15. சுமேரியா, பண்டைய எகிப்து மற்றும் எழுத்து முறை
புதிய உலகை விடவும், பழைய உலகம் இன்னும் விரிவாகவும், மாறுபட்ட களமாகவும் விளங்கியது. பொ.ஆ.மு.6000-7000லேயே ஓரளவு நாகரிகம் பெற்ற சமூகங்கள் ஆசியாவின் செழிப்பான பிராந்தியங்களிலும், நைல் நதி பள்ளத்தாக்கிலும், நிலவின. வடக்கு பாரசீகம், மேற்கு துர்கிஸ்தான் மற்றும் தெற்கு அரேபியா ஆகியவை இப்போதை விடவும் அப்போது இன்னும் செழிப்பாக இருந்தன. அங்கு வாழ்ந்த ஆரம்ப கால சமூகங்களின் தடயங்கள் இன்றைக்கும் காணப்படுகின்றன.
மெசொபடோமியாவின் கீழ்ப்பகுதியிலும் எகிப்திலும், நகரங்கள், கோயில்கள், விவசாயம் மற்றும் காட்டுமிராண்டித்தனமான கிராம-நகர அளவுகோல்களைத் தாண்டிய நாகரிக, சமூக அமைப்புகள் நிலவியதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மேலும், அக்காலத்தில் யூஃப்ரடீஸ் (Eupharates) மற்றும் டைக்ரீஸ் (Tigris) நதிகள் தனித்தனி முகத்துவாரங்களுடன் பாரசீக வளைகுடாவில் கலந்தன. இரு முகத்துவாரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்தான் சுமேரியர்கள் (Sumerian) தங்களது முதல் நகரங்களை நிர்மாணித்தனர். இதே தருணத்தில்தான் எகிப்தின் மிகப் பெரிய வரலாற்றின் தொடக்கம் ஆரம்பமானது.
நீளமான மூக்கும் பழுப்பு நிறச் சருமமும் கொண்டவர்கள் சுமேரியர்கள். அவர்கள் எழுதிய ஒரு வகை எழுத்தையும், பயன்படுத்திய மொழியையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். வெண்கலத்தின் உபயோகத்தை அறிந்துகொண்டதுடன், சூரிய ஒளியில் சுட்ட செங்கற்களால் கோபுரங்களுடன் கூடிய கோயில்களைக் கட்டியுள்ளனர். எழுதுவதற்குக் களிமண்ணைப் பயன்படுத்தியிருக்கின்றனர். உயரிய களிமண் என்பதால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதில் எழுதிய எழுத்துகள் இன்றைக்கும் பாதுகாப்பாக இருக்கின்றன.
செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், மாடுகள், கழுதைகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்தாலும் ஏனோ குதிரைகள் இல்லை. ஈட்டிகள், கேடயங்களைக் கொண்ட சிறு குழுக்களாகக் காலாட்படையைப் போர்களில் பயன்படுத்தினர். தலையை மழித்துக் கொண்டிருந்தனர்;செம்மறி ஆட்டுத் தோலிலான கம்பளிகளை ஆடையாகவும் உடுத்தினர். சுமேரிய நகரங்கள் ஒவ்வொரும் தனி நாடாகவும் தனி அதிகாரத்துடனும், தனி வழிபாட்டுத் தெய்வத்துடனும், தனி பூசாரிகளுடனும், தனித்தன்மையுடனும் விளங்கின.
இருப்பினும் அவ்வப்போது ஒரு நகரம் மற்றொரு நகரின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சி செய்யும். நிப்பூர் (Nippur) என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டில் ‘சாம்ராஜ்யம்’ என்று பதிவாகி உள்ளது. சுமேரிய நகரமான இரெக் (Erech)இன் முதல் சாம்ராஜ்யமாக இது இருந்திருக்கலாம். இந்த சாம்ராஜ்யத்தின் கடவுளும், பூசாரி மன்னனும், பாரசீக வளைகுடா முதல் செங்கடல் (Red Sea) வரை தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தினர்.
முதல் வகையான எழுத்து என்பது படங்கள் மூலம் சுருக்கமாக உணர்த்துதே. நியோலித்திக் காலத்துக்கு முன்பிருந்தே மக்கள் எழுத ஆரம்பித்துவிட்டனர். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், அஜிலியன் பாறை ஓவியங்களை இம்முறைக்கான தொடக்கமாகக் கொள்ளலாம். பெரும்பான்மைப் படங்கள் வேட்டையாடுதல் மற்றும் பயணங்களைக் குறிப்பதாகவே உள்ளன. மனிதர்களைக் குறிக்கும் படங்கள் வெறும் கோடுகளாகவே காணப்படுகின்றன. தலை, கை கால் உள்ளிட்ட உறுப்புகள் இன்றிச் செங்குத்தாக ஒரு கோடும், குறுக்காகச் சில கோடுகளும் மட்டுமே மனிதனுக்கான அடையாளம். வழக்கமான கோடுகளிலிருந்து படங்களாக வரைவது சுலபமான பரிணாம வளர்ச்சியாகவே நிகழ்ந்தது.
சுமேரிய நாகரிகத்தில் களிமண் மீது குச்சியால் மிக மென்மையாக எழுதியதால் காலப்போக்கில் அந்த உருவங்கள் அடையாளம் தெரியாமல் அழிந்தன. ஆனால் எகிப்திய நாகரிகத்தில் மக்கள் சுவர்களிலும், பேபிரஸ் (Papyrus) என்னும் ஒருவகைப் புல்லின் இதழ்களில் அல்லது நாணலின் கீற்றுகளில் ஓவியங்களைத் தீட்டியதால், அவற்றை ஓரளவு இன்றைக்கும் காணமுடிகின்றன. சுமேரிய நாகரிகத்தில் மரங்களில் கீறப்பட்ட குறியீடுகள் ஆப்பு வடிவில் இருந்தமையால், சுமேரிய எழுத்து க்யூனிஃபார்ம் (Cuneiform) என்று அழைக்கப்பட்டது.
சுமேரிய எழுத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், வரையப்பட்ட படங்கள் சம்மந்தப்பட்ட பொருளைக் குறிக்காமல், அதற்கு இணையான மற்றொன்றைக் குறிக்கும். சின்னங்களை ஓவியமாகத் தீட்டி, எழுத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு வகைப் புதிர் விளையாட்டு இன்றைக்கும் குழந்தைகளிடையே பிரபலம். கூடாரங்கள் (Tent), மணி (Bell) மற்றும் முகாம் (Camp) ஆகிய படங்களை வரைந்து காட்டினால் குழந்தை அவற்றை உற்று நோக்கி ‘ஸ்காட்ச் கேம்ப் பெல்’ (Scotch Camp Bell) என்று ஊகித்து உடனே சொல்லிவிடும்.
சமகால அமெரிந்தியன் (Amerindian) மொழிகளைப் போலவே சுமேரிய மொழியும் திரட்டப்பட்ட அசைகளால் உருவான மொழிதான். படங்கள் மூலம் எண்ணங்களை நேரடியாக வெளிப்படுத்த முடியாதபோது, சொற்களை எழுதும் அசைக்குரிய முறைக்கு உடனே மாற்றிக் கொண்டது. எகிப்திய எழுத்து முறையும் இதேபோல் சமகால வளர்ச்சியைப் பெற்றது. குறைவான, தனித்த அசை முறையிலான பேச்சைக் கொண்ட வெளிநாட்டினர், பட எழுத்துகளைக் கற்கவும் பயன்படுத்தவும் முனைந்தனர். அவற்றை எளிமைப்படுத்தத் திருத்தங்களையும், மாற்றங்களையும் மேற்கொண்டு, நிறைவாக அகர வரிசை – ஒலி எழுத்தைக் (Alphabet) கண்டுபிடித்தனர்.
பின்னாளில், உலகளவில் உருவான அனைத்து அகர வரிசை எழுத்துகளுமே சுமேரிய ஆப்பு வடிவ எழுத்துகள்-க்யூனியஃபார்ம் (Cunieform) மற்றும் எகிப்திய சித்திர வடிவ எழுத்துகள்-ஹைரோக்ளைஃபிக் (Hieroglyphic) ஆகியவற்றின் கலவையே. பாரம்பரிய பட எழுத்து முறையை சீனா உருவாக்கினாலும், ஏனோ, அகர வரிசை – ஒலி எழுத்துக்கு (Alphabet) சீனர்கள் மாறவே இல்லை.
எழுத்து முறையின் கண்டுபிடிப்பு, மனித சமூக வளர்ச்சியின் மிக முக்கியமான அங்கம். ஒப்பந்தங்கள், சட்டங்கள், அரசாணைகள் உள்ளிட்ட அனைத்தையும் பதிவு செய்து ஆவணப்படுத்த உதவியது. பழங்கால நாடுகளை விடவும், தற்கால நாடுகள் பிரம்மாண்ட வளர்ச்சி அடைய உதவியது. தொடர்ச்சியான வரலாற்று உணர்வைச் சாத்தியப்படுத்தியது. பூசாரி அல்லது அரசனின் ஆணையோ முத்திரையோ, அவனது பார்வை அல்லது குரல் எல்லைகளைத் தாண்டிப் பல மைல்களுக்கு அப்பால் தொலைதூரத்திலும் செல்லுபடி ஆகும் நிலை உருவானது. இன்னும் குறிப்பாகச் சொல்வதெனில் சம்பந்தப்பட்ட பூசாரி / அரசன் இறந்த பிறகும் அவரது ஆணை / முத்திரை உயிர்ப்புடன் இருக்கும்.
பண்டைய சுமேரியாவில் முத்திரைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அரசன் அல்லது அதிகாரி அல்லது வியாபாரியின் முத்திரை பெரும்பாலும் கலை உணர்வுடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். யாருக்கு அங்கீகாரம் அளிக்க விரும்புகிறாரோ அவரிடம் முத்திரை பதிக்கப்பட்ட களிமண் கொடுக்கப்படும். பின்னர் இந்தக் களிமண், நெருப்பில் சுட்டும், வெய்யிலில் காய்ந்தும், கடினமாகி நிரந்தரமாகிவிடும். இவ்வாறாக இந்த நாகரிகம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே ‘அச்சுக்கலை’யைப் பயன்படுத்தியது. மெசொபொடேமியாவில் எண்ணிலடங்கா ஆண்டுகளுக்குக் கடிதங்கள், ஆவணங்கள், கணக்குகள் அகியவை அழிக்க முடியாத ஓடுகளில்தான் எழுதப்பட்டன என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மிகப் பெரிய அறிவுக் களஞ்சியத்தை மீட்டெடுக்க உதவிய வகையில், அவற்றுக்கும் அதை உருவாக்கியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வெண்கலம், செம்பு, தங்கம், வெள்ளி, மதிப்புமிக்க வேதியல் விண்கல் இரும்பு ஆகியவற்றின் பயன்பாட்டைத் தொடக்கத்திலிருந்தே சுமேரியர்களும் எகிப்தியர்களும் அறிந்திருந்தனர். பண்டைய உலகின் முதல் நகர நிலங்களில் அன்றாட வாழ்க்கை எகிப்து மற்றும் சுமேரியாவைப் போன்று இருந்திருக்கவேண்டும். தெருக்களில் திரியும் கழுதைகள் மற்றும் கால்நடைகள் தவிர்த்து, 4,000 ஆண்டுகளுக்குப் பிந்திய அமெரிக்காவின் மாயன் நகர வாழ்க்கையைப் போலிருந்திருக்கும். மத பண்டிகை நாள்களைத் தவிர ஏனைய அமைதி தழுவிய காலங்களில் பெரும்பான்மை மக்கள் நீர்ப்பாசனத்திலும், சாகுபடியிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம் பணமும் இல்லை அதற்கான தேவையும் ஏற்படவில்லை. அவ்வப்போது சிறு சிறு வியாபாரங்களுக்குப் பண்டம் மாற்று முறையைக் கடைப்பிடித்தனர்.
அரசர்களும் இளவரசர்களும் மட்டுமே தங்களிடமிருந்த தங்கம், வெள்ளிக் கட்டிகள் மற்றும் விலையுயர்ந்த வைரக் கற்களை வியாபாரத்தில் பயன்படுத்திக் கொண்டனர். வழிபாட்டுத் தலங்கள் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்தன. சுமேரியாவில் கட்டப்பட்ட மிக உயர்ந்த கோவிலின் கோபுர உச்சியிலிருந்து, விண்ணில் மின்னிய நட்சத்திரங்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டன. சுமேரியாவில் பூசாரி-அரசர்தான் உயர்ந்தவர். உயிரினங்களுள் சிறந்தவர். எகிப்தில் பூசாரியை விடவும் இன்னொருவர் முக்கியமாகக் கருதப்பட்டுச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பட்டார். அவர்தான் அந்த மண்ணின் முதன்மைக் கடவுளின் அவதாரமாக, வாழும் கடவுளா வணங்கப்பட்ட ‘ஃபேரோ’ (Pharaoh).
அக்கால உலகில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆண்களுக்கு வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், கடுமையாக உழைக்கும் வழக்கமான வாழ்க்கை. அந்நியர்கள் மிக அரிதாகவே ஊடுருவினர். பூசாரிகள் நினைவுக்கு எட்டாத பழக்கால விதிமுறைகளுக்கு ஏற்ப மக்களை வழிநடத்தினர். நட்சத்திரங்களைப் பின்தொடர்ந்தும், சகுனங்களைப் பார்த்தும், பலி கொடுத்தும், விதை விதைப்புக்கான நல்ல நேரத்தைக் கணித்தனர். கனவில் வந்த காட்சிகளுக்கு விளக்கமளித்து எச்சரிக்கை விடுத்தனர். தங்களது மூதாதையர்களின் கடந்தகால காட்டுமிராண்டி வாழ்க்கை நினைவோ எதிர்காலம் குறித்த கவலையோ இல்லாமல், ஆண்கள் கடுமையாக உழைத்தார்கள், காதலித்தார்கள், மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவினார்கள்.
சில நேரங்களில் மன்னர் தீங்கற்றவனாக இருந்தார். இவர்களுள் தொண்ணூறு ஆண்டு காலம் எகிப்தை ஆண்ட இரண்டாம் பெப்பி (Pepi) குறிப்பிடத்தக்கவர். அண்டை நாடுகளுடன் சண்டை போட, கொள்ளை அடிக்க அல்லது பெரிய கட்டடங்களைக் கட்ட, ஆண்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுள் முக்கியமானவர்களாகக் கருதப்படும் சியாப்ஸ் (Cheops), செஃப்ரன் (Chephren) மற்றும் மைசெரினஸ் (Mycerinus) கிசே (Gizeh) நகரில் கல்லறைகளையும் பிரமிட்களையும் எழுப்பியுள்ளனர். இவற்றுள் மிகப் பெரியது 48,83,000 டன் எடை கொண்ட கல்லாலான 450 அடி உயர பிரமிட் ஆகும். அனைத்தும் நைல் நதி வழியே படகுகளில் கொண்டு வரப்பட்டு, மனித உழைப்பினால் கட்டப்பட்டவை. பெரிய போரில் ஏற்படும் இழப்புகளை விடவும் இதன் கட்டுமானத்தில் அதிக அளவிலான இழப்புகளை எகிப்து எதிர்கொண்டிருக்கும்.
16. ஆதி நாடோடி மக்கள்
பொ.ஆ.மு.6000-3000 வரையிலான காலத்தில், மெஸொபொடேமியா மற்றும் நைல் நதிப் பள்ளத்தாக்குகளைத் தாண்டிப் பல்வேறு இடங்களில், விவசாயம் மற்றும் நகரக் கட்டுமானங்களில் ஆண்கள் ஈடுபட்டனர். நிலையான நீர்ப்பாசன வசதிகளும் வருடம் முழுவதும் உணவு உற்பத்திக்கான சாத்தியங்களும் இருக்கும் பட்சத்தில், வேட்டையாடுவதையும், நாடோடிபோல் அலைவதையும் மக்கள் கைவிட்டனர். மேல் டைக்ரிஸ் (Upper Tigris) பகுதியில் அசிரியன்ஸ் (Assyrians) இன மக்கள் இந்தக் காலகட்டத்தில் நகரங்களை நிர்மாணித்துக் கொண்டிருந்தனர். ஆசியா மைனர் (Asia Minor) பள்ளத்தாக்குகள், மத்தியதரைக் கடலோரப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள தீவுகளில் சிறு சமூகங்கள் நாகரிகங்களாக வளர்ச்சி பெறத் தொடங்கின.
இதே காலகட்டத்தில், மனித வாழ்க்கைக்கு இணையான வளர்ச்சிகள் இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்கனவே நிலை பெற்றிருந்தன. ஐரோப்பாவிலுள்ள மீன்கள் நிறந்த ஏரிக்கரைகளில் மனிதர்கள் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டு, விவசாயத்துக்குப் பதிலாக மீன் பிடித்தலிலும் வேட்டையாடுதலிலும் கவனம் செலுத்தினர். நிலப்பகுதி கடினமாகவும், வறண்டும், அடர்ந்த காடுகளாகவும், நிச்சயமற்ற பருவங்களுடன் இருந்ததால், பிரத்யேகக் கருவிகளுடன் மட்டுமே மனித வாழ்க்கை வாழத்தக்கதாக விளங்கியது.
இதுபோன்ற ஆதி பழைமை நாகரிகச் சூழல்களில் மக்கள் குடியிருப்புகளை அமைத்து வாழத் தண்ணீரும் சூரிய வெளிச்சமும் மிதமான தட்ப வெப்பமும் அவசியம். மனிதரின் அடிப்படைத் தேவைகள் கிடைக்காத பட்சத்தில், ஓரிடத்தில் குடியேறாமல், நாடோடிகளாக வேட்டையாடியும் புல்வெளிகளைத் தேடி ஓடியும் வாழத் தலைப்பட்டார்கள். வேட்டையிலிருந்து ஆடு மாடு மேய்ச்சலுக்கு மாறும் பரிணாம வளர்ச்சி படிப்படியாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும். ஆசியாவில் காட்டுக் கால்நடைகள் அல்லது காட்டுக் குதிரைகளை வேட்டையாடிய மனிதருக்கு, அவற்றைப் பிடித்துப் பழக்கிச் சொந்தமாகவும் சொத்தாகவும் மாற்றும் எண்ணம் வந்திருக்க வேண்டும். இதன் காரணமாக வேட்டை நாய்கள், ஓநாய்கள் மற்றும் பிராணிகளை உண்ணும் காட்டு விலங்குகளிலிருந்து அவற்றைக் காப்பாற்றி வீட்டில் வளர்க்கத் தொடங்கினார்கள்.
விவசாயிகளின் அதி பழைமை நாகரிகங்கள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தன. அதே தருணத்தில் குளிர்கால மேய்ச்சலுக்கும் கோடைக் கால மேய்ச்சலுக்கும் அங்கும் இங்குமாக மாறிமாறி வாழும் வித்தியாசமான நாடோடி வாழ்க்கையும் பரவலாகிக் கொண்டிருந்தது. விவசாயிகளை விடவும் நாடோடிகள் முற்றிலும் வேறுபட்டவர்களாகவும் பலசாலிகளாகவும் இருந்தனர். ஆனால் வளம் குறைந்தவர்களாக, எண்ணிக்கையில் அதிகமிருந்தனர். நிரந்தரமான வழிபாட்டு இடங்களோ, அமைப்பு ரீதியான பூசாரிகளோ இல்லை. பகட்டான வாழ்க்கை இல்லையெனினும், வளர்ச்சி பெறாத வாழ்க்கை என எண்ணுதல் கூடாது. பல வழிகளில் இந்தச் சுதந்திரமான வாழ்க்கை, மண்ணை உழுது வாழும் விவசாயிகளின் வாழ்க்கையைவிடவும், முழுமையான வாழ்க்கையே. இந்தக் குழுவில் தனிநபருக்கு தன்னம்பிக்கை அதிகம். மருத்துவரை விடவும், தலைவர் முக்கியமாகக் கருதப்பட்டார்.
மிகப் பெரிய நிலப்பரப்புகளுக்குத் தொடர்ந்து இடம்விட்டு இடம் பெயர்ந்த காரணத்தால், வாழ்க்கை தொடர்பான நாடோடியின் பார்வை பரந்து விரிந்து காணப்பட்டது. குடியேறிய நிலத்தின் எல்லைகளை, இங்கும் அங்குமாகத் தொட்டுக் கொண்டு சென்றார்கள். தென்படும் புதிய முகங்கள் பழக்கப்பட்டுப் போயின. மேய்ச்சல் நிலங்களுக்காக சக-போட்டி பழங்குடியினத்துடன் திட்டமிட வேண்டியிருந்தது. மலைக் கணவாய்கள் மற்றும் பாறைகளின் வழியே பயணப்பட்ட காரணத்தால், உழும் விவசாயியை விடவும் கனிமங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். அவர் மிகச் சிறந்த உலோகவியலாளராக இருந்திருக்கக்கூடும். வெண்கலம் மற்றும் இரும்பு உருக்குதல் நாடோடிகளின் கண்டுபிடிப்புகள். மத்திய ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்புத் தாதுக்களை உருக்கி தயாரிக்கப்பட்ட கருவிகள், பண்டைய நாகரிகங்களுக்கு முற்பட்டவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆங்காங்கே குடியேறிய மக்கள் ஆடைகளையும் பானைகளையும் விருப்பமான பொருள்களையும் தயாரித்துக் கொண்டனர். விவசாயம் மற்றும் நாடோடி ஆகிய இரு வகை வாழ்க்கை முறைகள் வேறுபட்ட நிலையில், இரண்டுக்கும் இடையே கொள்ளையும் வர்த்தகத்தில் பொறாமையும் தவிர்க்க முடியாதவை ஆயின. பாலைவனங்களும் பருவகால மாற்றங்களுக்கு உட்படும் நிலங்களையும் கொண்ட சுமேரியாவில், விவசாய நிலங்களுக்கு அருகே நாடோடிகள் முகாமிடுவதும் வர்த்தகத்தில் ஈடுபடுவதும் திருடுவதும் வழக்கமாக நடைபெற்றன. இது இன்றைய ஜிப்சிகளின் செயல்பாடுகளைப் போலிருந்தது எனலாம். காட்டுக் கோழிகள் – இந்திய வகைக் காட்டுக் கோழிகள் பொது.ஆ.மு.1000 வரை வீட்டுக் கோழிகளாகப் பழக்கப்படவில்லை. வேடர்கள் விலை உயர்ந்த கற்கள், உலோகம், தோல் ஆகியவற்றைக் கொடுத்துப் பண்டம் மாற்று முறையில் பானைகள், மணிகள், கண்ணாடி, ஆடைகளைப் பெற்றுக்கொண்டனர்.
சுமேரியா மற்றும் எகிப்தின் ஆரம்பகால நாகரிகங்களில், மூன்று முக்கியப் பிராந்தியங்களும், மூன்று வகையான நாடோடி வாழ்க்கையும், முழுமையான குடியேற்ற வாழ்க்கைக்கு நகர்ந்திராத மக்களும் காணப்பட்டனர். ஐரோப்பாவின் அடர்ந்த காடுகளில் பொன்னிற நார்டிக் மக்கள், வேட்டைக்காரர்கள், மேய்ப்பர்கள் வாழ்ந்து வந்தனர். பொது.ஆ.மு.1500-ல், பழைமை நாகரிகங்களில், இவ்வின மக்கள் மிகக் குறைவாகவே காணப்பட்டனர். கிழக்காசியப் புல்வெளிகளில் பல்வேறு மங்கோலிய இனங்களும், ஹன்னிஷ் (Hunnish) மக்களும், குதிரைகளை வீட்டு விலங்குகளாகப் பழக்கி வந்தனர். கோடை மற்றும் குளிர் பருவ காலங்களில், இடம் விட்டு இடம் முகாம்கள் அமைக்கும்போது, போக்குவரத்துக்காகக் குதிரைகளைப் பயன்படுத்தினர்.
நார்டிக் மற்றும் ஹன்னிஷ் மக்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவர், ரஷியாவின் சதுப்பு நிலங்களாலும் காஸ்பியன் கடலாலும் அப்போது பிரிக்கப்பட்டிருந்தனர். அப்போது ரஷியா முழுவதும் சதுப்பு நிலங்களும் ஏரிகளுமே நிறைந்திருந்தன. இன்னும் வறண்டு கிடக்கும் சிரியா மற்றும் அரேபியப் பாலைவனங்களில், செமிட்டிக் (Semitic) இனங்களைச் சேர்ந்த வெண்மை அல்லது பழுப்பு நிற மக்கள், மேய்ச்சல் நிலங்களைத் தேடிச், செம்மறி ஆடுகள், கழுதைகள் மற்றும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றனர். தெற்கு பாரசீகம், எலாமைட்ஸிலிருந்து (Elamites) வந்த செமிட்டிக் இடையர்கள், இன்னும் குறிப்பாக நீக்ரோயிட் மக்களே, பண்டைய நாகரிகத்துடன் நெருங்கிய தொடர்புள்ள முதல் நாடோடிகள் ஆவர். வர்த்தகர்களாகவும் கொள்ளை அடிப்பவர்களாகவும் வந்தவர்களுள் பலசாலிகள் தலைவர்களாக உருவெடுத்து அரசர்களானார்கள்.
பொ.ஆ.மு.2750-ல் மிகப் பெரிய செமிட்டிக் தலைவரான சர்கான் (Sargon) என்பவர், பாரசீக வளைகுடா முதல் மத்தியதரைக் கடல் வரை, சுமேரியா முழுவதையும் வெற்றி கொண்டார். அவர் படிப்பறிவற்ற காட்டுமிராண்டியே. அவரது மக்களான அக்காடியன்ஸ் (Akkadians) சுமேரிய எழுத்தைக் கற்றுக்கொண்டனர். அதிகாரிகளும் கற்றவர்களும் சுமேரிய மொழியை ஏற்றுக்கொண்டனர். எலாமைட்ஸ் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, அடுத்த இரு நூற்றாண்டுகளில் அவரது சாம்ராஜ்யம் சரிந்தது. அமோரைட்ஸ் (Amorites) என்னும் புதிய வகை செமிட்டிக் மக்கள் சுமேரியா மீது தங்கள் ஆட்சியை நிறுவினர். சிறு ஆற்றங்கரை நகரான பாபிலோனைத் (Babylon) தலைநகராகக் கொண்டு, முதல் பாபிலோனிய சாம்ராஜ்யத்தை நிறுவினர். பொ.ஆ.மு. 2100 பாபிலோனிய வம்சத்தைச் சேர்ந்த மாமன்னன் ஹம்முரபி (Hammurabi) உருவாக்கிய சட்டங்களே இன்றளவும் வரலாற்றின் புராதனச் சட்டங்களாகக் கருதப்படுகின்றன.
மெஸொபொடாமியாவை விடவும் குறுகலான நைல் பள்ளத்தாக்கு நாடோடிகளின் படையெடுப்பைப் பெருமளவு தடுத்து நிறுத்தியது. ஆனால் ஹம்முரபி ஆட்சிகாலத்தில் எகிப்தின் மீது செமிட்டிக்மின் வெற்றிகரமான படையெடுப்பை அடுத்துப் பல நூற்றாண்டுகளுக்கு ஃபேரோக்கள் (Pharaohs), ஹைக்ஸோஸ் (Hyksos) அல்லது மேய்ப்பர் அரசர்களின் ஆட்சி தொடர்ந்தது. செமிட்டிக் வெற்றியாளர்கள் எகிப்தியர்களுடன் எப்போதும் ஒருங்கிணையவில்லை. அந்நியர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும், விரோதிகளாகவுமே கருதப்பட்டனர். நிறைவாக, பொ.ஆ.மு.1600-ல் மக்களின் எழுச்சி காரணமாக செமிட்டிக் வெற்றியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் செமிட்டிகளின் வருகை சுமேரியர்களுக்கு நன்மையையே தந்தது. இரு இனங்களும் ஒன்றிணைந்ததால் பாபிலோனிய சாம்ராஜ்யம் தனது மொழியிலும் குணத்திலும் முழுமையான செமிட்டிக்தன்மை கொண்டதாகவே உருமாறியது.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.