Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #3

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #3

5. நிலக்கரி சதுப்பு நிலக் காடுகளின் காலம்

மீன்கள் உருவான காலத்தில் நிலப்பகுதி உயிரினங்களற்றதாகவே இருந்துள்ளது என்பது வெளிப்படை. வெயிலிலும் மழையிலும் பாறைகள் மற்றும் தரிசுப் பாறைகளின் மேட்டு நிலங்கள் கிடந்தன. உண்மையான மண் இல்லாததால், மண்ணை வளமாக்க உதவும் மண் புழுக்களோ பாறைத் துகள்களை உடைக்கும் செடி கொடிகளோ இல்லை. பாறைகளில் வளரும் பாசி மற்றும் பூஞ்சைப் பாசியின் சுவடுகளும் காணப்படவில்லை. உயிரினங்கள் கடலில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தன.

உலகெங்கும் பரவியிருந்த தரிசுப் பாறைகள் தட்பவெப்ப நிலை மாற்றங்களில் மிகப் பெரிய பங்களித்தன. தட்ப வெப்ப நிலை மாற்றங்களுக்கான காரணிகள் சிக்கலானவை என்பதால் அவை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். மாறிவந்த பூமியின் வட்டப் பாதை, துருவங்களின் சுழற்சியில் ஏற்பட்ட படிப்படியான மாற்றம், கண்டங்களின் வடிவ மாற்றம், சூரிய வெப்பத்தின் ஏற்ற இறக்கம் ஆகியவை காரணமாக, பூமியின் மேற்பரப்பின் பெரும்பான்மைப் பகுதிகள் குளிர்ச்சியாகவும் பனிக்கட்டியாகவும் மாற்றியுள்ளன. பின்னர் லட்சக்கணக்கான ஆண்டுகள் கழித்து பூமிப்பந்தின் மீது வெதுவெதுப்பையும் சமச்சீரான தட்ப வெப்ப நிலையையும் பரப்பியுள்ளது. கடந்த சில லட்ச ஆண்டுகளில் உலக வரலாற்றின் அகச் செயல்பாடுகளில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பிரம்மாண்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றில் எரிமலைகளின் தோற்றங்கள், வெடிப்புகள், மலைகளின் இடைபெயர்வுகள், கண்டங்களின் எல்லைகள், மலைகளின் உயரங்கள், கடல்களின் ஆழங்கள், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் இவையெல்லாம் குறிப்பிடத்தக்கவை.

இம்மாற்றங்களைத் தொடர்ந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு மயான அமைதி நிலவியது. அப்போது பனியும், மழையும், ஆறுகளும், மலை உச்சிகளிலிருந்து நீரோட்டங்களாகப் பெருக்கெடுத்து ஓடின. வண்டல்களால் கடல்களை நிரப்பியும், ஆழத்தைக் குறைத்தும், கடல் மட்டத்தை உயர்த்தியும், இறுதியில் நிலப்பரப்பை விடவும் கடல் பரப்பை விரிவுபடுத்தின. இதன் காரணமாக உலக வரலாற்றில் ‘உயரம்’ மற்றும் ‘ஆழமான’ காலங்கள் மற்றும் ‘குறைந்த’ மற்றும் ‘சமநிலைக்’ காலங்கள் நிகழ்ந்தன. பூமியின் புறப்பகுதி கெட்டியான பின்னர், உலகம் தொடர்ந்து குளிர்ச்சியாகிக் கொண்டுவருகிறது என்னும் எண்ணத்தோடு படிப்பவர்கள், அதைத் தங்கள் மனத்திலிருந்து அகற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சக் குளிர்ச்சியை எட்டியவுடன், அகத் தட்பவெப்ப நிலை பூமியின் மேற்புறத்தைப் பாதிக்கத் தொடங்கியது. அஜோயிக் எனப்படும் உயிரினங்கள் தோன்றாக் காலத்திலும், ஏராளமான பனிக்கட்டிகளைக் கொண்ட ‘பனிப்பாறைக் காலம்’ நிலவியது.

