Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #16

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #16

31. வரலாற்றில் தடம் பதிக்கும் ரோமாபுரி

இந்தியாவின் வடமேற்கு எல்லையிலுள்ள தடைகள், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலுள்ள மலைத் தொடர்கள் ஆகியவை பல்வேறு நாகரிகங்களுக்கு இடையே மிகப் பெரிய பிரிவினையை ஏற்படுத்தினாலும் இவற்றின் வரலாற்றில் பொதுவான ஒற்றுமை இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பண்டைய உலகின் மிதமான மற்றும் செழிப்பான ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் ஹீலியோலித்திக் கலாசாரம் பரவியதையும் கோயில் அமைப்பு, பூசாரி ஆட்சியாளர்கள், பலி கொடுக்கும் பாரம்பரியம் ஆகியவை நிலவியதையும் பார்த்தோம். இவர்கள் அனைவரும் மனித குலத்தின் மத்திய இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிற மக்கள்.

பருவகாலப் புல்வெளிப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்த நாடோடிகள் தங்கள் சொந்த குணங்களையும் மொழியையும் பழைய நாகரிகங்கள் மீது திணித்தனர். அவர்களை அடிபணிய வைத்து புதிய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் தூண்டிவிட்டனர். மெஸொபொடேமியா பிராந்தியத்தில் எலமைட் (Elamite), செமிட்டி (Semite), நார்டிக் மெடிஸ், பாரசீகர், கிரேக்கர்; எஜியன் பிராந்தியத்தியத்தில் கிரேக்கர்; இந்தியாவில் ஆரியர்; எகிப்தில் பூசாரி நாகரிகம்; சீனாவில் ஹன் (Hun) ஆகியோர் இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமானார்கள். கிரேக்கமும் வட இந்தியாவும் ஆரியமயமானது போலவும் மெஸொபொடேமியா செமிட்டிக் மற்றும் ஆர்யமயமானதும் போலவும் சீனா மங்கோலியமானது.

செல்லுமிடமெல்லாம் இந்த நாடோடிகள் பேரழிவை ஏற்படுத்தினாலும் வினாக்கள் எழுப்பும் புத்துணர்வையும் தார்மிகக் கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்தினர். காலங்காலமாக நிலவிய பழமை நம்பிக்கைகள் குறித்துக் கேள்வி கேட்டனர். பூசாரிகள், கடவுள்கள் அல்லாத தலைவர்களை மன்னர்களாகத் தேர்ந்தெடுத்தனர். பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டைத் தொடர்ந்து வந்த அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு பண்டைய பாரம்பரியங்கள் நிராகரிக்கப்பட்டுப் புதிய தார்மிக உணர்வும் அறிவுசார் விசாரணைகளும் தோன்றின. மனித இன வரலாற்றிலேயே முன்னெப்போதும் இதுபோன்ற இணைந்த உணர்வும் முற்போக்கான இயக்கமும் உருவாகவில்லை. பூசாரிகள் மட்டுமே இரகசியம் காத்த படிப்பும் எழுத்தும் ஆள்வோரிடமும் வசதி படைத்தவரிடமும் பரவலானது. குதிரைகளும் சாலை வசதிகளும் பெருகியதால், பயணங்களும் போக்குவரத்தும் எளிதாயின. வணிகத்தை இன்னும் புதுமையாக்கவும் சுலபமாக்கவும் நாணயங்கள் தோன்றின.

இனி நமது கவனத்தைச் சீனாவிலிருந்து, பண்டைய உலகின் கிழக்கிலிருந்து, மத்திய தரைக் கடலின் மேற்குப் பகுதிக்குத் திருப்புவோம். மனித விவகாரங்களில் மிக முக்கியப் பங்களிக்கப் போகும் ரோமாபுரி என்னும் ஒரு நகரத்தின் தோற்றம் பற்றிப் பார்ப்போம்.

இத்தாலியைப் பற்றி இதுவரை நாம் அதிகம் பேசவில்லை. பொ.ஆ.மு.1000-ல் மக்கள் தொகை அதிகமில்லாத மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதியாக இது விளங்கியது. ஆரிய மொழி பேசும் பழங்குடியினர் இந்தத் தீபகற்பத்தில் சிறு நகரங்களை உருவாக்கினர். தெற்குப் பகுதியில் கிரேக்கக் குடியிருப்புகள் தோன்றின. கிரேக்கத்தின் ஆரம்ப கால குடியிருப்புகளின் மாண்பையும் அழகையும் அறிந்துகொள்ள பேஸ்டம் (Paestum) பகுதியிலுள்ள சிதிலங்களும் இடிபாடுகளும் உதவும். ஆரியர்கள் அல்லாத, ஏஜியன் மக்களைப் போன்ற எட்ரூஸ்கான் (Etruscan) மக்கள் தீபகற்பத்தின் மையப்பகுதிக்குள் ஊடுருவினர். ஆரிய இனத்தவரை அடிமைப்படுத்தி அவர்களுடைய பழக்க வழக்கங்களை மாற்றினர்.

எட்ரூஸ்கான் மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட, இலத்தீன் மொழி பேசும் மக்களை கொண்ட, டைபர் ஆற்றங்கரையிலுள்ள சிறு வணிக நகரமாக, வரலாற்றின் வெளிச்சத்துக்கு ரோமாபுரி வருகிறது. கார்தேஜின் ஃபோனீஷியன் (Phonecian City of Carthage) நகரம் தோன்றிய அரை நூற்றாண்டுக்குப் பிறகு, முதல் ஒலிம்பியாட் தோன்றிய இருபத்திமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பொ.ஆ.மு.753-ல் ரோமாபுரி உருவானதாகப் பழைய காலவரிசை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ரோமாபுரி நகரின் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட எட்ரூஸ்கான் கல்லறையின் காலம் பொ.ஆ.மு.753- விடவும் பழமையானது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பொ.ஆ.மு.6-ம் நூற்றாண்டில் எட்ரூஸ்கான் மன்னர்கள் (பொ.ஆ.மு.510) இல் ரோமாபுரியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிளேபியன் (Plebeian) ஏன்றழைக்கப்படும் பேட்ரீஷியன் (Patrician) உயர் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் ரோமாபுரி குடியரசானது. இலத்தீன் மொழி பேசுவோர் என்னும் ஒரு வேறுபாட்டைத் தவிர, இவற்றுக்கும் ஏனைய உயர்குடி கிரேக்க குடியரசுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

ரோமாபுரியின் உள்நாட்டு வரலாறு பல நூறாண்டுகளாக அதன் விடுதலைக்காகவும் ஆட்சியில் பங்கு பெறுவதற்காகவும் பிளேபியன்கள் மேற்கொண்ட நீண்ட நெடிய போராட்டமாகவே காணப்படுகிறது. இவற்றைக் கிரேக்கத்தில் நடைபெற்ற மோதல்களுக்கு இணையாக, ஜனநாயகத்துக்கும் பிரபுத்துவத்துக்கும் இடையேயான மோதலாகக் கூறலாம். நிறைவாக பிளேபியன்கள் பழங்கால சமூகங்களில் காணப்படும் பெரும்பான்மைப் பிரத்யேகத் தடைகளைத் தகர்த்து அவர்களுடன் சமநிலையில் பணியாற்றும் நடைமுறையை நிறுவினர். பழைய பிரதேசங்களை அழித்து, அதிக அளவில் ‘வெளியாட்களுக்கு’ குடியுரிமை அளித்ததன் மூலம் ரோமாபுரியை அனைவருக்கும் ஏற்ற நகராக மாற்றினர். உள்ளூரில் ரோமாபுரி தடுமாறினாலும் வெளியே தனது அதிகாரத்தை எல்லைகள் தாண்டி விரிவுபடுத்திக் கொண்டிருந்தது.

ரோமாபுரியின் ஆதிக்க விரிவு பொ.ஆ.மு5-ம் நூற்றாண்டில் தொடங்கியது. அதுவரை தொடர்ந்து பல போர்களில் ஈடுபட்டாலும் குறிப்பாக, எட்ரூஸ்கான்களிடம் தோல்வியையே தழுவினர். ரோமாபுரியிலிருந்து ஒரு சில மைல்கள் தொலைவில் மட்டுமே இருந்த வீ (Veii) என்னும் பெயரிலான எட்ரூஸ்கான் கோட்டையை பலமுறை முயன்றும் ரோமானியர்களால் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் பொ.ஆ.மு.474-ல் எட்ரூஸ்கான்கள் மிகப் பெரிய சோகத்தையும் இழப்பையும் சந்தித்தனர்.

சிசிலியில் நிறுத்தப்பட்டிருந்த எட்ரூஸ்கானின் கப்பற்கடையை சைராக்யூஸ் கிரேக்கர்கள் அழித்தனர். அதே தருணம் நசர்டிக் கௌல்கள் மேற்கிலிருந்து ஊடுருவினர். இவ்வாறாக ரோமானியர்களுக்கும் கௌல்களுக்கும் இடையே எட்ரூஸ்கான்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி, வரலாற்றிலிருந்து ஒட்டு மொத்தமாக மறைந்தே போனார்கள். வீ கோட்டை நெடிய போராட்டத்துக்குப் பின்னர் ரோமானியர்களிடம் வீழ்ந்தது. கௌல்களும் பொ.ஆ.மு. 390-ல் ரோமாபுரி மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினாலும் கேபிடால் (Capitol) நகரைப் பிடிக்க முடியவில்லை.

கௌல்களின் தாக்குதல்கள் ரோமாபுரியை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக இன்னும் வலுப்படுத்தியது. எட்ரூஸ்கான்கள் மீது தாக்குதல் தொடுத்த ரோமானியர்கள் அவர்களை முற்றிலுமாக அழித்தனர். ஆர்னோ (Arno) முதல் நேபிள்ஸ் (Naples) வரை மத்திய இத்தாலி முழுவதும் தங்களது ஆதிக்கத்தை ரோமானியர்கள் விரிவுபடுத்தினர். பொ.ஆ.மு.300 வரை இந்த அதிகார விரிவாக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது. இத்தாலியில் இவர்களது வெற்றிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நேரம் மேசிடோனியா மற்றும் கிரேக்கத்தில் ஃபிலிப்ஸின் ஆதிக்கமும் பின்னர் அவரது மகன் அலெக்ஸாண்டரின் படையெடுப்புகள் எகிப்து தொடங்கி சிந்து நதிக்கரை வரை பரந்து விரிந்தது. அலெக்ஸாண்டரின் மரணத்துக்குப் பிறகு அவரது சாம்ராஜ்யம் சிதறியதைத் தொடர்ந்து, கீழை நாடுகளில் ரோமானியர்களின் புகழ் நாகரிக உலகில் பரவ ஆரம்பித்தது.

ரோமானிய அதிகாரத்துக்கு வடக்கே கௌல்கள்; தெற்கே அதாவது சிசிலியில், மேக்னா க்ரேஷியா (Magna Graecia) என்னும் கிரேக்க குடியிருப்புகள். கௌல்கள் போர்க்குணம் மிக்கவர்கள் என்பதால், ரோமானியர்கள் எல்லைகளைப் பாதுகாக்கக் கோட்டைகளால் அரண் அமைத்தனர். டெரண்டம் (Terentum) தலைமையிலான தெற்கிலுள்ள கிரேக்க நகரங்களும் சைராக்யூஸ் தலைமையிலான சிஸிலி நகரமும் ரோமானியர்கள் பயப்படும் அளவுக்கு அச்சுறுத்தவில்லை. புதிய வெற்றியாளர்களை எதிர்க்க உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அலெக்ஸாண்டரின் மரணத்துக்குப் பிறகு, அவரது சாம்ராஜ்யம் சிதறித் தளபதிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே எவ்வாறு பிரிந்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அலெக்ஸாண்டரின் உறவினரான ஃபைரஸ் (Pyrrhus) இத்தாலியின் தென் பகுதி ஏட்ரியாட்டிக் (Adriatic) கடலருகே உள்ள எபிரஸ் (Epirus) நகரின் மன்னனாக முடிசூட்டிக்கொண்டார். மேசிடோனியா தொடங்கி மேக்னா கிரேசியா வரை ஃபிலிப்பைப்போல ஆளவும் டெரண்டம் சைரக்யூஸ் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளின் பாதுகாவலாராக வேண்டுமென்றும் விரும்பினார்.

அக்காலத்திலேயே ஃபைரஸ்ஸிடம் மிகத் திறமையான படைகள் இருந்தன. மிகச் சிறந்த போர் வீரர்களைக் கொண்ட காலாட்படையும் மேசிடோனிய குதிரைப்படைக்கு இணையான குதிரைப்படையும் இருபது போர் யானைகளையும் வைத்திருந்தார். பொ.ஆ.மு.280-ல் ஹீராக்ளியா (Heraclea) மற்றும் பொ.ஆ.மு.279-ல் ஆஸ்குலம் (Ausculum) ஆகிய இடங்களில் நடைபெற்ற அடுத்தடுத்த போர்களில் ரோமானியர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். பின்னர் சிஸிலியை வீழ்த்தக் கவனத்தைத் திருப்பினார்.

ஆனால் இது ரோமானியர்களைவிடவும் பலம் வாய்ந்த ஃபோனீஷியர்களுடன் மோதும் சூழலை உருவாக்கியது. அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட வர்த்தக நகரான கசர்த்தேஜ் உலகின் மிகப் பெரிய நகராக விளங்கியது. கார்த்தேஜுக்கு மிக அருகில் சிஸிலி இருந்ததால், புதிய அலெக்சாண்டராக விரும்பிய ஃபைரஸின் எண்ணம் ஈடேறவில்லை. அரை நூற்றாண்டுக்கு முன் தங்களது டயர் நகர் வீழ்ந்ததை அவ்வளவு எளிதாக கார்த்தேஜுகள் மறக்கவில்லை.

எனவே ரோமாபுரிக்கு உதவவும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தவும் கப்பல் படையை அனுப்பி ஊக்குவித்தனர். மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியாதபடி ஃபைரஸ்ஸின் வெளிவிவகாரத் தொடர்புகளைத் துண்டித்தனர். நேபிள்ஸ் மற்றும் ரோமாபுரிக்கு இடையிலுள்ள பெனெவெண்டம் (Beneventum) நகரிலுள்ள ரோமானியர்களின் முகாம் மீது ஃபைரஸ் நடத்திய தாக்குதல் படுதோல்வியில் முடிந்தது. கௌல்கள் தென் பகுதிக்குள் ஊடுருவியதால், திடீரென எபிரஸ் நகருக்குத் திரும்பவேண்டிய நிர்பந்தம் ஃபைரஸுக்கு ஏற்பட்டது. இன்னொரு பக்கம் கோட்டை, கொத்தளங்களுடன் ரோமானியர்கள் வெல்ல முடியாத வீரர்களாக உருவெடுத்தனர். செர்பியா (Serbia) மற்றும் அல்பேனியா (Albania) என்றழைக்கப்படும் இல்லிரியா (Illyria), மேசிடோனியா, எபிராஸ் நகரங்களை ஊடுருவத் தொடங்கினர்.

ரோமானியர்களாலும் கடலில் கசர்த்தேஜ்களாலும் சொந்த நாட்டில் கௌல்களாலும் மும்முனைத் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் ஃபைரஸ் திணறினார். அடுத்த அலெக்ஸாண்டராக உலகை ஆள வேண்டும் என்னும் கனவை மூட்டை கட்டிவிட்டு, சொந்த நாட்டுக்கு பொ.ஆ.மு.275-ல் திரும்பினார். ரோமாபுரி தனது அதிகார எல்லையை மெஸ்ஸினா (Messina) ஜலசந்திவரை விரிவுபடுத்தியது.

ஜலசந்தியின், சிஸிலி பக்கமுள்ள கிரேக்க நகரமான மெஸ்ஸினா கடற்கொள்ளையர்கள் வசமானது. பொ.ஆ.மு.270-ல் கசர்த்தேஜ்கள் கடற்கொள்ளையர்களைத் தோற்கடித்துக் கார்த்தேஜிய பாதுகாப்பு அரணை அமைத்தனர். கடற்கொள்ளையர்கள் ரோமானியர்களிடம் இது குறித்து முறையிட்டனர். இதைத் தொடர்ந்து மெஸ்ஸினா ஜலசந்தியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரோமானியர்களும் கசர்த்தேஜ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

32. ரோமாபுரி மற்றும் கார்த்தேஜ்

பொ.ஆ.மு.264-ல் ரோமாபுரிக்கும் கார்த்தேஜ்களுக்கும் இடையேயான ப்யூனிக் போர்கள் (Punic Wars) ஆரம்பமாகின. அதே ஆண்டு அசோகன் பிஹாரில் (இந்தியாவில்) தனது ஆட்சியைத் தொடங்கியிருந்தார். ஷி-ஹுவாங்க்-டி (Shi-Hwang-Ti) சின்னஞ்சிறு பாலகன். அலெக்ஸாண்டிரியாவிலுள்ள அருங்காட்சியகத்தில் ஆய்வுப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கௌல்கள் (இன்றைய ஃபிரான்ஸ்) ஆசியா மைனரில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தனர். உலகின் ஏனையபகுதிகள் எளிதில் கடக்க முடியாத நீண்ட நெடிய நிலங்களாலும் பரந்து விரிந்த கடல்களாலும் பிரிக்கப்பட்டிருந்தன. ஸ்பெயின், இத்தாலி, வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு மத்திய தரைக் கடல் பகுதிகளில் செமிட்டிக், ரோமாபுரி, ஆரிய மொழி பேசும் மக்களிடையே உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சண்டைகள் நடைபெறுவதாக ஊர்ஜிதமாகாத தகவல்களும் வதந்திகளும் பொய்யுரைகளும் வந்து கொண்டிருந்தன.

அந்தப் போர்களின் தடயங்கள் எந்தப் பிரச்னைகளை முன்னிறுத்தி நடந்ததாகத் தெரிவிக்கின்றனவோ அவை இன்றைக்கும் உலகில் நெருக்கடியை உருவாக்குவதாகவே இருக்கின்றன. கார்த்தேஜை ரோமாபுரி வெற்றி கொண்டாலும் ஆரியர்களுக்கும் செமிட்டிக்களுக்கும் இடையேயான பகை, பின்னாளில் ஜெண்டைல் (Gentile) அதாவது யூதர்கள் அல்லாதவர்களுக்கும் யூதர்களுக்குமான மோதலில் இணைந்து கொண்டது. நமது வரலாறு இப்போது சந்திக்கப்போகும் நிகழ்வுகளின் பின் விளைவுகளும் சிதைந்த மரபுகளும் நீடித்த மற்றும் காலாவதியான உயிர்ச்சக்தியை இன்னும் பராமரித்து வருகின்றன. மேலும் இன்றைய மோதல்கள் மற்றும் சர்ச்சைகள் மீது சிக்கலான மற்றும் குழப்பமான செல்வாக்கையும் செலுத்துகின்றன.

மெஸ்ஸினா கடற்கொள்ளையர்களை உள்ளடக்கிய முதலாம் ப்யூனிக் போர் பொ.அ.மு.264-ல் தொடங்கியது. சைரக்யூஸ் கிரேக்க மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து, சிஸிலியை ஆக்கிரமிக்கும் போராட்டமாக உருவெடுத்தது. கார்த்தேஜினியன்களுக்கு கடல் ஆரம்பத்தில் அனுகூலமாக இருந்தது. ஐந்து அடுக்கு வரிசை துடுப்புகள், வேகத்துடன் உந்தித் தள்ளும் விசை ஆகியவற்றை உள்ளடக்கிய பிரமாண்ட கப்பல்களை வைத்திருந்தனர்.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு சலாமீஸ்ஸில் (Salamis) நடைபெற்ற போரில் மூன்று அடுக்கு வரிசை துடுப்புகளுடன் கூடிய போர்க் கப்பல்களே இருந்தன. ஆனாலும் கடற்போர்களில் குறைந்த அளவு அனுபவமே கொண்ட ரோமானியர்கள், ஈடு இணையற்ற ஆற்றலுடனும் வீரத்துடனும் போரிட்டு, கார்தேஜினியன்களைத் தோற்கடிக்கத் தயாரானார்கள். கிரேக்க கடற்படை வீரர்களின் உதவியுடன் ரோமானியர்கள் புதிய கப்பல் படையை உருவாக்கினர். நீண்ட கயிற்றின் நுனியில் கொக்கிளை மாட்டி எதிரிகளின் சிறிய கப்பல்களையும் படகுகளையும் தங்கள் கப்பல்களின் பக்கம் இழுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தனர். இந்தக் கொக்கிகளில் பல கார்த்தேஜினியன்களின் படகுகளும் கப்பல்களும் சிக்கிக்கொண்டன. பொ.ஆ.மு. 260-256-ல் நடைபெற்ற மைலே (Mylae) மற்றும் எக்னோமஸ் (Ecnomus) போர்களில் கார்தேஜினியன்கள் படுதோல்வி அடைந்தனர். பலெர்மோ (Palermo) என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் 104 போர் யானைகளை இழந்தனர். ரோமானியகள் இந்த வெற்றி விழாவைக் கொண்டாட நகரம் முழுவதும் ஊர்வலம் நடந்தி மகிழ்ந்தனர். பொ.ஆ.மு.241-ல் ஏகேஷிய தீவில் (Aegatian Isles) நடைபெற்ற கடைசிக் கடற்போரில் கார்தேஜீனியன்கள் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். கார்த்தேஜினியன்கள் சாமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட, சைரக்யூஸ் மன்னன் ஹீரோ (Hiero), சிஸிலி தவிர்த்த ஏனைய பகுதிகளை ரோமானியர்களுக்கு தாரை வார்த்துச் சரணடைந்தார்.

அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ரோமபுரியும் கார்த்தேஜும் அமைதி காத்தன. உள்நாட்டுப் பிரச்னைகள் கணிசமாக இருந்ததால், அதைச் சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது. கௌல்கள் மீண்டும் இத்தாலியின் தென் பகுதி மீது படையெடுத்தனர். ஏற்கெனவே பீதியிலிருந்த ரோமாபுரி அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடக் கடவுள்களுக்கு நரபலி கொடுத்தனர். டெலெமானில் (Telemon) தோற்கடிக்கப்பட்ட கௌல்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். ஆல்பஸ் மலைத்தொடர், ஏடிரியாடிக் கடற்கரை தொடங்கி இலிரியா (Illyria) வரை ரோமாபுரி தனது எல்லைகளை விரிவுபடுத்தியது. கார்ஸிகா மற்றும் சார்டினியாவில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகங்களைச் சமாளிக்க முடியாமல் கார்த்தேஜ் திணறியது. நிறைவாக, ரோமாபுரி இரு தீவுகளையும் தனது அதிகார வரம்புக்குள் இணைத்துக் கலகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.

வடக்கே எப்ரோ (Ebro) ஆறு வரை கார்த்தேஜீனியன்கள் ஆளுகைக்குள் ஸ்பெயின் இருந்தது. கார்த்தேஜினியன்கள் எப்ரோ ஆற்றைத் தாண்டுவது குற்றமாகக் கருதப்படுவதுடன், ரோமானியர்களைப் போருக்கு அழைப்பதாகவும் பொருள்பட்டது. மேலும் அந்த எல்லையைத் தாண்டி ரோமானியர்களின் ஆட்சி தொடங்குவதால், கார்த்தேஜீனியன்கள் தொடக்கத்தில் அடக்கி வாசித்தனர். இருப்பினும் ரோமானியர்களின் புதிய சட்டங்களுக்கு எதிராக ஹனிபால் (Hannibal) என்னும் இளம் தளபதி தலைமையில் திரண்ட கார்த்தேஜீனியன்கள் பொ.ஆ.மு.218-ல் எப்ரோ ஆற்றைக் கடக்கத் துணிந்தனர்.

வரலாற்றின் மிகச் சிறந்த தளபதிகளுள் ஒருவராகப் போற்றப்படும் ஹனிபால், ஆல்ப்ஸ் மலையைத் தாண்டி ஸ்பெயினிலிருந்து இத்தாலிக்குள் ஊடுருவினார். ஏற்கனவே ரோமானியர்களுக்கு எதிராக இருந்த கௌல்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டார். இத்தாலியில் நடைபெற்ற இரண்டாம் ப்யூனிக் போர், சற்றேறக் குறைய பதினைந்து ஆண்டுகள் நீடித்தது. டிராஸிமீர் ஏரி (Lake Trasimere) மற்றும் கேனே (Cannae) போர்களில், ரோமானியர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தித் தோற்கடித்தார். ஹனிபாலை எதிர்க்க முடியாமல் ரோமானியர்கள் சிதறி ஓடினர்.

சுதாரித்துக்கொண்ட ரோமானியப் படைகள், மார்ஸேல்ஸில் திரண்டு ஹனிபாலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையேயான தொடர்பைத் துண்டித்தன. இதன் காரணமாகத் தொடர்ந்து முன்னேறவும் முற்றுகையிடவும் போதிய தளவாடங்கள் வந்து சேராததால், ஹனிபாலால் ரோமாபுரியைக் கடைசிவரை கைப்பற்றவே முடியவில்லை. மேலும் நுமிடியன்களின் (Numidian) உள்நாட்டுப் புரட்சிகளால் காத்தேஜீனியன்கள் துவண்டு போயிருந்தனர் பொ.ஆ.மு.202-ல் ஜாமாவில் (Zama) நடைபெற்ற போரில் ஹனிபால் முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தார். இப்போருடன் இரண்டாம் ப்யூனிக் யுத்தம் முடிவுக்கு வந்தது.

கார்த்தேஜீனியன்கள் சரணடைந்ததுடன் ஸ்பெயின் நாட்டையும் கப்பற்படையையும் பெருந்தொகையையும் கப்பமாகக் கொடுத்தனர். ஹனிபாலையும் ஒப்படைக்க ரோமானியர்கள் நிர்பந்தித்தனர். ஆனால் எப்படியோ ரோமானியர்களின் கைகளில் சிக்காமல் ஹனிபால் ஆசியாவுக்குத் தப்பி ஓடினார். போகும் இடமெல்லாம் எதிரிகள் அவரைப் பிடிக்க வேட்டை நாய்போல் துரத்திக் கொண்டிருந்தனர். ரோமானியர்களுக்குப் பயந்து அடைக்கலம் தரவும் எந்த நாடும் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் இனியும் தப்பிக்க முடியாது; ஓடி ஒளியவும் முடியாது என்ற முடிவுக்கு வந்த ஹனிபால் சாகத் துணிந்தார். விஷத்தை அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். தொடர் வெற்றிகள் மூலம் வரலாற்றின் உச்சத்தைத் தொட்ட ஹனிபால், கடைசியில் விஷம் அருந்தி மரணத்தைத் தழுவியதுதான் சோகத்திலும் சோகம்.

அடுத்த ஐம்பத்தாறு ஆண்டுகளுக்கு ரோமாபுரியின் ஆளுகைக்கு உட்பட்டு கார்த்தேஜீனியன்கள் வாழ்ந்தனர். இதற்கிடையே ரோமனியர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை கிரேக்கம் ஆசியா மைனர், லிடியா என விரிவுபடுத்தினர். மேலும் டோலெமிக்கள் ஆட்சியின் கீழிருந்த எகிப்து உள்ளிட்ட சில பகுதிகளை ‘நேச நாடுகள்’ அல்லது ‘பாதுகாக்கப்பட்ட நாடுகள்’ என அறிவித்துத் தங்கள் கட்டுபாட்டில் வைத்துக்கொண்டனர். சரணடைந்த கார்த்தேஜீனியன்கள் சிதறிய தங்கள் படைகளை ரகசியமாக ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடும் செய்தி, ரோமானியர்களின் சந்தேகத்தையும் வெறுப்பையும் அதிகரித்தது. எனவே கார்த்தேஜீனியன்களை முற்றிலுமாக அழிக்கும் முடிவுக்கு வந்த ரோமானியர்கள் பொ.ஆ.மு.147 முதல் அவர்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினர். சுமார் இரண்டரை லட்சம் கார்த்தேஜீனியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 50,000ஆக குறைந்தது. நகரங்கள் தீக்கிரையாகி சாம்பல் மேடானது. உயிருடன் பிடிக்கப்பட்டவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

இவ்வாறாக மூன்றாம் ப்யூனிக் யுத்தம் முடிவுக்கு வந்தது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு செழிப்பாக விளங்கிய செமிட்டிக் நாடுகள் மற்றும் நகரங்களில், தற்போது மீதமிருப்பது ஒரேயொரு நாடுதான். அந்த ஒரேயொரு நாடு மெக்காபியன் (Maccabean) மன்னர்களால் ஆளப்படும் யுதேயா (Judea) ஆகும். அதன் விவிலியமும் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இப்போது நாம் அறியும் யூத உலகின் வித்தியாசமான பாரம்பரியங்களுடன் அந்நாடு வளர்ந்து கொண்டிருந்தது. வணிகர்களாகவும் வங்கியாளர்களாகவும் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்த கார்த்தேஜீனியன்களும் ஃபோனீஷியன்களும் நம்பிக்கையோடும் வீரத்தோடும் பொதுவான மொழியிலும் கலாசாரத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

யூத மதத்தின் (Judaism) மையமாக இல்லாமல் ஓர் அடையாளமாகவே எப்போதும் விளங்கும் ஜெரூசலம் (Jerusalem) பொ.ஆ.மு.65-ல் ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. பல்வேறு போராட்டங்கள், புரட்சிகள், முற்றுகையைத் தொடர்ந்து பொ.ஆ.பி.70-ல் ஜெரூசலம் முற்றிலுமாக ரோமானியர்களிடம் வீழ்ந்தது. பொ.ஆ.பி.132-ல் மீண்டும் புரட்சி வெடிக்க நகரங்களும் அவர்கள் வழிபடும் கோயிலும் தரைமட்டமாயின. இன்றைக்கு நாம் காணும் ஜெரூசலத்தின் சிதிலங்கள் ரோமானியர்கள் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டவை. யூதர்களின் ‘கோயில்’ இடிக்கப்பட்ட இடத்தில் ரோமானியர்களின் ‘ஜுபிடர் கேபிடோலினஸ்’ (Jupiter Capitolinus) கடவுளின் ஆலயம் எழுப்பப்பட்டது. யூதர்கள் குடியேறத் தடை விதிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர்.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *