47. மதத் தலைமையை மறுதலித்த மன்னர்களும் மிகப் பெரிய பிளவும்
தலைமைப் பதவிக்காக ஒட்டு மொத்த கிறிஸ்தவர்களின் முழு ஆதரவைப் பெறும் போராட்டத்தில், ரோமானியத் திருச்சபையிடம் காணப்பட்ட மிகப் பெரிய பலவீனம் போப்பைத் தேர்வு செய்யும்விதம். தனது எண்ணத்தை நிறைவேற்றவும் கிறிஸ்தவம் முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே சமாதானம் என்னும் சூழலை நிலைநிறுத்த விரும்பினால், வலிமையான, உறுதியான தொடர் வழிகாட்டுதல் போப்புக்கு இருக்க வேண்டியது அவசியம்.
பதவியேற்கும் ஒவ்வொரு போப்பும் வாழ்க்கையில் மற்றவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழவேண்டும். விவாதிக்கும் அளவுக்குத் திருச்சபைக் கொள்கைகளை நன்கு அறிந்தவராக இருத்தல் கட்டாயம். போப்களின் தேர்வில் தெளிவும் உறுதியும் நம்பகத்தன்மையும் மாற்ற முடியாத தன்மையும் இருப்பது முக்கியம். ஆனால் வருத்தப்படும் வகையில், அக்காலத்தில் மேற்கூறிய எதுவுமே நடைபெறவில்லை. போப்களைத் தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பைஜாண்டைன் சக்ரவர்த்திக்கா புனித ரோமானியச் சக்கரவர்த்திக்கா இருவரில் யாருக்கு அல்லது இருவருக்கும் இல்லையா என்பதில் எந்தத் தெளிவும் இல்லை.
ஏழாம் கிரெகொரி (1073-1085) போப் தேர்தலில் பல சீர்திருதங்களைக் கொண்டுவந்தார். வாக்களிக்கும் உரிமையை ரோமானிய கார்டினல்களுக்கு மட்டுமே அளித்தார். மன்னர்கள் தங்கள் விருப்பத்தை ஒப்புக்குத் தெரிவிக்கும் வகையில் அவர்களது பங்களிப்பைக் குறைத்தார். அடுத்த போப் குறித்து எந்த ஏற்பட்டையும் செய்யாமல், கார்டினல்கள் முடிவுக்கே விட்டுவிட்டார். கார்டினல்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சில தருணங்களில் ஓராண்டுக்கும் மேலாகக்கூட போப் பதவி காலியாக இருந்தது.
உறுதியான முடிவெடுக்காததன் விளைவை, பொ.ஆ.16-ம் நூற்றாண்டு வரை போப் வரலாறு சந்தித்தது. குளறுபடியான தேர்தல்கள் காரணமாக உண்மையான போப் நான்தான் என ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அறிவித்துக்கொண்டனர். இந்தக் குழப்பமான சூழலில், மத்யஸ்தம் செய்து பிரச்னையைத் தீர்க்க, வேறு வழியின்றி மன்னர்களை நாடிச்செல்ல வேண்டிய நிர்பந்தமும் கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு போப்பும் வாழ்நாளில் ஏதாவது ஒரு விசாரணையைச் சந்திக்கும் நிலையும் உருவானது.
தலை துண்டிக்கப்பட்ட உடல் முண்டமாவதுபோல், போப்பின் மரணத்துக்குப் பின் வழிநடத்தத் தலைமை இன்றித் திருச்சபையும் செயலற்றுப் போனது. அல்லது இறந்து போனவருக்கு வேண்டாத ஒருவர், அவரைக் கேவலப்படுத்துவதற்காகவே பொறுப்பை ஏற்றுக்கொண்டு குற்றம் சுமத்துவார். அல்லது சாவின் விளிம்பில், புதைகுழிக்குச் செல்லத் தயார் நிலையிலுள்ள குடுகுடு கிழவர் ஒருவர் போப் பதவிக்கு வருவார்.
ரோமானிய போப் திருச்சபை பலவீனமானதைத் தொடர்ந்து ஜெர்மன், ஃபிரான்ஸ், மற்றும் இங்கிலாந்தை ஆண்ட நார்மன் அரசர்கள் திருச்சபை விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தனர். தேர்தல்களில் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தித், தங்களுக்குக் கட்டுப்படும் ஒருவரை ரோமாபுரி இலத்தீன் திருச்சபையில் போப்பாக நியமிக்க, அனைத்து அரசர்களும் முனைந்தனர். ஐரோப்பியப் பிரச்னைகளில் போப்பின் முக்கியத்துவமும் அதிகாரமும் அதிகரித்ததைத் தொடர்ந்து, அவரைத் தங்களுக்குச் சாதகமானவராக்கும் தலையீடுகளும் பெருகின. இதன் காரணமாகப் பின்னாளில் வந்த போப்களுள் பெரும்பான்மையோர், பதவிக்கு வருமுன் திறமைசாலிகளாக இருந்தாலும் பதவியில் அமர்ந்த பிறகு பலவீனமாகப் பயனற்றுப் போனார்கள்.
இக்காலகட்டத்தில், பதவி வகித்த போப்களுள் தீவிரமான மற்றும் சுவாரஸ்யமானவர் மூன்றாம் இன்னொசெண்ட் (1198-1216). முப்பத்தெட்டு வயதுக்கு முன்பே போப்பான இள வயது போப் இவர்தான். இவரோடும் அடுத்தடுத்து வந்த போப்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த ரோமானிய சக்ரவர்த்தி இரண்டாம் ஃபிரெட்ரிக், (Fredrick) இன்னும் சுவாரஸ்யமானவர். திறமை, ஆற்றல் மிக்கவர் என்பதால் ‘ஸ்டூபர் முண்டி’ (Stupor Mundi) அதாவது ‘உலக அதிசயம்’ என அன்போடு அழைக்கப்பட்டார்.
ரோமாபுரித் திருச்சபைக்கும் மன்னருக்கும் இடையேயான மோதல் ஒரு வரலாற்றுத் திருப்பம். நிறைவாக மன்னனையும் அவருடைய வம்சத்தையும் நிர்மூலமாக்குவதில் ரோமானியத் திருச்சபை வெற்றி பெற்றது. ஆனாலும் இந்த மோதலில் போப் அதுவரை பெற்ற புகழை இழந்தார். ரோமானிய திருச்சபை அதன் பரம்பரியப் புகழைப் பறிகொடுத்தது.
சக்ரவர்த்தி ஆறாம் ஹென்றியின் மகன் இரண்டாம் ஃப்ரெட்ரிக். அரியணை ஏறும்போது நான்கு வயது பாலகர். தாய், சிசிலியின் நார்மன் அரசன் முதலாம் ரோஜரின் (Roger) மகள். போப் மூன்றாம் இன்னொசெண்ட் சிறுவனுடைய பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். சிசிலி நகரைச் சமீபத்தில்தான் நார்மன்கள் கைப்பற்றி இருந்தனர். அரசவையில் சரிபாதி கீழை நாட்டு அறிஞர்களும் அரேபியக் கல்வியாளர்களும் நிறைந்திருந்தனர். இவர்களில் சிலர் இளவரசனுக்குக் கல்வி புகட்ட நியமிக்கப்பட்டிருந்தனர்.
சில விஷயங்களை இளவரசனுக்குத் தெளிவுபடுத்தக் கல்வியாளர்கள் சிரமப்பட்டனர். கிறிஸ்தவத்தில் இஸ்லாமியப் பார்வையையும் இஸ்லாமில் கிறிஸ்தவப் பார்வையையும் கொண்டிருந்தார். இரட்டை மதக் கல்வி மகிழ்ச்சியற்ற முடிவுகளையே தந்த்து. எல்லா மதங்களுமே ஏமாற்றுபவை, வஞ்சிப்பவை என்னும் எண்ணம் அந்தச் சிறுவனின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. மதங்களுக்கு எதிரான கருத்துகளையும் கொள்கைகளையும் நிந்தனைகளையும் வெளிப்படையாகப் பேசினார்.
இரண்டாம் ஃப்ரெட்ரிக் இளைஞனாக வளர வளர, அவனுக்கும் பாதுகாவலனாக நியமிக்கப்பட்ட போப் மூன்றாம் இன்னொசெண்ட்டுக்கும் இடையே, கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இளவரசனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென போப் விரும்பினார். ஃப்ரெட்ரிக் சக்கரவர்த்தியாக முடிசூடும் தருணம் வந்தபோது, போப் சில நிபந்தனைகளை விதித்தார். ஜெர்மனியில் அடிக்கடித் தலைதூக்கும் கிறிஸ்தவத்துக்கு எதிரான கொள்கைப்பிரசாரங்களை இரும்புக் கரத்தால் ஒடுக்க வேண்டும். சிஸிலி மற்றும் தெற்கு இத்தாலியின் மன்னர் பதவிகளையும் துறக்க வேண்டும். இதன் மூலம் ஃப்ரெட்ரிக்கின் அதிகாரப் பரவலைக் குறைக்க முடியும் என்பது போப்பின் நம்பிக்கை.
ஜெர்மானிய கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கு எந்த வரியும் விதிக்கக்கூடாது. ஃபிரான்ஸில் வால்டென்ஸஸ் (Waldenses) பிரிவினர் போப்புக்கு எதிராக அணி திரண்டபோது, அவர்களைச் சிலுவைப் போர் என்ற பெயரில் கொன்று குவிக்க ஃப்ரெஞ்ச் மன்னனுக்கு போப் ஆணையிட்டார். ஃப்ரெஞ்ச் மன்னன் செய்ததுபோல், ஜெர்மனியில் தனக்கு எதிராகப் போராடுவோரையும் ஃப்ரெட்ரிக் கொல்ல வேண்டுமென போப் எதிர்பார்த்தார். மேலும் முஸ்லிம்களுடன் போரிட்டு ஜெரூசலத்தை மீட்கவேண்டும் என்பதும் அவரது திட்டம். முடிசூடும் நிகழ்வில் எந்தத் தடங்கலோ, பிரச்னையோ போப்பால் ஏற்படக்கூடாது என்பதால் அவரது எல்லா நிபந்தனைகளையும் ஏற்பதாக ஃப்ரெட்ரிக் வாக்குறுதி கொடுத்தார். எந்தச் சிக்கலுமின்றி இரண்டாம் ஃப்ரெட்ரிக் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார்.
போப்புக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் சக்ரவர்த்தி இரண்டாம் ஃப்ரெட்ரிக் நிறைவேற்றவில்லை. சிஸிலி மற்றும் தெற்கு இத்தாலி மன்னர் பதவிகளைத் துறக்க மறுத்ததுடன், ஜெர்மனிக்குப் பதிலாக சிஸிலி அரண்மனையிலேயே தங்கவும் முடிவெடுத்தார். தனக்கு அளித்த வாக்குறுதிகளுள் ஒன்றைக்கூட நிறைவேறாததால், மனம் நொந்து, குழம்பிய போப் மூன்றாம் இன்னொசெண்ட், அதே ஆண்டு, பொ.ஆ1216-ல் மரணமடைந்தார்.
மூன்றாம் இன்னொசெண்டை அடுத்துப் பதவியேற்ற மூன்றாம் ஹோனோரியஸ் (Honorius) போப்பாலும் சக்ரவர்த்தி ஃப்ரெட்ரிக்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பொ.ஆ.1227-ல் போப் ஒன்பதாம் கிரெகொரி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். எப்படியாவது ஃப்ரெட்ரிக்கைக் கீழ்ப்படியவைக்க முதல் கட்டமாக கிறிஸ்தவ மதத்திலிருந்து அவரை விலக்கினார். கிறிஸ்தவ மதம் மூலம் கிடைத்த அனைத்துச் சலுகைகளும் இதன் மூலம் ரத்தாயின. சிஸிலி அரசவை முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களைக் கொண்டிருக்காமல், சரி பாதி அரேபியர்களாலும் நிறைந்திருந்ததால், ஃப்ரெட்ரிக்குக்கு எந்தப் பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை.
ஃப்ரெட்ரிக்கின் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான செயல்பாடுகள், தவறான நடத்தைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு அவருக்கே வெளிப்படையாகக் கடிதம் எழுதினார் போப். ஆத்திரமடைந்த ஃப்ரெட்ரிக், கடுமையான சொற்களால் காட்டமாகப் பதிலளித்த கடிதத்தை, ஐரோப்பாவின் அனைத்து மன்னர்களுக்கும் அனுப்பி, தனக்கும் போப்புக்கும் இடையில் நிலவும் மோதலை உலகறிய வெளிப்படுத்தினார்.
மன்னர்களை நீக்கிவிட்டு ஐரோப்பா முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போப் துடிப்பதாகக் குற்றம் சுமத்தினார். போப்பின் பேராசையையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்க்க, ஐரோப்பிய மன்னர்கள் ஓரணியில் திரளவும் வேண்டுகோள் விடுத்தார். அவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக கத்தோலிக்கப் போப்பிடமும் திருச்சபையிடமும் சேர்ந்துள்ள சொத்துகளையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பொ.ஆ.1216-ல் மறைந்த மூன்றாம் இன்னொசெண்ட் போப்புக்குக் கொடுத்த உறுதிமொழியைப் பன்னிரு ஆண்டுகள் கழித்து, பொ.ஆ.1228-ல் நிறைவேற்ற முடிவு செய்தார் ஃப்ரெட்ரிக். இது அவரது தலைமையிலான ஆறாவது சிலுவைப் போர். ‘போர்’ என அழைக்கப்பட்டாலும் இது உண்மையிலேயே வித்தியாசமானது. வீரர்கள் வெட்டிச் சாய்க்கப்படவில்லை. பிணக் குவியல்களோ உறவுகளை இழந்தவர்களின் ஒப்பாரியோ ஓலமோ எங்கும் ஒலிக்கவில்லை. இரண்டாம் ஃப்ரெட்ரிக் எகிப்துக்குப் பயணம் செய்து அங்கே சுல்தானைச் சந்தித்தார். இருவரும் சந்தேகப் பார்வைகள் கொண்டவர்கள் எனினும் ஒத்த கருத்துகளைப் பரஸ்பம் பலனளிக்கும் வகையில் பரிமாறிக் கொண்டனர். நிறைவாக, எகிப்து சுல்தான் ஜெரூசலத்தை ஃப்ரெட்ரிக்கிடம் ஒப்படைக்கச் சம்மந்தித்தார்.
ஏற்கெனவே சொன்னதுபோல், ஆயுதப் பிரயோகமோ இரத்தக் களறியோ இல்லாத மாறுபட்ட போர். இருவர் மட்டுமே பேசிச் செய்து கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம். கிறிஸ்தவ மதத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில் ஃப்ரெட்ரிக்கைச் சுற்றி கிறிஸ்தவ குருமார்கள் யாரும் இல்லை. எனவே ஜெரூசலத்தின் மன்னனாக ஃப்ரெட்ரிக் தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்டார். இத்தாலி திரும்பியவுடன் தான் இல்லாத நேரத்தில் உள்ளே ஊடுருவிய போப்பின் படைகளை விரட்டி அடித்தார். இருப்பினும் ஜெரூசலத்தைத் துளி இரத்தம் கூடச் சிந்தாமல் தனியொருவனாக மீட்டெடுத்தமைக்காகத் தன்னை மீண்டும் கிறிஸ்தவத்தில் இணைத்துக் கொள்ள போப்பை வேண்டினார். அதில் வெற்றியும் பெற்றார்.
ஆனால் இந்த சமரசம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பொ.ஆ.1239-ல் ஒன்பதாம் கிரெகொரி போப் மீண்டும் ஃப்ரெட்ரிக்கோடு மல்லுக்கட்ட ஆரம்பித்தார். இரண்டாவது முறையாக ஃப்ரெட்ரிக் மீண்டும் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஒன்பதாம் கிரெகொரி இறந்த பின்னரும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. அடுத்து போப்பாகப் பதவிக்கு வந்த நான்காம் இன்னொசெண்ட் முந்தைய போப்களைப் போலவே மோதல் போக்கைத் தொடர, ஃப்ரெட்ரிக் மீண்டும் போப்பையும் திருச்சபையையும் கண்டித்து எல்லா மன்னர்களுக்கும் கடிதம் அனுப்பினார்.
பெருமை, மதசார்பின்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்குப் பதிலாக பாதிரியார்களிடம் ஆணவமும் அதிகாரமமதையும் சொத்து சேர்க்கும் ஆசையும் குவிந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். எனவே நாட்டின் நலனுக்காவும் திருச்சபையின் நன்மைக்காகவும் கிறிஸ்தவர்களின் வளமான எதிர்காலத்துக்காகவும் போப் மற்றும் பாதிரியார்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டுமென ஐரோப்பிய மன்னர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேற்கூறிய மோதல் போக்கைத் தவிர, ஃப்ரெட்ரிக் ஆட்சியின் கடைசிக் காலங்களில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. சிஸிலியில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். யாருக்கும் அடங்காமல், யார் பேச்சையும் கேட்காதவராகவே விளங்கினார். ஆனால் எந்தவொரு விஷயத்தையும் கேள்வி கேட்டு, விசாரித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வலராக இருந்தார். இதன் காரணமாக அவரது அரண்மனை யூத, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தத்துவ ஞானிகளால் நிரம்பி வழிந்தது.
இத்தாலிய மனங்களில் இஸ்லாமிய சரசெனிக் (Saracenic) செல்வாக்கை விதைத்தார். அரேபிய எண்களையும் அல்ஜீப்ராவையும் (Algebra) கிறிஸ்தவ மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பொ.ஆ.1224-ல் நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியதுடன், சலேர்னோ (Salerno) பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியையும் விரிவுபடுத்தினார். விலங்கியல் பூங்காவை உருவாக்கியத்துடன் பறவைகள் மீதுள்ள ஆர்வத்தில் பருந்து பற்றிப் புத்தகம் எழுதினார். முதன் முதலில் இத்தாலி மொழியில் கவிதை எழுதிய கவிஞர்களுள் இவரும் ஒருவர். அந்தவகையில் இத்தாலியக் கவிதை இவருடைய அரசவையில்தான் முதன் முதலில் அரங்கேறியது. ஓர் எழுத்தாளர் இவரை ‘நவீனங்களின் முதல்வர்’ எனப் பாராட்டினார். அவரது அமைச்சரவையிலிருந்த மைக்கேல் ஸ்கட் என்னும் தத்துவவாதி, கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாடில் மற்றும் அரேபிய தத்துவ ஞானி அவெரோஸ் (Averroes) ஆகியோரின் தத்துவங்களை மொழிபெயர்த்தார்.
போப் மோதல் ஃப்ரெஞ்ச் மன்னனோடும் தொடர்ந்தது. இதற்கிடையே ஹோஹென்ஸ்டாஃபென்ஸ் (Hohenstaufens) வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் கடைசி மன்னன் இரண்டாம் ஃப்ரெட்ரிக் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து ஹாப்ஸ்பர்க் (Habsburg) வம்சத்தைச் சேர்ந்த ருடால்ஃப் ஆஃப் ஹாப்ஸ்பர்க் (Rudolf of Habsburg) பொ.ஆ.1273-ல் மன்னனார். ஆட்சி மாறும்போது போப் மீதான மன்னர்களின் மனநிலையும் மாறவே, ஜெர்மனி மற்றும் ஃப்ரெஞ்ச் மன்னர்களின் ஆதரவு போப்புக்கு மாறி மாறி கிடைத்தது.
இதற்கிடையே கிழக்கில் பொ.ஆ.1261-ல், எட்டாம் மைக்கேல் (Michael VIII) தலைமையில் கிரேக்கம் மீண்டும் கான்ஸ்டாண்டினோபிளை இலத்தீன் ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றியது. ரோமானிய திருச்சபையுடனான உறவை முற்றிலும் முறித்துக்கொண்டதைத் தொடர்ந்து, ஆசியாவில் இலத்தீன் சாம்ராஜ்யமும் கிழக்கே போப்பின் ஆதிக்கமும் முடிவுக்கு வந்தன.
பொ.ஆ.1294-ல் இத்தாலியரான எட்டாம் போனிஃபேஸ் (Boniface VIII) போப்பானார். ரோமாபுரியின் பாரம்பரியப் பெருமைகளைக் காப்பதில் ஆர்வமுடன் இருந்தார். ஆனால் ஏனோ இவருக்கும் ஃப்ரெஞ்சு மன்னனுக்கும் ஒத்துப்போகவில்லை. பொ.ஆ.1300-ல் ரோமாபுரியில் நடைபெற்ற மிகப் பெரிய கொண்டாட்டத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
வந்தவர்கள் திருச்சபை கஜானாவில் செல்வத்தைக் கொட்டித் தங்கள் விசுவாசத்தைக் காட்டினர். புனித பீட்டர் சதுக்கத்திலுள்ள பெரிய பெட்டிகளில் காணிக்கையாகச் சேர்ந்த பணத்தை எண்ணுவதற்கென்றே பிரத்யேகமாக ஆட்கள் விடிய விடிய வேலை பார்த்தார்கள். அந்த அளவுக்கு போப்பின் கருவூலம் பொன்னாலும் பொருளாலும் நிரம்பி வழிந்தது.
ஆனால், போப்பின் இந்தக் கொண்டாட்டம் செயற்கையான, மாயையான வெற்றியாகவே கருத்தப்படுகிறது. பொ.ஆ.1302-ல் ஃப்ரெஞ்ச் மன்னனுடன், போனிஃபேஸ் போப் மோதல் தீவிரமடைந்ததால், மன்னனை கிறிஸ்தவத்திலிருந்து நீக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். நீக்கும் அறிக்கையை வெளியிடுவதற்கு முதல் நாள் இரவு போப்புக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
போப்பை அவரது சொந்த ஊரான அனக்னி (Anagni) அரண்மனையில் வைத்தே ஃப்ரெஞ்ச் மன்னனின் படைத் தளபதி கிலாவோம் டி நோகரெட் (Guillaume de Nogaret) சிறைப்பிடித்தார். அரண்மனையில் போப்பின் படுக்கை அறைக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்தவரைக் கத்தி முனையில் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். ஊர் மக்கள் திரண்டு வந்து அவரைக் காப்பாற்ற, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பயந்து போன போப் அங்கிருந்து ரோமாபுரிக்குத் திரும்பினார்.
ஆனால் கிலாவோம் டி நோகரெட் அங்கும் அவரை விடாமல் துரத்திச் சென்று கைது செய்தார். அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துபோன போப் நிலை குலைந்து போனார். ஏமாற்றம் வேதனையுடன், வயது மூப்பும் அவர் உடல நலத்தைக் கடுமையாகப் பாதித்தது. அடுத்த சில வாரங்களில் இறந்தார்.
போப்பின் சொந்த ஊர் என்பதால் அனக்னி மக்கள் கிலாவோம் டி நோகரெட்டுக்கு எதிராகத் திரண்டனர். போப் முதல் முறை கைதான போது மக்கள் அவரை விடுவித்தனர். ஆனால் ரோமாபுரியில் போப் இரண்டாம் முறை கைதானபோது, அவரை விடுவிக்க மக்கள் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. கிறிஸ்தவத் தலைமையான போப்பையே அச்சுறுத்திச் சாகடிக்கும் அளவுக்கு ஃப்ரெஞ்ச் மன்னர் முனைந்ததன் முக்கியக் காரணம் ஃப்ரெஞ்ச் மக்களின் முழு ஆதரவு அவருக்கு இருந்தது.
பிராஞ்ச் அரசின் முக்கியக் கட்டமைப்புகளான, திருச்சபை, பிரபுக்கள் மற்றும் பொது மக்கள் ஆகிய மூன்றின் சம்மதத்துடனேயே போப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் மன்னர் இறங்கினார். எனவே பிரான்ஸில் அவரது இச்செயலுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை. இறையாண்மை மிக்க போப் மீதான இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து இத்தாலி, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை, மறுப்பு அறிக்கையும் வெளியிடவில்லை. போப்புக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த பிறகு, உலகில் கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தை நிறுவும் எண்ணம் திருச்சபைக்கும் மக்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகத் தொடங்கிக் கடைசியில் மறைந்தே போனது.
பொ.ஆ.14-ம் நூற்றாண்டு முழுவதும் திருச்சபையின் தார்மிக வளர்ச்சியையும் ஆதிகாரத்தையும் மீட்டெடுக்க போப் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அடுத்த போப்பாகத் தேர்வானவர் ஃபிரஞ்ச் மன்னர் ஃபிலிப்பின் (Philip) ஆதரவைப் பெற்ற ஃபிரஞ்ச் நாட்டவரான ஐந்தாம் க்ளெமெண்ட் (Clement). அவர் போப்பாகப் பதவி வகித்த காலம் முழுவதும் ரோமாபுரிக்கு வரவேயில்லை. ஃப்ரெஞ்ச் அதிகார வரம்புக்கு உட்பட்ட அவிக்னான் (Avignon) என்னும் நகரில் தனக்கான அரண்மையைக் கட்டிக்கொண்டு அங்கேயே தனது பரிவாரங்களுடன் தங்கிவிட்டார். அவருக்குப் பின் போப்களாக வந்தவர்களும் அவிக்னான் அரண்மனையில் இருந்தே தங்கள் திருச்சபைப் பணிகளை மேற்கொண்டனர்.
பொ.ஆ.1377-ல் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினோராம் கிரெகொரி (Gregory XI) ரோமாபுரியிலுள்ள வாட்டிகன் அரண்மனைக்குத் திரும்பினார். திருச்சபையின் முழுமையான ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை. பெரும்பான்மை கார்டினல்கள் (Cardinal) ஃப்ரெஞ்ச் குடிமக்கள் என்பதால் அவர்கள் அனைவருமே ஃபிரஞ்ச் கலாசாரங்களிலும் பழக்க வழக்கங்களிலும் ஊறிக் கிடந்தனர்.
பொ.ஆ.1378-ல் பதினோராம் கிரெகொரி மரணமடையவே அடுத்த போப்பாக இத்தாலியைச் சேர்ந்த ஆறாம் அர்பன் (Urban VI) தேர்வானார். ஆனால் அவர் இத்தாலியர் என்பதால் ஃப்ரெஞ்ச் கார்டினல்கள் அனைவரும் அவரது தேர்வு செல்லாது என அறிவித்தனர். மேலும் தங்களுக்கு ஆதரவாக இருக்க வசதியாக, ஏழாம் க்ளெமெண்ட் (Clement VII) என்பவரைப் போப்பாகத் தேர்ந்தெடுத்தனர். அவரும் முந்தைய ஐந்தாம் க்ளெமெண்டைப் போலவே ரோமாபுரிக்குச் செல்லாமல், அவிக்னான் அரண்மனையை இருப்பிடமாக்கிக்கொண்டார். திருச்சபை வரலாற்றில் இந்நிகழ்வு மிகப் பெரிய பிளவு (Great Schism) என அழைக்கப்படுகிறது. ஒரே காலகட்டத்தில், வெவ்வேறு இடங்களில், இரு போப்கள் இருந்தனர்.
ஃப்ரெஞ்ச் மன்னனுக்கு எதிரான போப் ஆறாம் அர்பன், ரோமாபுரி (இத்தாலி) அரண்மனையில் தங்குவதற்கு இங்கிலாந்து, ஹங்கேரி, போலந்து மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளின் மன்னர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் ஃபிரெஞ்ச் மன்னனுக்கு ஆதரவான ஏழாம் க்ளெமெண்ட் அவிக்னான் (ஃப்ரான்ஸ்) அரண்மனையில் வசிக்க அவருக்கு ஃப்ரான்ஸ், ஸ்காட்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் ஜெர்மன் மன்னர்கள் ஆதரவு தெரிவித்தனர். பொ.ஆ.1378-1417 வரை இரு போப்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டியும் ஆதரவாளர்களை நீக்கியும் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சி செய்துகொண்டிருந்தனர். இவர்களின் மோதல் காரணமாக, மதம் குறித்த மறுசிந்தனை ஐரோப்பிய மக்களிடையே பரவியது.
அவரவர் முடிவுப்படி கிறிஸ்துவத்தை வளர்க்கவோ தகர்க்கவோ கிறிஸ்துவ சாம்ராஜ்யத்தில் ஃப்ரான்சிஸ் மற்றும் டொமினிக் உள்பட பல்வேறு சக்திகள் எழுச்சி பெற்று வருவதை முந்தைய அத்யாயங்களில் பார்த்தோம். அவ்வப்போது வன்முறையைக் கையாண்டாலும் இவ்விரண்டும் திருச்சபையின் கருத்துகளை உள்வாங்கிச் செயல்பட்டன. ஆனால் ஏனைய சக்திகள் கீழ்ப்படியாததுடன் வெளிப்படையாகவே விமர்சித்தன.
நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு (1320-1384) வைக்ளிஃப் (Wycliff) வந்தார். அவர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர். தனது கடைசிக்காலங்களில் திருச்சபையிலும் பாதிரியார்களிடமும் நிலவும் ஊழல்களை அம்பலப்படுத்தினார். இங்கிலாந்து முழுவதும் தனது எண்ணங்களையும் கொள்கைகளையும் பரப்ப வைக்ளிஃப்ட்ஸ் (Wycliffites) என்ற பெயரில் ஏழைப் பாதிரியார்களை உருவாக்கினார். புனித பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஃப்ரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோருடன் ஒப்பிடுகையில் இவர் படித்தவர். செல்வந்தர்களிடம் மட்டுமின்றி ஏழை மக்களிடமும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதன் காரணமாக ரோமாபுரி திருச்சபையின் வெறுப்புக்கு உள்ளானார். இவர் மீது கோபம் கொண்டு கைது செய்யவும் உத்தரவிட்டது. ஆனால், சாகும் போது சுதந்திர மனிதனாகவே இறந்தார். உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இருப்பினும் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அவர் மீதிருந்த கோபம் அடங்கவில்லை. நல்லடக்கம் செய்யப்பட்ட வைக்ளிஃப்பின் உடல் எலும்புகளைக் கல்லறையிலிருந்து தோண்டி எடுத்து நெருப்பில் இட்டுச் சாம்பலாக்க பொ.ஆ.1415-ல் ரோமாபுரிய திருச்சபையின் கௌன்சில் ஆஃப் கான்ஸ்டன்ஸ் (Council of Constance) ஆணை வெளியிட்டது. பொ.ஆ.1428-ல் ஐந்தாவது மார்டின் (Martin) போப் உத்தரவை பிஷப் ஃப்ளெமிங்க் (Fleming) நிறைவேற்றினார். இந்தக் காட்டுமிராண்டித்தனம் யாரோ மதவெறி பிடித்த தனிநபரின் செயல் அல்ல; ரோமாபுரி கத்தோலிக்கத் திருச்சபையின் அதிகாரப்பூர்வ ஆணைக்கு உட்பட்ட செயல்.
(தொடரும்)
_____
படம்: சக்ரவர்த்தி ஃப்ரெட்ரிக்கின் ஆட்சிக்கு மூன்றாம் ஹோனோரியஸ் ஒப்புதல் அளிக்கும் காட்சி
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.