Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #17

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #17

33. ரோமானிய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சி

முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய உலகில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய புதிய ரோமானிய ஆட்சி, நாகரிக உலகம் இதுfவரை கண்ட பல சாம்ராஜ்யங்களுள் முற்றிலும் வேறானது. அது தொடக்கத்தில் மன்னர் ஆட்சியும் அல்ல; யாரேனும் ஒரு வெற்றியாளர் உருவாக்கிய சாம்ராஜ்யமும் அல்ல. அதைக் குடியரசு சாம்ராஜ்யம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் அழிவிலிருந்து தப்பித்துத் தொடர் வளர்ச்சி கண்ட முதல் குடியரசு சாம்ராஜ்யம் இதுவெனக் கூறலாம். பெரிகிள்ஸ் (Pericles) காலத்தில் ஏதென்ஸ் நேச நாடுகள் மீது அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தது. சார்டினா, கார்ஸிகா, மோராகோ, அல்ஜியர்ஸ், ட்யூனிஸ், ஸ்பெயின், சிஸிலி ஆகிய நாடுகளை ரோமாபுரியுடன் போரிட்டுத் தோற்பதற்கு முன்பு கார்த்தேனீயர்கள் ஆட்சிசெய்துகொண்டிருந்தனர்.

பெரும்பான்மைப் பண்டைச் சாம்ராஜ்யங்கள் தோன்றிய ஆற்றங்கரைப் பள்ளத்தாக்குகளான மெஸொபொடேமியா மற்றும் எகிப்து நாகரிங்களுக்கு மேற்கே, வெகு தொலைவில் இந்தப் புதிய சாம்ராஜ்யத்தின் மைய அமைப்பு உருவானது. மேற்கத்திய இடத்தில் சாம்ராஜ்யம் உருவான காரணத்தால், தனது நாகரிகத்தில் புதிய பிராந்தியங்களையும் மக்களையும் கொண்டு வர ரோமாபுரிக்கு உதவியது. ரோமானியர்களின் ஆதிக்கம் மொராக்கோ, ஸ்பெயின், வடமேற்கே ஃபிரான்ஸ், பெல்ஜியம் தொடங்கி பிரிட்டன், வடகிழக்கே ஹங்கேரி மற்றும் தெற்கு ரஷியா வரையும் விரிவடைந்தது. ஆனால் நிர்வாக மையங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்த மத்திய ஆசியாவிலும் பாரசீகத்திலும் தங்களது ஆதிக்கதைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

அங்குள்ளவர்களுள் நார்டிக்-ஆரிய மொழி பேசும் மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடியேறிய கிரேக்கர்களும் அதிகமிருந்தனர். எனவே ரோமானியர்கள் அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு பாரசீகத்தையும் கிரேக்கத்தையும் முழுமையாக ஆக்கிரமிக்க முன்னோர்கள் வகுத்த பாதையில் செல்ல ஏனோ துணியவில்லை. இதற்கிடையே மெடீஸ் மற்றும் பாரசீக ஆட்சியாளர்கள் பாபிலோனியர்களாகிவிட்டனர். கோயில்கள் மற்றும் கடவுள்களின் பூசாரித் தொழில்களையும் ஆக்கிரமித்துக்கொண்டனர். அலெக்ஸாண்டரும் அவரது வாரிசுகளும் மக்களை ஒருங்கிணைக்க மேற்கொண்ட எளிய முறைகளையே இவர்களும் பின்பற்றினர். நெபுகெட்நசரின் (Nebuchadnezzar) அரசவை மற்றும் நிர்வாக முறைகளையே செல்யூசிட் (Selucid) மன்னர்களும் முன்னெடுத்தனர். டோலெமீக்கள் (Ptolemies) ஃபேரோக்களாகிக் காலப்போக்கில் எகிப்தியர்களாக மாறினர். முன்பு சுமேரியர்களை வெற்றி கொண்ட செமிட்டிக் மன்னர்களைப்போல் இவர்களும் ஒருங்கிணைந்தனர்.

ஆனால் ரோமானியர்கள் அடுத்த சில நூற்றாண்டுகள் வரையேனும் தங்களது சொந்த சட்ட திட்டங்கள் வழியேதான் நிர்வாகம் செலுத்தினர். பொ.ஆ.2-3-ம் நூற்றாண்டுகளுக்கு முன் ரோமானியர்களின் மீது மனத்தளவில் பெருமளவு செல்வாக்கைச் செலுத்தியவர்கள் கிரேக்கர்கள் என்று சொல்லலாம். இதன் காரணமாக ரோமாபுரி மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆள முற்பட்ட முதல் நிகழ்வு ஆரிய அடிப்படையிலேயே அமைந்தது. வரலாற்றில் இதைப் புதிய வழிமுறையாக, விரிவுபடுத்தப்பட்ட ஆரியக் குடியரசு எனலாம்.

தனிப்பட்ட வெற்றியாளர் தலைநகரை ஆள்வது, வேளாண் கடவுளுக்கான கோயிலைச் சுற்றி வளர்வது, உள்ளிட்ட பழைய முறை இதற்குப் பொருந்தாது. ரோமானியர்களுக்கும் கடவுள்களும் கோயில்களும் இருந்தன. ரோமானியர்களின் கடவுள்கள், கிரேக்கக் கடவுள்களைப் போலவே பாதி மனிதர்கள்-பாதி கடவுள்கள், பிறப்பும் இறப்பும் இல்லாத அழிவற்றவர்கள் மற்றும் தெய்விக தேச பக்தர்கள். மனிதர்களை நரபலி தரும் பழக்கமும் இருந்தது. இது கடந்த கால எட்ரூசன்களிடமிருந்து கற்றுக்கொண்டவையாக இருக்கலாம். ஆனால் ரோமாபுரி தனது உச்சத்தை அடைந்து நீடித்த போது, கோயிலோ, பூசாரியோ, அதன் வரலாற்றில் முக்கிய அங்கம் வகிக்கவில்லை.

ரோமானிய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சி, திட்டமிடப்படாத புதுமையான வளர்ச்சி. ரோமானிய மக்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மிக விரிவான நிர்வாகப் பரிசோதனையில் ஈடுபட்டிருப்பதைப் பின்னர் அறிந்துகொண்டனர். இதை வெற்றிகரமான நிர்வாகப் பரிசோதனை என்று சொல்ல முடியாது. கடைசியாக, அவர்களது சாம்ராஜ்யம் ஒட்டு மொத்தமாக வீழ்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் வடிவத்திலும் முறையிலும் பெரிய அளவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்தன. வங்காளம் அல்லது மெசோபொடேமியா அல்லது எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், ரோமாபுரியில் நூறாண்டுகளிலேயே ஏற்பட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுபோல், தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. எதிலும் உறுதிப்பாட்டுடன் நிலைத்திருக்கவில்லை.

இப்பரிசோதனை முயற்சி ஒருவகையில் தோல்விதான். இந்தப் பரிசோதனை இன்னும் முடிவுறாத நிலையில், ரோமானிய மக்கள் முதலில் எதிர்கொண்ட உலகளாவிய ஆட்சிக் கலையின் புதிர்களை, ஐரோப்பாவும் அமெரிக்காவும் இன்னும் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. மிகப் பெரிய மாற்றங்கள் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளில் மட்டுமின்றி ரோமானிய சாம்ராஜ்யம் முழுவதும் நிகழ்ந்ததை, வரலாற்று மாணவர்கள் மனத்தில் கொள்ள வேண்டும். ரோமானிய ஆட்சி முழு வடிவம் பெற்ற, நிலையான, உறுதியான, உன்னதமான மற்றும் தீர்க்கமான சாம்ராஜ்ஜியம் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டது.

மெக்காலேவின் ‘லேஸ் ஆஃப் ஏன்ஷியண்ட் ரோம்’ (Lays of Ancient Rome), எஸ்பிக்யூஆர் (SPQR), தி எல்டர் கேடோ (The Elder Cato), தி ஸிபியோஸ் (The Scipios), ஜூலியஸ் சீஸர், ட்யோக்ளேஷியன் (Diocletian), கான்ஸ்டண்டைன் தி கிரேட் (Constantine the Great), வெற்றிகள், உரை வீச்சுகள், க்ளாடியேட்டர் போர்கள், கிறிஸ்தவ மதத்துக்காக உயிர் நீத்த தியாகிகள், உயர்வாகவும் கொடூரமாவும் கண்ணியமாகவும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு பிரமாண்ட ரோமானிய சாம்ராஜ்ஜிய சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்டு இச்சித்திரத்தில் இடம் பெற்றுள்ளவற்றை முதலில் பிரித்துப் பார்க்கவேண்டும்.

ரோமாபுரி சாம்ராஜ்ய விரிவாக்கத்தை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை ரோமானியர்கள் பொ.ஆ.மு.390-ல் கௌல்களால் தோற்கடிக்கப்படுவதில் ஆரம்பித்து பொ.ஆ.மு.240-ல் முதலாம் ப்யூனிக் போர் முடிவடையும் வரையிலான காலம். இந்த நிலையை ஒருங்கிணைந்த குடியரசு (Assimilative Republic) என்றழைக்கலாம். ரோமானிய வரலாற்றிலேயே இதுதான் சிறப்பான, பண்புமிக்க நிலை. அடித்தட்டு ஏழைகளுக்கும் (Patrician) அந்தஸ்தில் உயர்ந்தவர்களுக்கும் (Plebeian), இடையே நீண்ட காலம் நிலவிய அரசியல் போராட்டம் நிறைவுப்பகுதியை எட்டியது. எட்ரூஷியன் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது.

பரம ஏழையும் இல்லை, பெரும் செல்வந்தனும் இல்லை. அனைவருக்கும் பொது நோக்கு இருந்தது. சுதத்திர விவசாயிகளின் குடியரசாக, 1900க்கு முந்தைய தெற்கு ஆப்பிரிக்க போயர்ஸ் (Boers) குடியரசு போலவும் 1800-1850-ல் அமெரிக்க ஐக்கியத்தின் வடக்கு மாகாணங்களைப் போலவும் விளங்கியது. இந்த நிலையில் ரோம் அதிகபட்சம் 20 சதுர மைல் பரப்பளவு கொண்ட மிகச் சிறிய நாடாக இருந்தது. அக்கம் பக்கம் நாடுகளுடன் சண்டை போட்டது உண்மைதான். ஆனால் அவற்றை அழிக்காமல் ஒருங்கிணைக்கவே விரும்பியது. பல நூற்றாண்டுகள் நிலவிய உள்நாட்டு முரண்கள் சமரசத்துக்கும் சலுகைகளுக்கும் மக்களுக்குப் போதிய பயிற்சியைத் தந்தன.

தோற்றுப் போன நகரங்களும் அரசில் வாக்களிக்கும் உரிமையோடும் தன்னாட்சி அதிகாரத்துடனும் ரோமானியர்களை மணக்கவும் வியாபாரம் செய்யவும் ரோமாபுரியுடன் இணைந்துகொண்டன. பல தரப்பட்ட மக்கள் வாழும் புதிய குடியிருப்புகள் நிறுவப்பட்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்தச் சலுகைகளும் வழங்கப்பட்டன. சாலைகள் செப்பனிடப்பட்டுச் சீர் செய்யப்பட்டன. முக்கியமாக இத்தாலி முழுவதும் லத்தீன் மொழி அங்கீகாரம் பெற்ற ஆட்சி மொழியானது. பொ.ஆ.மு.89-ல் இத்தாலியில் வசிக்கும் அனைவரும் ரோமாபுரி நகரக் குடிமக்கள் ஆனார்கள். நிறைவாக ரோமாபுரி சாம்ராஜ்யமே விரிவுபடுத்தப்பட்ட நகரமானது. பொ.ஆ.212-ல் ரோமாபுரி சாம்ராஜ்யம் முழுவதுமுள்ள மக்களுக்குக் குடியுரிமையும் வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டன.

ரோமாபுரி சாம்ராஜ்ய விரிவாக்கத்தின் முக்கிய அம்சம் குடியுரிமையை விரிவுபடுத்தியதுதான். பழைய முறையில் வெற்றியாளர்கள், தோற்ற மன்னர்களையும் கைப்பற்றிய நாட்டையும் இணைத்துக்கொண்டனர். ஆனால் புதிய ரோமானிய முறையில் வெற்றியாளர்கள், கைப்பற்றிய நாட்டின் மக்களையும் இணைத்துக்கொண்டு குடியுரிமையையும் அளித்தனர்.

முதல் ப்யூனிக் யுத்தம் மற்றும் சிஸிலி இணைப்புக்குப் பின்னர், பழைய முறையே தொடர்ந்தாலும் கூடவே இன்னொரு முறையும் உதயமானது. உதாரணத்துக்கு சிஸிலி கைப்பற்றப்பட்ட நாடாகவே கருதப்பட்டதுடன், ரோமானியர்களின் ‘சொத்தாகவும்’ அறிவிக்கப்பட்டது. அதன் மண்ணின் வளத்தையும் மக்களின் கடுமையான உழைப்பையும் ரோமானியர்கள் சுரண்டிக் கொழுத்தனர். ரோமாபுரியின் உயர்குடிகளும் சாமானியர்களுள் செல்வாக்கு பெற்றவர்களும் பெருமளவு செல்வத்தைக் குவித்தனர். போர்கள் மூலம் ஏராளமான அடிமைகளும் கிடைத்தனர்.

முதலாம் ப்யூனிக் போருக்கு முன்பு குடிமக்களுள் பெரும்பான்மையினர் விவசாயிகளாக இருந்தனர். போர்க் காலங்களில் படையில் வீரர்களாகச் சேர்வது பெருமை என்பதுடன், கடமையாகவும் இருந்தது. போரில் ஈடுபட்ட காரணத்தால், விவசாயத்தை கவனிக்க ஆளினின்றி நிலம் பாழாகிப்போனதுடன், கடன் சுமையும் பெருகியது. இதற்கிடையே சிஸிலியிலுள்ள விவசாய நிலங்களில் பணியமர்த்தப்பட்ட அடிமைகளின் உழைப்பில் விளைந்த தானியங்கள், ரோமானிய சந்தைகளில் கடுமையான போட்டியைத் தந்தன. கால மாற்றம் காரணமாக ரோமாபுரியின் குணங்களும் மாறின. ரோமாபுரியின் ஆட்சிக்கு சிஸிலி கைமாறியதுபோல், பணக்காரர்களின் அதிகாரத்துக்குச் சாதாரண மனிதன் அடங்கிப் போகும் சூழ்நிலை உருவானது. பணக்கார சாகச மனிதர்களின் குடியரசாக ரோமாபுரி இரண்டாம் நிலைக்குள் நுழைந்தது.

200 ஆண்டுகளாக ரோமானிய விவசாய வீரர்கள் விடுதலைக்கும் தங்கள் நாட்டு அரசாங்கத்தில் பங்கேற்கவும் போராடி வந்துள்ளனர். 100 ஆண்டுகளாக உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவித்து வந்தனர். ஆனால் இத்தனை ஆண்டுகள் போராடிப் பெற்ற அனைத்துச் சலுகைகளையும் உரிமைகளையும் முதலாம் ப்யூனிக் போர் முற்றிலுமாகப் பறித்து அழித்துவிட்டது. மதிப்பு மிகு தேர்தல் வாக்குரிமைச் சலுகையும் காற்றில் கரைந்த கற்பூரமானது.

ரோமானியக் குடியரசின் ஆட்சி அமைப்பு இரண்டு சபைகளைக் கொண்டது. முதலாவதும் முக்கியமானதும் ‘செனட்’ (Senate). உயர்குடியில் பிறந்தவர்கள், பிரபலங்கள், அதிகாரிகள், உயர் பொறுப்பில் உள்ளவர்கள், ஜமீந்தார்கள், அரசியல்வாதிகள், பெரு வணிகர்கள் ஆகியோர் இதில் அங்கம் வகித்தனர். இங்கிலாந்தின் ‘பிரபுக்களின் சபை’க்கு (House of Lords) இணையானது. ப்யூனிக் போர்கள் தொடங்கி அடுத்த முந்நூறு ஆண்டுகளுக்கு ரோமானிய அரசியல் சிந்தனைக்கும் காரணிக்கும் இந்த செனட் சபையே மையமாக விளங்கியது.

இரண்டாவது சபை ‘பாப்புலர் அசெம்பிளி’ (Popular Assembly). ரோமாபுரிக் குடிமக்கள் அனைவருக்கும் இதில் உறுப்பினர்களாகத் தகுதி உண்டு. இருபது சதுர மைல் பரப்பளவே உள்ள சிறிய நாடாக ரோமாபுரி இருந்தபோது இந்த ஆட்சி அமைப்பு சாத்தியப்பட்டது. ரோமாபுரியின் குடியுரிமை விரிவடையவே, அதன் பரப்பளவும் இத்தாலிய எல்லைகளைத் தாண்டியது. இதன் காரணமாக அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டங்கள் நடத்துவது இயலாமல் போனது. உறுப்பினர்களுக்கான கூட்டம் துவங்குவதை கேபிடோல் (Capitol) நகர மணியோசை மூலம் மக்களுக்குத் தெரிவிப்பார்கள். பொ.ஆ.மு.4-ம் நூற்றாண்டில் செனட் அமைப்பைக் கண்காணிக்கவும் தனி மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பாகவும் பாப்புலர் அஸெம்பிளி மாறியது. ஆனால் இதன் செல்வாக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ப்யூனிக் போர்கள் முடிந்த போது வலிமையற்ற நினைவுச் சின்னமானது. பெரிய மனிதர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் இழந்தது.

ரோமானியக் குடியரசில் பிரதிநிதித்துவ அரசு என்னும் கோணத்தில் எதுவுமே நிறுவப்படவில்லை. குடிமக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்க வேட்பாளர்களைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படவில்லை. பண்டைய ரோமானிய வரலாற்றில் இச்செய்தியை மிக உன்னிப்பாக மாணவர்கள் கிரகித்துக் கொள்ள வேண்டியது கட்டாயம். ரோமானிய பாப்புலர் அஸெம்பிளி மேலோட்டமாக பிரிட்டிஷ் மக்கள் சபை (House of Commons) மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை (American House of Representatives) ஆகியவற்றுக்கு இணையாகத் தோன்றினாலும் உண்மையில் அவற்றுக்குச் சமமாக அது உருவாகவே இல்லை. குடிமக்களுக்கானது என்பது ஏட்டில் மட்டுமே. நடைமுறையில் எந்த அதிகாரமோ பயனுமோ பாப்புலர் அஸெம்பிளிக்குக் கிடையாது.

இரண்டாம் ப்யூனிக் போர் முடிந்த பிறகு ரோமானிய சாம்ராஜ்யத்தில் குடிமக்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். விவசாய நிலங்களை இழந்து வறுமையில் வாடினர். மாறாக அடிமைகளின் விவசாயம் செழிக்கத் தொடங்கியது. தங்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கவும் தீர்வு காணவும் அரசியல் செல்வாக்கோ பலமோ இல்லை. ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கிருந்த வழிமுறைகள் வேலைநிறுத்தம், போராட்டம் மற்றும் புரட்சி ஆகியவையே. இருப்பினும் பொ.ஆ.மு.2-1 நூற்றாண்டுகளில் அரசுக்கு எதிராக, மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவின.

பொ.ஆ.மு.73-ல் புரட்சியும் உள்நாட்டுக் கலகமும் வெடித்தது. ஸ்பார்டகஸ் (Spartacus) என்னும் அடிமைத் தலைவரின் கீழ் திரண்டனர். இது மூன்றாம் நிலை. அடிமைகளில் பெரும்பான்மையோர் கிளாடியேட்டர்களாக இருந்தனர். கிளாடியேட்டர் (Gladiator) எனப்படும் வீர விளையாட்டுப் போட்டிகளில், அடிமைகள் தங்களுக்குள் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டு உயிர் துறப்பார்கள் அல்லது விலங்குகளுடன் மோதி அவற்றுக்கு இரையாவார்கள். எனவே, அடிப்படையிலேயே வீரம் மிக்க கிளேடியேட்டர் அடிமைகளாக இருந்ததால், அவர்களது புரட்சி துவக்கத்தில் தீவிரமாக இருந்தது. ஆனாலும் அடிமைகளால் அரசுக்கு எதிராக நீண்ட காலம் போராட முடியாமல் தோல்வியைத் தழுவினர். பிடிபட்ட ஆறாயிரம் கைதிகள் ரோமாபுரிக்குத் தெற்கே உள்ள ஏபியன் நெடுஞ்சாலையில், பொ.ஆ.மு.71-ல் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

தன்னை அடிமைப்படுத்தியும் மட்டம் தட்டியும் அதிகார துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்த பணக்காரர்களுக்கு எதிராகச் சாதாரண மனிதனால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆனால் வசதி படைத்த சீமான்களோ ரோமானிய உலகில் புதிய ஆட்சி அதிகாரத்துக்கும் ராணுவ பலத்துக்கும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.

இரண்டாம் ப்யூனிக் போர்களுக்கு முந்தைய ரோமானியப் படையில், விவசாயிகளே அங்கம் வகித்தனர். தேசப்பற்றுடன் இலவசமாகவே சண்டை போட்டனர். உள்நாட்டுப் பிரச்னைகளை அடக்க, இது போதுமானதாக இருந்தது. ஆனால் அண்டை நாடுகளுடன் போர் புரியவோ, நீண்ட தூரம் பயணிக்கவோ, போதிய பயிற்சியை இவர்கள் பெற்றிருக்கவில்லை. காலப்போக்கில் அடிமைகள் பெருகியதால், படையில் பயிற்சி பெற்ற அடிமைகளே இணைக்கப்பட்டனர்.

மேரியஸ் (Marius) என்னும் தளபதி ராணுவத்தில் பல சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். வடக்கு ஆப்பிரிக்காவில் கார்த்தேஜீனியன் நாகரிகம் தூக்கி எறியப்பட்ட பிறகு நுமிடியா (Numidia) அரசு கிட்டத்தட்ட அரை காட்டுமிராண்டி அரசாக மாறிப்போனது. இதை ஆண்ட ஜுகுர்தா (Jugurtha) மன்னன் ரோமாபுரி அரசுடன் ஒத்துப்போகாமல், ஓயாமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார். எனவே ஜுகுர்தாவை அடக்க மேரியஸ்தான் சரியான நபர் என எண்ணிக்கிய ரோமானிய அரசு, அவருக்குக் கௌன்சல் அந்தஸ்து அளித்து படையுடன் அனுப்பி வைத்தது.

தன் மீது வைத்த நம்பிக்கையைப் பொய்யாக்காமல், பொ.ஆ.மு.106-ல் ஜுகுர்தாவைத் தோற்கடித்துக் கைகளில் விலங்கிட்டு, ரோமாபுரி வீதிகளில் இழுத்து வந்தார் மேரியஸ். இதன் காரணமாக அவர் செல்வாக்கு மக்களிடமும் உயர் பொறுப்பில் இருப்பவர்களிடமும் பெருகியது. ஒரு கட்டத்தில், ரோமாபுரி ஆட்சியாளர்களால்கூட மேரியஸைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் அளவுக்கு, அவரது அதிகாரம் எல்லை மீறிச் சென்றது.

ரோமானிய சாம்ராஜ்ய விரிவாக்கம் இந்த மேரியஸுடன் மூன்றாம் நிலை வளர்ச்சியைத் தொடங்கியது. இது ‘ராணுவ தளபதிகளின் குடியரசு’ என அழைக்கப்படுகிறது. இப்போது தொடங்கி ரோமானியர்களுக்காகப் பணம் பெற்றுக்கொண்டு, படைத் தலைவர்கள் போர் புரிந்தனர். மேரியஸுக்கு எதிராக ஆப்ப்ரிக்காவில் அவரிடம் பணிபுரிந்த ஸுல்லா (Sulla) என்பவர் களமிறக்கப்பட்டார். இருவரும் கடுமையாக மோதிக் கொள்ள ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். சொந்தமான நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்விருவருக்கும் இடையேயான இரத்தக் களறி, ஸ்பார்டகஸ்ஸின் (Spartacus) புரட்சி, ஆகியவற்றைத் தொடர்ந்து லுகுல்லஸ் (Lucullus), க்ராஸஸ் (Crassus), பாம்பே (Pompey), ஜூலியஸ் சீசர் (Julius Caesar) ஆகியோரை உள்ளடக்கிய அடுத்த நிலை உருவானது.

லுகுல்லஸ் ஆசியா மைனரை வெற்றி கொண்டு அர்மீனியாவுக்குள் நுழைந்தார். பின்னர், பெரும் செல்வத்துடன் பொது வாழ்விலிருந்து விலகித் தனிமைப்படுத்திக் கொண்டார். க்ராஸஸ் பெரும் படையுடன் ஸ்பார்டஸ்ஸைத் தோற்கடித்துப் புரட்சியை அடக்கினார். பாரசீகத்துக்குள் ஊடுருவ முயன்றபோது பார்த்தியன்களிடம் சிக்கி உயிரிழந்தார். ஜூலியஸ் சீசர் நீண்ட காலம் நடைபெற்ற போரில் பாம்பேவைத் தோற்கடித்தார். பொ.ஆ.மு.48-ல் எகிப்தில் பாம்பே கொல்லப்பட, போட்டிக்கு ஆளே இன்றி ஜூலியஸ் சீசரின் கட்டுப்பாட்டுக்குள் ரோமாபுரி வந்தது.

உண்மையான தகுதியையும் முக்கியத்துவத்தையும் கடந்து, மனிதனின் கற்பனையைத் தாண்டி நிற்கிறது ஜூலியஸ் சீசரின் ஆளுமை. புகழ் பெற்றவராகவும் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறார். ஆனால் நம்மைப் பொறுத்தவரை ரோமானிய சாம்ராஜ்ய விரிவாக்கத்தில், ராணுவ சாகசங்கள் என்னும் நிலையிலிருந்து, நான்காம் கட்ட மாற்றத்தின் தொடக்கத்துக்கான முக்கியக் காரணகர்த்தாவாக சீசர் திகழ்கிறார். உள்நாட்டுக் கலகம் சமூகச் சீரழிவு காரணமாகப் பொருளாதார மற்றும் அரசியல் தடுமாற்றங்கள் நிலவிய சூழலிலும் பொ.ஆ.100 வரை ரோமானிய சாம்ராஜ்ய எல்லைகள் சுருங்கியும் விரிவடைந்தும் காணப்பட்டன.

தற்போது பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு இடையிலுள்ள கௌல் பகுதியின் ராணுவத் தளபதியாகப் பிரபலமானார் ஜூலியஸ் சீசர். ஜெர்மன் படைகள் கௌல் பகுதிக்குள் ஊடுருவியபோது, அவற்றைத் தோற்கடித்ததுடன் அனைத்தையும் ரோமானிய சாம்ராஜ்யத்துடன் இணைத்தார். பொ.ஆ.மு.55-54-ல் டோவர் ஜலசந்தியை இரு முறை கடந்து பிரிட்டனுக்குள் ஊடுருவினாலும் பெரிய அளவில் எதையும் வெற்றி கொள்ளவில்லை. மற்றொரு பக்கம் கிழக்குப் பகுதியில், காஸ்பியன் கடல் வரை தொடர் வெற்றிகளைக் குவித்து, ரோமானிய சாம்ராஜ்யத்தை பாம்பே விரிவுபடுத்தினார்.

பொ.ஆ.மு.1-ம் நூற்றாண்டின் மத்தி வரை, ரோமானிய செனட் சபை, ரோமானிய கௌன்சல், அதிகாரிகள் ஆகியோரைப் பெயரளவுக்கு நியமிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகவே விளங்கியது. சிசிரோ உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் ரோமானியக் குடியரசின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் சட்டங்களின் மதிப்பைப் பராமரிக்கவும் போராடிக் கொண்டிருந்தனர். விவசாயிகளின் விலகலைத் தொடர்ந்து, குடியுரிமை உணர்வு முற்றிலும் மழுங்கிப் போனது. எல்லாப் பகுதிகளும் அடிமைகள் வாழ்விடங்களாக மாறியதால், சுதந்திரம் பற்றிய புரிதலோ விருப்பமோ அவர்களிடம் காணப்படவில்லை.

செனட் சபையை விடவும் சம்பந்தப்பட்ட பகுதிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் படைத் தளபதிகளைப் பார்த்தே அனைவரும் அஞ்சினர். செனேட் உறுப்பினர்களயும் தாண்டி க்ராஸஸ், பாம்பே மற்றும் சீஸர் ஆகிய மூவரே, ரோமானிய சாம்ராஜ்யத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு அதிகாரம் செலுத்தி வந்தனர். பார்த்தியன் படைகளால் க்ராஸஸ் கொல்லப்பட்டவுடன் மூவரில் மீதமிருந்த பாம்பேக்கும் சீஸருக்கும் இடையே அதிகார மோதல் வெடித்தது.

சட்ட மீறல்களுக்காகவும் செனட் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாத காரணத்துக்காகவும் குடியரசு உறுப்பினர்கள் ஆதரவுடன், ஜூலியஸ் சீசர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுத்தார் பாம்பே. செனட் சபையின் அனுமதி இல்லாமல், அதிகார எல்லையைத் தாண்டி மற்றொரு பகுதிக்குத் தளபதி படைகளை எடுத்துச்செல்வது மாபெரும் குற்றம். ஜூலியஸ் சீஸரின் எல்லை ரூபிகான் (Rubicon). ஆனால் சீசர் பொ.ஆ.மு.49-ல் ரூபிகான் எல்லையைத் தாண்டியதுடன் ‘இது உருக்கி வார்க்கப்பட்ட இரும்பு முடிவு’ (The Die is Cast) என்று வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் அறிவித்தார். பாம்பேயை வீழ்த்தி, ரோமாபுரியைக் கைப்பற்றும் உறுதியுடன் சீசரின் படைகள் முன்னேறின.

ரோமாபுரியின் வழக்கப்படி, வரம்பற்ற அதிகாரங்களுடன், ராணுவத்தின் உச்சமான ‘சர்வாதிகாரி’ (Dictator) பதவிக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் பாம்பேயைத் தோற்கடித்த ஜூலியஸ் சீசரை முதலில் பத்தாண்டுகளுக்குத் தேர்ந்தெடுத்தனர். பொ.ஆ.மு.45-ல் சீசர் ஆயுள் முழுமைக்கும் ‘சர்வாதிகாரி’ ஆனார். மன்னன் என்ற பெயர்தான் இல்லையே தவிர மன்னனுக்குரிய எல்லா அதிகாரங்களுடனும் ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் அதிபதியானார்.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் எட்ரூஸ்கான் கொடுங்கோலர்களை வெளியேற்றிய பின்பு, ‘மன்னன்’ என்ற சொல்லே ரோமானியர்களுக்கு அருவருப்பான வார்த்தையாகிவிட்டது. ஆனால் இப்போது சீசரை மன்னன் ஆக்கலாமா என்ற பேச்சு பரவலானது. ஆனால் சீசர் மன்னன் என்ற பெயரை சூட்டிக்கொள்ள மறுத்தாலும் அதன் அடையாளங்களான சிம்மாசனத்தையும் செங்லோலையும் ஏற்றுக்கொண்டார்.

பாம்பேயைத் தோற்கடித்த பிறகு சீசர் எகிப்துக்குப் பயணம் செய்தார். அங்கே அரசியாகவும் தேவதையாகவும் இருந்த கிளியோபாட்ரா மீது காதல் கொண்டார். ரோமானிய பாரம்பரியம் முற்றிலும் மாறி எகிப்தியப் பழக்க வழக்கங்கள் ரோமாபுரியில் அமல்படுத்தப்பட்டன. கிளியோபாட்ரா மீதான காதல் மயக்கத்தில் தன்னையே மறந்தார். மன்னனைக் கடவுளாகக் கருதும் எகிப்திய முறை ரோமாபுரியில் அரங்கேறியது. இதன் தொடர்ச்சியாக ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸர் தனக்குத் தானே கோயில் எழுப்ப ஆணையிட்டார். மேலும் உள்ளே தன் சிலையை நிறுவி அதன் பீடத்தில் ‘வெல்ல முடியாத கடவுள்’ என்றும் செதுக்க உத்தரவிட்டார்.

ரோமாபுரியை மறந்து எகிப்தில் கிளியோபாட்ராவின் காலடியில் விழுந்து கிடந்த சீஸருக்கு உள்ளூரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தனக்கு எதிராகத் திரண்ட மக்களையும் உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் அடக்குவதற்காக சீஸர் மீண்டும் ரோமாபுரி திரும்பினார். முன்பு அவரை ஆயுளுக்கும் சர்வாதிகாரி என்ற அங்கீகாரத்துடன் அன்புடன் ஏற்ற மக்கள், இப்போது அவரை வெறுத்தனர். தனக்கு உறுதுணையாக இருப்பார்கள் எனப் பெரிதும் நம்பியவர்களே அவரைக் கொல்ல முடிவெடுத்தனர். திட்டமிட்டபடி சீசரை வரவழைத்து அவரது அரசியல் எதிரி பாம்பே சிலையின் காலடியிலேயே குத்திக் கொன்றனர்.

சீசரின் படுகொலையோடு முதல் மூவர் அணி முடிவுக்கு வந்தது. லெபிடஸ், மார்க் ஆண்டனி மற்றும் ஆக்டேவியன் சீசர் (ஜூலியஸ் சீசரின் சகோதரி மகன்) ஆகியோரைக் கொண்ட இரண்டாவது மூவர் அணி உதயமானது. தனது மாமா ஜூலியஸ் சீசரைப் போலவே மேற்குப் பிராந்தியத்தைத் தனது கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தார். பொ.ஆ.மு.31-ல் ஆக்டியம் (Actium) என்ற இடத்தில் நடைபெற்ற கடற்போரில், நேரடி எதிரியான மார்க் ஆண்டனியைத் தோற்கடித்து ரோமானிய உலகின் ஒரே தலைவனார்.

ஜூலியஸ் சீசருடன் ஒப்பிடும்போது பல விஷயங்களில் வித்தியாசமாகவே நடந்து கொண்டார். தன்னைத்தானே கடவுளாகக் கருதிக் கொள்ளவும் இல்லை; மக்கள் முன் பிரகடனப்படுத்தி கோயிலும் கட்டிக்கொள்ளவும் இல்லை. காதல் களியாட்டம்போட தேவதையும் இல்லை. செனட்டுக்கும் ரோமானிய மக்களுக்கும் இழந்த சுதந்திரத்தைத் தந்தார். இதற்கு நன்றிக்கடனாக செனட் அவரை ‘சர்வாதிகாரி’ ஆக அங்கீகரிக்க முன்வந்தபோது மறுத்துவிட்டார். எனவே ‘மன்னன்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘பிரின்செப்ஸ்’ (Princeps) அல்லது ‘அகஸ்டஸ்’ (Augustus) என அழைப்பதை ஏற்றுக்கொள்ளவே அன்று முதல் ‘அகஸ்டஸ் சீசர்’ ஆனார்.

பொ.ஆ.மு.27 முதல் பொ.ஆ.14 வரை ரோமாபுரியை ஆண்ட முதல் சக்ரவர்த்தியும் அகஸ்டஸ் சீசரே ஆவார். இவரைத் தொடர்ந்து டைபீரியஸ் சீசர் (Tiberius Caesar) (பொ.ஆ. 14 – 37) காலிகுலா (Caligula), க்ளாடியஸ் (Claudius), நீரோ (Nero), ட்ராஜான் (Trajan) (பொ.ஆ.98), ஹேட்ரியன் (Hadrian) (பொ.ஆ. 117), அண்டோனியஸ் ப்ளஸ் (Antoninus Pius) (பொ.ஆ.138), மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) (பொ.ஆ. 161–180) ஆகியோர் ரோமானிய சிம்மாசனத்தை அடுத்தடுத்து சக்ரவர்த்திகளாக அலங்கரித்தனர்.

காலப்போக்கில் செனட் அமைப்பின் அதிகாரமும் செல்வாக்கும் ரோமானிய வரலாற்றிலிருந்து படிப்படியாகக் குறையத் தொடங்கி ஒரு கட்டத்தில் முற்றிலுமாக மறைந்தே போனது. செனட்டின் அதிகாரம் சக்ரவர்த்தியிடமும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகளிடமும் சென்றது. ரோமானிய சாம்ராஜ்யத்தில் எல்லைகள் பரந்து விரியத் தொடங்கின. பிரிட்டன், டிரான்ஸில்வேனியா ஆகியவை புதிய மாகாணங்களாக இணைக்கப்பட்டன. ட்ராஜான் யூஃப்ரடீஸ் நிதியைக் கடந்து எல்லைகளை விஸ்தரித்தார்.

ஹேட்ரியன் நடவடிக்கைகள் உலகின் மற்றொரு பகுதியில் நடந்ததை நமக்கு நினைவூட்டுகிறது. சீனாவின் ஷி-ஹுவாங்க்-டி (Shi-Hwang-ti) போலவே, இவரும் வடக்கிலிருந்து காட்டுமிராண்டுகள் ஊடுருவலைத் தடுக்க பெரும் சுவர்களைக் கட்டினார். பிரிட்டனின் குறுக்கேயும் ரைன் மற்றும் டேன்யூப் நதிகளின் குறுக்கேயும் பிரம்மாண்ட தடுப்புகளை எழுப்பினார். ட்ராஜான் கையப்படுத்திய சில பகுதிகளைப் பாதுகாப்பு கருதிக் கைவிட்டார். ரோமானிய சாம்ராஜ்ய விரிவாக்கம் மெள்ள மெள்ள முடிவை நெருங்கியது.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *