Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #10

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #10

19. ஆதிகால ஆரியர்கள்

4000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது பொ.ஆ.மு.2000-ல் மத்திய, தென் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளின் தட்பவெப்பம் வெதுவெதுப்போடும் ஈரப்பதமோடும் அந்தப் பகுதிகள் அடர்ந்த காடுகளாகவும் இருந்தன. இந்தப் பிராந்தியங்களில் சிவந்த நிறத்தில், நீலக் கண்களுடன், நார்டிக் இனப் பழங்குடியினர் வசித்து வந்தனர். ரைன் நதிக்கரை தொடங்கி காஸ்பியன் கடல் வரையிலான பகுதிகளில், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளச் சிற்சில மாற்றங்களுடன் ஒரே மொழியில் உரையாடினர். அவர்களது எண்ணிக்கை அதிகமில்லாத காரணத்தால், பாபிலோனியர்களோ எகிப்தியர்களோ பெரிய அளவில் சந்தேகிக்கவில்லை. இருப்பினும் பண்டை நாகரிகத்திலும், வேளாண் சாகுபடியிலும் சிறந்து விளங்கிய எகிப்து அந்நிய வெற்றியின் கசப்பை முதன் முறையாக அப்போதுதான் உணர்ந்தது.

எதிர்காலத்தில் நார்டிக் இன மக்கள் உலக வரலாற்றில் மிக முக்கியப் பங்கை வழங்கியதைப் பின்வரும் அத்யாயங்களில் பார்க்கலாம். செழிப்பான பசுமை இடங்களிலும் காட்டின் சிறு பகுதியை அழித்து அங்கு குடியிருப்புகளை அமைத்துக்கொண்டும், வாழ்ந்து வந்தனர். தொடக்கத்தில் குதிரைகள் இல்லை. ஆனால் கால்நடைகள் இருந்தன. நாடோடிகளாக அலைந்தபோது கூடாரங்களையும், பொருள்களையும், சுமக்க எருதுகளைப் பயன்படுத்தினர். ஓரிடத்தில் சில காலம் தங்கும்போது களிமண், மரக்கிளைகள், சுள்ளிகளாலான குடிசைகளைக் கட்டிக்கொண்டனர்.

முக்கியமானவர்கள் இறந்தால் அவர்களைத் தீயிலிட்டு எரித்தனர். சாம்பலை மண்பாண்டங்களில் சேகரித்து அவற்றைச் சுற்றி வட்டமான மண்மேடுகளைக் கட்டினர். வடக்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் இவ்வகை வட்ட மண்மேடுகளைக் காணலாம். இவர்களின் முன்னோடிகளான பழுப்பு நிற ரோமம் கொண்டவர்கள், இறந்தவர்களை எரிக்காமல், குழிகளைத் தோண்டி உட்கார்ந்த நிலையில் மண்ணில் புதைத்து, நீளமான மண்மேடுகளைக் கட்டினர்.

ஆரியர்கள் எருதுகளை உழுவதற்குப் பயனபடுத்தி கோதுமை பயிரிட்டனர். ஆனால் பயிரிட்ட இடங்களிலேயே குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு நிரந்தரமாக வாழவில்லை. ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டிருந்தனர். வெண்கலத்தின் பயன்பாட்டை அறிந்திருந்தனர். பொ.ஆ.மு.1500-ல் இரும்பைக் கையகப்படுத்தி, முதல் முதலில் இரும்பை உருக்கும் தொழில் நுட்பத்தையும் கண்டுபிடித்தனர். இதே காலகட்டத்தில் குதிரைகளையும் பழக்கி வண்டி இழுக்க உபயோகித்தனர். ஆனால், மத்தியதரைக் கடல் பகுதி மக்களைப்போல், கோயில்களை மையமாக வைத்துத் தங்களது சமூக வாழ்க்கையைக் கட்டமைக்கவில்லை. இவர்கள் தமது தலைவர்களையே (‘அரசர்களையே’), பெரிதும் மதித்தனர்; பூசாரிகளை அல்ல. ஆன்மிக வாழ்வை விடவும், பிரபுத்துவ வாழ்க்கை வாழ்ந்தனர். தொடக்கம் முதற்கொண்டே, சில குடும்பங்களைத் தலைமைப் பண்புடன், உன்னதமாகப் வேறுபடுத்திப் போற்றினர்.

எதையும் ஆழமாக வலியுறுத்திப் பேசும் இயல்புடையவர்கள். நாடோடி வாழ்க்கையைக்கூட விருந்து, மதுபானம் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். கவிதை புனையவும் பாடவும், குழுவில் கவிஞனும் பாடகனும் பிரத்யேகமாக இருந்தனர். நாகரிகத் தொடர்பு ஏற்படும்வரை அவர்களிடம் எழுத்து வடிவம் இல்லை. இதன் காரணமாகப் பாடகனும் கவிஞனுமே பாடல்களுக்கான வாழும் இலக்கியங்களாகத் திகழ்ந்தனர். எழுத்தில் பதிவாகாமல் வாய்மொழியாக ஒவ்வொருவரின் மனத்திலும் இவை ஆழமாகப் பதிந்தன. மந்திர கீதம் போன்ற உச்சாடனங்கள் பயன்படுத்தப்பட்டதால், அது மிகச் சிறப்பாகவும் அழகாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. ஆரியத்திலிருந்து வந்த அடுத்தடுத்த மொழிகள் ஆதிக்கம் பெற்றது அதன் பெருமைக்குச் சான்று என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆரியப் பாரம்பரியப் பெருமையும், வரலாறும், வாய்வழி உச்சாடனங்கள், இதிகாசங்கள், வேதங்கள் என அழைக்கப்படும் பலவற்றில் தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னணித் தலைவர்களின் குடும்பங்களைச் சுற்றியே இம்மக்களின் சமூக வாழ்க்கை அமைந்திருந்தது. நாடோடி வாழ்க்கையில், ஓரிடத்தில் சிறிது காலமே தங்கியிருந்தாலும், தலைவரின் வீட்டு வரவேற்பறை, விசாலமான மரக் கட்டுமானமாக விளங்கியது. ஆடு மாடு மேய்ப்பவர்களும், விவசாயத் தொழிலாளர்களும் குடிசைகளில் வாழ்ந்தனர். பெரும்பான்மை ஆரிய மக்களுக்கு, இந்த வரவேற்பறையே பொதுவான கூடுமிடம். விருந்தண்ணவும், பாடல்களைக் கேட்கவும், விளையாட்டு மற்றும் விவாதங்களில் பங்கேற்கவும் அங்குதான் அனைவரும் கூடுவார்கள். அந்த இடத்தைச் சுற்றிலும் மாட்டுத் தொழுவங்களும், குதிரை லாயங்களும் இருந்தன. தலைவனும் அவன் மனைவியும் மேடை அல்லது மேல் மாடத்தில் உறங்குவார்கள். மற்றவர்கள் கிடைக்கும் இடங்களில் படுத்துக்கொள்வார்கள். ஆயுதங்கள் தவிர, ஆபரணங்கள், கருவிகள், தனிப்பட்ட உடைமைகளில் ஆணாதிக்கம் நிலவியது. பொது நலன் கருதித் தலைவன் கால்நடைகளையும் விளைநிலங்களையும் சொந்தமாக வைத்திருந்தான்.

மெசொபொடேமியா மற்றும் நைல் நதி நாகரிங்களின் வளர்ச்சி நடைபெற்ற அதே தருணம், மத்திய ஐரோப்பா மற்றும் மேற்கு மத்திய ஆசியாவின் பிரம்மாண்ட நிலப்பரப்புகளில், ஆரியர்களின் இனப் பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கிறிஸ்த்துவுக்கு முந்தைய ஈராயிரம் ஆண்டுகளில், ஹீலியோலித்திக் மக்கள் மீது ஆதிக்கமும் அதிகரித்தது. ஃபிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் ஆரியர்களின் ஊடுருவ ஆரம்பித்தனர். இரு பிரிவுகளாக மேற்கில் நுழைந்தனர்.

பிரிட்டனிலும், ஐயர்லாந்திலும் ஊடுருவிய முதல் பிரிவினர் வெண்கலத்தினால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். பிரிட்டனி கார்னாக் (Brittany Carnac) மற்றும் இங்கிலாந்தில் ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge), அவேபெரி (Avebury) ஆகிய இடங்களிலுள்ள பிரம்மாண்ட கல் நினைவுச் சின்னங்களை அழித்ததுடன், அவற்றை உருவாக்கிய மக்களையும் அடிமைப்படுத்தினர். பின்னர் ஐயர்லாந்தை அடைந்தனர். இவர்கள் கோய்டெலிக் செல்ட்ஸ் (Goidelic Celts) என அழைக்கப்பட்டனர். இரண்டாம் பிரிவினர், நெருங்கிய உறவினர்களாக மற்ற இனத்தவருடன் கலந்தனர். இங்கிலாந்துக்கு முதன் முதலில் இரும்பை அறிமுகப்படுத்திய இவர்களுக்கு ப்ரைதோனிக் செல்ட்ஸ் (Brythonic Celts) என்று பெயர். வேல்ஸ் அல்லது வெல்ஷ் (Wales – Welsh) மக்கள் தங்களுடைய மொழியை இவர்களிடமிருந்து பெற்றனர்.

செல்டிக் (Celtic) மக்கள் தெற்கு நோக்கி ஸ்பெயினுக்குள் ஊடுருவினர். அங்கு ஆட்சியிலிருந்த ஹீலியோலித்திக் பாஸ்க் மக்களோடும், கடற்கரையோர செமிட்டிக் ஃபோனீஷியன் மக்களோடும் கலந்தனர். அதே தருணம், பழங்குடியினருடன் நெருங்கிய தொடர்புடைய இத்தாலியர்கள், காடுகள் நிறைந்த இத்தாலிய தீபகற்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் எல்லா நேரங்களிலும் வெல்லவில்லை. பொ.ஆ.மு.8ஆம் நூற்றாண்டில், எட்ரூஸ்கான் (Etruscan) மன்னர்களின் ஆட்சியின் கீழ், ஆரிய இலத்தீன் மக்கள் வசிக்கும், டைபர் ஆற்றங்கரை வணிக நகரமாக, ரோமாபுரி வரலாற்றில் இடம்பெறுகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஆரியர்களின் மற்றொரு ஊடுருவல் தெற்கு நோக்கி நடைபெற்றது. சமஸ்கிருத மொழி பேசிய ஆரியர்கள் பொ.ஆ.மு.1000-ல் மேற்கு கணவாய் வழியே வட இந்தியாவுக்குள் புகுந்தனர். ஏற்கெனவே அங்கிருந்த புராதன அழகிய திராவிட நாகரிகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுடன், அவர்களிடமிருந்து நிரம்பக் கற்றும் கொண்டனர். ஏனைய ஆரியப் பழங்குடியினர், மத்திய ஆசியாவின் கிழக்குப் பகுதி வரை மலைப் பிரதேசங்களில் பரவினர். கிழக்குத் துருக்கிஸ்தானில் சிவப்புச் சருமத்துடன், நீலநிறக் கண்களைக் கொண்ட நார்டிக் பரம்பரையினர், இப்போது மங்கோலிய மொழி பேசுகின்றனர்.

