41. பைசண்டைன் மற்றும் சாஸானிய சாம்ராஜ்யங்கள்
ரோமானிய சாம்ராஜ்யத்தின் மேற்குப் பாதியை விடவும் கிரேக்க மொழி பேசும் கிழக்குப் பாதிப் பகுதி அரசியல் உறுதிப்பாடு மிகுந்ததாகக் காணப்பட்டது. பொ.ஆ.5-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த பேரழிவுகள், குறிப்பாக இலத்தீன் மொழி பேசும் ரோமானிய சாம்ராஜயத்தின் முழுமையான வீழ்ச்சிக்குக் காரணமாகின. இரண்டாம் தியோடோசியஸைக் கொடுமைப்படுத்தியதுடன், கான்ஸ்டாண்டிநோபில் நகரையும் அட்டில்லா கொள்ளை அடித்தார். இருப்பினும் எப்படியோ அந்நகர் பெரும் அழிவுக்கு உள்ளாகாமல் தப்பிப் பிழைத்தது. நைல் (Nile) நதி வழியாக வந்த நூபியன் (Nunbian) இன மக்கள் அதன் உற்பத்தியிடத்தில் இருந்த மேல் எகிப்தைச் சூறையாடினர். ஆனாலும் கீழ் எகிப்தும் அலெக்ஸாண்டிரியாவும் செல்வச் செழிப்போடுதான் இருந்தன. பெரும்பான்மை ஆசியா மைனர் சாஸானிய (Sassanid) பாரசீகர்களுக்கு எதிராகவே காணப்பட்டது.
பொ.ஆ.6-ம் நூற்றாண்டு மேற்கத்திய உலகுக்கு இருள் படர்ந்த காலமாகத் திகழ்ந்தாலும் கிரேக்க சக்தியின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. தியோடோரா (Theodora) என்னும் நடன மங்கையை, இலட்சியமும் ஆற்றலும் கொண்ட முதலாம் ஜஸ்டினியன் (Justinian I) (பொ.ஆ. 527-565) திருமணம் செய்து கொண்டு பட்டத்து ராணியாக்கினார். நடன மங்கையாக இருந்தவர் அறிவிலும் திறமையிலும் ஜஸ்டினியனுக்கு இணையாகவும் இருந்தார். வாண்டல்களிடமிருந்து வடக்கு ஆப்பிரிக்காவையும் கோத்களிடமிருந்து இத்தாலியையும் ஸ்பெயினின் தென் பகுதியையும் மீட்டெடுத்தார்.
கடற்படையையும் தரைப்படையையும் வலுப்படுத்தினார். கான்ஸ்டாண்டிநோபிளில் புனித சோஃபியாவுக்கு மிகப் பெரிய சர்ச்சைக் கட்டினார். ரோமனிய சட்டத்தைத் தொகுத்தார். புதியதொரு பல்கலைக்கழகத்தை நிறுவினார். ஆனாலும் இதற்குப் போட்டியாகச் சிறப்புடன் விளங்கிக் கொண்டிருந்த, பிளேடோ காலம் தொட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஏதென்ஸில் தொடர்ச்சியாக இருந்த, பல தத்துவப் பள்ளிகளை இழுத்து மூடினார்.
பாரசீக சாம்ராஜ்யம் பொ.ஆ.3-ம் நூற்றாண்டு தொடங்கி பைசண்டைனுக்குப் போட்டியாக மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. இவ்விரு சாம்ராஜ்யங்களும் ஆசியா மைனர், சிரியா மற்றும் எகிப்தை நிரந்தர அமைதியின்மைக்குத் தள்ளின. பொ.ஆ.1 நூறாண்டில் நிலங்கள் வேளாண்மைக்கு உகந்தவையாகச் செழிப்பாக விளங்கின. ஆனால் அடிக்கடி நடைபெற்ற போர்களால், விவசாய நிலங்களின் மண் வளம் சீரழிந்தது. கடுமையான வரி வசூல், சூறையாடல், படுகொலை காரணமாக மக்களின் எண்ணிக்கை குறைந்து அவர்களின் வாழ்வாதாரமும் நசிந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் எகிப்து கொஞ்சம் பரவாயில்லை என்னும் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான வர்த்தகம் கான்ஸ்டாண்டிநோபிளைப் போலவே அலெக்ஸாண்ட்ரியாவிலும் மெள்ள மெள்ளக் குறையத் தொடங்கியது.
தொடர் போர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரு சாம்ராஜ்யங்களிலும் அறிவியல் மற்றும் அரசியல் தத்துவங்கள் முற்றிலுமாக அழிந்தே போயின. ஏதென்ஸின் கடைசி தத்துவ ஞானிகள் அவர்களது முன்னோர்களின் தத்துவங்களை உள்ளடக்கிய இலக்கியங்களை, எல்லையற்ற மரியாதை நிமித்தமாகவும் புரிதலுக்காகவும் பாதுகாத்தனர். ஆனால் இந்த இலக்கியங்களில் காணப்படும் ஒளிவுமறைவற்ற அறிக்கைகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லும் சுதந்திரமும் துணிச்சலும் மிக்க சிந்தனைகளைக் கொண்ட அறிஞர் பெருமக்களைக் காணவில்லை. இவ்வகைப் பெருமக்கள் இல்லாமை காரணமாக அரசியல் மற்றும் சமூகக் குழப்பங்கள் பெருமளவு நிலவின. இந்தக் காலகட்டத்தில் மனித நுண்ணறிவு உறைந்து போனதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. புது வகையான மத சாம்ராஜ்யங்களான பாரசீகம் மற்றும் பைஜாண்டியம் ஆகியவற்றில் நிலவிய சகிப்பின்மையே, மனித மனத்தின் சுதந்திரமான செயல்பாடுகளுக்குப் பெருந்தடையாக விளங்கின.
உலகின் பழங்கால சாம்ராஜ்யங்கள் அனைத்துமே கடவுள் அல்லது கடவுள் நிலையில் அரசனை வணங்கும் மத சாம்ராஜ்யங்களாகவே திகழ்ந்தன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அலெம்ஸாண்டரைத் தெய்வத் தன்மை கொண்டவனாகவும் சீசர்களைக் கடவுள்களாகக் கருதி பலிபீடங்கள், சிலைகள், கோயில்கள் கட்டியும் வழிபட்டனர். இவர்களது சிலைகள் முன்னால் தூபம் ஏற்றி உறுதிமொழி எடுப்பது, ரோமானிய சாம்ராஜ்யத்தின் மீது விசுவாசமாக இருப்பதன் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் இந்தப் பழமையான மதங்கள் உண்மையான மற்றும் செயல்படுபவை ஆகும். மனத்துக்குள் அத்துமீறிப் படையெடுக்கவில்லை. கடவுளை வணங்கிப் பலி கொடுத்தால், அது பற்றிச் சிந்திக்கவும் கருத்தைப் பதிவு செய்யவும் உரிமை இருந்தது.
ஆனால், புதிதாகத் தோன்றிய மதங்கள், குறிப்பாகக் கிறிஸ்தவம் போன்றவை, இணக்கமாக இருப்பதுடன், மதநம்பிக்கைகளைப் புரிந்துகொள்ளவும் வலியுறுத்தின. எனவே, அந்த நம்பிக்கைகளின் உண்மையான அர்த்தம் மீதான கடுமையான சர்ச்சை, இயற்கையாகவே எழுந்தது. இப்புதிய மதங்கள் சமயம் சார்ந்த மதங்கள். ‘மரபு வழி’ மற்றும் ‘பரம்பரைப் பழைமைக் கோட்பாடுகள்’ ஆகிய புதிய சொற்றொடர்கள் உலகில் புழங்கத் தொடங்கின. செயல்பாடு, பேச்சு மற்றும் தனி மனித சிந்தனையைக் கற்பிப்பத்தையும் தொகுப்பின் எல்லைக்குள் வைத்திருப்பதையும் இம்மதங்கள் ஆதரித்தன. சமயத்திலுள்ள ஒரு கருத்தைத் தவறு என்றும் அதை மக்களிடையே பரப்புவதையும் அறிவுசார் குறையாக எண்ணாது, தார்மிகக் குறைபாடாகவே கருதியது. கருத்தைத் தவறெனச் சுட்டிக்காட்டிய ஆத்மாவை நித்திய அழிவுக்கும் கண்டித்தது.
பொ.ஆ.3-ம் நூற்றாண்டில் சஸ்ஸானிட் வம்சத்தை நிறுவிய முதலாம் ஆர்தாஷிர் (Ardashir) மற்றும் பொ.ஆ.4-ம் நூற்றாண்டில் ரோமானிய சாம்ராஜ்யத்தை மறுகட்டமைத்த கான்ஸ்டண்டைன் ஆகிய இருவரும் உதவி கோரி மத அமைப்புகளை நாடினர். இப்புதிய மதங்கள் மக்களின் விருப்பங்களைப் பயன்படுத்தவும் கட்டுப்படுத்தவும் புது வழிமுறைகளைக் கையாண்டதே முக்கியக் காரணம். பொ.ஆ.4-ம் நூற்றாண்டு முடிய இரு சாம்ராஜ்யங்களும் வேறு புது மதங்கள் உருவாக்கத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் தடை விதித்தன.
ஜோரோஸ்டர் அல்லது ஜாராதுஷ்ட்ரா (Zoroaster or Zarathushtra) என்ற பெயரில் பாரசீகத்தில் முதலாம் ஆர்தாஷிர் (Ardashir) பண்டைய மதத்தை நிறுவினார். கோயில்கள், பூசாரிகள், புனிதமான நெருப்பு எரியும் பலிபீடங்கள் ஆகியவற்றை உருவாக்கி அதை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக அறிவித்தார். பொ.ஆ.3-ம் நூற்றாண்டு முடிவதற்கு முன்பாகவே ஜோரோஸ்ட்ரியானிஸ மதம் கிறிஸ்துவத்தைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தது.
பொ.ஆ.277-ல் மனிசியான்ஸ் (Manicheans) என்னும் புதிய மதத்தை நிறுவிய குற்றத்துக்காக மனி (Mani) சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார். கிறிஸ்தவக் கோட்பாடுகளை, மனிசியான்ஸ் கோட்பாடுகள், கடுமையாகச் சாடியதே முக்கியக் காரணம். அதேபோல், பதிலுக்கு, ஜோரோஸ்ட்ரியன் கோட்பாடுகளை கிறிஸ்தவக் கோட்பாடுகள் கடுமையாக விமர்சித்தன.
கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர்களை கான்ஸ்டாண்டிநோபிள் அரசு வீடு வீடாகத் தேடிச் சென்று வேட்டையாடியது. இவ்வாறாக அந்தந்த சாம்ராஜ்யங்களின் அதிகாரப்பூர்வ மதங்கள் மற்ற மதங்களைப் பின்பற்றுவோரைக் கொன்று குவித்தன. மத நல்லிணக்கமோ சகிப்புத் தன்மையோ காணப்படவில்லை. அனைத்து மதக் கோட்பாடுகளும் சந்தேகத்துக்கு இடமளித்தன. சகிப்பின்மை நிலவிய காரணத்தால், கலக்கமற்ற மனத்தின் சுதந்திரமான செயல்பாட்டைக் கோரும் அறிவியல் முற்றிலுமாக மறைந்து போனது.
போரும் இறையியல் சகிப்பின்மையும் மனித இனத்தின் தீய பழக்கங்களும் அக்கால பைஜாண்டியன் வாழ்க்கையை ஆக்ரமித்திருந்தன. பைஜாண்டியனும் பாரசீகமும் வடக்கிலிருந்து படையெடுத்த காட்டுமிராண்டுகளுடன் போரிடாத போதும் ஆசியா மைனர் மற்றும் சிரியாவை பகைமை காரணமாக பேரழிவுக்கு உள்ளாக்கின. இவ்விரு சாம்ராஜ்யங்களும் இணைந்து போரிட்டாலும் கூடக், காட்டுமிராண்டிகளை வென்றோ, இழந்த செல்வங்களை மீட்டிருக்கவோ முடியாது. துருக்கியர்கள் அல்லது தார்தார்கள் அடுத்தடுத்து ஆட்சி அமைத்தவர்களுடன் நட்பு பாராட்டி வரலாற்றில் இடம் பிடித்தனர். ஜஸ்டினியன் மற்றும் முதலாம் கோஸ்ரோஸ் (Chosroes) ஆகிய இருவரும் பொ.ஆ.6-ம் நூற்றாண்டின் முதன்மையான இரு எதிரிகளாக விளங்கினர்.
பொ.ஆ.7-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஹீராக்ளியஸ் (Heraclius) மற்றும் இரண்டாம் கோஸ்ரோஸ் மோதிக்கொண்டனர். பொ.ஆ.610-ல் ஹீராக்ளியஸுடன் நடந்த போரில் இரண்டாம் கோஸ்ரோஸ் வெற்றி வாகை சூடி ஆண்டியோ (Antioch), டமாஸ்கஸ் (Damascus) மற்றும் ஜெரூசலத்தைக் கைப்பற்றிக் கொண்டார். ஆசியா மைனரிலுள்ள சால்சிடான் (Chalcedon) நகரையும் அதைத் தொடர்ந்து எகிப்தையும் கைப்பற்றினார். தோல்வியைத் தழுவிய ஹீராக்ளியஸ் சுதாரித்துக்கொண்டு, பொ.ஆ.627-ல் நினெவே (Nineveh) பகுதியில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். திடீர்த் திருப்பமாக, இரண்டாம் கோஸ்ரோஸ் ஆட்சியை, அவனது சொந்த மகனான கவத் (Kavadh) கவிழ்த்ததுடன், தந்தை என்றும் பாராமல் கொன்றுவிட்டு அரியணை ஏறினார். பைஜாண்டியம் மற்றும் பாரசீக சாம்ராஜ்யங்களும் போதிய அளவுக்கு அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயின.
சிரியாவில் ஹீராக்ளியஸ் ஆட்சி செய்து கொண்டிருந்த போது, டமாஸ்கஸ் நகருக்குத் தெற்கே உள்ள போஸ்ட்ரா (Bostra) புறக்காவல் நிலையத்துக்கு ஒரு தூதர் ஓலையை எடுத்து வந்தார். செமிட்டிக் பாலைவன மொழியான அரேபிய மொழியில் அது எழுதப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பாளர் ஓலையிலுள்ள வாசகங்களை மன்னனுக்குப் படித்துக் காட்டினார். அந்த ஓலையை அனுப்பியவர் ‘கடவுளின் தீர்க்கதரிசி முகம்மது நபிகள் நாயகம்’ எனத் தன்னைத் தானே அழைத்து ‘உண்மையான ஒற்றைக் கடவுளை ஏற்றுக்கொண்டு அடி பணிய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். மன்னர் அந்த ஓலைக்கு அளித்த பதில், வரலாற்று ஏடுகளில் பதிவாகவில்லை. மன்னன் கவத் ஆட்சி புரிந்த டெசிஃபான் (Ctesiphon) என்ற இடத்தில் இதே வாசகங்களைக் கொண்ட மற்றொரு ஓலை அவரிடமும் வழங்கப்பட்டது. கோபம் கொண்ட கவத் ஓலையைக் கிழித்து எறிந்ததுடன், தூதரை உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டார்.
பெடோயின் (Bedouin) தலைவரான கடவுளின் தீர்க்கதரிசி முகம்மது நபிகள் நாயகத்தின் தலைநகர் மெடீனா (Medina) ஆகும். ‘உண்மையான ஒற்றைக் கடவுள்’ என்னும் புதிய மதத்தைத் தோற்றுவித்து மக்களிடையே போதித்துக் கொண்டிருந்தார். ‘ஓ கடவுளே! கவத் ஆளுகையிலிருந்து இந்த ஆட்சியைப் பறித்துவிடு’ என்பதே ஓலையில் இருந்த வாசகம்.
42. சீனாவின் சூய் மற்றும் தாங் வம்சங்கள்
ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு முழுவதும் மங்கோலிய மக்களின் மேற்கு நோக்கிய ஊடுருவல் தொடர்ந்து நடைபெற்றது. அட்டில்லா தலைமையிலான ஹன்ஸ் இன மக்களின் ஊடுருவலை, இவர்களுக்கு முன்னோடியாகக் கொள்ளலாம். நிறைவாக ஃபின்லாந்து, எஸ்தோனியா மற்றும் ஹங்கேரி நாடுகளில் மங்கோலியர்கள் தங்கள் ஆட்சியை நிறுவினர். இவர்களுக்குப் பின் வந்த மக்கள் பேசிய மொழி துருக்கியைப்போல் இருந்தமையால், இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது. பல்கேரிய மக்களும் துருக்கியர்கள் என்றாலும் அவர்கள் ஆரியப் பேச்சை எடுத்துக் கொண்டனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆரிய மக்கள் ஏஜியன் மற்றும் செமிட்டிக் நாகரிகங்களைப் பெற்றுக் கொண்டதுபோல், மங்கோலியர்கள் ஐரோப்பிய, பாரசீகம் மற்றும் இந்தியாவில் நிலவிய ஆரிய நாகரிகத்தை ஒட்டிய பங்களிப்பை வழங்கினர்.
மத்திய ஆசிரியாவில் துருக்கிய மக்கள் குடியேறிய இடம் இன்றைக்கு வடக்கு துருக்கிஸ்தான் என அழைக்கப்படுகிறது. பாரசீகம் ஏற்கெனவே பல துருக்கி அதிகாரிகளையும் கூலிப்படையினரையும் பணியமர்த்தி உள்ளது. கால வெள்ளத்தில் முன்பு பரவலாக இருந்த பார்த்தியன்கள் (Parthians) வரலாற்றுப் பக்கங்களிலிருந்து மறைந்து பாரசீக மக்களுடன் கலந்து போயினர். மத்திய ஆசிய வரலாற்றில் ஆரிய நாடோடிகள் காணப்படவில்லை. அவர்களுக்கு மாற்றாக அந்த இடத்தை மங்கோலியர்கள் பிடித்துக் கொண்டனர். சீனா தொடங்கி காஸ்பியன் கடல் வரை துருக்கியர்கள் ஆசியாவின் எஜமானர்கள் ஆனார்கள்.
பொ.ஆ.2 -ம் நூற்றாண்டு இறுதியில் ரோமானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த அதே கொள்ளை நோய் சீனாவின் ஹன் வம்சத்தின் அழிவுக்கும் காரணமாக இருந்தது. பிறகு ஏற்பட்ட ஹன் இனைத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து, ஐரோப்பாவை விடவும் இன்னும் வேகமாகச் சீனா மீண்டும் புத்துணர்வு பெற்று எழுந்தது. பொ.ஆ.6-ம் நூற்றாண்டுக்கு முன் சூய் (Sui) வம்சத்தின் கீழ் சீனா மீண்டும் ஒருங்கிணைந்தது. இதற்குப் பிறகு வந்த தாங் (Tang) வம்சத்தைச் சேர்ந்த ஹீராக்ளியஸ் (Heraclius) ஆட்சிக் காலம் சீனத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
பொ.ஆ.7 மற்றும் 9ஆம் நூற்றாண்டு முழுவதும் உலகிலேயே மிகப் பாதுகாப்பான மற்றும் நாகரிக நாடாக சீனா விளங்கியது. ஹன் வம்சம் வடக்கிலும் சூய் மற்றும் தாங் வம்சங்கள் தெற்கிலும் தங்கள் எல்லைகளையும் நாகரிகத்தையும் இன்றைக்கு உள்ளதைப்போல் எல்லாத் திசைகளிலும் விரிவுபடுத்தியது. மத்திய ஆசியாவில் துருக்கி, பாரசீகம் மற்றும் காஸ்பியன் கடல் வரை சீனாவின் ஆதிக்கம் பரவியது.
புதிய சீனாவின் எழுச்சியும் விஸ்தீரணமும் ஹன்ஸ் காலத்திய பழைய சீனாவை விடவும் மாறுபட்டுக் காட்சி அளித்தது. தீவிர இலக்கியப் பள்ளிகளும் கவிதையின் மறுமலர்ச்சியும் தோன்றின. தத்துவ மற்றும் சமய எண்ணங்களில் பௌத்தம் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. ஓவியம் கைவினை, தொழில்நுட்பத் திறனும் வாழ்க்கை வசதிகளும் பெருகின. தேயிலைப் பயன்பாடு, காகிதம் தயாரிப்பு, மரக்கட்டை அச்சு ஆகியவை தொடங்கின.
இந்நூற்றாண்டுகளில் சீனாவில் வாழ்ந்த மக்கள் ஒழுங்கான, அழகான மற்றும் கனிவான வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் இதற்கு மாறாக, ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் மக்கள் குடிசைகளிலும் சிற்றூர்களிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். மேற்கத்திய மனங்கள் இறையியல் தத்துவங்களில் தெளிவற்று இருந்த நிலையில், சீன மனங்கள் திறந்த நிலையிலும் சகிப்புத் தன்மையுடனும் எதையும் கேள்வி கேட்கும் துணிச்சலுடன் விளங்கின.
நினெவேயில் ஹீராக்ளியஸ் வெற்றி பெற்ற பொ.ஆ.627-ல் தாங் வம்சத்தின் பண்டைய மன்னர்களுள் ஒருவனான டாய்-சங்க் (Tai-Tsung) ஆட்சிக்கு வந்தார். ஹீராக்ளியஸ் தூதன் நட்பு நாடி டாய்-சங்கைச் சந்தித்தார். பொ.ஆ.635-ல் பாரசீகத்திலிருந்து வந்த சில கிறிஸ்தவ சமயப் பரப்புக் குழுக்கள் டாய்-சங்கிடம் தங்களது மதத்தைக் குறித்து விளக்கின. மன்னனும் கிறிஸ்தவ விவிலியத்தின் சீன மொழிபெயர்ப்பைப் படித்துப் பார்த்து, சீனாவில் கிறிஸ்துவ சர்ச் கட்ட அனுமதியும் அளித்தார்.
கிறிஸ்தவ சமயக் குழுவைப் போலவே, இஸ்லாமிய மதக் குழுவும் டாய்-சங்கைச் சந்திக்க அரேபியாவிலிருந்து இந்தியக் கடற்கரை வழியாக சீனாவிலுள்ள காண்டன் (Canton) மாகாணத்தை அடைந்தது. ஹீராக்ளியஸ் மற்றும் கவத் ஆகியோரைப் போலின்றி டாய்-சங்க் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயங்களின் தூதுக்குழுக்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார். மேலும் கிறிஸ்தவ சர்ச்சையும் இஸ்லாமிய மசூதியையும் கட்ட அனுமதி தந்தார். அவர்களுடைய இறையியல் தத்துவங்களை ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அவர் காலத்தில் காண்டன் நகரில் கட்டப்பட்ட மசூதிதான், உலகின் மிகப் பழமையான, இன்றளவும் உள்ள மசூதி.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.