‘மீன்களின் காலம்’ முடிவடைந்த தறுவாயில், அதாவது ஆழமற்ற கடல்கள் மற்றும் உப்பங்கழிகளின் காலத்தில் உயிரினங்கள் தண்ணீரிலிருந்து நிலப்பரப்புக்குப் பரவின. அதிக அளவில் இந்தக் காலகட்டத்தில் தோன்றிய வடிவங்களின் முந்தைய வகைகள், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அரிதான மற்றும் தெளிவற்ற முறையில் ஏற்கனவே உருவாகத் தொடங்கியிருந்தன என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் இப்போது இவற்றுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிலத்தின் மீதான ஊடுருவலில் விலங்குகளை விடவும் தாவரங்களே சற்று முந்திக்கொண்டாலும், விலங்குகள் மிக நெருக்கமாக அவற்றைப் பின்தொடர்ந்தன. சூரிய வெளிச்சம் இலைகளின் மீது படும்வகையில் அவற்றைக் கெட்டியாகத் தாங்கிப்பிடிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்கவேண்டி இருந்தது. முன்பு தண்ணீரில் தாவரங்கள் மிதந்து கொண்டிருந்தன. இப்போது அந்த தண்ணீர் வற்றிவிட்டது. எனவே இலைகள் விறைப்பாக நிற்கவேண்டியிருந்தது. இது தாவரங்களின் முதல் பிரச்னை. முன்பு போல் தண்ணீர் கைக்குக் கிடைக்கும் வகையில் (இலைக்குக் கிடைக்கும் வகையில்) இல்லை என்பதால் இப்போது தேவையான தண்ணீரைச் சதுப்பு நிலத்திலிருந்து உறிஞ்ச வேண்டிய கட்டாயம் உருவானது. இது இரண்டாவது பிரச்னை. எனவே இரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இலைகளைத் தாங்கிப் பிடிக்கவும், தேவையான தண்ணீரை அவற்றுக்குக் கொண்டு செல்லவும் கெட்டியான திசுக்கள் உருவாகின.

பாறைகள் மீதான படிவுகளை இந்தக் காலகட்டத்தில் திடீரெனப் பல்வகை கெட்டியான சதுப்பு நிலத் தாவரங்கள் சூழ்ந்துகொண்டன. இவற்றுள் பெரும்பாலானவை பெரிய அளவிலான மரப்பாசிகள், தாவரங்கள் மற்றும் பிரம்மாண்ட குதிரை வால் போன்றிருந்தன. இவற்றுடன் காலங்கள் உருண்டோட, தண்ணீரிலிருந்து விலங்கு வடிவில் பல உருவங்கள் ஊர்ந்து வந்தன. அவற்றுள் பூரான்களும், மரவட்டைகளும், பழமையான பூச்சிகளும் இருந்தன. கடல் நண்டுகளுக்கும், தேள்களுக்கும் நெருக்கமான உயிரினங்கள், தற்போதைய முதுகெலும்புள்ள நிலம் வாழ் சிலந்திகளாகவும் தேள்களாகவும் உருமாறின.

தொடக்க காலப் பூச்சிகள் மிகப் பெரிய அளவில் இருந்தன. குறிப்பாக, தட்டான் பூச்சிகள் இருபத்தியொன்பது அங்குல நீளமுள்ள சிறகுகளுடன் இருந்தன. இந்தப் புதிய தலைமுறை உயிரினங்கள் எப்படியோ வெட்டவெளியிலுள்ள காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின. அதுவரை பெரும்பான்மை விலங்குகள் தண்ணீரிலுள்ள காற்றையே சுவாசித்தன. நீர்வாழ் உயிரினங்கள் இப்போதும் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

விலங்குகள் சாம்ராஜ்யம் தங்களுக்கான ஈரப்பதத்தைத் தேவைப்படும்போது தாங்களே வழங்கிக் கொள்ளும் ஆற்றலை இப்போது பெற்றுவிட்டன. உலர்ந்த நுரையீரல் உள்ள மனிதர் இந்தக் காலகட்டத்தில் தோன்றியிருந்தால் மூச்சுவிட சிரமப்பட்டிருப்பார். நுரையீரல்களின் மேற்பரப்புகளில் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே காற்று அவற்றின் வழியே ரத்தத்துக்குச் செல்லும். ஆவியாவதைத் தடுக்க மீன்களுக்கு இருப்பதைப்போல், செவுள்களுக்கு உறை அல்லது உடலுக்குள் சுவாச உறுப்புகள் அல்லது குழாய்கள் உருவாக்கம் மற்றும் நீர்மக் கசிவு இருந்தாலே ஈரப்பதமுடன் வைத்திருக்கமுடியும்.

முதுகெலும்புள்ள பண்டைய மீன்கள் செவுள்களின் வழியே மூச்சுவிடப் பழகியதால் அவற்றால் நிலத்தில் சுவாசிக்க முடியவில்லை. மீன்களுக்குள்ள நீந்தும் சவ்வுப்பையே இப்பிரிவிலுள்ள விலங்குகளுக்கு நுரையீரல் என்னும் புதிய சுவாச உறுப்பானது. இன்றைய தவளை மற்றும் சில வகைப் பல்லிகள் உள்ளிட்ட விலங்குகள் நீரிலும், நிலத்திலும் வாழும் திறனுடையவை. இவை செவுள்கள் வழியே சுவாசித்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தண்ணீரில் தொடங்கின. பின்னர் மீன்களுக்குள்ள நீந்தும் சவ்வுப்பையைப் போலவே இவற்றுக்குத் தொண்டைக்கு வெளியே துருத்திக்கொண்டு பை வடிவில் நுரையீரல் உருவானது. இவ்விலங்கு நிலத்துக்கு வந்த பிறகு பை வடிவிலான நுரையீரலே மூச்சுவிட உதவியது. செவுள்கள் படிப்படியாகத் தேய்ந்து காணாமல் போக, ஒரேயொரு செவுள் மட்டும் வெளிப்புறமாக வளர்ந்து காது மற்றும் செவிப்பறையாக விளங்குகிறது. இவ்வகை உயிரினங்களால் காற்றைச் சுவாசித்து இப்போது நிலத்தில் மட்டுமே வாழ முடியும். இனப்பெருக்கத்துக்கான முட்டைகளை இட மட்டுமே நீர்நிலைகளின் விளிம்புகளுக்குச் செல்கின்றன.

சதுப்பு நிலங்கள் மற்றும் தாவரங்கள் காலத்தைச் சேர்ந்த சுவாசிக்கும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் அனைத்தும் நீரிலும் நிலத்திலும் வாழும் பிரிவைச் சேர்ந்தவை. இவற்றின் வடிவங்கள் இன்றைய பல்லி இனத்துடன் தொடர்புடையவை. சில உருவத்தில் கணிசமாகவும் வளர்ந்தன. இவை நிலத்தில் வாழ்பவை என்றாலும், ஈரப்பதம் மற்றும் சதுப்பு நிலங்களிலும் அவற்றின் அருகேயும் வாழ்ந்தன. இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த மரங்களும் நீரிலும், நிலத்திலும், வளரும் தன்மை கொண்டிருந்தன. ஈரப்பதம் மற்றும் சதுப்பு நிலத்தில் விழுந்து மழைநீர் உதவியுடன் மீண்டும் முளைக்கத்தக்க வகையில் பழங்களோ விதைகளோ இம்மரங்களில் இந்தக் காலகட்டம்வரை உருவாகவில்லை. ஏதேனும் முளைப்பதற்கு வித்துகளைத் தண்ணீரில்தான் மிதக்கவிட வேண்டியிருந்தது.

காற்றுள்ள இடத்தில் உயிரினங்கள் வாழ ஆரம்பித்தபோது என்னென்ன தகவமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்பது அருமையான அறிவியல் துறையான ஒப்பீட்டு உடற்கூறியல் பார்வையில் மிக மிக சுவாரசியமானதாக விளங்குகிறது. தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டவை. மீன் தொடங்கி மனித இனம் வரை, முதுகெலும்புள்ள உயிரினங்கள் அனைத்தும் வளர்ச்சிக்கான கட்டத்தைச் செவுள் துளையிலிருந்து தொடங்குகின்றன. ஆனால் குஞ்சுகள் வளர ஆரம்பித்ததும் செவுள் துளைகள் அழிந்துவிடுகின்றன. திறந்தநிலையில் நீரால் நனைக்கப்படும் மீன்களின் கண்கள் உயர் நிலை மீன்களில் உலர்வதிலிருந்து ஈரப்பதம் சுரக்கும் சுரப்பிகள், கண் இமைகள் இவற்றால் பாதுகாக்கப்படுகின்றன. காற்றின் மெல்லிய ஒலி அதிர்வுகள் காரணமாகச் செவிப்பறைகள் அவசியமாகின்றன. பறத்தல் தொடர்பாக பறவைகளின் ஒவ்வொரு உறுப்பிலும், இதுபோன்ற மாற்றங்களும் தகவமைப்புத் தன்மைகளும் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதையும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

நிலக்கரிப் படிவங்கள் உருவான மற்றும் அமீபியா உருவான காலமான இதில்தான் முதன் முதலில் சதுப்பு நிலங்கள் மற்றும் உப்பங்கழித் தண்ணீரில் உயிரினங்கள் உருவாகத் தொடங்கின. பூமியில் உயிர் வாழ்க்கை இந்த அளவுக்குத்தான் இந்தக் காலகட்டத்தில் உருவாகியிருந்தது. குன்றுகளும், மேடான நிலப்பகுதிகளும் தரிசு நிலங்களாகவும் உயிரினங்கள் அற்றதாகவுமே இந்தக் காலகட்டத்தில் இருந்தன. இந்தக் காலகட்டத்து உயிரினங்கள் நிலத்தில் இருக்கும் காற்றை சுவாசிக்கக் கற்றுக்கொண்டுவிட்டிருந்தன. எனினும் அவற்றின் பிறப்பிடமான நீர்நிலையின் தொடர்பை முழுவதுமாக விட்டுவிலகியிருக்கவில்லை. இனப்பெருக்கத்துக்காக அவை மீண்டும் தண்ணீருக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

6. ஊர்வனவற்றின் காலம்

ஏராளமான உயிரினங்கள் தோன்றிய நிலக்கரி படிவ காலத்தைத் தொடர்ந்து, விரிவான சுழற்சியைக் கொண்ட வறண்ட மற்றும் நெருக்கடிகள் மிகுந்த காலம் நிலவியது. பாறைகளின் படிவுகளில் இவை அடர்த்தியான மணற்கற்களாகப் படிந்திருக்கின்றன. இவற்றுடன் ஒப்பிடுகையில் புதை படிவங்கள் குறைவாகவே இருக்கின்றன. உலகின் தட்ப வெப்ப நிலை இந்தக் காலகட்டத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டிருக்கும். பனிப்பாறைகளின் கடுங்குளிர் நீண்ட காலத்துக்கு நிலவியது. முன்பு அதிக அளவில் காணப்பட்ட சதுப்பு நிலம் மறைந்து அவற்றின் மீது மேலடுக்காக இப்புதிய படிவங்கள் பரவத் தொடங்கியிருக்கும். அழுத்தம் மற்றும் கனிமமயமாக்கல் செயல்முறை காரணமாகவே, இன்றைக்கு உலகளவில் நிலக்கரிப் படிவங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

மாற்றம் நிகழும் காலங்களில்தான் வாழ்க்கை மிக வேகமான திருத்தங்களுக்கு உட்படுகிறது. மதிப்புமிக்க பாடங்களையும் துன்பங்களின்போதுதான் கற்றுக் கொள்கிறது. மிதமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்துக்குத் திரும்பும்போது புது வகை விலங்குகள் மற்றும் தாவர வடிவங்கள் இருப்பதைக் காண்கிறோம். முட்டையிடும் முதுகெலும்புள்ள விலங்குகளின் எச்சங்களைப் பார்க்கிறோம். முட்டையிட்டுத் தலைப்பிரட்டைகளாகக் பொரித்துச் சில காலம் தண்ணீரில் வாழ்வதற்கு பதிலாக, பிறந்த உடனேயே சுயமாக நிலத்தில் சுவாசிக்கும் வகையில் சிறிய வடிவில் அதே உருவத்துடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் வளர்ச்சியை உயிரினங்கள் பெற்றன. செவுள்கள் முற்றிலுமாக அறுக்கப்பட்டு, புதிய செவுள் பிளவுகள் ஆரம்ப நிலையிலேயே காணப்பட்டன. தலைப்பிரட்டை நிலையில் பிறக்காத உயிரினங்களே ‘ஊர்வன’ என்றழைக்கப்பட்டன.

அதே நேரத்தில் சதுப்பு நிலங்களிலோ, ஏரிகளிலோ, விதைகளைப் பரப்பும் மரங்களின் வளர்ச்சியும் காணப்பட்டது. புல் வகைகள், பரணி என்னும் செடி வகைகள், ஏராளமான பூச்சிகள், வண்டுகள், பனை போன்ற செடிகள், வெப்ப மண்டல ஊசியிலை மரங்கள் தோன்றின. பூக்கும் தாவரங்கள், தேனீக்கள், பட்டாம் பூச்சிகள் இன்னும் தோன்றவில்லை. புதிய நிலப்பரப்பில் விலங்கு மற்றும் தாவர இனங்களுக்கான அடிப்படை வடிவங்கள் இக்காலத்தில் அமையப் பெற்றன. புதிய நிலத்தில் செழிக்கவும் வாழவும், சாதகமான சூழல் நிரம்பிய வாய்ப்பு மட்டுமே இவற்றுக்குத் தேவைப்பட்டன.

பல்வேறு காலங்கள் தொடர்ச்சியாகத் தோன்றி மறைய, ஏராளமான ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகே, தட்பவெப்ப நிலையின் தீவிரம் கொஞ்சம் தணிந்தது. பூமி மேற்பரப்பின் கணக்கிட முடியாத நகர்வுகளும், சுற்றுப் பாதை மாற்றங்களும், சுற்றுப்பாதை மற்றும் துருவத்தின் பரஸ்பர சாய்வு அதிகரிப்பும் குறைவும், இணைந்து புதிய தட்பவெப்ப நிலைகளை உண்டாக்கின. இந்த மிக நீண்ட காலம், சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. முந்தைய பேலியோஜோயிக் (Palaeozoic) மற்றும் அஜோயிக் (Azoic) காலங்களிலிருந்து (மொத்தம் 1400 மில்லியன் ஆண்டுகள்) முற்றிலும் வேறுபடுத்தப்பட்டு இது மேஸோஜோயிக் (Mesozoic) காலம் என்றழைக்கப்பட்டது. இக்காலத்தின் முடிவு மற்றும் தற்போதைய காலத்தின் தொடக்கத்துக்கு இடைப்பட்டதே கெயினோஜோயிக் (Cainozoic) அல்லது புது வாழ்க்கைக் காலமாகும். இதன் அதிசயப்பட வைக்கும் ஆதிக்கம் மற்றும் பல்வகை வடிவங்கள் காரணமாக ‘ஊர்வன (Reptiles) காலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இக்காலம் முடிவுக்கு வந்தது.

இன்றைய உலகில் ஊர்வன வகைகள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு என்பதுடன் அவற்றின் பரவலும் குறைவே. ஆனால், ஒரு காலத்தில் அதாவது நிலக்கரிக் காலத்தில் (Carboniferous Period) ‘உலகை ஆண்ட’ அமீபா இனக்குடும்பத்தில் நீரிலும், நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்களுள் தப்பிப் பிழைத்தவற்றைவிட அவை அதிகம்தான். பாம்புகள், ஆமைகள், முதலைகள், பல்லிகள் என பலவும் இன்றும் உயிர் வாழ்கின்றன. விதிவிலக்கின்றி, இவை அனைத்துக்கும் வருடம் முழுவதும் வெதுவெதுப்பான தட்பவெப்ப நிலை தேவை. இவற்றால் குளிர்ப் பிரதேசங்களில் வாழ முடியாது. மெஸோஜோயிக் (Mesozoic) காலத்தில் வாழ்ந்த அனைத்து ஊர்வனங்களுக்கும் இதே பிரச்னை இருந்தது. இது, வெப்ப நிலத் தாவரங்களுடன் வாழ்ந்த வெப்ப நில விலங்குகள். உறைபனியைத் தாங்கும்திறன் அதற்கில்லை. பூமியின் முந்தைய காலத்திலிருந்த சேறு மற்றும் சதுப்பு நில விலங்கினங்களிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் வேறுபடும் வகையில், உண்மையான உலர் நிலை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் உலகில் இந்தக் காலகட்டத்தில் தோன்றின.

பாம்புகள், ஆமைகள், முதலைகள், பல்லிகள் என இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் அனைத்து வகையான ஊர்வனங்களின் பிரதிநித்துவமும் அப்போது ஏராளமாக இருந்தன. ஆனால் இவற்றுடன் வாழ்ந்த வேறு பல அதிசய மற்றும் அரிதான விலங்குகள் இப்போது பூமியில் முற்றிலுமாக அழிந்துவிட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது டைனசோர் (Dinosaur) என்னும் பிரம்மாண்ட விலங்கினம். நாணல்கள், செடி வகைகள் என தாவரங்கள் பூமியில் பரவலாக விளையத் தொடங்கின. தாவரங்களை உண்டு வாழும் பல்வகை ஊர்வன தோன்றின. மெஸோஜோயிக் காலம் முடிவுறும் தருணத்தில் இவற்றின் உருவங்களும் அளவில் பெரிதாகத் தொடங்கின. இவற்றின் உருவங்கள் நிலத்தில் வாழும் வேறெந்த விலங்கைவிடவும் அளவில் பிரம்மாண்டமாக விளங்கின. தோற்றத்தில் திமிங்கிலத்தைப்போல் இருந்தது. டைனசோரில் ஒரு வகையான டிப்ளோடோகஸ் கார்னெகி (Diplodocus Carnegii) அதன் மூக்கு நுனியிலிருந்து வால் நுனி வரை சுமார் 84 அடி நீளம் இருந்தது. இன்னொரு வகையான ஜைஜாண்டோசாரஸ் (Gigantosaurus) நீளம் 100 அடிக்கும் அதிகம். இவற்றை வேட்டையாடி உண்ணும் டைனசோர்களும் அதாவது ஊன் உண்ணி டைனசோர்களும் அதே பிரம்மாண்டத்துடன் வாழ்ந்தன. மிகவும் பயங்கர மற்றும் மூர்க்கத்தனம் மிக்க ஊர்வன என்ற அச்சுறுத்தலுடன், டைரனோசாரஸ் (Tyrannosaurus) பற்றிய குறிப்புகள் பாடப் புத்தகங்களில் விவரிக்கப்பட்டன.

மேற்கூறிய பிரம்மாண்ட உயிரினங்கள் மெஸோஜோயிக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், நீண்ட முன்கைகளுடன், வௌவால் போன்றவை, ஒன்றையொன்று உண்டு வாழ்ந்தன. இவை தற்போது முற்றிலுமாக அழிந்துபோய்விட்டன. இது தொடக்கத்தில் துள்ளிக் குதித்தும், பின்னர் பறவை போல் மரங்களுக்கு இடையேயும் பறந்தன. இவ்வகை உயிரினங்களுக்கு டெரோடாக்டைல் (Pterodactyl) என்று பெயர். இதுவே முதுகெலும்புள்ள முதல் பறவை இனவகையாகும். முதுகெலும்புள்ள வாழ்க்கையின், வளரும் ஆற்றலுக்கான முதல் சாதனைக் குறியீடும் இவையே.

ஊர்வனவற்றுள் சில கடலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. மொசோசார்ஸ் (Mososaurs), ப்ளேசியோசார்ஸ் (Plesiosaurs) மற்றும் இஸ்தையோசார்ஸ் (Ichthyosaurs) ஆகிய மூன்று பிரம்மாண்ட ஊர்வனக் குழுக்களின் முன்னோர்கள் கடலுக்குள் மீண்டும் தஞ்சம் புகுந்தன. இவற்றுள் சில தற்போதைய திமிங்கிலங்களைப் போலிருந்தன. இவற்றுள் இஸ்தையோசார்ஸ் கடல்வாழ் உயிரினங்களாக கருத்தப்பட்டன. ஆனால் ப்ளேசியோசார்ஸ் என்னும் ஒரு வகை விலங்குக்குத் தற்போது உடன்பிறப்பு யாருமில்லை. சிறிய கழுத்துடன், உடல் தடிமனாகவும், பிரம்மாண்டமாகவும், தண்ணீரில் நீந்துவதற்கும், சதுப்பு நிலங்களில் தவழ்வதற்கும், வசதியாகத் துடுப்புகளைக் கொண்டிருந்தன. இவை நீரில் நீந்தி உணவைத் தேடி அலையும் அல்லது தண்ணீருக்கு அடியில் பதுங்கிக் கொணடு, அக்கம் பக்கம் செல்லும் மீனையோ விலங்கையோ பிடித்து உண்ணும்.

மெசோஜோயிக் காலம் முழுவதும் முக்கியமான நில வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. முக்கியம் என்று சொல்லத்தக்க, இவ்வுலகம் இதற்கு முன் கண்டிராத வகையில், மிகப் பெரிய அளவு, வகை, ஆற்றல், செயல் திறன் கொண்ட விலங்குகள் நிலத்தில் உருவாகின. இதுபோன்ற வளர்ச்சி கடலில் ஏற்படவில்லை. வாழ்க்கையின் புதிய வடிவங்களின் பெருக்கம் ஏற்பட்டது. அமோனைட் (Ammonite) என்னும் அறைகளுடன் கூடிய ஓடுகளைக் கொண்ட மீன் வகை உயிரினங்கள் ஆழமற்ற கடல் பகுதிகளில் தோன்றின. பேலியோஜோயிக் (Palaeozoic) கடல்களில் இவற்றுக்கான முன்னோடிகள் இருந்தன. ஆனால் தற்போது அனைத்தும் கடந்த காலமாகிவிட்டன. அவற்றில் தப்பிப் பிழைத்த உயிரினங்கள் இப்போது ஏதுமில்லை. வெப்ப மண்டல நீரில் வசிக்கும் நௌடிலஸ் (Nautilus) அவற்றின் நெருங்கிய உறவு. அதுவரை காணப்பட்ட தகடு மற்றும் பல் போன்ற செதில்களுக்குப் பதிலாக, எடை குறைந்த நேர்த்தியான செதில்களைக் கொண்ட, புதிய மற்றும் வளமான ஒருவகை மீன் உருவானது. இது, கடல்களிலும், ஆறுகளிலும் பெற்ற முக்கியத்துவம் இன்னும் தொடர்கிறது.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *