதியாக இல்லை. உயிரினங்கள் வெதுவெதுப்பான சூரிய ஒளிபட்ட ஆழமற்ற சற்றே உவர் நீரின் சேற்று அல்லது மணல் திட்டுகளில் தோன்றிப் பின்னர் கரைகளுக்கும் நீர் நிலைக்குள்ளும் பரவின என்பதை அனைத்து அறிவியலாளர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

ஆரம்பகால உலகம் என்பது வலுவான அலைகள் மற்றும் நீரோட்டங்களைக் கொண்டிருந்தது. உயிரினங்கள் பலவும் கடற்கரைகளில் அலைகளினால் ஒதுங்கி உலர்ந்து அல்லது காற்றோ, சூரிய வெளிச்சமோ அணுக முடியாத ஆழ்கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு அழிந்திருக்கும். கரையில் ஒதுக்கப்படுபவை ஆழமாக வேரூன்றவும், கரையில் சிக்கித் தவிப்பவை உடனடியாக உலர்வதைத் தடுக்கப் புறத்தோலும், உறையும் உருவாக ஆரம்பகட்டச் சூழல்கள் வழிவகுத்துத் தந்திருக்கும்.

சுவை குறித்த உணர்வு, உணவின் தேடல் நோக்கித் திருப்பியிருக்கும். கடலின் ஆழங்கள் மற்றும் குகைகளின் இருட்டிலிருந்தும், ஆபத்தான ஆழமற்ற பகுதிகளின் அதிகப்படியான கண் கூசும் வெளிச்சத்திலிருந்தும், போராடி வெளியேற, ஒளி குறித்த உணர்வு உதவியிருக்கும். எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதைவிடவும், உலர்ந்து போகாமல் பாதுகாக்கவே ஓடுகளும், கிளிஞ்சல்களும், உயிரினங்களுக்குக் கவசமாக உருவாகியிருக்கும். இருப்பினும் நமது உலகின் தொடக்க காலத்திலேயே, பற்களும், நகங்களும் உயிரினங்களுக்கு வந்துவிட்டன.

நாம் முன்னரே நீர் வாழ் தேள்களின் அளவு குறித்துப் படித்திருக்கிறோம். பலப்பல யுகங்களாக இவ்வகைத் தேள்களே உயிரினங்களின் உச்சநிலையில் இருந்தன. பேலியோஜோயிக் பாறைகளின் ஒரு பிரிவான சிலூரியன் (Silurian) பிரிவு சற்றேறக் குறைய 500 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்பது புவியியலாளர்களின் கணிப்பு. இக்காலத்தில் கண்கள், பற்கள், முதுகெலும்பு மற்றும் நீந்தும் திறனும் கொண்ட ஆற்றல்மிகு உயிரினங்கள் தோன்றின. இவையே வெர்டிப்ரேடா (Vertebrata) எனப்படும் முதுகெலும்பு கொண்ட ஆதி மீன்கள்.

இம்மீன்கள் பாறைகளின் அடுத்த பிரிவான தேவோனியன் (Devonian) அடுக்குகள் உருவான காலகட்டத்தில் நன்கு அதிகரித்தன. அதிக அளவிலான மீன்களின் பெருக்கம் காரணமாக இக்காலம் ‘மீன்களின் காலம்’ (Age of Fishes) என்றழைக்கப்படுகிறது. தற்போது அழிந்துபோன ஒரு வகை மீன்களும், இன்றைக்குப் பரவலாகக் காணப்படும் சுறாக்களும், ஸ்டர்ஜன் (Sturgeon) என்னும் ஒரு வகை மீன்களும் தண்ணீரில் நீந்தியும், நீருக்கு மேல் குதித்தும், கடற்பாசிகளில் ஊடுருவியும், ஒன்றையொன்று உணவாக உட்கொண்டும், தண்ணீர் உலகுக்குப் புதிய உயிரோட்டத்தைக் தந்தன. தற்போதைய அளவுகோள்களின்படி இவை எதுவுமே பிரமாண்டமாக இருந்திருக்கவில்லை. அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று அடி நீளம் மட்டுமே. ஒரு சில மட்டும் இருபது அடி நீளம் இருந்தன.

இம்மீன்களின் பூர்வ உயிரினம் குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை. அவற்றின் முந்தைய உயிரினங்களில் எந்தவொன்றுடனும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவில்லை. இவற்றின் பூர்வ இனம் பற்றி விலங்கியல் நிபுணர்களுக்குச் சுவாரஸ்யமான கருத்துகள் இருந்தாலும், அவை இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் மீன் இனங்களின் முட்டைகளின் வளர்ச்சி பற்றிய ஆய்வுகளிலிருந்தும், ஏனைய ஆதாரங்களிலிருந்துமே கிடைத்துள்ளன.

முதுகெலும்பிகளின் முன்னோடி உயிரினங்கள் மென்மையான உடலமைப்பு கொண்டவை; வாயில் வலுவான பற்களைக் கொண்ட, சிறிய நீந்தும் உயிரினங்கள் என்பதெல்லாம் வெளிப்படை. திருக்கை மீன் (Skate Fish) மற்றும் சிறு சுறா மீன் (Dog Fish) வகைகளின் பற்கள் வாயின் மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் பரவியிருக்கும். உதடு வழியே உடலின் பெரும்பான்மைப் பகுதிக்கு உறைபோல் விளங்கும் தட்டையான பற்களைப் போன்ற செவுள்களுள் ஊடுருவிச் செல்லும். புவியியல் தடயங்களின்படி பற்கள் – செவுள்கள் கொண்ட இம்மீன்கள் கடந்தகாலத்தின் இருள் பகுதிகளிலிருந்து நீந்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளன. நமக்குத் தெரியவந்துள்ள முதல் முதுகெலும்புள்ள விலங்குகள் இவையே.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *