45. இலத்தீன் கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தின் வளர்ச்சி
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரிய மொழி பேசும் இனங்கள் சீனாவுக்கு மேற்கே இருந்த நாகரிகப் பகுதிகள் முழுவதும் பரவிக் கிடந்தன. ஆனால், ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் மிகச் சிறிய பகுதிகள் மட்டுமே ஆரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மங்கோலியர்கள் ஹங்கேரிவரை தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியிருந்தனர். ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றை முழுவதுமாக இழந்த நிலையில், ஆரியர்களிடம் அந்தக் காலகட்டத்தில் மிஞ்சியிருந்தது ஆசியா மைனரில் பைஜாண்டைன் பகுதிகள் மட்டுமே.
பிரம்மாண்ட ஹெல்லெனிக் உலகம் இப்போது கான்ஸ்டாண்டிநோபிளைச் சுற்றியுள்ள சிறு பகுதிகளாகச் சுருங்கிவிட்டது. ரோமானிய உலகின் நினைவுகள், மேற்கத்திய இலத்தீன் பாதிரியார்களால் மட்டும் கொஞ்சம் உயிர்ப்புடன் இருந்தன. மேற்கூறிய பின்னடைவுக் கதைகளுக்கு மாறாக, சுமார் ஆயிரம் ஆண்டு இருண்ட காலத்துக்குப் பிறகு, செமிட்டிக் பாரம்பரியம் அடிமைத்தனம் மற்றும் தெளிவின்மையிலிருந்து விடுபட்டு மீண்டெழுந்தது.
இருப்பினும் நார்டிக் இன மக்களின் வீரியம் முற்றிலுமாக நீர்த்துப் போகவில்லை. மத்திய மற்றும் வடமேற்கு ஐரோப்பா எல்லைகளுக்குள் முடக்கப்பட்டதுடன், சமூக மற்றும் அரசியல் சிந்தனைகளில் குழப்பமும் நிலவியது. இருப்பினும் தங்களது அதிகாரத்தை முன்பைவிட இன்னும் அதிகமாகவும் விரிவாகவும் மீட்டெடுக்கவும் புதிய சமூகக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்கை நிறுவத் தீவிர முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
பொ.ஆ.6-ம் நூற்றாண்டுத் தொடகத்தில் மேற்கு ஐரோப்பாவில் எந்த மைய அரசும் நிலைத்திருக்கவில்லை என்பதை ஏற்கெனவே கூறினோம். இந்தக் காலகட்டத்தில் கிடைத்த பகுதிகளை உள்ளூர் ஆட்சியாளர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டனர். ஆனால் நீண்ட காலம் பாதுகாப்புடன் நிலைக்கத்தக்கதாக அமையவில்லை. இந்த ஒழுங்கற்ற சூழலில் கூட்டுறவும் ஒருங்கிணைப்பும் உருவானது. அதுவே, இன்றைய தேதி வரை ஐரோப்பிய வாழ்க்கையில் தனது தடையங்களை விட்டுச் சென்ற நிலப்பிரபுத்துவ அமைப்பு.
நிலப்பிரபுத்துவ அமைப்பு என்பது அதிகாரம் குறித்த ஒருவகைச் சமூகப் படிகமாக்கல். எல்லா இடங்களிலும் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்த தனி மனிதன், உதவி மற்றும் பாதுகாப்புக்காகத் தனது சுதந்திரத்தில் குறிப்பிட்ட அளவைப் பண்டமாக மாற்றவும் தயாராக இருந்தார். தனக்கு எஜமானனாகவும் பாதுகாவலனாகவும் வலுவான ஒருவரைத் தேடினார். அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து, பதிலுக்கு இவரது உடைமைகளைப் பாதுகாத்துக் கொண்டார். அந்த வலுவானவர், தன்னைவிட இன்னும் பலசாலியிடம் அடைக்கலம் புகுந்தார். நகரங்களுக்கு இதுபோன்ற நிலப்பிரபுத்துவ பாதுகாப்பாளர்களின் ஆதரவு வசதியாகிப் போனது. மடங்களும் திருச்சபைகளும் இதே வழிமுறையைப் பின்பற்றின. இதுபோன்ற ஒப்பந்தங்களில் விசுவாசம் முக்கிய அம்சமாகக் கோரப்பட்டது.
முக்கோண (Pyramid) வடிவிலான அதிகார அமைப்புகள் பல்வேறு இடங்களில் பல வகைகளில் உருவாயின. தொடக்கத்தில் வன்முறைக்கு வித்திட்டாலும் ஒழுங்கு மற்றும் புதிய சட்ட ஆட்சிக்கு வழிவகுத்தன. இவற்றின் வளர்ச்சி காலப்போக்கில் சில ராஜ்ஜியங்களாக அங்கீகாரம் பெற்றன. பொ.ஆ.6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஃப்ராங்கிஷ் (Frankish), விசிகோதிக் (Visigothic), லோம்பார்ட் (Lombard), கோத்திக் (Gothic), க்ளோவிஸ் (Clovis) தலைமையில் அரசுகள் அமைந்தன. இவையே தற்போதைய ஃப்ரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகள்.
பொ.ஆ.720-ல் முஸ்லிம்கள் பைரனீஸ் மலைத் தொடரைக் கடந்து சென்றபோது க்ளோவிஸ் உறவினரான சார்ல்ஸ் மார்டெல் (Charles Martel) என்பவர் ஃப்ராங்கிஷ் ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்தார். பைரனீஸ் தொடங்கி ஹங்கேரிவரை, ஆல்ஃப்ஸ் வடக்கு ஐரோப்பா முழுவதும் அவரது ஆட்சி பரவியிருந்தது. அவரது ஆட்சியின் கீழ் ஃப்ரெஞ்ச், இலத்தீன் மற்றும் ஜெர்மன் மொழி பேசும் சிற்றரசர்கள் இருந்தனர்.
இவரது மகன் பெப்பின் (Pepin) அரசு உரிமை கோரிய க்ளோவிஸ் வாரிசுகளைக் கொன்றுவிட்டு ராஜ்யத்தையும் பட்டத்தையும் பறித்துக்கொண்டார். பொ.ஆ.768-ல் ஆட்சிக்கு வந்த இவரது பேரன் சார்லேமேக்னே (Charlemagne) இலத்தீன் சக்ரவர்த்தியாகவும் வடக்கு இத்தாலியை வென்று ரோமாபுரியின் தலைவனாகவும் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார்.
உலக வரலாற்றின் விரிவான கோணங்களிலிருந்து ஐரோப்பாவின் கதையைப் பார்க்கும் போது, இலத்தீன் ரோமானிய சாம்ராஜ்யப் பாரம்பரியம் எந்த அளவுக்கு அவலமான நிலையில் இருந்தது எனத் தெரியவருகிறது. ஐரோப்பாவின் மீதான மறைமுக ஆதிக்கத்துக்கான தீவிர போராட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இக்காலக் கட்டம் முழுவதும் சில தவிர்க்க முடியாத விரோதங்களையும் முரண்களையும் கண்டறிய முடியும். மந்தமான மனத்தின் ஆவேசங்களைப் போன்று, ஐரோப்பிய குழப்பமான சூழலின் ஊடே அவை பயணம் செய்கின்றன.
சார்லேமேக்னே அல்லது சார்ல்ஸ் உள்ளிட்ட வெற்றிகரமான ஆட்சியாளர்களுக்குத் தூண்டுகோலாக விளங்கியது ஜூலியஸ் சீசர். அவரை மனத்தில் உருவகப்படுத்திக்கொண்டு, அவரைப் போன்று புகழ் பெறவேண்டும் என்பதே அவர்களது ஒரே விருப்பம். சார்லேமேக்னே சாம்ராஜ்யம் காட்டுமிராண்டித்தனத்தின் பல்வேறு நிலைகளில், நிலப்பிரபுத்துவ ஜெர்மன் மாகாணங்களின் பல பாகங்களைக் கொண்டிருந்தது. ரைன் நதிக்கு மேற்கே, பெரும்பான்மை ஜெர்மானியர்கள், பேச்சுவழக்குக்காக இலத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டனர். இவை நிறைவாக ஃபிரஞ்ச் மொழியாக உருவெடுத்தன. ரைன் நதிக்குக் கிழக்கே, அதே ஜெர்மானிய இன மக்கள் தங்கள் ஜெர்மன் பேச்சு மொழியை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றினர். இதன் காரணமாக நாகரிகம் குறைந்த இரு வெற்றியாளர்களின் குழுக்களிடையே பரஸ்பரம் பொதுவான பேச்சுமொழி இல்லாமல் போனது. ஒருவருடன் ஒருவர் கலந்துரையாட முடியாமல் போகவே மிக எளிதாகப் பிளவுபட்டுப்போனார்கள்.
ஃப்ராங்கிஷ் பயன்பாடு மிக எளிதாகப் பிளவுக்கு வழிவகுத்தது. இதன் காரணமாகச் சார்லேமேக்னே இறந்த பிறகு அவரது சாம்ராஜ்யம் மகன்களுக்கு இடையே இயற்கையாகவே பல்வேறு கூறுகளாகப் பிரிந்துபோனது. சார்லேமேக்னே காலம் தொடங்கி ஐரோப்பிய வரலாறின் ஓர் அம்சம் இவர்களது குடும்ப வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய மன்னர்கள், இளவரசர்கள், பிரபுக்கள் மற்றும் பாதிரிகள் ஆபத்தான தலைமைக்காகப் போராடத் துவங்கினர். இந்தக் குழப்பத்தில் ஃப்ரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி பேசுவோர்க்கு இடையே விரோதப்போக்கு மிக ஆழமாக வளர்ந்தது. ஒவ்வொரு சக்ரவர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட ஒரு வழிமுறை இருந்தது. ஆனால், அவரது நிறைவான ஆசை, சிதைந்துபோன ரோமாபுரி தலைநகரைக் கைப்பற்றி அங்கே முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
ஐரோப்பிய அரசியல் குளறுபடிகளில் அடுத்த அம்சம் ரோமாபுரியிலுள்ள திருச்சபை. எந்தவொரு தற்காலிக இளவரசனையும் நியமிக்காமல், ரோமாபுரியின் போப் தனக்குத்தானே சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளவேண்டும் என்பதுதான். அவர் ஏற்கெனவே தலைமைப் பாதிரியார் என்னும் பொறுப்பில் இருப்பதால், பல்வேறு நடைமுறைக் காரணிகளுக்காக ரோமாபுரி அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
அவருக்கு மிகப் பெரிய ராணுவம் இல்லாவிட்டாலும் இலத்தீன் உலகம் முழுவதும் பரவியுள்ள பாதிரியார்கள் மூலம் விரிவான பிரச்சார அமைப்பை நிறுவியிருந்தார். கத்தோலியர்களின் கற்பனையில், சொர்க்கம் மற்றும் நரகத்தின் நுழைவாயில் சாவிகளை வைத்திருந்ததுடன், அவர்களது ஆன்மாக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லமையும் கொண்டிருந்தார்.
இடைக்காலம் முழுவதும் மன்னர்கள் ஒருவர் மீது மற்றொருவர் சமத்துவம் உயர்வு மற்றும் உச்சக்கட்ட பதவிக்காக சூழ்ச்சி செய்தே வந்துள்ளனர். இருப்பினும் நிறைவாக, கிறிஸ்தவ மண்டலத்தின் இறுதி அதிபதியான தன்னிடம் அனைத்து மன்னர்களும் கீழ்ப்படிய வேண்டும் என்பதே தைரியமாகவோ, தந்திரமாகவோ, பலவீனமாகவோ விளங்கும் ரோமாபுரிப் போப்பின் எழுதப்படாத விதியாக இருந்தது. போப்கள் பெரிதும் முதியவர்களாக, சராசரியாக இரு ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தனர்.
இருப்பினும் அரசர்களுக்கு இடையேயும் சக்ரவர்த்திக்கும் போப்புக்கும் இடையேயும் நிலவிய விரோதப் போக்குகள், எந்த வகையிலும் ஐரோப்பிய குழப்பத்துக்கான காரணிகளை நீர்த்துப் போகச் செய்யவில்லை. கான்ஸ்டாண்டிநோபிளில் உள்ள சக்ரவர்த்தி கிரேக்க மொழியைப் பேசி அனைத்து ஐரோப்பியாவின் விசுவாசத்தையும் கோரிக் கொண்டிருந்தார். சார்லேமேக்னே சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்க முனைந்தபோது, அவரால், சாம்ராஜ்யத்தின் இலத்தீன் பகுதியை மட்டுமே மீட்டெடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து கிரேக்க மற்றும் இலத்தீன் சாம்ராஜ்யங்கள் சண்டையிட, அதுவே, கிரேக்கம் மற்றும் இலத்தீன் பேசும் கிறிஸ்தவப் பிரிவினரிடையே மோதலாக விரிவடைந்தது.
கிறிஸ்தவ அபோஸ்தலர்களின் முதன்மையானவரான புனித பீட்டரின் வாரிசாகக் கருதப்படும் ரோமானியப் போப்பே உலகெங்குமிருந்த கிறிஸ்தவ சமூகத்தின் தலைவராக இருந்தார். சக்ரவர்த்தியோ கான்ஸ்டாண்டிநோபிளிலுள்ள தலைவர்களோ, இந்தக் கோரிக்கையை அங்கீகரிக்க முன்வரவில்லை. இலத்தீன் மற்றும் கிரேக்கப் பிரிவினருக்கு இடையே நிலவிய, பரிசுத்த கிருத்துவக் கோட்பாட்டு நுணுக்கம் தொடர்பான சர்ச்சை மற்றும் கருத்து வேறுபாடுகள் பொ.ஆ.1054-ல் மோதலில் முடிந்தது. இலத்தீன் மற்றும் கிரேக்கத் திருச்சபைகள் வெளிப்படையாக விரோதப்போக்கைக் கடைப்பிடித்துத், தனித்தன்மையுடன் இயங்கத் தொடங்கின. இருவருக்குமான பரஸ்பர விரோத மனப்பான்மை, இடைக்காலத்தில் இலத்தீன் கிறிஸ்தவத்தை முடக்கியது.
பிரிந்து கிடந்த கிறிஸ்தவத்தின் மீது மூன்று வகையான எதிரிகள் தாக்குதல் தொடுத்தனர். நார்த்மென் (Northmen) பால்டிக் மற்றும் வடக்குக் கடற்கரை நார்டிக் இனங்கள் கடல் வழியாக ஸ்பெயின் வரையிலான கிறிஸ்தவக் குடியிருப்புகளை கொள்ளை அடித்தனர். காஸ்பியன் மற்றும் கருங்கடல் வரை ஊடுருவினர். ரஷ்யாவில் சமஸ்தானங்களை நிறுவிய இவர்களே ரஷ்யர்கள் என அழைக்கப்பட்ட மக்கள். கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றும் எண்ணத்துடன் அதன் சமீபம் வரை நார்த்மென் ரஷ்யர்கள் ஊடுருவினர்.
பொ.ஆ.9-ம் நூற்றாண்டில் சார்லேமேக்னேவின் ஆதரவாளரும் சீடருமான எக்பெர்ட் (Egbert) மன்னன் ஆட்சியில், கிறிஸ்தவத்தைத் தழுவிய லோ ஜெர்மன் (Low German) நாடாக இங்கிலாந்து விளங்கியது. இவரைத் தொடர்ந்து பொ.ஆ.886-ல் ஆட்சிக்கு வந்த ஆல்ஃப்ரெட் தி கிரேட் (Alfred the Great) மன்னனிடமிருந்து சரிபாதி சாம்ராஜ்யத்தை பறித்ததுடன், பொ.ஆ.1016-ல் கேன்யூட் (Canute) தலைமையில், நார்த்மென்கள் தங்களைப் பிராந்தியத்தின் எஜமானர்களாக அறிவித்துக்கொண்டனர். பொ.ஆ.912-ல் ரால்ஃப் தி கேங்கர் (Rolf the Ganger) தலைமையில் இன்னொரு நார்த்மென் குழு வடக்கு ஃபிரான்ஸை வென்றது. இவர்கள் பின்னாளில் நார்மண்டி (Normandy) என அழைக்கப்பட்டனர்.
இங்கிலாந்தை மட்டுமின்றி இப்போது நார்வே, டென்மார்க் எனப்படும் நாடுகளையும் கேன்யூட் ஆண்டார். ஆனால் அவரது மரணத்துக்குப் பிறகு மகன்களிடையே போதிய ஒற்றுமை இல்லாததால், சாம்ராஜ்யம் துண்டானது. நார்த்மென்களின் தற்காலிக ஒற்றுமை நீண்ட காலம் நீடித்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்னும் யூகம் சுவாரஸ்யமானது. வீரம் மற்றும் ஆற்றல்மிக்க இனமான நார்த்மென்கள் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஐஸ்லாந்து மற்றும் க்ரீன்லாந்து வரை பயணம் செய்தனர். அமெரிக்க மண்ணில் தடம் பதித்த முதல் ஐரோப்பியரும் இவர்களே. பின்னாளில் நார்மன்கள் (Norman) சரசென்களிடமிருந்து (Saracen) சிஸிலியை மீட்டதுடன், ரோமாபுரியையும் சூறையாடினர். அமெரிக்கா தொடங்கி ரஷ்யா வரை தங்களது எல்லைகளை விரிவுபடுத்தினர். அந்த அளவுக்கு கேன்யூட் ராஜ்யத்திலிருந்து சென்ற நார்மன்கள், கடற்பயணத்தில் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர் என்பது கற்பனைக்கு எட்டாத வீரம்.
ஜெர்மன் மற்றும் இலத்தீன் ஐரோப்பாவுக்குக் கிழக்கே ஸ்லேவ் (Slav) மற்றும் துருக்கி இனங்களின் கலவையான மக்கள் வாழ்ந்தனர். இவர்களுள் முக்கியமானவர்கள் பொ.ஆ.8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் மேற்கிலிருந்து வந்த மாக்யார் (Magyar) அல்லது ஹங்கேரி (Hungary) இனத்தவர்கள். சார்லேமேக்னே உயிருடன் இருந்தவரை இவர்கள் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தினார். ஆனால் அவரது மரணத்துக்குப் பிறகு இப்போது ஹங்கேரி எனப்படும் பகுதிக்குள் தங்கள் நிலைநிறுத்திக்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து ஹன் (Hun) இனத்தவர்கள், ஒவ்வொரு கோடைக்காலத்திலும் ஐரோப்பாவில் மக்கள் வசித்த பகுதிகளுக்குப் படையெடுத்தனர். பொ.ஆ.938-ல் ஜெர்மனி வழியாகப் ஃபிரான்ஸுக்கும் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து வடக்கு இத்தாலிக்கும் ஊடுருவி, வீடுகளையும் விளைநிலங்களையும் தீயிட்டு அழித்தனர்.
நிறைவாகத் தெற்கிலிருந்து கடல் வழியே ரோமானிய சாம்ராஜ்யம் மீது படையெடுத்தவர்கள் சாரசென்கள். கடல் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தவிர்க்க முடியாத எதிரிகளாக விளங்கியவர்கள், குறிப்பாகக் கருங்கடல் பகுதியில் அவர்களைக் கடுமையாக எதிர்த்தவர்கள், ரஷ்ய நார்த்மென்கள்.
கடுமையான மற்றும் போர்க்குணம் மிக்கவர்களால் ஏற்படவிருக்கும் ஆபத்துகளைப் புரிந்து கொள்ளவோ, கணிக்கவோ, சார்லேமேக்னேவாலும் அவரை அடுத்து ஆட்சிக்கு வந்தவர்களாலும் இயலவில்லை. புனித ரோமானிய சாம்ராஜ்யம் என்ற பெயரில் மேற்கத்திய சாம்ராஜ்யத்தை மீட்டெடுக்கும் வீண் நாடகத்தை அரங்கேற்றினர். சார்லேமேக்னே காலம் தொட்டு, மேற்கத்திய ஐரோப்பாவின் அரசியல் வாழ்வை இந்த எண்ணம் தீவிரமாக ஆட்டிப் படைத்தது. கிழக்கில் கிரேக்கர்களின் சரி பாதி ரோமானிய சாம்ராஜ்யம் சிதைந்து சிதறியது. கான்ஸ்டாண்டிநோபிள் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் நகரமாகச் சீரழிந்தது. சார்லேமேக்னே காலம் தொட்டு அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐரோப்பா அரசியல்ரீதியாகப் பெரிய அளவில் படைப்புத் திறனை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பாரம்பரியத்தைக் கைவிடாமல் காத்தது.
ஐரோப்பிய வரலாற்றில் சார்லேமேக்னே பெயர் பரவலாக இடம் பெற்ற நிலையில், அவரது ஆளுமை குறித்த விவரங்களை ஓரளவே அறிகிறோம். எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் கற்றல் மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது. உண்ணும் போது மற்றவர்களை உரக்கப் படிக்கச் சொல்லிக் கேட்பதும் இறையியல் குறித்து விவாதிப்பதும் பிடிக்கும். ஆக்ஸ்-லா-சாப்பெல் (Aix-la-Chapelle) அல்லது மேயென்சி (Mayence), குளிர்காலங்களில், கல்வியாளர்களை அழைத்து அவர்களுடனான கலந்துரையாடல் மூலம் விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்தினார். கோடைக் காலங்களில், ஸ்பெயின் சாரசென்கள், ஸ்லேவ், மேக்யார், சாக்ஸன் மற்றும் ஜெர்மானிய பழங்குடி இனத்தவர்களுடன் போரிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வடக்கு இத்தாலியைக் கையகப்படுத்துவதற்கு முன்பாக ரோமுலஸ் அகஸ்டுலஸுக்கு பிறகு, அடுத்த சீசர் நான்தான் என்ற எண்ணம் சார்லேமேக்னேவுக்குத் தோன்றி இருக்கலாம். அல்லது கான்ஸ்டாண்டிநோபிள் ஆதிக்கத்திலிருந்து இலத்தீன் திருச்சபையை விடுவிக்கும் நோக்கத்தில், சார்லேமேக்னாவை ஆஹா ஓஹோ என மூன்றாவது போப் லியோ புகழ்ந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சாம்ராஜ்யத்தின் மகுடத்தை மன்னர்களுக்குச் சூட்டி ராஜகுருவாகத் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த போப் நினைத்தார். இதனைத் தொடர்ந்து ரோமாபுரியில் பல சூழ்ச்சிகள் அரங்கேறின. இறுதியில் போப் பொ.ஆ.800-ல் புனித பீட்டர் சதுக்கத்தில், கிறிஸ்மஸ் நாளில், சார்லேமேக்னேவுக்கு மகுடத்தைச் சூட்டி அவரை அடுத்த சீசர் என்றும் அகஸ்டஸ் என்றும் புகழ்ந்து தள்ளினார்.
போப்பின் கரங்களால் மகுடம் சூட்டப்படுவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் சார்லேமேக்னே ஏனோ விரும்பவில்லை. அதிகாரப் போட்டியில் தோற்றுவிட்டதாகவே உணர்ந்தார். தனக்கு இன்னொருவர் மகுடம் சூட்டினால் அவருக்கு அடிபணிவதுபோல் ஆகிவிடும் என ஆதங்கப்பட்டார். எனவே மகனை அழைத்து, தனக்குப் பின் ஆட்சியில் அமரும் போது, எந்தக் காரணம் கொண்டும் போப்பை மகுடம் சூட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்குமாறு அறிவுறுத்தினார். மகுடத்தைத் கையில் எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, தனக்குத் தானே முடி சூட்டிக் கொள்ள வேண்டும் என மகனுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் சார்லேமேக்னே மகன் லூயி-தி-பயஸ் (Louis-tbe-Pious) தந்தையின் அறிவுறுத்தலையும் உத்தரவையும் மீறிப், போப் கைகளால் மகுடத்தைச் சூட்டிக் கொண்டார். போப்பை ராஜகுருவாக ஏற்று அடிபணிந்தார். போப்புக்கும் சக்கரவர்த்திக்கும் இடையேயான நீண்ட கால அதிகாரப் போட்டிக்கான தொடக்கமாக இந்நிகழ்வைக் கூறலாம். லூயி தி பயஸ் மரணத்தைத் தொடர்ந்து சார்லேமேக்னேவின் சாம்ராஜ்யம் மெள்ள மெள்ளச் சரிய ஆரம்பித்தது. ஃபிரெஞ்ச் மொழி பேசும் ஃப்ராங்க்ஸ் மற்றும் ஜெர்மன் மொழி பேசும் ஃப்ராங்க்ஸ் ஆகியோருக்கு இடையேயான விரிசல் இன்னும் அதிகரித்தது.
பொ.ஆ.919-ல், இளவரசர்கள் மற்றும் கிறிஸ்தவ குருமார்களால், சாக்ஸன் இனத்தைச் சேர்ந்த ஹென்றி-தி-ஃபௌலர் (Henry-the-Fowler) மகன் ஓடோ (Otto), மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொ.ஆ.962-ல் ரோமாபுரிச் சக்ரவர்த்தி ஆனார். பதினோராம் நூறாண்டில் சாக்ஸன் வம்சத்தின் ஆட்சி முடிவு வந்ததைத் தொடர்ந்து மற்ற ஜெர்மன் ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தனர். சார்லேமேக்னே பரம்பரையில் கார்லோவிஞ்சியன் (Carlovingian) வழிதோன்றல்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஃப்ரான்ஸ் நாட்டு மன்னன் ட்யூக் ஆஃப் நார்மண்டி (Duke of Normandy) மற்றும் ஃபிரெஞ்ச் மொழி பேசிய மேற்கத்திய இளவரசர்கள், பிரபுக்கள் ஆகியோர் ரோமானியர்களின் அதிகரத்துக்குக் கட்டுப்படாமல் வெளியே இருந்தனர். அதேபோல் பிரிட்டனின் எந்தவொரு பகுதியும் ரோமானிய சாம்ராஜ்ய எல்லைகளுக்குள் வரவே இல்லை. பொ.ஆ.987-ல் ஃப்ரான்ஸ் அரசாங்கம் ஹ்யூ கேப்பெட் (Hugh Capet) கைகளுக்கு மாறியது. அவரது காலத்தில் பாரிஸ் நகரைச் சுற்றிய சிறு பகுதியை மட்டுமே ஆட்சி புரிந்தார்.
பொ.ஆ.1066-ல் ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் என்ற இடத்தில், நார்வேஜிய நார்த்மென் மன்னன் ஹரோல்ட் ஹர்த்ராதா (Harold Hardrada) மற்றும் ஹேஸ்டிங்க்ஸ் என்ற இடத்தில் இலத்தீன் நார்த்மென் மன்னன் ட்யூக் ஆஃப் நார்மேண்டி (Duke of Normandy) ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் இங்கிலாந்து மீது படையெடுத்துத் தோற்கடித்தனர். நார்மேன்களிடம் வீழ்ந்த இங்கிலாந்து, அண்டைப் பகுதிகளான ஸ்கேண்டினேவியா, டியோடன்ஸ் (Teutons) மற்றும் ரஷ்ய விவகாரங்களிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. அடுத்த நான்கு நூற்றாண்டுகளுக்கு ஃப்ரெஞ்ச் அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததால், இங்கிலாந்து தனது ஆற்றல் முழுவதையும் வீணாக்கிக்கொண்டதுதான் மிச்சம்.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.