Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #24

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #24

43. நபிகள் நாயகமும் இஸ்லாமும்

பொ.ஆ.7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாரேனும் ஒரு வரலாற்று தீர்க்கதரிசி, அடுத்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் ஆசிய முழுவதும் மங்கோலியர்களின் ஆதிக்கத்தின் கீழ் வருமென்று சொல்லியிருந்தால் நம்பி இருப்போமா? மேற்கு ஐரோப்பா முழுவதும் ஒழுங்கு அல்லது ஐக்கியத்தின் அறிகுறிகள் காணப்படவில்லை. பைஜாண்டிய மற்றும் பாரசீக சாம்ராஜ்யங்கள் பரஸ்பரம் மற்றதை அழிப்பதிலேயே கவனம் செலுத்தின. இந்தியாவிலுள்ள பல ராஜ்யங்களோ ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதில் தீவிரம் காட்டின.

ஆனால் ஒட்டு மொத்த ஐரோப்பிய ஜனத்தொகையைவிடவும் அதிகம் மக்கள் வாழ்ந்த சீனா மட்டும் தனது சாம்ராஜ்ய எல்லைகளை நிதானமாக, ஆனால் நிலையாக விரிவுபடுத்திக் கொண்டிருந்தது. மத்திய ஆசியாவில் தனது அதிகாரத்தை பலப்படுத்திய துருக்கி, சீனாவுடன் மோதாமல் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், மங்கோலியா டான்யூப் தொடங்கி பசிஃபிக் வரையும் துருக்கி வம்சங்கள் பைஜாண்டின், பாரசீகம் மற்றும் எகிப்தைத் தாண்டி இந்தியா வரையும் தனது எல்லைகளை விரிவுபடுத்தின.

ஆனால், ஐரோப்பாவின் இலத்தீன் மொழி பேசுவோரின் மீட்டெடுக்கும் ஆற்றலையும் அரேபியப் பாலைவனத்தில் மறைந்திருக்கும் சக்திகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. அரேபியா நீண்ட காலமாகவே சிறிய மற்றும் போர்க்குணம் கொண்ட நாடோடிகளின் புகலிடமாக விளங்கி வந்துள்ளது. சற்றேறக் குறைய ஆயிரம் ஆண்டுகளாக செமிட்டிக் மக்கள் எந்தவொரு சாம்ராஜ்யத்தையும் இதுவரை நிறுவவில்லை. திடீரென பெடாயின் (Bedouin) எனப்படும் பாலைவன மக்கள் அடுத்த நூறாண்டுக்குத் தங்கள் ஆட்சி அதிகாரத்தையும் மொழியையும் ஸ்பெயின் தொடங்கி சீன வரை விரிவுபடுத்தினர். அவர்கள் இந்த உலகுக்கு வழங்கிய புதிய கலாசாரமும் புதிய மதமும் இன்றளவும் ஓர் ஆற்றல் மிகு சக்தியாகவே விளங்கி வருகிறது.
அரேபியச் சுடரை உலகெங்கும் பரப்பிய முகம்மது நபிகள் நாயகம் மெக்கா நகரைச் சேர்ந்த வசதியான வணிகரின் விதவை மனைவியின் இளம் கணவராக வரலாற்றில் அறிமுகமாகிறார். நாற்பது வயது வரை தன்னை வித்யாசப்படுத்திக்காட்டும் வகையில், இவ்வுலகுக்கு அவர் ஆற்றிய பணிகள் பற்றிய விவரங்கள் அதிகம் தெரியவில்லை. மதம் தொடர்பான வாத விவாதங்களில் அவர் அதிக ஆர்வம் செலுத்தினார்.

அக்காலத்திய மெக்கா, பேகனிய உருவ வழிபாட்டுச் சமயச் சார்புடைய நகரமகத் திகழ்ந்தது. குறிப்பாக அரேபியா முழுவதும் பிரபலமாகவும் புனித யாத்திரை மேற்கொள்ளும் நகராகவும் விளங்கும் காபா நகரிலுள்ள புனித கறுப்புக்கல்லை வணங்குபவர்களாக இருந்தனர். இருப்பினும் அரேபியாவின் தென் பகுதியில் ஏராளமான யூதர்களும் வசித்தனர். சிரியாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இருந்தன.

நபிகள் நாயகம் தனது நாற்பதாவது வயதில் தனக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹீப்ரூ தீர்க்கதரிசிகளின் குணங்களை வளர்த்துக் கொண்டார். ‘ஒரே உண்மையான கடவுள்’ குறித்தும் நல்லொழுக்கம் மற்றும் தீமைக்கான வெகுமதிகள், தண்டனைகள் பற்றியும் தனது மனைவியிடம்தான் முதன் முதலாகப் பேசினார். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவ எண்ணங்கள் அவரது சிந்தனைகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் சீடர்களைத் திரட்டி அவர்களிடையே அப்போது நடைமுறையில் இருந்த உருவ வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். மெக்காவும் காபாவும் அதிக எண்ணிக்கையில் புனித யாத்திரை வருவோர் காரணமாக, நல்ல வருமானம் ஈட்டும் மையங்களாக விளங்கின. இதன் காரணமாக அங்கிருந்தோர் நபிகள் நாயகத்தைக் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் நபிகள் நாயகம் தனது பிரசாரத்திலும் கொள்கைகளிலும் மிக உறுதியாக இருந்தார்.

மதத்தைச் சரி செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன், இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட கடைசி தீர்க்கதரிசி என்றும் இறை தூதர் என்றும் நபிகள் நாயகம் தன்னைத் தானே பிரகடனப்படுத்திக்கொண்டார். ஆபிரஹாமும் இயேசு கிறிஸ்துவும் தனக்கு முன்னோடிகள் என்றும் கடவுளின் விருப்பத்தை மிகச் சரியாக நிறைவேற்ற ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்’ என்றும் அறிவித்தார். மேலும் மக்களுக்குக் கூறும் பொன்மொழிகள் அனைத்தும் ஜிப்ரில் (கிறிஸ்தவத்தில் கேப்ரியேல்) தனக்குச் சொன்னவை என்றும் புதிரான சக்தி மூலம் சொர்க்கத்துக்குச் சென்றதாகவும் அங்கே இறைவன் தான் செய்ய வேண்டிய பணிகள் பற்றி அறிவுறுத்தினார் என்றும் கூறினார்.

நபிகள் நாயகத்தின் இறைப்பணி எந்த அளவுக்கு வேகமாக மக்களிடையே பரவியதோ, அதே அளவு வேகத்துடன் அவருக்கு எதிரான, விரோதமான சகாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அவரது உண்மையான நண்பரும் சீடருமான, அபூபக்கர் உதவியால் கொலை முயற்சியிலிருந்து தப்பித்து மெதீனாவில் தஞ்சம் புகுந்தார். அங்குள்ளவர்கள் அவரது உபதேசங்களை ஏற்றுக் கொண்டனர்.

பொ.ஆ.632-ல் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, நபிகள் நாயகம் தனது அதிகாரத்தை அரேபியா முழுவதும் பரப்பினார். பல பெண்களை மணந்தார்; நேர்மையான மத உணர்வு கொண்ட ஒரு மனிதராக விளங்கினார். புனிதக் கட்டளைகள் மற்றும் விளக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அது கடவுளால் தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் அறிவித்தார். அதுதான் நபிகள் நாயகம் இஸ்லாமிய சமூகத்துக்கு வழங்கிய புனித நூலான ‘குரான்’.

நபிகள் நாயகம் காலத்திய ஏனைய மதங்களுடன் ஒப்பிடுகையில், இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டி அரேபியர்கள் மீது அதிக சக்தியையும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் விதைத்தார். சமரசமற்ற ஏகத்துவம் கடவுளின் ஆட்சி, தந்தைத் தன்மை மீதான எளிய உற்சாகமான நம்பிக்கை மற்றும் இறையியல் சிக்கல்களிலிருந்து சுதந்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். உருவ வழிபாடு, கோயில், பூசாரி ஆகியவற்றிலிருந்தும் விடுவித்துக் கொண்டது.

மெக்காவுக்குப் புனித யாத்திரை செல்வது, சர்ச்சைக்கு இடமளிக்காத வகையில் சமயச் சடங்குகளில் ஒன்றாக கட்டாயமானது. தனது மறைவுக்குப் பிறகு தன்னைக் கடவுளாக்குவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நபிகள் நாயகம் மேற்கொண்டார். கடவுளை நம்புகிறவர்கள் அனைவரும் நிறம், தோற்றம், நிலை எப்படி இருப்பினும் இறைவனுக்கு முன் சகோதரத்துவம் மற்றும் சமம் என்பதே இஸ்லாத்தின் கொள்கை எனத் தீவிரமாக வலியுறுத்தினார்.

இஸ்லாம் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்க மேற்கண்டவையே முக்கியக் காரணிகள். நபிகள் நாயகத்தின் எண்ணமாகவும் உணர்வாகவும் செயலாகவும் திகழ்ந்தவர் அபூ பக்கர். 3,000 – 4,000 அரேபியர்களைக் கொண்ட சிறிய படையுடன், நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு அபூ பக்கர் வாரிசு (காலிஃப்) ஆனார். பொ.ஆ.628-ல் உலகின் மன்னர்கள் அனைவரும் அல்லாவுக்கு அடிபணிய வேண்டுமென, நபிகள் நாயகம் கடிதம் எழுதியதைப் போலவே, அவரது மறைவுக்குப் பிறகு அபூ பக்கரும் எல்லோருக்கும் கடிதம் எழுதினார்.

44. அரேபியர்களின் மிகச் சிறந்த நாள்கள்

உலக வரலாற்றில் நடைபெற்ற படையெடுப்பு மற்றும் வெற்றியின் அற்புதமான கதை பற்றிப் பார்ப்போம். பொ.ஆ.634-ல் யார்முக் (Yarmuk) நதிக்கரையில் நடைபெற்ற போரில் பைஜாண்டின் படைகள் தோல்வியைத் தழுவின. பாரசீக போரைத் தொடர்ந்து மன்னர் ஹீர்சக்ளியஸ் ஆற்றலும் படை பலமும் படிப்படியாகக் குறைந்து பலவீனமடைந்தாலும் சிரியா, டமாஸ்கஸ், பல்மைரா, ஆண்டியோ, ஜெருசேலம் ஆகிய இடங்களில் வெற்றிகளைக் குவித்தார். ஆனால் ஏனைய பகுதிகள், எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் முஸ்லிம்களிடம் வீழ்ந்தன.

மக்கள் பெருமளவில் இஸ்லாத்துக்கு மாறத் தொடங்கினர். பிறகு முஸ்லிம்கள் கிழக்கு நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்பினர். பொ.ஆ.637-ல் பாரசீகர்கள் தளபதி ருஸ்தும் (Rustam) தலைமையில் பிரம்மாண்ட யானைப் படைகளுடன் கெடேஸ்ஸியா (Kadessia) என்ற இடத்தில் அரேபியர்களை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டனர். இருப்பினும் அரேபியர்களைச் சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தனர்.

பாரசீகத்தை வெற்றி கொண்ட முஸ்லிம் படைகள், மேற்கு துருக்கிஸ்தானைக் கடந்து கிழக்காக சீனாவை நோக்கி முன்னேறின. குர்ரானின் மேலாதிக்கம் மீதான வெறித்தனமான நம்பிக்கை கொண்டவர்களின் படையெடுப்பின் முன் எந்த எதிர்ப்புமின்றி எகிப்து சரணடைந்தது. அலெக்ஸாண்ட்ரியாவின் புகழ் பெற்ற நூலகம் தீக்கிரையானது. ஆப்பிரிக்கவின் வடக்கு கடற்கரை தொடங்கி ஜிப்ரால்டர் ஜலசந்தி, ஸ்பெயின் வரை அடுத்தது வீழ்ந்தன. பொ.ஆ.732-ல் ஃப்ரான்ஸ் நோக்கி முன்னேறிய முஸ்லிம் படைகள் பாய்டியர்ஸ் (Poitiers) என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு பைரனீஸ் (Pyrenees) மலைப்பகுதிக்கு விரட்டி அடிக்கப்பட்டன. இருப்பினும் எகிப்தின் வெற்றி மூலம் முஸ்லிம்கள் தங்கள் படை பலத்தை பெருக்கிக் கொண்டு கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்ற முனைந்தனர். பொ.ஆ.672 – 718 வரை கடல் வழியே பலமுறை முயன்றும் தோல்வியே மிஞ்சியது.

டமாஸ்கஸ்ஸில் தலைநகரை அமைத்துக்கொண்ட அரேபியர்களுக்கு பெரிய அளவில் அரசியல் ஆர்வமோ அனுபவமோ இருக்கவில்லை. இதனால் ஸ்பெயினிலிருந்து சீனா வரை பரவிய அதன் சாம்ராஜ்யத்தின் கோட்பாடு வேறுபாடுகள் காரணமாக, ஒற்றுமை குலையத் தொடங்கியது. ஆனால் அரசியல் சிதைவுகளைவிடவும் மனித இனம் மற்றும் மனத்தின் மீதான அதன் தாக்கம் குறித்தே பதிவு செய்ய உள்ளோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தின் நுண்ணறிவு உலகெங்கும் பரவியதைவிடவும் அதிக வேகத்தில் அரேபியர்களின் நுண்ணறிவு விரிவடைந்தது. மேற்கத்திய உலகில் பழைய எண்ணங்கள் கழியவும் புதியன புகவும் அறிவார்ந்த தூண்டுதல் காரணமானது.

பாரசீகத்தில் புதிதாகப் புகுந்த அரேபிய சிந்தனைகள், மணிசியன் (Manichaean), ஜோராஸ்ட்ரியன் (Zoroastrian) மற்றும் கிறிஸ்தவக் கோட்பாடுகளுடனும் மூல கிரேக்கத்திலும் சிரிய பாஷையிலும் மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க அறிவியல் இலக்கியத்தோடும் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டது. எகிப்திலும் கிரேக்கம் பரவியிருந்தது. எல்லா இடங்களிலும் குறிப்பாக ஸ்பெயினில், யூத ஊகம் மற்றும் விவாதத்தின் பாரம்பரியத்தைக் கண்டுபிடித்தது. மத்திய ஆசியாவில், பௌத்தம் மற்றும் சீன நாகரிகங்களைச் சந்தித்தது. சீனாவிடமிருந்து நூல்களை அச்சடிக்க உதவும் காகிதத்தைத் தயாரிக்கும் கலையைக் கற்றுக் கொண்டது. நிறைவாக, இந்தியக் கணிதம் மற்றும் தத்துவத்துடன் தொடர்பில் வந்தது.
குரான் மட்டுமே சாத்தியமான ஒரே புனித நூல் என்ற இறுக்கமான தீர்மானத்துக்கு வழிவகுத்திருந்த பண்டைய காலத்திய மத நம்பிக்கை மீதான சகிப்புத் தன்மையற்ற தற்சார்பு மனநிலை முடிவுக்கு வந்தது. அரேபிய வெற்றியாளர்களின் அடிச்சுவட்டில், கற்றல் எல்லா இடங்களிலும் பரவலானது. பொ.ஆ.8-ம் நூற்றாண்டு தொடங்கி ‘அரபுமயமாக்கப்பட்ட’ உலகில் கல்வி அமைப்பு உருவானது. பொ.ஆ.9-ம் நூற்றாண்டில் ஸ்பெயினிலுள்ள கோர்டோபா (Cordoba) பள்ளிகளைச் சேர்ந்த அறிஞர்கள் கெய்ரோ, பாக்தாத், பொக்காரா, சமர்க்கண்ட் நகர அறிஞர்களுடன் நல்லுறவுகளை வளர்த்துக் கொண்டனர்.

யூத சிந்தனை வெகு விரையில் அரேபியத்துடன் ஒருங்கிணையவே, அரேபிய மொழி மூலம் இரு செமிட்டிக் இனங்களும் சில காலம் இணைந்து பணியாற்றின. அரசியல் ரீதியாக அரேபியர்கள் பலவீனமடைந்தாலும் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை, அதன் நுண்ணறிவுசார் சமூகம் ஆக்கப்பூர்வ விஷயங்களைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருந்தது.

கிரேக்கர்கள் காலத்தில் தொடங்கிய உண்மைகளின் விமர்சனப் போக்கு, செமிட்டிக் உலகில் அதிசயக்கத்தக்க வகையில் மீண்டும் மறுமலர்ச்சி பெற்றது. தொடர்ந்து நீண்ட காலம் செயலற்று முடங்கிக் கிடந்த அரிஸ்டாடிலின் தத்துவங்களும் அலெக்ஸாண்ட்ரியா அருங்காட்சியகமும் முளைத்து, பூவாகிக் காயாகிக் கனிய ஆரம்பித்தது.

கணிதம் மருத்துவம் மற்றும் உயிரி அறிவியலில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ரோமானிய எண்களுக்குப் பதிலாக அறிமுகமான அரேபிய எண்களைத்தான் உலகெங்கும் இன்றைக்கும் நாம் உபயோகப்படுத்துகிறோம். ‘பூஜ்யம்’ எண்ணும் முதன் முறையாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ‘அல்ஜீப்ரா’ (Algebra), வேதியல் (Chemistry) ஆகிய பிரிவுகளும் அல்கோல் (Algol), அல்டெப்ரான் (Aldebaran) மற்றும் பூட்ஸ் (Boötes) உள்ளிட்ட விண்ணில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் பெயர்களும் அரபுச் சொற்கள். ஃபிரான்ஸ், இத்தாலி மற்றும் உலகிலுள்ள கிறிஸ்தவ நாடுகள் முழுமையும் பரவிய இடைக்காலத் தத்துவத்தை மீட்டெடுத்து உயிர்ப்பிப்பதே அவர்களது தத்தவப் பணியாகிப் போனது.

அரேபிய வேதியலாளர்கள், இரசவாதிகள் (Alchemist) என அழைக்கப்பட்டனர். மதிப்பு குறைந்த உலோகங்களைத் மதிப்பு தங்கமாக மாற்றும் வழிமுறைகளையும் கண்டறிய முயன்றனர். தாம்கண்டறிந்தவற்றை இரகசியமாகப் பாதுகாக்கும் விஷயங்களில் நாகரிகம் குறைந்த மனிதர்களைப் போலவே வாழ்ந்தனர். அதிசயக்கத்தக்க கண்டுபிடிப்புகள் சாத்தியப்பட்டால், அவற்றின் மூலம் கிடைக்கவிருக்கும் ஏராளமான அனுகூலங்கள், மனித வாழ்க்கையின் மீது ஏற்படுத்தவிருக்கும் தொலைநோக்கு விளைவுகள் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தனர்.

உலோகம் உலோகக் கலவை, சாயம் வடிகட்டுதல், கண்ணாடி மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் குறித்த புரிதலும் இருந்தது. ஆனால் எவ்வளாவோ முயன்றும் கடைசிவரை அவர்களால் முடியாமல் போனவை இரண்டு விஷயங்கள். முதலாவது சாதாரண உலோகங்களை மதிப்பு மிக்கத் தங்கமாக மாற்றும் கலை. மற்றொன்று முதுமை வராமல் என்றும் இளமையுடன் இறவாமல் இருக்க அமிர்தம் ஆகியற்றின் கண்டுபிடிப்புகளே.

அரேபிய இரசவாதிகளின் பரிசோதனை முனைவுகள் கிறிஸ்தவ உலகிலும் பரவின. காலப்போக்கில் இவ்வகை இரசவாதிகளின் விசாரணைகள், ஆர்வம் செயல்பாடுகள் ஆகியவை சமூக மற்றும் கூட்டுறவு ரீதியாக மாறின. எண்ணங்களைப் பரிமாறுவதும் ஒப்பீடு செய்வதும் இலாபகரமாக இருப்பதை உணர்ந்தனர். அர்த்தமற்ற தரநிலைகள் காரணமாகக் கடைசி இரசவாதிகள், பரிசோதனை வேதியல் மேதைகளில் முதல் கட்ட நிபுணர்களாக மதிக்கப்படும் நிலையை எட்டினர்.

பழங்கால இரசவாதிகள் சாதாரண உலோகத்தை மதிப்பு மிக்கத் தங்கமாக மாற்றும் கலை மற்றும் முதுமை வராமல் இளமையோடு சாகாமல் வாழ உதவும் அமிர்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து தேடினர். உலகை வெல்லும் வரம்பற்ற சக்தியையும் சொந்த ஆயுளையும் விதியையும் நிர்ணயிக்கும் ஆற்றலையும் நவீன பரிசோதனை அறிவியல் ஆய்வு முறைகள் மூலம் நிச்சயம் பெறலாம் என்றும் நம்பினர்.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *