Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #15

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #15

29. மாமன்னர் அசோகர்

புத்தரின் மிக உயரிய மற்றும் உன்னதமான போதனைகளுள் முக்கியமானது: ஒரு மனிதருக்கு மிகப் பெரிய நன்மை தரக்கூடியாது எதுவென்றால் சுயத்தை அடக்கி வெல்லுதலே. ஆனால் புத்தர் இறந்து பல தலைமுறைகள்வரை, உலகளவில் அவருடைய போதனைகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பின்னாளில் உலக வரலாற்றின் மாமன்னர்களுள் ஒருவராக விளங்கிய அசோகரை அவரது போதனைகள் ஈர்த்தன.

இந்தியா மீது படையெடுத்த அலெக்ஸாண்டர் சிந்து நதிக்கரையில் மன்னன் போரஸுடன் போரிட்டதைப் பார்த்தோம். போரஸைத் தோற்கடித்த பின்னர் கங்கை நதிக்கரையைத் தாண்டி இந்தியா முழுவதையும் வெற்றிகொள்ள எண்ணினார். ஆனால் அவருடைய மேசிடோனிய வீரர்கள் தொடர்ந்து போரிட மறுத்துவிட்டனர். இந்தியாவில் தெரியாத பகுதிகள், மாறும் தட்பவெப்பம் ஆகியவற்றால் மிகவும் களைத்துப்போன கிரேக்க வீரர்கள், தாயகம் திரும்புவதில் உறுதியாக இருந்தனர்.

அலெக்ஸாண்டர் இந்தியாவை விட்டு விலகிய பிறகு, பொ.ஆ.மு.321-ல் சந்திரகுப்த மௌரியர் மாமன்னராக முடிசூடிக் கொண்டார். வட இந்தியாவில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பிறகு, அலெக்ஸாண்டரின் பிரதிநியாக பஞ்சாபை ஆண்டுகொண்டிருந்த முதலாம் செல்யூகஸ் (Selucus I) பொ.ஆ.மு.303-ல் தோற்கடித்துக் கடைசி கிரேக்க அடையாளத்தையும் இந்தியாவை விட்டு விரட்டி அடித்தார். சந்திரகுப்த மௌரியரின் ராஜ்யத்தை அவரது மகன் பிந்துசாரன் விரிவுபடுத்தினார். பிந்துசாரனின் மகனும் சந்திரகுப்தரின் பேரனுமான அசோகர் பொ.ஆ.மு.264-ல் இன்னும் பிரமாண்டமாக ஆப்கானிஸ்தான் தொடங்கி மதராஸ் வரை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார்.

ஆரம்பத்தில் அசோகரும் அவரது அப்பா மற்றும் தாத்தாவைப் போலவே இந்திய தீபகற்பம் முழுவதையும் ஆளுகைக்குள் கொண்டுவருவதில் நாட்டம் கொண்டவராக இருந்தார். மதராஸின் கிழக்குக் கடற்கரை நாடான கலிங்கத்தின் மீது பொ.ஆ.மு.255-ல் படையெடுத்தார். கலிங்கத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் போரினால் நிகழ்ந்த துன்பங்களையும் துயரங்களையும் மரணங்களையும் கண்டு மனம் வெதும்பினார். போர் மீது வெறுப்பு உண்டானது. இனி ஆயுளுக்கும் எந்த நாடு மீதும் போர் புரிவதில்லை என்று முடிவெடுத்தார். பௌத்தத்தின் அமைதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்துத் தனது வெற்றிகள், இனி நாடுகளை அல்ல; மதங்களை வென்றெடுப்பதே என உறுதி பூண்டார்.

மனித குலத்தின் சிக்கலான வரலாற்றுக் காலத்தில் சுமார் 28 ஆண்டுகள் ஒளிமயமான ஆட்சியை அசோகர் வழங்கினார். குடிநீருக்காக ஏரிகள், குளங்கள், கிணறுகள் வெட்டினார். நிழல் தர மரங்களை நட்டார். மருத்துவ மூலிகைகளுக்காகத் தோட்டங்கள் அமைத்தார். நோயாளிகளுக்காக மருத்துவமனைகள் கட்டினார். பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் நலன்களுக்காகத் தனி அமைச்சகத்தை உருவாக்கினார். பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். பௌத்த தத்துவங்களைப் பரப்ப சமய போதகர்கள் காஷ்மீர், பாரசீகம், சிலோன், அலெக்ஸாண்ட்ரியா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.

இவ்வாறாக அசோகர் ராஜாதி ராஜாவாக விளங்கினார். அவரது காலகட்டத்தைத் தாண்டியவராக சாதனைகள் படைத்தார். தனது பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இளவரசனையோ அமைப்பையோ நியமிக்காததால், அசோகன் மறைந்த நூறாண்டுகளுக்குள் அவனது சாதனைகள், வெறும் நினைவுகளாக மக்கள் மனங்களில் மட்டுமே நிலைத்தன.

பூஜை செய்யும் இனமாகவும் இந்திய சமூகத்தில் உயரிய செல்வாக்கு பெற்ற இனமாகவும் விளங்கும் பிராமணர்கள், புத்தரின் வெளிப்படையான போதனைகளை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர். பௌத்தத்தின் செல்வாக்கு மேலும் பரவாமலிருக்க படிப்படியாகக் குறைத்து மதிப்பிடத் தொடங்கினர். இந்து மதத்தின் எண்ணற்ற வழிபாட்டு முறைகளும் தெய்வங்களும் மீண்டும் மக்களிடையே பிரபலமடைந்தன. ஜாதி இன்னும் வீரியத்துடன் சிக்கலானது.

பல நூற்றாண்டுகளாக பௌத்தமும் பிராமண மதமும் அருகருகே செழித்து வளர்ந்து கொண்டிருந்தன. காலப்போக்கில் பௌத்தம் வரவேற்பின்றிச் செல்வாக்கு இழக்க, பிராமண மதம் பல்வேறு வடிவங்களில் அதற்கு மாற்றாக அமைந்தது. ஆனால் இந்தியாவைத் தாண்டி, ஜாதிகளின் கட்டமைப்புகளைக் கடந்து சீனா, சயாம், சிலோன், பர்மா, ஜப்பான் நாடுகளில் இன்றைக்கும் பௌத்தம் முக்கிய மதமாக விளங்குகிறது.

30. கன்ஃப்யூஷியஸ் மற்றும் லாவோ-ட்ஸே

அந்த அழகான நூற்றாண்டில், அதாவது, பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டில், மனிதன் இனத்தின் இளைமைக்காலம் துளிர்விடத் தொடங்கியபோது, கன்ஃப்யூஷியஸ் மற்றும் லாவோ-ட்ஸே ஆகிய இரு பெரும் ஆளுமைகள் சீனாவில் தோன்றினர். இந்த வரலாற்றுப் பதிவில் சீனாவைப் பற்றிய ஆரம்பகாலக் குறிப்புகள் சிறிதளவே கூறப்பட்டுள்ளன. சீனாவின் ஆரம்ப கால வரலாறு தெளிவாக இல்லாத காரணத்தால், இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் புதிய சீனாவிலுள்ள ஆய்வாளர்களையும் தொல்லியல் நிபுணர்களையும் ஆய்வு செய்யக் கேட்டுக் கொண்டோம். கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய ஆய்வாளர்களும் தொல்லியல் நிபுணர்களும் அவரவர் நாடுகளில் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பண்டைக் கால முதல் சீன நாகரிகம், ஆதிகால ஹீலியோலித்திக் கலாசாரத்திலிருந்து, மிகப் பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் உருவானது. எகிப்து மற்றும் சுமேரிய நாகரிகங்களைப் போன்று அந்த கலாசாரத்துக்கே உரிய பொதுவான குணங்கள் நிலவின. கோயில்களை மையமாகக்கொண்ட பூசாரிகளுக்கும் பூசாரி அரசர்களுக்கும் உயிர்பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த எகிப்திய மற்றும் சுமேரிய நாகரிகங்களைப் போலவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த மத்திய அமெரிக்க மாயன் வாழ்க்கையைப் போலவும் பண்டைய சீன நகர வாழ்க்கை இருந்திருக்க வேண்டும்.

மனிதர்களை நரபலி கொடுக்கும் பழக்கம் இருந்திருப்பின், அதற்குப் பதிலாக விலங்குகளைப் பலி தரும் வழக்கத்துக்கு, நீண்ட காலம் முன்பே மாறியிருக்க வேண்டும். சித்திர எழுத்து வடிவம் பொ.ஆ.மு.1000-க்கு முன்பே வளரத் தொடங்கி இருந்தது. பண்டைய ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய நாகரிகங்களுக்கும், வடக்கு மற்றும் பாலைவன நாடோடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைப்போல், பழமையான சீன நாகரிங்களுக்கும் வடக்கு எல்லை நாடோடிகளுக்கும் மோதல் மூண்டது.

ஒரே வகையான மொழி மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்ட ஹன்கள் (Huns), மங்கோலியர்கள் (Mongols), துருக்கியர்கள் (Turks), தார்த்தர்கள் (Tartars) உள்ளிட்ட ஏராளமான இன மக்கள் இருந்தனர். வடக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நார்டிக் மக்கள் எவ்வாறு மாறியும் பிரிந்தும் இணைந்தும் மீண்டும் இணைந்தும் கொண்டார்களோ அதேபோல் இவர்களும் பெயரில் மட்டுமே வேறுபட்டனர். நார்டிக் மக்களைவிட நீண்ட காலம் முன்பிருந்தே மங்கோலிய நாடோடிகளிடம் குதிரைகள் காணப்பட்டன. பொ.ஆ.மு.1000-ல் ஆல்டாய் (Altai) மலைப்பகுதிகளில் இரும்பைக் கண்டுபிடித்தனர். மேற்கத்திய நாடோடிகளைப் போலவே கிழக்கத்திய நாடோடிகளும் ஏதோவொரு வகை அரசியல் ஒற்றுமையுடன் இந்தப் பண்பட்ட பிரந்தியங்களின் வெற்றியாளர்களாக உருவெடுத்தனர்.

ஐரோப்பிய மற்றும் மேற்காசிய ஆரம்பகால நாகரிகங்கள், நார்டிக் மற்றும் செமிட்டிக் நாகரிகங்களாக இருந்ததுபோல், சீன நாகரிகம் மங்கோலிய நாகரிகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பண்டைய சீன நாகரிகம் மாநிற மக்களைக் கொண்டதாகவும், ஆரம்ப கால எகிப்திய, சுமேரிய, திராவிட நாகரிகங்களின் ஒரு பகுதியாகவும் இருதிருக்கக்கூடும். சீனாவின் முதல் வரலாறு பதிவு செய்யப்பட்டபோதே வெற்றிகளும் கலப்புகளும் தொடங்கிவிட்டன. பொ.ஆ.மு.1750-ல் சீனாவில் ஆங்காங்கே சிறு சிறு ராஜ்ஜியங்களும், நகரங்களும் பெருமளவில் பரவியதாகவும் அவை அனைத்தும் ‘சொர்க்கத்தின் மகன்’ (Son of Heaven) என்றழைக்கப்படும் பூசாரி சக்ரவர்த்திக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.

பொ.ஆ.மு.1125-ல் ஷாங்க் (Shang) வம்சத்தின் ஆட்சி முடிவடைந்து, சௌ (Chow) வம்சம் ஆட்சிக்கு வந்தது. இந்தியாவில் அசோகர் மற்றும் எகிப்தில் டோலெமிக்களின் ஆட்சிகள் வரை சீனாவில் சௌ வம்சத்தின் ஆட்சி நடைபெற்றது. சௌ ஆட்சியின் காலத்திலேயே சீனா பல்வேறு பகுதிகளாகச் சிதறியது. ஹன்னிஷ் மக்கள் பல அரசுகளை நிறுவினர். உள்ளூர் சிற்றரசர்கள் கப்பம் கட்ட மறுத்துச் சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டனர். பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டில் 5000-6000 சுதந்திர ராஜ்ஜியங்கள் இருந்தன என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. சீனர்கள் தங்கள் ஆவணங்களில் இதைக் ‘குழப்பமான காலம்’ (Age of Confusion) எனப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்தக் குழப்பமான காலத்திலும் பல அறிவார்ந்த செயல்களும் நுண் கலைகளும் நாகரிக வாழ்வும் செழித்தன. சீன வரலாறு குறித்து நாம் ஆய்வு செய்யும்போது, மிலேடஸ் (Miletus), ஏதென்ஸ், பெர்காமம் (Pergamum), மேசிடோனியா நகரங்களைப் போன்ற புராதனம் அதனிடமும் இருந்தது தெரிய வருகிறது. இப்போதைக்கு சீன வரலாற்றின் இக்காலம் நமக்குச் சுருக்கமாகவும் தெளிவற்றதாகவும் இருப்பதற்குக் காரணம், ஒத்திசைவான மற்றும் தொடர் கதையாக அதைக் கட்டமைக்கத் தேவையான அறிவு நம்மிடம் போதுமானதாக இல்லை என்பதே.

பிரிந்த கிரேக்கத்தில் தத்துவ ஞானிகள் இருந்ததுபோல், சிதறிய யூதத்தில் தீர்க்கதரிசிகள் இருந்ததுபோல், சீனத்தில் தத்துவாதிகளும் ஆசிரியர்களும் இருந்தனர். குழப்பத்தில் நன்மை பிறக்கும் என்பதுபோல், பாதுகாப்பின்மையும் நிலையாமையும் மனது மேம்பட விரைவுபடுத்தியது. லூ என்னும் பகுதியைச் சேர்ந்த வசதியும் அதிகாரமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் கன்ஃப்யூஷியஸ். ஞானத்தைக் கண்டறியவும் கற்பிக்கவும் கிரேக்கத்தைப் போலவே இங்கும் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்கினார்.

சீனத்தில் அப்போது நிலவிய சட்ட மீறல்களும் ஒழுங்கின்மையும் அவரை வருத்தியது. சிறப்பான அரசையும் மேம்பட்ட வாழ்க்கையையும் கட்டமைக்கவும் சட்டமன்ற மற்றும் கல்வி யோசனைகளை அமல்படுத்தவும், தகுதியான இளவரசர்களைத் தேடி, சீனாவிலுள்ள ஒவ்வொரு ராஜ்ஜியத்துக்கும் பயணம் செய்தார். ஆனால் அவரது எண்ணங்களைச் செயல்படுத்த ஏற்ற சீடனாக எந்த இளவரசனும் தொடக்கத்தில் கிடைக்கவில்லை. தேடி அலைந்து ஓர் இளவரசன் கிடைத்த நிலையில், பொறாமை கொண்டவர்கள் நீதிமன்றம் மூலம் சூழ்ச்சி செய்து அவரது மறுசீரமைப்புத் திட்டங்களை தோல்வியடைய வைத்தனர். சற்றேறக் குறைய நூற்றி ஐம்பது ஆண்டுகள் கழித்து, கன்ஃப்யூஷியஸ் போலவே, கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ, சீடனைத் தேடி அலைந்தார். சில காலம் சிசிலியில் உள்ள ஸைராக்யூஸை (Syracuse) ஆண்ட டயோனிசையஸுக்கு (Dionysius) ஆலோசகராக இருந்தார்.

‘எந்தவொரு புத்திசாலி அரசனும் என்னை ஆசிரியராக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. நான் இறக்கும் நேரம் வந்துவிட்டது’ என சொல்லிக்கொண்டே, எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஏமாற்றத்துடன் கன்ஃப்யூஷியஸ் மரணத்தைத் தழுவினார். ஆனால், வாழ்க்கையின் கடைசி காலத்தில் அவர் கற்பனை செய்ததைவிடவும், அவரது மறைவுக்குப் பிறகு, போதனைகள் பரவின. சீன மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. சீனர்கள் கொண்டாடும் மூவரில் ஒருவர் கன்ஃப்யூஷியஸ். ஏனைய இருவர் புத்தர் மற்றும் லாவோ-ட்சே.

கன்ஃப்யூஷியஸ் போதனைகள் உயர்குடிப் பிறப்பினர் அல்லது வசதி மிக்கவரின் வழியே. புத்தரின் சுய புலனடக்க அமைதி, கிரேக்கரின் வெளியுலக ஞானம், யூதர்களின் நேர்மை ஆகியவை போன்று கன்ஃப்யூஷியஸ் தனிநபர் நடத்தையில் கவனம் செலுத்தினார். அனைத்து சிந்தனைவாதிகளிலும் இவரே மிகச் சிறந்த பொது நலம் பேணுபவராக விளங்கினார். உலக மக்களின் துன்பங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றிக் கவலைப்பட்டார்.

உலகம் உன்னதமாக இருக்க வேண்டுமெனில், அனைவரும் உன்னதமானவர்களாக, உத்தமர்களாக இருத்தல் அவசியம் என்றார். தனிநபர் நடத்தையை, ஈடு இணையற்ற வகையில் ஒழுங்குபடுத்த எண்ணினார். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் சிறப்பான சட்டங்களையும் விதிகளையும் அமல்படுத்த நினைத்தார். கண்ணியமான, பொது உணர்வுள்ள, கண்டிப்பான கட்டுப்படும், ஒழுக்கமும் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் திகழ விரும்பினார். வட சீனத்தில் ஏற்கனவே வளர்ந்து வரும் இந்நிலைக்கு, நிரந்தர வடிவம் கொடுத்தார்.

சௌ பரம்பரை ஆட்சியின் அரசு நூலகப் பொறுப்பாளராக லாவோ-ட்ஸே பதவி வகித்தார். அவரது போதனைகள் கன்ஃப்யூஷியஸைவிடவும் புதிராகவும் பூடகமாகவும் இருந்தன. ஆசைகள், அதிகாரங்கள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் விலகி இருக்கவேண்டும் என்றும் கடந்த காலத்தின் எளிமையான கற்பிதமான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விரும்பினார். அதையே போதித்தார். அவரது எழுத்துகள் சுருக்கமாகவும் தெளிவற்றதாகவும் இருந்தன. அவருடைய போதனைகள் புதிர்களாகவும் விடுகதைகளாகவும் விளங்கின. புத்தரின் மரணத்துக்குப் பிறகு அவரது போதனைகளுக்கு ஏற்பட்ட நிலையே, லாவோ-ட்ஸே மரணத்துக்குப் பின்னர் அவரது போதனைகளுக்கும் ஏற்பட்டன.

லாவோ-ட்ஸே காலத்துக்குப் பிறகு வந்தவர்கள் அவரது போதனைகளைச் சிதைத்துத் தங்கள் கருத்துகளைச் இடைச்செருகல்களாகச் சேர்ந்தனர். சிக்கலான மற்றும் அசாதாரண அனுசரிப்புகளும் மூடநம்பிக்கைகளும் திணிக்கப்பட்டன. இந்தியாவைப் போலவே சீனாவிலும் பழைமையின் குழந்தைத்தனமான கடந்த கால மந்திரங்களும் புராணக் கதைகளின் கருத்துகளும், உலகின் புதிய சிந்தனைகளைச் சமாளிக்கப் போராடின. இருப்பினும் பகுத்தறிவற், பழைமையான அனுசரிப்புகளே வெற்றி பெற்றன.

பண்டைய சுமேரிய, எகிப்திய மதங்களைப் போன்று, இப்போதைய சீனாவில், பௌத்தமும், தாவோயிசமும், பிட்சு, விகார், பூசாரி என மத அடையாளங்களாகிவிட்டன. ஆனால் கன்ஃப்யூஷியஸ் போதனைகள் மட்டும் எளிதாகவும், தெளிவாகவும், நேரடியாகவும் இருந்ததால், எந்த வகையான சேதாரங்களுக்கும் சிதைவுகளுக்கும் உட்படவில்லை.

ஹுவாங்க்-ஹோ ஆறு ஒடும் வடக்கு சீனப் பகுதி கன்ஃப்யூஷிய தத்துவங்களால் ஈர்க்கப்பட, யாங்க்சி-யாங்க் ஆறு ஓடும் தென் சீனப் பகுதி லாவோ-ட்ஸே தத்துவங்களால் ஈர்க்கப்பட்டது. கன்ஃபூஷியஸ் சிந்தனைகளுடன் இறுக்கமான மனப்பான்மை, நேர்மை மற்றும் பழைமைவாத சிந்தனைகள் கொண்ட வடக்கின் முக்கிய நகரமாக பீகிங்க் (Peking) விளங்கியது. லாவோ-ட்ஸே சிந்தனைகளுடன் சந்தேகம், கலைநயம், தாராள சிந்தனை, பரிசோதித்து உணரும் குணம் கொண்ட தெற்கின் முக்கிய நகரமாக நான்கிங்க் (Nanking) விளங்கியது. இவ்விரு தத்துவங்களுக்கு இடையேயான மோதல் நீண்ட காலமாகவே நிலவியது தெரியவந்துள்ளது.

பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டில் கன்ஃப்யூஷியஸ் மற்றும் லாவோட்-ட்ஸே தத்துவ மோதல்கள் உச்சத்தை எட்டின. கன்ஃப்யூஷியஸ் தத்துவங்களுக்கு சௌ வம்சம் ஆதரவளித்த காரணத்தால் மனம் வருந்தி வெறுத்துப்போன லாவோ-ட்ஸே அரசவையிலிருந்து வெளியேறியதுடன், பொது வாழ்க்கையையும் துறந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். காலப்போக்கில் சௌ வம்சம் மதிப்பிழந்து பலவீனமானது.

வடக்கிலுள்ள ட்சி-இ (Ts’i), ட்சி’இன் (Ts’in), யாங்க்ஸி (Yangtse) பள்ளத்தாக்கின் தீவிர ராணுவ பலமிக்க சூ (Ch’u) ஆகிய மூன்று துணை அதிகார மையங்களும் சீனாவில் நிலவிய இக்கட்டான சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன. ஒரு கட்டத்தில் ட்சி-இ மற்றும் ட்சி’இன் ஆகிய இரண்டும் கூட்டணி அமைத்து சூ-வைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. ஆயுதங்களைப் பறிமுதல் செய்து அமைதியை நிலைநாட்டின. காலப்போக்கில் ட்சி’இன் முக்கியத்துவம் அதிகரித்தது. இந்தியாவில் அசோகரின் ஆட்சிகாலத்தில், சீன ட்சி’இன் வம்சத்தைச் சேர்ந்த மன்னர், மதிப்பிழந்து கொண்டிருந்த சௌ வம்ச மன்னரின் அதிகாரங்களைக் கைப்பற்றிக்கொண்டார். பொ.ஆ.மு.246-ல் மன்னராகவும், பொ.ஆ.மு.220-ல் சக்ரவர்த்தியாகவும் முடிசூட்டிக்கொண்ட ஷி-ஹுவாங்க்-டி (Shi-Hwang-ti) சீன வரலாற்றில் ‘பிரபஞ்சத்தின் முதல் சக்ரவர்த்தி’ என அழைக்கப்படுகிறார்.

ஒரு வகையில் அலெக்ஸாண்டரை விடவும் ஷி-ஹுவாங்க்-டி அதிர்ஷ்டசாலி எனக் கூறலாம். மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அலெக்ஸாண்டர் அதை ஆள்வதற்கு நீண்ட காலம் உயிர் வாழவில்லை. ஆனால் ஷி-ஹுவாங்க்-டி முப்பத்தாறு ஆண்டுகள் மன்னராகவும் சக்ரவர்த்தியாகவும், தனது ஆளுகைக்கு உட்பட்ட பெரும் நிலத்தை ஆண்டார். சீன மக்கள் ஒற்றுமையாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ்ந்து, புதிய சகாப்தத்தை உருவாக்க அவரது ஆட்சியே காரணமானது. வடக்கு பாலவனப் பிரதேசங்களிலிருந்து ஊடுருவிய ஹன் (Hunn) படைகளை, மேலும் முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தக் கடுமையாகப் போராடினார். பிறகாலத்தில் அந்நியப் படைகள் சீனாவுக்கு நுழையாமலிருக்க ‘சீனப் பெருஞ்சுவர்’ (Great Wall of China) கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார்.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *