37. ஏசுநாதரின் போதனைகள்
ரோமாபுரிச் சக்ரவர்த்திகளுள் ஒருவரான அகஸ்டஸ் சீசரின் ஆட்சிகாலத்தில்தான், கிறிஸ்து என்றழைக்கப்படும் இயேசுநாதர் யூதேயாவில் பிறந்தார். அவரது பெயரில் பின்னாளில் மதம் உருவாகி ரோமாபுரி சாம்ராஜ்யம் முழுமைக்குமான அதிகாரபூர்வ மதமாக அங்கீகாரம் பெற்றது.
இப்போதைக்கு வரலாற்றையும் இறையியலையும் தனித்தனியாக வைப்பது நலம். பெரும்பான்மை கிறிஸ்தவ உலகம் யூதர்கள் முதலில் அங்கீகரித்த உலகைப் படைத்த கடவுளின் அவதாரம் இயேசுநாதர் என நம்புகின்றனர். வரலாற்று ஆசிரியர் தொடர்ந்து வரலாற்று ஆசிரியராகவே இருக்கும் பட்சத்தில், இந்த விளக்கத்தை ஏற்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது. மனிதனைப் போலவே இயேசுநாதர் இருந்ததால், வரலாற்று ஆசிரியர் அவரை ஒரு மனிதராகவே கருதிக் கையாள வேண்டும்.
டைபீரியஸ் (Tiberius) சீசர் காலத்தில் இயேசுநாதர் யூதேயாவில் பிறந்தார். அவரொரு தீர்க்கதரிசி. தனது முந்தைய யூத தீர்க்கதரிசிகள் பாணியிலேயே அவரும் போதித்தார். முப்பது வயதில் அவரது பிரசங்கம் தொடங்குவதற்கு முன்பாகவே, அவரது வாழ்க்கை முறை பற்றிய ஆழமான அறியாமை தொடங்கியது. ஏசுநாதரின் வாழ்க்கை மற்றும் பிரசங்கம் குறித்த தகவல்கள் நமக்குள்ள நேரடியான நான்கு சுவேஷங்களிலிருந்துதான் தெரிகிறது. இந்த நான்குமே அவர் ஓர் உறுதியான ஆளுமையாக இருந்ததை ஒப்புக்கொள்கின்றன. ‘இங்கே ஒரு மனிதர் இருந்தார். அவர் நிச்சயமாக கற்பனைக் கண்டுபிடிப்பாக இருக்கமுடியாது’ என்கிறது ஒரு சுவிசேஷம்.
கௌதம புத்தரின் ஆளுமையை, பிற்கால புத்த மதம் விறைப்பாக உட்கார்ந்த நிலையிலுள்ள பொன்னிறச் சிலையாகச் சிதைத்து மறைத்தது. அதுபோல், ஏசுநாதரின் மெலிந்த மற்றும் கடினமான ஆளுமையைச் சிதைத்து, இன்றைய நவீன கிறிஸ்தவம் உண்மையற்ற தன்மை மற்றும் மரபுகளால், தவறான மரியாதையை அவரது உருவத்தின் மீது சுமத்தி, அநீதி இழைத்தது. சல்லிக் காசுகூட இல்லாத பிரசங்கியான இயேசுநாதர், தூசியும் வெப்பமும் நிறைந்த யூத நாட்டில் அலைந்து திரிந்து, யாரேனும் தரும் உணவில் ஜீவித்தார். சுத்தமாக, தலைமுடியை நன்கு வாரி, நேர்த்தியான, அழுக்கற்ற ஆடையுடன், நிமிர்ந்து, காற்றிலே பறப்பதுபோல் அசைவற்று இருந்தார். கதையின் மையக் கருத்தையும் அறிவற்ற பக்தியின் விவேகமற்றதையும் வேறுபடுத்தத் தெரியாத மக்களிடையே, இந்த ஒரு விஷயமே அவருடைய வாழ்க்கையை உண்மை அற்றதாகவும் நம்ப முடியாததாகவும் உருவாக்கியது.
மனிதாபிமானம் மிக்கவராகவும் ஆர்வமுள்ளவராகவும் உணர்ச்சிவசப்படுபவராகவும் எளிதில் கோபப்படுபவராகவும் புதிய எளிமையான மற்றும் ஆழமான கோட்பாட்டைக் கொண்டவராகவும் இருந்தார். அதாவது, கடவுளின் உலகளாவிய அன்புநிறை தந்தைத் தன்மையையும் பரலோக சாம்ராஜ்யத்தின் வருகையையும் கற்பிப்பவராகவும் கருதலாம். தீவிரமான, தனிப்பட்ட, தனித்துவமான, காந்த சக்தி மிக்கவராகத் திகழ்ந்தார் என்பது தெளிவு. தன்னைப் பின்பற்றியவர்கள் மீது, அன்பையும் பாசத்தையும் வீரத்தையும் பொழிந்தார். பலவீனமான மற்றும் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் அவரால் குணமடைந்தனர். பலவீனமான மற்றும் மென்மயான உடலமைப்பு காரணமாகச் சிலுவையில் அறையப்பட்ட போது ஏற்பட்ட கடுமையான வலியால் துடிதுடித்து மரணத்தைத் தழுவினார்.
அக்கால வழக்கப்படிச் சிலுவையில் அறையப்படுவோர், அவரவர் சிலுவையை அவரவரே சுமக்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில் தனது சிலுவையைத் தானே சுமந்து செல்லும் வழியில் இயேசுநாதர் மயக்கமடைந்தார் என்று சொல்லப்படுகிறது. சுமார் மூன்று ஆண்டுகள் நாடு முழுவதும் தனது மதக் கொள்கையைப் பரப்பியதுடன், யுதேயாவில் விநோதமான ராஜ்யத்தையும் நிறுவத் திட்டமிட்டதாக, இயேசுநாதர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு விசாரணையில் இயேசுநாதர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட வேண்டுமென தண்டனை விதிக்கப்பட்டது. இரு பக்கங்களில் திருடர்களுடன் சேர்த்து நடுவே இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டார்.
பரலோக சாம்ராஜ்யத்தின் விசுவாசக் கொள்கையே ஏசுநாதரின் முக்கிய பிரசங்கம். மனித சிந்தனையைக் கிளறி மாற்றிய வகையில், புரட்சிகரமான மதக் கொள்கையில் இதுவும் ஒன்று. அன்றைய உலகம் இதன் முழு முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டதா, மனித குலத்தின் நிறுவப்பட்ட பழக்க வழக்கங்களிலிருந்தும் நிறுவனங்களுக்குரிய மிகப் பெரிய சவால்களின் திகைப்பிலிருந்தும் பின்வாங்கியதா என்னும் சிறு ஐயம் எழுகிறது. இயேசுநாதர் பிரசங்கம் செய்த பரலோக ராஜ்ஜியக் கொள்கை, போராட்டம் மிகுந்த மனித வாழ்க்கையை, எந்த சமரசமும் இன்றி முழுமையாக மாற்றிச் சுத்தப்படுத்தும் வலிமை பெற்றது. நற்செய்திகளுக்கு, இந்த மகத்தான போதனைகளின் பாதுகாக்கப்பட்ட அனைத்தையும் விசுவாசி படிக்க வேண்டும். ஆனால், எங்களைப் போன்றவர்கள் நிறுவப்பட்ட யோசனைகளின் தாக்கம் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம்.
யூதர்களைப் பொறுத்தவரை கடவுள் அதாவது இந்த உலகத்தின் ஒரே கடவுள், நீதிமானான கடவுளே என வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதே நேரம் அக்கடவுளை ஒரு வர்த்தகராக, அவரது தந்தையான ஆபிரஹாமுடன் தங்களைப் பற்றி மிக நன்றாகப் பேரம் பேசி, பூமியில் ஆதிக்கம் செலுத்த அழைத்து வந்தார் என்றும் கருதுகின்றனர். ஆனால் தங்களது அனைத்து உரிமைகளையும் சொத்துகளையும் இயேசுநாதர் எடுத்துச் செல்வதைக் கண்டு திகைப்பும் கோபமும் அடைந்தனர்.
பரலோக சாம்ராஜ்யத்திலுள்ள கடவுள் பேரம் பேசுபவர் அல்ல; தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ, பிடித்தமானவர்களோ யாரும் இல்லை என அவர் போதித்தார். கடவுள் என்பவர் எல்லா உயிர்களுக்கும் அன்பான தந்தை. விருப்பு வெறுப்பு இன்றி பிரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஒளிதரும் சூரியன். மாந்தர்கள் அனைவரும் சகோதரர்கள். தெய்விகத் தந்தைக்குப் பிள்ளைகளும் பாவிகளும் வேறல்ல; ஒன்றேதான்.
நாம் அனைவரும் கடைப்பிடிக்கும் இயற்கைப் போக்கு, நமது சொந்த மக்களைப் புகழ்தல், பிற மதங்கள் மற்றும் இனங்களின் நேர்மையையும் நீதியையும் குறைத்தல் ஆகிய செயல்களை நல்ல சுமாரியன் (Good Samaritan) உவமையில் இயேசுநாதர் வெறுத்தார். தொழிலாளர்களின் உவமையில், கடவுள் மீது சிறப்பு உரிமை கோரும் யூதர்களின் பிடிவாதமான கூற்றை ஒதுக்கித் தள்ளினார். பரலோக சாம்ராஜ்யத்துக்குள் எடுத்துக்கொள்ளும் அனைவரையும் கடவுள் சமமாகவே கருதுகிறார். அவரது தாராளத்தில் எந்த அளவீடும் இல்லை. எனவே அவர் செலுத்தும் அன்பிலும் எந்த வேறுபாடும் இல்லை. புதைக்கப்பட்ட திறமையின் சாட்சிகளும் ஏழை விதவை அளித்த சிறு கொடை நிகழ்வும் ஏசுநாதருக்கு மிகவும் பிடித்தவை. பரலோக சாம்ராஜ்யத்தில் எந்த வகையான சலுகைகளோ தள்ளுபடிகளோ மன்னிப்புகளோ கிடையாது.
இயேசுநாதர் கோபத்துக்குக் காரணம் யூதர்களின் தீவிர பழங்குடிக் குறுங்குழுப் பற்றுதான். யூதர்கள் தீவிர குடும்ப விசுவாசிகளாக இருந்தனர். கடவுள் மீதான அளவற்ற அன்பு வெள்ளத்தில், குறுகிய மற்றும் கட்டுப்பாடான குடும்பப் பாசத்தை அடித்துச் சென்றிருப்பார். பரலோகத்தின் முழு சாம்ராஜ்யமும் அவரைப் பின்பற்றுவோரின் குடும்பமானது. இயேசுநாதர் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய தாயும் சகோதரர்களும் வெளியே நின்று கொண்டு அவருடன் பேசுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கின்றனர். ஒருவர் இயேசுவிடம் ‘உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே நிற்கிறார்கள். அவர்கள் உங்களுடம் பேச விரும்புகிறார்கள்’ என்றார். அதற்கு இயேசுநாதர் ‘என் தாய் யார்? சகோதரர்கள் யார்?’ எனக் கேட்டார். பின்னர் அவர் தனது சிடர்களை நோக்கிக் கையை நீட்டி ‘இதோ இவர்கள்தான் எனது தாயும் சகோதரர்களும். பரலோகத்திலிருக்கும் எனது பிதாவின் சித்தப்படி யார் செய்கிறார்களோ, அவர்களே எனக்குத் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவார்கள்’ எனப் பதிலளித்தார் (மத்தேயு xii, 46−50)
அனைத்து மனித குலக் கடவுளின் உலகளாவிய தந்தை மற்றும் சகோதரத்துவத்தின் பெயரில் சர்வ தேசபக்தியையும் குடும்ப விசுவாசப் பிணைப்புகளையும் இயேசுநாதர் வலியுறுத்தினார். மேலும் அவர் தனது பிரசங்கங்களில், பொருளாதார அமைப்பின் அனைத்துத் தரநிலைகளையும் அனைத்துத் தனிநபர் சொத்துகளையும் தனிப்பட்ட அனுகூலங்களையும் கண்டித்தார். எல்லா மனிதர்களும் பரலோக சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது அனைத்து உடைமைகளும் பரலோக சாம்ராஜ்யத்துக்கே சொந்தம். எல்லா மனிதர்களுக்குமான ஒரே நீதியான வாழ்க்கை, தேவனின் விருப்பத்துக்கு ஏற்பச் சேவை செய்வதே. தனியார் செல்வங்களையும் எந்த வகையான தனிப்பட்ட வாழ்க்கைக்கான ஒதுக்கீட்டையும் அவர் திரும்பத் திரும்பக் கண்டித்தார்.
திடீரென ஒருவன் ஓடி வந்து இயேசுநாதரின் முன் மண்டியிட்டு ‘நல்ல எஜமானே, நித்திய ஜீவனைப் பெற நான் என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டார்?’.
அதற்கு இயேசுநாதர் ‘என்னை ஏன் நல்லவன் என அழைத்தாய்? ஒரே ஒருவர்தான் நல்லவர். அந்த ஒருவர்தான் தேவன்’ என்றார். ‘கட்டளைகளை நீ அறிவாய். விபசாரம் செய்யாதே. உயிர்க் கொலை புரியாதே. திருடாதே. பொய் சாட்சி சொல்லாதே. ஏமாற்றாதே. பெற்றோரை மரியாதையுடன் நடத்து’ என்று பதிலளித்தார்.
இதற்கு அவன் ‘எஜமானரே! நீங்கள் சொன்ன அனைத்தையும் எனது இளமைப் பருவம் முதற்கொண்டே செய்து வருகிறேன்’ என்று சொன்னார். இயேசுநாதர் அவனை அன்புடன் கட்டிப்பிடித்தவாறே ‘இனி நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் மீதமுள்ளது. உடனே சந்தைக்குச் சென்று கையில் இருக்கும் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடு. தேவனின் பரலோக சாம்ராஜ்யத்தில் உனக்கான செல்வம் காத்துக் கொண்டிருக்கிறது. சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடர்ந்து வா’ என்றார் (மாற்கு vii. 1−9).
இயேசுநாதர் சொன்னதைக் கேட்டவுடன் அவன் முகம் வாடியது. வருத்தத்துடன் இயேசுவை விட்டு அகன்றார். அவனிடம் ஏராளமான செல்வம் இருந்ததே முக்கிய காரணம்.
இயேசுநாதர் சுற்று முற்றும் பார்த்தவாறே தனது சீடர்களிடம் சொன்னார் ‘தேவனின் பரலோக சாம்ராஜ்யத்துக்குள் பணம் படைத்தவர்கள் நுழைவது எப்படி சாத்தியம்? மிகவும் அரிது’ என்றார். அவரது சீடர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இயேசுநாதர் மீண்டும் மீண்டும் அதே பதிலைச் சொன்னார் ‘பிள்ளைகளே! செல்வத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் தேவனின் பரலோக சாம்ராஜ்யத்துக்குள் நுழைவது கடினம். ஊசியின் காதுகளுக்குள் ஓர் ஒட்டகம்கூட நுழைந்துவிடலாம். ஆனால் பணக்காரன் ஒரு நாளும் தேவனின் பரலோக சாம்ராஜ்யத்துக்குள் நுழைவே முடியாது’ என்றார்.
தேவனின் சாம்ராஜ்யத்தில் அனைவரையும் சமமாக ஒன்றிணைப்பதே அவரது தீர்க்க தரிசனம். முறையான மதத்தின் பேரம் பேசும் நீதிக்காக, இயேசுநாதர் பொறுமை காக்கவில்லை. பதிவான அவரது பெரும்பான்மை பிரசங்கங்கள், புனிதமான வாழ்க்கை விதிகளைத் தீவிரமாகவும் உன்னிப்பாகவும் கடைப்பிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இயேசுநாதரிடம் சில வேத பாரகர்களும் (Scribes), பரிசேயர்களும் (Parisees) ‘உங்கள் சீடர்களில் சிலர், முன்னோர்களின் பாரம்பரியத்தைப் பின்பாற்றாமல், கழுவாத அசுத்தக் கைகளால் ரொட்டியை உண்கின்றனர்’ எனக் குற்றம் கண்டுபிடித்தனர்.
அவர்களுக்கு இயேசுநாதர் பிரதியுத்தரமாகப் பதிலளித்தார் :-
‘இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்;
அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.
எழுதியிருக்கிற பிரகாரம் மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்;
நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள்’ என்றார்.
பின்னும் இயேசு அவர்களை நோக்கி ‘நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது’ என்றார்.
இயேசு அறிவித்தது தார்மிக மற்றும் சமூகப் புரட்சியை மட்டுமில்லை. அவரது குறிப்புகளில் எளிமையான அரசியல் சாயல் இருப்பதை அவரது போதனைகள் தெளிவுபடுத்துகின்றன. அவருடைய சாம்ராஜ்யம் இந்த உலகத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் மனிதர்களின் இதயங்களில்தான் அது இருக்கிறது என்றும் சிம்மாசனத்தில் அல்ல என்றும் கூறியுள்ளார். அவருடைய சாம்ராஜ்யம் மனிதர்களின் இதயங்களில் எங்கு எப்படி இருப்பினும் வெளி உலகம் அதே அளவில் புரட்சிகரமாகப் புத்தாக்கம் பெறும்.
இயேசு நாதரின் பிரசங்கங்களைப மனிதர்கள் தமது போதாமைகளினால் சரியாகப் புரிந்துகொள்ளவோ முழுவதுமாக செவிமடுக்கவோ முடியாவிட்டாலுகூட, இந்த உலகைப் புரட்சிகரமாக மாற்றவேண்டும் என்னும் அவரது தீர்மானத்தை ஒருவர் தவறவிட வாய்ப்பில்லை. அனைத்து மக்களின் வாழ்க்கையை மாற்றவும் இணைக்கவும் விரிவுபடுத்தவும் தீவிரமாக முனைந்தார்; அவரோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் முன் மிகத் தெளிவாக மிக எளிய மொழியில் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார் என்பதெல்லாம் அவருக்கு எழுந்த எதிர்ப்பு, விசாரணை மற்றும் மரண தண்டனை ஆகியவற்றிலிருந்து மிகத் தெளிவாகத் தெரியவருகின்றன.
வசதி படைத்தவர்களும் செல்வச் செழிப்பானவர்களும் அவரது பிரசங்கங்களால் தங்களது உலகம் விசித்திர விஷயங்களால் மாறுவதைக் கண்டு திகிலடைந்தனர். சமூக சேவைகளால் அவர்கள் பெற்ற சிறு சலுகைகளையும் உலகளாவிய மத வாழ்க்கையின் அடிப்படையில் அவர்களிடமிருந்து பறித்துவிட்டார். துருப்பிடித்த இறுக்கமான துளைகளுக்குள் இதுவரை வாழ்ந்து கொண்டிருந்த மனித குலத்தைத் தோண்டி எடுக்கும் பயங்கரமான தார்மிக வேட்டைக்காரனைப் போல் தோன்றினார். தீப்பிழம்பாக வெண்மை நிறத்தில் ஜொலிக்கும் அவரது பரலோக சாம்ராஜ்யத்தில், சொத்து, சலுகை, பெருமை, முன்னுரிமை ஏதுமில்லை. யாருக்கும் எந்த நோக்கமும் இல்லை. அன்பைத் தவிர வேறு வெகுமதியும் இல்லை.
இதன் காரணமாக அதிகாரமும் வசதி படைத்தவர்களும் இயேசுவை எதிர்த்ததில் வியப்பேதும் இல்லை. அவரது சீடர்களுக்குக்கூட விதிவிலக்கு அளிக்கவில்லை. அவர் அல்லது பாதிரியார் தொழில் இரண்டில் ஒன்றுதான் ஜீவிக்க முடியும் என்பதை பாதிரியார்கள் உணர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
தங்களது புரிதலைத் தாண்டி ஏதோவொன்று உயர்வதையும் அனைத்து அம்சங்களையும் அச்சுறுத்துவதையும் கண்டு, ரோமானிய வீரர்கள் வியப்படைந்தனர். இதன் காரணமாக ஏளனமாகச் சிரித்தும் முள்களால் ஆன மகுடத்தை தலையில் சூட்டியும் ஊதா நிற அங்கியை அணிவித்தும் இயேசுவை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கினர். ஆனால் இயேசு சொல்வதை மனதார ஏற்றுக்கொள்வது என்பது பழக்க வழக்கங்களைக் கைவிடுதல், உள்ளுணர்வு மற்றும் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல், பரலோக சாம்ராஜ்யத்தின் நம்ப முடியாத மகிழ்ச்சியை அடைதல் என விசித்திரமான மற்றும் எச்சரிக்கை மிகுந்த வாழ்க்கைக்குள் தடம் பதிப்பது போன்றது.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.