அர்மீனியன்களால் பொ.ஆ.மு.1000க்கு முன்பே பண்டைய ஹிட்டிட்டீஸ் (Hittities) ஆரியமயமாக்கப்பட்டதுடன், கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கு இடையே மூழ்கியும் போனது. வட கிழக்கு எல்லைகளில் நடைபெறும், புதிய மற்றும் காட்டுமிராண்டித்தனமான சண்டை குறித்து அஸ்ஸிரியன்களும், பாபிலோனியர்களும், ஏற்கனவே அறிந்திருந்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்க இனத்தவர்கள் சிதியன்கள் (Scythians), மெட்கள் (Medes) மற்றும் பாரசீகர்கள் (Persians).

பழைமை உலக நாகரிகத்தின் இதயமான பால்கன் தீபகற்பம் வழியேதான், ஆரியர்கள் பெருமளவில் ஊடுருவினர். பொ.ஆ.மு.1000 பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, ஆசியா மைனரைக் கடந்து, தென் பகுதி நோக்கி அவர்கள் ஏற்கெனவே வந்து கொண்டிருந்தனர். அவ்வாறு முதலில் நுழைந்த இனக்குழுக்களுள், கவனத்தை ஈர்த்தவர்கள் ஃப்ரைஜியன்கள் (Phrygians). இவர்களைத் தொடர்ந்து நுழைந்தவர்கள் ஏயோலிக் (Aeolic), ஐயோனிக் (Ionic) மற்றும் டோரியன் கிரேக்கர்கள் (Dorian Greek). பொ.ஆ.மு.1000-ல் பண்டைய ஏஜியன் (Aegean) நாகரிகம், கிரேக்கத்தின் முக்கிய நகரங்களிலும் அதன் தீவுகளிலும் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

மைசினே (Mycenae) மற்றும் டிரின்ஸ் (Tiryns) ஆகியவை மண்ணோடு மண்ணாகச் சாய்க்கப்பட்டன. நோஸ்ஸோஸ் (Cnossos) என்ற ஓர் நகரம் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து போனது. பொ.ஆ.மு.1000 முன்பே, கடல் வழியே பயணித்த கிரேக்கர்கள் க்ரேட், ரோட்ஸ். மத்திய தரைக் கடலோரப் பகுதிகளான சிசிலி, தெற்கு இத்தாலி மற்றும் ஃபோனீஷிய வணிக நகரங்களில் தங்கள் குடியிருப்புகளை நிறுவிக்கொண்டனர்.

மூன்றாம் டிக்லத் பிலெசர் (Tiglath Pileser III), இரண்டாம் சர்கோன் (Sargon II) மற்றும் சர்டானாபாலஸ் (Sardanapalus) ஆகியோர், அஸ்ஸிரியாவை ஆண்டு கொண்டும், பாபிலோனியா, சிரியா மற்றும் எகிப்துடன் போரிட்டுக்கொண்டும் இருந்தனர். அதே தருணம் ஆரியர்கள் நாகரிக முறைகளைக் கற்றுக் கொண்டு, இத்தாலி, கிரேக்கம் மற்றும் வடக்குப் பாரசீகத்தில் தங்களுக்கானதை அமைத்துக் கொள்வதிலும் தீவிரம் செலுத்தினர். இவ்வாறாக பொ.ஆ.மு.9-ம் நூற்றாண்டு தொடங்கி அடுத்த ஆறு நூற்றாண்டுகளுக்கு, ஆரியர்கள் எவ்வாறு தங்கள் அதிகார பலத்தைப் பெருக்கிக் கொண்டார்கள் என்பதும், பண்டைய உலகம், செமிட்டிக், ஏஜியன் மற்றும் எகிப்திய நாகரிகங்களை அடிபணிய வைத்து வென்றார்கள் என்பவையே வரலாற்றின் முக்கிய அம்சங்களாகத் திகழ்ந்தன.

மொத்தத்தில் ஆரியர்கள் வெற்றிக்கொடி நாட்டினார்கள். ஆரியர்களின் கைகளுக்குச் செங்கோல் மாறினாலும், ஆரியர், செமிட்டிக் மற்றும் எகிப்திய எண்ணங்களுக்கும், நடைமுறைகளுக்கும் இடையேயான கருத்து மோதல்களும், போராட்டங்களும், தொடர்ந்து கொண்டே இருந்தன. வரலாற்றுப் பக்கங்களில் அப்போது தொடங்கிய போராட்டம், வெவ்வேறு வகைகளில் இப்போதும், தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

20. கடைசி பாபிலோனிய சாம்ராஜ்யம் மற்றும் முதலாம் டேரியஸ் சாம்ராஜ்யம்

மூன்றாம் டிக்லத் பிலெசர் (Tiglath Pileser III) மற்றும் இரண்டாம் சர்கோன் ஆட்சிகளில் அஸ்ஸிரியா எத்தகைய பிரம்மாண்ட ராணுவ பலம் கொண்ட நாடாக விளங்கியது எனப் பார்த்தோம். இவர்களுள் சர்கோன் அந்நாட்டை அபகரித்தவன் என்பதால், தன் மீது வெறுப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக உண்மையான பெயரை மறைத்துக் கொண்டான். பாபிலோனியர்களைக் கவர்வதற்காக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய அக்காடியன் (Akkadian) சாம்ராஜ்யத்தை நிறுவிய முதலாம் சார்கான் பெயரைத் தனக்குத்தானே சூட்டிக் கொண்டான். பாபிலோன் அந்நியர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நகரம் என்றாலும் கூட, அதுவே அதிக மக்கள் தொகையுடன், நினெவே நகரை விடவும் முக்கியமாக விளங்கியது. ஒரு நகரைக் கைப்பற்ற வேண்டுமெனில் அதைக் கொள்ளை அடித்து, மக்களைக் கொல்லும் காட்டுமிராண்டித்தனத்தைத் தாண்டி பொ.ஆ.மு.8-ம் நூற்றாண்டில் மெஸோபோடேமியா நன்கு விளங்கியது. மக்களைச் சாந்தப்படுத்தி, நன்மதிப்பைப் பெற்று, அவர்களின் இதயங்களை வென்றெடுப்பதையே வெற்றியாளர்கள் விரும்பினர். சர்கோனுக்குப் பிறகு அடுத்த நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு அவ்ஸிரியம் சாம்ராஜ்யம் தாக்குப் பிடித்தது. சர்டானாபாலஸ் எகிப்தின் கீழ்ப்குதியில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.

ஆனாலும் காலப்போக்கில் அஸ்ஸிரியாவின் அதிகாரமும், ஒற்றுமையும், மிக வேகமாகச் சரியத் தொடங்கின. முதலாம் ஃபேரோ சாமெட்டீசஸ் (Pharaoh Psammetichus) தலைமையில் ஆட்சியிலிருந்த வெளிநாட்டவனை எகிப்து தூக்கி எறிந்தது. இரண்டாம் நேச்சோ (Necho) தனது ஆட்சியின் போது, சிரியாவை வெற்றிகொள்ளப் போர் தொடுத்தான். சுற்றியிருந்த எதிரிகளைச் சமாளிக்கவே அஸ்ஸிரியா தடுமாறிக்கொண்டிருந்த காரணத்தால், பெரிய அளவில் தடுக்கவோ எதிர் கொள்ளவோ முடியவில்லை. மெசோபொடேமியா தென் கிழக்கிலிருந்து வந்த ஒரு வகை செமிட்டிக் மக்களான சால்டீன்கள் (Chaldeans), வட கிழக்கிலிருந்து வந்த ஆரியன் மெடீஸ் (Aryan Medes) மற்றும் பாரசீகர்களுடன் இணைந்து, பொ.ஆ.மு.606-ல் நினேவே நகரைக் கைப்பற்றினர்.

வென்றெடுக்கப்பட்ட அஸ்ஸிரியா பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. சியாக்ஸாரஸ் (Cyaxares) ஆட்சியின் கீழ் வடக்கே மீடியன் சாம்ராஜ்யத்தை உருவாக்கி, அதில் நினேவே மற்றும் தலைநகர் எக்பெடானா (Ecbatana) இணைக்கப்பட்டன. கிழக்கே இந்தியா வரை எல்லைகள் நீண்டன. இதன் தெற்கே புதிய சால்டீன் (Chaldean) சாம்ராஜ்யம் – இரண்டாம் பாபிலோனிய சாம்ராஜ்யம் – நெபுகெட்நெசர் (Nebuchadnezzar) (விவிலியத்தில் வரும் அதே நெபுகெத்நெசர்) தலைமையில், செல்வம், செல்வாக்கு அதிகார பலத்துடன் பிரம்மாண்டமாக உருவானது. பாபிலோனைப் பொறுத்தவரை அதன் கடைசி நாள்களும், மிகச் சிறந்த நாள்களும் ஆரம்பமாயின. ஒரு கட்டத்தில் நெபுகெத்நெசர் தனது மகளை சியாக்ஸாரஸுக்குத் திருமணம் செய்து கொடுக்க, இரு சாம்ராஜ்யங்களுக்கு இடையே நல்லுறவும் அமைதியும் நிலவின.

இதற்கிடையே இரண்டாம் நேச்சோ (Necho) தனது தொடர் வெற்றிகளை சிரியாவில் பதிவு செய்து கொண்டிருந்தார். சிறிய அண்டை நாடான ஜூடாவின் (Judah) மன்னன் ஜோசையாவைக் (Josiah) பொ.ஆ.மு.608-ல், மெகிடோ (Megido) போரில் தோற்கடித்து, அவரை வெட்டிச் சாய்த்தார். தொடர்ந்து யூஃப்ரடீஸ் நதி வரை படைகளை நடத்திச் சென்றார். அவர் எதிர்கொண்டது ஏற்கெனவே நலிந்துபோன அஸ்ஸிரியாவை அல்ல; பலம் வாய்ந்த பாபிலோனை. இன்னொரு பக்கம் எகிப்தியர்கள் மீது சால்டீன்கள் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். தோல்வியைத் தழுவிய நேச்சோவின் படைகள் எகிப்துக்குள் விரட்டிய அடிக்கப்பட்டன. பரந்து விரிந்த பாபிலோனிய எல்லைகள், மீண்டும் பண்டைய எகிப்திய எல்லைகளுக்குள் சுருங்கின.

பொ.ஆ.மு.606-539 வரை இரண்டாம் பாபிலோனிய சாம்ராஜ்யம் பாதுகாப்பின்றிச் செழித்தது. வடக்கே வலுவான மீடியன் சாம்ராஜ்யத்துடன் சமாதானமாக இருந்தவரை செழிப்பாக இருந்தது. இடைப்பட்ட அறுபத்தியேழு ஆண்டுகளில், வாழ்வியலில் மட்டுமின்றி, கல்வியறிவிலும் சிறந்து விளங்கியது. அஸ்ஸிரியன் மன்னர்கள், குறிப்பாக சர்டானாபாலஸ் ஆட்சியில், பாபிலோனியா கல்வியிலும் அறிவுசார் செயல்பாடுகளிலும், முன்னிலை வகித்தது.

அஸ்ஸிரியனாக இருந்தாலும் சர்டானாபாலஸ் பின்னாளில் பாபிலோனியனாகவே மாறிவிட்டான். மிகச் சிறந்த நூலகத்தை உருவாக்கினான். காகிதம் கண்டுபிடிக்கப்படாத காலம் என்பதால், ஆரம்ப கால சுமேரியாவிலும், மெசோபொடேமியாவிலும், எழுதப் பயன்படுத்தப்பட்ட களிமண் வில்லைகளைக் கொண்ட நூலகம் அது. அகழ்வாய்வில் தோண்டி எடுக்கப்பட்ட விலை மதிப்பற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க, சில களிமண் வில்லைகள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சால்டீன் வம்ச பாபிலோனிய மன்னர்களுள் ஒருவரான நெபோநிடஸ் (Nebonidus) பழங்கால ஆய்வுகளில் கவனம் செலுத்தும் இலக்கிய ஆர்வலராகவும் இருந்தார். முதலாம் சர்கோனை இணைத்துக்கொள்ள நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து ஆய்வாளர்கள் வழங்கியபோது, அதைப் பதிவு செய்து கொண்டாடினார். ஆனாலும் அவரது ஆட்சியில் ஒற்றுமையின்மை பரவலாக நிலவியது. எனவே அவர்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்த பாபிலோனியாவுக்குள் பல உள்ளூர் கடவுள்களை அறிமுகப்படுத்திக் கோயில்களைக் கட்டினார். பின்னாளில் மக்களிடையே ஒற்றுமை உணர்வை நிலைநாட்ட, ரோமானியர்கள் இதே யுக்தியை வெற்றிகரமாகக் கையாண்டனர்.

ஆனால் ஏற்கனவே பாபிலோனில் பிரபலமாக இருந்த பெல் மர்டூக் (Bel Murduk) கடவுளின் கோயில் பூசாரிகள், தங்கள் செல்வாக்கு குறையும் என்று அஞ்சி, புதுக் கடவுள்களின் அறிமுகத்தை ரசிக்கவில்லை. எனவே வலிமை படைத்த இப்பூசாரிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, நெபோநிடஸை மாற்றிவிட்டு வேறொரு மன்னனை ஆட்சியில் அமர்த்த முடிவெடுத்தனர். இவர்களுக்குச் சாதகமானவனாக அண்டை நாடான மீடியன் சாம்ராஜ்யத்தின் பாரசீக மன்னன் சைரஸ் (Cyrus) கிடைத்தார். அவர் ஏற்கனவே கிழக்கு ஆசியா மைனரிலுள்ள லிடியா (Lydia) மன்னன் க்ரோசஸஸை (Croesus) வென்று தனது புகழை நிலைநாட்டி இருந்தார்.
படைகளைத் திரட்டி பாபிலோனிய கோட்டைச் சுவர்களை முற்றுகையிட, பெரிய அளவில் எதிர்ப்பின்றி பொ.ஆ.மு.53-இல் கதவுகள் திறந்து கொண்டன. சண்டையே போடாமல் அவரது வீரர்கள் பாபிலோனைக் கைப்பற்றினர்.

நெபோநிடஸ் மன்னனின் மகனும் பட்டத்துக்கு இளவரசனுமான பெல்ஷாசர் (Belshazzar), விருந்து கேளிக்கைகளில் மூழ்கிக் கிடந்தார். அப்போது ஒரு கை மேலே எழும்பி, நெருப்பு ஜுவாலைகளால் சுவரின் மீது ‘மேனே, மேனே, டெகெல், உப்ஹாரிசின்’ (Mene, Mene, Tekel, Upharsin) எனச் சங்கேத மொழியில் எழுதியது என விவிலியம் சொல்கிறது. அச்சொற்களின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள டேனியல் என்னும் தீர்க்கதரிசி வரவழைக்கப்பட்டார்.

‘கடவுள் உன்னுடைய ராஜ்ஜியத்தின் ஆயுளைக் கணக்குப் பார்த்து எண்ணி முடித்துவிட்டார். இப்போது உன் ராஜ்ஜியத்தை மெடிஸ் மற்றும் பாரசீகர்களிடம் ஒப்படைத்து விட்டார்’ என்று சங்கேத மொழிக்கான பொருளை டேனியல் விளக்கினார். பெல் மர்டூக் கோயில் பூசாரிகள் சுவரில் எழுதிய சங்கேத மொழியின் அர்த்தத்தை அறிந்தவர்களாக இருந்திருக்கக்கூடும். இளவரசன் பெல்ஷாசர் அன்றிரவே கொல்லப்பட்டார். நெபோநிடஸ் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார். நாட்டில் அமைதி நிலவியது. பெல் மர்டூக் பூசாரிகள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெற, கோயில் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்தன என்கிறது விவிலியம்.

இவ்வாறாகப் பாபிலோனிய மற்றும் மீடியன் சாம்ராஜ்யங்கள் ஒன்றிணைந்தன. சைரஸ் மகன் கேம்பிசஸ் (Cambyses) எகிப்தை அடிபணிய வைத்தார். பின்னாளில் பைத்தியமாகத் திரிந்தவர் தவறுதலாகக் கொல்லப்பட்டார். அவருடைய மரணத்தைத் தொடர்ந்து சைரஸ் அமைச்சர்களுள் ஒருவனான ஹிஸ்டாஸ்பெஸ் (Hystaspes) மகன் முதலாம் டேரியஸ் தி மெடி (Darius the Mede) அரசனானார்.

பழைய நாகரிங்களின் இருக்கையில் அமர்ந்த புதிய ஆரிய சாம்ராஜ்யம் முதலாம் டேரியஸ் தலைமையிலான பாரசீக சாம்ராஜ்யம்தான். இதுவரை உலகம் கண்டிராத மிகப் பெரிய சாமாஜ்யமும் இதுவே. ஆசியா மைனர், சிரியா, பழைய அஸ்ஸிரிய & பாபிலோனிய சாம்ராஜ்யங்கள், எகிப்து, காகஸ்ஸ் & கேஸ்பியன் பிராந்தியங்கள், மீடியா, பாரசீகம் மற்றும் இந்தியாவின் சிந்து நதி வரை பரந்து விரிந்த பிரம்மாண்ட சாம்ராஜ்யமாக இருந்தது.

இப்பிரம்மாண்ட சாம்ராஜ்யம் உருவாகக் காரணம் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட குதிரைகள், ஓட்டுனர்கள், ரதங்கள் மற்றும் சாலை வசதிகள். அதுநாள்வரை, பாலைவனப் பயணத்துக்குப் பயன்பட்ட கழுதைகள், எருதுகள் மற்றும் ஒட்டகங்களே அதிகபட்ச வேகம் கொண்ட விலங்குகள். பாரசீக மன்னர்கள் தங்களது புதிய சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்துக்காகப் பெருவழிச் சாலைகளை அமைத்தனர். தூதர்கள் / செய்தியாளர்கள் அலுவல் பயணிகளுக்காக, அதிகாரப்பூர்வ உரிமங்களுடன் குதிரைகள் தயாராகக் காத்திருக்கும். நாணயங்களின் பயன்பாடும் இருந்தது. துரோகத்தின் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொண்ட மர்டூக் பூசாரிகளாலும் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.

ஆனால் இந்த பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தின் தலைநகராக பாபிலோன் நீடிக்கவில்லை. பாபிலோன் முக்கிய நகரமாக விளங்கினாலும் அது மெள்ள மெள்ள செல்வாக்கை இழக்கத் தொடங்கியிருந்தது. ஸூஸா (Susa) புதிய சாம்ராஜ்யத்தின் தலைநகராகவும், பெர்சியோபோலிஸ் (Persepolis), எக்பாடனா (Ecbatana) ஆகியவை ஏனைய முக்கிய நகரங்களாகவும் உருவெடுத்தன. நினேவே நகரம் ஏற்கெனவே கைவிடப்பட்ட நிலையில், சிதிலமடைந்து, இடுபாடுகளில் மூழ்கிப் பாழடைந்து போனது.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *