48. மங்கோலியர்களின் வெற்றி
பொ.ஆ.13-ம் நூற்றாண்டில் போப்பின் தலைமையில் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவத்தை ஒருங்கிணைக்கும் வினோதமான, ஆனால், பயனற்ற முயற்சி ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மறுபக்கம் ஆசியாவில், முக்கியமான பல நிகழ்வுகள் நடைபெற்றன. சீனாவின் வடக்கே உள்ள துருக்கி மக்கள் தொடர் வெற்றிகளைக் குவித்துத் திடீரென உலக அரங்கில் புகழ் பெறத் தொடங்கினர். அவர்கள்தான் மங்கோலியர்கள். பதிமூன்றாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த இவர்கள், முன்னோடிகளான ஹன்ஸ் இனத்தவரைப் போலவே நாடோடிக் குதிரை வீரர்கள். குதிரையின் பால், இறைச்சியைச் சாப்பிடுபவர்கள். தோல் கூடாங்களில் வசித்தனர். சீன ஆட்சி ஆதிக்கத்திலிருந்து பிரிந்து, ஏரளமான துருக்கியர்களை தங்கள் படைகளில் இணைத்துக்கொண்டனர். மங்கோலியர்கள் காரகோரம் பகுதியில் ராணுவ முகாமை அமைத்துக்கொண்டனர்.
பொ.ஆ.10-ம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கிய சீனாவின் டாங்க் (Tang) பரம்பரை அடுத்த நூற்றாண்டில் பிளவுபட்டது. வடக்கே பீக்கிங்கை தலைநகராக கொண்ட சின் (Qin), தெற்கே நான்கினைத் தலைநகராகக் கொண்ட சங்க் (Sung), வடகிழக்கே லியாவோ (Liao) மற்றும் மத்தியில் மேற்கு ஷியா (Western Xia) என நான்கு சாம்ராஜ்யங்களாகப் பிரிந்தது. பொ.ஆ.1214-ல் மங்கோலியக் கூட்டமைப்பின் அரசன் செங்கிஸ்கான் பரம விரோதிகளான சின் சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்துத் தலைநகர் பீக்கிங்கைக் கைப்பற்றினார். அடுத்து மேற்கே உள்ள மேற்குத் துருக்கிஸ்தான், பாரசீகம் அர்மீனியா, இந்தியா வழியே லாஹூர், தெற்கு ரஷியாவின் கீஃப் (Kieff) வரையிலான பகுதிகளை வென்றார். பசிஃபிக் தொடங்கி ஐரோப்பிய நீப்பர் (Dnieper) ஆறு வரையிலான பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகவே இறந்தார்.
அடுத்து வந்த ஒக்டைய் கான் (Ogdai Khan) தந்தை செங்கிஸ்கானைப் போலவே வெற்றிகளைக் குவித்தார். அவனது படைகள் மிகச் சிறந்த கட்டுப்பாடும் கட்டமைப்பும் கொண்டவையாக விளங்கின. சீனா அப்போதுதான் புதிதாகக் கண்டுபிடித்த வெடி மருந்தைப் போர்க் களத்தில் பயன்படுத்தினார். சின் சாம்ராஜ்யத்தை முற்றிலுமாக கபளீகரம் செய்து, ஆசியா தொடங்கி ரஷியா வரை படையெடுத்தார்.
பொ.ஆ.1240-ல் முக்கிய நகரமான கீஃப் அல்லது கீவ் (Kieff / Kiev) அழிக்கப்பட, ரஷியா முழுமையும் மங்கோலியர்களின் வசமானது. பொ.ஆ. 1241இல் லோயர் சைலீஷியா (Lower Silesia) என்ற இடத்தில் நடைபெற்ற லீக்னிட்ஸ் (Liegnitz) போரில் போலந்து மற்றும் ஜெர்மானிய கூட்டுப் படைகள் நிர்மூலமாக்கப்பட்டன. ரோமானிய சாம்ராஜ்ய சக்ரவத்தியான இரண்டாம் ஃப்ரெட்ரிக், முன்னேறி வரும் மங்கோலியப் படைகளைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
கிப்பன் (Gibbon) எழுதிய ‘ரோமானிய சாம்ராஜ்யத்தின் சரிவும் வீழ்ச்சியும்’ (Decline and Fall of the Roman Empire) என்ற நூல் பற்றி வரலாற்றாசிரியர் பர்ரி (Bury) தனது குறிப்புகளில் ‘பொ.ஆ.1241-ல் போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளை மங்கோலியப் படைகள் கைப்பற்றியதன் முக்கியக் காரணம் அவற்றின் எண்ணிக்கை மட்டுமின்றி, முழுமையான தந்திர உபாயங்களும் விதியாசமான உக்திகளே’ என எழுதியுள்ளார்.
லோயர் விஸ்டுலா (Lower Vistula) தொடங்கி டிரான்ஸில்வேனியா (Transylvania) வரை நேரம் தவறாமல், துல்லியமாகவும் சிறப்பாகவும் படைகளை நடத்திச் சென்ற விதம் பாராட்டத்தக்கது. அக்கால ஐரோப்பியத் தளபதிகளிடமோ படைகளிடமோ, இத்தகைய ஆற்றலையும் கட்டுப்பாட்டையும் கனவில் கூட எதிர்பார்க்க முடியாது. செங்கிஸ்கான் முக்கியத் தளபதிகளுள் ஒருவனான சுபுடாய் (Subutai) வீரத்துக்கும் உக்திகளை வகுக்கும் திறமைக்கும் இணையாக, இரண்டாம் ஃப்ரெட்ரிக் உள்பட ஐரோப்பாவின் எந்த மன்னரையும் ஒப்பிட முடியாது.
ஹங்கேரி மற்றும் போலாந்து மீது படையெடுக்கும் முன்பாக அங்கே நிலவும் அரசியல் நிலவரங்களை ஒற்றர்கள் மூலம் நன்கு தெரிந்து கொண்ட பிறகே அவற்றின் மீது படையெடுத்தார். மங்கோலியர்களின் படைபலம் மற்றும் உபாயங்களுக்கு முன் ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட ஏனைய ஐரோப்பிய கிருத்தவப் படைகளின் வீரம் குழந்தைத்தனமாகவே காட்சி அளித்தன. உளவாளிகள் ஊடுருவல், எதிரிகள் படைபலம் பற்றிக் கடைசி வரை எதுவும் அறியாமலேயே இருந்தனர்.
மங்கோலியர்கள் லீக்னிட்ஸைக் (Liegnitz) கைப்பற்றினாலும் ஏனோ மேற்கு நோக்கி முன்னேறவில்லை. மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதி என்பதால் அவர்களது உக்தி பயனளிக்காது என முடிவுடன் தெற்கில் தங்களது கவனத்தைத் திருப்பினர். ஹங்கேரியில் தங்கும் நோக்கத்துடன் அங்கு வசித்த மக்யார் (Magyar) இனத்தவர்களை, எவ்வாறு முன்பு அவர்கள் சிதியன் (Scythian), அவர் (Avar), ஹன் (Hun) இன மக்களைச் சாகடித்தனரோ, அவ்வாறே கொன்று குவித்தனர். அவர் 7-8, ஹன்ஸ் 5ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு மற்றும் தெற்கில் ஊடுருவியதைப் போலவே, ஹங்கேரிய சமவெளிகளிலிருந்து படையெடுக்க ஒக்டாய் திட்டமிட்டார். ஆனால் ஒக்டாய் திடீரென மரணத்தைத் தழுவவே, பொ.ஆ.1242-ல் அடுத்த தலைமைக்கான போட்டி ஏற்பட்டது. படைகளை வழிநடத்த மன்னன் இல்லாத நிலையில், மங்கோலிய எதிரிகள் மீண்டும் கிழக்கே ஹங்கேரி மற்றும் ருமேனியாவுக்குள் நுழைந்து, இழந்த பகுதிகளை ஆக்கிரமித்துத் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மங்கோலியர்கள் ஐரோப்பாவை விட்டு விலகி ஆசியப் பிராந்தியங்களில் தங்கள் கவனத்தைத் திருப்பினர். பொ.ஆ.13-ம் நூற்றாண்டு மத்தியில் சங்க் (Sung) சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றினர். ஒக்டாய் கானைத் தொடர்ந்து பொ.ஆ.1252-ல் ஆட்சிக்கு வந்த மங்கு கான் (Mangu Khan) தன்னை கிரேட் கான் (Great Khan) எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார். தனது சகோதரன் குப்ளாய் கானை (Gublai Khan) சீனாவின் ஆட்சிப் பொறுப்பில் நியமித்தார்.
பொ.ஆ.1280-ல் குப்ளாய் கான் சீனாவின் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டதுடன், யுவான் (Yuan) வம்சத்தையும் நிறுவினார். பொ.ஆ.1368வரை இந்த வம்சத்தின் ஆட்சி நீடித்தது. இதற்கிடையே மங்குவின் மற்றொரு சகோதரனான ஹுலாகு (Hulagu) பாரசீகம் மற்றும் சிரியா நாடுகளை வென்றெடுத்தார். மீதியிருந்த சங்க் வம்சத்தினர் கொல்லப்பட, அந்த வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்தக் காலகட்டத்தில் மங்கோலியர்கள், இஸ்லாத்தின் மீது தங்கள் வெறுப்பைக் காட்டத் தொடங்கினர். பாக்தாத்தைக் கைப்பற்றியபோது அங்கிருந்த ஏராளமான முஸ்லிம்களைக் கொன்றனர். சுமேரிய நாகரிக காலத்திலிருந்து அவர்கள் அறிமுகப்படுத்திய சிறப்பான நீர்ப்பாசனத் திட்டங்களே மெஸொபொடேமியாவைச் செழிப்பாகவும் வளமாகவும் வைத்திருந்தது. ஆனால், மங்கோலியர்கள் பாசனத் திட்டத்தை முற்றிலுமாக அழித்துத் தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டனர். கடுமையாக முயன்றும் மங்கோலியர்களால் எகிப்த்துக்குள் நுழையவே முடியவில்லை. 1260-ல் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற போரில், ஹுலாகு படைகளை எகிப்து சுல்தான் சின்னாபின்னமாக்கி விரட்டி அடித்தார்.
ஹுலாகு படைகளின் படுதோல்வியைத் தொடர்ந்து மங்கோலியர்களின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. கிரேட் கானின் சாம்ராஜ்யம் பல்வேறு நாடுகளாகச் சிதறுண்டது. சீனர்களைப் போலவே கிழக்கு மங்கோலியர்கள் புத்த மதத்தைத் தழுவினர். மேற்கு மங்கோலியர்கள் இஸ்லாத்துக்கு மாறினர். பொ.ஆ.1368-ல் யுவான் வம்சத்தைத் தூக்கி எறிந்த சீனர்கள் மின் (Ming) வம்சத்தை நிறுவினார்கள். பொ.ஆ.1644 வரை அதாவது சுமார் 276 ஆண்டுகள் மிங்க் வம்சத்தின் ஆட்சி நீடித்தது.
பொ.ஆ.1480 வரை தென் கிழக்கு புல்வெளிப் பிரதேசங்கள் உள்பட தார்தார் (Tartar) கட்டுப்பாட்டில் ரஷியா இருந்தது. திடீரென மாஸ்கோவின் கிராண்ட் ட்யூக் (Grand Duke of Moscow) தார்தாரியருக்குக் கீழ்ப்படிய மறுத்து, இன்றைய நவீன ரஷியாவுக்கான அடித்தளத்தை அமைத்தார்.
பொ.ஆ.14-ம் நூற்றாண்டில் செங்கிஸ்கானின் வழிதோன்றலான தைமூர் (Timur) தலைமையில் மங்கோலியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். பொ.ஆ.1369-ல் மேற்கு துருக்கிஸ்தானில் கிராண்ட் கான் என்னும் பட்டத்துடன் முடிசூடிக் கொண்டு, சிரியா தொடங்கி தில்லி வரை தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். மங்கோலிய மன்னர்களிலேயே காட்டுமிராண்டித்தனமும் கொடூர குணமும் கொண்ட தைமூரின் மரணத்தோடு அந்த சாம்ராஜ்யமும் முடிவுக்கு வந்தது.
இருப்பினும் பொ.ஆ.1505-ல் தைமூரின் பரம்பரையில் வந்த பாபர் (Babur) வெடி குண்டுகள், துப்பாக்கிகளுடன், பெரும்படையைத் திரட்டி இந்தியா மீது படையெடுத்தார். இவரது பேரன் அக்பர் (Akbar) (1556-1605) இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டார். மங்கோலியரான இவர்களை மொகலாயர் (Moghuls) என அரேபியர்கள் அழைத்தனர். மொகலாய வம்சம் பொ.ஆ.18-ம் நூற்றாண்டு வரை தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டது.
பொ.ஆ.13-ம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் மிகப் பெரிய வெற்றி, துருக்கிய இனங்களுள் ஒன்றான ஓட்டோமான் துருக்கியர்களை (Ottoman Turks), துருக்கிஸ்தானில் இருந்து ஆசிய மைனருக்கு விரட்டியடித்ததுதான். ஆசியா மைனரில் ஓட்டோமான் தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்தி நிலைநிறுத்திக் கொண்டதுடன், டார்டானெல்லெஸ் (Dardanelles) ஜலசந்தியைக் கடந்து மேசிடோனியா, செர்பியா, பல்கேரியா நாடுகளையும் கைப்பற்றினர்.
இவர்களது அதிகாரத்திலிருந்து விலகித் தனியாக இருந்த கான்ஸ்டாண்டிநோபிளை, பொ.ஆ.1453-ல் ஓட்டோமான் சுல்தான் இரண்டாம் முகம்மது, துப்பாக்கி, வெடி மருந்து சகிதம் பெரும்படையோடு முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். இது ஐரோப்பாவில் சலசலப்பை எற்படுத்தி மீண்டும் ஒரு சிலுவைப் போருக்கு வழிவகுத்தது. ஆனால் சிலுவைப் போர் தீவிரம் நீர்த்துப் போய்ப் பழங்கதை ஆனதால், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பொ.ஆ.16-ம் நூற்றாண்டில் ஓட்டோமான் சுல்தான்கள் பாக்தாத், ஹங்கேரி, எகிப்து, வட ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினர். அவர்கள் வசமிருந்து பிரமாண்ட கடற்படை காரணமாக மத்தியதரைக் கடலின் எஜமானர்களாக வர்ணிக்கப்பட்டனர். வியன்னாவைக் (Vienna) கைப்பற்றி மன்னனிடம் கப்பம் வசூலித்தனர். பொ.ஆ.15-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தின் சரிவைச் ஈடுகட்ட இரு முக்கிய நிகழ்வுகள் கைகொடுத்தன. முதலாவது பொ.ஆ.1480-ல் மாஸ்கோவின் சுதந்திரம் மீட்டெடுக்கப்பட்டது. ஸ்பெயினை மீண்டும் கிறிஸ்தவர்கள் வென்றெடுத்தனர். பொ.ஆ.1492-ல் ஆரகான் மன்னன் ஃபெர்டினாண்ட் (King Ferdinand of Aragon) மற்றும் கேஸ்டில் அரசி இஸபெல் (Queen Isabella of Castile) ஆகியோரிடம் முஸ்லிம் ராஜ்ஜியத்தின் கடைசி நாடான கிரானடா (Granada) வீழ்ந்தது. பொ.ஆ.1571-ல் லெபாண்டோவில் (Lepanto) நடைபெற்ற போரில், ஓட்டோமான் ஆதிக்கத்தை கிறிஸ்தவர்கள் முறியடித்து, மத்தியதரைக் கடலை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
(தொடரும்)
H.G. வெல்ஸ் எழுதிய ‘A Short History of the World’ நூலின் தமிழாக்கம்.