40. ஹூனர்கள் மற்றும் மேற்கு சாம்ராஜ்யத்தின் முடிவு
ஐரோப்பாவில் வெற்றிக் கொடி நாட்டிய மங்கோலியர்களின் வரவை மனித வரலாற்றில் புதிய அத்யாயமாகக் கொள்ளலாம். கிறிஸ்தவ சகாப்தம் தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும் மங்கோலியர்களும் நார்டிக் மக்களுக்குக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததில்லை. வடக்கு வனப்பகுதிகளைத் தாண்டி உறைபனி படர்ந்த நிலங்களைச் சேர்ந்த மங்கோலியர்களின் ஓர் இனமான லாப்ஸ் (Lapps), மேற்காக லாப்லாண்ட் (Lapland) வரை ஊடுருவினர். ஆனால், அன்றைய பிராதன வரலாற்றில் அவர்களது பங்களிப்பு ஏதுமில்லை. மேற்கத்திய உலகின் ஆயிரம் ஆண்டு வரலாற்றில் ஆரியன், செமிட்டிக் மற்றும் ப்ரூனெட் ஆகியவை ஒன்று மீது மற்றொன்று வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்தியது. எகிப்து மீதான எத்தியோப்பிய படையெடுப்பு, தெற்கிலுள்ள கருப்பின மக்கள் அல்லது தூரக் கிழக்கில் மங்கோலியர்கள் என ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர வேறு இடையூறுகள் இல்லை.
நாடோடி மங்கோலியர்கள் மேற்கு நோக்கி நகர்வதற்கு இரு முக்கியக் காரணங்கள் இருந்திருக்கலாம். முதலாவது சீன சாம்ராஜ்யத்தின் ஒருங்கிணைப்பு, வடக்கு நோக்கி விரிவாக்கம் மற்றும் வளமான ஹூன வம்ச ஆட்சியின் போது ஏற்பட்ட மக்கள் தொகைப் பெருக்கம். இரண்டாவது தட்ப வெப்ப நிலை மாற்றம். மழைப் பொழிவு குறைந்த காரணத்தால், சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளின் அழிவு; அல்லது அதிக மழைப் பொழிவு காரணமாக ஏற்பட்ட புல்வெளியால் மேய்ச்சல் நிலம் அதிகரிப்பு ஆகியவை.
இவ்விரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறு பிராந்தியங்களில் நடைபெற்றாலும் மேற்கு நோக்கிய குடிபெயர்வை ஊக்குவித்தன. மூன்றாவது காரணி ரோமானிய சாம்ராஜ்யத்தின் பொருளாதார அவலநிலை, உள்நாட்டுச் சிதைவு மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சி. பிந்திய ரோமானிய சாம்ராஜ்யத்தில் வசதி படைத்தவர்களும் ராணுவ சர்வாதிகாரிகளின் வரி வசூலிப்பவர்களும் அதிகார பலத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் ஆக்ரமித்துக்கொண்டனர். உந்துதல், வழிமுறை மற்றும் வாய்ப்பு ஆகிய மூன்று அம்சங்களும் நிறைந்திருந்தன.
ஐரோப்பிய ரஷிய கிழக்கு எல்லைகளை பொ.ஆ.1-ம் நூற்றாண்டில் ஹூன இன மக்கள் அடைந்தனர். ஆனால் இந்தக் குதிரை மாவீரர்கள் புல்வெளிப் பிரதேசங்களில் தங்கள் அதிகாரத்தைச் செலுத்த இன்னும் சில நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பொ.ஆ.5-ம் நூற்றாண்டை ஹூனர்களின் நூற்றாண்டாகக் கொள்ளலாம். மாமன்னர் ஹோனோரியஸ் (Honorius) படைத் தளபதியான ஸ்டிலிசோவின் (Stilicho) கூலிப் படை இத்தாலிக்குள் நுழைந்த ஹன்ஸ் இனத்தின் முதல் பிரிவு. வாண்டல்கள் வெளியேறிய பனோனியா மாகாணத்தை கைப்பற்றிக் கொண்டனர்.
ஐந்தாம் நூற்றாண்டில், இரண்டாம் காலாண்டில், ஹூன இனத்தின் மிகப் பெரிய போர் வீரனாக அட்டிலா (Attila) உருவெடுத்தார். அவனது ஆட்சிக் காலம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. தெளிவற்ற மற்றும் திகைப்பூட்டும் நிகழ்வுகள் மட்டுமே தெரிய வந்துள்ளன. ஹூனர்கள் மீது மட்டுமின்றி ஜெர்மானிய பழங்குடி கூட்டமைப்பின் மீதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தினார். ரைன் நதி தொடங்கி மத்திய ஆசிய சமவெளிப் பிரதேசம் வரை அவரது சாம்ராஜ்ய எல்லை விரிவடைந்திருந்தது. சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டார். தனது தலைமை முகாமை டான்யூப் நதிக்குக் கிழகே ஹங்கேரியில் நிறுவினார். அட்டிலாவை இங்கு கான்ஸ்டாண்டிநோபிள் தூதரும் வரலாற்று ஆசிரியருமான பிரிஸ்கஸ் (Priscus) சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.
மங்கோலியர்களின் வாழ்க்கை முறை பழைமையான ஆரியர்களின் வாழ்க்கை முறையைப் போலிருந்தது. சாதாரண மக்கள் குடிசைகளிலும் கூடாரங்களில் வசித்தனர். தலைவர்களோ மரவேலி அமைத்து அதன் நடுவே மரத்தாலான மண்டபங்களைக் கட்டி வாழ்ந்தனர். கவிஞர்கள், இசைவாணர்களின் ஆடல் பாடல்களோடு, விருந்து உண்டும் மது அருந்தியும் கூத்தாடிக் களித்தனர். ஹோமர் வரலாற்றுக் கதாநாயகர்களும் மேசிடோனிய அலெக்ஸாண்டர் படை வீரர்களும் கான்ஸ்டாண்டிநோபிளில் ஆர்காடியஸ் மகன் இரண்டாம் தியோடோசியஸ் அரண்மனையில் நாகரிக வாழ்க்கை வாழ்வதை விடவும் அட்டிலா முகாமில் சந்தோஷமாகக் குடியும் கூத்துமாக இருந்திருக்கலாம் என எண்ணியிருப்பார்.
ஏஜியன் நாகரிகத்தின் மீது காட்டுமிராண்டி மக்கள் நடத்திய தாக்குதல்களைப் போல், மத்தியதரைக் கடல் நாடுகளின் கிரேக்க-ரோமானிய நாகரிகத்தின் மீது ஹூனர் மற்றும் அட்டிலா தலைமையிலான நாடோடிகள் தாக்குதல் நடத்துவார்களோ என ஒரு கணம் எண்ணத் தோன்றியது. பெரிய அளவில் வரலாறும் மீண்டும் திரும்புகிறதோ என்று கூட ஒரு கணம் யோசிக்கத் தோன்றியது. ஆனால் முந்தைய கிரேக்கர்களை ஒப்பிடுகையில், ஹூன இன மக்கள் நாடோடி வாழ்க்கையோடு இன்னும் அதிகமாகப் பின்னிப் பிணைந்திருந்தனர். கிரேக்கர்கள், ஊர் விட்டு ஊர் குடிபெயரும் கால்நடை விவசாயிகள். ஆனால், ஹூனர்களோ கொள்ளை அடிப்பார்கள்; சுரண்டுவார்கள். எந்தவொரு இடத்திலும் நிரந்தரமாகக் குடியேறாமல் நாடோடிகளாகத் திரிவார்கள்.
அட்டிலா தனது அதிகாரத்தையும் வலிமையையும் பயன்படுத்திச் சில காலம் தியோடோசியஸைக் கொடுமைப்படுத்தினார். அவரது படைகள் கான்ஸ்டாண்டிநோபிளை இடித்துத் தரைமட்டமாக்கி நாசப்படுத்தின. பால்கன் தீபகற்பத்தில் மட்டும் 70க்கும் அதிகமான நகரங்களை அட்டிலா அழித்தார் என்கிறார் வரலாற்று ஆசிரியரான கிப்பர். அட்டிலாவைச் சமாதானப்படுத்த அவ்வப்போது கணிசமான தொகையைக் கப்பமாக தியோடோசியஸ் செலுத்தினார். இருப்பினும் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் அவரைக் கொல்வதற்குத் தியோடோசியஸ் ரகசிய ஒற்றர்களை அனுப்பி வைத்தார்.
பொ.ஆ.451-ல் இலத்தீன் மொழி பேசும் தனது சாம்ராஜ்யத்தின் சரி பாதி பகுதிகளின் மீது கவனத்தைத் திருப்பி, கௌல் பிராந்தியத்தின் மீது படையெடுத்தார். வடக்கு கௌலில் உள்ள ஒவ்வொரு ஊரையும் தீக்கிரை ஆக்கினார். ஃப்ராங்க் மற்றும் விஸிகோத் ஆகியோர் அட்டிலாவுக்கு எதிராக ஒன்றிணைந்து படைகளைத் திரட்டிப் போரிட்டனர். ட்ராய்ஸ் (Troyes) என்ற இடத்தில் நடைபெற்ற கடுமையான போரில் அட்டிலா படுதோல்வி அடைந்தார். 1,50,000 முதல் 3,00,000 லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் கௌலில் அடைந்த தோல்வியால் அட்டிலா சோர்ந்து போகவில்லை. அடுத்த ஆண்டு மிகப் பெரிய படையைத் திரட்டிக்கொண்டு வெனீஷியா (Venetia) வழியாக இத்தாலிக்குள் நுழைந்தார். அக்யூலியா (Aquileia) மற்றும் பதுவா (Padua) ஆகிய இரு நகரங்களைக் கொளுத்திச் சாம்பலாக்கி, புகழ் பெற்ற மிலன் (Milan) நகரின் செல்வங்களைக் கொள்ளையடித்தார்.
அட்டிலாவின் அடக்குமுறைக்கு பயந்து, வடக்கு இத்தாலியப் பகுதிகள், குறிப்பாக பதுவா நகரிலிருந்து தப்பியோடியவர்கள் ஏடிரியாட்டிக் (Adriatic) உப்பங்கழிகளில் உள்ள தீவுகளில் தஞ்சம் புகுந்தனர். அங்கு கடினமாக உழைத்து நிர்மாணித்த வெனிஸ் (Venice) என்னும் நகரமே, இடைக்காலத்தில் மிகப் பெரிய வர்த்தக மையங்களுள் ஒன்றாகப் புகழ் பெற்று விளங்கியது.
பொ.ஆ.453-ல் இளம் பெண்ணோடு நடக்கவிருந்த தனது திருமணத்தை ஒட்டி மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கல்யாணம் களை கட்டியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அட்டிலா விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மரணத்தைத் தழுவினார். அவரது இறப்பைத் தொடர்ந்து, கொள்ளை அடித்துக் கட்டிய சாம்ராஜ்யம் சீட்டுக் கட்டுபோல் மளமளவெனச் சரிந்து, துண்டு துண்டாகச் சிதறியது. ஹூன இன மக்கள் அவர்களைச் சுற்றியிருந்த ஏராளமான ஆரிய மக்களுடன் கலந்து வரலாற்றில் இருந்தே காணாமல் போனார்கள். ஹூனர்களின் படையெடுப்பும் கொள்ளையும் நிறைவாக இலத்தீன் ரோமானியப் பேரரசின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அட்டிலாவின் மறைவைத் தொடர்ந்து அடுத்த 20 வருடங்களில், பத்துக்கும் அதிகமான வாண்டல் மற்றும் கூலிப்படைகளைச் சேர்ந்த தலைவர்கள் ரோமானிய சாம்ராஜ்யத்தை மாற்றி மாற்றி ஆண்டார்கள். கார்த்தேஜிலிருந்து வந்த வாண்டல்கள் பொ.ஆ.455-ல் ரோமாபுரியைச் சூறையாடினார்கள். நிறைவாக பொ.ஆ.476-ல் ரோமுலஸ் அகஸ்டுலஸ் (Romulus Augustulus) என்ற பெயரில் தனக்குத் தானே மன்னனாக முடிசூட்டிக் கொண்ட பெனோனியா இனத்தைச் சேர்ந்தவனைக் காட்டுமிராண்டிகளின் தலைவன் ஓடோசர் (Odoacer) வீழ்த்தினார். மன்னன் என்னும் பெயரில், மேற்கில் யாரும் இல்லை என்ற செய்தியை கான்ஸ்டாண்டிநோபிளுக்கு அறிவித்தார். சீரும் சிறப்புடன் பரந்து விரிந்திருந்த இலத்தீன் ரோமானிய சாம்ராஜ்யம் புகழ் குன்றிய நிலையில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தியோடோரிக் தி கோத் (Theodoric the Goth) என்பவர் ரோமாபுரி அரியணை ஏறினார்.
மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பா முழுவதும் நாகரிகம் குறைந்த பிரிவுகளின் தலைவர்கள் நூற்றுக்கணக்கில் சிற்றரசர்களாகவும் பிரபுக்களாகவும் ஆங்காங்கே அதிகாரத்தைக் கைப்பற்றி கௌல் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஆட்சி புரிந்தனர். இலத்தீன் மொழி சிறுபான்மை இன மொழியாகச் சுருங்கிப் போனது. ஆனால் பிரிட்டன் மற்றும் ரைன் நதிக்குக் கிழக்கே உள்ள பகுதிகளில் ஜெர்மானிய அல்லது பொஹீமிய (Bohemia) ஜெக் (Czech) ஸ்லோவேனிக் (Slavonic) மொழிகள் பரவாலாகப் பேசப்பட்டன.
பாதிரிகள் மற்றும் மேட்டுக்குடிகள் மட்டுமே இலத்தின் மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர். சொத்துக்களும் உடைமைகளும் வலுவானர்கள் கட்டுப்பாட்டில் இருக்க, பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலவியது. கோட்டைக் கொத்தளங்கள் பெருகின; ஆனால் அடிப்படை வசதிகள் மோசமாக இருந்தன. ஆறாம் நூற்றாண்டின் துவக்கம் மேற்கு உலகம் முழுவதும் இருள் படர்ந்தே காணப்பட்டது. கிறிஸ்தவ மிஷினரிகளும் பாதிரிகளும் மட்டுமே அழிவின் விளிம்பிலிருந்த இலத்தீன் மொழியைக் காப்பாற்றினர். இவர்கள் இல்லாவிடின் இலத்தீன் மொழியே அப்போதே முற்றிலுமாக அழிந்திருக்கும்.
ரோமானிய சாம்ராஜ்யம் ஏன் பிரம்மாண்ட வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் அடைய வேண்டும்? குடியுரிமை என்னும் கருத்துதான் அதனை ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சாம்ராஜ்யமாக்கியது. விரிவடையும் குடியரசு மற்றும் அதற்கு முந்தைய சாம்ராஜ்யக் காலங்களிலும் ஏராளமானோர் ரோமானிய குடியுரிமை பற்றிய பெருமையோடும் கடமை உணர்வுவோடும் விளங்கினர். ரோமானிய சட்டங்களின் கீழ் தங்களுக்குள்ள உரிமைகள் மீது நம்பிக்கை கொண்டனர். ரோமாபுரிக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருந்தனர்.
ரோமானிய சாம்ராஜ்யம் சட்டத்தை நிலைநாட்டியது. சீரும் சிறப்பும் புகழும் எல்லைகள் தாண்டிப் பரவின. முன்பு நடைபெற்ற ப்யுனிக் போர்களின் போதும் செல்வம் மற்றும் அடிமைத்தனத்தின் வளர்ச்சி காரணமாகவும் குடியுரிமை குறித்த உணர்வு குறைத்து மதிப்பிடப்பட்டது. குடியுரிமை பரவியது உண்மை என்றாலும் குடியுரிமை குறித்த யோசனை பரவவில்லை.
ரோமானிய சாம்ராஜ்யம் பழமையான அமைப்பு. எதையும் கற்பிக்கவில்லை, பன்மடங்கு பெருகும் தனது குடியுரிமை குறித்த தன்னிலை விளக்கமும் அளிக்கவில்லை. முக்கிய முடிவுகள் எடுக்க ஒத்துழைக்கும்படி குடிமக்களை அழைக்கவும் இல்லை. பொதுவான புரிதலை உறுதிப்படுத்தப் பள்ளிகளின் வலையமைப்பும் இல்லை; கூட்டுச் செயல்பாட்டைத் தக்க வைக்கச் செய்தி விநியோகமும் பரிமாற்றமும் இல்லை.
மரியஸ் (Marius) மற்றும் சுல்லா (Sulla) காலம் தொட்டு, ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடியவர்கள், அரசு விவகாரங்களில் பொது மக்களின் கருத்துகளைக் கேட்டு உருவாக்க வேண்டுமென எண்ணவே இல்லை. இதன் காரணமாகக் குடியுரிமை உணர்வு, சீந்துவாரின்றி மரணத்தைத் தழுவியது. அது அழிந்ததை யாரும் கவனிக்கவும் இல்லை. மனித சமூகத்தின் சாம்ராஜ்யங்கள், மாகாணங்கள், அமைப்புகள் உள்ளிட்டவை புரிந்துகொள்ளும் விஷயம் மற்றும் விருப்பமாகும். ஆனால் ரோமானிய சாம்ராஜ்யத்துக்கு இவை இல்லாததால் முடிவுக்கு வந்தது.
இலத்தீன் பேசும் ரோமானிய சாம்ராஜ்யம் பொ.ஆ.5-ம் நூற்றாண்டில் முற்றிலுமாக அழிந்து போனாலும் அதற்குள் ஏதோவொன்று புதிதாகப் பிறந்து, அதன் மகத்தான பெருமையையும் பாரம்பரியத்தையும் பயன்படுத்திக்கொண்டது. அதுதான், இலத்தீன் மொழி பேசும் சரிபாதி கத்தோலிக்கப் பிரிவு. சாம்ராஜ்யம் வீழ்ந்தாலும் மனிதர்களின் மனத்தையும் விருப்பத்தையும் கவர்ந்ததால் பிழைத்துக் கொண்டது. சட்டத்தையும் படைகளையும் விட வலிமையான கிருத்துவப் பாதிரியார்களும் மிஷினரிகளுமே இதற்குக் காரணம்.
பொ.ஆ.4-5 நூற்றாண்டுகளில் ரோமானிய சாம்ராஜம் வீழ்ந்த அதே காலகட்டத்தில் கிறிஸ்தவம் ஐரோப்பா முழுவதும் பரவித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. தன்னைத் தோற்கடித்த நாகரிகம் குறைந்த குழுக்களையும் வெற்றி கொண்டது. ரோம் மீது படையெடுக்க அட்டிலா எண்ணிய போது, படை தளபதிகள் கூட செய்ய முடியாத செயலை ரோமாபுரியின் மதத் தலைவர் செய்தார். தார்மிக ரீதியாக அட்டிலாவிடம் பேசி, ரோம் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்திப் படைகளைத் திருப்பி அனுப்பினார்.
ரோமாபுரியின் மதத் தலைவர் அல்லது ரோமாபுரியின் போப் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர். சக்ரவர்த்திகள் யாரும் அப்போது இல்லாத நிலையில், போப் தனக்குத் தானே ராஜாங்கப் பட்டங்களைச் சூட்டியதுடன், உரிமைகளையும் எடுத்துக்கொண்டார். ரோமானிய சாம்ராஜ்யத்தின் பண்டைய சக்ரவர்த்திகள் சூட்டிக்கொண்ட பாண்டிஃபெக்ஸ் மேக்ஸிமஸ் (Pontifex Maximus) என்னும் தலைமைப் பூசாரிப் பட்டத்தைப் போப் சூட்டிக்கொண்டார்.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.