Skip to content
Home » H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #26

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #26

46. சிலுவைப் போர் மற்றும் போப்பின் ஆதிக்க காலம்

‘அரேபிய இரவுகள்’ எழுதிய காலிஃப் ஹரூன்-அல்-ரஷீதோடு (Haroun-al-Raschid) சார்லேமேக்னே கடிதப் போக்குவரத்தில் இருந்தது சுவாரஸ்யமான விஷயம். கூடாரம், தண்ணீர் கடிகாரம், யானை மற்றும் புனித கல்லறை (Holy Sepulchre) சாவிகளுடன், பாக்தாத் தலைநகரிலிருந்து (பழைய தலைநகரம் டமாஸ்கஸ்) தூதர்களை ஹாருன்-அல்-ரஷீத் அனுப்பி வைத்தார். பைசண்டைன் சாம்ராஜ்யத்தை உருவாக்கவும் புனித ரோமானிய சாம்ராஜ்யம் மூலம் ஜெரூசலத்தில் வாழும் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவும் பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

பொ.ஆ.9-ம் நூற்றாண்டில் போர் மற்றும் கொள்ளைகளால் ஐரோப்பா தொடர்ந்து பாதிக்கப்பட்ட சூழலில், ஐரோப்பாவை விடவும் சிறந்த நாகரிகமாக அரேபிய சாம்ராஜ்யம் எகிப்து மற்றும் மெஸொபொடேமியாவில் நிலவியது. கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவை செழித்ததுடன், மனித மனம் அச்சமற்று வாழ்ந்தது. ஸ்பெயின் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில், சார்செனிக் அரசுகள் அரசியல் குழப்பத்தில் தத்தளித்தபோதும் தீவிர அறிசார் வாழ்க்கை காணப்பட்டது. ஐரோப்பாவின் இருண்ட காலங்களில், இங்குள்ள யூதர்களும் அரேபியர்களும் அரிஸ்டாடில் குறித்துப் படித்தனர்; விவாதித்தனர். புறக்கணிக்கப்பட்ட அறிவியல் மற்றும் தத்துவ அடிப்படைகளைப் போற்றிப் பாதுகாத்தனர்.

காலிஃப் அரசுக்கு வடகிழக்கே ஏராளமான துருக்கிப் பழங்குடியினர் வசித்து வந்தனர். அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டனர். தெற்கிலே வாழ்ந்த அறிவுசார் அரேபிய மற்றும் பாரசீகர்களை விடவும் இஸ்லாத்தில் ஆழ்ந்த மற்றும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். பொ.ஆ.10-ம் நூற்றாண்டில் அரேபியர்களின் அதிகாரம் பிளவுபட்டுச் சிதைந்த நிலையில், துருக்கியர்கள் வலுவாகவும் தீவிரமாகவும் நாளுக்கு நாள் வளர்ந்தார்கள். காலிஃபேட் அரசுடனான துருக்கியரின் உறவுகளை, சற்றேறக் குறைய பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு பாபிலோனிய சாம்ராஜ்யத்துடன் மெடீஸ் கொண்டிருந்த உறவுகளுடன் ஒப்பிடலாம்.

பொ.ஆ.11-ம் நூற்றாண்டில் துருக்கிப் பழங்குடி இனங்களுள் ஒன்றான செல்ஜூக் (Seljuk) துருக்கியர்கள் மெஸோபொடேமியாவுக்கு வந்து காலிஃபை மன்னராக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் காலிஃபைக் கைப்பாவையாக, கருவியாகப் பயன்படுத்தினர் என்பதே உண்மை. அர்மீனியா மற்றும் ஆசியா மைனரில் மீதமிருந்த பைசண்டைன் அதிகாரத்தையும் கைப்பற்றினர். பொ.ஆ.1071-ல் மெலாஸ்கிரிட் (Melasgrid) என்ற இடத்தில் நடைபெற்ற போரில், பைசண்டைன் படைகளைத் தோற்கடித்தனர். மேலும் ஆசியாவில் எந்தவொரு மூலையிலும் பைசண்டைன் ஆட்சியின் சுவடு கூடத் தெரியாத வகையில் அனைத்தையும் அழித்தனர். நைசியா (Nicaea) கோட்டையைக் கைப்பற்றி, அருகிலிருந்த கான்ஸ்டாண்டிநோபிளை முற்றுகையிட ஆயத்தமானார்கள்.

பைஜாண்டைன் மன்னனான ஏழாம் மைக்கேல் அச்சத்தில் நடுநடுங்கிச் சாணடைந்தார். நார்மேன்களுடனான போரில் ட்யூராஜோ (Durazzo) நகரையும் துருக்கியர்களுடனான போரில் டான்யூப் ஆற்றங்கரைப் பகுதிகளையும் பறிகொடுத்தார். இழந்த பகுதிகளை மீட்கவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் மேற்கத்திய சக்ரவர்த்தியிடம் உதவி கோராமல், இலத்தீன் கிறிஸ்தவத்தின் ராஜகுருவான ஏழாம் கிரெகோரி (Gregory VII) போப்புக்குக் கடிதம் எழுதினார். அவரது வாரிசான அலெக்ஸியஸ் காம்னெனஸ் (Alexius Comnenus) அடுத்த போப்பாகப் பொறுப்புக்கு வந்த இரண்டாம் அர்பனின் (Urban II) உதவியை நாடினார்.

இலத்தீன் மற்றும் கிரேக்கத் திருச்சபைகளுக்கு இடையேயான முறிவு நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் மக்கள் மனத்தில் நீங்காமல் உயிரோட்டமுடன் ஆழமாகப் பதித்து கிடந்தது. பைசண்டைனுக்கு நடந்த பேரழிவை, கிரேக்க திருச்சபைகளை விடவும் இலத்தீன் திருச்சபைகளே உயர்ந்தவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தத் தனக்குக் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பாகவே ரோமானிய போப் கருதினார். இந்தப் பிரச்னையுடன், மேற்கத்திய கிறிஸ்துவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய மேலும் இரு விஷயங்களைச் சமாளிக்கவும் போப் இந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டார்.

முதலாவது சமூக வாழ்க்கையைச் சீர்குலைக்கும் ‘வழக்கமாக நடைபெறும் தனியார் போர்’. அடுத்தது லோ ஜெர்மானியர்கள் (Low Germans) மற்றும் கிறிஸ்தவமயமாக்கப்பட்ட நார்த்மென்கள் (Christianized Northmen) குறிப்பாக ஃப்ராங்க்ஸ் மற்றும் நார்மென்களின் ‘அபரிமிதமான போர்த் திறன்’. ஜெரூசலத்தைக் கைப்பற்றிய துருக்கியர்களுக்கு எதிரான சமயப் போர் அல்லது சிலுவைப் போர் குறித்தும் சிலுவைக்கான போரின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு இடையே நடைபெறும் அனைத்துப் போர்களையும் உடனடியே நிறுத்துவது தொடர்பாகவும் மக்களிடையே தீவிர பிரசாரம் பொ.ஆ.1095 தொடங்கி நடைபெற்றது.

கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களிடமிருந்து, இயேசு சிலுவையில் இறந்த பிறகு புதைக்கப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட ‘புனித திருச்சபையை’ மீட்பதே இந்தப் போரின் நோக்கம் என அறிவித்தனர். ஜனநாயக ரீதியிலான இந்தப் பிரபலமான பிரசாரத்தை ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி முழுவதும் மேற்கொண்டவர் பீட்டர் என்னும் கத்தோலிக்கப் பாதிரியார். கரடு முரடான கிழிந்த ஆடை மற்றும் காலணிகள் ஏதுமின்றி, பெரிய சிலுவையைத் தோளில் சுமந்தவாறே, மக்கள் கூடும் பகுதிகளிக்கும் சந்தைகளுக்கும் திருச்சபைகளுக்கும் கழுதையில் பயணித்தார். கிறிஸ்தவ யாத்திரிகர்கள் மீது துருக்கியர்கள் கட்டவிழ்க்கும் வன்முறைத் தாக்குதல்களை விவரித்தார். கிறிஸ்தவர்கள் அல்லாத இஸ்லாமியர்கள் வசம் புனித திருச்சபை இருப்பது அவமானம் என்றும் அதை மீட்க வேண்டியது கட்டாயம் என்றும் பிரசாரம் செய்தார்.

பல நூறாண்டுகளாகக் கிறிஸ்துவத்தைப் போதித்ததன் பலன், அவரது பிரசாரத்துக்குக் கிடைத்த வரவேற்பில் பிரதிபலித்தது. மேற்கத்திய உலகில் அவருக்கு ஆதரவாக மிகப் பெரிய உற்சாக அலை வீசியது. மக்கள் ஆதரவுடன் கிறிஸ்துவம் தன்னை தானே மீண்டும் கண்டுபிடித்துக்கொண்டது. ஒற்றைச் சித்தாந்தம் தொடர்பாகப் பொது மக்களிடையே தற்போது ஏற்பட்ட இத்தகைய பரவலான எழுச்சி நமது மனித இன வரலாற்றிலேயே புதுமையான விஷயம். ரோமானிய சாம்ராஜ்யம் அல்லது இந்தியா அல்லது சீனாவின் முந்தைய வரலாறுகளில்கூட இதற்கு ஈடு இணை இல்லை. இருப்பினும் பாபிலோனியர்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு யூதத்திடமும் பிறகு இஸ்லாத்திடமும் ஓரளவு இணையான கூட்டு உணர்வுத் திறன் காணப்பட்டது.

நமது வாழ்க்கையில் மத போதகர்களின் சமயப் பரப்புரை வளர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, புதிய உணர்வுகளுடன் இவ்வகை இயக்கங்கள் செயல்படத் தொடங்கின. ஹீப்ரூ தீர்க்கதரிசிகள், இயேசுநாதர் மற்றும் சீடர்கள், மானி (Mani), முகம்மது நபிகள் நாயகம் உள்ளிட்டோர் மனிதர்களின் தனிப்பட்ட ஆன்மாக்களுக்கான உபதேசிப்பாளர்கள். இறைவனுடன் நேருக்கு நேர் தனிப்பட்ட மனச்சாட்சியை முன்னிறுத்தினர். இதற்கு முன் மதம் என்பது மனச்சாட்சியை விடவும் மூட நம்பிக்கை மற்றும் போலி அறிவியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பழைய மதம் கோயில், பூசாரி, உயிர்பலி ஆகியவற்றை உள்ளடக்கி அச்சத்தில் மனிதனை அடிமையாக்கியது. ஆனால், புதிய மதமோ மனிதனை மனிதனாக்கியது.

முதல் சிலுவைப் போர் பிரசாரம் ஐரோப்பிய வரலாற்றிலேயே பொது மக்களைத் திரண்டு எழ வைத்த முதல் கிளர்ச்சி. இதை நவீன ஜனநாயகத்தின் தோற்றம் என அழைப்பது சற்று அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் நவீன ஜனநாயகம் கிளர்ந்தது உண்மையே. விரைவில் அது மீண்டும் கிளர்ந்தெழுந்து, பிரச்னைக்குரிய பெரும்பான்மை சமூக மற்றும் மதம் தொடர்பான கேள்விகளைக் கேட்கும். புனித திருச்சபையை மீட்கும் நோக்கத்துடன், மத குருமார்களின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல், பொது மக்கள் கூட்டமாக, ஃப்ரான்ஸ், ரைன்லாந்து மற்றும் மத்திய ஐரோப்பாவிலிருந்து கிழக்கு நோக்கிப் புறப்பட்டனர். இதை ‘மக்களின் சிலுவைப் போர்’ என அழைக்கலாம்.

ஹங்கேரிக்குள் புகுந்த இந்தக் கும்பலின் ஒரு பிரிவு, சமீபத்தில் மதம் மாறிய மேக்யார்களைத் (Magyar) தவறுதலாக பேகன் (Pagan) என்றெண்ணி தாக்குதல் தொடுத்தனர். ஆனால் அவர்களை வெல்ல முடியாமல் மரணத்தைத் தழுவினர். இன்னொரு பிரிவு குழம்பிய மனத்துடன் ரைன்லாந்தை நோக்கிப் படையெடுத்தது. ஹங்கேரியில் நடைபெற்ற கடுமையான போரில் அவர்களும் மடிந்தனர்.

மூன்றாவது குழுவுக்குத் தலைமை வகித்த பாதிரியார் பீட்டர், பாஸ்ஃபோரஸ் (Bosphorus) ஜலசந்தியைக் கடந்து கான்ஸ்டாண்டிநோபிளுக்குள் நுழைய முயன்றபோது, செல்ஜுக் துருக்கியர்களால் கொல்லப்பட்டார். இவ்வாறாக ஐரோப்பிய மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகத்தின் முதல் கிளர்ச்சி புலம்பலோடு பரிதாபகரமான முடிவுக்கு வந்தது.

பொ.ஆ.1097-ல் உடலிலும் உள்ளத்திலும் போர்க்குணம் மிக்க நார்மேன்கள் பாஸ்ஃபோரஸ் ஜலசந்தியைக் கடந்து நைசியா நகருக்குள் ஊடுருவினர். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அலெக்ஸாண்டர் பயணம் செய்த அதே பாதையில் சென்று, ஆண்டியோக் (Antioch) நகரை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகை சற்றேறக் குறைய ஒரு வருடம் நீடித்தது.

பொ.ஆ.1099-ல் ஜெரூசலத்தை ஒரு மாத காலம் முற்றுகையிட்டு கோட்டைக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். கண்ணில் தென்பட்டவர்களை வெட்டிச் சாய்க்க தெருவெங்கும் இரத்தம் ஆறாக ஓடியது. நிறைவாக ஜூலை 15ஆம் தேதி புனித திருச்சபையைக் கைப்பற்றினர். கிறிஸ்தவ நம்பிக்கை அற்றவர்களிடமிருந்து திருச்சபையை மீட்ட மகிழ்ச்சியில் அனைவரும் மண்டியிட்டு தேவனை வணங்கினர்.

சிறிது காலம் அமைதியாக இருந்த இலத்தீனும் கிரேக்கமும் இந்நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் மோதிக்கொண்டன. சிலுவைப் போரில் இம்முறை இலத்தீன் திருச்சபைகளின் கடுமையான தாக்குதலில், துருக்கியர்களிடம் பெற்ற தோல்வியை விடவும் மோசமான தோல்வியை கிரேக்க திருச்சபைகள் சந்தித்தன. இருப்பினும் பைசண்டைன் மற்றும் துருக்கியர்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டதை உணர்ந்த இலத்தீன் சிலுவைப் போராளிகள், இருவருடனும் சண்டையிட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். ஆசியா மைனரின் பெரும்பான்மைப் பகுதிகளை பைசண்டைன் சாம்ராஜ்யம் மீட்டுக் கொண்டது.

துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதி, ஜெரூசலம் சிரியாவிலுள்ள எடிஸ்ஸா (Edessa) உள்ளிட்ட சில சமஸ்தானங்கள், ஆகியவை மட்டுமே மிஞ்சின. இப்பகுதிகளின் மீதான அவர்களின் இறுக்கமும் நிலைக்காமல், மெள்ள மெள்ளத் தளரத் தொடங்கியது. பொ.ஆ.1144-ல் எடிஸ்ஸாவை முஸ்லிம்கள் கைப்பற்றிக்கொள்ள, எடிஸ்ஸாவை மீட்க முடியாமல் இரண்டாம் சிலுவைப் போரும் சோகத்திலேயே முடிவுக்கு வந்தது. தங்கள் பிடி நழுவாமலிருக்க, ஆறுதலுக்கு, ஆண்டியோக் நகரை மட்டும் தக்கவைத்துக் கொண்டனர்.

பொ.ஆ.1169-ல் குர்தீஷ் (Kurdish) இனத்தைச் சேர்ந்த சலாடீன் (Saladin) தலைமையில் இஸ்லாமிய வீரர்கள் அணி திரண்டனர். எகிப்தின் தலைவனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட சலாடீன் கிறிஸ்தவர்கள் மீது புனிதப் போரை அறிவித்து ஜெரூசலத்தை மீண்டும் கைப்பற்றிக் கொண்டார். ஜெரூசலத்தை இழந்த கிறிஸ்தவர்கள் அதை மீட்க மூன்றாம் சிலுவைப் போருக்குத் தயாரானார்கள். ஆனாலும் தோல்வியையே தழுவினர்.

பொ.ஆ.1202-04 வரையிலான நான்காம் சிலுவைப் போரில் வெனிஸ் தொடங்கி கான்ஸ்டாண்டிநோபிள் வரை இலத்தீன் திருச்சபைப் படைகள் ஊடுருவின. வணிக நகரமான வெனிஸ் தலைமையில் பைசண்டைன் கடற்கரை மற்றும் தீவுகள் இணைக்கப்பட்டன. கான்ஸ்டாண்டிநோபிளில் இலத்தீன் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பால்ட்வின் ஆஃப் ஃப்ளாண்டர்ஸ் (Baldwin of Flanders), இலத்தீன் மற்றும் கிரேக்கத் திருச்சபைகளை ஒன்றிணைத்து ஆணையிட்டார். பொ.ஆ.1204 தொடங்கி அடுத்த 56 ஆண்டுகளுக்கு இலத்தீன் சக்ரவர்த்திகள் கான்ஸ்டாண்டிநோபிளை ஆண்டனர். பொ.ஆ.1261-ல் கிரேக்கம் மீண்டும் தன்னை ரோமானியர்களின் (இலத்தீன்) ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டது.

பொ.ஆ.10-ம் நூற்றாண்டில் நார்த்மென்னும் 11-ம் நூற்றாண்டில் செல்ஜூக் துருக்கியரும் ஏற்றம் பெற்றதுபோல், 12 -13ஆம் நூற்றண்டுகள் போப்கள் ஏற்றம் பெற்ற காலமாக விளங்கின. போப் ஆட்சியின் கீழ் ஒருங்கிணைந்த கிறிஸ்தவம் சாத்தியமே என்னும் சூழல் முன்பைவிடவும் நிஜமனது. அந்த நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ நம்பிக்கை ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் வேகமாகப் பரவியது.

இருப்பினும் ரோமாபுரி சில இருண்ட மற்றும் மதிப்பிழந்த கட்டங்களைத் தாண்டவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. 10-ம் நூற்றாண்டில், பதினோராம் ஜான் மற்றும் பன்னிரண்டாம் ஜான் போப் ஆகிய இருவரும் அருவருப்பான உயிரினங்கள் என்றும் அவர்களை தேவன் மன்னிக்குமாறு சில எழுத்தாளர்கள் பதிவு செய்யும் அளவுக்கு, அவர்கள் நடவடிக்கைகள் படுமோசமாக இருந்தன.

ஆனாலும் இலத்தீன் கிறிஸ்தவத்தின் உடலும் உள்ளமும் எளிமையாகவே காட்சியளித்தன. பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உண்மையாக இருந்தனர். இவர்களின் நேர்மை மீதான நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவம் ஆழமாக வேரூன்றியது. மிகச் சிறந்த போப்களாக முதலாம் கிரெகொரி (Gregory) (590-604) மற்றும் மூன்றாம் லியோ (Leo) (795-816) ஆகியோரைக் குறிப்பிடலாம். தன்னைத் தானே சக்ரவர்த்தியாக அறிவிக்கும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருந்தும் சார்லேமேக்னேவை பதவியில் உட்கார வைத்து அவர் தலையில் மகுடம் சூட்டி அடுத்த சீசர் எனப் புகழ்ந்தவர் மூன்றாம் லியோ போப்தான்.

11-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கிறிஸ்தவ மதகுருவாகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய ஹில்டிபிராண்ட் (Hildebrand) வாழ்க்கையில் நிறைவாக, ஏழாம் கிரெகொரி (Gregory VII) போப்பாக (1073-85) உயர்ந்தார். 1087-99-ல் போப்பாகப் பதவி வகித்த இரண்டாம் அர்பன் (Urban II), முஸ்லிம்களுக்கு எதிரான முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். போர்களை அறிவிக்கும் ஆற்றலைக் கொண்டவர்கள் நாடாளும் சக்ரவர்த்திகளேயானாலும் போப்புக்கு அடிபணிந்தே நடக்க வேண்டும் என்னும் அதிகாரத்தை உலகுக்கு வெளிப்படுத்திய பெருமை இவ்விரு போப்களையே சேரும்.

பல்கேரியா தொடங்கி ஐயர்லந்து வரை, நார்வே தொடங்கி சிசிலி ஜெரூசலம் வரை, போப்களின் அதிகாரம் கேள்வி கேட்க ஆளின்றிக் கொடிக்கட்டி உச்சம் பறந்தது. ஏழாம் கிரெகொரி போப் முன் மண்டியிட்டுப் பாவ மன்னிப்பு கோருவதற்காக ரோமானியச் சக்ரவர்த்தி நான்காம் ஹென்றி (Henry) வாடிகன் நகருக்கு வரவழைக்கப்பட்டார். மூன்று பகல், மூன்று இரவு, வாடிகன் அரண்மனைக் கோட்டை முற்றத்தில் சாக்குத் துணி ஆடையில், காலணி இல்லாத வெறும் கால்களுடன், கொட்டும் உறைபனியில் நின்ற பிறகே சக்ரவர்த்திக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அதேபோல் பொ.ஆ.1176-ல், போப் மூன்றாம் அலெக்ஸாண்டர் முன் மண்டியிட்ட ரோமானிய சக்ரவர்த்தி ஃப்ரெட்ரிக் பார்பரோஸா (Frederick Barbarossa) ஆயுள் முழுவதும் அடிமையாகவும் விசுவாசமாகவும் இருப்பேன் என உறுதிமொழி அளித்த பிறகே மன்னிப்பு வழங்கப்பட்டது.

11-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் மக்களின் விருப்பங்களும் மனச்சாட்சிகளுமே திருச்சபைகளின் மிகப் பெரிய சக்தியாக விளங்கின. இருப்பினும் இந்த சக்திக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கிய தார்மிக கௌரவத்தைத் தக்கவைக்கத் தவறி விட்டன. 14-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் போப்பின் அதிகாரம் முற்றிலுமாகச் சரிந்தது. திருச்சபைகள் மீது கிறிஸ்தவத்தைத் தழுவிய மக்களின் நம்பிக்கை அழிந்து போகக் காரணம் என்ன? போப்பின் வேண்டுகோளுக்கு மக்கள் இணங்கவும் சேவை செய்யவும் மறுக்கக் காரணம் என்ன?

பிரச்னைக்கு முதல் காரணம் திருச்சபைகள் வசம் சேர்ந்த அபரிமிதமான சொத்துகள். குழந்தைப் பேறு இல்லாமல் இறக்கும் மக்கள் தங்களது நிலங்களையும் சொத்துகளையும் திருச்சபைகளுக்கு உயில் எழுதி வைக்க வேண்டியது கட்டாயம். எனவே, திருச்சபைகள் மரணமே இல்லாமல் உயிர்ப்புடன் இருந்தன. தவறு அல்லது பாவம் செய்வோரும் தண்டனையாகத் திருச்சபைகளுக்கு அபராதப் பணம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டனர். இதன் காரணமாகப் பெரும்பான்மை ஐரோப்பிய நாடுகளிலுள்ள மொத்த நிலப்பரப்பில் கால் பகுதி திருச்சபைகளுக்குச் சொந்தமாகிப் போயின. திருச்சபைகளின் ஜீவாதாரமாகச் சொத்து விளங்கியதால், அதன் மீதான ஆசையும் அதிகரித்ததில் வியப்பேதுமில்லை. பொ.ஆ.13-ம் நூற்றாண்டு தொடக்கதிலேயே மண்னாசை, பொன்னாசை மிக்கவர்கள் என்னும் பழிசொல்லுக்குப் பாதிரியார்கள் உள்ளானார்கள். அவர்கள் மீதான நல்லெண்ணமும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

சொத்துகள் தங்கள் கட்டுப்பாட்டை விட்டு விலகுவதையும் திருச்சபைகளுக்குச் செல்வதையும் மன்னர்கள் விரும்பவில்லை. அதிகாரம் மிக்க பிரபுக்களிடமும் ஜமீந்தார்களிடமும் நிலங்கள் கைமாறுவதற்குப் பதிலாகப் பாதிரியார்களிடமும் கன்யாஸ்திரிகளிடமும் செல்லத் தொடங்கியதை ஆதரவிக்கவில்லை. ஏழாம் கிரெகொரி போப்புக்கு முன்பிருந்தே, திருச்சபைக்குப் பங்குத் தந்தைகளையும் பாதிரியார்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்பான கருத்து வேறுபாடு, மன்னருக்கும் போப்புக்கும் இடையே நிலவியது.

போப்பிடமே அதிகாரம் குவிந்ததால், குடிமக்கள் மற்றும் ராஜ்ஜியங்கள் மீதான கட்டுப்பாட்டை மன்னர் இழந்தார். கிறிஸ்தவ குருமார்கள் மன்னருக்கு அதாவது அரசு கஜானாவுக்கு வரி செலுத்த மறுத்து, ரோமாபுரிப் போப்புக்கே வரி செலுத்தினர். மேலும் குடிமக்கள் அரசுக்கு செலுத்தும் வரியோடு, தங்களுக்கும் தசம பாகம் (வருமானத்தில் பத்து சதவிகிதம்) என்னும் வரியைச் செலுத்த வேண்டுமென உள்ளூர் திருச்சபைகள் நிர்பந்தித்தன.

போப்புக்கும் மன்னர்களுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி கிறிஸ்தவம் பரவிய எல்லா நாடுகளிலும் நிலவியது. ஆனாலும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது போப்தான். பாதிரியார்கள், மதகுருமார்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தாண்டி மன்னர்களை நீக்கவும் தங்களுக்கு விசுவாசமானவர்களை மன்னர்களாக நியமிக்கும் அதிகாரத்தையும் கைப்பற்றினர். ஞானஸ்தானம், பாவ மன்னிப்பு வழங்கல், தசம பாகம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்றன. பாதிரியார்களுக்கு மனைவி, குடும்பம் இருக்கக்கூடாது என உத்தரவானது.

சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. தனக்குக் கீழ்ப்படியாத மன்னர்களை அடக்குவது மற்றும் அமைதியான மக்களை மிரட்டுவது என பொ.ஆ.12-ம் நூற்றாண்டு வாக்கில் போப்களின் ஆதிக்கம் உச்சம் தொட்டது. கீழ்ப்படியாத இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஃபிரான்ஸ் தடை விதிக்கப்பட்ட நாடுகளாக அறிவிக்கப்பட்டன. போப் தனது அதிகார பலத்தை மன்னர்கள் மீது மட்டுமே செலுத்தி இருந்தால், கிறிஸ்துவ மக்கள் மீதான ஆதிக்கத்தைத் தக்கவைத்து நம்பிக்கையைத் தொடர்ந்து பெற்றிருக்கலாம்.

பொ.ஆ.11-ம் நூற்றாண்டுக்கு முன் ரோமானியப் பாதிரிமார்கள் திருமணம் செய்து கொண்டனர். பொது மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கேற்றனர். ஆனால் ஏழாம் கிரெகொரி போப் பதவிக்கு வந்த பின் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. பொது மக்களுடன் நெருக்கமாக உறவாடுவதைக் கண்டித்தனர்.

இது பாதிரியார்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது. திருச்சபைகள் பொறுப்பில் சொந்தமாக நீதி மன்றங்கள் இருந்தன. பாதிரியார்கள், சிலுவைப் போராளிகள், மாணவர்கள், ஏழைகள், அனாதைகள், விதவைகள் ஆகியோருக்கான நீதிமன்றங்களாக இவை இயங்கின. உயில், திருமணம், சூனியம், மத நிந்தனை என எல்லாவற்றும் திருச்சபைகளின் வழிகாட்டுதலில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

சாதாரண மனிதனுக்கும் பாதிரியாருக்கும் பிரச்னை எழுந்தால் அந்த வழக்கு விசாரணைக்காக திருச்சபை நீதிமன்றத்துக்கே வர வேண்டும். பெரும்பாலும் தீர்ப்பு பாதிரியாருக்கே சாதகமாக இருக்கும். பாதிரியார் விடுதலை செய்யப்பட, சாதாரணக் குடிமகன் சமாதானமாகச் செல்ல வேண்டும் அல்லது தண்டனை அனுபவிக்கவேண்டும். இதன் காரணமாகக் கிறிஸ்தவப் பாதிரியார்களை உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் வெறுக்கத் தொடங்கினார்கள்.

பொது மக்களின் மனசாட்சிகளில்தான் ரோமாபுரியின் ஆற்றல் இருக்கிறது என்பதை அது உணரவே இல்லை. சமய ஆர்வத்தை நட்பாக வைத்துக் கொள்ளாமல், அதற்கு எதிராகவே செயல்பட்டது. நேர்மையான சந்தேகம் மற்றும் மாறுபட்ட கருத்து மீது, மரபுவழி கோட்பாட்டைத் திணித்தது. தார்மிக விஷயங்களில் திருச்சபை தலையிட்ட போது, சாதாரண மனிதனை இணைத்துக்கொண்டது. ஆனால், கோட்பாட்டு விஷயங்களில் தலையிட்டபோது, சாதாரண மனிதனைப் புறக்கணித்தது.

இயேசு நாதரின் நம்பிக்கை மற்றும் எளிய வாழ்க்கை முறைக்கு திருச்சபை திரும்ப வேண்டுமென தெற்கு ஃபிரான்ஸைச் சேர்ந்த வால்டோ (Waldo) பிரச்சாரம் செய்தார். அப்போது, அவரையும் அவரைப் பின்பற்றும் வால்டென்ஸஸ் (Waldenses) பிரிவினரையும் தீயிட்டும் வெட்டியும் கற்பழித்தும் பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தி அடக்குமாறு மூன்றாம் இன்னொசெண்ட் (Innocent III) போப் ஆணையிட்டார்.
இத்தாலியின் அஸ்ஸிஸி (Assisi) நகரைச் சேர்ந்த புனித ஃபிரான்சிஸ் (1181-1226) என்பவர், தனது தொண்டர்களான ஃபிரான்சிஸ்ஸியன்ஸ், இயேசு கிறிஸ்துவின் ஏழ்மையையும் சேவையையும் முன்னுதாரணமாகக்கொண்டு நடக்கவேண்டுமென அறிவுறுத்தினார். இவரது போதனைகளைக் கண்டு பொறுக்காத போப், அவர்களைச் சாட்டையால் அடித்தும் துன்புறுத்தியும் சிறையில் அடைத்தும் கொடுமைப்படுத்த உத்தரவிட்டார். பொ.ஆ.1318-ல் மார்சேல்ஸ் நகரில் நால்வர் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.

மேற்கண்டவர்களுக்கு மாறாகவும் போப்புக்கு ஆதரவாகவும் புனித டொமினிக் (1170-1221) என்பவர் டொமினிகன்ஸ் என்னும் கத்தோலிக்க பழமைப் பிரிவை உருவாக்கினார். அவருக்கு, மூன்றாம் இன்னொசெண்ட் போப் தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கினார். மேலும் கத்தோலிக்க மதத்துக்கு எதிரான கொள்கை கொண்டவர்களையும் சுதந்திரமாகச் சிந்திப்பவர்களையும் தண்டிக்க, இங்க்விசிஷன் (Inquisition) என்னும் பிரத்யேக கொடுங்கோல் அமைப்பையும் உருவாக்கினார்.

கத்தோலிக்க திருச்சபை, தனது அதிகப்படியான கூற்றுகள், அநியாயமான சலுகைகள், பகுத்தறிவற்ற சகிப்பின்மை ஆகியவை மூலம் அதன் சக்திக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் சாதாரண மனிதனின் நம்பிக்கையை, அதுவே அழித்துவிட்டது. வெளி எதிரிகள் யாருமின்றி உள்ளுக்குள்ளேயே புரையோடிப்போன தொடர் சிதைவுகளால் சரிந்தது என்பதே உண்மை.

(தொடரும்)

H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
ஜனனி ரமேஷ்

ஜனனி ரமேஷ்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ‘திருவள்ளுவர்’, ‘தமிழ் அறிஞர்கள்’ உள்ளிட்ட நூல்களும் ‘ஔரங்கசீப்’, ‘தேசத் தந்தைகள்’ உள்ளிட்ட மொழியாக்கங்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகளும் எழுதிவருகிறார். விருதுகள் பெற்றவர். தொடர்புக்கு : writerjhananiramesh@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *