Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #6

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #6

11. உண்மையான முதல் மனிதர்கள்

அறிவியலுக்குத் தெரிந்தவரை மனித இனத்தின் தொடக்க கால அறிகுறிகள் மற்றும் தடயங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி மேற்கு ஐரோப்பாவிலும், குறிப்பாக ஃபிரான்ஸிலும், ஸ்பெயினிலும், காணப்பட்டன. இவ்விரு நாடுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலும்புகள், ஆயுதங்கள், பாறைகள் மீதான கீறல்கள் மற்றும் குகை ஓவியங்கள் ஆகியவற்றின் காலம் சற்றேறக் குறைய 30,000 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். நிஜ மனித மூதாதையர்களின் முதல் நினைவுச் சின்னங்கள் அதிக எண்ணிக்கையிலுள்ள நாடு என்னும் பெருமையை ஸ்பெயின் பெறுகிறது (இந்நூல் முதல் பதிப்பு வெளியான ஆண்டான 1922-ன் படி).

அனைத்துச் சாத்தியமான ஆதாரங்களையும் முழுமையாக ஆய்வு செய்யப் போதிய ஆய்வாளர்கள் உள்ள நிலையில், இந்த விஷயங்களின் தற்போதைய சான்றுகள், எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடிய பல தடயங்களின் வெறும் ஆரம்பம் மட்டுமே. இப்போது தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியிருக்காத உலகிலுள்ள ஏனைய நாடுகளில் ஆய்வுகள் நடக்கும்போது மேலும் பல புதிய சான்றுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த விஷயங்களில் ஆர்வமுள்ள மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளப் போதிய பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் கூட, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிகளுக்கு, இதுவரை இன்னும் பயணம் மேற்கொள்ளவில்லை. எனவே உலகின் பண்டைய உண்மை மனிதர்கள் மேற்கு ஐரோப்பாவின் தனித்துவமான பூர்வகுடிகள் என்றோ, அந்தப் பிராந்தியத்தில்தான் அவர்கள் முதலில் தோன்றினார்கள் என்றோ முடிவுக்கு வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஆசியா அல்லது ஆப்பிரிக்கா அல்லது இன்றைக்குக் கடலுக்குள் மூழ்கிய பகுதிகளில், இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மையான மனிதனின் எச்சங்களின் முந்தைய படிவுகள் இருக்கக் கூடும். ‘ஆசியா அல்லது ஆப்பிரிக்கா’ என்றுதான் நான் குறிப்பிடுகிறேனே தவிர ‘அமெரிக்கா’ என்று சொல்லாததற்குக் காரணம், இதுவரை ஒரேயொரு ‘பல்’ மட்டுமே அங்கு கிடைத்துள்ளது. இதைத் தவிர மனிதர்கள், குரங்குகளை உள்ளடக்கிய பேரின விலங்குகள், பெரிய வாலில்லாக் குரங்குகள், மனிதக் குரங்குகள், நியாண்டெர்தாலர்கள் அல்லது பண்டை உண்மை மனிதர்கள் யாருமே கண்டெடுக்கப்படவில்லை. இந்த உயிரின வளர்ச்சி என்பது பிரத்யேக பழைய உலக வளர்ச்சி ஆகும். பழைய கற்கால இறுதியில்தான் மனிதன் முதல் முதலில் நிலப்பரப்பில் தடம் பதித்தான். அமெரிக்க கண்டத்துடன் இணைந்த இந்நிலப்பரப்பைத் தற்போது பெஹ்ரிங்க் ஜலசந்தி (Behring Straits) துண்டித்துள்ளது.

ஐரோப்பாவின் நாமறிந்த முதல் உண்மையான மனிதர்கள், குறைந்தபட்சம் இரு வித்தியாசமான உயிரினங்களின் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பது ஏற்கெனவே தெரிய வந்துள்ளது. இரண்டில் ஒன்று மிக உயர் வகை உயிரினமாகும். உயரமாகவும், பெரிய அளவிலான மூளையையும் கொண்டிருந்தனர். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு, இன்றைய சராசரி ஆணின் மண்டை ஓட்டை விடவும் பெரியது. ஆணின் எலும்புக் கூட்டின் உயரம் ஆறடிக்கும் அதிகம். உடலமைப்பு வகை வட அமெரிக்க இந்தியரைப் போலிருந்தது.

இவ்வகை மனிதர்களின் எலும்புக் கூடுகள் முதன் முதலில் க்ரோ-மேக்னன் (Cro-Magnon) குகைகளில் காணப்பட்டதால் இவை க்ரோ-மேக்னார்ட்ஸ் என்றழைக்கப்படுகின்றன. அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றாலும் உயர் பிரிவினர். க்ரிமால்டி (Grimaldi) குகைகளில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் வகை உயிரினங்களின் எலும்புக் கூடுகள், நீக்ரோயிட் குணங்களைக் கொண்டிருந்தன. தற்போது தென் ஆப்பிரிக்காவில் வாழும் புஷ்மென் (Bushmen) மற்றும் ஹாட்டெண்டாட்ஸ் (Hottentots) இனத்தினரின் நெருங்கிய சாயல் இவர்களுக்குண்டு.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், மனித வரலாற்றில் மனித இனம் ஏற்கெனவே இரு பெரும் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்பதுதான். இதன் காரணமாக, முதல் இனம் கருப்பு நிறமின்றிப் பழுப்பு நிறுத்தில் கிழக்கு அல்லது மேற்கிலிருந்து வந்ததென்றும், மற்றொரு இனம் பழுப்பு நிறமின்றிக் கருப்பு நிறத்தில் நடுநிலக் கோட்டுக்குத் தெற்கிலிருந்து வந்ததென்றும், தேவையற்ற யூகங்களுக்கு ஒருவர் ஆசைப்படலாம்.

இவ்வகைக் காட்டுமிராண்டிகள் சற்றேறக் குறைய 40,000 ஆண்டுகளுக்கு முந்தையவர்கள். எலும்புகளிலும் கற்களிலும் வடிவங்களைச் செதுக்கியும், பாறைகளில் உருவங்களைக் கீறியும், குகைகளின் சுவர்களில் விலங்குகளின் சித்திரங்களைத் தீட்டியும் வாழ்ந்தனர்; மனிதர்களைப் போலவே கிளிஞ்சல்களைக் குடைந்து மாலைகளாக அணிந்தும், பல்வேறு வண்ணங்களைக் குழைத்து உடலெங்கும் பூசியும் வாழ்ந்தனர். நியாண்டெர்தாலர்களை விடவும், சிறிய அளவிலான ஆனால் கூர்மையான பல ஆயுதங்களைத் தயாரித்தனர். இவர்கள் உருவாக்கிய ஆயுதங்கள், செதுக்கிய சிற்பங்கள், பாறை ஓவியங்கள் ஆகியவற்றை அருங்காட்சியகத்தில் காணலாம்.

இவ்வகைக் காட்டுமிராண்டிகள் ஆரம்பத்தில் வேட்டைக்காரர்களாக விளங்கினர். தாடியுடன் கூடிய முரட்டுக் மட்டக் குதிரையே இவர்கள் வேட்டையாடும் முக்கிய விலங்காக இருந்தது. மேய்ச்சல் இடங்களைத் தேடி முரட்டுக் குதிரையும் காட்டெருமையும் அலைந்தபோது, இவர்களும் அவற்றைப் பின்தொடர்ந்தனர். மாமூத் என்னும் பிரம்மாண்ட யானையின் உருவ அமைப்பும், அவற்றை மிகப் பெரிய பள்ளம் வெட்டிப் பிடித்துக் கொல்வதும், அவர்கள் தீட்டிய பாறை ஓவியங்கள் மூலமே நமக்குத் தெரிய வருகின்றன.

ஈட்டிகள் மற்றும் கற்களை எறிந்து வேட்டையாடினார்கள். வில் வித்தை கற்றதற்கான சான்றுகள் இல்லை. விலங்குகளைக் குறிப்பாக நாய்களைப் பழக்கிய விவரங்களும் இல்லை. குதிரைத் தலை செதுக்கப்பட்ட பாறையும், கடிவாளம் மற்றும் கழுத்தில் தசை நார் பூட்டிய இரு குதிரைகளின் ஓவியங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வயதிலும், உருவத்திலும் சிறிய மட்டக் குதிரைகளால் மனிதர்களைச் சுமந்திருக்கமுடியுமா என்பது சந்தேகமே. ஒருவேளை வீட்டுப் பிராணியாக வேறு பணிகளுக்காக வளர்த்திருக்கலாம். விலங்குகளின் பாலை உணவாக அருந்தும் பழக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை.

கட்டடங்கள் எழுப்பியதற்கான அடையாளங்கள் கிடைக்கவில்லை. மாறாகத் தோலினாலான கூடாரங்களை அமைத்து வாழ்திருக்கின்றனர். களிமண் உருவங்கள் கிடைத்த அளவுக்கு ஒரு பானைகூடக் கிடைக்கவில்லை. சமையல் கருவிகள் ஏதுமில்லாததால், சமைக்கும் பழக்கமின்றி பச்சையாகவே சாப்பிட்டிருக்க வேண்டும். விவசாயம், கூடை முடைதல், ஆடை நெய்தல் ஆகியவற்றுக்கான வாய்ப்பில்லை. குளிரைச் சமாளிக்க மிருகங்களின் தோல் மற்றும் ரோமங்களை அணிந்திருக்கலாம்; மற்றபடி அனைத்து ஓவியங்களிலும் நிர்வாணமாகவே காட்சி அளித்தனர்.

பல நூறு நூற்றாண்டுகளாக ஐரோப்பியப் புல்வெளிகளில் வேட்டையாடிக் கொண்டிருந்த ஆதிமனிதர், தட்பவெப்ப நிலை மாறுவதைத் தொடர்ந்து இடம் பெயர்ந்தார். ஐரோப்பாவும் ஒவ்வொரு நூற்றாண்டாக மிதமானதாகவும் ஈரத்தன்மை கொண்டதாகவும் மாறிக்கொண்டிருந்தது. கலைமான்களும், காட்டெருமைகளும், குதிரைகளும் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கிப் பின்வாங்கத் தொடங்கின. பசுமையான புல்வெளிகள் மறைந்து காடுகளாக மாறக், குதிரைகள் மற்றும் காட்டெருமைகள் வாழ்விடங்களைச் சிவப்பு மான்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. மனிதன் தயாரித்த கருவிகளின் உருவமும், பயன்பாடும், காலத்துக்கேற்ப மாறுதலுக்கு உள்ளாகின. எலும்புகளைக் கூர்மையான ஆயுதங்களாக்கி ஏரிகளிலும், குளங்களிலும், மீன் பிடித்தனர். ‘அவர்கள் தயாரித்த எலும்பு ஊசிகள், பிந்திய காலங்களை விடவும், மறுமலர்ச்சிவரையிலான வரலாற்றுக் காலங்களை விடவும், உயரிய தரத்தில் இருந்தன. இன்னும் சொல்வதென்றால் ரோமானிய காலத்தை விடவும் இவர்களது எலும்பு ஊசிகள் தரத்தில் உயர்ந்திருந்தன’ என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் டி மார்டிலெட்.

சற்றேறக்குறைய 12,000 அல்லது 15,000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினுக்குத் தெற்கே இடம் பெயர்ந்த மக்கள் தங்களின் உருவங்களை அங்குள்ள பாறைகளில் செதுக்கிவைத்தனர். இவை மஸ் டி அஸில் (Mas d’Azil) குகை என்னும் பெயரைக்கொண்டு அசிலியன்ஸ் (Azilians) என அழைக்கப்படுகின்றன. தெளிவாக வரையக் கற்றிருந்தனர். அதே சமயம் ஏதோவொரு குறியீட்டுடனும் – மனிதனைக் குறிக்கச் செங்குத்தாக ஒரு கோடும், குறுக்காக இரண்டு அல்லது மூன்று கோடுகளையும் வரைந்தனர். எண்ணத்தை எழுத்தாகப் பதிவு செய்வதன் தொடக்கமாக இதைக் கொள்ளலாம். வேட்டையாடும் மனிதனைச் சுட்டிக்காட்டவும் சில குறியீடுகளை வைத்திருந்தனர்.

கைகளில் வில் அம்புகளுடன் தலையில் இறகுகளாலான தலைப்பாகையை அணிந்திருந்தனர். தேன் கூட்டிலிருந்து தேனை எடுக்கத் தேனீக்களை விரட்டுவதற்காக இருவர் புகை போடுவதுபோல் இன்னொரு ஓவியம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

செதுக்கப்பட்ட கருவிகள் இருந்ததால், நாம் அழைக்கும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த பேலியோலிதிக் (Palaeolithic) மனிதர்களில், இவர்களே சமீபத்தியவர்கள். 10,000 அல்லது 12,000 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் புது வகை வாழ்க்கை உதயமானது. கருவிகளைத் தயாரிக்கக் கற்களைச் செதுக்கவும், அரைக்கவும், பளபளப்பாக்கவும் கற்றுக்கொண்டனர். விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டனர். மொத்தத்தில் இதை நியோலித்திக் (Neolithic) அதாவது புதிய கற்காலம் தொடங்கியதற்கான அறிகுறியாகவும் கொள்ளலாம்.

ஒரு நூற்றாண்டு முன்புவரைகூட, உலகின் தொலைதூரப் பகுதியான டாஸ்மேனியாவில் (Tasmania) மனித இனம் வாழ்ந்த்தற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்பது ஆச்சரியமான விஷயம். தடையங்களை விட்டுச் சென்ற ஐரோப்பாவின் முந்தைய மனித இனங்களைவிடவும், உடல் அளவிலும், மன வளர்ச்சியிலும் சற்றே குறைந்த மனிதர்களாக விளங்கினர். புவியியல் மாற்றங்கள் காரணமாக டாஸ்மேனியா மக்கள் ஏனைய உயிரினங்களிடமிருந்து நீண்ட காலத்துக்கு முன்பே எந்த வகையான தூண்டுதலோ, முன்னேற்றமோ இல்லாமல் பிரித்துவிடப்பட்டிருந்தனர். அவர்கள் வளர்ந்து பெருகாமல் அழிவை நோக்கிச் சென்றிருக்கக்கூடும். ஐரோப்பிய ஆய்வாளர்கள் அவ்வின மக்களைக் கண்டுபிடித்தபோது மட்டி என்றொரு வகை மீனை உட்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர். குடியிருப்புகள் ஏதுமின்றி கூட்டமாக அமர்வதற்கான மட்டும் இடங்கள் இருந்தன. நமது இனத்தின் உண்மையான மூதாதை மனிதர்கள் இவர்களே. ஆனாலும் முதல் உண்மையான மனிதர்களிடம் இருந்த கைத்திறனோ, கலை ஆற்றலோ இவர்களிடம் காணப்படவில்லை.

12. பழைமையான சிந்தனை

தற்போது நாம் மிக சுவாரஸ்யமான யூகத்தில் ஈடுபடுவோம். மனித சாகஸப் பயணத்தின் தொடக்ககாலங்களில் மனிதனாக இருப்பது எப்படி உணரப்பட்டது? விதைகளும், விளைச்சலும் ஆரம்பமாவதற்கு 400 நூற்றாண்டுகளுக்கு முன்பு, காட்டில் வேட்டையாடுவது பற்றியும் அலைவது குறித்தும், மனிதன் எப்படி மற்றும் என்ன எண்ணியிருப்பான்? எந்த வகையான மனிதத் தடயங்களும் எழுத்துபூர்வமாகப் பதிவாவதற்கு முந்தைய காலகட்டம் என்பதால், இக்கேள்விகளுக்கான நமது பதில்கள் அனைத்தும் அனுமானம் மற்றும் யூகங்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும்.

ஆதிகால மனநிலையை மறுகட்டமைக்க ஆதாரங்களைத் தேடிச் சென்ற விஞ்ஞானிகளின் ஆய்வுமுயற்சிகள் பல்வகையானவை. சமூகத்தின் தேவைகளை ஏற்றுக்கொள்ளும் வகையில், குழந்தைகளின் தன்முனைப்புகளும், உணர்ச்சித் தூண்டுதல்களும், எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன, அழுத்தப்படுகின்றன, மாற்றப்படுகின்றன எனபன குறித்த பகுப்பாய்வே உளவியல் பகுப்பாய்வு அறிவியல். இது ஆதி சமூக வரலாறு குறித்து அறிந்து கொள்ள நமக்குக் கணிசமாக உதவுகிறது. மற்ருமொரு ஆலோசனை தற்போது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் சமகாலக் காட்டுமிராண்டிகளின் எண்ணங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்த ஆய்வு. இது ஒருவகை தொல்மன எச்சங்களின் ஆய்வு போன்றது. இந்த நாட்டுப்புறவியலையும் ஆழமான பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளையும் முன்கூட்டியே முடிவெடுக்கும் பாங்கையும் இன்றைய நவீன நாகரிக மனிதர்களிடமும் காணலாம். நிறைவாக நம்மிடமுள்ள ஏராளமான படங்கள், சிலைகள், சிற்பங்கள், சின்னங்கள் ஆகியவற்றில் மனிதன் சுவாரஸ்யமாகக் கண்ட மற்றும் பதிவு செய்யத்தக்கத் தகுதியுள்ள, தெளிவான, குறியீடுகள் இருக்கின்றன.

தொடர்ச்சியாகப் படங்களைக் கற்பனை செய்துகொண்டு குழந்தை எவ்வாறு சிந்திக்கிறதோ அவ்வாறே பழங்கால மனிதரும் சிந்தித்தார். மனத்தில் பதிந்த உருவங்கள் அல்லது பல உருவங்களைக் கற்பனை செய்துகொண்டு, தூண்டப்பட்ட உணர்வுகளுக்கேற்ப நடந்து கொண்டார். அவரது நடத்தை இன்றைய குழந்தை அல்லது கல்வியறிவு இல்லாதவரைப் போலிருந்தது. முறையான சிந்தனை என்பது மனித அனுபவத்தின் பிந்தைய வளர்ச்சியே.

மனித வாழ்க்கையில் கடந்த 3000 ஆண்டுகள்வரை மிகப் பெரிய பங்களிப்பை அது வழங்கவில்லை. இன்றைக்கும்கூடத் தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆளுமை செய்வோர் மனித இனத்தின் சிறு பகுதியினரே. உலகின் பெரும்பான்மை மக்கள் இன்னும் வேட்கை மற்றும் கற்பனையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையான மனித வரலாற்றின் தொடக்க நிலைகளில், ஆரம்பகால மனித சமூகங்கள், சிறு குடும்பக் குழுக்களாகவே இருந்தன. குடும்பங்களாக ஒன்றாக இருந்து இனவிருத்தி செய்த முந்தைய பாலூட்டிகளின் கூட்டங்கள் மற்றும் மந்தைகளைப்போலவே பழங்கால மனிதரும் வாழ்ந்தனர். ஆனால் இது நடப்பதற்கு முன், தனிநபர் சார்ந்த பழங்குடித் தன்முனைப்புகள் மீதான கட்டுப்பாடுகளும், தந்தை மீது அச்சமும் தாய் மீது மரியாதையும் நீண்டு நீடித்தது.

குழுவிலிருக்கும் முதியவருக்கு, வளரும் இளம் ஆண்களின் மீது ஏற்படும் இயற்கையான பொறாமை தணிக்கப்பட வேண்டியிருந்தது. இளம் வயதினரின் இயற்கையான பாதுகாவலராகவும் ஆலோசகராகவும் தாய் விளங்குகிறார். ஒருபக்கம் தாயிடமிருந்து (குடும்பத்திடமிருந்து) பிரிந்து சென்று தனக்கான துணையைத் தேடிக்கொண்டு வாழ்வது; மறுபக்கம் இப்பிரிவு காரணமாக ஏற்படும் அபாயங்கள், பாதகங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குடும்பமாக வாழ்வது என்ற இளைய மனங்களின் பக்குவமற்ற இருவகை சிந்தனைகளுக்கான எதிர்வினையாகவே மனித சமூக வாழ்க்கை பரிணமித்தது. மானுடவியல் எழுத்தாளரும், அறிஞருமான, ஜே ஜே அட்கின்சன் தான் எழுதிய ‘பிரைமல் லா’ (Primal Law) என்னும் காட்டுமிராண்டி வாழ்க்கை பற்றிய நூலில், காட்டுமிராண்டிகளின் பாரம்பரியச் சட்டமான ‘விலக்கப்பட்டவை’ (Tabus) குறித்து விளக்கியுள்ளார். பழங்கால மனித விலங்கின் தேவைகளுக்கேற்ப, மனதளவில் சரி செய்து கொள்ளும், வளரும் சமூக வாழ்க்கை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சாத்தியக்கூறுகள் தொடர்பான அவரது விளக்கங்களைப் பின்னர் வந்த மனநல ஆய்வாளர்கள் அதிகமாகவே உறுதிப்படுத்தி உள்ளனர்.

மூத்த மனிதர்கள் மீது மரியாதை கலந்த அச்சத்தையும் வயது முதிர்ந்த பெண்களிடம் உணர்ச்சிகரமான எதிர்வினையையும் ஆதி காட்டுமிராண்டிகள் செலுத்தினர். இந்த உணர்வுகள், எண்ணங்கள் கனவுகளினால் மிகைப்படுத்தப்பட்டன; கற்பனை மன விளையாட்டினால் வளர்த்தெடுக்கப்பட்டன; ஆதி மதத்தின் தொடக்கத்திலும், இறைவன் இறைவி கருத்துருவாக்கத்திலும் இவை முக்கிய அங்கம் வகித்தன என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவற்றுடன் இத்தகைய பயமும், மேன்மையும், ஆற்றலும், உதவும் குணமுள்ள ஆளுமை கொண்ட மனிதர்கள் மரணத்துக்குப் பின்பும், கனவுகளில் தோன்றிய சம்பவங்களும் இணைந்தன. எனவே, அவர்கள் உண்மையிலேயே இறக்கவில்லை; எட்டமுடியாத பிரமாண்ட சக்தி ஒன்றுடன் இணைந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உருவானது.

குழந்தையின் கனவுகள், கற்பனைகள், அச்சங்கள் ஆகியவை தற்காலப் பெரியவர்களை விடவும் தெளிவானவை மற்றும் உண்மையானவை. ஆதி பழங்கால மனிதர் எப்போதும் இந்தக் குழந்தையைப் போலவே இருந்தார். விலங்குநிலைக்கு மிகவும் அருகில் இருந்தார். விலங்குகளும் தமக்கான சிந்தனைகளும் நோக்கங்களும் எதிர்வினைகளுக்கும் கொண்டவையாக இருப்பதாக நம்பினர். விலங்கு உதவியாளர்கள், விலங்கு எதிரிகள், விலங்கு கடவுள்கள் என அவர்கள் கற்பனை செய்தனர். பழைய கற்கால மனிதர்களுக்கு விநோத வடிவம் கொண்ட பாறைகள், மரக்கட்டைகள், வித்தியாசமான மரங்கள் ஆகியவை எவ்வளவு முக்கியமாகவும், நட்பாகவும் தோன்றியிருக்க வேண்டும் என்பதை உணர, நிச்சயம் கற்பனை உணர்வுள்ள குழந்தையின் மனநிலை இருப்பது அவசியம்.

மேலும், இவை குறித்து கனவுகளிலும், கற்பனைகளிலும், புனையப்பட்ட கதைகளிலும், கதை மாந்தர்கள் நம்பத் தகுந்தவையாக உருமாறினர். இக்கதைகளில் சில நினைவுபடுத்திக்கொண்டு மீண்டு சொல்லத் தக்கவையாக இருந்தன. பெண்கள் இக்கதைகளை அவர்களது குழந்தைகளுக்குக் கூறி ஒரு பாரம்பரியத்தை உருவாக்கினார்கள். இன்றுவரை பெரும்பான்மைக் குழந்தைகள் பிடித்தமான பொம்மை அல்லது மிருகம் அல்லது அரை-மனிதனைக் கதாநாயகனாக உருவகப்படுத்திக், கற்பனையாக பல நீண்ட கதைகளைக் கண்டுபிடிக்கின்றனர். பழங்கால மனிதரும் தனது கதாநாயகன் உண்மையானவன் என்பதை நம்ப வைக்க, இன்னும் வலுவான மனநிலையில் இதையேதான் செய்தார்.

நாம் அறிந்தவரை, உண்மையான ஆதி பழங்கால மனிதர்கள், அநேகமாக எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கும் இனத்தினரே. அந்த வகையில் அவர்கள் நியாண்டெர்தாலெர்களிடமிருந்து வேறுபட்டதுடன், உயர்ந்த நிலையிலும் இருந்தனர். நியாண்டெர்தாலெர் மனிதர் ஊமையாக இருந்திருக்கக்கூடும். ஆதி பழங்கால மனிதனின் பேச்சு தொடர்ச்சியாக இல்லாமல், குறைவான பெயர்களுடன் மிக அதிக அளவில் சமிக்ஞைகள் மற்றும் சைகைகளின் வெளிப்பாடகவே இருந்தது.

காரண காரிய விளைவை அடிப்படையாகக்கொண்ட ஒரு சிந்தனைப் போக்கு இல்லாத மோசமான காண்டுமிராண்டித்தனம் என எதுவுமில்லை. ஆனால் காரண காரியத் தொடர்பு குறித்து பழங்கால மனிதர் பெரிதாக அக்கறை கொண்டிருக்கவில்லை. ஏதோவொரு தவறான காரணத்துடன் மிக எளிதாக விளைவை இணைத்துக்கொண்டுவிடுவார். ‘நீ இப்படி இப்படிச் செய்தால் …. பிறகு அப்படி அப்படி நடக்கும்’ என்பார். உதாரணமாக, குழந்தையிடம் ஒரு விஷ பெர்ரி பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால், அது இறந்துவிடும் என்பது ஒரு காரண காரியச் சிந்தனை. வீரமுள்ள எதிரியின் இதயத்தை உண்டால், நீ வலிமை பெறுவாய். இது இன்னொரு சிந்தனை. ஒன்று சரி. இன்னொன்று தவறு.

ஆதி மனிதரிடம் இருக்கும் இந்தக் காரண காரிய சிந்தனையை மூட நம்பிக்கை என்றழைக்கலாம். ஆனால், இந்த மூடநம்பிக்கை ஆதி மனிதரின் அறிவியல் (பகுத்தறிவு). அமைப்பு சாராததும், விமர்சனமற்றதும், அடிக்கடி தவறாகவும் போகும் என்ற வகையில் நவீன அறிவியலிலிருந்து (சிந்தனைகளிலிருந்து) இது முற்றிலும் மாறுபட்டது.

பெரும்பாலான நேரங்களில் காரணத்தையும் விளைவையும் இணைப்பது கஷ்டமல்ல. தவறான எண்ணங்கள் எல்லாம் அனுபவம் மூலம் விரைவில் சரி செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆதி பழங்கால மனிதருக்குப் பெரிய அளவிலான தொடர் சிக்கல்கள் மிக முக்கியமாக இருந்ததால், காரணிகளைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தார். தவறாக இருந்த விளக்கங்கள், ஆய்வு செய்யும் அளவுக்கு கணிசமாகவும், வெளிப்படையாகவும் இல்லை என்பதையும் புரிந்துகொண்டார். அவரைப் பொறுத்தவரை அனைத்தும் ஏராளமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். மீன்கள் அதிக அளவில் இருப்பதுடன், எளிதாகப் பிடிக்க முடியவும்வேண்டும். எனவே தேவையான இந்த முடிவுகளை உறுதிப்படுத்த அவர் ஆயிரக் கணக்கான மந்திரங்கள், தந்திரங்கள் மற்றும் சகுனங்களை உருவாக்கிக்கொள்ள முயற்சி செய்தார். அவற்றை முழுமையாக நம்பினார் என்பதில் ஐயமே இல்லை.

அவர் மிகவும் கவலைப்பட்ட விஷயங்கள் வியாதி மற்றும் மரணம். எப்போதேனும் பெரும் தொற்றுகள் நிலத்தில் பரவி, அதிக எண்ணிக்கையில் உயிர்களைப் பறிக்கும். எப்போதேனும் நோய்வாய்ப்பட்டு இறப்பதுடன், வெளிப்படையான காரணமின்றிச் செயலிழந்து போவார்கள். ஆதி பழைமை மனிதர், அவசர மற்றும் உணர்வுபூர்வ மனநிலைக்குத் தள்ளப்பட இவையும் காரணமாக இருந்திருக்கலாம். இந்தப் புரிந்துகொள்ள முடியாத காரண காரியங்களுக்கு ஏதோவொரு வலிமை மிகுந்த மனிதர், ஒரு சக்தி, அல்லது ஏதோவொன்றே காரணம் என்று கனவுகள் மற்றும் கற்பனைகள் மூலமாக நம்ப ஆரம்பித்தார். அவற்றிடம் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தேடி மன்றாடவும் ஆரம்பித்தார். ஒரு குழந்தைக்கு இருக்கும் அச்சமும் பீதியும் நிறைந்த உணர்திறனே, இந்த ஆதி மனிதருக்கும் இருந்தது.

சிறிய மனித இனத்தின் ஆரம்ப காலத்தில், முதிர்ந்த மற்றும் உறுதியான மனங்கள், அச்சங்களையும், கற்பனைகளையும், மற்றவர்களைவிட ஆற்றலுடன் பகிர்ந்து கொண்டன. மேலும் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறவும், பரிந்துரைக்கவும், ஆணையிடவும் தங்களைத் தாங்களே உறுதிப்படுத்திக்கொண்டன. பயனற்றது என்றும், கட்டாயம் என்றும், நல்ல சகுனம் என்றும், கெட்ட சகுனம் என்றும் அறிவித்தன. மந்திர தந்திரங்கள் தெரிந்தவரும், மருத்துவருமே முதல் பூசாரி. புத்திமதி சொல்வது, கனவுகளுக்கு விளக்கம் கூறுவது, எச்சரிக்கை விடுப்பது, அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவது, பேரிடரைத் தவிர்ப்பது, சிக்கலான செப்படி வித்தைகள் செய்வது எல்லாம் அவரது வேலை.

இப்போது நாம் காணும் மதத்துக்கு உள்ளது போன்ற நடைமுறையோ அனுசரிப்போ ஆதிகால மதத்துக்கு இல்லை. தொடக்க காலப் பூசாரியின் ஆணைகள் அனைத்துமே, தன்னிச்சையான, ஆதி பழைமையான, நடைமுறை அறிவியல் சிந்தனைகள் மட்டுமே.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

படம்: Viktor Vasnetsov’s 1882–1885 Stone Age

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *